தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 11 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 11 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -8
பாலூட்டுவதன் பரிமாணங்கள்

பேரன்புக்குரிய தாய்மார்களே!

தாய்ப்பாலூட்டுகிற தருணங்களில் நாம் சின்னச்சின்ன விசயங்களையும் கடற்கரைப் பாசிகளைக் கைகளில் சேகரித்து பொக்கிஷமாக்கிக் கொள்வதைப் போல மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் சாதாரண விசயம் தானே என்று கடந்து போகிற சிறு விசயங்களிலும் அளப்பறிய உண்மையும், அறிவியலும், அதை சரியாகச் செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆக தாய்ப்பால் பற்றிய சில புரிதல்களை நாம் இங்கே கொஞ்சம் நினைவுகூர்வோம்.

பாலூட்டத் துவங்குகையில் குழந்தையை வாரியெடுத்து மார்பிலே போடும் போது ஆரம்பத்தில் அவர்களே எந்த மார்பில் குடிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ள விட்டுவிட வேண்டியதுதான். அப்போது அவர்களாகவே மார்பில் தவழ்ந்து, பால்வாடை நுகர்ந்து இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து பாலருந்திக் கொள்வார்கள். அதற்குப் பின்பாகத் தான் நாம் சென்ற முறை எந்த மார்பிலே பால் கொடுத்தோம், இப்போது எந்த மார்பிலே அதிகம் பால் கட்டியிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்து பாலூட்டிக் கொள்ளலாம். ஆக, மார்பை தேர்வு செய்வதில்கூட முதலில் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு பின்பு நாமே அதனை முடிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல் மார்பிலிட்ட துவக்கத்தில் அவர்கள் வாயினை வைத்தவுடனே தாய்ப்பால் அவர்களுக்குக் கிடைப்பதற்கு சில நிமிடங்கள் வரையிலுமே ஆகிறது. ஆனால் அதுவே நாட்கள் செல்லச் செல்ல மார்பிலே பால் சுரந்து கட்டிக் கொள்ளத் துவங்கியவுடன் அவர்கள் வாய் வைப்பதற்கு முன்பாகவே தாயின் மார்பில் பால் வடியத் துவங்கி அவர்களுக்கு உடனுக்குடன் பால் கிடைக்கத் துவங்கிவிடும்.

பொதுவாக குழந்தைகள் ஒவ்வொரு முறை பாலருந்துகிற போதும் தாய்ப்பால் ஹார்மோன்களான புரோலாக்டினும், ஆக்ஸிடோசினும் சுரந்து கொண்டு தான் இருக்கிறன்றன. ஆனாலும் இதிலென்ன வித்தியாசமென்றால் நாம் பாலூட்டுகையில் புரோலாக்டின் சுரந்து அது அடுத்த பாலூட்டலுக்கான பால் சுரப்பு வேலையைத்தான் செய்கிறது. அதேசமயத்தில் ஆக்ஸிடோசின் ஹார்மோனோ தற்போது சவைத்துக் கொண்டிருக்கிற பிள்ளைக்குப் பாலினை பால்பையிலிருந்து கரந்து வாயிற்குள் கொண்டு செல்கிற வேலையைச் செய்கிறது. ஆக, ஒருமுறை பாலருந்துகையில் அது அப்போதிற்கும் அடுத்த பாலூட்டல் நிகழ்விற்குமான இரண்டு வேலையைச் செய்கிறது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலூட்டுகிற துவக்கத்தில் மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து தாய்ப்பால் ஹார்மோன்களை மார்பிற்குக் கொண்டு வர வேண்டி அவசர அவசரமாக செயல்பட வேண்டியிருப்பதால் முதலில் இரண்டு மார்பிலுமே பத்து பத்து நிமிடம் குழந்தையைப் போட்டு பாலருந்த வைக்க வேண்டியிருக்கும். ஆனால் மார்பில் பால் நன்றாகச் சேரத் துவங்கியவுடனே நாம் ஒரே சமயத்தில் இரண்டு மார்பிலும் போடத் தேவையின்றி ஒரு மார்பிலேயே ஒரு பாலூட்டும் நிகழ்வு முழுவதுமாக போட்டுக் கொள்ள முடியும். அதேசமயத்தில் நாம் துவக்கத்தில் ஒரே மார்பில் ஒரே சமயத்தில் பத்து பத்து நிமிடம் போடும் போது அடுத்ததடுத்த பாலூட்டும் நிகழ்வில் ஒரே மார்பில் மட்டும் இருபது நிமிடங்கள் வரை தொடர்ந்து பாலின் இருப்பிற்கேற்ப நம்மால் பாலூட்டவும் முடியும்.

தொடக்கத்தில் குறைவாகவே மார்பில் சீம்பால் சுரக்கின்ற காரணத்தினால் முதலில் ஒரு வாரம் வரையிலுமே குழந்தைகள் மார்பிலே குறைவாகவும், அடிக்கடியும் பால் கேட்டு அடம்பிடித்து பாலருந்திக் கொண்டே இருப்பார்கள். அதேசமயம் அவர்களது உணவைத் தேக்கி வைப்பதற்கான இரைப்பைக்கான அளவும், அன்றாடத் தேவையும் குறைவாகவே இருப்பதால் குறைவாகத்தான் குடிக்கவும் செய்வார்கள்.

ஆனால் ஒரு வாரத்தின் முடிவில் மார்பில் பால் சுரப்பு அதிகரிக்கத் துவங்குவதாலும் அதனால் நன்கு மார்பில் பால் கட்டிக் கொள்ள துவங்கிவிடுவதாலும், அதற்கேற்ப குழந்தைகள் வயிறு நிறைய குடித்துவிட்டு நன்கு தூக்கிவிடுகிறார்கள். அதற்குப் பின்பாகத் தான் பிள்ளைகள் அடிக்கடி பால் கேட்டு எழுவதுமே குறைந்துவிடுகிறதே! ஆரம்பத்தில் தாய்ப்பால் தேடி மேலோட்டமாகவும், வேகவேகமாகவும் பால் அருந்திய குழந்தைகள், அடுத்ததாக ஆழமாகவும் அவசரமின்றியும் நிதானமாகவும் பாலருந்திப் பழகிக் கொள்வார்கள். இதனால் ஆரம்பத்தில் இரண்டு மூன்று மணி நேரத்திற்கொருமுறை எழுந்து தாய்ப்பால் கேட்பவர்கள், பின்னாளில் மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளிக்கு ஒருமுறை எழுந்து பசிக்குப் பால் கேட்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

தாய்ப்பால் சுரக்கிற துவக்க காலத்தில் சீம்பால் கட்டியாக வருகிற போது அது குறைவாகவே சுரக்கிறது. அதேசமயத்தில் இரண்டு வாரத்தின் முடிவில் முதிர்ச்சியடைந்த பாலாக எல்லா நற்குணங்களையும் அடக்கிய தாய்ப்பால் சுரக்கத் துவங்கியதும் அது நீர்மையாக மாறி அளவுக்கு அதிகமாகவே சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் தண்ணியாக இருக்கிறதே, இதில் நம் பிள்ளைக்கான சத்துகளெல்லாம் கிடைத்துவிடுமா என்றெல்லாம் நாம் நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு இரண்டுவார முடிவின் தாய்ப்பாலில் எல்லாமே அடங்கியிருக்கிறது தாய்மார்களே!

குழந்தைகளின் சிறுநீர் கழித்தலும், மலம் கழித்தலும் ஆரம்பத்தில் அடிக்கடி போய்க் கொண்டுதான் இருக்கும். எந்த அளவிற்கு குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்களோ அந்த அளவிற்கு தாயிடமிருந்து பிள்ளைக்குத் தாய்ப்பால் கிடைக்கிறது என்பதை நாம் கணித்துக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ஆறுமுறைக்கும் கீழாக பிள்ளைகள் சிறுநீரினை குறைவாகக் கழிக்கையில் தாய்ப்பால் கிடைப்பது பற்றிய எச்சரிக்கை உணர்வோடு நாம் பாலூட்டத் துவங்கிவிட வேண்டும். அதேபோல துவக்க காலத்தில் கரும்பச்சை நிறத்தில் மலத்தை வெளியேற்றிக் கொண்டிந்த குழந்தைகள், சீம்பால் குடித்த பின்பாக அடுத்தடுத்து தாய்ப்பால் குடித்துக் கொண்டே இருக்கையில் அதன் நிறமும், தன்மையும் மாறி இறுகலின்றி மஞ்சள் நிறத்தில் ஒரு வார காலத்திலேயே மாற்றம் கொண்டுவிடும்.

ஒருவேளை மலத்தினை பிள்ளைகள் பச்சை நிறத்தோடே கழிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்பால் கிடைக்கிறதா என்பதை நாம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் பச்சை நிறத்தோடு நாற்றமும் சேர்ந்து வெளியேறத் துவங்கினால் தாய்ப்பாலைத் தவிர வேறு ஏதோ குழந்தைக்குக் கொடுத்து அது சேராமல் பிள்ளைக்கு வயறு கெட்டு மலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலூட்டுதலின் துவக்கத்தில் நாம் சரியாகத்தான் புகட்டுகின்றோமா என்கிற சந்தேகத்தோடும், பிள்ளைக்குத் தாய்ப்பால் முழுமையாகக் கிடைக்கின்றதா என்கிற மனக்கணக்கின் பதட்டத்தோடுமே புகட்டுவது போலிருக்கும். அப்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதற்கென நாம் கண்டுபிடித்து வைத்திருக்கிற குழந்தைகள் அசைவுகள் தொடர்பான நுட்பங்களைக்கூட நம்மால் கண்டுகொள்ளவும் முடியாது. ஆனால் இத்தகைய பாலூட்டுகிற பயிற்சியும் பிள்ளைக்குப் பால் கிடைக்கிற உணர்வுகளையும், மார்பில் பாலூறுகிற மாற்றங்களையும் கண்டு கொண்டு முழுநிறைவாகப் புரிந்து கொள்வதற்கு நான்கிலிருந்து ஆறு வாரகாலம் வரையிலும் ஆகுகிறது. இது ஒவ்வொருவருக்கும் அவரவர் ஈடுபாட்டின் அடிப்படையில் முன்பின்பாக இருக்கலாம் என்பதால் நமக்குப் பாலூட்டிப் பழகுவதற்கும் குறிப்பட்ட காலம் எடுக்கும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல ஆறுமாத காலம் வரையிலும் உட்கார மட்டுமே பழகியிருக்கிற பிள்ளைகளுக்கு, பற்கள் அப்போதுதான் துருத்திக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் அதற்குப் பின்பான காலங்களில் இன்னும் துருதுருவென தவழ, நடக்கவென்று உடல் இயக்கத்தின் மூலம் எனர்ஜி அதிகமாக அவர்களுக்குத் தேவையென இருப்பதால் ஆறு மாதகாலத்திற்குப் பின்பாக தாய்ப்பாலோடு கூடுதலான இணை உணவினையும் நாம் சேர்த்தே கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் நாம் இதனது தொடர்ச்சியாகப் புரிந்து கொள்ள வேண்டும் தாய்மார்களே!

– டாக்டர் இடங்கர் பாவலன்