தினேஷ் பாரதியின் கவிதைகள்
கொடுத்தால் வாங்க மாட்டாயோ
என்ற தயக்கத்தில் நானும்
கடைசிப் பூவை
விற்றுவிட வேண்டுமென
பூக்காரியும்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்கிறோம்
காதலர் தின முன்னிரவில்…
=======================
உலகத்தில் உள்ள
அத்தனைப் பூக்களும்
உதிர்ந்திடும் பட்சத்தில்
உனக்கென
என் உயிர்ப்பூ
பூத்திருக்கும்
உன் கற்றைக் கூந்தலில்
மலர்ந்திட..
=========================
உன் கண்கள்
அதி அற்புதமானது
உலகின் தலை சிறந்த
பூக்களினும் தலையாயது..
===========================
எல்லாருக்குள்ளும்
எல்லா ஆண்களுக்குள்ளும்.
ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது
ஒரு பெண்ணின் குரல்.
எல்லா பெண்களுக்குள்ளும்
ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
அப்பாக்களிடம் சொல்லப்படாத காதலொன்று.
எல்லா அண்ணன்களுக்குள்ளும்
உறைந்து கொண்டுதான் இருக்கிறது
ஒரு தங்கையின் கண்ணீர்.
எல்லா தம்பிகளுக்குள்ளும்
முதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது
வயது முற்றிய அக்காக்களின் கவலை.
எல்லா அம்மாக்களிடமும்
நிரம்பியே இருக்கிறது
மகன், மகள், கணவன் முதலான
குடும்பத்துக்கான ஒட்டு மொத்தக் கண்ணீரும்…
=====================
-தினேஷ் பாரதி
செல்:9952212701