திரைவிமர்சனம்: ராகுல் சன்கிரிடியானின் ஷ்யாம் சிங்க ராய் – இரா இரமணன்
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த இந்த தெலுங்குப் படம் குறித்து சமூக ஊடகங்களில் சில பதிவுகள் வந்துள்ளன. நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம். இதன் இயக்குனர் ராகுல் சங்கிரித்தியனுக்கு இது மூன்றாவது படமாம்.சிறப்பாக இயக்கியுள்ளார்.மூலக்கதை ஜன்கா சத்யதேவ் எழுதியுள்ளார். நானி, சாய் பல்லவி,கிரித்தி ஷெட்டி, மடோன்னா செபாஸ்டின், ராகுல் ரவீந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதாநாயகன் நானி மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பல விமர்சகர்களால் பாரட்டப்பட்டுள்ளது. படத் தொகுப்பும் ஒளிப்பதிவும் சிறப்பான அம்சங்கள். திரைக்கதை இன்னும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கருத்தும் உள்ளது. 47கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கதை தேவதாசிகள் குறித்தது என்று சொல்லலாம். நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த ஒருவன் புரட்சிகரமான எழுத்தாளனாகவும் உண்மையான காதலனாகவும் விளங்குவது குறித்து என்றும் சொல்லலாம். மறுபிறவி நம்பிக்கையும் மையமாக உள்ளது. அதைத் தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இடது கைப் பழக்கம் உள்ள ஷ்யாம் இடது சாரி சிந்தனை உள்ளவன். ஊர்க் கிணற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்கக்கூடாது என்னும்போது அவன் சொல்லும் வசனம் ’தாகம் எடுப்பவர்கள் இந்த தண்ணியைக் குடியுங்கள்;சாதி பார்க்கிறவர்கள் விக்கி சாகுங்கள்’ என்பது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு இடங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தன் காதலிக்கு படகு ஓட்டக் கற்றுக் கொடுக்கும்போது ‘ஒரு விஷயத்தை இரண்டு விதங்களில் செய்யலாம்.
ஒன்று பயத்துடன்; இன்னொன்று காதலுடன்’ என்பது சிறப்பாக உள்ளது. அவனுடைய காதலி ரோசி ‘என்னைக் காப்பற்றிக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆனால் என் போல் நூற்றுக்கணக்கான தேவ தாசிகள் எத்தனயோ கோவில்களில் இருக்கிறார்களே?அவர்களை எப்படிக் காப்பாற்றுவது?’ என்று கேட்கும் இடம் குறிப்பிட வேண்டும். தனி மனித சாகசமாக அவளை மீட்டுக்கொண்டு வந்த அவன் தன் எழுத்துக்களால் மக்களை புரட்சிகரமான இயக்கத்திற்கு இட்டு செல்கிறான்.
இந்தப் படத்தின் முக்கியப் பகுதி 1960-80களில் மேற்கு வங்கத்தில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. அப்பொழுது மேற்கு வங்கத்திலும் இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும் தேவதாசி முறை இருந்ததா எனப் பார்த்தால் பல அதிர்ச்சியான விவரங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியார் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்களால் 1930களில் கொண்டுவரப்பட்ட தேவதாசி ஒழிப்பு சட்டம் 1947இல்தான் சட்டமாகிறது. மேலும் 1934 பாம்பே தேவதாசி பாதுகாப்பு சட்டம், அதன் தொடர்ச்சியான 1957 பாம்பே சட்டம், 1988ஆந்திரா தேவதாசி தடுப்பு சட்டம் ஆகியவை இயற்றப்படுகின்றன.
தேசியப் பெண்கள் ஆணையம் மாநிலங்களில் தேவதாசி முறை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த தகவல்களை திரட்டியபோது ஓடிஸா அரசாங்கம் அது ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியது.தமிழ்நாடும் அவ்வாறே கூறியது.ஆந்திராவில் 16624 தேவதாசிகள் இருப்பதாக அறியப்படுகிறது.கர்நாடகா பெண்கள் பல்கலைக் கழகம் 2018இல் அந்த மாநிலத்தில் 80000 பேர் இருப்பதாக கண்டறிந்தது.ஆனால் கர்நாடக அரசின் 2008அறிக்கை 40600பேர் இருப்பதாக் கூறியது.மகாராஷ்ட்ராவில் 8793 பேர் தேவதாசி வாழ்க்கை அலவன்ஸ் பெற விண்ணப்பித்ததாகவும் அதில் 6314 மறுக்கப்பட்டதாகவும் 2749 பேர் தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.
பெங்களூரு பெண்கள் திட்டமும் தேசிய பெண்கள் ஆணையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தேவதாசி முறைக்கு பெண்கள் வருவதற்கான காரணங்களில் பேச்சுக் குறைபாடு,காது கேளாமை போன்ற உடல் ஊனம், வறுமை மற்றும் சில காரணங்கள் குரிப்பிடப்படுகிறதாம். நாட்டின் சராசரி வாழ்நாள் காலத்தை விட இவர்களின் வாழ்நாள் காலம் குறைவாக உள்ளதாம்.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தேவதாசிப் பெண்களைக் காணமுடியாது என்கிறது அந்த அறிக்கை.
(en.wikipedia.org/wiki/Devadasi) (https://www.ijalr.in/2020/08/devadasi-system-in-india.html#:~:text=The%20Devadasi%20is%20a%20system%20of%20votive%20offering,by%20the%20)
தேவதாசிகள் குறித்து பல புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களும் வந்துள்ளனவாம். அதில் இப்போது வந்துள்ள முக்கியமான படம் ஷ்யாம் சிங்க ராய்.