"ஏமாற்றம்"- சிறுகதை (Emaatram Sirukadhai) - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி |Annur K.R. Velusamy - Disappointment Short Story -https://bookday.in/

“ஏமாற்றம்”- சிறுகதை

"ஏமாற்றம்"- சிறுகதை ரகுராமனுக்கு தூக்கம் வரவில்லை. தான் வேலைக்குச்சென்று சிறுகச் சிறுக சேமித்து தனக்கென வீடு கட்ட வாங்கிய இடத்தை பக்கத்து இடத்துக்காரரான பெரிய செல்வந்தர் தனது இடத்தோடு சேர்த்து சுற்றுச்சுவர் வைத்து ஆக்கிரமித்து அடைத்திருப்பதோடு, தன் இடத்தில் பாதியளவு வீட்டை…
நெய்வேலி பாரதிக்குமாரின் கவிதைகள்

நெய்வேலி பாரதிக்குமாரின் கவிதைகள்




த்சோ.. த்சோ
*******************
பொய் வெட்கத்துடன் உதிர்க்கும் ம்ஹும்
அங்கீகரிக்கிறது
கூடலின் போதான மீறல்களை…

செல்லச் சிணுங்கலுடன் இசைக்கும்.. சீச்சீ..
மொழி பெயர்க்கிறது ஆயிரம்
எதிர் அர்த்தங்களை

ஒரு நொடியில்
மின்னி மறையும்
உதட்டுச் சுழிப்பு
பழிக்கிறது
அகராதிகளின்
அத்தனைச் சொற்களையும்…

ஒரு த்சோ த்சோ
உரித்து விடுகிறது
ஏமாற்றங்களின் தொலிகளை..

அர்த்தங்களில்
கால் இடறி
மல்லாந்து கிடக்கின்றன
எல்லா மொழிகளும்..

அகாதத்தின் பொருள் தேடி..‌.
*********************************
ஒரு சொல்லின் நூல் பிடித்து நடக்கையில்
திரும்ப விரும்பா
மொழி வனத்துக்குள் இட்டுச் செல்கிறது அச்சொல்..

கனிந்திருக்கும் சொல்மரத்தின் அருகில் செல்கையில்
அது
மெய் போலிருக்கும்
பொய்யும் வஞ்சகமும் என
பொழிப்புரைக்கிறது..

காதம் என்றால் தூரம் எனில்
அகாதம் அருகிலா என
வினவுகையில்
நீளம் என்று மறுக்கிறது…

அகராதிகளின் கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிக்காதபடி
சொல் விட்டு சொல் தாவி
ஒளியலாம்…

ஒவ்வொரு முறையும் தேடுவதற்காக நுழைந்து
தொலையலாம்
தொலைவதற்காகவே தேடலாம்…

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை..
************************************************************
சுமந்து செல்பவர்களே மீண்டும் மீண்டும்
அறையப்படுகிறார்கள்…

குருதியின் தடத்தில் இழுத்துச் செல்லப்படுகின்றன
பொறுமையின் கால்கள்..

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை போதிக்கின்றது
என்றேனும் ஒருநாள் கடவுளாகலாமென..

புதைக்கப்படுபவர்கள் ஒருபோதும்
உயிர்த்தெழுவதே இல்லை

குனிகின்றவர்களுக்காகவே தயாராகிக் கொண்டிருக்கின்றன
சிலுவைகள்….
ஆமென்..

– நெய்வேலி பாரதிக்குமார்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




அட்சய திருதியை
**********************
அள்ள அள்ளக் குறையாதது
அட்சயம்!
இந்து சமண சமய
விரும்பிகளின் புனித நாள்!
இந்த நாளில்
எதனை ஒன்றை செய்கின்றோமோ
அது…
அப்படியே தொடரும்;
குறையில்லாமல்!

பிரம்மா…
இந்த பூமியை
சிருஷ்டித்தப் புனித நாளாம்!

எப்படி
நம்பாமல் போவது?

நாம்
குறையின்றி வளர வேண்டுமே!

பத்தாண்டுகளுக்கு முன்
அட்சய திருதியைக்கு
அட்டிகை வேண்டுமென
அடம்பிடித்தாளாம்
நண்பரின் துணைவி!

தெரிந்த… அறிந்த…
நண்பரின்
நகைக்கடையில்
கொஞ்சம் முன்பணமும்
அட்டிகைக்கான
பெரும் பணம் கடனாகவும்
வாங்கிக் கொடுத்தாராம்!

வளர்கிறதாம்….
அன்று
அவர் செய்த செயல்;
இன்றும்
கடனாக….

‘ஒரே நாடு’
*************
இரண்டு இடம் வேண்டாம்;
இந்த ஒரே இடம் போதும்!
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்!

எங்கேனாச்சும்
கேள்விப்பட்டிருப்பீரா
இந்த
அநியாயத்தை!

முதல்
மனித இனமாகத் தோன்றி
வழி வழியாய்
வாழ்ந்து வந்தோரை….
வழி மறித்து,
அந்நியப் படுத்திய
அநியாயத்தை
வேறெங்கேனும்
கேள்விப்பட்டதுண்டா?

கறையான் புற்றுக்குள்
கருநாகம் புகுந்துக்கொண்ட
கதையதனை
வேறெங்கேனும்
கண்ட துண்டா…. கேட்டதுண்டா?

இந்த நாடுதான்
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்
உகந்த நாடு!

ஒற்றுமையாகத்தான்
வாழ்கிறோம்
என்பதெல்லாம்…..
நரியின் ஊளை!

ஒரே தன்மையுள்ள
மண்ணில்
வெவ்வேறு தன்மையுள்ள
மனிதர்!
வேறு எங்கேனும்
நடப்பதுண்டா?

ஒரு பாம்புக்கு
படையே நடுங்கியக் கதை
இந்த
மண்ணிலிருந்துதானே?

விஷம் கொண்ட பாம்பை
அடித்து விரட்டுதற்கும்
அய்யோ பாவமென்ற
அடி மனதை தொட்ட
தந்திரவாதிகளை
வேறெங்கும் கண்டதுண்டா?

கண்ணுக்குக்
கசப்பானவனை
கறைப்படுத்தி…..
கண்ணுக்குத் தெரியாத
கரை கட்டி….
கரை உடையாமல்
காப்பதற்குக்,கையில் தடிகொடுத்து,
காவலரை நியமித்து
கர்வம் ஏற்றி…..
அடடா….
இதனை புத்திசாலித்தனமென்று
போற்றி மகிழும்
ஒரு தேசத்தை
வேறெங்கும் தேட வேண்டாம்;

அந்த
விடியாத தேசம்….
இதுதான்…. இதுதான்!

சொல்லுங்கள் சாமீ
**********************
தாலி அறுப்பதற்கு
நீங்கள்தான்
காரண மென்றால்
வலிப்பதாகவும்
நடிக்கத் தெரியும்
உங்களுக்கு!

புலிப் பற்களில்
தாலி கட்டிய
பூர்வீகக் காரனுக்கு
அறிவில்லை!

நீர் சொன்னதெல்லாம்
நம்பி… நம்பி….

தாலியை
தாரைவார்க்கிறோம்…
தங்கத்தில் கட்டி….
உடன்
உயிரையும்!

தாலி கட்டி
அதனை
சாதுர்யமாக
காக்கும்
வித்தகிகளை
வீட்டுக்காரிகளாக்கியவர்
நீங்கள்!

இப்போதும்
நம்புகிறோம்;
எங்கள் தாலிகளை
காப்பாற்றுங்கள்!

தங்கத்தில்
தாலி செய்தால்
விமோசனமில்லையென
ஒரு
வித்தையை வீசுங்கள்;

நம்புவதற்கு
நாங்கள்
காத்துக் கிடக்கிறோம்!

உடன்
ஒரு ஆலோசனை சாமி;
கொஞ்சம்
படிக்க விட்டுட்டீங்கல்ல
அதனால்தான்!

தாலியை
விலைமதிப்பற்றதாகவும்,
தாலி செய்யும்
தங்கத்தை மாற்றி
விற்பனைக்கு உதவாத
ஓர் உலோகத்தைக்
கூறுங்கள்….
ஏற்றுக் கொள்வோம் சாமி!

கூறுவது
நீங்களாயிற்றே!

– பாங்கைத் தமிழன்