விவசாயகுடிகளின் சக்தியை.. கூட்டு உழைப்பை உயர்த்திப் பிடிக்கிறது..*லாபம்* – கருப்பு அன்பரசன்.
விவசாயிகள் ஒன்றுபடும் பொழுது அவர்களைப் பிளவுபடுத்த உழைப்பை, அதன் வியர்வையினை நக்கி ருசிகண்ட அதிகாரவர்க்கம் எல்லாவித திருட்டு வேலையையும் செய்யும் என்கிறது லாபம்..
எல்லா சமூகத்திலும் மாற்றம் என்பது பெரும் மக்கள் கூட்டு சக்தியாலேயே நடைபெற்றிருக்கிறது..
மக்கள் சக்தி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று உரக்கச் சொல்கிறது லாபம்.
தனிமனித ஹீரோயிசத்தை தவிர்த்து மக்கள் சக்தியின் மேன்மையை உயர்த்திப் பிடிக்கிறது லாபம்.
விவசாயிகள் ஒன்று சேர்வது மட்டுமே தங்களது நிலத்தில் விளைந்த விளைச்சலுக்கு தாங்களே விலை நிர்ணயிக்க முடியும் என்று விவசாயிகளின் ஒற்றுமையை பேசுகிறது லாபம்.
இந்தியா முழுவதிலும் விவசாயிகள் ஒன்றுபட்டு ஒரு மிகப் பெரிய போராட்டத்தை நடத்த முடியாமல் இருப்பதே இன்றைக்கு ஆண்டுகொண்டு இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் விவசாயிகளை இதுவரையிலும் நியாயமான பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது. அனைவரும் உணர வேண்டிய தருணத்தில் இந்த படம் வந்து இருப்பது நம் உழைக்கும் சமூகத்திற்கு லாபம்
களப்பலியான கம்யூனிஸ்டுகளை கொண்டாடுகிறது லாபம்..
விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற.. ஆதிக்க சாதித் திமிருக்கு எதிராக “அடித்தால் திருப்பி அடி” என்று உரக்க முழக்கமிட்டு.. பட்டியலினத்து விவசாய தொழிலாளிகளை.. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஓரணியில் திரட்டிய தோழர் சீனிவாசராவ் அவர்களின் பெயரை உச்சரிக்க செய்கிறது லாபம்..
ரவுடிகளை எதிர்த்து களப்பலியான லீலாவதியை கொண்டாடுகிறது படம்.. பலியான இன்னும் பல போராளிகளை.. கம்யூனிஸ்டுகளை கொண்டாடுகிறது.. நம்மை கொண்டாடச் செய்கிறது லாபம்.
இந்தியாவின் கிராமங்கள் பலதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் புதியதாக தொழிற்சாலை அமைக்கப்போவதாக கூறி.. பல தில்லாலங்கடி திருகு தாளங்களை நடத்தி தொழிற்சாலையை அமைத்து இயற்கையின் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறார்கள்.
அருகில் இருக்கும் கிராமங்களின் விவசாயிகள் இரத்தத்தையும் சேர்த்தே..
இதற்கு உடந்தையாக ஆளும் அரசுகளும்.. அடிவருடிகளும் அவர்களுக்கு மானியமாகவும் இலவசமாகவும் பல உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச காலத்தில் இங்கே தமிழகத்தின் செங்கல்பட்டில், பெரிய கார்பரேட் நிறுவனம் ஒன்றின் கார் தொழிற்சாலை மூடப்படவிருக்கிறது.. வேலை பார்க்கும் 7000 தொழிலாளர்களும் அந்த ஆலையை சார்ந்து நிற்கும் 30 ஆயிரம் தொழிலாளர்களும்.. மொத்தமாக முப்பத்தி ஏழு ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களும் நடுவீதியில் தள்ளப்படவிருக்கிறார்கள். அந்த தொழிற்சாலை மூடப்படுவதால் அந்தத் தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்களை தயார் செய்யக்கூடிய சிறு குறு தொழிற்சாலைகள் பலவும் மூடப்படவிருக்கிறது. நீங்களும் நானும் என்ன செய்யப்போகிறோம் என்று பார்ப்போம் எதிர்காலத்தில்.
படத்திலும் கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளி கிராமத்து மொத்த விவசாய நிலங்களையும் விலைபேசி தொழிற்சாலை அமைக்க முற்படும் நேரமதில் கார்ப்பரேட்டின் அயோக்கியத்தனத்தை உணர்ந்து.. புரிந்து.. அறிந்து.. வெகுண்டெழும் மக்கள் ஆயுதங்களோடு களத்தில் இருக்கிறார்கள்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான நிஜ வரலாறுகள் ஏராளம் நம் கண் முன்னே. ஆயுதங்கள் கைகள் மாறத் தொடங்கி விட்டால் என்னவாகும் என்பதனை காட்சிப்படுத்தி இருக்கிறது லாபம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறி என்பது
சிறிய தொழிற்சாலைகளையும் விட்டுவைக்காது என்பதற்கு உதாரணம் கோவையும்.. திருப்பூரும்.. சென்னையும் தமிழகத்தில்.
இந்தியா முழுவதிலும் மூடப்பட்டிருக்கும் சிறு குறு தொழிற்சாலைகள் பல ஆயிரம் உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வெறியினை அதன் கூட்டுக் கயவாளித்தனம் உலகம் முழுவதும் எப்படி நீண்டு இருக்கிறது என்பதனை
பேசுகிறது லாபம்.
சாதிகளைக் கடந்து உழைக்கும் தொழிலாளர் வர்க்கமாக இணைவதால் மட்டுமே நாம் நினைக்கும் நிஜமான விடுதலையும் வாழ்வும் கிடைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமும் அதுவே என்பதற்கு லாபம்..
கூட்டுப்பண்ணை விவசாய வடிவத்திற்குள் ஒரு கிராமத்தின் எல்லா குடிமக்களும் இணைய முடியும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறது லாபம்.
நடக்கப்போகும் எதிர்காலத்தை இன்று கனவுத் தொழிற்சாலையின் தயாரிப்பில் காட்சிகளாக நிஜப்படுத்தி இருக்கிறது லாபம்.
படத்தில் அழகியல் இல்லை எடிட்டிங் சரியில்லை.. வெறும் வசனங்களாகவே இருக்கிறது என்று கூப்பாடு போடுபவர்களுக்கு உழைக்கும் மக்களுக்கு ஆதரவான இந்த படம் எரிச்சலைக் கூட்டும்தான்.. மூட்டும்தான்.!
வரலாறுகளை.. போராட்டங்களை எதிரிகளுக்கு எதிரான திட்டமிடுதல்களை..
மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய..
புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வசனங்களால் பேசித்தான் ஆகவேண்டும்.
பல தலைமுறைகளாக ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து வரும் நமது மக்களின் வாழ்வியல் குறித்தான தரவுளை விவரங்களை வசனங்களாகத்தான் பேச வேண்டியிருக்கிறது.. அதனை மிகச் சரியாக பேசியிருக்கிறது லாபம்.
நமது உரிமையான.. நமக்குச் சொந்தமான.. நமக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அனைத்தும் இன்று எவரிடம் இருக்கிறது என்பதை.. அது எப்படி வந்தது என்பதை ..
அது எப்படி களவு போனது என்பதை..
அந்த மண்ணை எவர் வழியாக எவரெல்லாம் விழுங்கினார்கள் என்பதை வசனங்களாக தான் சொல்ல வேண்டியிருக்கும்.
விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருக்கிறார் என்று “நீங்கள்” பேசினால் பேசிக் கொண்டே தான் இருப்பார்..
அவர் வரலாற்றினை நிஜங்களை அப்படியே பேசியிருக்கிறார். உண்மைகளைப் மெய்யான உண்மையாக பேசி இருப்பது உங்களுக்கு “காண்டாகும்” என்றால் ஆகட்டும்.
அதில் ஒன்றும் தவறு இல்லை.. இந்தக் “காண்டு” நாங்கள் எதிர்பார்த்தது தான்.
இப்படியான படங்களை உங்களுக்கு கொண்டாடுவதை விட.. நடித்தவர்கள் மீதும் இந்த படத்தை தயாரித்தவர்கள் மீதும்
வன்மம் இருக்கும்.. வன்மம் கலந்த உரையாடல் இருக்கும்.. ஏனென்றால் அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட டார்கெட்.
அதுதான் உங்களின் அடையாளம் என்பதை நாங்கள் அறிவோம்.
உழைக்கும் மக்களுக்கு எந்த அடையாளம் தேவை என்பதை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறார் மறைந்த அருமை தோழர் எஸ் பி ஜனநாதன் அவர்கள். மக்களை அணிதிரட்டும் பொழுது மக்களை ஒருங்கிணைக்கும் பொழுது கலைகளின் வேலைகள் எப்படி இருக்க வேண்டும்.. அது தானாக முன்வந்து எதைச் செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
ஏற்றத்தாழ்வற்ற சமூகம் வேண்டுமென்பவர்கள்.. அதற்காக நிதமும் பந்தலை அர்ப்பணித்துக் கொண்டு போராட்டங்கள் பலதை நிகழ்த்தி கொண்டிருப்பவர்கள்
கொண்டாடப்பட வேண்டிய படம் லாபம்.
பலராலும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களை உள் வைத்து இருக்கும் படம் லாபம்.
கொண்டாடுவோம் விவாதிப்போம்
வெகு மக்களை பார்க்க வைப்போம்.
லாபம்.
கருப்பு அன்பரசன்.