School Teacher Ve. Shankar's Dudduduu (*டுட்டுடூ* சிறார் நாவல் ) Tamil Children Novel Book Review By Dhisharathi.

நூல் அறிமுகம்: *டுட்டுடூ* சிறார் நாவல் – ப. திஷாரதி 



நூலின் பெயர் : டுட்டுடூ
ஆசிரியர் : வே. சங்கர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 64
விலை : 60
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எந்தவித நூலைப் எழுதுவதற்கு முன்பும், அதற்குறிய தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தனித் திறமையே வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.  அது மட்டுமின்றி, இது ஒரு சிறார் நாவல்.  இந்த நாவலின் தலைப்பைப் பார்க்கும்போதே அதைப் படித்தே ஆகவேண்டும் என்கிற முடிவு மனதினுள் அனைத்துக் குழந்தைகளுக்கும் வரவேண்டும்.  அப்படி ஒரு முடிவை என் மனதும் எடுக்கவைத்தது  இந்நாவலின் தலைப்பு.

அடுத்ததாக முன்னுரையைப் பற்றிக் கண்டிப்பாகக் கூறவேண்டும். அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்டதுபோல், நான் செய்யும் செயல்களைப்போலவே இருந்தது.  இந்நாவலின் தலைப்பைப் பார்க்கும்போது வந்த ஆர்வத்தைவிட, முன்னுரையைப் படிக்கும்போது என் ஆர்வம் இன்னும் அதிகமாகியது.

புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பிக்கும் நிலையில்,  ஒரே ஒரு எண்ணம்தான் என்மனதில்.  இது ஒரு நாய்க்குட்டியின் கதையாகத்தான் இருக்கும் என்று.  ஆனால், முதல் வரியைப் படிக்கும்போதே பள்ளிக்கூடத்தைப் பற்றியும், பள்ளியில் மாணவர்கள் செய்யும் செயல்களைப்பற்றியும் அருமையாக வெளிப்படுத்தியிருந்தார் இந்நூலின் ஆசிரியர்.  

அப்போதே என் மனம் என்னுடைய 5ஆம் வகுப்பு வரை நடந்த நிகழ்வினுள் அழைத்துச் சென்றது.  அதுமட்டுமின்றி என் அம்மாவிடமும், பாட்டியிடமும் எவ்வாறு நான் நடந்துகொள்வேனோ அதைப் போலவே இருந்தது. சின்னச் சின்னத் தருணங்களில் என்னுடைய உறவினர்களுடன் உரையாடிய நினைவுகள் என் மனதில் வந்துபோயின.

இந்நாவலில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இனிமையாக இருக்க, ஆசியர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள்,  மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு சூட்டப்பட்ட  பெயர்கள் என அத்தனையும் அருமை.

பள்ளி இடைவேளையில் நடக்கும் நிகழ்வுகள், சத்துணவிற்காக செல்லும் தருணங்கள், பின்பு வீட்டிற்கு திரும்பிச் செல்லும் தருணங்கள் என அனைத்தும் மறக்காமல் நியாபகப்படுத்திக் கொண்டே இருந்தது இந்த டுட்டுடூ – சிறார் நாவல்.

School Teacher Ve. Shankar's Dudduduu (டுட்டுடூ) Tamil Children Novel Book Review By Na. Geetha. Book Day is Branch of Bharathi Puthakalayam.

இதில் மிகவும் பிடித்த விசயம் என்னவென்றால் டுட்டுடூ நாய்க்குட்டி ஒவ்வொருவரிடமும் அழகாக நடந்துகொண்டதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு அருமையாக வெளிப்படுத்தி இருப்பதுதான்.

டுட்டுடூ விளையாடும்போது வந்த சிரிப்பு, டுட்டுடூ கஷ்டத்தில் இருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு அழுகைதான் வந்தது.  இப்படி ஒரு நிகழ்வு எல்லாம் என் வாழ்வில் நடந்ததைப்போலவே இந்நிமிடம் வரை உள்ளது.  வெளிப்படையாகச் சொன்னால், இதை ஒரு கதையாக எண்ண முடியவில்லை. 

ஓவியப்போட்டி,  வாட் இஸ் திஸ் என்கிற ஆங்கிலப் போட்டி என அனைத்தும் என்னை மெய்மறக்க வைத்தது.  இவை அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், இந்நாவலை மேலும் சிறப்பித்தது  “ எங்கள் வீட்டு நாய்க்குட்டி, வெள்ளை நிற நாய்க்குட்டி” என்கிற பாடல் வரிகள்.

அந்தப்பாடலை கடைத்தெருவிற்கு செல்லும்போதுகூட ஆழ்வி பாடிக்கொண்டே போனது, அதன் பின் டுட்டுடூ-வைப் பார்த்ததும்  ஆழ்வியும், முகிழனும் எவ்விதத் தயக்கமும் இன்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, ஆழ்வியின் அம்மா டுட்டுடூவை வளர்க்க சம்மதித்தது எல்லாம் அருமை.  

அனைத்தையும் தொடர்ந்து வாசிக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வரவழைத்தது. ஆனால்,  கடைசி வரி என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது அந்த வரி “ டுட்டுடூவின் கண்களில் நம்பிக்கை ஒளி மின்னியது “ என்ற வரிதான்.

கடைசியாக நான் ஆழ்வியாகவே மாறிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.  இந்தக்கதை என்றும் என் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.  நானும் ஒருநாள் இதுபோன்றதொரு டுட்டுடூவைப் பார்க்கமாட்டேனா என்ற ஏக்கத்துடன் இந்நாவல் பற்றிய என் சிறு பார்வையை முடித்துக்கொள்கிறேன். நன்றி.

ப. திஷாரதி
(பதினொன்றாம் வகுப்பு மாணவி)