*தேவதையின் தேவதை* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா
மணி… ஏழு வயது சிறுவன்..
70பதுகளின் தொடக்கத்தில், அவன் குடும்பம், எழும்பூர், கெங்கு ரெட்டி தெருவில் வாழ்ந்தது.. மூன்றாம் வகுப்பில் படிக்கும் அவன், சுட்டியான பையன்.. எப்போதும் விளையாட்டு என்று இருந்ததால், அவன் அம்மா எதிர்வீட்டில், எஸ். எஸ். எல். சி. பெயில் ஆகி குழந்தைகளுக்கு டியூசன் சொல்லி தரும், புஷ்பா டீச்சரிடம் சேர்த்தாள்.
புஷ்பா டீச்சர், சிறுவன் மணியின் கண்களுக்கு, ‘தேவதை’ போல் தோன்றினாள், மிகவும் ஸ்ட்ரிக்ட் டீச்சர், வசதியில்லா நடுத்தர குடும்பத்து ஒரே பெண், வாடகை வீடு, அப்பா ஏதோ ஒரு சின்ன கம்பெனியின் சிப்பந்தி, கவுரவமான குடும்பம்…டியூஷனில் கிடைக்கும் பணம், அந்த குடும்பத்துக்கு பேருதவியாக இருந்தது.. அவள் தாயோ “இவளை சீக்ரம் நல்ல இடமா பாத்து கட்டிகுடுத்துடுங்கோ “என்று எப்பப்பார் கணவனை நச்சரித்து கொண்டே இருப்பாள்.. சாதுவான அவரோ “எல்லாம் கடவுள் பாத்துக்குவார், கவல படாத “என்று ஆறுதல் கூறுவார்..
புஷ்பா கையில்.. நீண்ட பிரம்புடன்தான் பாடம் எடுப்பாள், வீட்டு பாடம் செய்யவில்லை என்றாள் கைகள் சிவக்க பிரம்படி விழும்.. ஆனால், மணிக்கோ அந்த டீச்சர் மேல் பயமே ஏற்பட்டதில்லை.. அடிவாங்கினாலும் அழுக மாட்டான், மீண்டும் சிரித்து பேசுவான்.. ஓரிரு வாரங்களில், புஷ்பா டீச்சருக்கும், இவனை பிடித்து போய்விட்டது.. டீச்சருக்கு குற்றேவல் செய்வதில் அவனுக்கு அலாதி பிரியம்… அவளும் அவனை அருகில் அமர்த்தி பாடம் எடுப்பாள்.. யாருக்கும் தெரியாமல், அவனுக்கு தன் காப்பியில், ஒன் பை டூ பகிர்வாள்.. இவனும் அம்மா தரும் பட்சணங்களை, மறைத்து கொண்டு போய், அவளுடன் பகிர்ந்து உண்பான்.. மணி ஒரு நாள் டியூஷனுக்கு வரவில்லை என்றாலும் துடித்து போய் விடுவாள் புஷ்பா, சக மாணவனை அனுப்பி, விசாரித்த பின்பே அவள் மனம் அமைதி அடையும்.. மணியின் மதிப்பெண்ணும் அதிகரித்தது.
ஓராண்டுக்கு பின், மணியின் அப்பாவுக்கு மாற்றலாகி,செங்கல்பட்டு செல்ல வேண்டி வர.. மணி அழத்தொடங்கி விட்டான்.. எவ்வளவு சமாதானம் சொன்னாலும் கேட்கவில்லை.. அவன் புஷ்பா டீச்சரின் கையை பிடித்து கொண்டு கேவி கேவி அழ, அவளும் இவனுக்கும் மேல் கேவியழ..” நீ நல்லா படிச்சி பெரிய டாக்டர் ஆவணும்”என்று வாழ்த்தி ஆசி கூற, மணி தலையாட்ட… இருவரும் விழிநீரில் மிதந்தவண்ணம், பிரியா விடை பெற்றனர்..
நாற்பது ஆண்டுகள் அதிவேகமாய் கடந்தன.. மணி மருத்துவம் படித்து, தலைமை மருத்துவனானான்… அவனுக்கு குழந்தை இல்லாததால், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தான், தன் தாய் தந்தையும் தவறிவிட.. அந்த பெண்குழந்தைக்கு புஷ்பா என பெயரிட்டு அன்பாய் வளர்த்தான்..
சக டாக்டர் ஆன தன் மனைவிக்கும் அவனுக்கும் கருத்து வேற்றுமை முற்ற, இருவரும் காதலுடன் கைகுலுக்கி, விவாகரத்து செய்து கொண்டனர்..
தன் பத்து வயது மகள் புஷ்பாவே, தன் வாழ்க்கையின் விடிவெள்ளி என வாழ தொடங்கினான் மணி … ஒருநாள்
ஓ பி யில் பேஷண்ட் பார்த்து கொண்டிருக்கையில், மயக்க நிலையில் அவசர கேஸ் ஒன்று வர, மணி அந்த நோயாளி
‘புஷ்பா டீச்சர்’ என்பதை அறிந்து, ஆடிப்போனான்..
தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்ற கண் விழித்த புஷ்பா, இவனை அடையாளம் தெரியாமல், கையெடுத்து கும்பிட்டு அழ “டீச்சர் நான்தான் உங்கள் எழும்பூர் மாணவன் மணி “எனக்கூற , டீச்சரின் கண்ணீர் அதிகரித்தது…
ஆம் ஏழ்மை அவளை கன்னியாகவே, வைத்திருக்க, இன்று கன்னியா ஸ்திரீயாய், அவள் ஆயிரம் அனாதை குழந்தைகளுக்கு தாயாய் தன்னை தாரைவார்த்து கொண்டதை, தன் அன்பு குழந்தை மணியிடம் சொல்லி அழுகையுடன் சிரித்தாள்.. அவள் இன்று ..
தேவதையின் தேவதையாய், டாக்டர் மணியின் கண்களுக்கு காட்சி தந்தாள்.
மணியின் மகள் புஷ்பாவுக்கு, நல்ல டீச்சர், நல்ல பாட்டி, நல்ல துணையும், மணிக்கு ஒரு அன்பு தாயும் கிடைத்தனர்..
மணியின் துணையாக, இரு புஷ்பாக்கள், புஷ்பமாய் மலர, அவன் ஆனந்தத்தோடு, பல உயிர்களை… காக்க காக்க,
கனகவேலாய்!, புறப்பட்டான்..
—முற்றும் —