கல்லறை பேய்கள்! குறுங்கதை – மரு. உடலியங்கியல் பாலா
ஏழை சிறுவர்கள் இருவர், பசிக்கொடுமை தாங்காமல், பழக்கடைக்கு சென்று, ஓரு ஆப்பிள் கூடையை திருடி… ஓடிக்கொண்டே, “எங்கு வைத்து இதை நிம்மதியாக, யார் கண்ணிலும் படாமல் உண்பது” என யோசித்தனர்..
இறுதியில் ஊரின் எல்லையில், ஆளரவமின்றி, அமானுஷிய அமைதியில் இருந்த கல்லறை தோட்டம் சென்று சாப்பிட முடிவு செய்தனர். அந்த கல்லறை தோட்டத்துக்குள் நுழைந்தபோது, அதன் நுழைவு வாயிலில்… இரண்டு ஆப்பிள் கனிகள் தவறி விழ..
முன்னவன் “போகட்டும் விட்றா! நம்ம கிட்டதான் நிறைய இருக்கே!.. பசிவேறு உயிர் போகுது, சீக்கிரம் வா ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து சரிசமமா பங்கு போட்டு சாப்புட்லாம்” என கூற ..
ஒரு நல்ல மறைவிடத்தில் அவர்கள் அமர்ந்து ஆற,அமர..ரசித்து, சுவைத்து “ஒன்று உனுக்கு” என்று முன்னவன் கூற “ஒன்னு எனக்கு” என்று பின்னவன் கூறி ,
இருவரும் சரிசமமாய் பங்கு போட்டு உண்ண தொடங்கினர்..
அப்போது அந்த பக்கம் வந்த அந்த ஊர்க்காரன், “சுடுகாட்டில் சுவையான ஆப்பிளா? ” என சந்தேகம் கொண்டு பயத்துடன் பொருக்க முயல,…
“ஒன்று உனக்கு! ஒன்று எனக்கு!” என மெல்லிய குரல்களை கேட்டு.. “இது பேய்களின் வேலையாய் இருக்குமோ?”என அஞ்சி நடுங்கி! அரண்டு புரண்டு, ஓட்டமெடுத்து, பாதிரியாரிடம் சென்று நடந்ததை கூறுகிறான்.
அவரோ ,” பயப்படாதே மகனே..! எல்லாம் மனப்பிரம்மை தான்! வா போய் பார்க்கலாம்” என்று, சிலுவை மாலையுடன் ஜபித்தவாறு.. கல்லறை வாயிலை நெருங்கினார்..
நம் பயல்கள் இருவரும், கூடையை காலி செய்த்துவிட்டு பசி அடங்காமல் “அப்ப வாயிலில் உள்ளதை என்ன செய்யலாம்!” என முதலாமவன் கேட்க,, இரண்டாமவன் “எப்போவும் போல, ஒன்று உனக்கு! ஒன்று எனக்கு!” என உரக்க சிரித்தபடி கூற…
பாதிரியார் கதிகலங்கிப்போய் “அப்பா பேய்களே!.. நாங்கள் இன்னும் சாகவில்லை!உயிரோடுதான் இருக்கிறோம்!எங்களை விட்டுவிடுங்கள் ” என கூறியவாறு, பின்னங்கால், பிடரியில்பட..
ஓட்டம் பிடிக்க, ஊர்க்காரனோ, பித்து பிடித்தவன்போல் அவர் பின்னால், உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினான்… !..