‘அறநெறிச்சாரம்’ உணர்த்தும் “உணவுக்கட்டுப்பாடு” கட்டுரை – பாரதிசந்திரன்
‘அறநெறி’ என்பது உன்னதமான வாழ்க்கையின் நடத்தைகளாகும். அதை முறைப்படுத்தி வாழ்வதே சரியான நெறியாகும். ஒழுங்குமுறை என்பதே ‘நெறியென’ப்படுகிறது.
‘அறத்தோடு வாழ்வதே இன்பம்’ என்பது முதுமொழி. ‘சாரம்’ என்பதற்கு ‘பிழிவு’ எனப் பொருள் தருகிறது.அகர முதலி
வாழ்க்கை நடத்தைகளின் பிழிவுகள் அனைத்தும் கூறப் பெற்றுள்ள நூல். அறநெறிச் சாரமாகும்.
இந்நூலைத் ‘திருமுனைப்பாடியார்’ என்னும் சமணசமயப் பெரியார் எழுதியுள்ளார். ‘அருங்கலச் செப்பு’ எனும் நூலின் அமைப்பைப் பின்பற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.
இந்நூல் கி.பி. 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். ‘திருமுனைப்பாடி’ எனும் ஊரில் பிறந்தமையால், இவர் தனிப் பெயரில்லாமல், ஊர்ப் பெயராலேயே ‘திருமுனைப்பாடியார்’ என அழைக்கப்பட்டார்.
இந்நூலில், உயிர்கள் கடைந்தேறுவதற்கான வாயில் நல்லறமே என்று அனைத்துப் பாடல்களிலும் ஆசிரியர் கூறுகின்றார். அதில் தலையாயது ‘கல்வி கற்பதே’ என்கிறார். அந்தக் கல்வியே எல்லா அறத்தின் பாலும் உலக உயிர்களை வழிநடத்தும் என்கிறார்.
இந்நூலின் மற்றொரு சிறப்பு,தனிப்பாடல் திரட்டு தொகுப்பில், இந்நூலின் 34 பாடல்கள் என்பது பழமையை உணர்த்தும். மொத்தம் 226-வெண்பாக்களால் ஆன இந்நூலில், உணவின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான ‘அறம்’ குறித்தும் விரிவாகப் பேசுகிறார். அதை இனி காணலாம்.சமண சமயக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை முறைப்படுத்தி மேன்மைப்படுத்துவதாகும். ஒழுக்கக் கூறுகளை நடைமுறைப்படுத்துவதாகும். வாழத்தெரியாமல், ஏதேதோ பாதைகளில் செல்லும் நாம், முற்றுப்பெறும் இடம் சூன்யமாகவே இருந்து விடுகிறது. வெற்று வாழ்க்கை வாழ்ந்தே பல கோடி மாந்தர் இறக்கின்றனர்.
ஆனால், சமண சமய நூல்கள், வாழ்வதற்கான முறையான தளங்களை நமக்குக் காட்டுகின்றன. அதில் மிக முக்கியமானது. ‘உணவு’ ஆகும்.மனிதன் வாழ உடல் மிக முக்கியம். உடல் இயங்க உணவு மிக முக்கியம். உணவினாலேயே உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் வளர்கின்றன அல்லது செயலாற்றுகின்றன. அப்படிப்பட்ட மிக முக்கியமானது ‘உணவு’ அதை மனிதர்கள் இன்று முறையாக உண்கிறோமோ? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில வரும்.
எதை உண்ண வேண்டும்
எவ்வளவு உண்ண வேண்டும்
எதை உண்ணக் கூடாது
உண்ண வேண்டாதவைகளால் ஏற்படும் தீமை
வரையறையற்ற ஆசையால் ஏற்படும் விளைவுகள்
வயிறின் முக்கியத்துவமறிதல்
உணவே கதி என்று இல்லாதிருத்தல்
என்று ‘உணவுக் கட்டுப்பாட்டைப்” பல பாடல்களால் அறநெறிச் சாரம் விளக்குகிறது. ஊன் துறந்தான் துறந்தாலை ஒப்பான் எனும் தலைப்பிலமைந்த பாடலில்,
கொன்றூன் நுகரும் கொடுமையை யுள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் – என்றும்
இடுக்க ணெனயுண்டோ யில்வாழ்க் கைக்குள்ளே
படுத்தானாம் தன்னை தவம். (பா-63)
என்கின்றார். இதன்பொருள்,
பிற உயிர்களைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை உண்ணும் கொடிய தீச்செயலை உள்ளத்தால் ஆராய்ந்து தெளிந்து அப்பொழுதே ஒருவன் கைவிடுவானால் எக்காலத்தும்
அவனுக்குத் துன்பம் என்பது ஒன்றும் இல்லை. அப்படிப்பட்டவன் இல்லற நெறியில் நின்றாலும். துறவற நெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன் ஆவான் என்பதாகும்.சமண மதத்தின் மிக முக்கிய உணவுக் கோட்பாடு ஊன் துறப்பதாகும். பிற உயிர்களைக் கொல்லாமை என்பது தான் மிக மிக உன்னதமான செயலாகும். தன்னுடைய உடலை ஓம்புவதும் ஈகையே எனும் தலைப்பிலமைந்த பாடலில்,
சோரப் பசிக்கு மேல், சோற்று ஊர்திப் பாகன், மற்று
ஈரப்படினும், அது ஊரான்: ஆரக்
கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும்: அதனால்,
முடிக்கும் கருமம் பல. (பா-122)
என்கின்றார்.இதன் பொருள்,
உணவினால் இயங்கும் உடலை வாழ்விக்கும் உயிராகிய பாகன். உணவினைக் கொடுக்காமல் விட்டால். அவ்வுடலை இயங்கச் செய்ய மாட்டான். இவ்வுடல் மூலமாகச் செய்ய வேண்டிய செயல்கள் நிறையவுள்ளன. எனவே, கொடுக்க வேண்டிய உணவினைக் குறைபடாமல் கொடுக்க வேண்டும். அது தான் சிறப்பு.
‘விரதம்’ போன்று கடுமையாக இருந்து உடலை வதைக்கக் கூடாது. உடலுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தருவது முக்கியம் எனும் அறிவியல் செய்தியை அறமாக்குகிறது இப்பாடல்,
உடல் குறித்த ஞானமும், மனிதர்களுக்கு மிக முக்கியம் என்பதை இப்பாடல் தருகிறது. ஆசையை அடக்குதலே அறிவு எனும் தலைப்பில் கூறும்பொழுது,
தனக்கு தகவு அல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றல்
உணற்கு விரும்பு குடரை – வனப்புற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி
தேம்பத் தாம் கொள்வது அறிவு (பா-158)
என்கின்றார். இதன் பொருள், தனக்குத் தகுதி இல்லாத செயலைச் செய்து, ஏதோ ஒரு வகையில், மகிழ்ச்சியில், ஆசையில் உணவுகளை உண்பதற்கு விரும்பும் குடல். உண்டி சுருங்கி அழகு பெற நீர் வற்றிய இடத்தில் ஆம்பல் பூவின் தாள் வாடித்துவண்டு விடுதல் போல, இளைக்கும்படி, உள்ளத்தில் உணவின் மேல் ஏற்படும் ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டும். இத்தகையதே அறிவு ஆகும். உணவை மருந்தாக்க வேண்டும் எனக்கூறும்பொழுது, உணவை உடலைக் கெடுக்கும்படி ஆக்கக் கூடாது. இறப்பின் விகிதம் அதிகரிப்பது இன்று உணவினாலே தான். வயிறே, உன்னோடு வாழ்தல் அரிது எனும்பொழுது,
ஒருநாளும் நீ தரியாய் ஊண் என்று சொல்லி
இருநா¨ளுக்கு ஈந்தாலும் ஏலாய் – திருவாளா
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னொடு வாழ்தல் அரிது (பா-159)
என்கின்றார். இதன் பொருள்,
ஒரு நாளும் வயிறே, நீ பசியோடு இருக்க மாட்டாய். உணவு அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் இரண்டு நாட்களுக்கான உணவை உண்பாயாக என்று கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய்.
மாட்சிமை பொருந்தியவனே! உன்னுடைய உறுதி பெரிது எனினும். உன் பயன் பெரிது என்றாலும், நின்னோடு வாழ்தல் அரிது உன்னோடு வாழ்வது என்பது துன்பமே ஆகும்.
உணவைப் பிரதானமாகக் கொண்டு தான் இவ்வுடல் இயங்குகிறது. அதற்கான மூலப் பொருட்களைப் பிரித்து. ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இயக்கத்தை அதுவே தருகிறது.
என்றாலும், அது அதன் வேலையைச் சரியாகச் செய்கிறது. ஆனால், மனிதனால் தான் அதுக்குத் தேவையான உணவைத் தரும் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.
எனவே. இவன் பேச்சை வயிறு கேட்காததால். உன்னோடு வாழ்தல் கடினம் என்கின்றார் ஆசிரியர். எல்லாம் வயிற்றுப் பெருமாள் பொருட்டு எனும் தலைப்பில் கூறவரும் செய்தியானது,
போற்றியே போற்றியே என்று புதுச் சொல்வம்
தோற்றியார்கண் எலாம் தொண்டே போல் – ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு (பா-164)
என்கின்றார். இதன் பொருள் புதுப் பணக்காரர்களிடமெல்லாம் சென்று, அவர்களைப் புகழ்ந்தும், ‘என்னைப் பாதுகாப்பாயாக’ என்றும் கூறி கூறி அவர்களுக்குப் பணிவிடை செய்வது உலகத்தாருக்கு இயல்பாகும். இதற்குக் காரணம். ஒரு சாண் வயிற்றை வளர்ப்பதற்காகத் தான்.தன்னைத் தாழ்த்தியும், பிறரை வாழ்த்தியும். இந்த உணவிற்காக வாழ வேண்டியுள்ளது. என்பது தான் வாழ்வின் மையப் பொருள். இதை உணர்ந்து வயிறைக் கட்டுப்படுத்த வேண்டும். முறைப்படுத்த வேண்டும். அதுவே வாழ்வை உயர்த்தும்.
பாரதிசந்திரன்,
முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
தமிழ்த்துறை, வேல்டெக் கலைக்கல்லூரி, ஆவடி.
9283275782
[email protected]