Dali ShortStory By Kumaraguru. டாலி சிறுகதை - குமரகுரு

டாலி சிறுகதை – குமரகுரு




வெளிறிப் போயிருந்த கண்களைப் பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு குழப்பம். சிறிது நேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தான். மிகவும் வருத்தமாக இருந்தாலும் அவனுக்குள் ஒரு பெரும் நிம்மதியான ஆனந்தம் பரவியிருந்தது.

எப்போதும் போல் அன்றும் காலையிலேயே எழுந்து விட்டான். அவனின் காலை என்பது ஆறு மணி. மூன்றாவது படிப்பவனின் முதல் வேளை காலையில் வாசலில் வளர்ந்திருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. அவன் அப்பாதான் தினமும் காலையில் சென்று ஆவினில் பால் வாங்கி வருவார். இவன்தான் சென்று கேட்டைத் திறந்துவிடுவான்.

அன்று பால் வாங்கி வந்தவருக்காக கேட்டைத் திறக்கையில், “கவி! இந்தா பால் பாக்கெட்டைக் கையில வாங்கு” என்று கூறியதும், வாங்கியவனின் கண்கள் விரியும்படிக்கு பளபளக்கும் பிரவுன் கலந்த வெள்ளை நிறத்தில் அப்பாவின் மறு கையில் முண்டி கொண்டிருந்த நாய்க்குட்டியைப் பார்த்ததும், பால் பாக்கெட்டை வேகவேகமாக வீட்டுக்குள் சென்று சமையலறையில் வைத்துவிட்டு, சென்ற வேகத்தில் திரும்பி வந்து பிளாஸ்டிக் டப்பாவில் அப்பா ஊற்றி வைத்த நீரை நக்கி நக்கி குடிக்கும் அந்நாய்க் குட்டியை அன்போடு பார்த்து கொண்டிருந்தான்.

அம்மா வந்து, “இதை எங்கேயிருந்து புடிச்சிக்கிட்டு வந்தீங்க” என்று கேட்டதற்கு, “பால் டிப்போ வாசலில் இருந்தது. பார்த்ததும் புடிச்சிருந்துச்சு அதான் தூக்கிட்டு வந்தேன்” என்றார் அப்பா.

கவியின் வீட்டில் இதற்கு முன்னிருந்த எல்லா நாய்களுக்கும், பெண்ணாக இருந்தால் “டாலி”, ஆணாக இருந்தால் “பப்பு” என்ற பெயரையே வைத்திருந்தார்கள். கவிக்கு அது பெண் நாய்க்குட்டி என்று தெரிந்துவிட்டது.

டாலியை எப்போதும் கட்டி வைத்திருந்தார்கள். அது வளர வளர, பாதி போமரேனியனாகவும் பாதி நாட்டு நாயாகவும் இருப்பது தெரிந்தது. ஆனால், கேட்டுக்கு இந்த பக்கம் கட்டிப் போட்டிருந்தாலும், வீட்டுக்கு யார் வந்தாலும் அது குரைப்பதைக் கேட்டு எங்கே கேட்டைத் தாண்டி தாவி விடுமோ என்று பயந்துதான் விடுவார்கள். ஆள் பார்க்க சிறுசாகவும் குரலும் ஆக்ரோஷமும் பெரிதாகவும் இருக்கும். அதற்கு எப்போதும் கேஸ் சிலிண்டர் போட வருபவர்களை கண்டாலேப் பிடிக்காது.

கவி எட்டாவது படிக்கும் போது, ஒரு முறை கேஸ் சிலிண்டர் போட வந்தவரை, ” நீங்க சிலிண்டரை எடுத்துக்கிட்டு உள்ளே போங்கண்ணா நான் செயினை இழுத்துப் பிடிச்சிக்குறேன்” என்று இறுக்கமாக செயினைப் பிடித்து கொண்டிருந்தான் கவி. டாலி இழுத்த இழுப்பில் செயின் அறுந்து கொண்டது. நல்ல வேளையாக அந்த அண்ணன் சட்டென்று சுதாரித்து, உருட்டி கொண்டிருந்த சிலிண்டரை அப்படியே விட்டுவிட்டு, கேட்டைத் திறந்து கொண்டு வெளிப்பக்கம் சென்று தாழிட்டு கொண்டார். கவி அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, டாலியை வீட்டுக்குள் தூக்கி சென்று இன்னொரு அறையில் வைத்து தாழிட்டுவிட்டு வந்து மீண்டும் கேட்டைத் திறந்துவிட்டான்.

ஆனால், அவர் கேட்டைத் திறந்து உள்ளே சென்று சிலிண்டரை வைத்துவிட்டு பணம் வாங்கி கொண்டு மீண்டும் கேட்டைத் திறந்து வெளியே செல்லும் வரை டாலி குரைப்பதை நிறுத்தவில்லை!! அது இருந்த அறையிலிருந்து எப்படிப் பார்த்தாலும் அவர் செல்வதும் தெரிந்திருக்காது!!

டாலியின் இன்னொரு எதிரி கவியின் நண்பன் பரத். அவன் கவியின் வீட்டுக்கு தினமும் கிரிக்கெட் விளையாட வரும்போதெல்லாம் டாலி குரைப்பதை நிறுத்தவே நிறுத்தாது. அவனும் அதை குட்டியிலிருந்து கவியோடு பார்த்தவன்தான். ஆனால், எதனாலோ அவனை அதற்குப் பிடிக்காமல் போய்விட்டது.

கவி பத்தாவது படித்து கொண்டிருந்த சமயம், ஒரு சனிக்கிழமை மதியம். எப்போதும்போல கவியின் வீட்டு வாசலில் கவியும் நண்பர்களும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அன்றும் பரத் வந்திருந்தான். டாலியும் எப்போதும் போல பரத்தைப் பார்த்து குரைத்து கொண்டிருந்தது. சனிக்கிழமை மதியம்தான் அம்மா ஓய்வெடுக்க உறங்கும் நேரமாதலால், அவள் ஒருமுறைக்கு இருமுறை வந்து “ஏன்டா இப்படி உசுரெடுக்குறீங்க, அது கண்ல படாம போயி எங்கேயாவது விளையாடுங்களேன்?” என்று திட்டிவிட்டு போனாள். காதில் வாங்காததைப் போல் நாங்கள் தொடர்ந்து விளையாடியபடி இருந்தோம்.

விளையாடும் சுவாரஸ்யத்தில் திடீரென்று டாலியின் சத்தம் குறைந்ததையோ? அல்லது எதனால் டாலி அமைதியானது என்பதையோ கவியும் நண்பர்களும் கவனிக்கவேயில்லை. தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் போன பரத் திடீரென பதபதைக்க ஓடி வந்து, “டேய்!! கவி… டாலியை வந்து பாரேன்” என்று அழைக்கவே, சென்று பார்த்தால், எப்படியோ, என்ன செய்தோ டாலி செயினை முறுக்கி முறுக்கி ஒரு கட்டத்தில் அதன் முன்னங்கால்கள் இரண்டும் தூக்கி கொண்டு நாக்கு வெறியில் தொங்கியபடி தூக்கிலிட்டு கொண்டது. பதற்றத்தில் கத்தியபடி வீட்டுக்கு ஓடி சென்ற கவின் அப்பாவையும் அம்மாவையும் அழைத்து வந்து தானும் சேர்ந்து டாலியின் செயினை கழற்ற முயன்றும் அது இறுக முறுக்கி கொண்டு கழன்று வாரததால், கட்டிங் பிளையரைக் கொண்டு நறுக்கி எடுக்க வேண்டியதானது.

செயினை நறுக்கிய பின் பெல்டையும் அறுத்தால் கழுத்தில் ரணம் போல் இறுகியிருந்த பெல்டின் தடம். டாலித் துடித்து தொண்டிருந்தது. எங்கள் எல்லோருக்கும் பதற்றம்-பயம்-எல்லோருமே அழுதுவிடும் நிலையில்தான் நின்று கொண்டிருந்தோம். டாலி கண்ணைத் திறக்குமோ திறக்காதோ என்று பயந்தபடி பக்கெட்டில் தண்ணீரை எடுத்து வந்து அதன் மீது ஒவ்வொரு மக் தண்ணீராக ஊற்றத் துவங்கினாள் அம்மா. கவினும் நண்பர்களும் சுற்றி நின்று கொண்டிருக்கவே, “டாலிக்கு மூச்சடைக்கும் கொஞ்சும் காற்று வர மாதிரி தள்ளி தள்ளி நில்லுங்கப்பா” என்கவே. காற்றோட்டம் உள்ளபடி நகர்ந்து நின்று கொண்டார்கள்.

மூன்றாவதோ நான்காவதோ மக் தண்ணீரை ஊற்றியதும் டாலியின் கண்கள் லேசாகத் திறந்தன, துடிப்பதும் நின்றது. அதன் மூச்சு சீரானது. அதன் கண்களில் பரத் தெரிந்திருக்க வேண்டும், லேசாக உறுமியபடி சட்டென்று தடுமாறி எழுந்து நின்று குரைக்க முயன்றது. பரத் அங்கிருந்து பயத்தில் ஓடவில்லை, “டேய்! டாலி கலைக்கிது டா, நல்லாயிருச்சு” என்றான். ஆம் டாலிப் பிழைத்து கொண்டது, அன்று…

ஞாயிறு அன்று எப்போதும் அரை கிலோவோ முக்கால் கிலோவோ கோழிக்கறி வாங்குவது வழக்கம். அப்பா சென்று வாங்கி வருவார் அல்லது கவி. கறி வாங்கும் போதே இருபது ரூபாய்க்கு தோலும் மண்டையும் வாங்கி வந்து அம்மா சோற்றோடு போட்டு உப்பில்லாமல் வேக வைத்து டாலிக்கு போடுவது, வாராந்திர வழக்கம். மற்ற நாட்களில் டாலி எப்போதும் தயிர் சோறு மட்டுமே சாப்பிடும். அது என்ன காரணமோத் தெரியாது, பால் சோறும் தயிர் சோறும் மட்டுமே அதற்குப் பிடிக்கும். ஞாயிறன்று போடப்படும் கறி சோற்றைக் கூட ரொம்ப நேரம் சாப்பிடாமலேப் பார்த்து கொண்டிருந்துவிட்டு பசிப் பொறுக்க முடியாத நேரத்தில் லபக் லபக் என்று முழுங்கிவிடும்.

அப்படி ஒரு நாள் முழுங்கி கொண்டிருந்தவள் திடீரென விட்டு விட்டு “கேவி கேவி” பிறகு அழுவதைப் போல் குரலெழுப்பத் துவங்கினாள். கவி அப்பா அம்மா என்று எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் டாலியின் இந்த அழுகை சத்தம் கேட்கவே கவி கை கழுவிவிட்டு வந்து வெளியில் கட்டியிருந்த டாலியைப் பார்த்தான். அது வலியில் துடித்தபடி வாயிலிருந்து எதையோ எடுக்க “க்கர் க்கர்” என்று கக்கத் துவங்கியிருந்தது. டாலிக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் அதனருகில் சென்று அமர்ந்து கொண்டு மெல்ல தடவி கொடுத்து கொண்டிருந்தான். எதனால் அப்படி செய்கிறதென்று அவனுக்கு ஓரளவு புரிந்தது, அதன் தொண்டையிலோ அல்லது வாயிலோ எதோவொரு உணவுப் பொருள் சிக்கி கொண்டது.

அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த அம்மாவும் வெளியே வந்தாள். கவி,”இதுக்குத் தொண்டையில என்னமோ மாட்டியிருக்குப் போலம்மா?”. கவி பள்ளிக்கு சென்று விடுவான், அப்பாவும் தினமும் வெளியே சென்றுவிடுவார். எப்போதும் வீட்டிலேயே இருப்பது அம்மா என்பதால் அம்மாவிடம் டாலிக்கு நம்பிக்கை ஜாஸ்தி.

டாலிக்கு அருகில் வந்த அம்மா, அதன் நெற்றிப் பொட்டில் தடவியபடி, ” என்னடா ஆச்சு உனக்கு?” என்று கொஞ்சியபடியே மெல்ல அதன் வாயைத் திறந்தாள். டாலியின் கூரான பற்கள் இறுக மூடியிருந்தன. எங்கே டாலி அம்மாவை கடித்து விடுமோ என்று நினைத்து கொண்டே கைகளைக் கட்டி கொண்டு பார்த்து கொண்டிருந்தான், அப்போது பத்தாவது படித்து கொண்டிருந்த கவி.

“எதோவொரு சின்ன நீட்டெலும்பு அதோட மோவாய் குறுக்குல மாட்டியிருக்குப்பா, கிச்சன்ல இருந்து சமையல் மேடைக்குக் கீழ இருக்கத் தொடப்பத்துல இரண்டு குச்சி எடுத்துட்டு வா” என்றாள்.

ஓடி சென்று குச்சியை எடுத்து வந்தவன் முன்னே குச்சியின் ஒல்லியான மேல் பகுதி மற்றும் அடிப்பகுதியை உடைத்து எறிந்து விட்டு நடுப்பகுதியை தனது வலது கையில் வைத்து கொண்டே டாலியின் வாயை இடது கையால் திறந்து மாட்டிக் கொண்டிருந்த எலும்பைக் குச்சியால் நிமிண்டி எடுத்துவிட்டாள். டாலி கத்துவதை நிறுத்திவிட்டு ஆசுவாசமாக படுத்து உறங்கத் துவங்கியது.

“புசு புசு” உருண்டையாக முதலில் வீட்டுக்கு வந்த டாலியை வெகு நாட்களுக்குக் கட்டிப் போடாமல் தான் வைத்திருந்தார்கள். குட்டி டாலி அவ்வளவு அழகு, ஒரு சின்ன பார்பி பொம்மையின் கண்களும், முக்கோணமாக அரசமரத்து இலையின் சிறு வடிவம் போன்ற காதுகளும், பிங்க் நிற மூக்கும், பாலில் யாரோ மிக மிக மிக லேசாக சாக்லேட்டைக் கலந்தைப் போன்றதான நிறமும் என அவ்வளவு அழகு!

குட்டி டாலியுடன் அப்போதெல்லாம் நிறைய விளையாடுவான் கவி. பந்தைத் தூக்கி போட்டால் எடுத்து வர வைக்கப் பழகுவது. ஷேக் ஹேண்ட் கொடுக்க வைப்பது. அவனின் காலிடுக்கில் சுற்றி வந்து காலைக் கடிப்பதைப் போல் செய்யும் பாசாங்கு விளையாட்டு. டாலியைப் பிடித்து மடியில் வைத்து கொண்டு தடவி கொடுத்துக் கொண்டேயிருப்பான். சில நேரம் அது அப்படியேத் தூங்குவதைப் போல் கண்களை மூடி கொள்ளும்.

கொஞ்ச நாட்களிலேயே விறவிறுவென வளரத்துவங்கிய டாலிக்குள்ளிருந்து ஒரு ஆக்ரோஷம் வெளிப்பட்டது. அது வீட்டுக்கு வருபவர்களைக் கடித்து விடுமோ என்ற பயத்தில்தான் அதைக் கட்டிப் போட துவங்கினார்கள். பிறகு வாரத்தில் ஓரிரு நாட்கள் டாலியுடன் விளையாடுவான். அதுவும் மெல்ல குறைந்தது, இன்னும் சில காலங்கழித்து டாலியை வாக்கிங் கூட்டி செல்வதுமில்லை. மறந்தேவிட்டான்.

டாலிக்கு வயதாகி கொண்டேயிருந்ததை கவி உணரவேயில்லை. அவனுக்கும் வயதாகி கொண்டிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம். வயது-அதுவும் பால்ய காலத்தின் வயது மிதவும் வேகமாக கடந்து போக கூடியது. ஒரு ரயிலைப் போல அது யாருக்காகவும் நிற்காமல் மகிழ்ச்சியின் சத்தத்தை எங்கும் பரப்பியபடி ஓடிவிடும். அவனும் விதிவிலக்கல்ல, பள்ளி விளையாட்டு படிப்பு நண்பர்களோடு சுற்றுதல் என்று அவனின் பால்யத்தை அதன் அழகோடுதான் வாழ்ந்தான். ஆனால், டாலிதான் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தது. அதற்காக டாலி ஒரு போதும் வருந்தியதில்லை. வருந்தினாலும் அதைப் பற்றி யாரிடம் சொல்வது? டாலியின் பால்யம், இளமை அனைத்தும் கவியின் பால்யத்தோடு நிகழ்ந்து முடிந்தது.

டாலியின் கண்களில் எதோ வெள்ளைத் திட்டாகத் தெரிவதைப் பார்த்த அம்மா, “டாலிக்கு வயசாகிருச்சு டா, கண்ணுல புரை வருது பாரு!” என்றாள். இப்படிதான், முன்பொரு நாள் , டாலியின் பின்புறம் ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்து பயந்த அவனிடம், “அது உனக்குப் புரியாதுப்பா. டாலி பெண் இல்லையா அதனால அப்படி ஆகும்”னு சொன்னாள்.

கண்களில் புரை வந்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுணங்கத் துவங்கியிருந்தது டாலி. அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படிப்பு விடுமுறையில் வீட்டிலிருந்த கவி தினமும் டாலியை கவனிக்கத் துவங்கினான். அது மெல்ல நடக்க முடியாமல் படுத்தேயிருப்பதும், உணவு உண்பதைக் குறைத்ததையும் புரிந்து கொண்டு அவனுக்குத் தெரிந்தவொரு கால்நடை மருத்துவரிடம் கூட்டி சென்றான். அவர் பார்த்துவிட்டு, “தம்பி அதுக்கு வயசாகிருச்சு. இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இருந்துட்டு போயிரும். எதுவும் பண்ணாதீங்க” என்று கூறிவிட்டு விட்டமின் சிரப்புகள் மட்டும் வாங்கி கொடுக்கும்படி எழுதித் தந்தார்.

அன்றிலிருந்து டாலியை அவிழ்த்து விடுவதென்று முடிவெடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். ஓரிரு நாட்களிலேயே டாலியால் நடக்க முடியவில்லை. அதன் உடலே அதற்கு பாரமாகி இழுத்து கொண்டு நடந்து திரிந்தபடியிருந்தது. வீட்டைச் சுற்றிப் சுற்றி மெல்ல ரோந்து சென்றுவிட்டு சாப்பாட்டு கிண்ணத்துக்கருகில் வந்து படுத்துவிடும்.

கண் தெரியாமல் அவ்வப்போது எங்காவது முட்டி கொண்டு விழுந்தும் விடும். அதனால், மீண்டும் இரவில் மட்டும் டாலியை கட்டிப் வைக்கத் துவங்கினான். வைத்த உணவு ஈ மொய்க்கத் துவங்கியதைப் போல அதன் உடலின் மீது இப்போது சொறி போல எதுவோ வந்து முடியும் கொட்டத் துவங்கியது. தினமும் டாலிக்கென்று நேரம் ஒதுக்கி அதை ஆசுவாசப்படுத்தித் கொண்டிருப்பான். அவனுக்கே டாலி அனுபவிக்கும் வாதையின், வயோதிகத்தின் வலியை நினைத்து பாவமாயிருக்கும். டாலியின் தாடையைப் பிடித்தபடி அதன் நெற்றியைத் தடவும் போது, டாலியின் புரை விழுந்த கண் கவினை உற்று நோக்கியபடியிருக்கும். சிறிதும் கூட அசையாமல் உற்று நோக்கியபடி இருக்கும். அதில், தான் மரணத்தை நெருந்கிவிட்டதை டாலி உணர்ந்துவிட்டதற்கான வலியும் இருக்கும்.

“கவி டாலியைக் கொண்டு போய் எங்கேயாவது விட்டுட்டு வந்துரலாம்டா. நம்ம கண்ணு முன்னே அது சாவுறதைப் பார்க்க முடியாது?” என்ற அம்மாவின் பேச்சிலிருந்த பயம் கவிக்கும்தான் இருந்தது. ஆனால், கவியின் இப்போதைய மனநிலை அதை ஏற்க மறுத்தது. “இல்லம்மா அது இங்கேயே இருக்கட்டும்” என்றான்.

“கவி! இங்கே வாயேன்?” என்ற அம்மாவின் குரலில் ஒரு பதற்றமான பயம் இருந்தது. கதவைத் திறந்து கொண்டு வாசலுக்குப் போனான் கவி. அங்கே, படுத்த நிலையில் மேலும் கீழும் மூச்சிறக்கக் கிடந்தது டாலி. மரணத்தின் கடைசி வரிகளை எழுதி கொண்டிருந்த காலத்தின் மடியில் படபடத்து கொண்டிருந்த காகிதம் போல் படபடத்துக் கொண்டிருந்தது டாலியின் உடல்.

அதன் தலையை எடுத்து மடியில் வைத்து கொண்டு நெற்றியைத் தடவி கொடுத்தபடியிருந்தான் கவி. டாலியின் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தன. சிறிது நேரத்திலெல்லாம் உடல் அடங்கிவிட்டது. வாதையின் வலி முடிந்தது.

வீட்டின் வலது புரத்தில் இருந்த முருங்கை மரத்தினடியில்தான் டாலியைப் புதைப்பது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்த கவி. மம்பட்டியும் கடப்பாரையும் கொண்டு வந்து முருங்கை மரத்தடியில் குழியைத் தோண்டிவிட்டான். உள்ளே சென்று டாலியைப் பார்த்தான்…

வெளிறிப் போயிருந்த அதன் கண்களைப் பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு குழப்பம். சிறிது நேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தான். மிகவும் வருத்தமாக இருந்தாலும் அவனுக்குள் ஒரு நிம்மதியான ஆனந்தம் பரவியிருந்தது. அம்மா அவனையேப் பார்த்து கொண்டிருந்தாள். இரண்டு கைகளாலும் டாலியை அரவணைத்துத் தூக்கி வந்து குழிக்குள் வைத்தான். அது டாலிக்கான நிரந்தரமான சவப்பெட்டிப் போல திறந்து கிடந்தது.

கடைசியாக ஒரு முறை டாலியை உற்றுப் பார்த்துவிட்டு மண்ணையள்ளி மூடத்துவங்கினான். அவன் மேலிருந்து சொட்டிய வியர்வைக் கண்ணீராக டாலியின் சமாதியின் மேல் விழுந்தபடியிருந்தது. தினமும் உதிரும் முருங்கைப்பூக்களை போலே சில வருடங்கள் வாழ்ந்து உதிர்ந்த டாலியையும் இந்த மண் உறிந்துகொண்டது.