இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 11 ஐக்கிய முன்னணி அரசும் (எச்.டி.தேவ கௌடா, ஐ.கே.குஜரால்) வேளாண்மையும் பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 11 ஐக்கிய முன்னணி அரசும் (எச்.டி.தேவ கௌடா, ஐ.கே.குஜரால்) வேளாண்மையும் பேரா.பு.அன்பழகன்




1996ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியினைக் கண்டது. பாஜகவிற்கு 191 இடங்களும், காங்கிரஸ் கட்சி 140 இடங்களும், ஜனதா தளம் 46 இடங்களும், இடதுசாரிகளுக்கு 44 இடங்களும் மற்ற கட்சிகள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்ததால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றது ஆனால் அரசுக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் 13 நாட்கள் மட்டுமே வாஜ்பாய் பிரதம மந்திரியாக நீடித்தார். இதனை அடுத்து 13 கட்சிகளின் கூட்டுடன் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததன் அடிப்படையில் இந்தியாவின் 11வது பிரதம மந்திரியாக எச்.டி.தேவ கௌடா ஜூன் 1, 1996ல் பதவி ஏற்றார்.

அன்றிலிருந்து ஏப்ரல் 21,1997 வரை 324 நாட்கள் இவர் பிரதமர் பதவியில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற சீதாராம் கேசரி அரசியல் காரணங்களுக்காகத் தேவ கௌடா அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனை அடுத்து ஐக்கிய முன்னணியின் சார்பில் ஐ.கே.குஜரால் பிரதமரானர். காங்கிரஸ் கட்சி இவருக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. இவருடைய ஆட்சி பிப்ரவரி 1998வரையில் நீடித்தது (Amitab Tiwari 2016). மொத்தமாக ஐக்கிய முன்னணி அரசானது 17 மாதம் 21 நாட்கள் ஆட்சியில் இருந்தது.

தேவ கௌடா தன்னை ஒரு சாதாரண விவசாயி என அழைத்துக் கொண்டவர். 1991ல் பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் தாக்கல் செய்த வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கான மானியம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதனை எதிர்த்து தேவ கௌடா “நான் ஒரு விவசாயி, உழவன் மகன், இதை நான் அனுமதிக்க மாட்டேன், நான் தர்ணாவில் அமர்வேன், நான் இந்த நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியே செல்ல மாட்டேன், இதை விளம்பரத்துக்காக நான் அப்படிச் சொல்ல வில்லை” என்றார். தேவ கௌடா தன்னுடைய வாழ்நாளை விவசாயிகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 1996-97ல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கானதாக இருந்தது. பின்னால் அவர் பதவியிலிருந்து வெளியேறிய பின்பு பஞ்சாப் விவசாயிகள் அம்மாநிலத்தில் பயன்படுத்திய புதிய தரமான நெல் விதை ரகத்திற்குத் தேவ கௌடா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்த ரகம் பத்தாண்டுகளுக்கு மேலாக மிகவும் அறியப்பட்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விவசாயிகளின் தலைவராக அறியப்படும் மகேந்திர சிங் திகாயத், தேவ கௌடாவை தென்னிந்தியாவின் சவுதிரி சரண் சிங் என்று அழைத்தார் (Outlook web dest, 12.12.2021).

1991ல் புதிய பொருளாதாரக் கொள்கையானது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது ஆனால் 1996ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் நிலையற்ற அரசியல் நிலைப்பாட்டினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படத் தொடங்கியது. 1996-97ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 5 விழுக்காடாகக் குறைந்தது. 1998-99ல் ஏற்றுமதி வளர்ச்சியானது எதிர்மறையாக இருந்தது. தொழில் வளர்ச்சியும் குறைத் தொடங்கியது. வெளிநாட்டு மூலதனங்களான அந்நிய நேரடி முதலீடு மற்றும் போர்ட்ஃபோலியோ முதலீடுகளின் வரத்து அதிக அளவில் குறையத் தொடங்கியது. இது 1998-99ல் எதிர்மறையாகவும் இருந்தது. முதன்மை பற்றாக்குறையானது (Primary deficit) 1996-97ல் 0.6 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 1.3 விழுக்காடாக அதிகரித்தது. மேலும் 1997ல் கிழக்கு ஆசியா நாடுகளின் ஏற்பட்ட பங்கு முதலீடு தொடர்பான நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்தது. இதே நேரம் இந்தியாவுடன் வர்த்தக உறவுடன் இருந்த நாடுகளான ரஷ்யா, பிரேசிலும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவந்தது, இது இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியினை உருவாக்கியது. 1998ல் உலகப் பொருளாதார வளர்ச்சியும் குறையத் தொடங்கியது. இவை அனைத்தும் பகுதி அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது பாதிப்பினை ஏற்படுத்தியது. 1991ல் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் பின்னிலையில் இருந்தது. இதன்பொருட்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தின் விளைவுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் இடர்பாடுகள் தோன்றியது. எனவேதான் அடல் பீஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அரசியலில் நிலையற்ற தன்மை, சந்தர்ப்பவாத கூட்டாட்சி, அரசின் இரட்டை நிலைப்பாடு (சுதேசி, புதிய பொருளாதார சீர்திருத்தம்) ஆகியன 1990களின் கடைசி காலகட்டங்களில் பொருளாதாரச் சரிவிற்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது. அதே சமயம் புதிய பொருளாதாரக் கொள்கையினால் தொடர் வளர்ச்சி, தொழில் மயமாக்கல், சுயச்சார்பு, வறுமை ஒழிப்பு போன்ற தளங்களில் சிறப்பான வெளிப்பாட்டைக் காண முடிந்தது. இந்தியா அதுவரை கடைபிடித்து வந்த சோசியலிச கொள்கையானது கைவிடப்பட்டு புதியதான உலகமயமாக்கல் என்பதை இந்தியா உள்வாங்கிக்கொள்ளத் தொடங்கியது. கடந்த 40 ஆண்டுகளில் சுயச்சார்பு, தொழில் வளர்ச்சிக்கு இறக்குமதி மானியம் தேவைப்பட்டது ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கையினால் மூலதனம், தொழில்நுட்பங்களும் தருவிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட இந்தியாவில் உள்ள கட்சிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையினைப் பொறுத்தவரையில் தேவை என்பதை உணர்ந்தன (Bipian Chandra et al 2008).

பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்த இடதுசாரி கட்சிகள் அடுத்து ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் பங்கெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் தனியார் மயமாக்கலைக் கடுமையாக எதிர்த்தனர், மானியங்களைக் குறைப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த சதுரானன் மிஸ்ரா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்) அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைத் தடுக்கிறார் என்று குற்றம்சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார். ஐ.கே.குஜரால் பிரதமராக இருந்தபோது மின்சார துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையினைப் பின்பற்றி மாநில மின்சாரக் கழகங்களை வலுப்படுத்த வேண்டுமென்றார். ஐக்கிய முன்னணி அரசானது இறக்குமதியினை தாராளமயமாக்கியது. இதன்படி படிப்படியாகத் தடை செய்யப்பட்ட இறக்குமதியினைச் சிறப்பு இறக்குமதி பட்டியலுக்குக் கொண்டுசென்றது பின்னர் அதனைத் தடையற்ற இறக்குமதி பிரிவில் சேர்க்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப்பின் நிலக்கரி மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டு முற்றுரிமை நிலையிலிருந்ததை முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஐக்கிய முன்னணி அரசானது உலக வரத்தக அமைப்புக் கூட்டம் பிப்ரவரி 1997ல் ஜனிவாவில் நடந்ததில் கலந்துகொண்டு தொலைத்தொடர்பு உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தகவல் தொழில்நுட்பம் உலகமயமாக்கலுக்கு உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவை அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு அதில் கொண்டுவந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தொழிலாளர் நிலை தொடர்பாக இந்தியா பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் நடைமுறையினை ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பு நிலையினை நிராகரித்தது (Singh 2001).

மன்மோகன் சிங் 1991ல் தன்னுடைய முதல் நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தபோது இந்தியப் பொருளாதாரம் மிகவும் தீவிர பொருளாதார நெருக்கடியினை (அந்நியச் செலாவணி கையிருப்பு வற்றியிருந்தது, செலுத்து நிலை இருப்பில் மோசமான நிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கடும் சரிவு, தொழில் துறை வீழ்ச்சி, உச்ச அளவில் பணவீக்கம், இந்தியா மீது பன்னாட்டு நிதிச் சந்தையில் நம்பிக்கை இழந்த நிலை) சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணம். ஆனால் 1996ல் ஒட்டு மொத்த பேரியல் பொருளாதார நிலைமை சிறப்பான இருந்த நிலையில் (பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடு, தொழில் துறை வளர்ச்சி 12 விழுக்காடு, பணவீக்கம் 4.5 விழுக்காடு, அந்நியச் செலாவணி கையிருப்பு 17 மில்லியன் டாலருக்கு மேல்) அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது முதல் நிதி நிலை அறிக்கையினைச் சமர்ப்பித்தார். இதில் முக்கியமானது மன்மோகன் சிங்கிக்குப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ப.சிதம்பரம் பங்கேற்றிருந்த அரசானது 13 கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் தன்னிச்சையாகச் செயல்பட இயலாத நிலையிருந்தது.

1996-97ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையானது நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பொருளாதாரச் சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டும், பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையின் நோக்கங்கள் 1) பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முடுக்கிவிடப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது, 2) குறைந்தபட்ச சேவைகளை வழங்கி வறுமையை ஒழிப்பது, 3) அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகைகளைக் காண்பது, 4) நிதி மற்றும் பேரியல் பொருளாதார நிலைப்பாட்டை உருவாக்குவது, 5) உள்கட்டமைப்பின் மீது முதலீடு செய்வது, 6) மனித மூலதன வளர்ச்சியினை மேம்படுத்துவது, 7) செலுத்து நிலை இருப்பினை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவது போன்றவை ஆகும்.

வேளாண்மை முன்னேற்றத்திற்காகச் சிறப்பு நடவடிக்கையினை எடுக்க நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது முதலில் ரூ.500 கோடியும், பின்பு ரூ.1000 கோடியாகவும் செலுத்தப்பட்ட மூலதனம் அளித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் இது ரூ.2000 கோடியாக அதிகரிக்க உத்தேசித்தது, கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு ரூ.2500 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரைவாக நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. பெரிய நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. குறிப்பாகப் பெரிய விவசாயிகள் பயன்பெறும் விதமாக டிராக்டர், எந்திரக் கலப்பை (பவர் டில்லர்) போன்றவற்றை வாங்க நேரடி மானியம் வழங்கப்பட்டது. இதைத் தவிற்று உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனம் ரூ.5000 கோடியில் உருவாக்கப்பட்டது. இதன்படி போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, சாலை போன்றவற்றைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது (Bakul H Dhalakia 1996).

ஐக்கிய முன்னணி பல கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கியது. இதன்படி 100 விழுக்காடு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குதல், ஆரம்பச் சுகாதார மைய வசதியினை ஏற்படுத்தித் தருதல், அனைவருக்கும் தொடக்கக் கல்வி, வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதி, மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பை உறுதி செய்தல், பொது விநியோக முறையை வலுப்படுத்துதல் போன்றவை ஆகும். இதற்காக ரூ.2466 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1997-98ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பாராளுமன்றத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் போது, 1995-96ல் வேளாண்மையின் வளர்ச்சியானது 0.1 விழுக்காடாக இருந்தது, 1996-97ல் 3.7 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியதாகக் குறிப்பிட்டார். உணவு தானிய உற்பத்தியானது 191 மில்லியன் டன் அதிகரித்ததாகவும் ஆனால் மின்சாரத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்றும், ஏற்றுமதியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டது. வறுமையை ஒழிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டதால், பிரதம மந்திரி அடிப்படைக் குறைந்தபட்ச சேவை திட்டத்திற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதுபோல் நீர்ப்பாசன பயன்பாட்டுத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. கங்கா கல்யாண் யோஜனா என்ற திட்டமானது நிலத்தடி நீர் மற்றும் சமதளப் பகுதிகளின் நீரைத் திறம்படப் பயன்படுத்த மானியமும், கடனும் வழங்கப்பட்டது. இது போன்றே குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் வழியாக வேளாண்மை மற்றும் வேளாண் சார் தொழில்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்கு அதிக அளவில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி சிறப்பாகச் செயல்படுத்த முதல் கட்ட திட்டங்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கியினை வலுப்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. உணவு தானியங்கள், சர்க்கரைக்கு மானியம் அதிகரிக்கப்பட்டது மொத்தத்தில் இந்த நிதி ஆண்டிற்கான செயல் திட்டங்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது (Government of India 1997). 1996-97ல் உரத்துக்கான மானியம் ரூ.6093 கோடியாக இருந்தது 1997-98ல் ரூ.10026 கோடியாக அதிகரித்தது (Government of India 1999). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான இடுபொருட்களின் விழுக்காட்டு அளவு 1996-97ல் 8.9 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 9.0 விழுக்காடாக அதிகரித்தது. இது ஒரு ஹெக்டேருக்கு ரூ.497.3 லிருந்து ரூ.509.4ஆக இவ் ஆண்டுகளில் அதிகரித்தது (Shovan Ray 2007).

1997-98ல் வேளாண் உற்பத்தி 6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது ஆனால் 1998-99ல் இது 3.9 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டில் உணவு தானிய உற்பத்தியானது 192.26 மில்லியன் டன்னாக இருந்தது 203.61 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உற்பத்தித் திறனானது ஒரு ஹெக்டேருக்கு 1552 கிலோவாக இருந்தது 1627 கிலோவாக அதிகரித்தது. நெல், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, சிறு தானியங்கள் போன்றவை உற்பத்தியில் நேர்மறை வளர்ச்சியடைந்தது (Shovan Ray 2007). இக்கால கட்டத்தில் இந்தியாவில் பருவ மழை சாதகமான நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1995-96ல் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் வேளாண்மைத் துறையின் பங்கு 19.8 விழுக்காடாக இருந்தது 1996-97ல் 20.4 விழுக்காடாக அதிகரித்தது, 1998-99ல் 18.8 விழுக்காடாகவும் குறைந்தது. 1950களில் உணவு தானிய உற்பத்தியானது ஆண்டுக்கு 3.22 விழுக்காடாக இருந்து 1960களில் ஆண்டுக்கு 1.72 விழுக்காடாகவும், 1970களில் ஆண்டுக்கு 3.08 விழுக்காடாகவும், 1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடாகவும், 1990களில் 1.7 விழுக்காடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது (Government of India 1999).

1990களின் மத்தியில் வேளாண் வளர்ச்சி சரியத் தொடங்கியது (1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடு என்றிருந்தது 1990களில் 2.7 விழுக்காடாகக் குறைந்தது). 1992-1997ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 4.7 விழுக்காடு என்ற சராசரி வேளாண் வளர்ச்சி இருந்தது ஆனால் இது 1997-2001ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 1.2 விழுக்காடு என்ற அளவில் இருந்தது (Shankar Achary et al 2003). இதனால் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்த வேளாண் குடிகள் அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டனர். வேளாண் சார் துறைகளான கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, போன்றவை மீதும் பாதிப்பினை உண்டாக்கியது. இதற்கு முக்கியக் காரணம் நீர்ப்பாசனம், வெள்ளத் தடுப்பு, ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், போன்றவை மீதான அரசின் முதலீடுகள் குறைந்ததாகும். பொதுத் துறை முதலீடு வேளாண்மையில் 1970கள் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது ஆனால் 1980களில் இது குறையத் தொடங்கியது. பொதுத் துறை முதலீடு உண்மை நிலையில் 1980-81ல் ரூ.1793 கோடியாக இருந்தது 1990-91வட ரூ.1154 கோடியாகவும், 1996-97ல் இது ரூ.1132 கோடியாகவும் குறைந்தது. ஆனால் தனியார்த் துறை முதலீடு வேளாண் துறை மீது அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது (Government of India 1999). வேளாண் வர்த்தகத்தில் தாராளமயமாக்கப்பட்டதின் விளைவு பன்னாட்டுச் சந்தையில் அதிகம் தேவையான வேளாண் விளைபொருட்கள் பயிரிடப்பட்டன. இதன் விளைவு அதிக அளவிற்கான வேளாண் உற்பத்தியினால் பன்னாட்டுச் சந்தையில் இப்பொருட்களின் விலையில் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்டது. இந்தியா வர்த்தக கட்டுப்பாட்டை நீக்கியது, சுங்க வரியினைக் குறைத்தது. 1990களின் இடையில் பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்கள் விலை குறைந்தது போன்ற நிலைகளினால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்தித்தனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பொருளாதாரச் சீரதிருத்ததிற்குப் பிந்தைய காலங்களில் குறைவான வேளாண் வளர்ச்சியினை அடைந்தது. வேளாண் வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சியினை அடைந்திருந்தபோதும் அதற்கு ஈடாக வேளாண் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் ஆற்றல் (Labour force) குறையவில்லை இது ஒரு முக்கிய முரண்பாடாகக் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவால் அடைந்த உயர் பொருளாதார வளர்ச்சியானது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரவில்லை எனவே வேளாண்மையிலிருந்து அதிகமாக வேளாண்மையில் சுய-தொழில் ஈடுபட்டிருந்தவர்களும், தொழிலாளர்களும் வெளியேறினார்கள். குறைவான வேளாண் உற்பத்தித் திறன், குறைந்த அளவிலான வேளாண் விளைபொருட்களின் விலை, வேளாண் பொருட்களின் தேவையில் வீழ்ச்சி, வேளாண்மைக்கு வெளியே தேவையான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தராத நிலை, இவை அனைத்தும் வேளாண்மை 1990களின் கடைசி காலகட்டத்தில் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சனைகளாகும். நீர்ப்பாசனம் மீது பொதுத் துறையின் முதலீடு குறைந்து வந்தது. 1980களுக்கும் 1990களுக்கும் இடையே நீர்ப்பாசன சாகுபடி பரப்பானது ஆண்டுக்கு 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்தது. ஆனால் இது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஆண்டுக்கு 2.5 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுபோல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருந்தது. நிறுவனம் சார் அளிப்பும் குறைந்து வந்தது. இதன் பங்கு மொத்த நிறுவனம் சார் கடனில் ஆண்டுக்கு 10-11 விழுக்காடு மட்டுமே இருந்தது. பெரும்பான்மையான விவசாயிகள் முறைசார ஆதாரங்கள் வழியாகக் கடன் பெற்றிருந்தனர், இதற்கு 30 விழுக்காட்டுக்குமேல் வட்டியாகச் செலுத்திவந்தனர். தொடர்ந்து வேளாண்மையில் லாமற்ற தன்மை, வேளாண்மை வணிகமயமாதல், அதிகரித்த கடன் சுமை போன்ற காரணங்களினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருந்தது (Narasimha Reddy et al 2009).

அட்டவணை: ஒப்பீட்டு அளவிலான துறைவாரியான செயல்திறன் (விழுக்காடு)

துறைகள்

ஆண்டு வளர்ச்சி வீதம்

பொருளாதார பங்களிப்பு

1981-1990

1991-1999

1980

1990

1999

வேளாண்மை

3.6

3.0

39.7

32.2

25.2

தொழில் துறை

7.1

5.6

23.7

27.2

26.7

சேவைத் துறை

6.7

7.8

36.6

40.6

48.1

Source: Shankar Achary et al 2003.

அட்டவணைவேளாண் உற்பத்திஉற்பத்தித் திறன் வளர்ச்சி (விழுக்காட்டில் ஆண்டுக்கு)

உற்பத்திஉற்பத்திஉற்பத்தி திறன்
1980-81முதல் 1989-90வரை1990-91முதல் 2000-01வரை1980-81முதல் 1989-90வரை1990-91முதல் 2000-01வரை
உணவு தானியங்கள்2.851.662.741.34
உணவல்லா விளைபொருட்கள்3.771.862.310.59
அனைத்து விளைபொருட்கள்3.191.732.561.02

Source: Shankar Achary et al 2003


1980களின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ 1990களில் அமைந்த ஆட்சிகளே காணமாக இருந்தது. இவ்வாட்சிகள் சிறுபான்மை அரசாகவும், கூட்டணி அரசாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட சித்தாந்தங்களின் கூட்டாக இவ்வாட்சிகள் இருந்தாலும் நாட்டின் நலன் கருதி அவ்வப்போது எடுக்கப்பட்ட உத்திகள் பெருமளவிற்குக் கருத்தொற்றுமையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது (Singh 2001).

ஜி.எஸ்.பல்லா மற்றும் குர்மாயில் சிங்கின் ஆய்வுக் கட்டுரையில் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவானது 1990-93 முதல் 2003-06ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் வளர்ச்சியானது அதிக அளவில் வீழ்ச்சியடைந்தது. இக்கால கட்டங்களில் ஆண்டுக்கு 1.74 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சி இருந்தது இது 1980-83 முதல் 1990-93ஆம் ஆண்டுகளுக்கிடையே பதிவான வளர்ச்சியைவிட (ஆண்டுக்கு 3.37 விழுக்காடு) மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைக்கான முக்கியக் காரணம் கிராமப்புற உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, வேளாண் ஆராய்ச்சி மீதான முதலீடுகள் குறைந்தது எனச் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய விளைவாகச் சாகுபடி செய்யும் பயிர்களில் மாற்றம் ஏற்பட்டது. உணவு தானியச் சாகுபடியிலிருந்து விலகி உணவல்லா பயிர்களை (குறிப்பாக மதிப்பு மிக்க பயிர்கள்) நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபின் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு போன்றவற்றின் உற்பத்தித் திறன் வளர்ச்சியானது அதிக அளவிற்குக் குறைந்தது. தனியார் நிறுவனங்கள் வேளாண்மையில் ஊடுருவி உணவல்லா விளைபொருட்களை விளைவிக்க நிதி வழங்கியது. இதனால் பெருமளவிற்கான விவசாயிகள் வேளாண் சாகுபடி பயிர் வகைகளில் மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களில் பெருமளவிற்குப் பெரிய, நடுத்தர விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990-93ல் உணவு தானிய உற்பத்தியானது மொத்தப் பயிரிடும் பரப்பில் 73 விழுக்காடாக இருந்தது 2003-06ல் 68.9 விழுக்காடாகக் குறைந்தது. உணவு தானிய உற்பத்தியானது மொத்த உற்பத்தியின் மதிப்பில் 52.7 விழுக்காடாக இருந்தது 49.6 விழுக்காடாக இக்கால கட்டத்தில் குறைந்தது (Bhalla et al 2009). முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சார்பானதாக இருந்தது. வேளாண்மைக்கான மானியங்கள் குறைக்கப்பட்டது, தடையற்ற வர்த்தகம் போன்றவை அதிகமாக வேளாண்மையைப் பாதித்தது. எனவே ஐக்கிய முன்னணி அரசு காலத்தில் வேளாண்மையினை முன்னிறுத்தி இரண்டாம் கட்ட சீர்திருத்தங்கள் (இடுபொருட்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை, வறண்ட சாகுபடிக்கு உகந்த பகுதிகளில் பசுமைப் புரட்சி விரிவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல்) தொடங்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஏற்பட்ட நிலையற்ற போக்கினாலும், அழுத்தங்களினாலும் பல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினாலும் வேளாண்துறையின் வளர்ச்சியினை பெருமளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியது. பொதுவாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின் வேளாண்மையின் போக்குச் சரியத் தொடங்கியது.

– பேரா.பு.அன்பழகன்