Pavalar Karumalai Thamizhazhanin Poems பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




என்று முடியும் இந்தக் கொடுமை
****************************************
கயர்லாஞ்சி மகாராட்டிர மாநிலத்தில்
கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்
வயலினிலே தினமுழைத்தே அந்த ஊரில்
வாழ்ந்திட்ட சுரேகாஓர் தலித்துப் பெண்ணாம்
உயர்தற்குக் கல்விநல்ல ஏணி என்றே
உணர்ந்ததனால் ஓரளவு கற்றி ருந்தாள்
தயக்கத்தைத் தகர்த்தெறிந்தே கணவ னோடு
தன்சாதிக் கீழ்மையினை எதிர்த்து நின்றாள் !

ஆதிக்கச் சாதிவெறி அரக்கர் தம்மின்
அடக்குமுறை கொடுமைக்குப் பதிலு ரைக்க
சாதிமாறி அம்பேத்கார் சென்ற தைப்போல்
சார்ந்திட்டாள் புத்தமத அரவ ணைப்பில்
வீதியிலே குடிசையாக இருந்த தன்னின்
வீட்டைக்கல் வீடாக்க முனைந்த போது
மோதியுயர் சாதியர்கள் தடைகள் செய்தே
மொத்தமாக வெளியேற்ற முனைந்து நின்றார் !

வீட்டிற்கு மின்சாரம் துண்டித் தார்கள்
வீட்டினிலே வளர்த்துவந்த ஆடு மாட்டை
கேட்காமல் பலர்சேர்ந்தே தடுத்த போதும்
கேள்விமுறை இல்லாமல் ஓட்டிச் சென்றார்
வீட்டோடு விவசாயம் செய்வ தற்கும்
விட்டிடாமல் கால்வாய்நீர் தடுத்து நின்றே
கூட்டாக வயலையுமே பொதுப்பா தைக்குக்
குறிவைத்தே வன்முறையால் பறித்துக் கொண்டார் !

எதிர்த்திட்ட சுரேகாவின் குடும்பந் தன்னை
எழுபதிற்கும் மேற்பட்ட கிராமத் தார்கள்
குதித்துவந்து குண்டுகட்டாய்த் தூக்கி வந்து
குரூரமாகத் தெருவினிலே நிற்க வைத்து
விதித்திட்டார் அவள்மகனைத் தங்கை யோடு
விலங்கைப்போல் உறவுகொள்ள துன்பு றுத்தி
மிதித்திட்டார் ! மறுத்ததனால் அவன்உயிர் நிலையை
மிருகம்போல் நசுக்கியுயிர்ப் பறித்துக் கொன்றார் !

இலங்கையிலே தமிழர்க்கு நடந்த போன்றே
இங்கேயும் சுரேகாவை பெற்றெ டுத்த
குலமகளைப் பகற்பொழுதில் பல்லோர் காணக்
குதறிட்டார் கூட்டாக உறவு கொண்டு
நலமாக சுயமானம் கொண்டு வாழ
நற்கனவு கண்டவளைக் குடும்பத் தோடு
நிலம்மீது பிணமாக வீழ்த்தி விட்டார்
நின்றெரியும் உயர்சாதி வெறித்தீ யாலே !

மதிகாண சந்திராயன் அனுப்பி யென்ன?
மங்கல்யான் செவ்வாய்க்கு விடுத்து மென்ன?
விதிமாற்றி வல்லரசாய் இந்தி யாவை
வியக்கின்ற படிஉயர்த்த முயன்று மென்ன?
மதிதன்னில் சாதியத்தை நீக்கி விட்டு
மனந்தன்னில் மனிதத்தைப் பதிய வைத்துப்
புதுமாற்றம் சாதியற்ற இந்தி யாவாய்ப்
புலராத வரையெந்த புகழும் வீணே !

( மகாராட்டிர மாநிலத்திலுள்ள கயர்லாஞ்சி ஊரினிலே நடந்த நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்ச்சி )

தூக்கிலிட்டால் சாமோ சாதி
************************************
பெரியாரின் அயராத உழைப்பி னாலே
பெரும்மாற்றம் தமிழ்நாட்டில் வந்த போதும்
விரியாத மனந்தன்னைக் கொண்டி ருப்போர்
விட்டிடாமல் பிடித்துள்ளார் சாதி தன்னை
நெரிக்கிறது கழுத்துதனைக் காதல் செய்தோர்
நிம்மதியாய் வாழ்வதற்குச் சேர்த்தி டாமல்
செரிக்காத உணவுடலைக் கெடுத்தல் போல
செய்கிறது சாதியிந்த சமுதா யத்தை !

நகரத்தில் இருகுவளை போன தென்று
நாம்பெருமை பேசினாலும் கிராமத் துள்ளே
நகராமல் தேநீரின் கடைக ளுக்குள்
நாட்டாமை செய்கிறது இன்னும் நின்றே
முகம்மழிக்கும் நிலையத்துள் தலித்க ளுக்கே
முடிவெட்டின் கடைதன்னை உடைப்போ மென்றே
அகவெறியில் கன்னடத்தின் ஊப்ளி ஊரில்
அறிவித்தே தடுக்கின்றார் சாதி யத்தால் !

தீண்டாமை பெருங்குற்றம் என்றே சட்டம்
தீட்டியிங்கே வைத்தென்ன நாளும் நாளும்
வேண்டாத மருமகளின் கைபட் டாலே
வெறுக்கின்ற மாமியாரின் முகத்தைப் போல
காண்கின்றோம் உயர்சாதி வெறியர் செய்யும்
கலகத்தை வன்முறையை நாட்டி லெங்கும்
தூண்டுவோரை துணையாக உடன்நிற் போரைத்
தூக்கிலிட்டால் தான் இந்த சாதி சாகும் !

Kalandarin Karuppai Poem By Karthigaiselvan செ.கார்த்திகைசெல்வனின் காலண்டரின் கருப்பை கவிதை

காலண்டரின் கருப்பை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்




ஆணும் பெண்ணும்
ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்….
காலத்தின் விரல்கள்
சுண்டிவிட்டாலும்
தலையோ பூவோ
விழுந்தாக வேண்டும்….
ஆணே பூவென்றும்
பெண்ணே தலையென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை….
பெண் தலையில்தான்
பூக்கள் ஆயுட்காலம்
கழிக்கின்றன…

ஆணும் பெண்ணும்
ஒரு நாளின்
இரண்டு பக்கங்கள்….
எத்தனை முறைகள்
புரட்டினாலும்
இரவும் பகலும் வந்தே
தீரும்….
ஆணே பகலென்றும்
பெண்ணே இரவென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை…
இரவுகளே விடியுமென்ற
நம்பிக்கையைத் தருகின்றன..

ஆணும் பெண்ணும்
ஒரு வீட்டின்
இரண்டு துளைகள்…..
எத்துணை அழகாக
வீடு கட்டினாலும்
வாசலும் ஜன்னலும்
அமைத்தே ஆகவேண்டும்…
ஆணே வாசலென்றும்
பெண்ணே ஜன்னலென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை…
ஜன்னல்களே வெளிச்சத்தைத்
தீர்மானிக்கின்றன…

ஆணும் பெண்ணும்
ஒரு மரத்தின்
எதிரெதிர் துருவங்கள்….
மையப்புள்ளி நிலப்பரப்பு
என்றாலும் கீழேயும்
மேலேயும் வளர்ந்தாக வேண்டும்….
ஆணே மேல்பகுதி என்றும்
பெண்ணே கீழ்ப்பகுதி என்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை….
வேர்கள் பிடித்திருப்பதால்தான்
கிளைகள் நடனமாடுகின்றன…

ஓ பெண்ணே…..!
நாங்கள் சதிகாரர்கள்தான்….
நாங்கள்தான் உன்னை
உடன்கட்டையில் ஏற்றிக்
கொன்றோம்….

ஓ பெண்ணே….!
நாங்கள் நாசக்காரர்தான்…
நாங்கள்தான் உனக்குக்
குழந்தைத் திருமணம்
நடத்தி வதை செய்தோம்….

ஓ பெண்ணே…..!
நாங்கள் ஆதிக்கவாதிதான்….
நாங்கள்தான் உன்னை
குழந்தைப் பெற்றுத்தரும்
இயந்திரமாகவே இயக்கிவந்தோம்…..

ஓ பெண்ணே….!
நாங்கள் கொலைகாரர்தான்….
நாங்கள்தான் நீ
பிறந்த உடனேயே
சிசுக் கொலைகள் செய்தோம்….

ஓ பெண்ணே….!
நாங்கள் மதம்பிடித்தவர்தான்…
நீ காதலொன்று
கொண்டாலும் நாங்கள்தான்
ஆணவக்கொலை செய்தோம்….

ஓ பெண்ணே…..!
நாங்கள் பச்சோந்திகள்தான்….
பொதுவெளியில் உனக்கொரு
தேசியகீதம் பாடிவிட்டு
மறைமுக மரணகீதமும் பாடினோம்….

அன்பின் ஐந்திணையில்
வாழ்ந்தவளே!
தூதுசென்று போர்களைத்
தடுத்தவளே!
புலியை முறத்தால் விரட்டியவளே!
புதல்வனைப் போருக்கு
அனுப்பியவளே!
அதியமானிடம் நெல்லிக்கனி
பெற்றவளே!
புறமுதுகிடாமல் நெஞ்சில்
வேல் வாங்கியவளே!

உயர்திணையில் வருபவளே!
அஃறிணைகளின் ஆதிக்கத்தை
வீழ்த்தி உயரத்திற்கு வந்தவளே!
என்றும் நீ நெஞ்சம் உயர்த்தியே
யாவையும் எதிர்கொள்கிறாய்..!
இருந்தும் உன் முதுகிலல்லவா
அம்புகளை இன்று பாய்ச்சுகிறார்கள்…!
நீ உயர்திணை மட்டுமல்ல….
உயிர்த்திணையும் நீதான்….

இதோ பிறந்து கொண்டிருக்கிறது
புத்தாண்டு….!
இந்தச் சமூகமும் புதிதாய்
பிறக்கட்டும்…..

Samam ShortStory By Shanthi Saravanan. சமம் சிறுகதை - சாந்தி சரவணன்

சமம் சிறுகதை – சாந்தி சரவணன்




அந்த குளிர்ந்த கழிப்பறை கதவை பாட்டு பாடிய வண்ணம் திறந்த நீலுவிற்கு ஆச்சரியம். துப்புரவு பணியாளர் முனியம்மா அக்கா மும்மரமாக வாஷ்பேஷன் ஸ்லாப் மேல் பேப்பர் வைத்து ஏதோ சிந்தித்த வண்ணம் எழுதிக் கொண்டிருந்தார். நீலு வந்ததை கூட அவர் உணரவில்லை.

நீலு, “அக்கா என்ன உங்க அத்தானுக்கு லவ் லெட்டரா” எனக் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டு திரும்பினார்.

“மன்னிச்சுக்கோங்க மா”, என்று அந்த தாளை பரபரப்பாக மறைக்க முயற்சித்தார்.

“என்ன மறைக்கிறீங்க காட்டுங்க”, என்றாள் நீலு

தயங்கியவாறே முனியம்மா அக்கா, அந்த தாளை காண்பித்தார்.

முத்து முத்தான கையெழுத்தில் இருந்த அந்த தாளை வாங்கி வாசித்தவள் மலைத்து போனாள், நீலு.

“பயணம்” என்ற தலைப்பில் சிறுகதை எழுதி இருந்தார்

அக்கா, “இது நீங்க எழுதிய கதையா? நீங்க எழுதுவீங்களா?”

முனியம்மா அக்கா தயக்கத்தோடு, “எழுதுவேங்க மா” என்றார்

“என்ன படிச்சிருக்கீங்க?”

“எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன் மா” என்றார்.

“ஏன் இதுவரைக்கும் எங்கள் யாரிடமும் கதை எழுதுவேன் என சொன்னதில்லை, அக்கா” என கேட்ட நீலுவை பார்த்து, “நாங்க எல்லாம் படிச்சிருக்கோம் என்று சொன்னாவே ஒத்துக்க மாட்டாங்க மா? கதை எழுதுவோம் என சொன்னா நம்பவா போறாங்க மா?” “அது மட்டும் இல்லாமல்‌ நாங்க எல்லாம் பாத்ரூம் கழுவ தான் லாக்கி” என்று சொல்லுவாங்க என்றார் ஆதங்கத்தோடு.

“ஏன் அப்படி சொல்றீங்க?”.

“நிஜம் தான்”, மா எங்க வீட்டிலேயே நம்ப மாட்டாங்க. வீட்ல யாருக்கும் தெரியாம நான் எழுதிய கதைகளை என் புடவை வைக்கிற அலமாரியில் உள்ளே மறைத்து வைத்து விடுவேன்.

நான் வேலை எல்லாம் முடிச்சு ராத்திரிதாமா புத்தகம் படிப்பேன், கதை எழுதுவேன். வாசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். எழுதுவதும் பிடிக்கும். எல்லா கதையும் சின்ன சின்ன பேப்பர்ல எழுதி ஒரு பையில் போட்டு தான் வீட்டில் வைச்சிருக்கிறேன். எப்போவேல்லாம் நேரம் கிடைக்குதோ அப்ப எல்லாம் என் கதைக்கு நானே ஒரு வாசகரா படித்து பார்த்து கொள்வேன்,” மா என்ற முனியம்மாவை ஆச்சிரியத்தோடு பார்த்து, “இது வரைக்கும் எத்தனை கதை எழுதி இருக்கீங்க அக்கா?” என கேட்டாள் நீலு.

மெதுவாக, “ஒரு 15 கதை எழுதி இருக்கேன்” மா என்ற முனியம்மாவை பார்த்து

“15 கதையா” என ஆச்சரியத்தோடு!”, கேட்டாள் நீலு.

“ஆமாம்மா”

நாளைக்கு கண்டிப்பா அந்த கதைகளை இங்கே எடுத்துட்டு வாங்க அக்கா.

என்னுடைய தோழி ஒரு பதிப்பகம் வச்சிருக்காங்க அந்த கதைகளை நாம அவங்ககிட்ட கொடுக்கலாம். அவங்க அத படிச்சு பார்த்துட்டு தேர்வு செஞ்சு புத்தகமாக வெளியிட வாய்ப்பு இருக்கு என்றாள் நீலு.

நம்பமுடியாமல் முனியம்மா நீலுவை பார்த்துக் கொண்டே இருந்தார்.

“என்னக்கா நான் சொல்றது புரியுதா நாளைக்கு கண்டிப்பா அந்த கதைகளோட என்ன வந்து பாருங்க…

தயக்கத்தோட, “சரி மா”, என்றார்.

ரெஸ்ட் ரூம் போயிட்டு தன்னுடைய கேபினுக்கு வந்த நீலு தன் தோழி சங்கீதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

“என்னங்க மேடம் எப்படி இருக்கீங்க”.

“நான் தான் அதை கேட்கும்”, நீலு. இப்போ தான் உனக்கு டைம் கிடைத்ததா பேசுவதற்கு

“சாரி டி” என்றாள் நீலு.

தோழிகள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு… “சங்கீதா எனக்கு ஒரு உதவி வேண்டும்” என்றாள் நீலு

“சொல்லு”, நீலு

எங்க ஆபிஸில் வேலை செய்யும் முனியம்மா அக்கா சிறுகதை எழுதுவாங்களாம். எனக்கே இப்போது தான் தெரிந்தது. “பயணம்” என்ற சிறுகதை மிகவும் சிறப்பாக இருக்கு பா‌.

இன்னொரு விஷயம் அவங்க 15 கதை எழுதி வீட்டில் வைத்து இருக்காங்களாம்.

“என்னடி சொல்றே” என்று ‌ஆச்சிரயத்தோடு சங்கீதா கேட்க

“ஆமாம் பா. நீ எப்படியாவது அவுங்க கதையை வெளிவர செய் பா…. அது அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தரும்….” என்றாள்

“சர்டன்லி …. நீ அவுங்களை நாளைக்கு வந்து‌ என்னை பார்க்க சொல்லு. கதை எல்லாம் எடுத்து வர சொல்லு” என்றாள்.

“தேங்க்யூ பா”, என்றாள் மகிழ்ச்சியாக.

உடனே, “முனியம்மாவை இன்டர்காமில் அழைத்தாள்”, நீலு

“சொல்லுங்க ‌மா”

நாளைக்கு மறக்காம இந்த ‌அட்ரஸ்ஸுக்கு உங்க கதையெல்லாம் எடுத்துக் கொண்டு போங்க கா. அங்கே சங்கீதா என் பிரென்ட் இருப்பாங்க. உங்களைப் பற்றி சொல்லி இருக்கேன். கண்டிப்பாக உங்க கதைகள் வெளிவரும். நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க. நான் மேனேஜரிடம் ‌சொல்லிவிடுகிறேன் என்றாள் நீலு சங்கீதாவின் முகவரியை கொடுத்தாள்.

முனியம்மா குரலில் ஒருவித மகிழ்ச்சி.

“மிகவும் நன்றி மா….” என தழுதழுத்து அவர்களின் குரல்..

மறுநாள் நீலு ஆபிஸ்க்குள் நுழையும் போது முனியம்மா அக்கா மாப் செய்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் நீலுவுக்கு சட்டென்று கோபம் வந்தது‌

அக்கா “என் கேபினுக்கு வாங்க” என் சொல்லி விருட்டென சென்றாள்.

“அவளை தொடர்ந்தார்”, முன்னியம்மா

“நான் லீவு தானே எடுத்துக்கோங்க”, என சொன்னேன் என்ற நீலு நிமிர்ந்து பார்த்தபோது முன்னியமா அக்கா அழுதுக்கொண்டு இருந்தார்,

அக்கா “என்னாச்சு…சாரி … உங்க நல்லதுக்கு தானே சொன்னேன் என்றவளிடம்…

“நீங்க தான் மா என்னை மன்னிக்கனும். நேற்று ஆசையா அந்த கதையை எடுக்க போனேன். அந்த கதைகள் எல்லாம் கானோம் மா. வீடு முழுசா தேடிப் பார்த்துவிட்டேன். என் புருஷன் குடிக்க காசு வேணும் என்று அந்த கதை எழுதிய பேப்பர்களை பேப்பர் கடைக்காரனிடம் போட்டு விட்டானாம். என் தலை எழுத்து. நான் என்ன செய்வது. மகராசி நீங்க உதவறேன் சொன்னிங்க….. எல்லாம் என் தலை எழுத்து மா. ஆனால் நான் விட மாட்டேன் மா. திருப்பி எழுதுவேன். உங்க கிட்ட வந்து காமிப்பேன் என சொல்லிவிட்டு மாப் போட அழுதுக் கொண்டே வெளியே சென்றார்……

சங்கீதாவை அழைத்து தகவலை பகிர்ந்து கொண்டாள்.. நீலு

சரி நீலு, “கண்டிப்பாக அவர்கள் எழுதினால் நான் அந்த கதைகளை பதிவு செய்து தருகிறேன்” என்றாள். சிறிது நேரம் மனம் எதிலும் செல்லவில்லை. அமைதியாக சற்று நேரம் அமர்ந்து இருந்தாள் நீலு. அடுத்த நொடி ஆயிரம் அதிசயங்களை சுமந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே….

அதே போல, அடுத்த நொடி நீலுவிற்கு, ஆச்சரியம் காத்திருந்தது. குடும்ப சுற்றுப்பயணம் செல்ல இந்த முறை நிர்வாகம் அவள் பெயரை தேர்வு செய்து உள்ளதாக சுற்று அறிக்கை கொண்டு வந்த அட்டண்டர் கமல் சொன்னவுடன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள். நீலு அவளின் கணவன் ராம் மகன் சுந்தர் மகள் சுஷ்மிதா நால்வரும் செல்லலாம். அதே சமயம்இன்டர்காம் அழைத்தது

‘ஹலோ”, என்றாள் .

மறுபக்கம் மேலாளர் “வாழ்த்துக்கள்”, நீலு. இந்த வருடம் ஃபேமிலி டிரிப்க்கு கம்பெனி உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மலேசியா செல்ல தேர்ந்தெடுத்து உள்ளார் நீங்கள் கன்பார்ம் பண்ணவுடன் டிக்கெட்டுகள் புக் செய்துவிடலாம்.

“தேங்க்யூ சார்.”

மற்றொரு குட் நியூஸ் பிரோமஷன், மற்றும் இன்கிரிமெண்ட் 15,000/-

நீலுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “நான் எதிர்பார்க்கவே இல்லை சார் மிகவும் நன்றி சார்” என்றாள்.

“என்ஞ்சாய் யூர் ஃபேமிலி டிரிப்” என மேலாளர் மறுபடியும் வாழ்த்துகள் கூறி வைத்தார் ‌

அடுத்த நிமிடம் நீலு கணவன் ராமிற்கு போன் செய்தாள். “என்னங்க இன்று வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சர்ப்ரைஸ்” என்றாள்.

ராம், “என்ன? இப்பவே சொல்லு? எனக்கு வேலை இருக்கிறது” என்றான்

“இல்லை இல்லை வீட்டுக்கு வந்த தான் சொல்லுவேன்”, என போனை வைத்து விட்டாள்.

அப்பா, அம்மா, தம்பி அனைவரையும் அழைத்து அந்த சந்தோஷமான செய்தியை சொல்லிவிட்டாள்.. அனைவருக்கும் மகிழிச்சி… அம்மா, கோயிலுக்கு போய் அர்ச்சனை செய்துவிட்டு போ மா.. டிரஸ் எல்லாம் பத்திரமா எடுத்து வைத்திடு. பசங்க பத்திரம்.
“சரி மா,….சரி” என்றாள்

அதன் பின் அவளுக்கு வேலையே ஓடவில்லை..எப்போது மணி ஐந்து ஆகும் என காத்திருந்தாள். அலுவலக தோழர்களுக்கு அதற்குள் விஷயம் தெரிந்துவிட்டது. சிலர் உள் அன்போடும் பலர் வயிற்றில் பயரோடும் வாழ்த்துகளை சொல்லி சென்றனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை வீட்டுக்கு சென்று அனைவைரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என காத்திருந்தாள்.

நிமிடங்கள் மெதுவாக சென்றது. மாலை ஐந்து ஆனவுடன் தன்னுடைய ஸ்கூட்டி பெப் எடுத்துக்கொண்டு வேகமாக அடையார் ஆனந்தபவன் சென்று அனைவருக்கும் பிடித்த பாதாம் அல்வா வாங்கி கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்.

இந்தச் செய்தியை கேட்டவுடன் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி மழையில் நனையப் போகிறார்கள் என நினைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“அத்தை மாமா ராம் செல்லம்ஸ்”, அனைவரும் இங்கே வாங்க ‌

சலித்துக்கொண்டே அத்தையும் மாமாவும் வர ராமும் தான்…….குழந்தைகள் ஆர்வத்தோடு வெளியே வந்தார்கள்.

முதலில் கையில் இருந்த லிஸ்ட்டை அத்தை மாமாவிடம் கொடுத்துவிட்டு, “அத்தை மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்றாள்”.

எதற்கு என்று அறியாமல் பார்த்த அத்தை மாமாவிடம்,”எனக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கிறது இன்கிரிமெண்ட் கொடுத்திருக்கிறார்கள் ஃபேமிலி டிரிப் மலேசியா செல்ல எங்கள் நான்கு பேருக்கும் டிக்கெட் எடுத்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள் அத்தை” என்றாள்.
உடனே அத்தை “என்நேரமும் ஆபிஸிலேயே இருந்தா கிடைக்காமல் என்ன செய்யும் என” கூறிவிட்டு ஒரு வாழ்த்து கூட சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். மாமா பின் தொடர்ந்தார்.”

இது தான் விஷயம் என்று எனக்கு போனிலேயே சொல்லி இருக்கலாமே என்றான் ராமு.

ஃபேமிலி டிரிப் எல்லாம் வேண்டாம் இதை வைத்து உங்கள் ஆபீஸில் உன்னை மேலும் வேலை வாங்குவார்கள். அதுவுமில்லாமல் அப்பா அம்மாவிற்கு இது பிடிக்காது நாளை ஆஃபீஸ் போனவுடன் வேண்டாம் என்று சொல்லிவிடு சாரிமா… என சொல்லி எதுவும் நடக்காத மாதிரி, தலை வலிக்கிறது ஒரு காபி போட்டு கொண்டு வா பிளிஸ் என்று சொல்லி காலை வந்த நாளிதழை எடுத்துக்கொண்டு ரூமுக்குள் சென்று விட்டான்.

குழந்தைகள் இருவரும், “அம்மா அம்மா மலேசியா போலாமா ப்ளீஸ்மா நல்லா இருக்குமா ஜாலியா இருக்கும்” என்றார்கள்.

நீலு “நீங்க பெரியவங்க ஆன அப்புறம் போலாம்” என்றாள் அமைதியாக.

இந்தாங்க ஸ்விட் எடுத்துக்கிங்க என கொடுத்துவிட்டு, ஏதும் சொல்லாமல் கைப்பையை ஹாலில் போட்டுவிட்டு காபி போட அடுப்பங்கரை சென்றாள்.

குழந்தைகள் ஸ்வீட் எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

வீட்டுக் காலிங் பெல் அடித்தது.

நீலு போய் கதவைத் திறந்தாள்.

வாசலில் விமலா அவளுடைய நாத்தனார்.

வாங்க வாங்க… “அத்தை மாமா அண்ணி வந்து இருக்காங்க ” பாப்பா என்ன திடிரென்று என்று கேட்டுக்கொண்டு மாமாவும் அத்தையும் முகத்தில் மகிழ்ச்சியேடு அவர்களை வரவேற்றார்கள்.

“அப்பா அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க”

“என்னமா என்ன விசேஷம்” என்றனர்.

“எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. அயிரம் ருபாய் இன்கிரிமெண்ட் கொடுத்திருக்காங்க. அது மட்டுமல்ல ஊட்டிக்கு குடும்பத்தோடு சென்று வர டிக்கெட் எடுத்துக் கொடுத்து இருக்காங்க நாளைக்கு கிளம்புறோம் உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்

“சூப்பர்மா. ரொம்ப மகிழ்ச்சி நீ புத்திசாலி. உனக்கு கிடைக்காமல் அது யாருக்கு கிடைக்கும். எல்லாம் உன் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் மா ” என்றார் மாமியார் புன்னகையோடு.

டேய் ராம் “இங்க வாடா வந்து தங்கையை பாரு அவளுக்கு ஊட்டிக்கு ஃபேமிலி டிரிப் கொடுத்திருக்காங்களாம்.”

உள்ளே இருந்து வந்தான் ராம்

“சூப்பர் கங்கிராஜுலேசன் உன் திறமைக்கு இது எப்போதோ கிடைக்க வேண்டியது மா”….என …..

நீலு எல்லோருக்கும் காபி கொண்டு வா, மாப்பிளை என்ன சொன்னார் என கேட்டு கொண்டு இருந்தார் மாமனார்..

அவருக்கும் ரொம்ப மகிழச்சி பா. அவர் தான் டிரஸ் எல்லாம் பேக் செய்து கொண்டு இருக்கிறார்…

ஹாலில் குடும்பமாக மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்

கண்களில் வருகின்ற நீரைத் துடைத்துக் கொண்டு விமலாவுக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள் நீலு. “வாழ்த்துகள் அண்ணி எனக்கூறி” மாலை டிபன் ரெடி செய்ய அடுப்பங்கரை சென்றாள்…

மனதிற்குள் முனியம்மா அக்கா வந்து சென்றார் …. அவர்களின் முன்னேற்றத்திற்கு தகுதி, சாதி மட்டுமே தடையில்ல.

பெண்களுக்கு பல இடங்களில், ஏன் உறவுகளில் கூட சமம் இல்லை. பாராட்டுகளும் பரிசுகளும் அங்கிகாரங்களும் ஆட்களை பார்த்தே பல இடங்களில் கொடுக்கப்படுகிறது. ஏன்? இதற்கு பதில் பல உறவுகளில் இல்லை. பெண்களை சமமாக பார்க்க பழக வேண்டும். அதற்கு குடும்பத்தில் இருக்கும் பெண், ஆண் இருபாலரிடத்திலும் புரிதல் வேண்டும்.

தன் மகளின் திறமைகளை மதிக்க தெரிந்த அப்பா என்ற உறவில் இருக்கும் ஆண் மனைவியின் திறமைகளை மதிக்க தயங்குவது ஏன்? ஆதிக்கத்தை அன்பு இடமாற்றம் செய்யலாமே!

தன் தமக்கையின் திறமைகளை மதிக்க தெரிந்த அண்ணன் என்ற உறவில் இருக்கும் ஆண் மனைவியின் திறமைகளை பாராட்ட தயங்குவது ஏன்? அதிகாரத்தை அன்பினால் இடமாற்றம் செய்யலாமே!.

தன் மகளின் திறமைகளை மதிக்க தெரிந்த அம்மா என்ற உறவில் இருக்கும் பெண், மருமகளின் திறமைகளை மதிக்க தயங்குவது ஏன்? பொறாமையை, அன்பினால் இடமாற்றம் செய்யலாமே!.

தன் அம்மாவின் திறமைகளை மதிக்க தெரிந்த மகள் என்ற உறவில் இருக்கும் பெண், மாமியாரின் திறமைகளை மதிக்க தயங்குவது ஏன்? போட்டியை, அன்பினால் இடமாற்றம் செய்யலாமே!.

இப்படி பல சிந்தனைகள் அவளை ஆட்கொண்டது? எதற்கும் அவளிடத்தில் பதில் இல்லை. ஆனால் “புரிதல்” ஒன்றே தீர்வு என தோன்றியது.

இந்த அன்பினால் அடிமைப் பட்டு இருக்கும் பெண் சமூகம் இடையில் வந்ததே. தாய் வழி சமூகம் நமது சமூகம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆண் மட்டுமே அன்றி பெண்னே பெண்ணின் வெற்றிக்கு தடை விதிக்க கூடாது.

மேகங்கள் கடந்து செல்லத்தான் வேண்டும். ஒரு நகர்வு அனைத்திலும் அவசியம். இல்லையெனில் அதை ஜடம் என்றே நினைத்து விடுவோம் என யோசித்தப்படி இருந்தாள் நீலு.

இதற்கிடையில் “அலுவலகத்தில் எதை சொல்லி வரவில்லை” என சொல்ல போகிறோமோ தெரியவில்லை என்ற மன சிக்கலில் இருந்து விடுபட்டு மேனஜர் அவர்களை அழைத்து அடுத்த முறை வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன் என நாசுக்காக சொல்லி விட்டாள்.

அடுத்த தேர்விலிருந்த லில்லிக்கு அந்த வாய்ப்பு அளிப்பதாக மேனஜர் சொன்னார்.

லில்லியும் சக தோழமை தான். மனம் சற்றே லேசானாது.

அடுத்து அவள் சிந்தனையில் முனியம்மா அக்கா கதை விரைவில் வெளியிட முயற்சிக்க வேண்டும். அடுத்த முறை அமெரிக்கா வாய்ப்பு நமக்கு கிடைக்கும் கண்டிப்பாக பயணிப்போம்  என்ற நம்பிக்கையோடு…. இப்போது பிள்ளைகளின் பிராஜக்ட் வர்க் என்ன உள்ளது?….நாளை அலுவலகத்தில் என்ன என்ன பணிகள் உள்ளது,.. என மனதில் எண்ணியபடி, டிபன் பறிமாறி கொண்டு இருந்தாள் நீலு…….