Amararagi Azhaithalo ShortStory By Dr K Balasubramanian. அமரராகி அழைதாளோ? சிறுகதை - மரு. உடலியங்கியல் பாலா

அமரராகி அழைதாளோ? சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா




அது ஒரு அமாவாசை நடுநிசி நேரம், வெள்ளக்காரன் ஆட்சியில், பாரததேசம் அடிமை பட்டிருந்த காலகட்டம். இம் என்றால் வனவாசம்,! ஏன் என்றால் சிறைவாசம்! எனும் கொடுகோல் சட்டம் அமலில் இருந்த.. 1930களின் இடைப்பட்ட காலம்.

திருநெல்வேலி ஜில்லாவின் ஒரு பெரிய ஆஸ்பத்திரியின்.. சவகிடங்கு மரண அமைதியில், ஒரு அமானுஷ்ய சூழ்நிலையில் அச்சத்தில் ஆழ்ந்திருந்தது.
மார்ச்சுவரியின் காவலாளி பென்சிலய்யா… பனங்கள்ளின் ஆக்கிரமிப்பில், “எடிசன் பல்பின்” மங்கிய ஒளியில், வராண்டாவில் தூக்கமின்றி, தவித்தான். அவன் ஒருநாளும் இப்படி தவித்ததேயில்லை…

11மணிக்கு மப்பேத்தி கொண்டு, கிடங்கை பூட்டி சாவியை மடியில் பத்திரப்படுத்தி கொண்டு.. படுத்தான், என்றால், அவ்வளவுதான்! ‘பிணம்’ போல் தூங்கி காலை 4மணி வாக்கில் விழித்துகொள்வான். (அக்காலத்தில் பிணங்கள் இந்நேரத்தில் கிடங்குக்கு வருவது மிக மிக அரிது)…

அன்று அவன் தூக்கம் கெட்டதற்கு, இரவு 9மணி வாக்கில் நடந்த நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவமே காரணம்….. இரவு 9மணி வாக்கில், இரண்டு, ஆஜானுபாகுவான தாணாக்காரர்கள்.., ஒரு அழகான பருவ பெண்ணின் சடலத்தை, கொண்டு வந்து கிடங்கில் போட உத்தரவிட்டனர்,..

எந்த ஆவணமும் இல்லாததால், அவன் தயக்கத்துடன் கேள்விகேட்க, அவர்களோ “நாங்கள் சிறைச்சாலையின் மூத்த அதிகாரிகள் !பேசாம வாய பொத்திக்கினு சொன்னதை செய்” என்று மிரட்ட..

இவனோ நமக்கேன் வம்பு? என அடங்கிப்போனான். ஆனாலும்.. அவன் ஒரே மகள் கண்ணில் நிழலாடி, “யாரு பெத்த பொண்ணோ? ” என அவனை கவலையுற செய்தது!

சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த பெண்ணின் ஏழை பெற்றோர்கள், குமுறி குமுறி..ஒப்பாரி வைத்தனர். அவள் தாயோ! தலையில் அடித்துக்கொண்டு “வேணாண்டி! வெள்ளக்காரன்களை எதிர்த்து போராட வேணாண்டினு! தலைப்பாடா அடிச்சுகிட்டேனே! இந்த பாவிமவ கேக்கலியே! விடுதல போராட்டம் ! ஜான்சி ராணி படை! சுபாஷ் சந்திர போஸ்னு!! என்னென்னமோ சொல்லிக்கிட்டு திரிஞ்சாளே! கடைசீலே ஜெயில்ல போட்டு…

இரண்டே நாள்ல இப்டி பொணமாக்கி பூட்டாங்களே! என் ஒரே மவள, இப்படி கொன்னுபோட்டு, எங்களை அனாதை ஆக்கிட்டாங்களே! நாங்க என்ன செய்வோம்? எம் பொண்ண எப்ப பாப்போம்? என் ராசாத்தி! எப்டி டி உயிர உட்ட !!”என்று… அந்த இருட்டு இரவில் போட்ட கூப்பாடு, இவன் கல்நெஞ்சையும் ஈரமாக்கி கரைய வைத்து.. அவன் தூக்கத்தையும் பறித்து கொண்டது.

சிறிது நேரத்தில் சற்றே கண்ணயர்ந்து, அரைத்தூக்கத்தில் இருந்த அவனை, கிடங்கின் பெரிய கதவுகள் உள்ளிருந்து, பலமாக தட்டப்படும் சத்தம்..
உலுக்கி எழுப்பியது. அந்த பேய் அலையும் நடு இரவில், அந்த மர்மமான ஓசை! அவனை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்த,..

அவனுக்கோ அந்த இரவு வேளையிலும் வேர்த்து கொட்டியது… பயம் அவனை ஆட்டிப்படைத்து, வெலவெலக்க செய்தது. அவன் என்ன செய்வது என தெரியாமல் அசைவற்று நிற்க.., கதவு தட்டும் ஓசை மேலும், மேலும் அதிகரித்தது.

அங்கிருந்து, ஆஸ்பத்திரியோ அரை மைல் தூரம் தள்ளி இருந்தது. நாய்களின் ஊளை இடும் சத்தம் வேறு அதிகமாகி, இவனை மேலும் திகிலுற செய்தது… அவனுடைய 20ஆண்டு சேவையில் இதுபோல் நடக்கும் என கனவில் கூட அவன் நினைத்து பார்த்ததில்லை. அவன் மெல்ல மயக்கமுற தொடங்கிய நேரத்தில், உள்ளிருந்து ஒரு ஈனஸ்வரத்தில், அழுகையுடன் “ஐயோ! யாராவது உடனே கதவை திறங்க! என்ன காப்பாத்துங்க! உடனே தயவு செய்து கதவை திறங்க!” என முனகிய இளம்பெண்ணின் குரல் கேட்டு சற்றே சுதாரிக்க..

உள்மனதோ இது மோகினி பிசாசாக இருக்குமோ? என கலக்கம் கொள்ள, அந்த பெண்ணின் அபய குரல் அதிகரித்து “என்ன காப்பாத்துங்க! என்ன காப்பாத்துங்க!, இங்கு குளிர் தாங்கல! நாத்தம் தாங்கல! உயிரே போய்டும் போல இருக்கே !” என சத்தம் பலமாக அதிகரித்தது .

அவன் மனக்கணக்கால்… உள்ளே இருந்த பெண் பிரேதங்களின் கணக்கெடுப்பை நடத்த..மீண்டும் அந்த இளவயது பெண்குரல் “ஐயோ! என்ன யாராவது உடனே காப்பாத்துங்க.!. ஜெயில்ல இருந்த நான் எப்டி இங்கு வந்தேன்.. என்னை சூறையாடிய படுபாவி எங்கே?” என பித்து பிடித்தவள்போல் கூக்குரலிட, மெல்ல அவனுக்கு தெளிவு பிறக்க தொடங்கியது…

அவன் மெல்ல மெல்ல தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, இடுப்பில் செருகிய திண்டுக்கல் பூட்டின் சாவியை உருவியபடி, ஜெயிலர்கள் கொண்டுவந்த பெண்ணின் முகம் நினைவில் நிழலாட,…அவள் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்க,.. எல்லா அச்சத்தையும் உதறி தள்ளி, கதவை நெருங்கி.. அஞ்சா நெஞ்சுடன் கதவை திறந்தான் !

அந்த அழகிய பெண், முற்றும் கதிகலங்கி, வாடிப்போய் நின்ற கோலம் கண்டு, அவள்மேல் அச்சம் நிறைந்த பரிதாபம் கொண்டான்.

அந்த பெண்ணுக்கு, குச்சி, இலை, சருகுகள், காகிதம், இவற்றை கொண்டு நெருப்பு மூட்டி, அவளை குளிர் காய வைத்து! சூடு உண்டாக்கி!, அவன் கூஜாவின் தண்ணீரை சூடாக்கி கொடுத்து, அவன் சாப்பிடாமல் வைத்திருந்த கேப்பை கூழும், கருவாட்டு குழம்பும் சாப்பிட கொடுத்து,.. மெல்ல மெல்ல அவளை ஆசுவாச படுத்தினான்!.

சற்று நேரத்தில், தெளிவடைந்து..  அவள் மெள்ள, மெல்லிய குரலில், “அண்ணா !நான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தலைமையிலான, “ஜான்சிராணி விடுதலை “குழுவின் நெல்லை ஜில்லா தலைவி !

எங்கள் போராட்டங்களை ஒடுக்க, என்னை கைது செய்து சிறையில் அடைத்தது வெள்ளையர் கூட்டம். என் போறாத காலம் என் பேரழகே எனக்கு ஆபத்தாகி போனது!  ஜெயில் வார்டன் “ஜேம்ஸ்”எனும் ஆங்கிலேய “பொருக்கிபய” என் மேல் ஆசைப்பட்டு, என்னை மிருகத்தனமாய் சூறையாடி, என்னை குற்றுயிராக்கினான். மூர்ச்சையாகி போன என்னை, “இறந்து போய்விட்டேன்” என்று எண்ணி இங்கே கொண்டு வீசி சென்றனர் போலும்..!

எந்த கடவுளோ எனக்கு உயிர் கொடுத்து, மறுஜென்மம் எடுக்க வைத்துள்ளது ! அண்ணா! என்னை தப்பிசெல்ல விடுங்கள்! ஒரு அடிமை இந்தியாவின் புதல்வனாக! நீங்க எனக்கு தயவுசெய்து உதவுங்கள் !

எனக்கு நிறைய வேலைகள் உள்ளது.. ஓரிரு நாளில் நான் ஜப்பான் சென்று போர் பயிற்சி செய்ய, எனக்கு ஆணை வந்துள்ளது !”என வீரவசனம் பேசிய அவள்..
பாரத மாதாவாகவே அவன் கண்களுக்கு காட்சி அளித்தாள்…

என்ன நினைத்தானோ? .. ஏது நினைத்தானோ தெரியவில்லை ! அவன் சட்டென்று… தன் விரலில் அணிந்திருந்த, ஒரு சவரன் திருமண தங்கமோதிரம், மற்றும் தன் தாய் அணிவித்த வெள்ளி அண்ணாக்கயர், ஜோபியில் இருந்த ரெண்டரையணா காசு ஆகியவற்றை, அவள் கையில் கொடுத்து! வணங்கி வாழ்த்தி! வழி அனுப்பி வைத்தான்.

ஓரிரண்டு நாள் கழித்து….
எல்லா செய்தி தாளிலும் “”வெள்ளைகார ஜெயில் அதிகாரி…
கொடுங்கோலன் “ஜேம்ஸ்” ! அடையாளம் தெரியாத பெண்ணால்! குத்தி கொலை செய்யப்பட்டான்! மக்கள் ஆனந்த ஆரவாரம் !!
போலீஸ் தீவிர விசாரணை செய்கிறது !” என்று கொட்டை எழுத்தில் தலைப்பு சேதியாக பிரசுரமாகி ! ஊரே அல்லோல கொல்லோல பட்டது. அன்று மாலை பிணக்கிடங்குக்கு வந்த “ஜேம்ஸ்”உடலை கண்டு… பூரித்து போனான் பென்சிலய்யா!!.

(முற்றும் )

Kathalenum Mayai Short Story by Dr K Balasubramanian காதலெனும் மாயை சிறுகதை - மரு. உடலியங்கியல் பாலா

காதலெனும் மாயை சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா



மதியம் 1.30 மணிக்கு, புறப்பட தயார் நிலையில் இருந்த.. பெங்களூரு செல்லும் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸில், குமார் ஒற்றை சீட்டில் அமர்ந்திருந்தான்.. எதிர் சீட்டில் யார் வருவார்களோ என ஆவலோடு காத்திருக்க, கடைசி நொடியில் ஒரு அழகிய இளம் பெண், ஏறுவதை கண்டு அனைத்து ஆண்களின் விழிகளும் மெர்குரி பல்பு போல் பிரகாச மடைந்தது.

அவள் தன் இருக்கை எண்ணை  தேடியபடி, அவனை நெருங்க, அவன் இதய துடிப்பு எகிறியது… என்ன ஆச்சர்யம் அவள், எக்ஸ்கியூஸ் மீ  என்ற படி, எதிர் ஒற்றை சீட்டில் அமர அவன் குஷியானான். அவள் தன் சீலையை ஒழுங்குபடுத்தி அமர ரயில் வேகமெடுத்தது.

குமார் மாநிறத்தில் சற்றே பல்லெடுப்பாக ஆரம்பகால  நடிகர் சார்லி போன்ற  சுமாரான தோற்றம் கொண்ட  இளைஞன். சற்றே சபலிஸ்ட பேர்வழி வசதியானவன். அண்மையில் பெங்களூரில் சுமாரான அழகுடைய, வசதியான குடும்பத்து பெண்ணை, மணமுடித்து, ஆடிக்கு தாய் வீடு சென்றவளை, கூட்டி வர  சென்று கொண்டிருக்கிறான்.

கையில் வைர மோதிரம், கனமான பிரேஸ்லெட், மைனர் செயின், ரோலக்ஸ் வாட்ச், சகிதம், அந்த பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க .. அந்த, யுவதியோ ஆரம்பகால நடிகை மீனாபோல் சர்வ லட்சணமாய் அலட்சிய பார்வையுடன் திருக்குறள் புத்தகம் படித்து கொண்டிருந்தாள் (அது மொபைல் இல்லாத காலம் )..

அவளுடன் பேச குமாருக்கு கொள்ளை ஆசை, பார்த்தால் ராங்கிகாரி மாதிரி தெரிகிறாள், எதாவது ஏடாகூடமாய் சொல்லப்போய் , விவகாரத்தில் மாட்டிகொள்வோமோ என்ற பயம் வேறு.. வண்டி கொசஸ்தலை ஆற்று பாலம் மேல் ஊர்ந்து கொண்டிருக்க, தடதடப்பு அதிகரித்தது.

அவள் கால்மேல்கால்போட எத்தனிக்க, வண்டியின் ஓட்டத்தால் பாலன்ஸ் இழந்து அவன் மேல், அவள் லேசாக உராய, “செத்துவிட தோணியது” குமாருக்கு,… அவள் சுதாரித்துக்கொண்டு, “சாரி”, என்றாள் சிறிய புன்சிரிப்புடன்..  இவனோ அவள் குரல்கேட்ட இன்ப அதிர்ச்சியில்” பரவாயில்லைங்க, ரயில்ல இதெல்லாம் சகஜம் “என்று வழிய, அவள் வள்ளுவனை மீண்டும் ஆராய  தொடங்கினாள்.  அவனுக்கு சற்றே தைரியம் வர, சகஜமாக பிரீயாக அமர்ந்தான்.
இப்போது அவன் முழங்கால்கள், அவள் புடவை கொசுவத்தை பலமுறை, வண்டியின் வேகத்துக்கு ஏற்ப மயிலிறகு போல் வருடியது.. அவள் இதை கவனிப்பதாகவே தெரியவில்லை.. அவன் துணிச்சலும் அதிகரிக்க,  “தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால், தீபத்தின்  பெருமை அன்றோ?  “என மெல்லிய குரலில், அவளுக்கு மட்டுமே கேட்கும் படி பாட, அவள் விழிகள் இவனை ஓரிரு வினாடி சந்தித்து பிரிந்தது, அது எந்த உணர்வையும் காட்டவில்லை, ஆனால் கோபம் அதில் இல்லை என்பதை உணர்ந்து, இன்புற்றான்.
இரயில், காட்பாடியை நெருங்க, அவள் பூவினும் மெல்லிய  குரலில் “சார், வண்டி நின்றதும், இந்த வாட்டர் பாட்டிலில், கொஞ்சம் தண்ணீர் பிடித்து தர முடியுமா?  “என்று ஒரு ஸ்நேகா பாவத்துடன் கேட்க, அவர்களிடையே இருந்த இரும்பு திரை, உடைந்து சுக்கு நூறாகியது,.. அவன்…. கூல்  ட்ரின்க்ஸ், பஜ்ஜி  சகிதம் வாங்கி வர  , அவள் மறுப்பேதும் சொல்லாமல் அவற்றை அவனுடன் பகிர,  நட்பு மலர தொடங்கியது..
அவள், மெள்ள மெள்ள இவனுடன் பேச தொடங்க, தனக்கு இன்னும்  திருமணமே  ஆகவில்லை என புளுகி, அவள் காதலை பெற
முயற்சித்தான்.. அவளும் “சார் நீங்கள் நல்லா,  பெர்சனாலிட்டியா! கமல் மாதிரி இருக்கீங்க.. எனக்கும் திருமணம் இன்னும் ஆகவில்லை,  உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது” என்று ஏதேதோ கூற, இருவருக்கும் இடைவெளி குறைய தொடங்கியது, அன்று செவ்வாய் கிழமை என்பதால், அவ்வளவாக ரயிலில், கூட்ட நெரிசலும் இல்லை..
அவளிடம் “நான் ஒரு பெரிய  பிசினஸ் மாக்னெட், இப்போதுகூட, வியாபார விஷயமாய் பெங்களூர் செல்கிறேன் “என்று கூறி, தன் பெட்டியில் இப்போதும் இரண்டு லட்சம் (தன் மாமனார் ஊரில்..  சீப்பாக விலைக்கு வந்த வீட்டை  வாங்க.. அம்மா கொடுத்தனுப்பிய  பணம் ) உள்ளதாக பீற்றிக்கொள்ள…  இருவரும் நெருங்கி சிரித்து, ஏ ஜோக்ஸ் பகிர்ந்து.. சந்தோஷிக்க, இரயில் ஜோலார்பேட்டையை நெருங்கியது..
அவள் தன் ஹாண்ட் பாக்கில் இருந்து இரண்டு காட்பரீஸ், சாக்லேட் எடுத்து, “நல்ல விஷயங்கள் நடக்கும் போது, ஸ்வீட் சாப்பிட வேண்டும் !என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ஸ்வீட் எடுத்து கொண்டாடுவோமா” என்று கூறி, அவனிடம் ஒன்றை கொடுத்து,  தானும் ஒன்றை சாப்பிட்டாள்..
அவ்வளவுதான்…  அவன் மதி மயங்கி  சொர்க்கபுரியில், அவளுடன் சினிமா பாணியில் டூயட் பாடிக்கொண்டே… சஞ்சரிக்க தொடங்கினான்…
முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட , குமார் அரை மயக்கத்தில் கண்விழித்து பார்க்க, ஒரு கன்னட போர்ட்டர்” ஏனு  சாமி, பெங்களூரூ  ஆகிதி..பொட்டி படுக்க இருந்தா குடுங்கோ, ஆட்டோ புடிச்சி தரேன்” என மணிப்ரவாளமாய் கூற, சற்றே சுதாரித்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான் குமார்..
தான் அணிந்திருந்த வாட்ச், நகைகள், பணப்பெட்டி அனைத்தும் அபேஸ் பண்ணிக்கொண்டு, மீனா நழுவி சென்றதை எண்ணி , அழுகை பீறிட  இங்கும் அங்கும் பார்த்தான்.. எல்லாம் ஸ்வாகா.. சட்டை பையில் ஒரு கிரீட்டிங் கவர் இருந்தது.. அதை பிரித்த போது, ஒரு வெள்ளை தாளும், ஐந்து ரூபாய் பழைய நோட்டும் இருந்தது.. அந்த பேப்பரில்….
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு…..குறள். 
உன் முகத்தை,  மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்க, அழகரே!! ..  என்று, கொட்டை கொட்டையாய், அழகிய தமிழில் எழுதப்பட்டிருந்தது..
அவன் தன் பலவீனத்தை உணர்ந்து வெட்கினான், தன் மனைவி,  மாமனாரிடம் என்ன புருடா விட்டு சமாளிக்கலாம்– என்று யோசித்தபடியே  நடக்கலானான் ..
அழுக்கு ஐந்துரூபாய் நோட்டை பத்திரப்படுத்தியபடி, ஜெய்நகர் செல்லும், பஸ் புறப்படுவதை பார்த்து… அதை  நோக்கி ஓட தொடங்கினான். விரக்தியில் அவன் மனமோ, “தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால், தீபமும் பாபமன்றோ? ” என அவன் வாய் முணுமுணுத்தது..!