தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 20 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 20 – டாக்டர் இடங்கர் பாவலன்



20. தாய்ப்பால் சேகரித்தல்
டாக்டர் இடங்கர் பாவலன்

காற்றில் அலைந்தபடியே மலரில் தேனைப் பருகி வட்டமடிக்கிற ஒரு தேன்சிட்டின் உழைப்பிற்கு ஒத்தது, மணிக்கணக்காக அமர்ந்து ஒரு அம்மா தன் மார்பிலிருந்து பாலை எடுத்து வைத்துச் சேகரிப்பதும் அதைப் பிள்ளைக்குப் புகட்டுவதும். ஒரு வசந்த காலத்திற்கு பறவைகள் தயாராகுவது போல நாமும் தேனினும் இனிய தாய்ப்பாலினைச் சேகரிப்பது தொடர்பாக எல்லா வகையிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தாய்ப்பாலினை பம்ப் செய்வதன் வழியே சேகரிப்பது ஒருபுறம் இருந்தாலும் கைகளினால் மார்பிலிருந்து பக்குவமாகச் சேகரிப்பதையும்கூட நாம் ஒவ்வொருவரும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் தாய்மார்களே!

மார்பிலிருந்து பாலெடுக்கத் தயாராகிற போது நமக்கென்று இருக்கிற ஏதேனும் தனித்த அறையில் இருந்து பாதுகாப்பு உணர்வோடு தயாராகிக் கொள்ள வேண்டியது அவசியம். அத்தோடு நம் குழந்தைகள் அருகிலேயே அமர்ந்து பாலெடுக்கையில் அவர்களைப் பற்றிய பரிபூரணமான எண்ணங்கள் மனதிலே உருவாகி அதுவே தாய்ப்பால் மார்பில் பெருக்கெடுக்கச் செய்யத் தூண்டுவதற்கு ஏதுவாகிவிடும். அச்சமயத்தில் நம் கைகளை நன்றாகச் சுத்தம் செய்து கொள்வதுடன், தாய்ப்பால் சேகரிக்கப் போகிற குவளையையும் நன்றாகக் கொதிக்கிற தண்ணீரிலிட்டு பாதுகாப்பானதாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நம் மனதையும் உடலையும் இலகுவாக வைத்துக் கொண்டு அமர்ந்தபடி பாலினைச் சேகரிக்கத் துவங்குகையில் மார்பினை முதலில் வெதுவெதுப்பான சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ளலாம். பின்பு மார்பினை மெல்ல வெளிப்பக்கத்திலிருந்து காம்பை நோக்கியபடி மெல்ல நீவிக் கொள்ளலாம். இதனால் மார்பும் விரைவில் பாலினை சுரப்பதற்குத் தன்னை ஆயத்தமாக்கிக் கொள்ளும்.

இதன் துவக்கத்தில் உடலை சற்று முன்பக்கமாக தாழ்த்தியபடி இதனைத் துவக்கலாம். அப்போது ஒருகையில் மார்பைப் பற்றியபடியும் இன்னொரு கையில் சேகரிக்க வேண்டிய குவளையையும் பிடித்துக் கொள்ள வேண்டும். இதில் அவரவர் வசதிக்கேற்ப வலது, இடது என்று எந்தக் கைகளையும் பயன்படுத்தி மார்பினைப் பற்றிக் கொள்ளலாம். அதிலே கட்டைவிரல் மேலேயும் மற்ற நான்கு விரல்கள் கீழே இருக்கும்படியும் காம்பிலிருந்து சற்று இரண்டு இன்ச் வெளியே தள்ளியிருக்கும்படி பிடித்துக் கொள்ள வேண்டும்.

மார்பினை கைகளால் நன்றாக பற்றிக் கொண்டவுடன் பாலினை எடுப்பதன் முதல் கட்டமாக விரல்களை அப்படியே பின்நோக்கி நெஞ்சுக்கூடு வரைத் தள்ளி அவ்வாறே காம்பை நோக்கிய விரல்களை மீண்டும் நீவியபடியே கொண்டு செல்ல வேண்டும். அதாவது மார்பலிருந்து பாலினை முன்னும் பின்னும் இசைத்துக் கறப்பது போலத்தான் இதுவும். இதனால் மார்பின் பால் பைகளிலிருந்து காம்பின் வழியே பால் வெளியேறி குவளையில் வந்து நிறைகிறது.

இதே போல விரல்களை காம்பைச் சுற்றி வெவ்வேறு நிலைகளில் மேலும் கீழுமாக, பக்கவாட்டில் என்று பொருத்தி பாலினை எடுத்து புட்டிகளில் நிரப்பலாம். பொதுவாகப் பாலினை எடுக்கையில் அதிகமான தொடுவுணர்வுள்ள மார்பினை மிருதுவாகக் கையாள வேண்டும். இதனால் மார்பின் பாலினை எடுத்துச் செல்கிற குழாய்கள் வீணாக சேதமடைந்து தாய்ப்பால் கட்டிக் கொள்வதை நாமும் தவிர்க்க முடியும்.

நாம் சேகரிக்கிற புட்டிகள் முழுக்க நிரம்பும் அளவுக்கு என்றில்லாமல் முக்கால் அளவிற்கு வழிந்துவிடாதபடி சேகரித்துக் கொள்ளலாம். இதனை அப்படியே கொண்டு போய் குளிரூட்டியில் திறந்த நிலையிலும் வைக்கக் கூடாது, செயற்கை நிப்பில் காம்போடும் மூடியும் வைக்கக்கூடாது. செயற்கை காம்பின் நுனியில் துளைகள் இருப்பதால் அதன் திறப்பின் வழியே தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா! ஆகையால் அதற்கென இருக்கிற மூடியினால் அதை இறுக்கமாக மூடிப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நம் பிள்ளைக்குத் தேவைப்படுகிற போது எடுத்து பசீதீர ஆசையாகப் புகட்டலாம் தானே!

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 17 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 17 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
செல்வ மகளுக்கு அம்மா எழுதும் அன்புக் கடிதம்

உன்னைப் பெற்றெடுத்த வயிற்றின் ஈரம்கூட காய்வதற்கு முன்னால் மடிநிறைய பிள்ளையைச் சுமந்து வந்து எனதன்புச் சுமையினைக் கூட்டுகிறாய். உனை மகளென்றும் மலர்ந்த தாயென்றும் கட்டிக் கொள்கிற போதெல்லாம் நான் பெற்றெடுத்துக் கிடந்த உடலின் கதகதப்பை உன்னிலே உணர்கிறேன் மகளே! சிறு தவளை போல இரவெல்லாம் மழலைக் குரலால் இசைத்தபடி கைகால்களை உதைத்துக் கொண்டு கிடந்த உனது திரேகத்தில் நானுணர்ந்த உன் வாசமெல்லாம் இப்போது எனது பேத்தியின் தேகத்திலும் ஒரு கற்பூரத்தைப் போல் கமழுகிறது.

கோவில் தெப்பக்குளத்தில் எழுப்பப்பட்ட கல்மண்டபத் தூண்களில் அலையடித்துக் காய்ந்து போன ஈரப்பசப்பைக் கைதாங்கலாகப் பிடித்துக் கருவறைக்குள் நுழைந்த அதன் தாழ்வாரத்தில், பூசாரி ஒருசொட்டுத் துளசித் தீர்த்தத்தை உள்ளங்கையிலும் உச்சந்தலையிலும் தெளித்திட்ட போது சிலிர்த்த அதே உடலின் பரவசத்தை, இப்போது நான் உனை மார்பிலே கிடத்தி வாய் கொள்ளுமளவுக்கு காம்பு நிறைத்து பாலூட்டிய போது நீ பருகிய அந்த முதல் சொட்டுத் தாய்ப்பாலின் தருணத்திலே உணர்ந்திருக்கிறேன். அதை நினைத்து இப்போதும்கூட மயிர்க்கூச்சமடைந்து மயிர்க்கால்களும் குத்திட்டு நிற்கின்றன.

வேளாங்கன்னி மாதாங்கோவில் மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்டு உறைந்து போன மெழுகுவர்த்திகளின் கதகதப்பையும், அதனது ஒளியையும், மிருதுவையும் போலிருக்கிற உன் உச்சந்தலையில் சிறு மண்துகளும் தீண்டிடாதவாறு கைகளால் தரையை ஒத்தியெடுத்துவிட்டே உன்னைத் துயில் கொள்ள வைத்தேன். குளிரும் தரையில் பட்டு சிலிர்த்தவுடன் கை கால்களைக் குறுக்கி வீரிடும் உனை என் மார்பிற்குள் புதைத்துக் கொண்டு அப்போதெல்லாம் கதகதப்பூட்டினேன். உன் மெல்லிய பாதங்கள் தரையில் படுவதற்கு முன்பாக முத்தமிட்ட முகத்தில் பதிய வைத்தே உனக்கு முதல் நடைகாட்டப் பழக்கினேன். எனது புண்பட்டுக் காய்ந்து தழும்பாகிய அடிவயிற்றில் உனை என் கைபிடித்து நிற்க வைத்தே எப்போதும் உனை மகிழ்வித்தேன். என் கணுக்காலில் உனை அமரவைத்து சீசா விளையாட்டுப் பழக்கிய பின்பே உனக்குக் கைப்பொம்மைகளெல்லாம் விளையாட்டுக்குரிய பொருட்களாயின.

இத்தனை மகிழ்வுக்கும் பின்னே உனை நான் மார்பிட்ட கணத்தில் ஏற்பட்டிருந்த பாலூட்டிய துயரங்களையும் வாதைகளையும் அதிலிருந்து சுண்டக் காய்ச்சியெடுத்த சின்னச் சின்ன மகழ்வுகளையும் இப்போது யோசித்துப் பார்க்கிறேன். உனை வளர்த்தெடுத்த ஞாபகச் சுள்ளிகளையெல்லாம் பொறுக்கியெடுத்து இன்றைய அதியற்புத நாளில் ஒரு நினைவுக்கூட்டினை கட்டிப் பார்க்கிறேன். என் வாழ்வின் நிலைத்த பேறுடைய கடந்த காலத்தில் பிள்ளைபேறு கண்டு பாலூட்டி வளர்த்தெடுத்த என் நினைவிலே எஞ்சியிருக்கிற அனுபவங்களையெல்லாம் தொகுத்துச் சொல்வதற்கு ஒரு தாயாக இப்போது ஏனோ ஆசைப்படுகிறேன். இது உனக்கும், உன் பிள்ளைக்கும், நம் தலைமுறைக்கும்கூட உதவக்கூடும் என்கிற உள்ளுணர்வின் பால் எழுந்த உளக்கிளர்ச்சியால் தான் இப்போது நான் இதை எழுதுகிறேன்.

அச்சமயத்தில் நீ வயிற்றிக்குள் மீனாய்த் துள்ளி முண்டியபடி வெளியேறத் துடித்துக் கொண்டிருந்தாய். உனை குழந்தை இயேசுவின் வருகையைப் போல எல்லோரும் எதிர் பார்த்தபடியிருந்தோம். வானத்தில் மின்னுகிற பொலிவுற்ற நட்சத்திரங்களாய் நாங்களே மகிழ்வில் மினுங்கிக் கொண்டிருந்தோம். ஆனாலும் உன் வருகை அவ்வளவு எளிதாய் நடைபெறவில்லை. நீ கீழிறங்கி வந்து பெருவலியெடுக்க வேண்டிய அந்நேரத்தில் போதிய அவகாசமில்லாத காரணத்தால் இன்னும்கூட வலியினை அதிகரிக்க வேண்டி மருத்துவர்களும் செவிலித்தாய்களும் முனைப்புக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இயற்கையின் பால் உண்டான வலியும், மருந்துகளால் தூண்டப்பட்ட வலியுமாக இரு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியைப் போல தரிகெட்டு வலியில் துடிதுடித்து அப்போது நானும் வீரிட்டு அழத் துவங்கினேன். கடவுள் அச்சமயம் எனக்கு ஏனோ இரக்கமே காட்டவில்லை.

எல்லோரும் கணித்தபடி பிரசவம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளெல்லாம் படிப்படியாக கண்முன்னே கரைந்து கொண்டிருப்பதை பரிதவிப்பு ததும்பிய கண்களால் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே அப்போது எங்களால் முடிந்திருந்தது. அதிகாலையில் உதயமாகிய பொன்னிறச் சூரியனின் கதகதப்போடு உனை அணைத்துக் கொள்ள எண்ணியிருந்த வேளையில் அந்தக் கதிரவன் மலை முகடுகளுக்குப் பின்னால் மறைந்திட்ட போதிலும்கூட நீ வெளிவருவதற்கான அறிவிப்பு மட்டும் எங்களுக்குக் கிடைக்கவேயில்லை.

அப்போது வரையிலும் அலையலையாய் துடித்தெழுந்து பாறையில் வந்து மோதி பெரும் ஓய்ச்சலோடு திரும்புகிற பேரலையொத்த வலியை நான் அனுபவித்தபடியே இருந்தேன். பிரசவ அறையில் என்னோடு உன் தந்தையும் கரம்பற்றியபடி இருப்பதற்கு அனுமதித்த அத்தருணம் மட்டுமே என்னோடு எஞ்சியிருக்க, அடுத்து வந்த ஒவ்வொரு கணமும் அதிகரித்தபடியே இருந்த பிரசவ வலியை உன் அப்பாவின் விரல்களை இறுகப் பற்றித் தொலைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

வயிற்றிலிருந்து வயரின் வழியே நீண்டு எனது வலியையும், கருவாகிய உனது இதயத்துடிப்பையும் மின்னிணைப்பில் கண்காணிக்கிற ஒளித்திரையை ஒருசாய்த்து அடிக்கடி பார்த்தபடியே இருப்பேன். வயிற்றிலிருந்து சிறு கிள்ளலைப் போல சுண்டுகிற வலி, அதிலிருந்து கல்லெறிந்த குளமாய் வயிறெங்கும் பரவுகிற வேதனை, எல்லாவற்றிற்கும் மீறிய உனது கால் உதைத்தல் இவையெல்லாம் வலியிலும் இரசித்தபடியே இருப்பேன். இந்த அளவீடுகளையெல்லாம் கணினித் திரையில் வரைபடங்களாக காட்டிய போது அதைப் புரிந்து கொள்ள முடியாத போதாமையில் எனது இடுப்பு வலியையும் அதற்கேற்ப மாற்றமடைகிற உனது இதயத்தின் துடிப்பின் துல்லியமான வேறுபாட்டையும் மாறிமாறி கவனித்தபடியே இருப்பேன். ஏதோ ஒன்றை முன்கூட்டியே கணித்துச் சொல்லிவிடுகிற இரசவாதியைப் போல நான் அதிலேயே மூழ்கியிருப்பேன்.

நீண்ட யாத்திரைக்குப் பின்னும் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நீண்டிருப்பதைப் போலான உணர்வே எனக்கிருந்தது. செவிலியர் வந்து அடிவயிற்றில் கைவைத்து மூன்று விரலளவு மட்டுமே திறந்திருக்கிற கருப்பை வாய்ப்பகுதியின் வழியே இனி பிள்ளை இறங்கி வருவதற்கான சாத்தியமில்லாத சூழலை விளக்கி என்னை ஆசுவாசப்படுத்தியபடி இருந்தார். மருத்துவமனைக்குள் நுழைந்த கணத்திலிருந்து வலியென பிரசவமேடையில் கிடத்தியிருக்கிற இந்நேரம் வரையிலும் என்னைப் பார்த்துக் கொள்வதற்கு பெரும் சிரத்தையெடுத்துக் கொள்கிற செவிலியரைப் புரிந்து கொள்வதற்கு எனக்கோ நீண்ட நேரம் ஆகவில்லை.

ஆனாலும் பனிக்குடம் உடைந்து நெடுநேரம் கழிந்துவிட்ட பின்னால் கூடுதலாக குழந்தைக்கு கிருமித்தொற்று வந்துவிடக் கூடுமே! என்ற அவரது முணுமுணுத்த குரலில் தொய்வாகக் கேட்டவை யாவும் ஒருவகையில் எனக்கு அச்சமூட்டவே செய்தது. பிரவச வலியெடுத்து இருபத்திநான்கு மணி நேரம் கடந்துவிட்ட பின்னாலும், பனிக்குடம் உடைந்து வயிறு தணிந்துவிட்ட போதிலும், இனிமேல் நாம் தாமதிப்பதற்கு எந்த அர்த்தமுமில்லை! என்றபடியே, சிசேரியன் செய்து கொள்கிறாயா? என்று கேட்ட அந்த நிமிடத்தில் உடைந்து நான் அழத் துவங்கினேன்.

நான் சிசேரியன் செய்து கொள்ளப் போகிறேன் என்பதற்காகவோ, அதற்காக என்னை யாரும் குறை சொல்லிவிடுவார்கள் என்றோ, என்னால் ஒரு குழந்தையை சுகப்பேறாய் பெற்றுக் கொடுக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தினாலோ, முதுகில் துளையிட்டு மயக்கம் கொள்ள வைக்கிற மருந்துகள் ஏற்றப்பட்டு வயிறும் கால்களும் செயலிழக்க வைக்கப்படுகிற அச்சம் கலந்த சூழலை நினைத்தோ ஒருபோதும் நான் அழவில்லை. எப்பேர்ப்பட்டாவது என் அருமைப் பிள்ளையை எனக்கு மீட்டுத் தாருங்கள் என்று கதறிக் கொண்டிருக்கிற பேரிதயத்திற்கு, என்னைக் காயப்படுத்தியாவது வயிற்றுக் கீறலின் வழியே என் பிள்ளையை எனக்குக் கொடுத்துவிடுங்கள் என்று விம்முகிற குரலிற்கு, அவர்களின் முடிவானது ஒருவிதத்தில் எனக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியது என்பதற்காக மட்டுமே அன்று முழுவதும் அழுதேன்.

ஒருபோதும் எனக்குச் சுகப்பேறு ஆகவேண்டுமென்று நான் விரும்பியதேயில்லை. என்னைப் பொருத்தவரையில் என் செல்லக் குழந்தை சுகமாய் பிரசவிக்க வேண்டும், அவ்வளவுதான். வலியில் உதடு குவித்து அழத்துவங்கிய நேரம் முதலாக என் கரம் பற்றியபடியே உடனிருக்கிற கணவரின் புரிதல் மட்டுமே போதுமென்ற மனமே அப்போது பூரணமாய் நிறைந்திருந்தது. குறுகலான திரையிடப்பட்ட பிரசவ அறையிலிருந்து நகர்த்தி குழந்தையின் தள்ளுவண்டிச் சக்கரங்களால் இயங்குகிற நாற்காலியில் அமர்த்தி நான் அறுவை அரங்கிற்குப் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டேன்.

பளிச்சென்று விளக்குகளாலும் குளூரட்டப்பட்ட அறையாலும் ததும்பியிருந்த அரங்க மேடையில் என்னுடல் கிடத்தப்பட்டு ஓரங்க பிரசவ நாடகம் நிகழ்த்தப்பட இருப்பதைப் போலவும் அங்கே முகக்கவசமும், உடல் கவசமுமாக பச்சைத் திரைக்குள் மறைந்திருக்கிற மருத்துவர்களும், செவிலியர்களும் ஏதோ அவ்வரங்கேற்றத்தைக் காண வந்த விருத்தினர்கள் போலவும் எனக்குள் நானே கற்பனை செய்து கொண்டேன். என்னை அது அச்சத்திலிருந்து அகற்றி ஒருவித இலகுத் தன்மையோடு பிரசவத்தைக் கடந்து கொள்ள உதவியாயிருந்தது. ஒருகணம் சிரித்து, மறுகணம் அந்த சிரிப்பில் சுளுக்கிட்ட அடிவயிற்றுத் தசையின் வலியிலே உதடு கடித்து துள்ளி விழுந்தேன்.

ஒருசாய்த்து படுத்து முதுகில் ஊசிமுனை நுழைந்ததும், வயிறு முதல் நுனிபாதம் வரையிலும் மரத்துப் போனதும், அவ்வண்ணமே மல்லாந்து மேசையில் ஒளிவிளக்குகளின் கீழே உடலைக் கிடத்தியபடி படுத்திருக்க, ஏதேதோ உடலில் கூசுவதைப் போலுணர்ந்து, எனக்குள்ளே என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே கண்ணைத் திறக்கச் செய்து முதன் முதலாக உனை என் கண்ணில் காட்டினார்கள். அவ்வளவே தான். அந்த ஒரு கணம் மட்டும் தான். நம் விருப்பத்தைத் தெருவிக்க கண்ணயர்ந்து காத்திருந்த மொட்டைமாடி இரவுகளில் மின்னிட்டபடி சட்டென்று மறைந்துவிடுகிற துருவ நட்சத்திரத்தைப் போல ஒரே பொழிவில் நீ அழுத சப்தமும், குருதி குழைந்து நீ காட்டிய முகமும் மட்டுமே பதிந்திருக்க மீண்டும் தூக்கநிலைக்குச் சென்று அவ்வாறே கண்ணயரத் துவங்கினேன். அதை மட்டும் தான் என் ஞாபகத்தின் அடுக்குகளில் என்னால் அப்போது நிலைநிறுத்த முடிந்திருந்தது.

மலையேற்றத்தில் இயற்கையின் ஆன்மீகத் தரிசனமாகி தன்னுடலையே மறந்த மனமும் உடலும் இலகுவாவதைப் போல உன்னை இறக்கி வைத்த அந்தக் கணத்தில் காற்றிலே உதிர்ந்த இறகைப் போலானேன். ஊற்றுத்தண்ணீரை உள்ளங்கையிலே அள்ளிக் கொள்வதைப் போல என்னுடலைப் பற்றியபடி அவசரப்பிரிவிற்கு கொண்டு சென்றார்கள். அங்கே மயக்கத்திலும் இடையிடையே விழிப்புமாக தவித்திருந்த எனக்கு அரைமணி நேர இடைவெளியில் மீண்டும் உனைக் கையில் தருவித்து கோடி தரிசனம் கொள்ளச் செய்தார்கள். அப்படியே கண்ணைமூடி கனிந்து சிரித்து மலருகிற அதே உன் முகம். உன்னை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கான எத்தனையோ காரணங்களில் சிறந்ததான ஒன்றை நான் அப்போது தேடிக் கொண்டிருந்தேன். எதுவும் என் கைகளில் சிக்குவதாயில்லை. நீ மீச்சிறு அசைவில் விரல்களைத் துலாவி என்னருகே வந்து கண்ணங்களைப் பற்றிய போது சில்லிட்ட உனது உள்ளங்கையின் குளிர்ச்சியில் அப்படியே பனிச்சிற்பமாய் உறைந்து போனேன்.

வெள்ளுடையணிந்த செவிலியர் அருகாமையில் வந்து தாய்ப்பால் புகட்டச் சொல்லி புன்னகைகளைச் சொற்களாக்கிக் கொண்டிருந்தார். என்னையே நான் மறந்த நிலையில், அத்தனை பேரின்பங்களையும் நுகர்ந்த தித்திப்பில், கண்ணீர் ததும்பிய கண்கள் பனிக்க, பற்கள் தாண்டிய எளிறுகளெல்லாம் வெளித்தெரிய நான் வெளிறிப்போய் தன்னியல்பில் சிரித்துக் கொண்டிருந்தேன். செவிலியரும் ஆறுதலாக உன்னை எப்படியெல்லாம் தாங்கிக் கொள்வது, சாய்மானத்தில் இருந்தபடி எப்படிப் பாலூட்டுவதென்றெல்லாம் அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல் எனதருகே அமர்ந்து பாலூட்டச் செய்து கனிவான ஆசிரியராக திருந்தச் செய்து கொண்டிருந்தார்.

விதையிலிருந்து துளிர்த்த பச்சிளம் சிறுதளிர் போல் வெளிப்பட்ட மஞ்சள் சீம்பாலினை நீ அருந்தி அருந்தி மறுபடியும் துயில் கொண்டபடியே இருப்பாய். அன்றெல்லாம் நீ பசித்து அழவும், உனக்குப் புகட்டிவிட்டு அதன் சிரத்தையில் நானழுவதுமாக பொழுதும் புலர்ந்து கொண்டேயிருக்கும். அடுத்தடுத்து விடிகிற நாட்களில் கசிந்துருகுகிற பாறைச்சுனையில் ஊற்றெடுக்கிற சிறுவெள்ளம் போல் மார்பின் இறுக்கமும் தளர்ந்து அதிலிருந்து தாய்ப்பால் பொங்குமாக் கடலெனப் பெருகத் துவங்கியிருப்பதை எனது மார்பில் சுருக்கிட்ட வலியால் மெல்ல மெல்ல உணரத் துவங்கினேன்.

இளவேநீர் காலமென வாழ்வில் துவங்கிவிட்ட அடுத்தடுத்த நாட்களில் சரியான உறக்கமின்றி அடிக்கடி பால் கேட்டு நீயோ அரற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தாய். ஒவ்வொரு முறையும் சராசரியாக நான்கு மணி நேரமாக தலையணைக்கு முதுகை ஒப்புவித்தபடி மார்பிலேயே உனை போட்டு என்னுடலைக் கிடத்தியிருப்பேன். அப்போதெல்லாம் மார்பிலிட்டால் நீ வெறுமனே சவைத்துக் கொண்டிருப்பாய். காம்பிலிருந்து உதடு பிரித்து எடுத்தாலோ வீரிட்டு அழுவாய். சிசேரியன் செய்யப்பட்ட எனது அடிவயிற்றிலும், நீண்ட நேரமாகவே உன்னால் சவைக்கப்பட்ட மார்பிலும் இரணமாய் துடிதுடிக்க அதை வெளிக்காட்டிக் கொள்ளாத இயலாமையில் பற்களைக் கடித்தபடியே தொடையில் வண்டு துளைத்த மகாபாரத கர்ணனனைப் போல உனக்காக அப்படியே சம்மணிட்டு அமர்ந்திருப்பேன். பகல் இரவென்று பாராமல் கடிகார முட்கள் முன்னகர்ந்தபடியே இருக்க உள்ளுக்குள்ளிருந்து உருத்திரண்டு வந்த வலியின் ஒருத்துளியென கண்ணிமைகளில் விழுவதற்காக காத்திருக்கும் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி ஒருபுறம் என்ன செய்வதென்று விளங்காமல் அப்படியே விடிய விடிய விழித்திருப்பேன்.

பிரசவித்த சிரத்தையின் வாதைகளெல்லாம் புரிந்திருந்த உன் பாட்டியும் நானுமாக வேறு வழியின்றி கால்குவளை பால் பிடிக்கும் அளவிற்கு பால்பவுடரைக் கலந்து உனது பசிக்காக அப்போது அளவோடு புகட்டினோம். அப்போதெல்லாம் உனக்குப் பசியாறுகிறதே, அதனால் கூடிய சீக்கிரத்தில் அழுகையை நீயும் நிறுத்திவிடுவாய் என்கிற உணர்வில் உவகை கொள்வதா அல்லது என்னால் உன் பசியை ஆற்ற முடியவில்லையே என்ற கண்ணீரைப் பெருக்குவதா என்பதே பிடிபடாமல் தான் அதை ஒரு இயந்திரத்தின் செய்கையைப் போல செய்து கொண்டிருப்பேன். ஆனால் நீயும்கூட அப்போது சமத்தானவளாகத்தான் இருந்தாய். பூனைகள் பாலருந்திக் கொள்வதைப் போலவும், வேர்பரப்பி தன்னை ஈரப்படுத்திக் கொள்கிற தொட்டிலிடப்பட்ட கொடியினைப் போலவும் அளவாகப் பருகிவிட்டு மடியிலேயே தூங்கிக் கொள்வாய். அன்றிலிருந்து அதற்குப் பின்பான நாட்களிலெல்லாம் உனக்கு முழுவதுமாக நான் தாய்ப்பால் மட்டுமே புகட்டியிருந்தேன்.

கல்லூரிப்பருவத்தில் நிறைசூலியாக பிரவசத்திற்கென விடுப்பெடுத்து உனைப் பெற்றெடுத்த பின்பான நாட்களில் மீண்டும் படிப்பைத் தொடருவதற்கான நெருக்கடியும் படிப்படியாக எனை அப்போதுதான் ஆட்கொள்ளத் துவங்கியிருந்தது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்ட நாட்களில் என்னால் சிறிது காலம் மட்டுமே இயல்பாய் இருக்க முடிந்தது. வீட்டிலிருந்த நாட்களில் இரவும் பகலென அறியாத அறைக்குள்ளே நீயும் நானுமாக இருந்து பாலூட்ட, பின் கண்ணயரவுமாக இருவருமே பழக்கமாகியிருந்தோம். எல்லாமே நான் பிரசவித்த முதல் ஐம்பது நாட்களுக்குத் தான். அதன் பின்பாக படிக்கச் செல்ல வேண்டிய கட்டாயம், நெருக்கடி, அவசரம். இதற்கெல்லாம் நியாயம் கற்பிப்பதற்கான காரணங்கள் என்னிடம் நிறையவே இருந்தாலும் உன்னிடம் சொல்வதற்கு மன்னிப்பு என்கிற வார்த்தை மட்டுமே அப்போது என் கைவசம் வைத்திருந்தேன், மகளே!

ஆனாலும் எக்காரணம் கொண்டும் என்னுடைய படிப்பை முன்வைத்தோ, இந்த யதார்த்தவாத வாழ்வை முன்னிட்டோ உனக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தக் குறையும் ஒரு தாயாக நான் வைத்துவிடக் கூடாதென்பதில் மிகவும் கவனமாயிருந்தேன். அதற்காகவென்று எல்லோருமே கூடிப்பேசி ஒருமுடிவிற்கு நாங்கள் வந்திருந்தோம். நான் படிப்பதற்காகச் சென்று வீடு திரும்புகிற இடைவெளிக்குரிய நேரத்தில் நீ பசித்தால் உன் வயிற்றை நிரப்புவதற்காக என் மார்பிலிருந்து பாலினை எடுத்து குளிரூட்டியில் வைத்துவிட்டுப் போவதற்கு நானோ பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதேசமயம் உன் பாட்டி அதையெடுத்து எப்படிப் புகட்ட வேண்டுமென்பதையும் மெனக்கெட்டுக் கற்றுக் கொள்ளத் துவங்கியிருந்தாள்.

அப்போதிருந்தே உனக்குத் தாய்ப்பாலை மார்பிலிருந்து அல்லாமல் பாட்டிலின் வழியாக எடுத்துப் புகட்டுவதற்கு இடையிடையே மெல்ல மெல்லப் பழக்கத் துவங்கியிருந்தோம். ஆனாலும் தாய்ப்பாலைக் கரந்தெடுத்து பாட்டில் நிரப்பி உனக்குப் புகட்டிய போது ஆரம்பத்தில் அவ்வளவாக உனக்குப் பிடிக்கவில்லை. புட்டியில் புகட்டுகிற எல்லாவற்றையும் குடித்த பின்பு மறுபடியும் காரணமில்லாமலே நீ அழுவாய். மீண்டும் மீண்டும் என் மார்பில் குடிப்பதற்கு நீ ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பாய். இதனால் படிக்கச் செல்வதற்கு முந்தைய ஒரு வாரத்திற்கு நான் அருகருகே இருந்தாலும்கூட இரண்டு மூன்று முறையென ஒரு நாளிற்கு பாட்டில் வழியே தாய்ப்பாலைப் புகட்டி உனக்குப் பழக்காட்டிக் கொண்டிருப்பேன்.

இத்தகைய தருணத்தில்தான் நான் சில உருப்படியான காரியங்களைச் செய்திருந்தேன். ஒரு தாயாக உனக்குப் பாலூட்டுவதற்குத் தேவையான பாட்டிலுக்குரிய சரியான பிளாஸ்டிக் காம்பினை அப்போதுதான் தேர்வு செய்திருந்தேன். மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பின்னாலும்கூட அங்கிருந்த செவிலியரின் தொடர்பை தொலைபேசியின் வழியே தொடர்ந்திருந்ததன் காரணமாக எனக்கு வந்த துயரங்களையெல்லாம் கடவுளிடம் கோரிக்கை வைப்பது போல அவரிடம் முறையிட்டு அதற்கான தீர்வுகளை நான் தீர்க்கமாக எடுத்துக் கொண்டிருந்தேன். அதன்படியே பாட்டில் வழி பாலருந்துகிற குழந்தைகளுக்கு மார்புக் காம்பில் அருந்துவதும், இடையிடையே பாட்டில் காம்பில் அருந்துவதும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிற காரணத்தினால், சரியான பாட்டில் காம்பைத் தேர்வு செய்வதற்கான குறிப்புகளை அவரும் கடவுளின் ஆசியைப் போல் வழங்கியிருந்தார்.

எனதன்பு மகளே! அப்போது எங்கெல்லாமோ கால்கடுக்க அலைந்து திரிந்து அனுபவப்பட்டதன் முடிவில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுகிற பிளாஸ்டிக் காம்புகளைப் பற்றி என்னால் ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடிந்தது. எல்லோருக்கும் பொருந்தும்படியாக ஜீரோ அளவில் ஒன்றும், குறைபிரசவ மழலைகளுக்கென்று இன்னொன்றுமாக இருப்பதை அப்போது தான் நானும் தெரிந்து கொண்டேன். குழந்தைகளின் பிறப்பு நிறைமாதமோ, குறைமாதமோ அதற்கேற்ப காம்பனை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வதன் வழியாக காம்பிலே குழப்பம் உண்டாவதைத் தவிர்க்க முடியுமென்கிற செவிலியரின் அறிவுரைகள் யாவும் எனக்கு ஒருவிதத்தில் பரிகாரமாய் அமைந்தது. ஆனாலும் இத்தகைய செயற்கை அம்சமுடைய காம்பினைப் பயன்படுத்துவதிலுமே எனக்குச் சில அறிவியல் விளக்கங்களை அவர் அளித்திருந்தார். இவையெல்லாம் உன்னை வளர்த்தெடுக்க எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகளாக இருந்தன. அவை ஒருவேளை இப்போது உனக்கும்கூட உபயோகமாயிருக்கும் மகளே!

குழந்தைகள் பிறந்த முதல் எட்டு வாரங்களில் தாய்ப்பாலை மார்பில் மட்டுமே போட்டுப் புகட்ட வேண்டும் என்கிற அறிவுரையை ஒரு எச்சரிக்கையாகவே எனக்கு அவர் அளித்திருந்தார். இந்த முதல் எட்டு வாரம் அல்லது அந்த இரண்டு மாத எல்லையென்பதுகூட ஒரு சராசரியான வரையறைதான். இரண்டு மாத புழக்கத்தில் குழந்தைகளும் நன்றாகவே மார்பில் காம்பைத் தேடுவது எப்படி, அதைக் கவ்விச் சவைப்பது எப்படி, எத்தகைய உழைப்பில் நமக்குப் பால் கிடைக்கும் என்பதையெல்லாம் கற்றுக் கொள்வார்களாம். அதற்குப் பின்பான நாட்களில் செயற்கை காம்பின் வழியே புகட்டுகிற போது அவர்கள் எந்த உழைப்பும் செலுத்தாமல் அப்போது பாலருந்திக் குடிப்பார்கள் அல்லவா! அச்சமயத்தில் மீண்டும் அவர்களை மார்பில் போடுகிற போது ஏற்கனவே எட்டு வாரத்தில் எத்தகைய உழைப்பைச் செலுத்த வேண்டும் என்கிற புரிதலினால் மார்புக் காம்பு மற்றும் செயற்கையான காம்பில் குடிப்பதற்கான குழப்பங்கள் ஏதுமின்றி அதற்கேற்ப பழகிக் கொள்வார்கள் என்று அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்குத் தெய்வ வாக்காய் இருந்தது.

நீ பிறந்த எட்டுவாரத்திற்குள்ளே ஒருவேளை பாட்டில் காம்பின் வழியே உனக்குத் தாய்ப்பாலினைப் புகட்டியிருந்தால் அதற்குப் பின்பாக நீ உழைப்பின்றி பாலருந்தியதன் சுலபத் தன்மையால் மறுபடியும் மார்பிற்கு வருவதற்கு உனக்குப் பிடித்தமே இல்லாமல் பாட்டில் பாலையே தொடர்ந்து குடிக்க வேண்டுமென்று அடம் பிடிக்கத் துவங்கியிருப்பாய். பின்பு வருடக்கணக்கில் பாலூட்டுவதற்காக எப்படியெல்லாம் நான் சிரமப்பட்டிருப்பேன் என்பதை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் அச்சமாகத்தான் இருக்கிறது. இப்படியான தேடல் வழியாகத் தான் மகளே, உன்னை மார்பிலிட்டும், பாட்டில் வழியாகவும் அடுத்தடுத்த காலங்களில் தாய்ப்பால் புகட்டி என்னால் வளர்த்தெடுக்க முடிந்தது.

இன்னும் கூடுதலாக இதைத் தயாரித்து விற்கிற கம்பெனிகளெல்லாம் அவர்களுக்கென்று விதித்துக் கொண்ட அளவீடுகளின்படி ஆறு மாத குழந்தைகளுக்கு, எட்டு மாத குழந்தைகளுக்கென ஒன்று.. இரண்டு.. மூன்று என்ற குறியீடுகளின் வழியே தனித்தனியே பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். பொதுவாக பிள்ளைகள் வளர வளர பாலூட்டும் அம்மாவினுடய காம்பின் அளவுகள் மட்டும் மாறுவதேயில்லை. ஆகையால் ஆரம்பத்தில் உபயோகப்படுத்திய நிறைமாத குழந்தைகளுக்கான காம்பையே கடைசிவரையிலும் பயன்படுத்துக் கொள்ள முடியும் என்று செவிலியருமே கூறியிருந்தார். ஆகையால் நான் குழந்தைகளின் வயதிற்கேற்ற காம்பினை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை துவக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.

இதையெல்லாம்கூட நாமிருவரும் ஒன்றாக அனுபவத்தின் வாயிலாகத் தான் நன்றாகக் கற்றுக் கொண்டோம். நீயும் நானுமாகத் தான் இதையெல்லாம் பரிட்சயத்துப் பார்த்துக் கொண்டோம். உனக்குத் தலைநின்று, முழங்கை ஊன்றி, சம்மணமிட்டு அமரப் பழகிய ஆறு மாத காலத்திற்குப் பின்பாக அந்தந்த வயதிற்குரிய பாட்டில் காம்பினை வாங்கி உனக்குப் பழக்காட்டிப் பார்த்தேன். ஆனாலும் அதிலிருக்கிற சற்றே பெரிதான துளையின் வழியே நிறைகிற பாலினை அருந்துவதற்கு உனக்கோ மிகவும் சிரமமாகிவிட்டது. முன்பு நிறைமாத காம்பில் நீ சாதுவாக பாலருந்திப் பழகிய பின்பாக அடுத்து நான் புகட்டிய ஆறுமாத செயற்கைக் காம்பினால் சட்டென்று பால் திரண்டு வாயில் நிறைந்து போனதை உன்னால் கைகொள்ள முடியாமல் திணறிப் போனாய். அந்தக் கணத்தில் விழுங்கவும் முடியாமல், உதப்பித் தள்ளவும் முடியாமல் புரையேறி சட்டென்று இருமத் துவங்கினாய்.

அப்போது திடுதிப்பென்று நிலைகுலைந்து போன உனை அள்ளியெடுத்து தோளிட்ட கணத்தில் தட்டிக் கொடுக்க கொடுக்க பாலினை ஆடையில் உதப்பி நீ இயல்பாய் மூச்சுவிடுகிற நிலைக்கு வரவே சற்று நேரம் பிடித்தது. ஆகையால் அந்த கணமே இத்தகைய பரிசோதனை முடிவை கைவிட்டுவிட்டு மீண்டும் பழையபடி நிறைமாத காம்பிற்கே மாறிவிட்டேன். ஆனாலும்கூட துவக்க காலத்திலிருந்து இறுதிவரையிலுமே பாட்டில் வழியாக மட்டுமே பாலருந்துகிற பிள்ளைகளுக்கு இந்த வயதிற்கேற்ற காம்பு மாற்றிக் கொள்ளுதல் என்பது பெரும்பாலும் ஒத்துப் போய் விடுவதாக பின்னாளில் செவிலியர் சொல்லிய போது எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது.

என் அறிவற்கு எட்டியவரை உனைப் பாலூட்டி வளர்த்தெடுப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் நான் முயற்சித்தபடியே இருந்தேன். உனக்கென ஒன்றைப் பெருகிற போது அதில் எதுவெல்லாம் சரி தவறென்ற வகையில் ஒவ்வொன்றையும் நுட்பமாய் பூதக்கண்ணாடியில் தேடுகிற ஆய்வாளன் போல் ஆராய்ந்து கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் தாய்ப்பால் புகட்டப் பாட்டில் பயன்படுத்துவதில் இருக்கிற ஒவ்வொரு வாசகங்களையும் கூர்ந்து கவனித்து விசாரித்தபடியே இருப்பேன். ஒரு குழந்தை போல எல்லா விசயங்களையும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு செவிலியரையும், கடைக்காரர்களையும் துரத்திக் கொண்டிருப்பேன்.

பாலெடுத்துப் புகட்டுவதன் தொடர்ச்சியாக மார்பில் பம்ப் வைத்து எடுப்பதற்கான கருவியை நான் தேடிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் பேட்டரியில் இயங்கக்கூடியதும், கையினாலே பம்ப் செய்து எடுக்கக்கூடியதுமாக இரண்டும் இருப்பதை அறிந்து அவ்விரண்டையுமே வாங்கி சௌகரியத்திற்கேற்ப பயன்படுத்திப் பார்த்தேன். ஆரம்பத்தில் என் மார்பில் கைகளைப் பயன்படுத்தி பம்ப் செய்து எடுக்கிற கருவியைத்தான் முயற்சித்துப் பார்த்தேன். அதற்கு அப்புறமாக பேட்டரியில் தானாகவே பம்ப் செய்யக்கூடியதையும் செய்து பார்த்தேன். இந்த கைகளின் வழியே பம்ப் செய்கிற கருவிகளெல்லாம் மிகக் குறைவான விலையிலேயே அச்சமயத்தில் கிடைத்தது. அதன் செயல்பாடும்கூட அற்புதமாயிருக்க, இவை சுற்றியிருக்கிற மருந்துக் கடைகளிலில் இருந்தே என்னால் பெற முடிந்தது. அதேபோல கைக்களால் பம்ப் செய்கிற போது எந்த அளவிற்கு பால் கிடைக்குமோ அதே அளவுதான் பேட்டரியில் எடுக்கிற போதும் வரக்கூடும் என்பதால் கைகளால் பம்ப் செய்வதையே அப்புறம் நான் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் உனக்கு எது பொருத்தமாயிருக்கும் என்பதை நீயேதான் முடிவு செய்தாக வேண்டும் மகளே!

பாலிறைக்கிற கருவியைத் தேடியலைந்த நாட்களில் அதிலிருக்கிற மார்புக் கிண்ணம் நம் மார்போடு பொருந்திப் போகிற அளவீட்டை வைத்தே வாங்க வேண்டுமென்று வேறு எனக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். ஆனாலும் மார்புக்கேற்ற வகையில் பொருந்திப் போகிற கிண்ணத்திலான கருவிகள் எங்குத் தேடியும் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிற மார்புக் கிண்ணங்கள் யாவும் சராசரியான அளவீடுகள் கொண்டதாகவே இருப்பதால், இவையெல்லாம் பெரும்பாலான தாய்மார்களின் மார்புக்குப் பொருத்திப் போவதேயில்லை என்று சொல்லி அவற்றைப் பரிசோதித்துப் பார்த்து வாங்குமாறு ஏற்கனவே எனக்குச் சொல்லியிருந்தார்கள்.

ஆனாலும் துவக்கத்தில் பம்பினை வாங்கி அதைப் பயன்படுத்துகிற போதுதான் எனக்கான மார்புக் கிண்ணத்தையே நான் தேர்வு செய்ய முடிந்தது. அதனைப் பயன்படுத்தும் போது எனக்கு மார்பிலே அதிக வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது. அப்படி வலிக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதற்காக விசாரித்த போது, மார்புக் கிண்ணத்தின் அளவு பொருந்தமாயில்லை என்றால் இப்படி வலியெடுக்கத்தான் செய்யும் என்பதைப் புரிந்து கொண்டேன். அதற்குப் பின்பாக அந்த ஆரம்ப அளவீட்டை வைத்தே அடுத்தடுத்த அளவுகளில் கருவிகளை வாங்கி எனக்கான மார்புக் கிண்ணத்தையும், கருவியையும் கச்சிதமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆனாலும் இப்போதெல்லாம் ஆன்லைன் கடைகளில் எல்லாவிதமான அளவீடுகளிலும் மார்புக் கிண்ணத்தோடு கருவிகள் சகஜமாய் கிடைக்கிறதே! ஆக, நீயும் பாலெடுத்து அவசர காலங்களில் உன் பிள்ளைக்குப் பாலூட்டுவதற்கான பம்பினைத் தேடிக் கொள்கிற போது இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு பொருத்தமான ஒன்றை நீயே கண்டுபிடிக்க வேண்டும் மகளே!

அதற்குப் பிறகான நாட்களில் எனக்கான பருவகாலப் படிப்பும் தொடங்கிவிட்டது. அப்போது உனைவிட்டுப் பிரிந்து எனது படிப்பிற்காக ஆறுமணி நேரம் வெளியேறிச் செல்ல வேண்டியிருந்தது. அத்தகைய ஆறு மணி நேர இடைவெளியில் நீயோ இரண்டு முதல் மூன்று முறை பாலருந்தப் பழகியிருந்தாய். ஆகையால் நீ மூன்று முறை பாலருந்த வேண்டுமென்றால் அந்த அளவிற்கு நான் பாலைக் கரந்து பாட்டிலில் நிரப்பி வைத்துவிட்ட பின்பே படிக்கச் செல்ல வேண்டியிருந்தது. என்னால் முடிந்தவரை உனக்குப் புத்தம் புதிதான பாலினையே கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன். ஆகையால் அதை நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்துக் கலன்களில் சேமித்து வைத்தெல்லாம் புகட்டவில்லை. அன்றைக்கு எந்திரத்தால் என்ன கரந்தெடுக்கப்பட்டதோ அதையே குளிரூட்டியில் வைத்து அன்றைக்குள்ளகவே உனக்குப் புகட்டிவிடுவோம். எனவே உனக்குத் தேவையான பாலினைக் கரக்க அன்றாடமும் நான் மணிக்கணக்கிலே அமர்ந்து என் மார்போடு போராட வேண்டியிருந்தது.

உனக்குத் தாய்ப்பாலெடுத்துத் தான் புகட்ட வேண்டுமென்று நான் முன்னமே முடிவு எடுத்திருந்தமையால் நீ பிறந்த முதல் நாளிலிருந்தேகூட அப்படிச் செய்ய முடியுமென்று எனக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அப்போதெல்லாம் பாலெடுக்கையில் மிகக் குறைவாகவே வெளிவரும். ஆனாலும் போகப் போக முதல் வாரத்தின் இறுதியில் மார்பில் பால்கட்டிக் கணக்கத் துவங்கியிருந்தது. இறைக்க இறைக்க ஊற்றெடுத்து வந்து கொண்டே இருந்தது. அப்போதிருந்தே என்னால் உன் தேவைக்கேற்ப பாலினையெடுத்து குளிர்சாதனப் பெட்டிலில் தேனியைப் போல சேகரிக்கவும் முடிந்தது. அப்போது சேகரித்த தாய்ப்பால் குவளையை எடுத்துக் உள்ளங்கையில் வைத்திருக்கும் போது அதன் சூடானது அப்போதுதான் பிறந்த பறவையின் அடிவயிற்றுக் கதகதப்பைப் போலவே இருக்கும். ஆனால் அதை அப்படியே எடுத்து குளிரூட்டியில் வைக்காமல் சிறிது நேரம் வெளியே காற்றாட வைத்து அந்த அறையின் வெப்பநிலைக்கு சமநிலைப்படுத்திய பின்பே வைக்க வேண்டும் என்றும் எனக்கு சொல்லப்பட்டிருந்தது.

குளிரூட்டியிலிருந்து வெளியெடுத்து பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டுமென்றாலும் அப்படியே எடுத்தவுடன் குளிரோடு உனக்குப் புகட்டிவிட முடியாது. அதன் குளுமை தீர சாதாரண தண்ணீரில் சிறிது நேரம் குவளையோடு போட்டு வைத்த பின்பே உனக்கு அதைப் புகட்டுவேன். ஆனால் இதை சூடு செய்தெல்லாம் புகட்டிவிடக் கூடாதென்ற அறிவுரை எனக்கு முக்கியமாக தரப்பட்டிருந்தது. ஒருமுறை குளிரூட்டியில் இருந்து அதை எடுத்து பச்சைத் தண்ணீரில் போட்டுவிட்டால், ஒன்று அதை அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். ஒருவேளை குழந்தை அப்போது குடிக்க மறுத்துவிட்டால் அப்படியே கழித்துவிட வேண்டியதுதான். அதனைப் பின்னாளில் பயன்படுத்திக் கொள்ளலாமென மறுபடியும் குளிரூட்டியில் கொண்டு போய் வைத்துவிடக் கூடாது.

அதேசமயம் இரண்டு மார்பிலிருந்தும் ஒரே தடவையில் தாய்ப்பால் எடுக்கிறேன் என்றால் அதை ஒன்றாகவே நான் கலந்து வைத்துக் கொள்வேன். ஆனால் அதை ஒரு குவளையில் எடுத்துக் கொண்டு போய் தான் தனியாகத்தான் குளிரூட்டியில் சேமித்துக் கொள்வேன். அதனை ஏற்கனவே குளிரூட்டியில் எடுத்து வைத்திருக்கிற பாலில் கொண்டு போய் சேர்க்கவும் முடியாது. இப்போது ஏழு மணிக்கு மாறி மாறி இரண்டு மார்பிலும் எடுத்துக் கொள்கிறேன் என்றால் அதை ஒரே குவளையில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் ஏழு மணிக்கு வலது மார்பில் எடுத்துவிட்டு மறுபடியும் ஒன்பது மணிக்கு வலதுபக்க மார்பிலேயே எடுத்தாலும்கூட இரண்டையும் தனித்தனியாகத்தான் நேரமிட்டு சேமிக்க வேண்டியிருக்கும்.

இப்படி ஒவ்வொருமுறை தாய்ப்பால் இறைக்கின்ற போதும் அதைத் தனித் தனியாகத் தான் குவளையில் தேதியிட்டு, நேரமிட்டு சேமித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதேசமயம் பிள்ளைக்கு குளிரூட்டியில் இருந்து எடுத்து பச்சைத் தண்ணிக்குள் மிதக்கவிட்டு பின் கொடுக்கப் போகிறோம் என்றால் அச்சமயத்தில் இரண்டையுமே ஒன்றாகக் கலந்து புகட்டிக் கொள்ள முடியும். இதையெல்லாம் மிக நுட்பமாகப் புரிந்து கொள்ளவற்கும், குழப்பமின்றி பொறுப்பாகச் செய்வதற்கும் அப்போதெல்லாம் நானும் மிகவும் சிரமப்பட்டேன். ஆகவே தான் நீயும் சிரமம் கொள்ளக் கூடாதென்று இதையெல்லாம் நான் சொல்கிறேன்.

ஒவ்வொருமுறை தாய்ப்பாலை மார்பில் எடுக்கிற போது அதுவெல்லாம் ஒரேஅளவிலும் இருக்காது. ஒவ்வொருமுறையும் அளவுகள் மாறியபடியே இருக்கும். வலது மார்பில் குறைவாக வந்து இடதுபக்க மார்பில் அதிகமாக வரலாம் அல்லது ஒரே மார்பில் காலையில் குறைவாக சுரந்து மாலையில் அதிகமாகச் சுரக்கலாம். இப்படி இடது-வலது, காலை-மாலை, நாளை-மறுநாள் என்று ஒவ்வொரு பொழுதும் அதன் அளவும் தன்மையும் மாறிக் கொண்டேயிருக்கும். ஆகையால் பிள்ளைக்குப் பசிதீர புகட்டுவதற்கு ஒரேமுயற்சியில் ஓரமாய் அமர்ந்து தாய்ப்பாலை எடுத்து வைத்துவிட்டு படிக்கப் போய்விடவும் முடியாது. ஒருபோதும் எனக்கு அது சாத்தியமாகவும் இல்லை. சில நேரங்களில் எனக்கு அறுபது மில்லியளவுதான் வரும். பின்பு முப்பது, பத்தி மில்லி என்ற அளவில்கூட வந்திருக்கும். அப்போது வெறுமனே பத்து மில்லிதான் வந்திருக்கிறதென்றால் அதையும்கூட தனியாக குவளையில் நேரமிட்டு சேமித்து வைத்திருப்பேன்.

பொதுவாக பாலெடுத்து வெளியே வைக்கிற போது அதை நான்கு மணி நேரம் வரையிலுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுவே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிற போது ஏழு நாட்கள் வரையிலுமே உபயோகித்துக் கொள்ளலாம். அதேசமயம் பிரீசரில் வைத்தால் ஒருவருடம் முழுக்கவும் சேமித்துக் கொள்ள முடியும். ஆகையால் பொதுவாக பயணத்தின் போது நான் மார்பிலிருந்து எடுக்கையில் நாலு மணி நேரத்திற்கே பயன்படுத்த முடியும் என்பதால் வெளியே கொண்டு செல்வதிலும் எனக்குச் சிரமம் இருந்தது. அதேசமயம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியெடுத்து சாதாரண தண்ணீரில் போட்டு இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டு வரப்பட்ட பாலினை ஒருமணி நேரத்திற்குள் புகட்டிவிட வேண்டும் என்பதையும் நான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படி ஒருவேளை தாமதமாகிய பின்பு கொடுத்தால் தாய்ப்பாலில் இருக்கிற சத்துக்களெல்லாம் வெளியேறி வெறும் தண்ணீரைக் கொடுப்பதைப் போலவே தான் இருக்கும் என்பதையும் நான் அறிந்தே வைத்திருந்தேன்.

மாதக்கணக்கில் தாய்ப்பாலை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் அதற்கென கடைகளில் விற்கப்படுகிற தாய்ப்பால் சேமிப்புப் பைகளை வாங்கி அதில் என்னுடைய தாய்ப்பலை பத்திரப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை எனக்குச் சொல்லியிருந்தார்கள். அன்றைய பாலினை அன்றைன்றைக்கே புகட்டிவிடுவதால் அதற்கான தேவை எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அதேபோல மிக முக்கியமாக தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைக்கிற கலன்களை குளிரூட்டியின் முன்பக்கமாக வைப்பது என்றில்லாமல் கொஞ்சம் உள்ளே தள்ளி வைக்கிற போது எப்போதும் குளிரூட்டப்பட்டு பத்திரமாக இருக்குமென்று எனக்கு அறிவுறுத்தியிருந்தபடியால் அதையே நான் பின்பற்றினேன். ஆகையால் என்னுடைய தாய்ப்பால் சேகரிப்பு குளிரூட்டியில் தேவையின்றி வைக்கப்படுகிற பொருட்களையெல்லாம் முற்றிலும் நான் தவிர்த்திருந்தேன்.

பாட்டிலையும் பம்பினையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டியது எனக்கு அப்போதைய முக்கிய தேவையாயிருந்தது. உனக்குத் தாய்ப்பால் சரியாகக் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், அதனால் தேவையற்ற நோய்த்தொற்று வராமல் பாதுகாப்பதற்காகவும் நான் அதிகபட்சம் மெனக்கெட வேண்டியிருந்தது. இதைச் செய்வதற்கு கொதிக்கிற தண்ணீரில் குவளையை ஐந்து நிமிடம் போட்டு எடுத்தாலே போதுமானது என்ற அறிவுரையைத் தான் நான் இறுதிவரையிலும் பின்பற்றினேன். இதற்கென்றே மைக்ரோவேவ், ஸ்டெரிலைசர் போன்ற கிருமித்தொற்றை நீக்குகிற பொருட்களெல்லாம் கடைகளில் பல வண்ணங்களில் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் வெறுமனே தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலே பிளாஸ்டிக் பாட்டிலோ, அலுமினியக் குவளையோ எதுவாக இருந்தாலும் அதனைப் போட்டு தொற்றினை நீக்கிக் கொள்ள முடியும் என்பதே எனக்கு எளிதாகத் தோன்றியது. இதைத் தொடர்ந்தே எல்லாவற்றையும் என்னால் நம்பிக்கையோடு பயன்படுத்த முடிந்தது. இத்தகைய தொற்று நீக்குகிற வழக்கத்தை ஒருநாளைக்கு ஒருமுறையாவது கட்டாயத்தின் பேரில் நான் செய்து கொண்டிருந்தேன்.

உனக்கென பாலினை எடுப்பதற்கு இரவும் பகலுமென நீ பாலருந்தி முடித்துத் துயில் கொள்கிற இடைவெளியில் தனியே அமர்ந்து மூன்று நான்கு முறைகள் மார்பைப் பிழிந்து பாலை இறைத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறையிலும் நான் முப்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை முதுகுவலியுடனும், கால் தசைப்பிடிப்புடனும் அமர்ந்து இதைச் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொருமுறையும் பாலெடுக்கையில் ஒரே அளவில் எனக்குப் பால் வராது. சில வேளைகளில் பிள்ளைக்கென கையளவு மட்டுமே சுரக்க முடிந்திருந்த மார்பைத் திட்டிக் கோபித்தபடி தன்னந்தனியே அழுது கொண்டிருப்பேன். எனக்குப் பால் இல்லியே என்கிற ஏக்கம் முழுவதுமே அப்போது என்னைச் சூழ்ந்திருக்கும். என் பிள்ளைக்கான பாலை என்னால் கொடுக்க முடியலையே என்கிற குற்றவுணர்வு எனை நோகடிக்கும். அப்போதெல்லாம் நீ பால் கேட்டு அழுவாயே என்கிற அச்சத்தில் உன் பசிக்கான அழுகைக்குரலைக் கேட்பதற்கே நடுநடுங்கிக் கொண்டிருப்பேன்.

இத்தகைய சமயத்தில் எல்லாம் ஒருவேளை பம்ப் சரியில்லையோ என்றபடி வேறொன்றை மாற்றிக் கொண்டிருப்பேன். இப்படி மூன்று முறைக்கும் மேலாகவே இதைச் செய்திருப்பேன். ஆனால் இப்படித்தான் இயல்பாகவே பாலும் சுரக்கும் என்பதைப் புரிந்து கொண்ட பின்பு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் தேடிச் செய்யத் துவங்கினேன். தாய்ப்பால் சுரக்குமென்று எதையெல்லாம் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தினார்களோ அதையெல்லாம் எனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்கிற சுயவிருப்பத்தைத் தாண்டி எடுத்துக் கொண்டேன். கடைகளில் விற்கிற சத்துமாவுகள், பூண்டு, கருவாடு என்கிற எதையும் நான் முயற்சித்துப் பார்க்காமல் இருந்ததில்லை.

என் முயற்சியின் சர்வநிவாரணியாக பால் சுரப்பின் அளவும் தன்மையும் மாறியதை என் மார்பின் கணத்தாலே உணர முடிந்தது. இதை நான் பாட்டிலின் வழியே பாலினை எடுக்கிற போதெல்லாம் என் கண்ணாரப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்துப் போனேன். அந்த சமயத்தில் ஒருநாள் முப்பது மில்லியளவு கரந்து கால் பாட்டில் வரும், மறுநாள் ஒரே பம்பில் நூற்றியிருபது மில்லி வரையிலும் வந்து பாட்டில் நிறையும். அப்போதெல்லாம் பால் நிறையச் சுரந்தால் மகிழ்வாகவும், குறைவாகச் சுரந்தால் அழுவதுமாக உணர்வுகளால் கொந்தளித்தபடியே இருப்பேன். என் உணர்வுகளை என்னால் கட்டுக்குள் கொண்டு வரவியலாத துன்பத்தில் அப்போது ஆழ்ந்திருந்தேன்.

ஒருவேளை தாய்ப்பால் குறைவாகச் சுரந்திருந்தால், ″உனக்குச் சரியாக மார்பிலிட்டு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே, நிறைவாக உனக்குப் பாலூட்ட நிறைய வேண்டுமே, நீ பசித்திருந்து வீட்டிலிருக்க நானோ உனை விட்டுப் பிரிந்து படிக்க வந்திருக்க கூடாதே, நான் சரியான அம்மாவாக இல்லியே″ என்றெல்லாம் புலம்பித் தவித்து இரவெல்லாம் அழுதபடி என்னையே நான் சித்திரவதை செய்து கொண்டிருப்பேன். ஒருகட்டத்தில் அழுதழுதே என் கண்ணீர்ப்பையும் வற்றிவிடவே இதையெல்லாம் இயல்பாகக் கடப்பதற்கு என்னையே நான் ஒருவிதத்தில் பழக்கிக் கொண்டேன். நீயும்கூட ஒரிடத்தில் எனது பிரச்சனையை உன்னளவில் புரிந்து கொள்ளத் துவங்கியிருந்தாய். அக்கணத்திலிருந்து இப்போது வரையிலும் உனக்கென வாழ்ந்ததைத் தவிர வேறெதையுமே நான் எனக்கென செய்ததேயில்லை மகளே!

உனக்குப் பாலிறைத்து பாட்டில் வைத்தே புகட்டுவதால் அதனது அளவுகள் யாவும் கண்ணாடியின் வழியே தெரிகிற போது எனக்கு எப்போது, எவ்வளவு தாய்ப்பால் சுரக்கிறதென்பதைக் கத்திசமாக கணிக்க முடிந்திருந்தது. நீயும் வளர்ந்து, உட்கார்ந்து, கையூன்றிப் பழகத் துவங்குற பொழுதில் எனக்கும் மார்பில் பால் சுரப்பது தணிந்து கொஞ்சமாக குறையத் துவங்கியது. அதற்கு நேரெதிர் திசையில் அப்போது தான் நீயும் விரும்பிக் குடிப்பது அதிகமாயிருந்தது. ஆகையால் ஆறு மாதகாலத்திற்குப் பின்பாக வருகிற இலையுதிர்கால பருவம் போல உனக்குப் போதாமையிருந்த உணவிற்காக ஒருமுறை தாய்ப்பாலும் மறுமுறை மாற்று உணவுமாக கொடுத்துப் பழக்கத் துவங்கினேன். அதிலிருந்து நானில்லாத பெரும்பாலான சமயங்களில் உனக்குச் செரிமானமாகிற மசித்த உணவாகப் பிசைந்து ஊட்ட பாட்டியும் முயன்றபடி இருந்தாள். அதேசமயம் இரவு நேரங்களில் முழுவதுமாக எனது மார்பிலிட்ட தாய்ப்பாலினால் உன் வயிற்றை நிரப்பியிருந்தேன். எவ்வழியிலாவது உனக்கான தாய்ப்பாலை நான் எப்பேர்ப்பட்டாவது மீட்டுக் கொடுத்துவிட வேண்டுமென்று அன்றாடம் நான் போராடிக் கொண்டுதான் இருந்தேன்.

பிரியத்திற்குரிய மகளே! நீயுமே இப்போது என்னைப் போலொரு அழகான பெண் தேவதையைப் பெற்றெடுத்திருக்கிறாய். மார்பில் பால் சுரந்து உன் பிள்ளைக்கு வயிறு நிறைந்த பின்னாலும்கூட பல நேரங்களில் உனக்கு மார்பிலே பால் நிறைந்து வரவும்கூடும். அதையெல்லாம் நீ அசந்து தூங்குகிற சமயத்தில் குழந்தை அழுகிற போது புகட்டிக் கொள்வதற்காக மார்பிலிருந்து எடுத்துச் சேமிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். எப்போதேனும் சிறுவேலையென்று வெளியே செல்கிற போது பசிக்குப் புகட்டுவதற்கு நீ பாலெட்டு தேக்கி வைத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம் அல்லவா! அப்போதெல்லாம் இத்தகைய முயற்சிகள் உனக்குப் பலனளிக்கும் மகளே! ஆகையால் நீயும் மார்பிலிருந்து பாலெடுத்து வைத்துப் புகட்டுவதற்காக இனிமேல் பயிற்சியெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பாட்டில் குடுவையில் பால் நிறைப்பதற்கு நீ அமருகிற போது நாளொன்றுக்கு நான்கு முறை பாலெடுக்கிறாய் என்றால் ஒருமுறைக்கு அரைமணி நேரம் வீதமாக குறைந்தபட்சம் நீ இரண்டு மணி நேரங்கள் அப்படியே அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் பாலிறைக்கிற தூண்டல் உருவாகி பாட்டிலுக்கு பாலும் நிரம்ப ஆரம்பிக்கும். அப்படி அமருகிற போது முதுகிலே தசைபிடித்துக் கொண்டு வேதனை எடுக்கும். அப்போது சிசேரியன் செய்தவளாக இருக்கிற பட்சத்தில் அமருவதற்கே அதிகச் சிரமப்பட வேண்டியிருக்கும். மார்பெல்லாம் வின்னென்று வலிக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் மகளே இதையெல்லாம் நீயும் செய்ய வேண்டியிருக்கும்.

அப்படி மார்பிலிருந்து பாலெடுத்துவிட்டால் அடுத்ததாக மீண்டும் எப்போது பால் வருமோ அல்லது வராமலே போய்விடுமோ என்றெல்லாம்கூட பயம் வந்து தொற்றிக் கொள்ளும். ஒருவேளை அச்சமயம் பார்த்து பிள்ளை அழுதால் எப்படி மார்பில் போடுவது என்கிற குழப்பமும் வரலாம். அப்போது இதற்கெல்லாம் தீர்வாக பிள்ளையை மார்பிலிட்டு அமர்த்திவிட்டு அதற்குப் பின்னால் மீதமிருக்கிற பாலினைக் கறந்து சேமித்துக் கொள்ளலாம். மேலும் பிள்ளை ஒருபக்கம் பாலருந்துகிறாள் என்றால் இன்னொரு மார்பிலும் அதன் தூண்டலால் பால் நிறைந்திருக்கும் போது அந்தப் பக்கத்தின் வழியே பாட்டிலில் பாலினை எடுத்துக் கொள்ளலாம். அப்போது ஒருபக்கம் பிள்ளை குடிக்க குடிக்க இன்னொரு பக்கமும் தொடர்ந்து பால் நிறைந்து கொண்டே தான் இருக்கும். ஒருவேளை உனக்கு ஒரே பம்பிலேயே நிறைய பால் வேண்டுமென்றால் இரண்டு பக்கத்திலிருந்தும் ஒரே சமயத்தில் பம்ப் செய்யலாம். அவ்வாறு செய்கையில் பாலும் அதிகமாகவே சுரக்கும்.

ஒன்றை மட்டும் நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் மகளே! அருகாமைக் கடைகளில் இருந்து பால்பவுடரை வாங்கி வந்து பாட்டில் கலந்து ஒரு நிமிடத்தில் குழந்தைக்குப் புகட்டிவிடலாம். ஆனால் மார்பு வலிக்க, அமர்ந்த நிலையில் கால் தசைபிடிக்கிற வேதனையும் தாண்டி, வருகிற குறைவான பாலுக்கும் சோர்ந்துவிடாமல், பலமுறை உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து பிள்ளைக்குக் கவனமாக ஊட்டி வளர்ப்பதென்று மலையை உடைப்பதைவிட இன்னும் கடினமான வேலை. ஆகையால் என்னவானாலும் சரி, எப்பேர்ப்பட்ட நிலை வந்தாலும் சரி, தாய்ப்பாலைத் தவிர வேறெதையுமே தரமாட்டேன் என்கிற வைராக்கியத்தினால் நீ இருந்தாலொழிய இதெல்லாம் சாத்தியமே ஆகாது மகளே!

உன் தாய்ப்பாலை எடுத்து பன்னிரெண்டு மாதத்திற்குமாக நீ பிள்ளைக்குப் புகட்டுகிறாய் என்றால் இவ்வுலகில் நீ செய்தற்கரிய மகத்தான வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பாலினை எடுக்கையில் உன் மார்பின் தட்டையான காம்பில் விரிசல் விழும், பிள்ளை கடித்து காம்பெல்லாம் வலியெடுக்கும், பம்ப் செய்கிற போது உண்டாகிற வேதனையில் ஏன் தான் இதையெல்லாம் செய்கிறோமோ என்றெல்லாம் தோன்றும். ஆனால் இதையெல்லாம் தாண்டித் தான் நீயும் இதைச் செய்ய வேண்டியதிருக்கும். பறவை எச்சமிட்டு வளருகிற எந்த அரசமரமும் தன் சௌகரியமான இடத்திற்காக வளராமல் இருந்ததில்லை. பாறை விரிசல்கள், தூர்ந்த கிணற்றடிகள், மலையிடுக்குள் என்று அதன் விருட்சத்தைப் போலான மனதையே நீயும் கொண்டிருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன் மகளே!

இத்தகைய தருணங்களில் பால் வரவில்லை என்றால் ஏற்படுகிற மன அழுத்தத்தையுமே நீ சமாளிக்க வேண்டியதிருக்கும். பிள்ளையை நீ மார்பிலிட்டு புகட்டுகிறவரையிலும் எந்தப் பிரச்சனையுமில்லை. அப்போதெல்லாம் உனக்கு மார்பிலே எவ்வளவு பால் சுரக்கிறது, பிள்ளை எவ்வளவு பாலருந்துகிறார்கள் என்கிற எந்தச் சிந்தனையும் எழாது. ஆனால் பாட்டிலில் கறந்தெடுக்கிற போது மட்டும் வெளிப்படையாகவே மார்பிலிருக்கிற பால் பாட்டில் வழியே வந்து நமக்குப் புலனாகிற போது இவ்ளோ தான் நமக்கு மார்பில் பால் சுரக்கிறதா? இது மட்டுமே பிள்ளைக்கு எப்படிப் பத்தும்? போன்ற எண்ணங்களெல்லாம் தோன்ற ஆரம்பித்துவிடும். இச்சமயத்தில் நம் மீதே நம்பிக்கையை நாம் இழந்துவிடுவோம்.

ஆனாலும் இதுபோன்ற மனத்தடைகளிலிருந்து மீண்டு வருவதற்கு சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் நிறையவே பெண்கள் குழுக்கள் இருக்கின்றன. அத்தகைய குழுக்களில் நாம் சேர்கிற போது அங்கிருக்கிற நம்மைப் போன்ற தாய்மார்களே நமக்கு நிறைய வழிகாட்டுவார்கள். அங்கே உரையாடுவதற்கும், கேள்விகள் கேட்பதற்கும் உனக்குத் தயக்கம் இருந்தாலும்கூட ஒவ்வொரு தாய்மார்களும் பதிவிடுகிற அவர்களது அனுபவங்களையெல்லாம் நீ படிக்கிற போது அதிலிருந்தே உனக்கான பதிலை நீ பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனாலும் தாய்ப்பாலூட்டுவதைப் பற்றிப் பேசுகிற மருத்துவமனைகளில் தாய்ப்பாலை மார்பிலிருந்து எடுத்துப் புகட்டுவதைப் பற்றியெல்லாம் சொல்லித் தருவதில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப தாய்ப்பாலை முடிந்தவரையில் கொடுப்பதற்கான மாற்றுவழியை இன்னமும் மருத்துவமனைகளில் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் உனக்குப் பாலூட்ட நான் எடுத்துக் கொண்ட சிரத்தையின் விளைவாகத் தான் சொல்கிறேன் மகளே!

பிரசவ வலியில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிற போது அங்கே ″பிரஸ்ட் பீடிங் பிரண்ட்லி ஹாஸ்பிட்டல்″ என்று முன்னறையிலே குறிப்பிட்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். அங்கே அவர்களாகவே வந்து அப்போதே உனை முகம் காணச் செய்தது, அருகாமையிலே இருக்க வைத்தது, அரை மணி நேரத்திற்குள்ளாகவே பாலூட்ட வைத்தது என்று எல்லா தருணங்களிலும் உதவியாக இருந்தார்கள். ஆனால் இத்தகைய அர்ப்பணிப்பான மருத்துவர்களும், செவிலியர்களும் எல்லா இடங்களிலும் இருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லையே மகளே! பெரும்பாலும் மருத்துவமனைகளிலேயே பால் பவுடரை பரிந்துரை செய்கிற வழக்கம் அதிகரித்த வண்ணமாயிருக்க இதையெல்லாம் நீ நன்றாக மனதில் வைத்தக் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும் தாய்ப்பால் ஆலோசகர் என்று தனித்த படிப்புகள், அதற்கென படித்தவர்கள், வேலை வாய்ப்புகள் எல்லாம் நிறையவே இருக்கின்றன. ஆனால் நாமிருக்கிற கிராமத்தில் இருந்தே அவர்களை அணுகுவதோ, அதன் மூலமாக ஆலோசனை பெறுவதோ உனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவர்களிடமெல்லாம் மெத்த படித்தவர்கள், பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே போய் பார்க்கிற அளவிற்கான சூழலில் தானே இப்போது இருக்கிறது.

ஒருவேளை இத்தகைய தாய்ப்பால் ஆலோசகர்கள் நீ பிரசவத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்திருந்தால்கூட உனக்கும் உதவியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அங்கே ஆறுமாதகால பயிற்சியில் படித்த மயக்க மருந்து மருத்துவர்கள், பிரசவிக்கிற மருத்துவர்கள் இருக்கையில் இப்படித் தாய்ப்பால் ஆலோசகர்களுக்கென்றும் பயிற்சியளித்த மருத்துவர்களோ செவிலியர்களோ பணியமர்த்தினால் இன்னும் நன்றாகத்தான் இருக்கும் என்று அங்கேயிருக்கிற மருத்துவர்கள் பேசுவதையும்கூட நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் இனிமேல் மாறிவிடும் என்று நீயும் நானுமே நம்புவோம் மகளே!

டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 16 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 16 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
16. தாய்ப்பாலூட்டுவதை எப்போது நிறுத்துவது

பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வளர வளர பால்குடியை எப்படி மறக்கடிப்பது என்கிற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் சாலையோர கடை நிறுத்தங்களில் தாய்மடியை முட்டி முட்டி மண்டியிட்டு பாலருந்திக் கொண்டிருக்கும் வளர்ந்த ஆட்டுக்குட்டிகளையும், பசுவின் கன்றுகளையும் பற்றிச் சிந்திக்கிற போது நாம் மட்டும் ஏன் குழந்தைக்குப் பாலூட்டுவதைக்கூட சிரமம் தரக்கூடிய மகப்பேற்றின் ஓர் அங்கமாக பார்க்கத் துவங்கிவிட்டோம் என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.

இச்சமயத்தில் இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பாக நம் பால்யகாலம் எழுப்புகிற புதிர் கேள்விக்கு விடை தேடியாக வேண்டும். கிராமத்துத் திடலில் புழுதி பறக்க ஓடியாடித் திரிந்த பால்ய கால நினைவுகளில் நம் வயதையும் மீறிய பிள்ளைகள் பள்ளிகளில், தெருக்களில் முன்பற்கள் துருத்தியபடியிருக்க, விரல் சுவைத்தபடியே திரிவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருப்போம். ஆனால் இப்போது ஏன் நம்மால் விரல் சுவைத்துத் திரிகிற பிள்ளைகளை வீடுகளில், சாலைகளில், பள்ளிகளில் எங்குமே நாம் காண முடிவதேயில்லை என்பதைப் பற்றி நாம் எப்போதாவது அக்கறையுடன் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

சட்டென்று நம்மோடு பால்ய காலங்களில் விதவிதமாக விரலைச் சவைத்தபடி சுற்றித் திரிந்த, அப்படி விரலைச் சவைத்தபடி திரிவதால் கேலி கிண்டலுக்கு ஆளாகிற, அப்படி எந்த விமர்சனத்திற்கும் தலைசாய்க்காமல் தன்போக்கில் விரலை உதட்டிற்குள் திணித்து மேற்சட்டையில் எச்சில் வடித்தபடி தெருக்கிளில் உலாவுகிற, அப்படித் திரிகிற பிள்ளையின் வாயிலிருந்து விரலை விடுவிப்பதற்காக வற்றல், மிளகாய், குமட்டிக்காய் என்று கசப்பு, உரப்பு என விரல்களில் தடவித் தடவி அப்பழக்கத்தைப் போக்க தெருதெருவாகத் துரத்துகிற, அவ்வாறு துரத்திப் பிடிக்க ஊர்ச் சிறுவர்கள் பெரியவர்களென திரண்டு அதனையே ஒரு திருவிழாக்கோலமாக ஆக்கிவிடுகிற நிகழ்வுகளெல்லாம் நம் மனக்கண் முன்னே வந்து போகிறதல்லவா!

ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைகளும் சமத்தாக பள்ளியில் வாத்தியார் விரலை அமைதி காக்கச் செய்கிற அரிதான பொழுதைத் தவிர கைகள் வாயிற்குச் செல்வதேயில்லை. அப்படியே தப்பித்தவறி விரல் வாயருகே சென்றாலும்கூட ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி, சீ..! அழுக்கு என்று கைகளைக் கழுவிக் கழுவி கைரேகை தீர சுத்தம் செய்கிற பெற்றோர்களும் இப்போது நிறைய வந்துவிட்டார்கள். சரி, அதுபோகட்டும். பிள்ளைகள் இப்போது விரல் சுவைப்பதேயில்லை என்பதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டால் எப்போது பிள்ளைக்கு பால்குடி மறக்கடிக்கலாம் என்பதற்கான தேடலுக்கு விடையும் கிடைத்துவிடும்.

பெண் திருமணமாகி குழந்தைப்பேறு பெறுவதென்பது எப்படி அவ்வளவு முக்கியத்துவத்தோடு இச்சமூம் முன்பு பார்த்ததோ அதேயளவு இடத்தை பாலூட்டுவதற்குமே கொடுத்திருந்தது. அப்போது பிள்ளைக்குப் பாலூட்டுவதென்பது பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. கருவில் வளருகிற பிள்ளையை இம்மாதம் வரையிலும் வளர்ந்தால் போதுமென்று பாதியிலேயே பிரசவித்து வெளியே எடுக்க முடியுமா? அதேபோல மார்பிலிட்டு பாலூட்டுகிற காலத்திலும் இவ்வயது வரையிலும் பாலூட்டினால் போதுமென்று நிறுத்தவும் முடியாது, கூடாது.

அப்போதெல்லாம் பிள்ளைக்கு ஐந்து வயது, ஆறு வயது வரையிலும் பாலூட்டுவது என்பதெல்லாம் மிகவும் சர்வ சாதாரணமாக பார்க்கப்பட்டது. பிள்ளைகள் ஓடியாடி விளையாடித் திரிகிற போது தெருவில் புழுதியில் உழன்றபடியே வந்து அம்மாவின் மடியில் உட்கார்ந்து பாலருந்திவிட்டுப் போய் மறுபடியும் விளையாடுகிற ஒன்றை வெகு இயல்பாகவே அப்போதெல்லாம் காண முடியும்.

அதாவது பிள்ளைகளுக்கு நம் தாயின் மார்பிலே பாலருந்திக் குடிக்கிறோம் என்கிற தன்னுணர்வு பெறுகிற வயதைக் கடந்தும் அப்போது தாய்மார்கள் பாலூட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவர்கள் மார்பின் காம்பைக் கவ்விச் சுவைத்த பழக்கத்தை சுலபத்தில் விட முடிவதில்லை. ஆகையால் காம்பைப் போலவே தன்மையுடைய விரல்களை வாயில் சவைத்தபடியே அதன் நினைவில் பாலூட்டுகிற மற்ற கணங்களில் திரிந்து கொண்டிருப்பர். ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைக்கு மார்பில் பாலூட்டுகிற உணர்ந்து நினைவில் பதிவதற்கு முன்பாகவே புட்டிப்பாலிற்கும் இணை உணவிற்கும் குழந்தைகள் பழக்கமாகிற காரணத்தினால் இப்போது வயதாகிய பின்னரும்கூட விரல் சூப்பிக் கொண்டிருக்கிற, அதனால் தெத்துப்பற்களோடு திரிகிற பிள்ளைகளை நாம் பார்க்க முடிவதில்லை.

ஆக, தாய்ப்பாலை நாம் முழுவதுமாக குழந்தைகளுக்குப் புகட்டுவதில்லை என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறதல்லவா! ″என்னால் இனியும் உடல் நோக தாய்ப்பால் புகட்ட முடியாது, நான் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் புட்டிப்பாலுக்குப் பழக்கப் போகிறேன், பிள்ளையை உடனிருந்து பார்த்துக் கொள்ள யாருமில்லை என்பதால் பால்குடியை நிறுத்தப் போகிறேன், வீட்டு வேலைகளை என்னால் சரிவர கவனிக்க முடியவில்லை என்பதாலே இதைச் செய்ய வேண்டியதிருக்கிறது, சீக்கிரமாக பால்குடியை மறக்கடிக்காவிட்டால் பின்னாளில் நிறுத்துவது கடினம்″ என்ற எத்தனையோ நமக்கான காரணங்களைச் சொல்லி குழந்தைக்கான தாய்ப்பாலை மறுப்பது என்பதும்கூட ஒரு குற்றம்தான், அடிப்படி மனித உரிமை மீறல் தான்.

எனக்கு வேண்டிய வரையிலும் தாய்ப்பாலைக் குடித்துக் கொள்வேன்! என்பது ஒரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதிலே பிள்ளை பெற்ற காரணத்தை வைத்துக்கூட ஒரு தாய் பால்கூடி மறக்கடிப்பதை முடிவு செய்ய முடியாது. தாய்ப்பால் தனக்கு இனி வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் குழந்தை மட்டுமே. ஆகையால் எப்போது தாய்ப்பால் நிறுத்துவது, எப்படி தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்துவது என்பதெல்லாம் நமது கையிலே ஒன்றும் இல்லை.

பொதுவாக பிள்ளைகள் வளர்ந்து வருகிற சமயத்தில் தாய்ப்பாலூட்டுகிற நம் சிரமங்களைச் சொல்லி அவர்களுடன் உரையாடுகிற போது தாங்களாகவே மாற்று உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று குழந்தைகள் ஒப்புக் கொள்வதாக பல இடங்களில் தாய்மார்கள் சொல்லி வைத்திருப்பதுகூட ஒருவேளை நமக்கு உதவியாயிருக்கும்.

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 14 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 14 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் – 11
சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களுக்காக…

அன்புக்குரிய தாய்மார்களே! இப்போது நாம் பிரசவ அறையின் முதலாம் வகுப்பிலிருந்து தேர்வாகி இரண்டாம் வகுப்பறையாகிய வார்டுக்கு வந்துவிட்டு எத்தனையோ தாய்ப்பால் பால பாடங்களைப் படித்துவிட்டோம். ஆனால் சிசேரியன் செய்து கொண்டவர்களுக்கு முதலாம் வகுப்பறையில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது. அறுவை அரங்கின் அவசரநிலைச் சூழலில் மார்பில் போடுவது பற்றிய குழப்பமான போக்கு நிகழும் போதே அங்கு பிறந்தவுடன் தொப்புள்கொடி துண்டிப்பதற்கு இடைப்பட்ட முதல் தாய்ப்பாலூட்டுவதே கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனாலும் படிப்பில் படுசுட்டியான நம் பிள்ளைகளை ஒரு வகுப்பு புரமோசன் செய்து பள்ளியில் சேர்ப்பதைப் போல உங்களையும் பிள்ளையும் சேர்த்து நேரடியாகவே இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிடுவோம், சரியா?

சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களெல்லாம் கூடுதல் ஆர்வத்துடனும் கவனத்துடனும் வகுப்பில் படிக்க வேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றி தீவிரமாக கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. சிசேரியன் செய்யப்பட்ட அடிவயிற்றின் வலி, படுக்கையிலிருந்து எழுந்து பால் கொடுக்க முடியாத அசௌகரியம், பால் புகட்டும் போது வயிற்றில் எட்டி உதைக்கிற பிள்ளைகள், அறுவை சிகிச்சை செய்த மயக்கம், சீம்பால் புகட்டியிருக்க வேண்டிய துவக்க காலத்தின் தாமதம், அவசரப்பிரிவில் அனுமதிக்கப்படுகிற அம்மாவுடன் அடிக்கடி பாலருந்த தங்க வைக்கப்படாத பச்சிளம் குழந்தைகளின் சூழலென அத்தனை வேகத்தடைகளையும் தாண்டித்தான் ஒரு அம்மாவும் தடகள வீராங்கனையைப் போல பிள்ளைக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டியிருக்கிறது.

ஆனாலும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே! சிசேரிரியன் செய்தவர்களுக்கென்றே இருக்கிற தாய்ப்பாலூட்டும் முறைகளைத் தனியே கற்றுத் தேர்ந்து நம் பிள்ளையை கூடிய சீக்கிரத்திலேயே அரவணைத்துக் கொள்ள முடியும். ஆரம்பத்தில் பிள்ளையைத் தாங்கி பிடித்துக் கொள்ள முடியாத, அடிவயிற்றில் தையலிட்ட இடத்தில் பிள்ளைகள் உதைத்துவிடாத பிடிமானத்தில் அவர்களுக்குப் பாலூட்டுவதற்கு உடனிருப்பவர்களின் உதவி தேவையாயிருக்கும். அவர்கள் தான் நமக்குப் பதிலாக பிள்ளையைக் கையில் தூக்கிக் கொண்டு வந்து நம் மார்பருகே வைத்து பாலருந்த வைக்க வேண்டியிருக்கும். இப்படி அடிக்கடி அழுகிற பிள்ளைக்காக இரண்டு மணி நேரத்திற்கொருமுறை எழுந்து போய் பிள்ளையைத் தூக்கி பசியாற்ற வேண்டியிருக்கிறதே என்று உடனிருப்பவர்கள் அசௌகரியப்பட்டுவிடக் கூடாது என்பதும் இங்கே மிக மிக முக்கியமானது. ஏனென்றால் தாய்ப்பால் தொடர்பாக நமக்கு நாமே சலுகைகளை கொடுத்துக் கொள்கிற ஒவ்வொரு பொழுதும் நம் பிள்ளையின் வளர்ச்சி தொடர்பாக, ஆரோக்கியம் தொடர்பான விசயங்களில் இடையூறை நாமே ஏறபடுத்திவிட முடியுமே!

நாம் ஏற்கனவே சொன்னபடி கால்பந்து முறையைப் பயன்படுத்தி தாய்மார்கள் எவ்வளவு சீக்கிரமாக தாங்களே பிள்ளையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தாய்ப்பால் புகட்ட முடியுமோ அவ்வளவு விரைவிலே முயற்சி செய்து அவர்களுக்குப் பசியாற்றலாம். இதனால் முழுவதுமான தன்னம்பிக்கையுடன் தாய்ப்பால் தொடர்பான எவ்வித எதிர்கருத்துமில்லாமல் தொடர்ந்து பிள்ளைக்கு தாய்ப்பால் கிடைக்க வழிவகுக்கிறது.

அதேசமயம் சிசேரியன் சிகிச்சையின் போது அடிவயிற்றில் அறுவை செய்வதற்கு வயிற்றுப் பகுதி மற்றும் கால்கள் மரத்துப் போகிற அளவில் மட்டுமே மயக்க மருந்தின் அளவைச் செலுத்தியிருப்பார்கள். அப்போது நமது நினைவில் எந்த குழறுபடியோ இல்லாமல் சுற்றி நடக்கிற விசயங்கள் பற்றிய தெளிவோடு தான் அறுவை அரங்கிலே படுத்திருப்போம். அப்போது மருத்துவர்கள் பேசுவது உள்ளிட்ட, குழந்தை பிறந்து வெளிவந்த உடனே அவர்களைப் பார்ப்பது உள்ளிட்டவை எல்லாத்தையுமே நாம் முழு தன்னுணர்வோடு தான் அங்கே புரிந்து கொள்ள முடியும். இதனால் மயக்க மருந்து கொடுத்த பின்னால் மயக்கத்தோடு நாங்கள் எப்படி பாலூட்டுவது என்றெல்லாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இத்தகைய மயக்க மருந்தினால் வயிற்றுப்பக்கம் மற்றும் கால்கள் தான் மரத்துப் போயிருக்குமே தவிர நாம் முழுவதும் சுயநினைவோடுதான் இருப்போம் என்பதையும் மனதிலே நன்றாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல மயக்க மருந்து கொடுத்து நாம் தெளிவுற்று எழுந்துவிட்ட கணமே உடலிலிருந்து அம்மருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கும். மருந்து வெளியேறிவிட்டதா என்பதற்கு நம்முடைய கால்விரல்களை அசைத்துப் பார்ப்பதை வைத்தே, அடிவயிற்றில் பளிச்சென்று தோன்றுகிற குத்தலான வலியினை வைத்தே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படியிருக்க பாலருந்துகிற குழந்தைக்குத் தாய்ப்பால் வழியே மயக்க மருந்தும் போய்விடும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு தாய்ப்பால் புகட்டுவதைத் தள்ளிப் போட்டுவிடக்கூடாது என்பதையும் நாம் மனதிலே புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் வலி மருந்துகளால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பான காலங்களில் தாய்மார்கள் பீடிக்கப்பட்டிருக்கும் போது அத்தகைய மருந்தின் மீச்சிறு விளைவால் பிள்ளைகள் அடிக்கடி தூங்கிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பிருப்பதால் குழந்தைகள் எழுந்தவுடனே பாலருந்த வைக்கலாம் என்றில்லாமல், இரண்டு மணிநேர இடைவெளியில் அவர்களை எழுப்பி நாமே பாலருந்த வைக்க வேண்டியிருக்கும் என்கிற விசயத்தில் நாம் தெளிவாகிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக மகப்பேறு மருத்துவமனைகளில் சிசேரியன் செய்யப்பட்ட தாய்மார்களை அவசரச் சிகிச்சையின் கூடுதல் கவனிப்பிற்காக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தங்க வைத்துவிடுவதால் அவர்களை குழந்தையிடமிருந்து இயல்பாக பிரித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அந்த முதல் 24 மணி நேரத்தில் தான் குழந்தைக்கு அதிகமாக அம்மாவின் நெருக்கம் தேவைப்படும், அப்போதுதான் சீம்பால் சுரந்து கொடுக்க வேண்டியிருக்கும், தாய்ப்பால் அதிகம் சுரக்க வைப்பதற்கான தூண்டுதலைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் அடிக்கடி பசிக்குப் பால் கேட்டழுகிற பிள்ளைக்கு இரண்டு மணி நேரத்திற்கொருமுறை அம்மாவின் அருகாமை கட்டாயம் தேவையாயிருக்கும்.

ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் அம்மாவுடன் அவசரப்பிரிவில் குழந்தையை அனுமதிப்பதில்லை. அவசரப்பிரிவில் தங்கியிருக்கிற மற்ற நோயாளிகளால் பிள்ளைக்கு நோய்த் தொற்றாகிவிடும் என்று அனுமதிக்க மறுத்துவிடுகிறார்கள். ஆனால் இப்படியான பிரச்சனைகள் மற்ற சுவாசக்கோளாறு உள்ள நோயாளிகளோடு பிள்ளை பெற்ற தாய்மார்களையும் ஒரேசேர அனுமதிக்கும் போதுதான் ஏற்படுமே தவிர, மகப்பேறு சிகிச்சை பெற்றவர்களுக்கென்றே தனித்து இருக்கிற அவசரச் சிகிச்சைப் பிரிவில் இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பென்பது மிகவும் குறைவுதான். அதே சமயத்தில் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அடிக்கடி அவசரச்சிகிச்சைப் பிரிவின் உள்ளே வெளியே பால் புகட்டுவதற்கு உறவினர்கள் வந்துபோனபடி இருப்பதைத் தவிர்க்கவும், தாய்ப்பால் மற்றும் குழந்தையின் தொடர்ந்த அழுகை தொடர்பாக கேள்விகள் கேட்டு அடிக்கடி உறவினர்கள் வருவதைத் தவிர்க்கவும் சில மருத்துவமனைகளில் அவர்களாகவே பால்பவுடர்களை பரிந்துரை செய்வதும் நடக்கத் தான் செய்கிறது.

நாம் இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தாண்டித்தான் நம் பிள்ளைக்கு சீம்பால் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவசரச்சிகிச்சைப் பிரிவிலும் பிள்ளையை உடனிருக்க அனுமதிப்பதன் மூலமாகவும், சிசேரியன் செய்யப்பட்டவர்களுக்கென்று தனித்த பகுதியை உருவாக்கி அங்கே இருவரையும் ஒன்றாக தங்க வைத்துப் பராமரிப்பதன் வழியாகவும் மேற்கண்ட பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இப்படியான சின்னசின்ன காரணங்களால் ஆரம்பத்தில் சீம்பால் கிடைப்பது தடைபடுவதும், தொடர்ந்து தாய்ப்பால் கிடைப்பதற்கான தூண்டுதல் சரிவர கிடைக்கப் பெறாத காரணத்தினாலும் பிரசவ வார்டுக்குச் சென்ற பின்பாக தாய்ப்பால் மார்பில் சுரப்பதில் கொஞ்சம் சிரமங்கள் இருந்தாலும் நம்முடைய விடாபிடியான பிடிவாதம் மற்றும் முயற்சியால் கட்டாயம் நம் பிள்ளைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் சுரக்க வைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆக, சுகப்பிரசவம் ஆகிய ஏனைய தாய்மார்களோடு ஒப்பிட்டுக் கொண்டு நமக்குத் தாய்ப்பால் சீக்கிரம் வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்துவிடக்கூடாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இக்காலத்திலே நம்மிடம் இருந்து தாய்ப்பால் சுரக்க வைப்பதற்காக எவ்வளவு முயற்சிகளைச் செய்கிறோமோ அதேபோல நம் பிள்ளைக்கு தாய்ப்பால் மட்டுமே கிடைப்பதற்கான எல்லா வகையான முயற்சியையும் எடுக்க வேண்டும். அதாவது பிரசவித்தவுடனே தாய்ப்பால் சுரப்பதில், அவர்களுக்குப் புகட்டுவதில் சிரமங்கள் இருக்கையில் அருகாமையில் பாலூட்டிக் கொண்டிருக்கிற அம்மாக்களிடம் கேட்டு நம் பிள்ளைக்கும் பாலூட்டச் செய்யலாம். ஒருவேளை மார்பில் பிள்ளையைப் போடுவதற்குத் தான் சிரமமாயிருக்கிறது, ஆனால் தாய்ப்பால் நன்றாகத்தான் வருகிறதென்றால் தாய்ப்பாலை மார்பிலிருந்து பாலாடையில் கறந்தெடுத்து பிள்ளைக்குச் சங்கு அல்லது ஸ்பூன் வழியாகப் புகட்டலாம். அதேபோல இப்போதெல்லாம் மாவட்டம் வாரியாக வந்துவிட்ட மருத்துவக் கல்லூரிகளில் இருக்கிற தாய்ப்பால் வங்கிகளில் கேட்டு பிள்ளைக்கான தாய்ப்பாலைக் கொடுத்து வளர்த்தெடுக்கலாம். ஆக, எப்பேர்ப்பட்டாவது நம் பிள்ளைக்குத் தாய்ப்பால் மட்டுமே கிடைக்க வேண்டிய விசயத்தில் நாம் உறுதிப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதை மனதிலே நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆக, எனதருமை நேசத்திற்குரிய தாய்மார்களே! சிசேரியன் செய்து கொண்ட காரணத்தால் கூடுதலாக ஏழு நாட்கள் வரையிலும் நம்மை மருத்துவமனையிலே தங்க வைத்திருக்கிற காலங்களில் அதையெல்லாம் நமக்குச் சாதகமான நாட்களாக மாற்றிக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நல்வழி காட்டலின் வழியே நன்றாக நாம் தாய்ப்பாலூட்டிப் பழகிக் கொள்ளலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 13 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 13 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் – 10
பாலுட்டுவதன் நிறைவாக…

நாம் பாலூட்டிக் கொண்டிருக்கையில் குழந்தையின் முகத்தைப் பார்த்தபடியும், அவர்கள் பாலருந்திக் குடிக்கிற பேரழகை இரசித்தபடியும், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் மனதிற்குள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்தபடியும் இருப்போம். அப்போது பாலருந்தித் தீர்க்கமற வயிறு நிறைந்துவிட்ட பின்பாக அவர்களாகவே போதுமென்கிற உணர்வுடன் மார்பிலிருந்து வாயினை விலக்கிக் கொள்வார்கள். அச்சமயத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர மார்பிலிருந்து அவர்களை விடுவிப்பதில் அவசரம் காட்டக்கூடாது.

அதேசமயத்தில் பிள்ளைகள் துவக்கத்தின் போது ஆவலாதியாக குடித்துக் கொண்டிருக்கையில் இடையிடையே சில நேரங்களில் காற்றையும் தாய்ப்பாலோடு சேர்த்து விழுங்கிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்போது மார்புக் காம்போடு சேர்த்து சரியாக வாயினைப் பொருத்திராத இடைவெளியில் காற்றானது உள்நுழைந்து அவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடும். இதனால் வயிற்றின் இரைப்பையில் தாய்ப்பால் போய் நிறைய வேண்டிய இடத்தில் கூடுதலாக காற்று போய் அடைத்துக் கொள்வதால் பிள்ளைகளும் நிறைவாகப் பாலருந்த முடியாமல் அரைகுறை வயிற்றோடு பாலருந்துவதை நிறுத்திக் கொள்வதுண்டு.

இப்படிக் காற்றினால் நிறைகின்ற வயிற்றினால் பிள்ளைகளுக்கு வயிற்றுக் கோளாறு உண்டாகி எந்நேரமும் வயிற்றை நெளித்துக் கொண்டு அழுதபடியே இருப்பார்கள். இதைத்தான் நாம் போய் பாட்டிகளிடம் தொக்க எடுக்கிறோம் என்று குழந்தையின் வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறோம். இதற்கு கிரைப்வாட்டரையும் மருந்துக் கடைகளாக வாங்கி பிள்ளையின் வயிற்றுக்கு அளித்தபடியே இருக்கிறோம். ஆனாலும் இதை நாம் எளிய முறையிலேயே சரிசெய்துவிடுகிற நுட்பங்கள் நம்மிடமே இருக்கத்தான் செய்கின்றன.

மார்பிலே பாலருந்திய பின்பாக காம்பினைக் காயப்படுத்திடாமல், குழந்தையையும் சிரமப்படுத்திராமல் மார்பிலிருந்து அவர்களை விலக்குவதும்கூட ஒரு தனிக் கலைதான். பிள்ளைகள் சரியாக மார்பைக் கவ்விக் குடிக்கவில்லை என்றாலோ, அவர்களால் சரிவர மார்பில் வாயினைப் பொருத்த முடியவில்லை என்றாலோ, அவர்களுக்குத் தாய்ப்பால் சரியாகக் கிடைக்கவில்லை என்றாலோ, காற்றைக் காற்றைக் குடித்துவிட்டு வயிற்றை அதிலே நிறைத்துக் கொள்கிறார்கள் என்றாலோ, அப்போது பாலூட்டுகிற தருணத்தின் பாதியிலேயே அதை நாம் நிறுத்திவிட்டு மறுபடியும் மார்பிலே போட்டு பாலூட்ட வேண்டியிருக்கும்.

மார்பிலிருந்து பிள்ளையின் வாயினைப் பிரித்தெடுப்பதென்று கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். பசியில் வலிந்து அவர்கள் நம் மார்பைச் சவைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று போய் பாதியில் அவர்களை அகற்றும் போது பந்தியிலிருந்து பாதியில் எழச் சொல்வதைப் போன்ற ஏக்கமும் ஏமாற்றமும் அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும். ஆகையால் தான் மார்பினை வாயிலிருந்து வெடுக்கென்று அவசரகதியில் பிடுக்குவதைப் போலச் செய்யாமல் நிதானமாக விலக்குவதற்கு முயற்சி செய்ய அறிவுறுத்துகிறார்கள்.

அதாவது நாம் குழந்தையை ஒரு கையாலே தாங்கிப் பிடித்திருப்போம் தானே. அப்போது தாய்ப்பாலூட்டுவதன் துவக்கத்திலேயே மறுகையினால் மார்பைப் படித்து குழந்தையின் வாயில் சரியாகப் பொருந்தச் செய்துவிட்ட பின்பாக இரண்டு கைகளையும் சேர்த்தணைத்து பிள்ளையைத் தாங்கிப் பிடித்திருப்போம். இப்போது மார்பிலிருந்து குழந்தையை விடுவிப்பதற்கு மீண்டும் அதேகையை நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

அதாவது குழந்தையின் பிடிமானத்திலிருந்து மறுகையினை விடுவித்த பின்பாக தற்போது பாலருந்திக் கொண்டிருக்கிற மார்பிற்கு வந்து காம்பைக் கவ்வியிருக்கிற குழந்தையின் கடைவாயிற்கு அருகாமையில் சற்று தள்ளியபடி விரல்களால் மார்பை மெல்ல அழுத்திக் கொள்ள வேண்டும். அப்போது குழந்தையின் வாயிற்கும் மார்பிற்குமிடையே கிடைக்கிற இடைவெளியில் நம் சுண்டுவிரலை வாயிற்குள்ளாக நுழைத்து காம்பினை உதட்டிலிருந்து விடுவிடுக்க வேண்டும். அந்தக் கணத்தில் குழந்தையின் நாடியை கீழ்நோக்கித் தளர்த்தியபடி மார்பிலிருந்து மெல்ல அவர்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

ஆனால் அவர்களை மார்பிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கவோ, தலையைப் பிடித்துத் தள்ளுவதோ போலச் செய்யமால் நிதானமாகச் செய்வதன் வழியே காம்பினைச் சேதப்படுத்திராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். குழந்தைகளையுமே விரக்தியின் நிலைக்கு எடுத்துச் செல்லாமல் அடுத்தகட்ட தாய்ப்பால் புகட்டுகிற நிகழ்விற்கு உடனடியாகத் தயார்படுத்திக் கொள்ளவும் முடியும்.

சில நேரங்களில் பிள்ளைகள் எவ்வளவு தான் தாய்ப்பால் குடித்திருக்கிறார்கள் என்பதை நம்மால் கணக்கிட்டுச் சொல்லவும் முடியாது. அதேசமயத்தில் வாயில் நிறைந்திருக்கிற தாய்ப்பால் தொண்டைக்குழிக்குள் இறங்கி இரைப்பையை அடைந்துவிட்டதையும் உறுதிப்படுத்த முடியாது. மேலும் அவர்களுக்கு இரைப்பையின் மூடுகுழாய்ப் பகுதி சரிவர வளர்ச்சியடைந்திராத காரணத்தினால் குடித்த தாய்ப்பாலும் மேலேறி புரையேறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய காரணத்தால் பிள்ளைகள் பாலருந்திய பின்பாக அவர்களைத் தூக்கி தோளில் போட்டு முதுகை மெல்லத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனை தாயென்று இல்லாமல் கணவரோ, உறவினர்களோகூட உடனிருந்து உதவியைச் செய்யலாம்.

இப்படிச் செய்வதால் காற்றைக் குடித்த பிள்ளைகள் அதனை இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேற்றச் செய்வார்கள். மேலும் தொண்டைக்குள்ளிருந்த தாய்ப்பாலும் இரைப்பைக்குள் இறங்கி அவர்களது உடலைத் தேற்றுவதற்கான வேலையைப் பார்க்கத் துவங்கிவிடும். இப்படிக் காற்றை மட்டும் நீக்கிவிட்ட பின்பாக இருக்கக்கூடிய அரைகுறை வயிற்றால் மீண்டும் அவர்களுக்கு உடனே சீக்கிரத்தில் பசிக்கத் துவங்கிவிடும். அப்போது நாம் மறுபடியும் மடியிலே போட்டுத் தாய்ப்பாலூட்டத் துவங்கலாம். இதனால் பிள்ளைகளும் நன்றாக, அதிகமாக பாலருந்திக் குடித்து ஆரோக்கியமாக வளருகிறார்கள்.

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 4 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் வகுப்பறை-ΙΙ,
பாடம்-1
(பிரசவ வார்டின் சூழலைப் புரிந்து கொள்ளுதல்)

கருப்பைக் கூட்டுக்குள் அடைகாத்த பிள்ளையைப் பிரசவித்து ஈருடலாய் வார்டுக்குள் நுழைகிற தாயவளை வரவேற்க வாசற்படிகளில் குடும்பமே கால்கடுக்க காத்துக் கிடக்கும். இளஞ்சிவப்பு வர்ண ரோஜாச் செடியைப் பக்கமாகப் பதியமிட்டு வளர்த்தெடுத்த மற்றுமொரு பூச்செடியைப் போல தாயிடமிருந்து கிளைபிரிந்த சின்னஞ்சிறு மொட்டாகிய பிள்ளையைப் பார்க்கப் பார்க்க நமக்கு ஆவலாதியாக இருக்கும். வரவேற்பரையில் பூங்கொத்தை கைக்களித்து வழிநடத்திச் செல்கிற ஆரவார கூட்டத்தைப் போல செவிலியரும் தாயவள் கைகளில் பிள்ளையைக் கைத்தாங்களாகக் கொடுத்து வார்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.

பிரவசிக்கும் வரையிலும் உடனிருக்க அறிவுறுத்தப்படுகிற ஒரு உறவினப் பெண்ணைப் போலவே பிரசவித்த பின்னாலும் கண்ணுங் கருத்துமாய் கவனிக்க வேண்டி, வார்டிலும் கூட்டமாய் செவிலியர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. பிரசவத்தோடு உடனிருந்தவர்களோ அல்லது விரவம் அறிந்த முதிய பெண்களோ மட்டும் உடனிருந்து பெற்றவளை வழிநடத்திக் கொண்டால் இங்கே போதுமானதுதான். இது ஆண்களுக்கும், கூட்டமாய் படையெடுத்து வருவோருக்குமான தடைசெய்யப்பட்ட பகுதி.

இவ்வளவு அவசரகதியிலான மருத்துவமனைக் கூட்டங்களிலும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென அம்மாக்களும் கைப்பிள்ளைகளும் தனித்து உலாவுவதற்கென்று பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட மழலையர் பூங்காக்களைப் போலவே பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகளும் குழந்தைகளின் உலகத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நீண்டதான பளிங்கு கற்கள் பாவிய மண்டபம் போலான பெருவெளியில் ஆள் கடக்கும் இடைவெளி விடப்பட்ட தூரத்தில் பிள்ளை பெற்ற தாய்மார்கள் யாவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் தாங்கள் பெற்றெடுத்த பத்தரை மாத்துத் தங்கப்பிள்ளைகளோடு அருகருகே படுத்திருப்பார்கள். குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும், பெற்றவளின் அதட்டலும் கெஞ்சலுமாக உருக்கொள்கிற பிரசவத்திற்குப் பிந்தைய வார்டின் அழகை என்னவென்று தான் வர்ணிப்பதோ?

கடல்கன்னிகளின் தேவலோக கனவுலகத்தைப் போல அருகருகே துள்ளலோடும் துடிப்போடும் கைகால்களை உதைத்தபடி ஒரு பெரிய வால்துடுப்பைப் போல படுத்திருக்கிற பிள்ளைகளைப் பார்க்கையில் அவர்களெல்லாம் அம்மாக்களின் விலாப்பகுதியிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் கடல்கன்னிகளின் துடுப்புகளாவே தெரிகிறார்கள். ஒவ்வொரு படுக்கையும் இரண்டு கள்ளங்கபடமற்ற ஜீவன்களால் நிரப்பப்பட்டிருக்கும் பிரத்தியேக அறையில் தான் புத்தம் புதியதாக பிரசவித்து நுழைகிற நமக்கென்றும் தனித்த படுக்கையொன்றை செவிலியர்கள் ஒதுக்கித் தருகிறார்கள்.

இப்பகுதியின் அத்தியாவசியமான நோக்கமே தாயும் பிள்ளையும் தொடர்ந்து அருகாமையில் தனித்திருந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டுமென்பது தான். இப்படி இருப்பதால் தானே எந்நேரமும் தாயும் சேயும் தோலோடு தோல் நெருக்கமாய் இருப்பதும், அருகாமையிலேயே துயில் கொள்வதும், இதனால் குழந்தையின் செய்லபாடுகளை பெற்றவள் கண்டுணர்ந்து கொள்வதும் விரைவிலேயே சாத்தியமாகிறது.

ஆனாலும் ஒருசில மருத்துவமனைகளில் குழந்தைக்கு ஒரு படுக்கையும், தாயிற்கென தனிப்படுக்கையுமென ஒதுக்கித் தருகிறார்கள். இதை ஏதோ கூடுதல் வசதியென்றே பிள்ளை பெற்ற குடும்பமும் நெகிழ்ச்சியில் மூழ்கிப் போகிறார்கள். வேறுசில இடங்களில் தனித்த மரத்தொட்டில்களில் பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு தாயைக் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கச் செய்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் அம்மாக்களின் கட்டில் அகலம் என்னவோ மிகவும் ஒடுக்கமாக ஒருவர் மட்டுமே துயில் கொள்ளுமளவு இருப்பதால், தாயும் சேயும் ஒரே கட்டிலில் அணைத்துப் படுத்திருந்தாலும்கூட, அவர்கள் எத்திசையிலும் இங்கும் அங்கும் அசையாதிருக்கும்படியான அசௌகரியமான சூழலிலே அவர்கள் துயரத்தோடு துயில் கொள்ள வேண்டியதிருக்கும்.

அப்படியே இருவரும் சகலமாக படுத்துறங்கும் படியான கட்டிலை மருத்துவமனையில் அளித்தாலும்கூட தாயிடமிருந்து பிள்ளையை அடிக்கடி அழுகிறார்கள் என்றோ, பெற்றவள் களைப்பில் தூங்க பிள்ளையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்றோ தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்து தனித்து வைத்திருப்பதான அடாவடித்தனங்களை எல்லாம் பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகிளில் உறவினர்கள் செய்த வண்ணமாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே, நேசத்தையே புன்முறுவலாக்கி வைத்திருக்கிற செவிலியர்கள் இந்த அற்பக் காரணங்களையும் தவிர்த்துவிட்டு நம்மையும் நம் பிள்ளையும் ஒருசேர கட்டிலில் விசாலத்துடன் கூடிய வகையில் படுத்துறங்க ஏதுவாக படுக்கை அமைத்துத் தருகிறார்கள்.

அத்தோடு ஏற்கனவே பிரசவித்து இதே படுக்கையிலிருந்து பிள்ளைக்குப் பாலூட்டி சீராட்டி வளர்த்தெடுத்த பின்பு இம்மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்ட ஏதோவொரு பெற்றவளின் படுக்கையில் தான் இப்போது நமக்குமென்று ஒரு படுக்கையை ஏற்பாடு செய்துத் தருவார்கள். ஆகையில் உடலின் மீதான இரத்த கவிச்சை வாடையும், பிரத்தியேக மருந்துகளின் வாசமும் படிந்த படுக்கைத் துணிகளைத் துவைத்தெடுத்து நன்கு வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னரே நம் படுக்கையில் விரித்து நம்முடலைக் கிடத்தி எவ்வித கவலையுமின்றியே கண்ணயர்ந்து தூங்கச் செய்கிறார்கள். இப்படியான படுக்கையின் வியர்க்கை நெடியும், அழுக்கும், இரத்தப் பிசுபிசுப்பும், பாலூட்டிக் கசிந்த முந்தைய கறையும் ஒருவேளை சரியாக தூய்மை செய்யப்படாவிட்டால், அடுத்ததாக வந்து தங்கப்போகிற பெற்றவளுக்கு இதனால் வரப் போகிற கிருமித்தொற்றையும், இந்தக் கவிச்சை வாசத்தினால் சரியாகப் பாலருந்தாமல் குழந்தைகள் தவிர்ப்பதையும் பற்றி செவிலியர்களுமே நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள்.

பொதுவாகவே பிரசவத்திற்குப் பின்பான வார்டில் நாம் நுழைகிற போது நம்மை அறியாமலே ஒரு அந்நியத்தன்மை வந்துவிடுகிறது. இந்த இடம் நமக்குப் புதிது, அங்கிருக்கிற செவிலியர்கள், மருத்துவர்கள் நமக்குப் புதிதானவர்கள், ஏற்கனவே பிரசவித்து தங்கள் பிள்ளையோடு படுக்கையில் அக்கம் பக்கத்தில் வீற்றிருக்கிற தாய்மார்களும் நமக்குப் புதிதானவர்களே! அப்படியிருக்க இத்தகைய விசாலமான அறைகளோடு, சுற்றியுள்ள மனிதர்களோடு நாம் வெகுவிரைவிலேயே ஒட்டிக் கொண்டால் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதற்கு நமக்கு இலகுவாக இருக்கும். இத்தகைய பழக்கமில்லா இடத்திலிருந்து கொண்டு துணிந்து நாம் தாய்ப்பாலைப் புகட்ட வேண்டுமென்றால் எத்தகைய மனத்தடையுமின்றி இரண்டு மார்பகத்தையும் வெளியே எடுத்துப் போட்டு பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டியதிருக்கும் அல்லவா!

ஆகையால் தான் பிரசவத்திற்குப் பின்பான வார்டிற்குள் நுழைகிற போதே அங்கிருக்கிற இடத்தோடு, நமது படுக்கையோடு, நம் படுக்கையின் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துப் படுத்திருக்கிற தாய்மார்களோடு, நமக்குத் தாய்ப்பால் பாடமெடுக்கிற ஆசானாகிய செவிலியர் மருத்துவரோடு விரைவிலேயே மனத்தடைகளை நீக்கி நெருக்கமாகிவிட வேண்டியிருக்கிறது. நாம் இப்போது பிரசவித்துப் படுத்திருக்கிற படுக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பிரசவித்துப் பாலூட்டி ஆரோக்கியத்தோடு மீண்டு வீடு சென்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு நெகிழ்ச்சியான விசயம், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? நாம் படுத்திருக்கிற இதே இடத்தில் தான் சற்று முன்பு இன்னொரு தாயும் அவளது சேயும் துயில் கொண்டிருக்கிறார்கள் என்பது எப்பேர்ப்பட்ட மனதிற்கு இதமான ஞாபகம்! நாம் வீட்டிற்குச் சென்ற பின்னாலும்கூட நாமும் நம் பிள்ளையும் உறங்கியெழுந்த இதே இடத்தில் இன்னொரு தாயும் பிள்ளையும் வந்து துயில் கொள்ளத்தான் போகிறார்கள். ஆதலால் இவ்விடம் என்பது நமக்கு பெருமதிப்பிற்குரிய நினைவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள் தாய்மார்களே!

இன்னும்கூட நம்மைப் போலவே எத்தனையோ தாய்மார்களை, பிள்ளைகளை நம் கர்ப்பப்பையில் சுமப்பதைப் போல தாங்கிக் கொள்வதற்கு மருத்துவமனைப் படுக்கைகள் இன்னும்கூட சித்தமாயிருக்கின்றன. இவையெல்லாம் ஒருவேளை இயேசுபிரானைச் சுமந்த இரும்புச் சிலுவைகள் தானோ என்னவோ? சிறுகச் சிறுகச் சீவி சிறுத்துவிட்ட பென்சிலைக்கூட கைவிடாமல் தனக்கு நெருக்கமானதாக வைத்திருக்கும் ஞாபகங்களைப் போல நாம் ஏன் பிரசவித்த படுக்கையை வாழ்நாளின் முக்கியமான நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளக் கூடாது?

இப்படியாகப் பிரசவித்த தாய்மார்கள், தங்கள் அடிவயிற்றுப் பிள்ளைச் சுமையை இறக்கியவுடனே நெல்மணிகளை உதிர்த்த தட்டைகளைப் போல உடலும் இலகுவாகிப் போகும். ஆனாலும் தாய்ப்பால் புகட்டுவதில் சிறிது ஆசுவாசத்தோடு இருப்பதற்கு அத்தகைய அறையில் கொஞ்சம் அடித்து வீசுகிற தூய நல்காற்றும், மஞ்சள் பூசிப் படருகிற சூரிய வெளிச்சமும் இருக்கிற பட்சத்தில் அம்மாவும் பிள்ளையும் தங்கள் அந்நியத் தன்மையை உதிர்த்துவிட்டு வீட்டினது இணக்கமான சூழலை மருத்துவமனையிலேயே உணரத் துவங்கிவிடுவார்கள்.

அதோடு நம் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துத் தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருக்கிற தாய்மார்களிடம் நாம் இணக்கமாகி நட்பு பாராட்டுகையில் தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான சந்தேகங்களை அனுபவ ரீதியில் அவர்களேகூட நமக்கு வந்து உதவக்கூடும். தங்கள் பிள்ளைகளை மார்பில் போட்டு நேரடியாகவும் அவர்கள் நமக்கு விளக்கிச் சொல்வற்கு முன்வருவார்கள். ஒருவேளை நமக்குத் தாய்ப்பால் வரவில்லையென்று உள்ளுக்குள் ஆதங்கப்பட்டாலோ, அடிக்கடி தாய்ப்பால் வேண்டுமென்று கேட்டுப் பிள்ளை பசித்து அழுதாலோ அவர்களது மடியிலே நம் பிள்ளையைக் கிடத்தி அவர்களது பிள்ளையாகப் பாவித்து மார்பிலே பாலருந்தச் செய்து நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். நாம் பிரசவித்த அறையில் எத்தனையோ தாய்மார்களிருக்க தாய்ப்பால் போதவில்லையென்று புட்டிப்பாலைக் கொடுப்பதைக் காட்டிலும், நம்மைப் போன்ற தாயிடம் இரவல் கேட்டு பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதென்பது பெரும் மகத்தான காரியமல்லவா!

நாம் பிரசவித்த அதே மருத்துமனையில், அதே நாளில், அதே நேரத்தில், நம்மோடே பிரசவித்து பிள்ளை பெற்ற தாய்மார்களிடம்கூட நாம் வாழ்நாள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம் தானே! அப்படி வருடாவருடம் ஒன்றாக பிரசவித்த தாய்மார்களெல்லாம் ஒன்றுகூடி ஒரேயிடத்தில் பிறந்த நாளை, தாங்கள் பிரசவித்த பெருநாளை கொண்டாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? ஒவ்வொரு வருடமும் தங்கள் பிள்ளையை அழைத்துக் கொண்டு போய் தான் பிரசவித்த மருத்துவமனையில், தங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரோடு பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிகழ்த்துகிற பெற்றோர்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியான சின்னச்சின்ன ஞாபகங்களை நாம் மருத்துவமனையிலிருந்தும் நம் வாழ்வில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் தானே!

பேரன்பிற்குரிய தாய்மார்களே! ஆகையால் தான் நாம் பிரசவித்து உள்ளே நுழைந்தவுடனே அத்தகைய சூழலை உள்வாங்கிக் கொண்டு எவ்வித கூச்சமும் பதட்டமும் இல்லாமல், செவிலியர்கள் சொல்வதைக் கேட்டு, அருகிலிருக்கிற தாய்மார்கள் வழிகாட்டுவதைப் புரிந்து கொண்டு இயல்பாக உங்கள் பிள்ளைக்குப் பாலூட்ட விரைவிலே தயாராகுங்கள் என்று துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறோம்.

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 3 – டாக்டர் இடங்கர் பாவலன்




அன்புத் தாய்மார்களே! இப்போது நாம் நம்முடைய முதல் வகுப்பறையிலே இருக்கிறோம். அதாவது பிரசவித்த பளிங்கு அறையின் பிரசவ அறையிலே நட்ட நடுவில் கிடத்தப்பட்ட அகலமானதொரு அலுமினிய மேசையில் படுத்துக் கொண்டுதான் இந்தப் பாடத்தையே நாம் தொடர வேண்டியதிருக்கும். இப்படிப் படுத்துக் கொண்டே பள்ளிக்கூடம் போக யாருக்குத் தான் பிடிக்காது? இப்பள்ளியைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போதே பால்வாடி குழந்தைகளைத் தூங்க வைத்து பாடம் நடத்துகிற மழலையின் ஞாபகங்கள் தான் நினைவிற்கு வருகிறது.

இங்கு நீங்கள் இருக்கப் போவதென்னவோ இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மட்டும் தான். குழந்தையைத் துடைத்து வெகுவெதுவாக்கி அவர்களை இயல்பாக மூச்சுவிட வைத்து நம்மிடம் கொடுப்பதற்கும், பிரவசவித்ததால் பாதிப்படைந்த பகுதிகளை தையலிட்டும் நமது சோர்வினை குளூக்கோஸ் போட்டு தேற்றுவதற்குமான இந்த இரண்டு மணி நேர இடைவெளியில் தான் இந்தப் பாடத்தையே நமக்குச் செவிலியர்களும், மருத்துவர்களும் எடுக்கப் போகிறார்கள்.

குழந்தைகள் வெளி வந்தவுடனே சட்டென்று பனிக்குடத்தில் குலைத்தெடுத்த இரத்தக்கறையோடு தூக்கி அப்படியே அம்மாவின் மார்பிலே போடுவார்கள். அப்போது குழந்தையுமே கர்ப்பப்பையோடு ஒட்டிக் கொண்டிருக்கிற நஞ்சுப்பையுடன் பிணைந்த தொப்புள்கொடியின் இணைப்போடுதான் தொடர்ந்து இருப்பார்கள். இந்த நிலையில் தான் பிள்ளையை மார்பில் போட்டு முதன் முதலாக நாமும் தாய்ப்பால் புகட்ட வேண்டியிருக்கும். அப்போது குழந்தையும் மூக்கை விடைத்துக் கொண்டு மார்பைத் தேடி அவர்களாகவே காம்பைக் கவ்வியபடி சவைக்கத் துவங்கிவிடுவார்கள். இப்படிச் செய்வதால் சீம்பாலும் ஊறி மார்பில் உடனே கசியத் துவங்கிவிடும். இதனால் பிரசவித்த எடுத்த எடுப்பிலேயே தாய்ப்பால் மார்பில் சுரக்குமா என்றெல்லாம் நாமும் யோசித்துத் தயங்கத் தேவையில்லை.

இப்படி அடுத்த கணமே மார்பில் போட்டு சவைக்க வைக்கிற போது சீம்பால் பெருகுவதுடன் அடுத்தடுத்து தாய்ப்பால் தொடர்ந்து மார்பிலே ஊற்றென பெருகிச் சுரந்து கொண்டே இருப்பதற்கும் இந்த ஆரம்பகட்ட தூண்டுதலே காரணமாயிருக்கிறது. இதற்காகத்தான் இரண்டு மார்பிலுமே பத்து பத்து நிமிடங்களாக குழந்தையை மாறி மாறிப் போட்டு பிரசவ அறையிலே தாய்ப்பால் சுரக்கத் தூண்டச் செய்கிறார்கள். இதனால் அவர்களும் காம்பில் வாய் வைத்துப் பொருத்தியபடி குடிப்பதற்கு மெதுமெதுவாக பழகிக் கொள்கிறார்கள். மேலும் பிறந்தவுடனேயே குழந்தையும் இரத்தத்தில் உலப்பியபடி வெளிவந்த வெற்று உடம்போடு அம்மாவின் வெற்று மார்பிலே படுத்துக் கொண்டு பால் குடிக்கையில் வெகுவிரைவிலேயே அம்மாவின் தோலோடு தோல் நெருக்கம் கிடைக்கிற அரவணைப்பும் அவர்களுக்குச் சாத்தியமாகிவிடுகிறது.

அம்மாவானவள், முதன் முதலாக குழந்தையைப் பார்க்கும் காட்சியே அவளது இரத்தக்கறை படிந்த பிள்ளையாகத் தான் இருக்கும். அப்போது அந்த இரத்தக்கறையோடு அவர்களை வாரியணைத்து மார்பிலே போட்டு உச்சிமுகர்ந்து உள்ளங்கையில் வைத்து இரசிக்கிற போது, அம்மாவிற்கும் தன் பிள்ளையின் மேலே பாசம் பொங்கி வரும். குழந்தையின் சிணுங்களுடன் கூடிய பூனையின் குரலொத்த அழுகைக் குரலைக் கேட்டவுடனே அதுவரை வலியில் துடித்த பெற்றவளின் அழுகைக்குரல் சட்டென்று மாறி சிரிப்பையும் அழுகையும் குலைத்துச் செய்த ஒரு புதுமுகக் கலவையான பாவணைகளை வெளிக்காட்டத் துவங்கிவிடுவாள்.

இவ்வகையான மகிழ்ச்சியின் ஊற்றிலிருந்து தானே பெற்றவளும் பிரசவ பாதிப்புகளிலிருந்து விரைவிலே மீண்டுவர முடியும். இதனால் அம்மாக்களுமே, தானும் தன்னுடைய பிள்ளையும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்கிற உணர்வு நிலைக்கு வெகுசீக்கிரத்திலேயே வர முடியும். குழந்தைகளும் முதன் முதலாக வெளியுலகத்திற்கு வந்து அம்மாவின் மார்பில் படுத்துக் கொண்டு தாயவளின் குரலைக் கேட்டு மார்பை முகர்ந்து அதில் முண்டியபடி, காம்பைச் சுவைத்து தாய்ப்பால் குடிக்க பயிற்சி எடுத்துக் கொள்வார்கள்.

அத்துடன் பிரசவிக்கிற பெண்ணோடு உடனிருந்து பார்த்துக் கொள்கிற, பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்கிற தோழியோ, அம்மாவோ குழந்தை பிறந்தவுடனே அவர்களுக்குப் பாலூட்டுவதற்காக துரிதகதியிலே ஒத்துழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். பிள்ளை பெற்றவளுக்கு இரத்தம் கசிந்து வெளியேற்றப்பட்டதாலும், பிரசவித்து களைத்துப் போன சோர்வினாலும் உண்டான பலவீனத்தைச் சரிசெய்வதற்கு ஏதேனும் நீர்சத்துடைய ஆகாரங்களாகக் கொடுத்து நல்லபடியாக தேற்றிவிட வேண்டியதிருக்கும். மேலும் அடிக்கடி குழந்தையை அவளிடம் காட்டி பாலூட்டி வளர்க்க அருகாமையிலிருந்தபடியே ஊக்கப்படுத்தவும் வேண்டியதிருக்கும். இதனால் தான் பிரசவத்திற்கு உடனிருக்கிறவர்களோ, முன்பு பிரசவித்த தாயாகவும் தாய்ப்பாலூட்டல் தொடர்பான தேவையான விழிப்புணர்வினைப் பெற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவமனையிலே அறிவுறுத்துகிறார்கள்.

பொதுவாக, இந்த முதல் வகுப்பறைப் பாடத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீங்கள் தாய்ப்பால் புகட்டும் போது தெளிவில்லாமலும், ஒருவித குழப்பத்தோடும், சின்னச்சின்ன புரிதல் இல்லாத தவறுகளோடும் செய்வது போலவே தான் இருக்கும். குழந்தையைக் கைகளில் வாங்கி தாங்கிக் கொள்வதற்கே உடலெல்லாம் காற்றில் அசைகிற புல்லைப் போல மெலிசான நடுக்கம் எடுக்கும். அப்போது குழந்தையை கைகளில் எப்படி பற்றிக் கொள்வது என்றுகூட அவ்வளவாக நமக்குத் தெரியாது. எப்படித் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளும் நன்குப் பசியாறுவார்கள் என்கிற புரிதலுமே நமக்கு அவ்வளவாக இருக்காது. ஆனாலும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே! நாம், தாய்ப்பால் இரண்டாம் வகுப்பறையான வார்டு பகுதிக்குச் செல்லும் போது இதையெல்லாம் சரிசெய்து கொண்டு சரியாகத் தாய்ப்பால் புகட்ட பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன்னால் முதலாம் வகுப்பறையில் நாம் கற்றுக் கொண்டவற்றை கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமாக உறுதி செய்து கொள்வோம்.

தாய்ப்பால் வகுப்பறை படிவம்-1
**************************************

1. பிரசவ அறையிலேயே முதல் தாய்ப்பாலான சீம்பாலை உங்கள் பிள்ளைக்குக் கொடுத்துவிட்டீர்களா?
• ஆம் • இல்லை

2. முதல் அரைமணி நேரத்திற்குள்ளாகவே தாய்ப்பால் கொடுக்கத் துவங்கிவிட்டீர்களா?
• ஆம் • இல்லை

3. சிசேரியின் செய்த தாய்மார்களாக இருக்கிற பட்சத்தில் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் புகட்டினீர்களா?
• ஆம் • இல்லை

4. பிரசவித்த உடனேயே மார்பிலே குழந்தை தவழவிடப்பட்டதா?
• ஆம் • இல்லை

5. குழந்தைகள் அவர்களாகவே காம்பைத் தேடி கவ்விச் சுவைக்கக் கற்றுக் கொண்டார்களா?
• ஆம் • இல்லை

6. இரண்டு மார்பிலுமே போட்டு தாய்ப்பால் சுரப்பதற்கான தூண்டுதலைச் செய்தீர்களா?
• ஆம் • இல்லை

7. பிரசவ அறையிலேயே உங்களுக்கும் குழந்தைக்குமான தோலும் தோலுமாக தொடர்பிலிருக்கிற வகையில் தூண்டப்பட்டதா?
• ஆம் • இல்லை

8. பிரசவ அறையிலேயே தாய்ப்பால் புகட்ட போதுமான அறிவுரைகளை பெற்றுக் கொண்டீர்களா?
• ஆம் • இல்லை

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்



ஆனந்தக் களிப்பினாலே சுரக்கிறது பார், தாய்ப்பால்!

வீட்டு முற்றத்தின் முல்லைக்கொடியில் புல்லைக் கோர்த்துக் கட்டிய சிட்டுக்குருவியின் சின்னஞ்சிறு கூட்டில் பிரசவித்த பிஞ்சுக் குருவியை இரகசிமாய் எட்டிப் பார்த்து இரசித்துச் சிரிக்கும் குழந்தைகளைப் போல, இன்னும் பிரசவித்த கதகதப்புகூட குறையாமல் தன்னிலிருந்து பிரிந்த மீச்சிறு சிறகைப் போல அருகே  படுத்திருக்கிற பிள்ளையைப் பார்க்கப் பார்க்க ஒரு தாயிற்கு எப்படித்தான் இருக்குமோ! எத்தனை முறை பார்த்தாலும் சலித்திடாத, உள்ளங்கையில் அள்ளி அன்பொழுக எவ்வளவு முத்தமிட்டாலும் போதாத அரிய தருணங்களை எப்படித்தான் கையிலிருந்து நழுவிவிடாமல் பார்த்துக் கொள்வதோ?

பிஞ்சுக் கரங்களுக்குள் சுட்டு விரல் நுழைத்து அவர்களின் பிடிக்குள் சேகரமாகிவிடுவதன் வழியே தன்னையே முழுவதும் ஒப்புக் கொடுத்தபடி உள்ளுக்குள் கரைந்து கொண்டிருக்கும் அவளைக் கையேந்திக் கரைசேர்ப்பார் யாரோ? நட்சத்திர ஒளிவீசிடும் குறு கண்களைக் கூசித் திறந்து இமைக்குள் அம்மையைத் தேடுகிற பிள்ளைக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முகத்தையே உற்றுப் பார்த்தபடி செல்லக்குட்டி..! அம்முக்குட்டி..! வாடா செல்லம்..! என்றெல்லாம் குழைந்து பேசிச் சிரிக்கிற தாயவளின் இன்பக் கேணியிலிருந்து அவளை எவர் தான் மீட்டெடுப்பதோ? முன்நெற்றிப்பட்டையில் சரிந்து விழுகிற சாம்பல்முடிக் கற்றையை கண்விளிம்பிலிருந்து ஒதுக்கித் தள்ளியபடியும், புல்லைப் போல் கோடாய் நீளுகிற புருவத்தை விரலால் நீவியபடியும் இருக்கும் அம்மாவின் அரவணைப்பிலிருந்து குழந்தையும் துயில் களைவது எப்போதோ?

பாட்டியின் சுருக்குப்பைக்குள் பேரனுக்கென வாஞ்சையோடு மறைத்து எடுத்து மடித்துக் கொடுக்கிற அழுக்கடைந்த அந்த ஐந்து ரூபாய் நோட்டின் வெம்மையைப் போல தன் சேலையின் கசங்கிய பொதிக்குள் அலாதியாய் துயில் கொண்டிருக்கும் பிள்ளையை எப்படித்தான் தாயும் கவனமாய் தூக்கிக் கொஞ்சிக் குழையப் போகிறாளோ? தன்னியல்பில் கண்ணங்கள் உப்பி குபேரனாய்ச் சிரிக்கிற, அப்படிக் கண்ணங்கள் கனிந்து குவிகின்ற போதே குள்ளநரிக்குழியாய் அமிழ்ந்து சுழிக்கிற சிறு கண்ணக்குழியில் சுற்றிக் கொண்டிருக்கிறது அவளது சின்னஞ்சிறு பூமி! கண்ணங்களைக் கிள்ளி முத்திமிடும் உதட்டின் குளிர்ச்சியில் துள்ளியபடி புரண்டுப் படுக்கிற குழந்தையினால் ஒருபக்கமாய் சாய்கிறது அவளது ஒட்டுமொத்த பிரபஞ்சமும்! அவள் விரல்நுனியின் ஒவ்வொரு தொடுகையிலும் காம்பைத் தேடியவாறே உதட்டைச் சுழித்து அம்மையின் விரல் சுவைக்க நாவைச் சுழற்றுகிற அவர்களின் அனிச்சையான நிகழ்வைப் பார்க்கப் பார்க்க இன்னும் எத்தனை யுகம் தான் அவர்களுக்கு வேண்டியிருக்குமோ?

பிள்ளை பற்றிய அவர்களின் இரவுக் கனவுகளையும் அந்தக் கனவுகள் மெய்ப்பட பிரசவித்துப் பிள்ளை பெற்ற தருணங்களையும் இதயம் முழுக்க நிறைத்துக் கொண்டு அந்த ஒட்டுமொத்த தித்திப்பின் திகட்டல் தாளாமல் ஊற்றாகிய உணர்ச்சிப் பெருக்கையெல்லாம் கோடைக் கண்ணீராய் கண்களின் கேணிக்குள் இறைத்து நிறைத்தபடி நிற்கையில் தாயும்கூட வளர்ந்ததொரு குழந்தையாகி விடுகிறாள். அவளது விழியோரம் கண்ணீர் எந்நேரமும் அலையடித்தபடி இருக்க கண்ணங்கள் வழியப் பொங்கி வருகிற பேரானந்தத்தைப் பார்க்கையில் அது உற்சவம் கூடிய தாய்மையின் தரிசனமாகத் தான் இருக்கும். இளம் மஞ்சள் வெயில் விசிறியடிக்கையில் கூடவே ஓங்கி சடசடத்துப் பெய்கிற தும்பல் மழையினால் ஒருசேர சூழ்கிற வெதுவெதுப்பைப் போல, அம்மாக்கள் அரற்றி அழுகிற போதே கரைந்து சிரிக்கிற தருணங்களையெல்லாம் நாம் இதுவரை எந்தக் கோவில் சிற்பங்களிலுமே கண்டதில்லை. அழுகிற போதே சிரித்தபடியும், சிரித்தபடியே அழுதபடியுமாக கண்ணீர் வடித்தே கணம் தோறும் மாறுகிற அன்னையின் உணர்ச்சித் ததும்பல் போராட்டங்களை எப்போது தான் அப்பாக்களின் உலகமும் இனி புரிந்து கொள்ளப் போகிறதோ?

இத்தகைய உணர்ச்சிமிக்க தருணத்தில் தாயவள் அழுதபடி கண்ணீரைப் பெருக்குகிறாளா அல்லது பொங்கிச் சிரித்து கண்ணங்கள் வீங்க கண்ணீரை வடிக்கிறாளா என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படியான சமயத்தில் தான் பிள்ளைப்பேறு கண்டவள் மகிழ்வாய் இருக்கையில் தாய்ப்பால் கனிந்து நிறைவாகச் சுரக்குமென்கிற மருத்துவர்களின் அசரீரிக் குரலானது குகைக்குள்ளிருந்து எழுகிற தெய்வீகக் குரலைப் போல நமக்குள்ளே எதிரொலிக்கத் துவங்குகிறது. ஆனாலும் அழுகையில் கண்கள் மினுங்க வழிகிற கண்ணீரின் உருக்கத்தைப் போல, சிரிக்கிற போதே உணர்ச்சித் ததும்பலில் ஊற்றெடுக்கிற ஆனந்தக் கண்ணீரின் பெருக்கத்தைப் போல, மகிழ்வான தருணங்களின் போதெல்லாம் தாய்ப்பால் பெருகுவதைப் பற்றியும் நாம் நிச்சயமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குழந்தை பெற்ற ஆனந்த போகத்தில் திளைத்து வருகிற கண்ணீருக்கும், மகிழ்ச்சி ததும்ப மார்பில் பிள்ளையைப் போடும் போது வற்றாச் சுனை போலச் சுரக்கிற தாய்ப்பாலுக்குமிடையே இருக்கிற ஒற்றுமையைப் பற்றி நாமும் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா! இதையெல்லாம் நாம் விளங்கிக் கொள்வதற்கு முதலில் ஆனந்தக் கண்ணீர் சுரப்பதற்கான உண்மையைப் பற்றி முழுவதுமாகத் தெளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குழந்தைகளின் சிரிப்பையும், அழுகையும் கேட்ட உடனே உள்ளுக்குள் ஒரு உந்துதலும், பரவசமும், உணர்ச்சிவயப்படுதலும் ஏற்பட்டு நம்மை அறியாமலே மார்பு மெல்ல கனத்து தாய்ப்பால் ஊறிப் பெருக ஆரம்பிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அச்சமயத்தில் நாம் உணர்ச்சிவசப்பட்டால் கூட தாய்ப்பால் மார்பில் சுரக்கிற பேரற்புதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் நமக்கெல்லாம் அது புதிதாகவும், அவையெல்லாம் பெரும் புதிராகவும் இருக்கிறது. அப்படிக் கண்ணீரையும், தாய்ப்பாலையும் இயல்பாகவும் இயற்கையாகவும் சுரக்க வைப்பதற்கு மூலகாரணமாகிய உணர்வுகளைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா! ஆனால் அதற்கு நம் தலைக்குள்ளே கண்ணீரைச் சுரக்க வைப்பதற்கென அருளப்பட்டிருக்கிற தொழில்நுட்பத்தைப் பற்றிய தெளிவினை நாம் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் தாய்மார்களே!

முதியவர்களின் வயதான தோல் சுருக்கங்களைப் போலிருக்கிற நமது மூளையின் மேல்பட்டைக்குச் சற்று கீழே தான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் சுவாரஸ்யமான பகுதியிருக்கிறது. இங்கு தான் நம் உணவுப்பழக்கம், பாலியல் தேவைகள், அடிப்படை உணர்ச்சிகளென்று அத்தனையையும் ஒருவித ஒழுங்கிற்குள் வைத்துக் கொள்வதற்கான நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தபடி இருக்கிறது. அத்தகைய அதிநுட்பமான பகுதிக்குப் பெயர்தான் லிம்பிக் மண்டலம். லிம்பிக் என்றால் அகராதியில் ஓரத்தில் என்று பொருள் கொள்ளலாம். ஆக, மூளையின் அடிப்பாகத்தினது ஓரத்தில் இந்த லிம்பிக் மண்டலத்தினது பகுதிகள் அமைந்திருப்பதால் இப்பெயரை ஒரு நல்ல நாள் பார்த்து சூட்டியிருக்கிறார்கள் போலும்!

இந்த லிம்பிக் மண்டலத்தைப் பகுத்துப் பார்த்தால் அங்கே லிம்பிக் மடல், ஹிப்போகேம்பல், அமெக்டலா, தலாமஸ், ஹைப்போதலாமஸ் போன்ற அறிவியல்பூர்வமான பகுதிகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இணைபிரியா இரத்த உறவுகளாக ஒன்றுக்கொன்று அருகாமையில் இருந்தபடி ஏராளமாக நுட்பமான வேலைகளை ஒருங்கிணைந்துச் செய்கின்றன. அதிலொரு பணியாகத் தானே நம்மைக் கண்ணீர் பொங்க அழவைத்து உணர்ச்சிவசப்படுகிற மனுசியாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

இந்த லிம்பிக் சிஸ்டத்தில் இருக்கிற அமெக்கிடெலா என்ற பகுதியே கொஞ்சம் விசித்திரமானது தான். இங்கே தான் நம் சுற்றுப்புறத்திலிருக்கிற உணர்ச்சிவசப்படக்கூடிய அபூர்வமான நிகழ்வுகளையெல்லாம் ஐம்புலன்கள் வழியாகத் திரட்டி மாபெரும் தகவல் களஞ்சியமாக உள்ளுக்குள்ளே சேமித்து வைக்கப்படுகிறது. யாரேனும் நம்மை வருத்தமுறச் செய்கிற போது வென்று கண்ணைக் கசக்கியபடி அழுவது, ஒருவர் ஏதேனும் சொல்லி நம்மை மனமுவந்து பாராட்டுகையில் முகம் வெட்கிச் சிவந்து பூரிப்பது, கோபத்தில் நாசிகள் துடிக்க பற்களைக் கடிப்பதும், நாக்கைத் துருத்துவதுமான உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்ற எல்லாமே இதனுடைய கச்சிதமான இயக்குநர் வேலைதான். நாமெல்லாம் சந்திக்கிற அன்றாட நிகழ்வுகளின் தன்மைக்கேற்ப நம்முடைய அற்புதமான உடல் மொழியை வெளிப்படுத்துவதன் வழியே நம்மை உணர்ச்சியுள்ள மனிதனாக காட்சிப்படுத்துவதில் அமெக்டெலாவின் பங்கென்பது மிகவும் முக்கியமானது. இப்படிப்பட்ட அமெக்டெலாவானது நாம் உணர்ச்சிவசப்படும் போது நம்மை அழவைத்து எப்படி கண்ணீரைச் சுரக்க வைக்கிறதென்று தெரியுமா?

பிள்ளையின் அழுகுரல் கேட்டுப் பிரசவித்த களைப்பெல்லாம் களைந்துவிட்டு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தாயவளோ தத்தளித்துக் கொண்டிருப்பாள். அவளோ தன் பிஞ்சுக் குழந்தையின் அழகைக் கண் கொள்ளப் பார்க்கிறாள், தொட்டணைத்துத் தழுவிக் கொள்கிறாள், உச்சி முகர்ந்து முத்தமிடுகிறாள். இப்படி அணு அணுவாக பிள்ளையைப் தொட்டும், பார்த்தும், கேட்டும், நுகர்ந்தும், முத்தமிட்டும் ஐம்புலன்களால் உணரப்படுகிற அத்தனைத் தூண்டல்களும் முதுகுத்தண்டு நரம்பின் வழியே மூளைக்குச் சென்று அங்கே ஒரு சிலந்திவலைப் பின்னலின் முடிவில் அமெக்டெலாவுக்கே வந்து சேர்கிறது.

அங்கு ஏற்கனவே எந்தச் சூழலுக்கு எத்தகைய பாவணையிலான முகபாவத்தை, உடல்மொழியை வெளிப்படுத்த வேண்டுமென்கிற தகவலானது பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது பேரானந்தத்தில் உச்சி குளிர்ந்து போயிருக்கிற அன்னையின் உணர்ச்சிவசப்படக்கூடிய மனம் திறந்த மடலை அமெக்டெலா வாசித்தறிகிறது. இறுதிப் பரிசீலினையில் அம்மாவின் எல்லா உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சமநிலைப்படுத்துகிற வகையில் மூளையின் கண்ணீர் சுரப்பு மையத்திற்கு மறுசேதி சொல்லி உடனடியாக கண்ணீர் மடையைத் திறந்து விடச் செய்கிறது. முழுக் கொள்ளளவு எட்டும் முன்னே முன்னெச்சரிக்கையாக அணையைத் திறந்துவிடச் செய்கிற நுட்பத்தைப் போலத்தான் நம்ம மூளையும் உணர்ச்சிவசப்பட்டு வலிப்பு வரும் முன்னே அதைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் கண்ணீர் பையைத் திறந்துவிடுகிறது.

இந்தச் செய்தி மின்னல் பாய்ச்சலில் மூளையிலிருந்து நரம்புகள் வழியாக கீழ் நோக்கிப் பயணித்து இரு விழியோரத்திலும் பக்கவாட்டில் பதுங்கியிருக்கிற கண்ணீர் சுரப்புப்பைகளுக்குச் செல்கிறது. மூளை நரம்புகளின் வழியாக வருகிற அவசரச் சேதியின் கட்டளைப்படி அது கண்ணீர்ப் பைகளை பிழிந்தெடுத்து இரண்டு கண்ணிலிருந்தும் கண்ணீரைத் தாரைதாரையாக சுரக்கச் செய்கிறது. மேலும் இந்த உணர்ச்சிகளின் சமிக்கையானது அமெக்டெலாவின் அக்கம் பக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்ட ஏனைய பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் வழியே முகத்தின் நுண்ணிய தசைகளின் இயக்கத்தையும் பொம்மலாட்ட வித்தையைப் போல் ஆட்டுவித்து விதவிதமான முகபாவணைகளாக நம் முகத்தில் உருப்பெறச் செய்கிறது. இதன் ஒட்டுமொத்த விளைவாகத் தான் முகத்தசைகள் ஒருவித கூட்டு இயக்கமாகி உதடுகள் விரிய அகலச் சிரிப்பதும், இரத்த வெள்ளப் பாய்ச்சலில் முகம் வெட்கிச் சிவப்பதும், தசைகளெல்லாம் தளர்ந்து போய் சோகத்தை சுமந்தபடி முகம் கவலையளிப்பதுமாகிய பாவங்களாக வடித்து நம்மைக் காட்சி வடிவில் வெளிப்படுத்துகிறது.

நம் தூசி விழுகிற கண்களில் இமைகளை மூடித் திறந்து கசடுகளைத் துடைத்தெடுப்பதற்கும், நொடிக்கொருமுறை கடற் சிப்பியையப் போல் கண்சிமிட்டித் திறக்கிற விழித்திரையின் உராய்வினைக் குறைப்பதற்கும் எப்போதுமே கண்களில் புலப்படாத அளவில் கண்ணீர் வழிய சுரந்து கொண்டேதான் இருக்கும். பொழுதிற்கும் பாதுகாப்பிற்காக கருவிழியின் மேல் படலமாய் சுரக்கிற இக்கண்ணீரெல்லாம் மீச்சிறு அளவிலேயே இருப்பதால் அவை நம் கண்ணங்கள் வழிய முகத்திலெல்லாம் வழிந்தோடுவதில்லை. இதனால் இதைப் பெரும்பாலும் நம்மால் பார்த்தறியவும் முடிவதில்லை.

ஆனால் நாம் உணர்ச்சிவசப்பட்டுத் தேம்பியழுகையில் கண்ணீர் அருவியாய் ஆர்ப்பரித்தபடி வழிந்து முகத்தில் வழித்தடத்தை அமைத்தவாறே சட்டைகள் நனைய அடம்பிடித்தழுகிற குழந்தையின் செய்கையைப் போலவே நம்மைக் காட்சிப்படுத்த வைத்துவிடுகிறது. அதிலும் உச்சகட்டமாக அழுகின்ற போதே நாசியிலிருந்து தடுமன் பிடித்ததைப் போல நீரொழுகும்படியான தோற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. இதையெல்லாம் நினைக்கும் போதே, இதென்ன கொடுமை! அழுதால் கூடச் சளி பிடிக்குமா? என்று நமக்கு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும இருக்கிறது. இப்படியெல்லாம் நம் மூக்கு சிவந்து நீராய் வழிவதும்கூட விழிகளில் சுரந்த அதே கண்ணீர்தான் என்பதையும் கூடவே நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா!

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

நாம் அதீத உணர்ச்சிக்குள்ளாகும் போது கண்ணீர்ப் பையிலிருந்து பெருக்கெடுத்து வெளியேருகிற அதிகப்படியான கண்ணீரானது வற்றிய மணற்பாங்கான ஆற்றின் வலசைப்பாதையில் மீண்டும் வெள்ளம் அடித்துச் செல்வது போல கண்ணக் குழிகளின் வழியே அது வழிந்தோடுகிறது அல்லது இருவிழிகளும் சந்திக்கிற உச்சிப்பொட்டில் உள்முகமாய் இருக்கிற கண்ணீர் வெளியேற்று குழாய் வழியாக மூக்குப் பகுதிக்குள் நுழைந்து அது நாசித்துளையில் வெளியேறுகிறது. இதனால் தான் அழுகையில் கண்ணத்தில் வழிகிற கண்ணீரைக் கைக்குட்டைகள் நனைய துடைத்துக் கொண்டும், நாசியில் வழிகிற கண்ணீரைச் சளியென எண்ணிக் கொண்டு உர்ர்..ரென உறிஞ்சியபடியும் இருக்கிறோம். நம் கண்ணங்களின் கால்வாயில் வழிந்தோடுகிற கண்ணீரைப் பார்த்தவுடனே நம்மால் ஒருவரது பாசத்தின் மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கண்ணீர்ப்பையின் வெளியேற்று குழாய் வழியே பாய்ச்சலோடு மூக்கில் வடிகின்ற கண்ணீரைப் பற்றி நாம் இன்னமும் புரிந்து கொண்டபாடில்லையே!

சரி, இப்போது உணர்ச்சிப்பட்டு அழுவதும் சிரிப்பதுமாக இருப்பதற்கும் அதனால் கண்கள் கொள்ள கண்ணீர் சுரந்து பொங்கி வழிவதற்குமான விளக்கத்தைப் பார்த்தாயிற்று அல்லவா! ஆக, இப்போது தாய்ப்பாலுக்கும் மகிழ்ச்சிகரமான உணர்ச்சிக்குமான பந்தம் என்னவென்பதைப் பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோமா!

மார்புக் காம்பில் குழந்தைகள் கவ்விச் சுவைக்கிற தூண்டுதலின் வழியே உற்சாகமாகிய மூளையானது தனது தாய்ப்பால் ஹார்மோனைச் சுரப்பதும், அதிலிருந்து தரிசனம் பெறுகிற மார்பகங்கள் குதூகலித்துத் தாய்ப்பாலை மார்பினில் பெருக்குவதும் ஒருபக்கம் இருக்க, அதற்கெல்லாம் தூபம் போடுவது என்னவோ அம்மாவின் உணர்ச்சிகள் தானே! எனவேதான் வீட்டுச் சூழலின் மனக்கசப்பில் பிள்ளை பெற்றவள் ஏதேனும் குழப்பத்துடனோ, அசௌகரியத்துடனோ, மனச்சங்கடத்துடனோ, அழுதபடியோ, தாய்ப்பால் போதாத கலக்கத்துடனோ, எப்போதும் பசியில் அரற்றி அலறுகிற குழந்தைகள் மீதான பதட்டத்தினாலோ, தூக்கமே பிடிக்காத அல்லது பிள்ளை மேலான கவனத்தில் தூங்க முடியாத எரிச்சலுடனோ பாலூட்டுகையில் இத்தகைய எதிர்மறையான உணர்ச்சிகளெல்லாம் மூளையின் லிம்பிக் மண்டலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தாய்ப்பாலைச் சுரக்கவிடாமல் செய்வதற்கான பெரும் பட்டிமன்ற விவாதமே நடக்கிறது.

இதில் எப்போதும் நீதிமானாகிய ஹைப்போதலாமஸ் தான் தன்னிடமிருக்கிற நரம்புகளின் புனிதநூலில் சொல்லப்பட்டுள்ள போதனைகளையெல்லாம் வாசித்து அது தன் இறுதிச் சாட்சியத்தை வழங்குகிறது. ஹைப்போதலாமஸிடமிருக்கிற ஆர்க்குலேட் மற்றும் பெரிவெண்டிரிகுளார் நரம்புகளின் மையக்கருக்கள் தான் அதனுடைய புனிதநூல்கள். அவை பெற்றவளினுடைய உணர்ச்சிகளை அலசிப் பார்த்து அதற்குண்டான தீர்ப்பாக தன்னிடமிருக்கிற டோபமின் என்கிற வேதிப்பொருளைச் சுரக்கிறது. இப்படி ஒவ்வொருமுறையும் நாம் எதிர்மறையாகச் சிந்திக்கிற போதெல்லாம் மூளையும் டோபமினது வேதிப்பொருளை நிறைய சுரக்கச் செய்தபடியே இருக்கும். இப்படி ஹைப்போதலாமஸிலிருந்து வெளியேறுகிற டோபமின் இரத்தக் குழாய்களின் வழியே நழுவி அடுத்துத் தந்திரமாக பிட்யூட்டரிக்குள் நுழைந்து விடுகிறது.

இந்த டோபமினுடைய வேலையே பிட்யுட்டரியில் தாய்ப்பாலைச் சுரக்கச் செய்கிற புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்துவதுதான். ஆகையால் தான் நாம் வருத்தமாக, சோகமாக, எரிச்சலாக, பயத்துடன் என இருக்கிற போதெல்லாம் டோபமினும் ஹைப்போதலாமஸிடமிருந்து வெளியாகி தாய்ப்பால் ஹார்மோன்கள் சுரப்பதைத் தடுத்துவிடுகிறது. ஆக, இப்போது புரிகிறதா, பெத்தவ மனசு கோணாம நடந்துகோங்கப்பா! என்று பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்பதை?

அதே சமயம் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையேயான பந்தபாசம் அதிகரித்தால் அத்தகைய உணர்வுகள் மீண்டும் மீண்டும் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை லிம்பிக் சிஸ்டத்தை ஓயாமல் தட்டி எழுப்பியபடியே இருக்கிறது. இப்படி ஒவ்வொரு முறை தூண்டப்படுகிற போதெல்லாம் நரம்புகளும் ஹைப்போதலாமஸிடம் சென்று, எப்பா! கொழந்த அழுறது பத்தாதுனு அந்தம்மாவும் பாசத்துல பொங்கி அழுகுறதுக்குள்ளார, பிட்யூட்டரிக் கிட்டச் சொல்லி கொஞ்சம் சீக்கிரமா தாய்ப்பாலைச் சுரக்கச் சொல்லப்பா என்று கொஞ்சிக் குழைந்தே பணிய வைத்துவிடுகிறது. உடனே ஹைப்போதலாமஸூம் ம்ம்.. சரி சரி, ஆகட்டும்! என்று பிட்யூட்டரியிக்கு உண்டான தாய்ப்பாலூட்டுவதற்கான ஒப்பந்தப் பணி ஆணையை பிள்ளை பால்குடிக்கிற காலம் வரைக்கும் வழங்கிவிடுகிறது. பிட்யூட்டரியும், சரி அப்படியே ஆகட்டும்! என்று தாய்ப்பால் ஹார்மோன்களான புரோலாக்டின், ஆக்ஸிடோசினை குழந்தைகள் பால்குடி மறக்கிற காலம் வரையிலும் சுரந்து அதனால் தொடர்ந்து இரு மார்பகத்திலும் தாய்ப்பாலை அளவில்லாமல் பெருகச் செய்தபடியே இருக்கிறது.

இதனால் தான் குழந்தையின் ஞாபகம் வருகின்ற போதும், அவர்களின் அழுகுரல் கேட்கிற போதும் சட்டென்று அத்தகைய உணர்வுகள் லிம்பிக் சிஸ்டத்தால் உணரப்பட்டு தாய்ப்பாலும் மார்பில் கனத்து சுரக்கத் துவங்கிவிடுகிறது. பேரன்பிற்குரிய தாய்மார்களே! உங்களது பிள்ளையைப் பற்றி நினைத்தாலே தாய்ப்பால் சுரக்கிறதென்றால் தன் பிள்ளையே கதியென கிடக்கிற உங்களுக்கு அணுதினமும் தாய்ப்பால் சுரக்காமலா போய்விடும்? சொல்லுங்கள் பார்ப்போம்!

படுக்கையில் குழந்தைகள் கை, கால்களை உதைத்தபடி அழுவதையும், சிரிப்பதையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அம்மாக்கள் அருகிலேயே படுத்திருப்பார்கள். குழந்தைகள் ஒவ்வொரு விரல்களாகச் சப்பிக் கொண்டே அம்மாவைப் பார்த்து ங்கே.. ங்கே.. என மழலை மொழியில் பேசுவதைக் கேட்டவுடன் என்னடா செல்லம்! பசிக்குதா? என்று அம்மாக்களும் பதிலுக்கு கொஞ்சிப் பேசியபடியே இருப்பார்கள். இப்படியான மகிழ்ச்சியான நேரங்களிலெல்லாம் டோபமின் என்கிற வேதிப்பொருள் வெளியே கொஞ்சம்கூட எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் தாய்ப்பால் ஹார்மோன்கள் சுரப்பதற்கென்று எந்த இடையூறும் இறுதிவரை வருவதில்லை.

இதில் இன்னொரு விசயமாக, ஆக்சிடோசின் ஹார்மோன்கள் சுரந்தவுடனே அவை அம்மாவிற்கு வேறொரு உதவியும் செய்கிறது. இந்த ஹார்மோன்கள் மூளையின் லிம்பிக் சிஸ்டத்திற்குச் சென்றவுடன், பாருங்களேன் அம்மா! இனி ஒன்றுமே பிரச்சினையில்லை. எல்லாம் நல்ல படியாகத் தான் போய் கொண்டிருக்கிறது என்று அமைதிப்படுத்துகிற வேலையிலும் நம் பிள்ளை வயிறு நிறைவதற்கு கங்கையின் தீராத பெருந் தீர்த்தம் போல தாய்ப்பால் சுரந்து கொண்டே இருக்கையில் குழந்தையுடன் கொஞ்சிக் குழாவி விளையாடிக் களிப்பதைவிட இனி உனக்கு வேறென்ன வேலையிருக்கிறது!″ என்று அம்மாக்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிற வேலையிலும் ஈடுபடுகிறது. இதனால் தான் அம்மாக்கள் தன் பிள்ளை எப்படி இருந்தாலும் என் பிள்ளை தங்கமாக்கும், தெரியுமா? என்றே பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் இதற்கான காரணமெல்லாமே இந்த ஆக்சிடோசின் ஹார்மோன்கள் தான்!

இப்போது நாம் கண்ணீரைப் போன்றே தாய்ப்பாலும் உணர்வுப்பூர்வமாக சுரக்கக்கூடிய ஒன்றுதான் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டோம் அல்லவா! இத்தகைய உணர்வுப் பூர்வமான விசயங்களை கையாளுகிற ஒன்றைத்தான் நாம் நமக்குத் தெரிந்த மொழியில் காலங்காலமாக மனசு என்று சொல்லிக் கொண்டே வருகிறோம். இந்த மனசு எப்போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடம்பிலுள்ள எல்லா உறுப்புகளும் சரியாக வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதாவது பிள்ளை பெற்றவளின் மனசு எப்போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் தாய்ப்பாலும் தங்கு தடையில்லாமல் சுரந்து கொண்டே இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அருமைத் தாய்மார்களே! தாய்ப்பாலூட்டும் காலங்களில் உடலுக்கு ஈடாக நம்முடைய மனதைப் பற்றியும் நாம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரப்பதற்கான மருந்து, மாத்திரைகள், உணவுகள் என்பதெல்லாம் தாண்டி பெற்றவளினுடைய சந்தோஷங்கள் தான் தாய்ப்பால் சுரப்பதற்கான மிக முக்கியமான விசயம் என்பதை நாம் இப்போது விஞ்ஞானப் பூர்வமாகவே உணர்ந்து கொண்டோம் அல்லவா! ஆக, இனிமேலாவது நாம் கட்டாயம் தாய்ப்பால் புகட்டுகிற அம்மாக்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்வோம் தானே!

முந்தைய தொடர்களை வாசிக்க:

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

Thaipal Enum Jeevanathi WebSeries 7 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

பிரசவ நேரமும் தாய்ப்பாலூட்டும் காலமும்

கருவேலங்காட்டுக்குள் விறகெடுக்க புள்ளத்தாச்சியாகப் போய் அங்கேயே பிரசவ வலியெடுத்து தலைமாட்டில் ஒரு கட்டு விறகையும், கையிலே கவிச்சை வாசத்தோடு பச்சைப் பிள்ளையும் தூக்கிச் சுமந்தவாறு பேறுகாலத்தைக் கடந்து வந்த பெண்களின் காலமெல்லாம் ஏதோ அதிசயக்கத்தக்க நிகழ்வாகிவிட்டன. மகப்பேறுக்கென்று தனித்த மருத்துவம் வளராத அன்றைய காலகட்டத்தில் பிரசவம் பற்றிய நுட்பமான விசயங்கள் பிடிபடாத போதும்கூட அவர்கள் மிக இயல்பாகவே பேறுகாலத்தை எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சுகப்பேறுக்கென்று தனியே அவர்கள் எதையும் மெனக்கெட்டுச் செய்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் கர்ப்பவதியாக உறுதி செய்யப்பட்ட தருணத்திலிருந்து பிரசவிக்கிற காலம் வரைக்குமாக பெண்கள் பேறுகாலத்தைப் பற்றிய அச்சத்தோடும் குழப்பத்தோடும் தான் இருக்கிறார்கள். இப்போதாவது கர்ப்பகாலம், பேறுகாலத்தைப் பற்றிய விசயங்களை மருத்துவரிடமோ புத்தகங்கள் மற்றும் காணொளிகள் வாயிலாகவோ பார்த்து விளங்கிக் கொள்ள முடிகிறது. அப்படியிருந்தும் பிரசவத்தைப் பற்றிய பயம் பெண்களைத் தொற்றிக் கொள்கிறதென்றால் இன்றைய மருத்துவம், மகப்பேற்றை ஒரு நோயைப் போல அணுகவும், பிரசவத்தை ஏதோ சிகிச்சை எடுத்துக் கொள்வதைப் போலப் பார்க்கவும் தானே அவர்களைப் பழக்கியிருக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வாக பேறுகாலம் பற்றிய பயத்தைப் போக்க வேண்டுமென்றால் மருத்துவத்தோடு கூடவே மக்கள் பண்பாட்டையும் நாம் இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது தாய்வீட்டு பிரசவம், வளைகாப்பு உள்ளிட்ட மனதளவில் பக்குவப்படுத்துகிற கொண்டாட்டங்களை இன்றைய மருத்துவத்துடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கூடுதலாக மகப்பேறு பற்றிய விசயங்களை சகலருக்கும் புரிகின்ற வகையில் அறிவியல் பார்வையோடு பொதுச்சமூகத்திற்கு விளக்கவும் வேண்டியிருக்கிறது.

ஆனால் மகப்பேறுக்கென்று மருத்துவமும் மக்கள் பண்பாடும் முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு தாய்ப்பாலுக்கென்று இப்படி ஏதேனும் தனியே மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. இங்கே பிள்ளைப்பேற்றைப் பற்றிய தெளிவோடு கர்ப்பவதிகள் பிரசவ அறைக்குள் நுழைவதென்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப் போலவே தாய்ப்பாலைப் பற்றிய புரிதலோடு குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் மிக முக்கியமாகிறது. ஏனென்றால் பிரசவித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டும் நிகழ்வானது ஆரம்பமாகிவிடுகிறதே!

அடடா, பிள்ளை பிறந்த பின்னால் தானே தாய்பாலூட்ட முடியும்? அப்படியிருக்க பிரசவித்துக் கொண்டிருக்கும் போதே எப்படி அவர்களுக்கு நாங்கள் தாய்ப்பாலூட்ட முடியுமென்று குழப்பமாக இருக்கிறதல்லவா! சரி, இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு முன்னால் பிரசவத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்த்துவிடுவோம். பிரசவம் பற்றிய தெளிவிற்குப் பின்பாக தாய்ப்பால் பற்றிய உலகத்திற்குள் செல்கிற போதுதான், பிரசவத்திற்கும் தாய்ப்பால் சுரத்தலிற்குமான தொடர்பினை நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியும்.

உங்களின் பிரசவ தேதி நெருங்கி வந்து அடிவயிற்றிலும் இடுப்பிலுமாக வலியெடுக்கத் துவங்குகிற சமயத்தில் தான் குழந்தையின் தலையானது கர்ப்பப்பை வாயிலிருந்து நகர்ந்து இடுப்புக் கூட்டின் எலும்பிற்குள்ளாக நுழையவே ஆரம்பித்திருக்கும். கர்ப்பகாலம் முழுவதுமே கருப்பையிலிருந்து நழுவி குழந்தை கீழே இறங்கிவிடாமலிருக்க பாதுகாப்பாய் கர்ப்பப்பை வாயினை அடைத்து வைத்திருந்த இரத்தமும் சளியுமாகிய மூடியானது, அப்போது பிரசவ ஹார்மோன்களால் கரைந்து வெளியேறத் துவங்கியிருக்கும். இப்படி பிரசவத்தின் முதல் அறிகுறியாக கர்ப்பப்பையானது ஆரம்பத்தில் இரத்தத்தையும், சளி போன்ற திரவத்தையும் வெளியேற்றுகிறது. அதன் தொடர்ச்சியாக பனிக்குடமும் உடைந்து நாம் படுத்திருக்கிற பிரசவ மேசையின் மீது நீரோட்டம் போல அது வழிந்தோட ஆரம்பிக்கிறது.

அடுத்ததாக குழந்தையின் தலையிலிருந்து கால் வரை நுழைந்து வெளியேறுகிற அளவிற்கு கர்ப்பப்பையின் வாசல் பெரிதாக இளகிக் கொடுக்க வேண்டுமல்லவா! குழந்தை இறங்கி வரவர அவர்களின் தலையானது இடுப்பெலும்பில் போய் முட்டி முட்டி அதனை நெட்டித் தள்ள ஆரம்பிக்கிறது. குழந்தையின் வருகையால் கர்ப்பப்பையின் வாசல் பகுதியும் ஒரு மலைப்பாம்பின் வாயினைப் போல பெரிதாக விரிந்து கொடுக்கிறது. அந்த சமயத்தில் ஒரு ஆட்டோக்காரர் ஹார்னை அமுக்கியும் தணித்தும் பெரும் சப்தத்தை எழுப்ப முயற்சிப்பது போல கர்ப்பப்பை மற்றும் வயிற்றுப் பகுதியின் தசைகளெல்லாம் ஒரே சீராக சுருங்கியும் தளர்ந்துமாக குழந்தையை வெளித் தள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில் இடுப்பெலும்பின் ஒடுங்கிய சுரங்கப் பாதையின் வழியே குழந்தை வழுக்கிக் கொண்டே வந்து பிறப்புறுப்பின் வாசல் வெளியே பிறந்து விடுகிறது.

சரி, இப்போதுதான் குழந்தை பிறந்துவிட்டதே! அடுத்ததாக பிரசவத்திற்கும் தாய்ப்பாலூட்டுவதற்கும் இடையிலான மிக முக்கியமான விசயத்திற்கு வருவோமா? நாம் இன்றுவரையிலும் தாய்ப்பாலூட்டுகிற நிகழ்வை வெறுமனே பிரவசத்திற்குப் பின்பான ஒரு விசயமாகத் தானே புரிந்து வைத்திருக்கிறோம்! அதைப் போல குழந்தை பிறந்து அம்மாவையும் பிள்ளையையும் பிரசவ அறையிலிருந்து வார்டுக்கு மாற்றிய பின்பாகத் தானே குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டவே போகிறோம்! என்று ஏனைய தாய்மார்களும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் என்னவோ, பிரசவிக்கிற போதே பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டும் நிகழ்வானது துவங்கிவிடுகிறது. மேலும் அம்மாவையும், குழந்தையையும் வார்டு பகுதிக்கு மாற்றுவதற்கு முன்பாகவே பிரசவ அறையில் வைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் தாய்ப்பால் பற்றிய எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை எடுத்துவிடுகிறார்கள். அதனால் தான் பிரசவத்தோடு சேர்த்தே தாய்ப்பால் புகட்டுகிற விசயங்களையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அதாவது பிரசவ மேடையில் முக்கி முணங்கியபடி பிள்ளையைப் பெற்றெடுத்த அடுத்த கணமே தொடையை அழுந்தப் பிடித்து குழந்தையை வெளித்தள்ள முயற்சித்துக் கொண்டிருந்த உங்களின் கைகளை நீட்டச் சொல்லி இரத்தமும் சதையுமான குழந்தையை அப்படியே உள்ளங்கைகள் நிறைய மருத்துவர்கள் கொடுத்துவிடுவார்கள். இரத்தமும் பனிக்குட நீருமாக குழைத்துச் செய்த சுதைமண் குழந்தை சிற்பமொன்று உயிர்பெற்றெழுந்து வந்ததைப் போல கைகளில் துள்ளுகிற கெளுத்தி மீனாகிய அவர்களைப் பார்க்கையில் சட்டென்று உருக்கொள்கிற பரவசத்துடன் கூடிய பதட்டத்தில் நமக்குச் சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பமும் கூடவே தொற்றிக் கொள்ளும். ஆனாலும் ஒருபிடிக்குள் அடங்கிவிடுகிற தன் பிள்ளையை முதல் முறையாகத் தரிசிக்கிற அம்மாக்களின் உணர்வுகளை எப்படித்தான் வர்ணிப்பது? ஒருவேளை தாய்மையின் ஊற்றுக்கண் பிறக்கிற இடம்கூட இதுதானா? தோல்கள் மினுங்குகிற வார்ப்பில் செவிலியர் நன்றாக குழந்தையைத் துடைத்தெடுத்து புதுத்துணியில் பூவாய் அவர்களைச் சுற்றியபடி நீட்ட, உறவினர்கள் அவர்களை பதனமாக வாங்கி பூரித்துப் போய் உச்சி முகருகிற உணர்வைவிட தாயின் இந்த முதல் உணர்ச்சியென்பது நிச்சயமாக பெரும் உற்சவம் கூடிய அரிய தருணமாகத் தான் இருக்க முடியும்.

ஒடுங்கிய கண்ணிலிருந்து ஊற்றுநீர் கசியக் கசிய, விம்மித் துடிக்கிற தாயின் வெடிப்புற்ற உதடுகளிலிருந்து வார்த்தைகளின்றி தங்கள் குழந்தையைப் பார்த்து விசும்புகிற அந்த நிமிடங்கள் யாவும் அவள் கடந்து வந்த பத்து மாதக் கனவுகளின் நிஜம் தானே! குழந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நீண்ட மௌனத்தோடு உரையாடுகிற அவளின் வார்த்தைகளில் தான் எத்தனை எத்தனை கனமிருக்கும்? எவ்வளவு வலியிருக்கும்? எத்தகைய காத்திருப்பு மிகுந்திருக்கும்? அத்தகைய தருணத்தில் அம்மாவிற்கும் பிள்ளைக்குமிடையில் பார்வையிலே பரிமாறிக் கொள்கிற அன்பும், அழுகையொன்றே மொழியாகிய அவர்களின் எல்லையற்ற பாசமும் பூக்கள் சொரிந்த நந்தவனத்தில் நிறைந்த நறுமணத்தைப் போல பிரசவ அறையெங்கும் கமழ்ந்தபடியே தான் இருக்கும். அப்படியென்றால் பிரசவ அறையே குழந்தைகள் பூத்த ஒரு நந்தவனம் தானா?

இத்தகைய பேரன்பும், குழந்தையின் மீதான எல்லையற்ற நேசமும் தான் மார்பிலே தாய்ப்பால் ஊற்றாய் சுரப்பதற்கான மந்திரச்சாவி என்பதைப் பற்றி நாம் இதுவரையுமே புரிந்து கொள்ளவில்லை. குழந்தை பிறந்தவுடன் இயல்பாகவே தாயிடமிருந்து உருக்கொள்கிற இத்தகைய உணர்ச்சிப் பெருக்குதான் தாய்ப்பாலையும் மார்பிலே பெருக்குகிறது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையல்ல தாய்மார்களே, அறிவியல் நிரூபனமான உண்மை.

பெண்களுக்குப் பிரசவச் சிக்கலாகி குழந்தை ஒருபக்கம் அவசரப்பிரிவிலிருக்க, அம்மா மட்டும் வார்டில் தனித்திருக்கையில் அதுவே மனஅழுத்தமாகி அதனாலேயே தாய்ப்பாலின்றி அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதோடு குறைவான அளவிலே சுரக்கிற சீம்பாலைப் புகட்டியவுடன் மீண்டும் மீண்டும் பசித்து அழுகிற பிள்ளையைப் பார்த்து தாய்ப்பால் போதவில்லையோ என்கிற தவறான புரிதலில் உறவினர்கள் பெற்றவளைக் குறைகூறுகிற போது தாயின் இயல்பான மகிழ்ச்சிக்குரிய உணர்ச்சிகளெல்லாம் மட்டுப்பட்டு தாய்ப்பால் சுரத்தலை அது தாமதப்படுத்துவதையுமே ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்! ஆக, இத்தகைய இயல்பாகிய உணர்ச்சிகளையெல்லாம் அதிகரிக்கச் செய்வதற்குத் தான் பிரசவித்தவுடனேயே குழந்தையை அம்மாவிடம் கொடுத்து தொப்புள்கொடியுடன் பிணைந்த பிள்ளையின் பிரசவித்த குருதியைப் பூசிச் சிவந்து பொழிவுற்ற முகத்தைப் பார்க்கச் செய்கிறார்கள்.

பிறந்தவுடன் இரத்தக் கவிச்சி வாசத்துடன் கூடிய பிள்ளையின் முகத்தைப் பார்த்தும், அழுகின்ற அவர்களின் பூனைக்குரலைக் கேட்டும், மெல்ல மெல்லக் கூடுகிற பச்சை உடலின் பால் வாசம் நுகர்ந்தும், இறுக மார்பைப் பற்றியபடி குழந்தைகள் கவ்விச் சுவைக்கிற தொடுதலை உணர்ந்துமாக, ஒவ்வொன்றின் வழியாகத் தூண்டப்படுகிற நரம்புகள் தான் மூளைக்குச் சென்று தாய்ப்பாலைச் சுரப்பதற்கான வேலையைச் செய்கின்றன. ஆக, இத்தகைய உணர்ச்சித் தூண்டலின்றி தாய்ப்பாலைச் சுரக்கச் செய்வதற்கான மருத்துவமோ மருந்துகளோ எதுவுமேயில்லை என்பதை நாம் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தையைத் தொட்டுப் பார்த்து, யாரைப் போலிருக்கிறார்கள் எனக் கற்பனை செய்து, உச்சிமுகர்வதின் வழியே அவர்களின் பச்சை வாசம் அறிந்து, அந்தப் பிஞ்சு உதடுகளிலிருந்து அவ்வப்போது வெளிப்படுகிற ம்ம்ம்.. ம்ம்ம்.. னுடைய குரலிசைக் கேட்டு, அவர்களை முற்றிலுமாகப் புரிந்து கொள்கிற பட்சத்தில் இத்தகைய மென்மையான உணர்வுகளெல்லாம் மூளையிலே சென்று பதிவாகி தாய்ப்பால் சுரப்பதற்கான புரோலாக்டின் ஹார்மோன்களை அதிகளவில் உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. இச்சமயத்தில் குழந்தையை மார்பில் போட்டு பாலூட்டுகிற போது அதன் காம்பைச் சுற்றிய ஏரியோலாவின் நரம்புகளெல்லாம் உணர்ச்சித் தூண்டலாகி அது தாய்ப்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது.

பிரசவித்த குழந்தையானது அடிவயிற்றை முட்டி வெளிவந்த கணமே அவர்களைத் தூக்கி அம்மாவின் கையில் கொடுத்துவிடுகிறார்கள் அல்லவா! அச்சமயத்தில் குழந்தையும் தாயுமாக இன்னும் வெட்டப்படாத தொப்புள்கொடியின் தொடர்பிலேயே தான் இருப்பார்கள். அத்தகைய பிணைப்பில் இருந்தபடியே பிள்ளைக்குப் பாலூட்டுகையில் அடிவயிற்றை முட்டி வெளிவந்த அவர்களோ இப்போது மார்பினை முட்டி பாலருந்தத் தயாராகிவிடுகிறார்கள். ஆக, ஒரு தாயின் முதல் தாய்ப்பாலூட்டும் நிகழ்வானது தொப்புள்கொடியை வெட்டுவதற்கு முன்பாகவே நடந்துவிடுகிறது என்கிற உண்மையை நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொப்புள்கொடி என்பது பல செப்புக் கம்பிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்து மின்சாரத்தை எடுத்துச் செல்கிற வயரினைப் போலவே, அது அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையேயான இரத்தத்தை மூன்று இரத்தக்குழாய்களின் வழியே எடுத்துச் செல்கின்ற ஒரு கொடி வயருதான். பொதுவாக குழந்தை பிறந்து தொப்புள்கொடியில் செல்கின்ற ரத்தக்குழாயினுடைய துடிப்புகள் நின்ற பிறகு தான் மருத்துவர்கள் அதை துண்டிக்கவே செய்வார்கள். அதுவரையிலும் தொப்புள்கொடியின் உதவியால் அம்மாவும் குழந்தையும் ஒருசேர இணைந்தே தான் இருப்பார்கள். இப்படித் தாமதமாக தொப்புள்கொடி வெட்டுகிற செயலினால் தான் மெல்ல துடித்தோடிக் கொண்டிருக்கிற இரத்தக்குழாயின் வழியே கூடுதலான இரத்தமானது குழந்தைக்குச் செல்கிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தில் இரத்தச்சோகை போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடுகின்றன.

முலைக்கம்பின் கயிற்றில் பிணைக்கப்பட்ட தாய்ப்பசுவானது அதன் கன்றுக்குட்டிக்குப் பாலூட்டுவதைப் போலவே, அம்மாவும் தனது குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையிலேயே மார்பில் போட்டு பாலுட்டிக் கொண்டிருப்பாள். குழந்தை பிறப்பதற்கும் தொப்புள்கொடியின் துடிப்பு நின்று அதனைத் துண்டிப்பதற்கும் இடையிலான குறுகிய நேரம் தான், தாய் தன் பிள்ளைக்கு முதல் தாய்ப்பாலான சீம்பாலைப் புகட்டுவதற்கான மிகச் சரியான நேரமே! இச்சமயத்தில் குழந்தையை மார்பிலே போட்டு சுவைக்கச் செய்வதன் மூலமாக அவர்கள் மிக நீண்ட ஆயுள் வாழ்வதற்கான முதல் அடியினை தாய்மார்கள் எடுத்து வைக்கிறார்கள். மேலும் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைகளுக்குமாக தாய்மார்கள் செய்ய வேண்டிய முதல் சடங்கும் கடமையுமாக இத்தகைய சீம்பால் புகட்டும் நிகழ்வு தான் பாரம்பரியமாய் இருக்கிறது.

கர்ப்பகாலத்திலேயே மார்பகத்தை சுத்தமாக பராமரிப்பதன் அவசியத்தைப் பற்றி சென்ற அத்தியாயத்திலேயே பார்த்தோம் அல்லவா! இதன் மூலமாக பிரசவித்தவுடனே பாலூட்டுதற்காக மார்பகத்தை அவசர அவசரமாக தயார்படுத்துவதைப் பற்றி தாய்மார்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. பொதுவாக பிரசவித்த மறுகணமே தாய்ப்பாலைப் புகட்டச் சொல்லி தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுவதால் மார்பகத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமிருக்காது. பிரசவத்திற்கு முன்பாகக் கிடைக்கிற நேரத்தில் வேண்டுமானால் வெந்நீரில் துணியை நனைத்து மார்பகத்தை சுத்தமாக்கிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதன் மூலமாக மார்புக்காம்பை கவ்விச் சுவைக்கிற குழந்தைகளுக்கு ஆரோக்கியமில்லாத மார்பகத்தால் ஏதேனும் தொற்றாகிவிடுமோ என்று தாய்மார்களும் அச்சப்பட வேண்டியதில்லை.

பிரசவ அறையிலே தாய் சேயினுடைய முழு உடல் பரிசோதனையும் செய்துவிட்டு அவர்களை தாய்ப்பால் புகட்டுவதற்காக எல்லா வகையிலும் தயார் செய்த பின்னரே வார்டு பகுதிக்கு மாற்றுவார்கள். அதேசமயம் சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களை அறுவை அரங்கிலிருந்து அவசரப்பிரிவிற்கு மாற்றிய பின்பு கொஞ்சம் தாமதமாகத் தான் வார்டுக்கு அனுப்புவார்கள். இதனால், தங்கள் குழந்தைக்கு இயல்பாகவே தாய்ப்பால் புகட்ட முடியாத நிலையில் சிசேரியன் தாய்மார்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும்கூட பெண் உறவினர்கள் யாரேனும் சிசேரியனாகிய தாயின் மார்பிலிருந்து தாய்ப்பாலைப் பிளிந்தெடுத்து பாலாடையில் கொண்டு போய் குழந்தைக்கு ஊட்டிவிட முடியும்.

  ஆனாலும் தாய்ப்பாலைப் பீய்ச்சி எடுப்பதை ஒருசிலர் அசூசையாக நினைத்துக் கொண்டு விலகியே இருந்துவிடுகிறார்கள். ஒருவேளை அச்சமயத்தில் பசிக்காக அழுது குழந்தைகள் துவண்டு போக ஆரம்பித்தால் சட்டென்று உறவினர்களெல்லாம் பதட்டமாகி புட்டிப்பால் கொடுப்பதற்காக தயாராகிவிடுகிறார்கள். இப்படி, இரத்த உறவாகிய பெண்ணின் மார்பைத் தொட்டு பாலாடையில் பாலெடுத்துக் கொண்டு போய் பிள்ளைக்குப் புகட்டுவதையெல்லாம் அசூசையாக நினைத்துக் கொள்பவர்களுக்கு, மாட்டின் பாலையோ நிறுவனங்கள் அடைத்துக் கொடுக்கிற பால்பவுடரையோ புட்டியில் நிரப்பி கொடுப்பதற்கு எந்தக் கூச்சமும் படுவதில்லை. ஆகவே தான் உடனிருக்கிற உறவினர்களும் சீம்பால் மற்றும் தாய்ப்பால் புகட்டுதல் பற்றிய விழிப்புணர்வுடனே இருப்பது அவசியமாகிறது.

எல்லாவற்றையும்விட தாய்மார்களுடைய முக்கியப் பிரச்சனையே பிரசவித்த வேதனையும் கடந்து இலேசாக உடலை இசைந்து கொடுத்தபடி பிள்ளையின் பசிக்கு ஏற்ப தாய்ப்பாலூட்ட வேண்டுமென்பது தான். ஆனாலும்கூட தாயினுடைய வலியும் வேதனையும் தீர, குழந்தைகள் மார்பிலே தாய்ப்பாலைச் சவைத்துக் குடிப்பது ஒன்றுதான் தீர்வு என்பதைப் பற்றி நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மார்புக் காம்பை சவைத்துக் குடிக்கையில் அத்தகைய தொடு உணர்வினால் தூண்டப்பட்ட நரம்புகளெல்லாம் மூளைக்குச் சென்று தாய்ப்பால் ஹார்மோனான புரோலாக்டினைச் சுரக்கச் செய்கிற அதேசமயத்தில் கூடுதலாக ஆக்ஸிடோசின் ஹார்மோன்களையும் இரத்தத்தில் சுரக்கச் செய்கிறது. இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் தான் தாய்மார்களினுடைய தாய்மைக்கான உணர்வுகளையும், மகிழ்ச்சியுடன்கூடிய ஆனந்தப் பெருநிலையையும் கூடிப் பெருகச் செய்கிறது. தாய்மார்களெல்லாம் இன்றும் பிரசவித்த அத்தனை உடல் வாதையும் கடந்து மகிழ்ச்சியோடு பாலூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு இத்தகைய ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் விடாமல் உடலில் சுரப்பதுதான் காரணமே!

அதேசமயம் தாய்ப்பாலூட்டத் துவங்குகிற போது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயமும் இருக்கிறது. பிரசவித்தவுடனே அயர்ந்து போய் படுத்திருக்கிற அம்மாவின் உடலில் பாசி போல் படிந்த பனிக்குடத் தண்ணீரின் கறையும், வழிந்தோடிய இரத்தத்தின் உறைந்த திட்டுகளுமாக அங்குமிங்கும் சேர்ந்திருக்கும். இதன் கூடவே பிரசவித்துக் களைத்த உடலின் வியர்வையும், மருந்தின் வாசமுமாக சேர்ந்து குழந்தைக்கு ஒருவித ஒவ்வாமையை உண்டாக்கி தாய்ப்பால் குடிப்பதற்கான ஆசையே சுத்தமாக எழவிடாமல் செய்துவிடும்.

குழந்தைக்குப் பால் புகட்டியதும் மார்பிலிருந்து வழிகிற மிஞ்சிய தாய்ப்பாலானது சட்டையில் திட்டாகப் படிந்தாலோ, வேலை நிமித்தமாக வெளியே செல்கிற போது மார்பில் பால் கெட்டித்து உள்ளாடையில் மெல்லக் கசிந்தாலோ, பிள்ளையை நினைத்தபடியே துயில் கொள்கிற தாயின் கனவுகள் வழியே தன்னியல்பில் தாய்ப்பால் சுரந்து ஆடைகள் நனைந்து போனாலோ அவை வெளிப்படுத்துகிற வாசனைகள்கூட குழந்தைக்குப் பிடிப்பதில்லை. இதனால் சில குழந்தைகள் தாய்ப்பாலைக் குடிக்காமல் அடத்துடன் மூக்கை விடைத்தபடி அழுவார்கள். பாலைக் குடிக்காமல் வெறுமனே மார்புக் காம்பில் வாய் வைத்துக் கொண்டு முரண்டு பிடிப்பார்கள். ஆகவே தான் கர்ப்பகாலத்தில் பேணுகிற உடல் சுத்தத்தைப் போலவே குழந்தை பிறந்த பின்னாலும் அதை நாம் பேண வேண்டியிருக்கிறது.

தாய்மார்களும் அடிக்கடி வெந்நீர் வைத்துக் குளித்து வெளியேறுகிற வியர்வையும், இரத்தக் கவிச்சை வாடையும் இல்லாதவாறு உடலை பார்த்துக் கொள்ள வேண்டும். பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் கசிவது நிற்கிற வரையிலும் நாப்கின் மற்றும் போர்வையின் விரிப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தாய்ப்பால் புகட்டிய ஆடைகளையும் உள்ளாடைகளையும் அடிக்கடி மாற்றியணிய வேண்டும். ஆடைகளின் வாசம் போகிற வரையில் அழுக்காய் படிந்த திட்டுகள் போக நன்றாகத் துவைத்து அதை வெயிலில் நன்கு உலர வைத்த பின்பே அணிந்து கொள்ள வேண்டும். ஆக, நம்மிடம் சரியான அளவிலும் எண்ணிக்கையிலும் மாற்று உடைகள் இருக்கிறதா என்பதைப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தைப் போல பிரசவித்த பின்னாலும்கூட ஆடைகள் மற்றும் உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. கர்ப்பமாக இருக்கையில் துருத்திய வயிற்றுக்கு ஏற்ப சேலையும், வீட்டளவில் நைட்டி அணிவதைப் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம் அல்லவா! அதேசமயம் சுடிதார் அணிவதன் சிரமத்தையும், அதைத் தவிர்க்க வேண்டிய விசயங்களைப் பற்றியும் பார்த்தோம். அதையே தான் நாம் தாய்ப்பால் புகட்டுகிற காலம் முழுமைக்குமே கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

வீட்டிற்கு வெளியே செல்கையில் நம் பிள்ளைக்குத் திடீரென்று பசியெடுத்து அழும் போது, அவர்களுக்குப் பிறகு புகட்டிக் கொள்ளலாம் என்றெல்லாம் சும்மா இருந்துவிட முடியாதல்லவா? உடனே ஒதுக்குப்புறமாகப் போய் குழந்தையை அமர்த்திவிட்டுத் தானே வேறு வேலைக்கு நகரவே முடியும். ஆக, தாய்ப்பால் புகட்டுவதற்கு வசதியாகவும், பொது இடங்களில் கூச்சமின்றி பிள்ளையை மார்பில் போட்டு அமர்த்துவதற்கு ஏதுவாகவும் தக்க ஆடைகளை வாங்கி அணிவது தானே சரியாக இருக்கும்.

எப்போதாவது சுடிதார் அணிந்தபடி வெளியே செல்கிற அம்மாக்களை யாரேனும் கவனித்திருக்கிறீர்களா? அழுத பிள்ளையை அமர்த்துவதற்கு மேலாடையை மார்புக்கு மேல்வரை உயர்த்த வேண்டி ஒருவித சிரமத்தோடே பாலூட்டிக் கொண்டிருப்பார்கள். பொது இடங்களில் சுற்றிலும் அலைபாய்கிற கண்களின் தவிப்போடு அவசர அவசரமாக பிள்ளைக்குத் தாய்ப்பாலை அவர்கள் புகட்டி வேண்டியிருக்கும். ஒருசிலர் இதற்கெல்லாம் அஞ்சியபடி வீட்டைவிட்டு வெளியேறும் போதெல்லாம் புட்டிப்பாலும் கையுமாகவே கிளம்பி விடுகிறார்கள்.

அதுவே சேலையில் செல்கையில் அவர்கள் எந்தப் பொதுவெளியிலும் சாவகாசமாய் அமர்ந்து நிம்மதியாகப் புகட்ட முடிகிறது. இன்னும்கூட சொல்லப்போனால் சேலையில் பாலூட்டுவதற்காக மார்பை முன்பக்கபாக கையாளுவதும்கூட எளிதானதுதான். ஆனால் இவையெல்லாம் சுடிதார் அணிவதில் சாத்தியப்படுவதில்லையே! அதேசமயம் வீடுகளில் நாம் எப்போதும் போல நைட்டியை தாராளமாக அணிந்தபடியே தாய்ப்பாலூட்டிக் கொள்ளலாம். இப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பதற்கென்ற வசதியோடு முன்பக்கமோ, பக்கவாட்டிலோ ஜிப் வைத்த மாடல்களில் நைட்டிகள் நிறையவே வந்துவிட்டன. ஆகவே தான் கர்ப்பகாலத்திலும் சரி, தாய்ப்பாலூட்டும் காலத்திலும் சரி, வெளியே சேலைக்கும் வீட்டினுள்ளே நைட்டிக்குமாக பழகிக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

அடுத்ததாக உள்ளாடைகளைப் பற்றிய கவனம்தான் மிக முக்கியமானது. ஏனென்றால் இப்போதுதான் குழந்தை பிறந்து விட்டார்களே! மார்பகத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமே இதுவரை நாம் அணிந்து வந்த உள்ளாடைகளுக்குப் பதிலாக இப்போது கூடுதலாக தாய்ப்பால் ஊட்டுவதற்கென்று சேர்த்தே தயாரிக்கப்படுகிற உள்ளாடைகளாகப் பார்த்து அணிய வேண்டியிருக்கும். அட, எல்லாமே உள்ளாடைகள் தானே! இதில் கூடவா நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்? என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும்கூட தவறுதான்.

நாம் வயதிற்கு வந்த பின்னால் மார்பகம் மாற்றமடைவதன் காரணமாக அணிகின்ற உள்ளாடைகளெல்லாம் வெறுமனே மார்பகத்தை பாதுகாக்கக் கூடியவை மட்டுமே! ஆனால் தாய்ப்பால் புகட்டுவதற்கென்று தயாரிக்கப்படுகிற உள்ளாடைகள் என்பதோ பாலூட்டுகிற சமயத்தில் ஏற்படுகிற அசௌகரியத்தைக் குறைப்பதற்காகவென்று தனித்த ஏற்பாட்டோடே தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய உள்ளாடைகளின் வழியே சிரமமின்றி ஆடையை விலக்கி சீக்கிரத்தில் தாய்ப்பால் புகட்டவும், பொது இடத்தில் தயக்கமின்றி பிள்ளையை அமர்த்துவதற்கும் இவை தனித்தே வடிவமைக்கப்படுகின்றன. தாய்ப்பால் சுரந்து கனத்துப் போகிற மார்பிற்கு ஏற்ப மென்மையாகவும் இவை இருக்கின்றன. இத்தகைய உள்ளாடைகளை முழுவதுமாக கழற்றத் தேவையின்றி, ஒரு கையில் குழந்தையைத் தாங்கியபடியே மறு கையினால் தாய்ப்பாலூட்டுவதற்கென்று மார்பினைத் தயார் செய்துவிட முடியும். இதனால் ஒரே சமயத்தில் இரண்டு மார்பையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லாமலே தாய்ப்பாலைப் புகட்டிவிட முடிகிறது. இப்படி எத்தனையோ மாடல்களில் உள்ளடைகள் விதவிதமாக வந்தபடியே தான் இருக்கின்றன. ஆகவே, நாம் தான் நமக்குப் பொருந்தமான வகையில் உள்ளாடைகளைத் தேர்வு செய்து பிள்ளைக்குப் புகட்டுவது பற்றிய விழிப்புடனே இருக்க வேண்டியிருக்கிறது.

பொதுவாக உள்ளாடைகளை வாங்கும் போது தற்போதைய அளவை விட கூடுதலான அளவில் வாங்குவதே நல்லது. தாய்ப்பால் சுரக்கச் சுரக்கப் பெரியதாகிற மார்பிற்குப் ஏற்ப பொருத்தமில்லாத உள்ளாடைகளை அணிகிற போது அவை ஒருவித இறுக்கத்தை மார்பகத்தின் மேல் ஏற்படுத்துகிறது. இதனால் உள்ளிருக்கிற பால்சுரப்பிக் குழாய்களிலிருந்து காம்பிற்குச் செல்கிற தாய்ப்பாலின் வழித்தடத்தில் சிக்கலாகி அவ்விடத்திலேயே தாய்ப்பால் கட்டிக் கொண்டு புண்கள் வைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும் மிருதுவான, காட்டன் துணியாலான உள்ளாடைகளைத் தேர்வு செய்கிற போது உராய்வினால் ஏற்படுகிற எரிச்சலோ, அலர்ஜியோ இதனால் ஏற்படுவதில்லை. கூடுதலாக இவை தாய்ப்பால் கசிவதையும், வியர்வையும்கூட நன்றாக உறிஞ்சிக் கொள்கின்றதே!

அதுமட்டுமல்லாமல் வெளியே செல்கையில் மெல்லக் கசிந்து வருகிற தாய்ப்பாலால் உள்ளாடையும், சேலையும் ஈரமாகி ஒருவித சங்கடத்தையே அது ஏற்படுத்திவிடுகிறது அல்லவா! ஆனாலும் இத்தகைய அசௌகரியங்களுக்கென்றே தயாரிக்கப்படுகிற சிறிய அளவிலான பஞ்சுத் துணியினை (BREAST PAD) உள்ளாடைக்குள் வைத்து தாய்ப்பாலை உறிஞ்சுவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அலுவலகங்கள் போன்ற வெளியிடங்களுக்குச் செல்கையில் தாய்ப்பால் சுரந்து சட்டைகள் நனைவதைப் பற்றியோ, அதனது வாசனையைல் பொது இடங்களில் ஏற்படுகிற அசௌகரியங்களைப் பற்றியோ எந்தக் கவலையுமின்றி நாம் நிம்மதியாகவும் இருக்க முடியும்.

ஆகவேதான் தாய்மார்களே பிரசவித்த பின்னாலும்கூட தாய்ப்பாலூட்டுவதற்கென்றே தனித்த வகையில் ஆடைகள், உள்ளாடைகள், தாய்ப்பாலூட்டத் தேவையான உபரி தேவைகளென நாம் முன்கூட்டியே கர்ப்பகாலத்தில் வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் தயாராகிற போது தான் தாய்மார்களே, நம் தாய்ப்பாலூட்டும் காலத்தை ஒரு வசந்த காலத் துவக்கத்தின் கொண்டாட்டத்தைப் போல முழுமகிழ்ச்சியோடு அனுபவிக்கவே முடியும்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்