இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் முன்பு எப்போதும் கண்டிராதப் பொருளாதார வளர்ச்சி (ஆண்டுக்கு 5.5 விழுக்காடு), வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிட்டது. 1987ல் ஏற்பட்ட பஞ்சத்தை எவ்வித தோய்வின்றி கையாண்டது, சட்டப்பூர்வமற்ற அயல் நாட்டு பணப் பரிவர்த்தனையினை தடுத்தது என அனைத்து அம்சங்களிலும் சாதகமான நிலை நிலவினாலும் ஊழல் வெளிப்பாடு இருந்தது. இதனை எதிர்த்து வி.பி.சிங், தொழிற் சங்கங்கள், விவசாயிகள், சர்வோதைய மற்றும் காங்கிரஸில் மாற்று நிலைகொண்டவர்களின் ஒத்துழைப்புடன் போராடினார். அதிகார வர்க்கத்தினரின் ஊழல் கீழ்மட்டத்தில் பரவி இருந்தது. அன்றாடம் அனைத்துத் தரப்பினரையும் இது பாதித்திருந்தது. ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான ஆரிப் முகமது கான், உறவினர் அருண் நேரு, வி.சி.சுக்லா, சத்யபால் மாலிக் ஆகியோருடன் ஒன்றிணைந்து வி.பி.சிங் ஜனமோர்ச்சா என்ற இயக்கத்தை 2 அக்டோபர் 1987ல் துவக்கினார். 1988ல் நடந்த அலகாபாத் பாராளுமன்ற இடைத் தேர்தலில் வலதுசாரி இயக்கங்கள், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவுடன் வி.பி.சிங் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி தலைவர்களுடன் ஒன்றிணைந்து 11 அக்டோபர் 1988ல் ஜனதா தளம் துவக்கப்பட்டது அதில் வி.பி. சிங்கின் ஜனமோர்ச்சா இயக்கத்தை இணைத்துக்கொண்டார். 7 கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய முன்னணி என்ற அமைப்பினை 6 ஆகஸ்ட் 1988ல் ஏற்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் அதிக இடங்களில் தனிக் கட்சியாக வெற்றிபெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. தேசிய முன்னணி 146 இடங்களிலும், பாஜக 86 இடங்களிலும், வலதுசாரிகள் 52 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. இக்கட்சிகள் ஒன்றிணைந்து வி.பி.சிங் தலைமையில் 2.12.1989ல் ஆட்சி அமைக்கப்பட்டது. வி.பி.சிங் இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பிரதம மந்திரியாவார்.

7.8.1990ல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பினை அளிக்க 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் பாஜக, வலதுசாரிகள், சில அமைச்சரவை சாகக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். பாஜகவானது வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக மிரட்டல் விடுத்தது. வட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டம் கடுமையாக இருந்தது. இப்போராட்டங்கள் மேல் ஜாதி வர்க்கத்தினரால் தூண்டிவிடப்பட்டது என அறியப்படுகிறது. பெரும்பாலான இப் பிற்பட்டமக்கள் நிலச் சீர்திருத்தம் மற்றும் பசுமைப் புரட்சியின் நன்மைகளைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 1.10.1990ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்துவதை உச்ச நீதி மன்றம் நிறுத்திவைத்தது. இதனிடையே பாஜகவின் தலைவரான எல்.கே.அத்வானி 25.9.1990ல் சோமநாத்திலிருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். இது பீகார் மாநிலம் சமஸ்திபூர் சென்றடைந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து பாஜகவானது வி.பி.சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் ஜனதா தளத்தின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகருக்கு ஆதரவாக மாறியதால் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது. சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் ஆதரவுடன் 7.11.1990ல் ஆட்சி அமைக்கப்பட்டது. மிகக் குறுகிய காலமே நீடித்த சந்திரசேகர் அரசு 5.3.1991ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது.

இக்கால கட்டத்தில் அரசின் செலவுகள் பல மடங்கு அதிகரித்தது ஆனால் அரசு மற்றும் பொதுத்துறை சேமிப்பானது தொடர்ந்து குறைந்துவந்தது. இதன் விளைவு அரசின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது (1979-80ல் நிதிப் பற்றாக் குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.7 விழுக்காடாக இருந்தது 1991ல் 10.4 விழுக்காடாக அதிகரித்தது). இதனை எதிர்கொள்ள அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கியது. இதனால் அரசின் முதலீட்டிற்கும் பொது சேமிப்பிற்குமான இடைவெளி அதிகமானது (1980-81ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடாக இருந்தது 1989-90ல் 9 விழுக்காடாக அதிகரித்தது). நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பினால் செலுத்துநிலை இருப்பில் எதிர்மறை விளைவுகள் உண்டாகியது. செலுத்து நிலை இருப்பின் பற்றாக்குறையானது 3.5 பில்லியன் டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.8 விழுக்காடு) 1987-88ல் இருந்தது 1990-91ல் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3.5 விழுக்காட்டு). 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த பொருளாதாரத்தில் முதலீட்டுக்கும் சேமிப்பிற்கும் உள்ள இடைவெளியானது ஆண்டுக்கு சராசரியாக 2.5 விழுக்காடு அதிகரித்தது. 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டுக்கு 5.5 விழுக்காடு வளர்ச்சியினைக் கண்டது. குறிப்பாக தொழில் துறையானது 7 விழுக்காடாக இருந்தது. ஆனால் சேமிப்பானது முதலீட்டை மேம்படுத்த உதவவில்லை இதனால் அதிகக் கடன் வாங்கி செலவிட செய்தனர். இதனால் நிதிநிலை மேலும் மோசமடைந்தது. செலுத்து நிலை இருப்பில் பாதக போக்கு காணப்பட்டது. 1980களின் இறுதியில் கடன் அளவு அதிகமாக்க காணப்பட்டது. உள்நாட்டுக் கடன் 1974-75ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.8 விழுக்காடாக இருந்தது 1984-85ல் 45.7 விழுக்காடாகவும், 1989-90ல் 54.6 விழுக்காடாகவும் அதிகரித்திருந்தது. வெளிநாட்டுக் கடன் 1980-81ல் 23.5 பில்லின் டாலராக இருந்தது 1985-86ல் 37.3 பில்லியன் டாலராகவும், 1990-91ல் 83.8 பில்லின் டாலராகவும் அதிகரித்தது. இதன் விளைவு இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1980-81ல் 5.85 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 4.1 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது மேலும் 1990-91ல் 2.24 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்தக் கையிருப்பானது அடுத்து வந்த ஒருமாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதற்கிடையே 1990ல் ஈராக்-குவைத் போரினால் பெட்ரோல் விலை அதிகரித்தது. இதனால் மேலும் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை அதிகரித்திருந்தது. பன்னாட்டுக் கடன் தர மதிப்பீடு இந்தியாவின் மீதிருந்தது வேகமாகக் குறைந்தது இதனால் வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பெரும் சவால்கள் காணப்பட்டது. இதற்கிடையே அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புகளைத் திரும்பப் பெறத்தொடங்கினர். இந்த நிலையினை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா 20 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து யூனியன் வங்கியிடம் ஜூலை 1991ல் அடகு வைத்து அந்நியச் செலாவணியினை பெற்று நடப்பு நிலையினை சரிசெய்தது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுப் பண நிதியத்திடம் இந்தியக் கடன் பெற்றது. இவ்வாறு இந்தியாவின் வெளிநாட்டு, உள்நாட்டு கடன்கள் அதிகரித்தது.

இந்தியாவின் பெரும் சவாலாக செலுத்துநிலை இருப்பில் ஏற்பட்ட பாதகமான நிலையினால் வெளிநாட்டுக் கடன் தொடர்ந்து அதிகரித்தால் (1980-81ல் 20.6 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 64.4 பில்லியன் டாலராக அதிகரித்தது) இதற்குச் செலுத்தவேண்டிய வட்டி அதிகமானது. அரசின் வருவாய் இதற்காகத் திருப்பிவிடப்பட்டது எனவே நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டு வந்தது. இதனைக் கட்டுப்படுத்த 1 ஏப்ரல் 1990ல் புதிய இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கையினை அறிவித்தது. இதன்படி இந்திய ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் (எரிபொருள்) நுகர்ச்சியானது 8 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் பெட்ரோல் இறக்குமதி அதிகரித்தது, அந்நியச் செலாவணி செலவு அதிகரித்தது.

வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றபோது விலைவாசி அதிக அளவில் காணப்பட்டது. எனவே இதனைக் கட்டுப்படுத்த முக்கிய நுகர்வுப் பொருட்களின் அளிப்பினை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உணவு தானிய விலையினை கட்டுப்படுத்த அரசு உணவு தானியக் கையிருப்பினைப் போதுமான அளவில் அதிகரிக்க உணவு கொள்முதலை மேற்கொள்ள முன்னுரிமை அளித்தது. இதனால் உணவு தானியக் கையிருப்பு (ஒன்றிய தொகுப்பு) 11.67 மில்லியன் டன்னாக அதிகரித்தது (கடந்த ஆண்டில் இது 8.34 மில்லியன் டன்னாக இருந்தது). அரசு, ஏழை மக்கள் விலை உயர்வினால் பாதிக்கப்படுவதை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்க பொது விநியோக முறை மூலமாக அடிப்படையாகத் தேவைப்படும் உணவுப் பொருட்களை வழங்கியது. இதுபோல் வெளிச்சந்தை நடவடிக்கையில் தலையிட்டு முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியது.

1980களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சத்தை இந்தியா எந்த நாடுகளின் உதவியுமின்றி எளிதாக எதிர்கொண்டது. காரணம் 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்லாமல் அரசின் உணவு தானிய இருப்பை அதிகரித்து கொண்டது. 1990களில் உணவு உற்பத்தி வளர்ச்சியானது (3 விழுக்காடு) மக்கள் தொகை வளர்சியினைவிட (2.1 விழுக்காடு) அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைப் புரட்சியின் விளைவாக 1967-68 மற்றும் 1989-90ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது 80 விழுக்காடு அதிகரித்திருந்தது, உற்பத்தி திறனானது ஆண்டுக்கு 2.5 விழுக்காடு அதிகரித்தது. இதன் விளைவு உபரியான உணவு உற்பத்தியினைச் சந்தைப் படுத்துதல் அதிகரித்துக் காணப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவினால் பெருமளவிற்கு உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும் (உணவு தானிய சாகுடி பரப்பானது 1980-81க்கும் 1989-90க்கு மிடையே கடந்த பத்தாண்டுகளில் ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும் உணவு உற்பத்தியானது 2.81 விழுக்காடு அதிகரித்திருந்து), இது அனைத்து பகுதியிலும் சீரான நிலையில் இல்லை. சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் கூலிகள், அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பசுமைப் புரட்சியானது சிவப்பு புரட்சியாக பல இடங்களில் உருவெடுத்தது. இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்ததன் விளைவு நிலம் துண்டாடப்பட்டு சராசரி நிலக் கைப்பற்று அளவானது குறைந்து வந்தது (1970-71ல் 2.28 ஹேக்டேராக இருந்தது 1990-91ல் 1.57 ஹேக்டேராகக் குறைந்தது). மேலும் மொத்த விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளின் (இரண்டு ஹேக்டேருக்கு கீழ்) பங்கு அதிகரித்தது. இதன் அடிப்படையில் ஏழை விவசாயிகள் பயன்பெறத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், சிறு விவசாயிகள் வளர்ச்சி முகமை திட்டம், குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன் விளைவு 1960களில் 20 மில்லியன் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்ட நிலையில் 1988-89ல் 850 மனித வேலை நாட்கள் உருவாகியிருந்தது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே நீண்டகாலமாகக் காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் சச்சரவு தொடர்ந்து வந்தது. 1990-91ல் இப் பிரச்சனை இரு மாநிலங்களுக்கிடையே பெரிய அளவில் சர்ச்சை உருவாகியது. இதனைத் தீர்க்க வி.பி.சிங் அரசானது காவிரி சர்ச்சை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

வி.பி.சிங்கின் அரசு வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது. இந்தியப் பொருளாதாரம் 1980களில் சராசரியாக 5 விழுக்காடு வளர்த்திருந்தாலும் நீடித்த வேலையின்மை 1983ல் 8 மில்லியான இருந்தது 1987-88ல் 12 மில்லியனாக அதிகரித்தது. இத்துடன் குறை வேலையின்மை (under employment) அதிக அளவில் காணப்பட்டது. எனவே வி.பி.சிங் அரசானது மதிப்புடைய வேலைவாய்ப்பினை உருவாக்க ‘வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்தை நாடு முழுக்க அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த போதுமான நிதி இல்லாததால், வேலையின்மை அதிகமாக இருந்த கிராமப்புற வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தியது.

அட்டவணை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் 

துறைகள்  1967-68 முதல் 1980-81வரை1981-82 முதல் 1990-91வரை
வேளாண்மைத் துறை3.33.5
தொழில் துறை4.17.1
பணித் துறை4.36.8
மொத்த உள்நாட்டு உற்பத்தி 

(காரணிகளின் விலையில்)

3.85.6
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம்1.53.4

Source: Illa Patnaik (2006): “India: Ecnomic Growth, 1950-2000,” Indian Council for Research on International Relations, New Delhi. 

வேளாண்மையில் வேகமான வளர்ச்சியினை அடைய பல்வேறு உத்திகள் கையாளப்பட்டது. இந்தியாவில் நீர்ப்பாசன வசதியினைப் பெற்ற பகுதிகளில் ஈர்க்கத்தக்க அளவில் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தது. ஆனால் மழைப்பொழிவினைச் சார்ந்தும், பகுதியான அளவில் வறண்ட விளைநில பரப்பில் குறைவான உற்பத்தித் திறன் காணப்பட்டது. எனவே இப்பகுதிகளில், உற்பத்தித் திறனை அதிகரிக்க நீர்ப்பாசன, நிலமேம்பாட்டு, மண் மற்றும் ஈரப்பதத்தை மாற்றியமைக்க அதிக அளவிற்கு முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் வேளாண் தொழிலாளர்களை அதிக அளவில் ஈடுபடுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்துடன் வேளாண்மையில் பன்முகத் தன்மையினை உருவாக்கவும், வேளாண் சார் தொழில்களை உருவாக்கவும் முனைந்தது. கிராமப்புற பொருளாதாரத்தை நகர்ப்புறங்களுடன் இணைத்துச் சிறப்பான சந்தைப் படுத்துதலை உறுதி செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது.

இந்தியத் தொழில் கொள்கை 1956 போல் வேளாண்மைக்கான சிறப்பான கொள்கையினை வகுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வி.பி.சிங் அரசு வெளியிட்டது. வேளாண்மையினை மேம்படுத்த ‘வேளாண்மை கொள்கை நிருணயம்’ கொண்டுவரப்பட்டது. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு அரசின் நிதி ஆதாரங்களிலிருந்து 50 விழுக்காடு செலவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 1989-90வது திட்ட கால ஒதுக்கீடானது 44 விழுக்காடாக இருந்தது 1990-91வது திட்ட காலத்தில் 49 விழுக்காடாக அதிகரித்தது. ஏழை விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் தொடர்ந்து கடனால் பாதிக்கப்பட்டும், அதனைத் திரும்பச் செலுத்த இயலாமலும், குறைவான வருவாயினை ஈட்டிக்கொண்டு இருந்ததாலும் காலம் காலமாக வறுமையின் பிடியில் சிக்கித் தவிர்ப்பதை உணர்ந்து 2, அக்டோபர் 1989ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றவர்களின் கடனை ரூ.1000 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசு போலவே மாநில அரசுகளும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரூ.4000 கோடி உர மானியம் அளிக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிக்க உற்பத்தி செலவினைக் கணக்கிடும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி வேளாண் தொழிலாளர் (குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு உட்பட) செலவு, குறைந்தபட்ச கூலி அல்லது பெயரளவுக் கூலி இதில் எது அதிகபட்சமோ அதனைக் கணக்கில் கொண்டது. விவசாயிகளின் வேளாண் சாகுபடி செய்தலின் மேலாண்மைக்கான மதிப்பீடு கணக்கில் கொள்ளப்பட்டது. வேளாண் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதற்கும் அரசு அறிவிக்கின்ற விலைக்கும் உள்ள செலவு வேறுபாட்டில் உள்ளீட்டுச் செலவின் உயர்வினைக் கொள்முதல் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையில் சரிசெய்து கொள்ளும் என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டைப் பாதுகாக்கக் கிராமப்புற மேம்பாட்டின் அவசியத்தை உறுதி செய்தது. இது போன்று இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் சுயவேலைவாய்பினைப் பெருக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகப் பின்தங்கிய பகுதிகளில் வேளாண் சார் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டது. வேளாண்மையில் சரியான தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்த முறைசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இந்திய வேளாண்மை வளர்ச்சி 7வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆண்டுக்கு 4.1 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது இது 6வது ஐந்தாண்டு திட்ட காலத்தைவிட (6 விழுக்காடு) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மழைபொழிவு சிறப்பாக இருந்தால் உணவு உற்பத்தியானது 1989-90ல் 171.04 மில்லியன் டன்னாக இருந்தது 1990-91ல் 176.39 மில்லியன் டன்னாக அதிகரித்தது. நெல், கோதுமை, பயறு வகைகளின் உற்பத்தியினை அதிகரிக்க திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நெல் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது, சிறப்பு உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் தேசிய பயறு வளர்ச்சி திட்டம் 1990-91ல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசின் எண்ணெய் வித்துகள் தொழில்நுட்ப இயக்கம் (1986ல் தொடங்கப்பட்டது) தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியானது 1988-90ல் 18 மில்லியன் டன்னாக இருந்தது 1989-90ல் 16.8 மில்லியன் டன்னாகக் குறைந்தது. 1990-91ல் நல்ல மழை பொழிவு இருந்ததால் உரப் பயன்பாடு 12.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது (1988-90ல் 11.7 மில்லியன் டன்னாக இருந்தது) இதுபோல் வேளாண் கடன் 1990-91ல் ரூ.13240 கோடியாக இருந்தது 1989-90ல் ரூ.13022 கோடியாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்க ஜவஹர் ரோஜ்கர் யோஜனா 1989ல் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது (Chandra Shekhar Prasad 2009).

வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து போர. மது தண்டவதே 1990-91ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்யும் போது வேளாண்மைக்கான பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். உர மானியத்திற்கு ரூ.950 கோடியும், உணவு மானியத்திற்கு ரூ.276 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதுபோல் வறுமையை ஒழிக்க வரவு செலவு திட்டத்தில் 30 விழுக்காடு ஒதுக்கப்பட்டது (கடந்த ஆண்டு இது 23 விழுக்காடாக இருந்தது). வேளாண்மைத் துறைக்கு ரூ.950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.3115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேளாண்மைக்கான முன்னுரிமைத் தருவதாக அறிவித்த அரசு பூச்சிக் கொள்ளி மருந்து இறக்குமதிக்கான வரியினைக் குறைத்தது.

1980களின் இடையில் இந்தியப் பொருளாதாரம் முதல் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன்படி புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் புகுத்தப்பட்டது, வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. ஆனால் குழப்பமான அரசியல் நிலையினாலும், பொது விலைமட்ட உயர்வினாலும் இச்சீர்திருத்தங்கள் பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. மேலும் இச்சீர்திருத்தங்கள் தொழில் துறை சார்பானதாக இருந்ததால் வேளாண்மைக்கான முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. இக்கால கட்டத்திலிருந்து இந்திய வேளாண்மைத் துறையானது பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டாம் கட்டமாகப் பொருளாதாரச் சீர்திருத்தமானது 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இது இந்தியப் பொருளாதாரம் உயர் வளர்ச்சியில் பயணிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. இந்தியப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி நிலையிலிருந்து சந்தை சார்ந்த தொடர் வளர்ச்சிக்கு மாற்றமடைந்தது. இதன் விளைவு மக்களின் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது, வட்டார ஏற்றத் தாழ்வுகள் உருவானது, கிராமப்புறங்களில் வேளாண்மை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. கிராமப்புறங்களில் வேளாண் சாரா தொழில்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையினைச் சார்ந்திருந்தவர்கள் குறிப்பாக சுயமாகப் பயிர் செய்பவர்கள் குறைந்தனர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகரித்தனர். வேளாண்மை சாத்தியமற்றதாக விவசாயிகள் கருதத் தொடங்கினர். இதனை அடுத்துத் தொடர்ந்து வேளாண்மை பெருமளவிற்குச் சரியும் போக்கு உருவானது.

– பேரா.பு. அன்பழகன்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் சாதனை கட்டுரை – அ.பாக்கியம்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் சாதனை கட்டுரை – அ.பாக்கியம்




கடந்த 10 ஆண்டுகளில் சீனா தனது பொருளாதாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வைக் கண்டுள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய காங்கிரஸின் தொடக்க அமர்வில் (ஞாயிற்றுக்கிழமை) ஜி சின் பிங் கூறினார்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் 54 டிரில்லியன் யுவானிலிருந்து 114 டிரில்லியன் யுவானாக (சுமார் $16 டிரில்லியன்) வளர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 18.5 சதவீதமாகும்.7.2 சதவீத புள்ளிகள் அதிகமாகும்.

சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 39,800 யுவானிலிருந்து 81,000 யுவானாக உயர்ந்துள்ளது என்று ஜி கூறினார்.

தானிய உற்பத்தியில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. மேலும் அதன் உற்பத்தித் துறை, அதன் அன்னியச் செலாவணி கையிருப்பு உலகின் மிகப்பெரியது என்றும் ஜி கூறினார்..

– அ.பாக்கியம்
முகநூல் பதிவிலிருந்து