நூல் அறிமுகம்: தனஞ்செழியனின் “ஹைக்கூ என்றும் சொல்லலாம்” – பாரதிசந்திரன்
“உண்மையில்லா நிதர்சனங்கள்”
எழுத்தாளர் மு. தனஞ்செழியன் அவர்கள் ‘ஹைக்கூ என்றும் சொல்லலாம்’ எனும் கவிதைத் தொகுப்பைத் தற்பொழுது வெளியிட்டுள்ளார். நூறு ஹைக்கூ கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. கு அழகிரிசாமிக்கும், கி ராஜா நாராயணன் அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் கோவில்பட்டி ஊரைச் சார்ந்தவர் என்பதால் தனது ஊர் முன்னோடிகளுக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
மு. தனஞ்செழியனின் ஹைக்கூ உலகம் இரு வேறு வடிவமைப்புகளின் மேல் கட்டுமானம் பெற்றவைகளாக இருக்கின்றன. படைப்புக்கு அடித்தளமாய் சமூகமும், மனமும் காணப்படுகின்றன. அகவய நோக்கம் பெரும் பகுதியாகவும், சிறிய அளவில் புறவய நோக்குமாகவும் கவிதைகள் இருக்கின்றன. படைப்பின் வெளிப்பாடு முழுமையும் மாற்றம் எனும் புதுமைக் கருத்து ஒன்றை மையம் கொண்டுள்ளன. சிந்தனை மாற்றத்தை எதிர்கால சமூகம் பெறுவதற்கான வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன.
படைப்பு உருவாக்கம் குறித்து பேரறிஞர் அ.கா. மணவாளன் கூறும்பொழுது ”ஒரு மானுட வினை நிகழ்ச்சி, இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாகிறது. அதாவது, உலக இயற்கை நிகழ்ச்சி இலக்கிய நிகழ்ச்சியாக மாறுகிறது. பின்னர், இலக்கிய நிகழ்ச்சி இயற்கை நிகழ்ச்சியோடு தொடர்பு கொள்கிறது. தோற்றத்திற்கு அடிப்படையான இயற்கை நிகழ்ச்சியும் படைப்புடன் தொடர்பு கொள்ளும். இயற்கை நிகழ்ச்சியும் ஒரே தன்மை உடையனவாக இருப்பதில்லை. தோற்றத்திற்கு ஆதாரமான இயற்கை நிகழ்ச்சிக்கு உலகம் மானுட வாழ்க்கை முறைகள் அறிவு துறைகள் இலக்கியம் படைக்கும் படைப்பாளி என்னும் பல கூறுகளை உடையது” என்று கூறுவார். அதை அடிப்படையாகக் கொண்டுதான் மு தனஞ்செழியன் அவர்களின் கவிதைத் தொகுப்பை நம்மால் அணுக முடிகிறது
எழுத்தாளர் மு தனஞ்செழியன் தன் கவிதையில், கவிதையின் மொழி நவீனம் நோக்கிய பாடுபொருள் கொண்ட புது வடிவத்தை ஹைக்கூவில் முயற்சி செய்து பார்த்திருக்கிறார், நிகழ் முரண் எனும் நிலையில் பொருள் முரணாகவோ, சொல் முரணாகவோ காட்சிகள் விளக்கப்படுகின்றன. கவிதையின் வடிவமும் பொருள் வெளிப்பாடும், வாசகனை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இவற்றைச் சாதாரணமாய் மு.தனஞ்செழியன் இந்தக் கவிதைத் தொகுப்பில் செய்து பார்த்திருக்கிறார்.
”சுலபமாக இறந்து விட்டான்
சுடுகாட்டிற்கு தான்
வழி கிடைக்கவில்லை”
தமிழகச் சூழலில், நடைபெறும் நிகழ்வுகளில் தலித் இன மக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்காகவும், எரிப்பதற்காகவும் கொண்டு செல்ல அடைகின்ற இன்னல்களைச் செய்தித்தாள்கள் தினம் தினம் தந்து கொண்டே தான் இருக்கின்றன. இறந்த மனைவியின் உடலைத் தோளிலே சுமந்து கொண்டு நெடும் தொலைவு சென்ற கணவனின் வரலாற்றைக் கொண்டது தான் நம் நாடு. ”தலித் மக்களின் பிணம் எங்கள் வீதிக்குள் வரக் கூடாது” என்கின்ற மேல் தட்டு மக்களின் ஒதுக்குதலால் பிணத்தை ஆற்றின் நடுவிலும் கண்மாய் நடுவிலும் தலையில் தூக்கிச் செல்லும் அவலத்தை இக்கவிதை தோலுரித்துக் காட்டுகிறது.
இறந்து விட்டான், ஆனால் சுடுகாட்டிற்குப் போவதற்கு தான் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்ய? என்று ஏங்கும் தலித் இன மக்களின் துன்பத்தை இக்கவிதை வெளிப்படுத்தி விடுகிறது.
இக்கவிதையில் முதல் வரி ஒரு செய்தியாகவும், அதற்கு முரணான மற்றொரு செய்தி அடுத்த இரு வரிகளிலும் காணப்படுகின்றன. சுலபம் * சுலபமற்று என்கிற முறையில் பொருள் முரணை இக்கவிதை விளக்கி நிற்கிறது. அதேபோல்,
”கேட்காத காதுகளிடம்
கேட்டுக்கொண்டிருந்தான்
வேண்டுதல்”
எனும் கவிதையில், சமூகத்தின் அறிவு தளத்தில் உள்ள குறைபாடுகளைத் தன் கவிதைக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றார். இறை நம்பிக்கை இருக்க வேண்டியது தான். அதற்காக மூடத்தனமான பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பது மானிட சமூகத்திற்கு எவ்வளவு கெடுதல் ஆனது என்பதை இக்கவிதை விளக்குகிறது.
கவிஞன் காலத்தைத் தன் திருஷ்டியால் திருஷ்டிக்கிறான். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் உத்தமம் என உறுதிப்பட கூறுகிறான். அது நடைபெறாமல் இருக்கும்பொழுது நகைச்சுவையும் கிண்டலுமாகத் தன் கவிதையின் பாடுபொருளாய் ஆக்குகின்றான். கடவுள் சிலையாக இருக்கிறார் துன்பங்களைச் சொல்ல வந்த மனிதன், அச்சிலையிடம் தனக்கான வரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவு அபத்தம் என்று இக்கவிதை கூறுகிறது.
தன்னிடம் இருக்கும் கிழிந்து போன ரூபாய்களைக் கொடுத்துச் செருப்புத் தைத்துக் கொள்ளும் மேல்தட்டுச் சமூகம் நிறைந்த நாடு இது. நல்ல நோட்டுக்குக் கூட லாயக்கற்றவர்களாகத் தூரமாய் தள்ளி வைத்திருக்கும் நிலையைச்
”செருப்பு தைத்தவர்
மடித்து வைக்கிறார்
கிழிந்த ரூபாய் நோட்டை”
இக்கவிதை விளக்குகிறது. தொழிலாளியின் வாழ்க்கைச்சூழல் மிகக் கொடுமையானது. எல்லாருடைய செருப்பையும் கிழிந்து போனதைத் தைக்கும் தன்னிடம் கிழிந்த நோட்டுகளே வருமானால் அவன் என்ன செய்வான்? கிழிதல்* தைத்தல் எனும் பொருள் முரண் இக்கவிதையிலும் காணப்படுகிறது.
சொல் முரண் எனும் உத்தியில் முரண் சொல் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் கவிதைகளில் கையாளப் பெறுகின்றதை அறிய முடிகிறது. இக்கவிதை வடிவம் ஹைக்கூ கவிதைகள் வெளிப்பாட்டு உத்தியில் மிக முக்கியமானதாகிறது. கேட்கவில்லை கேட்கிறது எனும் சொல்லாட்சி கீழ்காணும் கவிதையை வடிவமைக்கிறது பாட்டோசை கேட்கவில்லை அதனால் நிசப்தம் எனும் ஒன்று கேட்கிறது என்கிறார் கவிஞர். நிசப்தம் எப்படிக் கேட்கும். வாசகரிடம் ஒரு கேள்வி எழுகிறது. கேட்பதற்கும் கேட்காமல் இருப்பதற்கும் காதுகள் தானே உணர்கின்றன? கேட்காமல் இருக்கிறது என்பதை உணர்வதும் கேட்பதால் தானே? என நுட்பமாக இந்தக் கவிதை ஒரு பொருளைத் தருகிறது இல்லாமையை இருப்பதைக் கொண்டு உணர்தல் தானே அறிவு. இதை,
”பாட்டோசை
நின்ற இடத்தில்
நிசப்தம் கேட்கிறது”
நமது சடங்குச் சம்பிரதாயங்கள் போன்றவை உண்மையைச் சில நேரம் காணாமல் செய்து சடங்குகளாகவே ஆக்கி விடுகிறது. மனம் உள்ளார்ந்த உண்மைகளை யோசிக்க மறுக்கிறது. இது போன்று உண்மை உணராது மானிடச் சமூகத்தை நாம் வதைக்கும் வதைப்புக்களை என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்புகிறார் கவிஞர் அவ்வாறு கேள்வி எழுப்பும் கவிதையாக,
”தாலி
கட்டியதால்
விதவையானாள்”
இக்கவிதையைக் கூறலாம். தாலியெனும் சடங்கு முறை இருப்பதால் தான் விதவை என்கிற மாற்றுக் கோலம் உருவாகிறது. தாலி கட்டாமல் இயல்பான பெண்ணாக இருந்தால் இப்பொழுதும் அப்படியே இருக்கலாமே? ஆனால் விதவை என்று ஒரு தாலி அறுத்துச் சடங்கு எனும் பெயரில் பெண்ணைத் துன்பப்படுத்துகிறோம் எனும் சமூகச் சிந்தனை கவிஞரின் தொலைநோக்கு சிந்தனையாக இங்கு வெளிப்படுகிறது. மற்றொரு கவிதையில் இதே போன்று மதம் சார்ந்த சிந்தனையை முன் வைக்கிறார். அக்கவிதை,
”கடவுளுக்கும்
காணிக்கைக்கும் இடையில்
கோயில்”
என்பதாகும். கடவுள், மனிதன் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால், கோயில், கோயில் சடங்குகள், காணிக்கை, உண்டியல், ஐயர், தீண்டாமை, வேதம் இவையெல்லாம் ஏன்? பணம் சம்பாதிப்பதற்கான ஏற்பாடாகவே சமூகத்தில் கோயில் உள்ளது அதை ஏன் மானிட சமூகம் புரிந்து கொள்ள மறுக்கிறது என்பதான முற்போக்குச் சிந்தனையை இந்தக் கவிதை தருகிறது. இக்கருத்தினைப் போன்று ஒரு கவிதையைக் கவிஞர் அறிவுமதி எழுதும்பொழுது,
”நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி”
என்கின்றார். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எனும்பொழுது தீயில் இறந்து இறங்கிக் கடவுளை ஏன் பார்க்க வேண்டும்? என்ற பெரும் கேள்வி இக்கவிதையின் ஊடாகக் கேட்கப்பட்டிருக்கிறது.
ஹைக்கூ கவிதைகளில் அழகியல் சேர்ந்த சமூகவியல் கவிதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. இயற்கைக்கு வேறொரு கற்ப்பிதம் அளிப்பது அழகியலின் சில வெளிப்பாடாகிறது. இதனை,
”தயங்கி விழும்
பனி
போர்வை இல்லா கிழவர்”
எனும் கவிதையினூடாகக் காணலாம். பனி இயற்கையின் ஒரு செயல். அது யாருக்காகவும் தன் செயலை மாற்றிக் கொள்ளாது ஆனால் கவிஞன் வீட்டின் வெளியே வயதான கிழவர் கட்டிலில் படுத்துத் தூங்குகிறார் எனவே, பனி அவரைத் துன்பப்படுத்த விடாமல் மெதுவாக அவர்மேல் விழுகிறதா? என்கிறார். வயதானவருக்குப் போர்வை இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் அவரிடம் இல்லை என்பதால் தானே பனியே நீ மெல்ல விழுகிறாய் என்று பனியைப் பார்த்துக் கேட்கிறான். இதேபோல் கவிஞர் அறிவுமதி தன் கவிதை ஒன்றில்,
”விடிந்து விடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்கா”
என்கின்றார். இரவு முழுவதும் விழித்திருக்கும் கூர்க்கா மேலான அன்பு இது இவ்வாறு கவிஞர்களின் சமூகப் பார்வை இரக்கக் குணம் உடையது.
கவிஞர் மு தனஞ்செழியன் கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தின் அவலத்தைப் பேசுவதாகவே இருக்கின்றன. புதுமையைப் பயன்படுத்தி இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. கவிதையின் கரு, வெளிப்பாட்டு உத்தி, சொல்லாடல் போன்றவற்றில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வர முயற்சித்து இருக்கிறார். இறப்பைப் பற்றிய கவிதைகள் அதிகமாக இருக்கின்றன. அவற்றில் சில தத்துவம் பேசுகின்றன. கவிஞரின் முதல் தொகுப்பு இது என்பதைப் போல் இல்லாமல், தரமான கவிதைகளின் தொகுப்பாகப் பண்பட்டு விளைந்து வெளிவந்திருக்கிறது இக்கவிதை தொகுப்பு.
பாரதிசந்திரன்
9283275782
[email protected]