நூல் மதிப்புரை: கோ. லீலாவின் மறை நீர் – வே. சங்கர்
நூலின் பெயர் சற்றே வித்தியாசமாக இருக்கவே, அதை வாசிக்கவேண்டும் என்ற ஈர்ப்பு இயல்பாகவே எழுந்துவிடுகிறது. மழை நீர் தெரியும் அது என்ன ’மறை நீர்’? என்ற ஆர்வம் அதில் சேர்த்தி.. புத்தகத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவொரு ஆய்வுக்கட்டுரையோ என்ற எண்ணம் எழுந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய செறிவான கட்டுரைகளின் கூட்டுத் தொகுப்பு என்பதை உணரமுடிகிறது.
திருவாரூரை பிறந்த ஊராகவும் தஞ்சாவூரை சொந்த ஊராகவும் கொண்டவர் கோ.லீலா. நீர்வள ஆதார அமைப்பு, பொதுப்பணித்துறையில் பணிபுரியும் இவருக்கு இது முதல்நூல்.
முதல் இருபத்திரண்டு பக்கங்கள், பதிப்புரை, முகவுரை, அணிந்துரை, வாழ்த்துரை, கல்லூரித்தோழிகளின் வாழ்த்துரை, என்னுரை, நன்றியும், பேரன்பும் என்ற பெயரில் இந்நூலில் என்னென்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சுருக்கமாக (?) இந்நூலை வாசிப்பதற்கு முன்னதாகவே அறிந்துகொள்ளமுடிகிறது. மொத்தம் பதினைந்து கட்டுரைகள். ஒன்றன் தொடர்ச்சியாக மற்றொன்று சுவாரஸ்யம் குறையாமல் நம்மைக் கரம்பற்றி அழைத்துச்செல்கின்றன.
ஆய்வுகள் செய்து நூல்களை எழுதும் பெண் எழுத்தாளர்கள் தமிழில் மிகக் குறைவு. ஆனால், கோ. லீலா சீரியமுறையில் பல ஆய்வுகளை செய்தும் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தும் சிறந்ததொரு தொகுப்பாக இந்நூலைப் படைத்திருக்கிறார்.
முதல் கட்டுரையில், தண்ணீரின் மூன்று தன்மைகளான காரத்தன்மை, அமிலத்தன்மை, மற்றும் நன்னீர்தன்மை என்று பள்ளிக்குழந்தைகளும் புரிந்துகொள்ளும்வண்ணம் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
அதைவிட குறிப்பாக, சாணக்கியர் காலத்தில் பெய்த அதே மழையளவுதான் இன்றும் பெய்கிறது என்ற வரிகளை வாசிக்கும்போது ”அட, ஆமாம் இல்ல!” என்று நம்மையறியாமல் சொல்லத்தோன்றுகிறது. அப்புறம் ஏன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது? ஒருவேளை மக்கள் தொகையின் அதிகரிப்பாக இருக்குமோ? என்ற சந்தேகம் தோன்றுவதற்குள், நீர்நிலைகள் சாக்கடை ஆனது எப்படி என்ற கேள்விக்கு, நூல் ஆசிரியரே கீழ்கண்டவாறு விளக்கமும் தந்துவிடுகிறார்.
எந்தப் பொருட்களைத் தயாரிப்பதன் மூலம் நீர் நிலை கெடும்? என்பதை அறிந்த முதலாம் உலக நாடுகள், அப்பொருட்கள் தயாரிப்புக்கான ஒப்பந்தந்தத்தை மூன்றாம் உல நாடுகளுக்குத் தாரை வார்க்கின்றன. மூன்றாம் உலக நாடுகளோ, அரசியல், மோசமான பொருளாதார நெருக்கடி, மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல காரணங்களால் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தத்தைப் பெறுகின்றன.
பொருள் தயாரித்த பின் வெளிவரும் கழிவை மேலாண்மை செய்யாது நீர்நிலைகளில் விட்டுவிடுகின்றன. இதன் மூலம் பல ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் கெட்டுக் குட்டிச்சுவராகிவிடுகின்றன.
இதுமட்டுமல்லாமல், கழிவுகள் நீரோடு சேர்ந்து ஊடுருவி நிலத்தடி நீரையும் மாசடையச் செய்யத்தவறுவதில்லை. இனி தண்ணீர் கிடைக்க ஒரே வழி மழை மட்டுமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய தருணமாக இன்றைய காலகட்டம் மாறியிருக்கிறது.
வளர்ந்த நாடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையை எப்படி சமாளிக்கிறார்கள்? என்ற கேள்விக்கு, சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுகின்றனவாம். நீரின் தேவையையும், பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து, அதற்கேற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளை வகுத்துக்கொள்கிறார்களாம். .
எல்லாம் சரிதான். மறை நீர் என்றால் என்னவென்று புரிந்தால்தானே அதைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் பெறமுடியும்? என்பவர்களுக்கு இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை அப்படியே தருகிறேன்.
நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தையும் கொண்டு மதிப்பிடுவதைப் போல நீர் வளத்தைக் கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம் தான் மறைநீர்.
ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்கத் தெரியாதா? ஏன் திருப்பூரையே எல்லா நாடுகளும் சுற்றிச்சுற்றி வருகின்றன. ஆம், 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க பத்தாயிரம் லிட்டர் மறை நீர் தேவை. ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? என்ற கேள்வி நம்மைத் திகைப்படைய வைக்கிறது.
கனடா போன்ற வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளிடமிருந்து தண்ணீர் அதிகமாக செலவாகும் பொருட்களை இறக்குமதி செய்துகொள்கின்றன. துபாய் இதற்கெல்லாம் அண்ணன். பிறநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து அதை அப்படியே ஏற்றுமதியும் செய்கின்றன. இதன்மூலம் நாட்டின் வளம் பாதுகாக்கப்படுவதோடு வருமானமும் பெற்றுவிடுகிறது. வேறொன்றும் இல்லை, அது நம்மூர் தரகுவேலைக்குச் சமமானது.
மறை நீர் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் சீனா, பிரேசில், மற்றும் இந்தியா. அரிசி ஏற்றுமதிக்காக மட்டும் 10 ட்ரில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளங்கும்படி சொல்லவேண்டுமானால், 10 ட்ரில்லியன் லிட்டர் தண்ணீரை மறை நீராக இந்தியா ஏற்றுமதி செய்துவருகிறது.
மறை நீரை எப்படி சேமிப்பது? தண்ணீர் அதிகமாக உள்ள காலத்தில் விவசாயம் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வதும் தண்ணீர் இல்லாத காலங்களில் உற்பத்தி செய்த உணவுப்பொருட்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம் மறை நீரை சேமிக்க முடியும் என்கிறார் அதுமட்டுமல்ல, தண்ணீர் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட வளமே அன்றி பொருள் அல்ல என்கிறார் இந்நூல் ஆசிரியர்.
சிலர் பணம்-உற்பத்திக்கு என்ன வழி என்று கேட்கிறார்கள். நீ உயிரற்றுப் போய்விடுவாய் என்று சொல்லும்போதுகூட பணத்தை எப்படி உருவாக்குவது என்ற ஆர்வமும் துடிப்பும் மனிதர்களிடையே இருப்பது மிகவும் அச்சத்திற்கு உள்ளாக்குகிறது என்று வேதனையோடு நினைவு கூறுகிறார்.
இன்னும் ஒருபடி மேலே போய், தற்போது அறிவியல் என்பது காசு, கல்வி, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு அடிப்படைக்கானதே தவிர வாழ்வியல் அடிப்படைக்கானதல்ல என்பதை நமது அன்றாட வாழ்க்கை காட்டுகிறது என்கிறார்.
அடுத்தடுத்து செல்லும் பக்கங்களில் காடு என்றால் என்ன? வனம் என்றால் என்ன? கானகம் என்றால் என்ன? மழைக்காடுகள் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஒரு நாடு ’வளமான நாடு’ என்பதற்கான அறிகுறி மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும். பூமியின் நுரையீரல் காடுகள்தான். நீராதாரங்கள் அனைத்தும் காட்டின் மடியில்தான் உற்பத்தியாகின்றன என்கிறார்.
வனத்தைப் பற்றிய அறிவோ, உணர்வோ, அக்கறையோ இல்லாதவர்கள் எப்படி வனத்தைப் பாதுகாக்க முடியும்? இத்தனையும் உள்ளவர்கள் வனத்தின் மைந்தர்களான பழங்குடியினர்தான் மழைக்காடுகளை மனிதர்களால் உருவாக்க முடியாது. இவர்கள் நடுகிற மரங்கள் எல்லாம் காடுகளை அதுவும் மழைதரும் காடுகளை உருவாக்காது. என்பதை ஆதாரத்தோடு அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கிறார்.
போகிறபோக்கில், கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாய் பற்றியும்,பாரிஸ் ஒப்பந்தம் பற்றியும், அமெரிக்காவைச் சேர்ந்த ‘பெக்டல்’ என்ற தனியார் நிறுவனத்தின் தில்லுமுல்லுகளைப் பற்றியும் மறக்காமல் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு.
அதுமட்டுமல்லாமல், பழந்தமிழரின் பாசன மற்றும் வெள்ள மேலாண்மையின் சிறப்பு, தற்போது தண்ணீர் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதனை மட்டும் குறிப்பிடாமல் அதற்குண்டான தீர்வுகளையும் விவரிக்கிறது இந்நூல்.
இந்நூல் ’மறை நீர்’ பற்றிய தகவல்களை மட்டும் உள்ளடக்கியதாக இல்லாமல் இன்றைய தலைமுறையினர் நீர் மற்றும் நீர்மேலாண்மை, காடுகள் மற்றும் மரம்நடுதல் பற்றிய விழிப்புணர்வு அடைவதற்கு அவசியம் வாசிக்கவேண்டிய நூல் என்று அறுதியிட்டுக்கூறலாம்.
நூலின் பெயர் : மறை நீர்
ஆசிரியர் : கோ.லீலா
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ.150/-
பக்கங்கள் : 120