வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 2) – தமிழில் – தங்கேஸ்
Act 1 Scene 2
( காட்சி 2 )
இடம் : வெரேனா வீதி
பொழுது – பகல்
பாத்திரங்கள்
கேபுலட் கேபுலட்டின் உறவினன் பாரிஸ்
மற்றும் கேபுலட்டின் வேலைக்காரன் பீட்டர்
மற்றும் ரோமியோ பென் வாலியோ
பீட்டர் : ( குழப்பமாக )
என்னது இதில் எழுதியிருக்கும் பெயர்களை எல்லாம்
நான் கண்டுபிடிக்க வேண்டுமா ?
நல்ல கதை தான்
காலணி தைப்பவனிடம் தையற்காரனின் கத்திரிக்கோலையும்
தையற் காரனிடம் காலணி தைப்பவனின் குத்தூசியையும் கொடுத்து விட்டு வேலை வாங்குவது போல் இருக்கிறது.
பெயின்டரிடம் மீன் வலையையும் மீன் பிடிப்பவனிடம் வண்ணக்கலவைகளையும் கொடுத்து விட்டு வேலை வாங்குவது போல் இருக்கிறது இப்பொழுது இந்த வேலைக்கு என்னை அனுப்பியது.
இந்த பட்டியலில் இருப்பவர்களையெல்லாம்
நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமாம்
இதில் கொடுமை என்னவென்றால் எனக்கு வாசிக்கவே தெரியாது
இப்போது பாருங்கள் யாராவது வாசிக்கத் தெரிந்தவர்களை முதலில் கண்டு பிடித்து அவர்களிடம் உதவி கேட்க வேண்டும்
( அப்போது பென்வாலியோவும் ரோமியோவும் அங்கே வருகிறார்கள் )
பென்வாலியோ :
வா ரோமியோ நெருப்பை நெருப்பால் அணைக்கும்
கலை தான் காதல்
ஒரு புதிய வலி வந்து விட்டால்
பழைய வலி தானாகவே காணாமல் போய் விடும்
உனக்கு தலை சுற்றல் ஏற்பட்டால்
நீ அதற்கு மாற்று திசையில் உன் தலையை சுற்று
தலை சுற்றல் தானாகவே சரியாகிவிடும்.
அது போலத் தான் வேதனையும்
ஒரு புதிய வேதனை வந்தால்
பழையது தானாகவே சரியாகி விடும்
நண்பா புதிய பெண்களை உற்றுப் பார் !
பழைய காதலெல்லாம் காணாமலே போய் விடும்
ரோமியோ :
உன்னுடைய இந்த வாழை இலை வைத்தியத்தை
உன்னோடு மட்டும் வைத்துக் கொள்
உபயோகமாக இருக்கும்
பென்வாலியோ :
எதற்கு ?
ரோமியோ :
ஆ..உன்னுடைய உடைந்த எலும்புகளை ஒட்டவைப்பதற்குத்தான்
பென்வாலியோ :
ஏன் ரோமியோ நீ பைத்தியமாகி விட்டாயா ?
ரோமியோ :
பைத்தியமில்லை அதை விடவும் அதிகம்
இங்கே எந்த மனநோயாளியை விடவும்
நான் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளேன்.
உணவின்றி சிறையிலடைக்கப்பட்டிருக்கிறேன்.
காரணமின்றி சாட்டையால் அடிக்கப்படுகிறேன்.
அளவின்றி சித்திரவதை செய்யப்படுகிறேன்.
( பீட்டரிடம் திரும்பி ) மாலை வணக்கம் நண்பரே !
பீட்டர் :
இனிய மாலை வணக்கம் இளைஞனே !
உனக்கு வாசிக்கத் தெரியுமா ?
ரோமியோ : ( குழப்பமாக )
ஓ என் தலைவிதியை நான் உன்னிடம் வாசித்தால்
அது துயரமாக இருக்கும்
பீட்டர் :
அட போப்பா உன் தலைவிதியை
புத்தகமில்லாமல் கூட நீ வாசித்து விட்டுப்போ
நான் கேட்டது உனக்கு எழுத்துக்களை
வாசிக்கத் தெரியுமா என்று தான் ?
ரோமியோ :
எழுத்துக்களைப் பார்த்தால் ஒரு வேளை
எனக்கு மறந்து போன மொழி ஞாபகத்திற்கு வரும் .
மொழி ஞாபகத்திற்கு வந்தால்
எப்படியும் நான் வாசித்தது விடுவேன்
பீட்டர் :
நீ நேர்மையாகத்தான் பேசுகிறாய்.
நீ பேசுவதைப் பார்த்தால்
உனக்கு உண்மையிலேயே வாசிக்கத் தெரியாது
போல் இருக்கிறது.
பரவாயில்லை நான் அடுத்த ஆளைப் பார்த்துக்கொள்கிறேன்.
ரோமியோ : ( அவரைத் தடுத்து )
கொஞ்சம் பொறு நானே வாசிக்கிறேன்
( அந்தப் பட்டியலை வாங்கி பெயர்களை வாசித்துக் காட்டுகிறான் )
“சிக்னர் மார்டினோ மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்கள்;
கவுண்ட் அன்செல்மே மற்றும் அவரது அழகான சகோதரிகள்; விட்ராவியோவின் விதவை; சிக்னர் பிளாசென்டியோ மற்றும்
அவரது அழகான மருமகள்; மெர்குடியோ மற்றும் அவரது சகோதரர்
அவரது சகோதரர் காதலர்; என் மாமா கபுலெட் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்கள்
என் அழகான மருமகள் ரோசலின் மற்றும் லிவியா சிக்னர் வாலண்டியோ மற்றும் அவரது உறவினர் டைபால்ட் லூசியோ
மற்றும் கலகலப்பான ஹெலினா
இது மிகவும் அழகான மக்கள் குழு
ஆமாம் அவர்கள் எங்கு செல்ல வேண்டும்?
பீட்டர் : மேலே
ரோமியோ : எங்கே மேலேயா ?
பீட்டர் : இரவு விருந்துக்கு எங்கள் வீட்டிற்கு
ரோமியோ : யாருடைய வீட்டிற்கு ?
பீட்டர் : என்னுடைய எசமானரின் வீட்டிற்கு
ரோமியோ :
சரி சரி இந்தக் கேள்வியை நான் முதலில் கேட்டிருக்க வேண்டும்
பீட்டர் :
நீ கேட்கவில்லையென்றாலும் நான் சொல்லிவிடுகிறேன்.
என் எசமானர் கேபுலட். தான்
இந்த நகரிலேயே மிகப் பெரிய செல்வந்தர்
நீ மட்டும் மாண்டேக்காக இல்லாவிட்டால்
தாராளமாக நீ அந்த விருந்துக்கு வரலாம் .
ஒரு கோப்பை ஒயினை அருந்தி விட்டு
மகிழ்ச்சியில் திளைக்கலாம்.
சரி சரி நான் வருகிறேன் .உன் உதவிக்கு நன்றி
( பீட்டர் மறைகிறான் )
பென்வாலியோ :
நண்பா இந்த இரவு விருந்துக்கு இன்று நாம் செல்வோம் .
நீ உருகி உருகி காதலிக்கிறாயே
அந்த ஒப்பற்ற அழகி ரோஸலின்
அவளும் அங்கே வருகிறாள் அல்லவா. ?
அங்கே நான் உனக்கு காட்டும் அழகிகளை
வைத்த கண் வாங்காமல் பார்.
அதன் பிறகு நீ எனக்கு உண்மையை சொல்
நீ அன்னம் அன்னம் என்று கதைத்துக்கொண்டிருக்கிறாயே
அந்த ரோஸலின் அவள் உன் கண்களுக்கு
அங்கே வெறும் காகமாய் தான் தெரிவாள்.
ரோமியோ :
தான் வணங்கும் தேவதையை விட
ஒரு பொய் அழகியை
என் கண்கள் எனக்கு காட்டினால்
அந்த நிமிடமே என் கண்ணீரெல்லாம்
நெருப்பு சுவாலைகளாக மாறி விடும்.
இது வரையிலும் கண்ணீரில் மூழ்காத கண்கள்
உடனே எரிந்து சாம்பலாகி விடும் .
ஒரு பொய்யழகியை எனக்கு காட்டியதற்காக.
என்னவளை விட இன்னொரு பெண் பேரழகியா ?
அதுவும் அவள் என் கண்களுக்கு தென்படுவாளா ?
புரிந்து கொள் நண்பா
இங்கே சூரியன் தோன்றிய நாளிலிருந்து
என்னவளைப் போன்ற அழகி
இந்தப்பூமியில் இன்னும் உதிக்கவேயில்லை.
பென்வாலியோ :
ஓ நண்பா உன் அழகியின் அருகில் மற்ற அழகிகள்
இல்லாத போது
அவள் தான் பேரழகி என்று நீ தீர்மானித்து விட்டாய்.
ஆனால் விருந்தில் உனக்கு நான் காட்டப்போகும்
உயர்ந்த அழகிகளோடு
நீ அவளை ஒப்பிட்டுப்பார்த்தால்
அவள் அப்படி ஒன்றும் பெரிய அழகியில்லையென்று
நீயே முடிவுக்கு வந்து விடுவாய் பார்.
ரோமியோ :
சரி சரி நான் உன்னுடன் வருகிறேன்
ஆனால் அது மற்ற கன்னிகளை காண்பதற்கு அல்ல
என்னவளின் பேரழகில் மயங்கி திளைப்பதற்கே
( இருவரும் மறைகிறார்கள் )
( தொடரும் )
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்
எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு
மீண்டும் ஒரு கபட நாடகத்தை
அரங்கேற்றத் துடிக்கும் அவலம்
இங்கே ஆரம்பித்து விட்டது
பேதத்தை மறந்ததைப் போல் காட்டி
வேதத்தை முன்நிறுத்தச்செய்யும்
வேலைகள் இங்கே மிக வேகமாக
நரிகளே தோற்றுப் போகும்
நயவஞ்சக தந்திரங்கள்
இந்த நலிந்தோரிடம் எடுபடுவதுதான் கொடுமை
நெருப்பைத் தீண்டும் குழந்தைகளாய் நிறைந்து
வருகிறார்கள் இந்த அப்பாவிகள்
எல்லா இனத்திலும் ஊடுருவி
ஏணியில் ஏற்றிப் பின்னர்
சநாதனத்தின் வெறி கொண்டு
சாய்த்து விடுவதில் மன்னர்கள்
இந்த சாபகேடுகள்
சிறு கூட்டத்தின் சாமர்த்தியம்
இன்று பெருங்கூட்டமாய்த் திரண்டு
மதமென்னும் ஒற்றைச் சொல்லில் மாற்று மதம் வெறுக்கிறது.
என்று இந்த ஏமாற்றம் அறிவார்
இந்த எளியோர்கள்?
அன்றுதானே இங்கு ஆனந்தம்
எங்கெங்கும்!
தேச விடுதலைக்குத் தோள்
கொடுக்காதவர்கள்
தேச துரோகம் பற்றி ஒப்பாரி
வைக்கிறார்கள்
சுதேசியம் கூட ஒரு காலத்தில்
பேசிப் பார்த்தவர்கள்
இன்று சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கு
ஏஜென்டுகள் ஆனார்கள்!
– ச.லிங்கராசு
பேரா.ராஜூ அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது – பிரளயன்
பேராசிரியர்.ராஜூ அவர்கள் எனக்குப் பரிச்சயமானது என்பது அவரது நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு தஞ்சை அரங்கம் குழுவினர் மேடையேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ நாடகம் மூலமாகத்தான். நான் இந்நாடகத்தை 1980களின் இடைப்பகுதியில் பார்த்தேன். அதற்கு முன்பாக தமிழில் நடந்த பல நவீன நாடக முயற்சிகளை நான் பார்த்திருந்த போதிலும் பேரா ராஜுவின் ‘நந்தன் கதை’ எனக்கு மிக நெருக்கமாகவும் அண்மையானதாகவும் இருந்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. எதார்த்தவாத பாணியில் எழுதப்பட்டிருந்த ‘நந்தன் கதை’ நாடகம், இசை, நடனம், குழுவினரின் ஒழுங்கமைக்கப்பட்ட அசைவுகளென ஒரு ‘காவிய அரங்கிற்கான’ நாடக மொழியில் தயாரிக்கப்பட்டிருந்தது. விரிந்த பார்வையாளர் வட்டத்தினிடையே உரையாடுவதற்கான பல கூறுகளை அது கொண்டிருந்தது. ‘காவிய அரங்கென’ இங்கு நான் கூறுவது எதார்த்தவாத பாணியில் இருந்து விலகி நின்று பெர்டோல்ட் பிரக்ட் உருவாக்கிக்கொண்ட ‘காவிய அரங்கு ‘ எனும் நாடக பாணியைத்தான். உண்மையில் ‘காவிய அரங்கு’ என்பது தனக்கான ஓர் நாடக அணுகுமுறையை எழுத்து முறையைக் கொண்டது. ஆனால் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதி, அத்தகைய ஓர் அணுகு முறையில் ‘நந்தன் கதையினை’ எழுதியிருக்கவில்லை.
எனினும் பேராசிரியர். ராஜூ அவர்கள் தனக்கான ஓர் ஒயிலாக்கம் செய்யப்பட்ட ஒரு மேடை மொழியில் ’நந்தன் கதையினை’ உருவாக்கம் செய்திருந்தார். இவரது ‘நந்தன் கதை’ தயாரிப்பு பற்றி இன்னொரு சமயத்தில் விரிவாக எழுத வேண்டும். பின்னர் 1991 இல் இந்திரா பார்த்தசாரதியின் ‘ஔரங்கசீப்’ நாடகத்தை புதுவை மத்திய பல்கலைக்கழக நிகழ் கலைத்துறை மாணவர்களைக் கொண்டு தயாரித்து மேடையேற்றினார். இந்நாடகத்தை சென்னை, தி.நகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கில் மேடையேற்றியபோது நான் பார்த்திருக்கிறேன்.
இந்திரா பார்த்தசாரதியின் முக்கியமான நாடகங்களில் ஒன்று ‘ஔரங்க சீப்’. இந்தியாவின் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல மொழிகளில் நிகழ்த்தப்பட்ட நாடகம் இது . எனது வீதிநாடகங்களில் சில, பிற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றம் கண்டிருக்கின்றன. எனினும் பல மொழிகளிலும் மேடையேற்றப்பட்ட ஒரு முழு நீள மேடை நாடகம் ‘தமிழில்’ உண்டென்று சொன்னால் அது ஔரங்கசீப் தான்.
ஓர் எதார்த்தவாத படைப்பான இந்நாடகம், பல வித சவால்களை நடிகனுக்கும், நெறியாளுநருக்கும் அளிக்கக்கூடியதாக இருந்தது. தனது அரண்மனையிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கும் ஷாஜகான், ஷாஜகானின் மூத்த மகள் ஜெகன்னோரா, இளைய மகள் ரோஷனோரா, ஔரங்கசீப்பின் தமையன் தாரா, பாதுஷா ஔரங்கசீப் என இப்பாத்திரங்களுக்கிடையே உள்ள மன இறுக்கங்களின் மூலம் வளர்ச்சியுறுகிற நாடகம் இது. ராஜா ரவிவர்மா ஷாஜகானாகவும், குமரவேல் ஔரங்கசீப்பாகவும் ஜெகன்னோராவாக ஜீவாவும் திறம்பட நடித்திருந்தனர். தமிழில் மேடையேற்றப்பட்ட முக்கியமான எதார்த்தவாத நாடகம் என இதைச்சொல்லமுடியும்.
பேரா.ராஜூ அவர்கள், புனே திரைப்படக்கல்லூரியில் படித்துவிட்டு பிறகு புதுடில்லியில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்று கேரளாவின் திருச்சசூர் நாடகப்பள்ளி, தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை என்று பணியாற்றிய பிறகு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையில் பணியாற்றத் தொடங்கியவர். பேராசிரியர்,துறைத்தலைவர், புல முதன்மையர் எனப் பல பொறுப்புகளில் செயல்பட்டவர் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
அவரது நீண்ட நெடிய பயணத்தில், தமிழ் நாடகச்செயல்பாடுகளுக்கு அவரது அளித்த பங்களிப்புகள் ஏராளம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நவீன நாடகச்செயல்பாடுகளை தொடங்கி வைத்ததில் அவரும் ஒருவர். சரியாகச்சொல்லவேண்டுமெனில் பேரா.ராமானுஜத்தினுடைய தொடக்க காலச்செயல்பாடுகளில் அவரது வலது கரமாயிருந்தவர்.
தேசிய நாடகப்பள்ளியில் பயின்றபோது அங்கு மேடை அமைப்பை [stage design] சிறப்புப்பாடமாக பயின்றவர். அவரது அனைத்து தயாரிப்புகளிலும் மேடை அமைப்பின் நேர்த்தியை நம்மால் காணமுடியும்.
அன்றைய தமிழ் நாடகச்செயல்பாடுகளில் பேரா.ராஜூவினது தயாரிப்புகளை தனித்து அடையாளம் காணவியலுமெனில் அதற்குக்காரணமாயிருந்தது எதார்த்த பாணியையும், ஒயிலாக்க அணுகுமுறைகளையும் ஒன்றிணைத்து பெறப்பட்ட அவரது தனிப்பட்ட பாணியிலான நாடகங்கள்தாம்.
ஒளிப்பதிவாளர் செழியனின் ‘கதை’ என்னும் சிறுகதையினை பேரா.ராஜூ நாடகமாக மேடையேற்றியது அவரது அண்மைக்கால படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்நாடகம் அதிகமான முறைகள் மேடையேற்றப்படவில்லையெனினும் எதார்த்த வாத நடிப்புக்கும், ஒரு நடிகர், பாத்திரங்களை மேடையில் உயிர்பெறச்செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கும் மிகப்பெரும் கதவுகளை திறந்து விட்ட அனுபவமாக அமைந்த நாடகம் அது.
எழுத்தாளர் இமயத்தின் ‘பெத்தவன்’ , ‘கக்கன்ஜீ ’ போன்றவற்றை மேடையேற்றிய பேரா. ராஜூ, இந்நாடகங்கள் மூலம் ஒரு புதிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்.
மிகவும் குறைவான எளிய மேடைப்பொருட்கள், நேரடியான எளிமையான மேடை உத்திகள், நடிகனது இயற்பண்பு சார்ந்த எதார்த்தவாத நடிப்பை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய ஒரு நாடகமொழி, கற்பனைவளத்தோடு பயன்படுத்தப்பட்ட இசை, இவற்றையெல்லாம் ராஜூ, வலுவாகக் கையாண்டிருந்தார். இந்நாடகங்கள், பார்வையாளர்களிடத்தில் மிகவும் நெருக்கத்தை உருவாக்கிக்கொண்ட நிகழ்வுகளாகவும் உருவெடுத்தன.
2008ஆம் ஆண்டு, புதுவை மத்திய பல்கலைக் கழக நிகழ்கலைத்துறைத் தலைவராக பேரா.ராஜூ அவர்கள் பொறுப்பு வகித்தபோது நிகழ்கலைத்துறை மாணவர்களுக்காக ஒரு நாடகத்தை தயாரித்து இயக்குமாறு என்னை அழைத்தார். வெளியிலிருந்து ஒருவரை அழைத்து நாடகத்தை தயாரிக்கச்சொல்வது என்பது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையில் இல்லாது போன ஒரு சூழலில் என்னை அவர் அழைத்திருந்தார் என்பதுதான் இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயம். அந்த ஓர் அரிய வாய்ப்பில்தான், நான் எழுதி நெறியாள்கை செய்த ‘பாரி படுகளம்’ நாடகம் உருவானது.
அப்படி உருவாக்கப்பட்ட அந்நாடகம், நிகழ்கலைத்துறை மாணவர்கள் சார்பில் தமிழகம்,புதுவை ஆகிய இடங்களில் எட்டுமுறையும், பின்னர் கேரளா திருச்சூரில் நடைபெற்ற சர்வதேச நாடகவிழாவிலும் [ITFOK], புது டில்லி தேசிய நாடகப்பள்ளி நடத்து கிற அனைத்திந்திய நாடகவிழாவிலும் [BRM-Bharath Rang Mahotsav] பங்கேற்றது. தமிழ்நாட்டு நவீன நாடகச்செயற்பாடுகளில் ஒரு செயற்பாட்டாளர் இன்னொரு செயற்பாட்டாளரை ஏற்பதில்லை; உறவு பேணுவதில்லை. அப்படியொரு சூழலில் பேரா.ராஜூ அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பை தமிழ் நாடகச்சூழலில் செய்யப்பட்ட ஒரு மிகப்பெரும் ‘சமிக்ஞை’ யாகவே நான் கருதினேன்; உணர்ந்தேன். அதன் பொறுப்பை உணர்ந்தவனாகவே ‘பாரி படுகளம்’ நாடகத்தயாரிப்பிலும் நான் செயல்பட்டேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததற்காக புதுவை மத்திய பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைக்கும் அதன் தலைவராயிருந்த பேரா.ராஜு அவர்களுக்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
தேசீய நாடகப்பள்ளியின் மண்டல வள மையம் செயல்பட்டபோது அதன் ஆலோசனைக்குழுவில் நான், பேரா.ராஜூ அவர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அத்தருணங்களில்தாம் பல நாடகப்பயிலரங்குகளை தமிழகத்திலும் நடத்துவதற்கு நமக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அப்படியொரு வாய்ப்பில்தான் 2012ஆம் ஆண்டு தென்னகப் பண்பாட்டு மையமும், தேசிய நாடகப்பள்ளி பெங்களூரு மண்டல வளமையமும் இணைந்து நடத்திய ஒரு மாத கால உண்டு-உறைவிட நாடகப்பயிலரங்கு. இப்பயிலரங்கிற்கு நான் ஒருங்கிணைப்பாளன்; பேரா.ராஜூ அவர்கள் இயக்குநர். இப்பயிலரங்கில்தாம் நான் எழுதிய ‘வஞ்சியர் காண்டம்’ நாடகத்தை பேரா.ராஜூ நெறியாள்கை செய்தார். இந்நாடகம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் 27 முறை மேடையேற்றம் கண்டது; பெருவாரியான வரவேற்பையும் பெற்றது.
இந்நாடகத்தயாரிப்பில் அவரோடு பணியாற்றியது உண்மையில் எனக்கு ஒரு பேரனுபவம். ‘வஞ்சியர் காண்டம்’ நாடகம் குறித்து ஆங்கிலம் தமிழ் உட்பட பல பத்திரிகைகளில் இதழ்களில் திறனாய்வும் மதிப்பீடுகளும் வெளியாகியுள்ளன. எனவே அது குறித்து இங்கு நான் அதிகம் கூறவேண்டியதில்லை.
1980களில் இந்திய ஒன்றிய அரசின் சங்கீத நாடக அகாதெமி ‘இளம் இயக்குநர்களுக்கான’ நிதி நல்கை ஒன்றை அறிவித்தது. இதன் படி ‘நிதி நல்கை’ பெறுவோர் இந்திய நாடக மரபுகளை பிரதி பலிக்கும் வகையில் ஒரு நாடகம் ஒன்றினை தயாரித்திடல் வேண்டும் .அப்படித்தயாரிக்கப்படும் நாடகங்கள் மண்டல அளவில் நடைபெறும் நாடகவிழாவிலும் பின்னர் அனைந்திந்திய அளவில் நடைபெறும் நாடகவிழாவிலும் மேடையேற்றப்படும். இப்படி நிதி நல்கை பெற்றுதான் பேரா.ராஜூ, இந்திரா பார்த்த சாரதியின்’நந்தன் கதை’ நாடகத்தை நெறியாள்கை செய்து தயாரித்தார்.
இப்படி சங்கீத நாடக அக்காதெமியினது நிதி நல்கை பெற்று 1980களின் தொடக்கத்திலிருந்து 1990 களின் இடைப்பகுதியில் இத்திட்டம் நிறுத்தப்படும் வரை இந்திய நாடு முழுதும் 200க்கும் மேற்பட்ட நாடகங்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர் ஒரு சமயம் இப்படித்தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிறந்த பத்து நாடகங்களை பட்டியலிடச்சொல்லி ஒரு வல்லுனர் குழுவிற்கு பொறுப்பளிக்கப்பட்டது. அவ்வல்லுனர் குழு தேர்ந்தெடுத்த பத்து நாடகங்களில் மூன்று நாடகங்கள் தமிழ் நாடகங்கள். ராஜூ நெறியாள்கை செய்த இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ , மு.ராமசாமியின் ‘துர்க்கிர அவலம்’, வ. ஆறுமுகத்தின் ‘கருஞ்சுழி’ ஆகிய இவையே அம்மூன்று நாடகங்கள். தொடக்க கால தமிழ் நவீன நாடகச்செயல்பாடுகளின் திறனை உணர்ந்துகொள்ள இந்த ஓர் உதாரணமே நமக்கு போதுமானது.
மற்றொன்று , இன்றைக்கு ஒரு நடிகனின் உடலைப் பழக்குவதில் வசக்குவதில் இந்தியாவிலுள்ள சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் பேரா.ராஜூ என்பதை தேசிய நாடகப்பள்ளியின் மூத்த நாடக ஆளுமைகள் சிலர் சொல்ல நானே என் காதுபட கேட்டிருக்கிறேன். இன்றைக்கு நவீன நாடகச்செயல்பாடுகளில் ஈடுபடும் அனைவரும் இவ்வுண்மைகளை தெரிந்து கொள்வது நல்லது.
அண்மையில் திருப்பத்தூர் தூயநெஞ்சுக்கல்லூரியில் நடந்த பயிலரங்கு ஒன்றில் நானும் பேராசிரியர் ராஜூவும் கலந்துகொண்டோம். பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களது திறனை வெளிக்காட்ட ஒரு சிறு நாடக நிகழ்வொன்றையும் இறுதியில் தயாரிக்க வேண்டியிருந்தது. நான் இப்சனின் ‘ பொம்மை வீடு’ நாடகத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்துக்கொண்டு தயார் செய்தேன். பேரா.ராஜு, இமையத்தின் ‘காதில் விழுந்த கதைகள்’ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எடுத்துக்கொண்டு நிகழ்வாக்கி இருந்தார். நடித்தவர்கள் பெரும்பாலோர் மாணவிகள். பெண்களின் பாலியல் விழைவுகளை சங்கோஜங்களின்றி முகத்திலடித்தாற்போல் பேசுகிற கதையாடல் அது. பெரும்பாலும் மாணவிகளைக் கொண்டே ஒரு வலுவான நிகழ்வாக அதை உருமாற்றியிருந்தார் ராஜூ.
எழுதப்பட்ட நாடகப்பிரதிகளுக்காக பேரா.ராஜூ காத்திருப்பதில்லை. படிக்கிற செய்திகளில் புனைவுகளில் உள்ள நாடகார்த்தமான தருணங்களை முரண்களை உள்வாங்கிக்கொண்டு அவற்றை நாடகமாக்கிவிடுகிறார். அண்மைக்காலமாக அவர் வளர்த்தெடுத்து வருகிற அணுகுமுறை இது.
பேரா. ராஜூ எழுதிய ‘நெறியாளுகை நோக்கில் தெருக்கூத்து’ எனும் நூல் தமிழ் நாடக உலகிற்கு அவரளித்த மதிப்புமிக்க பங்களிப்பு எனலாம். நாடகக்கலையில் நெறியாளுநர் என்கிற ஆளுமை உள்ளே நுழைந்தது, ஒரு 120 ஆண்டுகட்கு முன்புதான். அதற்கு முன்பு நாடகாசிரியர் இருந்தார்; அண்ணாவியார் இருந்தார்; சூத்திரதாரர் இருந்தார்; கட்டியங்காரர் இருந்தார். நெறியாளுநர் செய்கிற பணிகளை இவர்களே செய்துவந்தனர். இவரது முனைவர் பட்ட ஆய்வினடிப்படையில் எழுதப்பட்ட இந்நூல், நெறியாளுகையின் வரலாறு, நெறியாளுமையின் முறைமைகள், மேற்குலகில் தோன்றிய பல்வேறுவிதமான நாடகக்கோட்பாடுகள், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தொன்று தொட்டு இருந்துவந்த நாடக அணுகுமுறைகள் இவற்றையெல்லாம் சுருக்கமாகவும் ஆழமாகவும் தெளிவாகவும் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கிறது. ‘அபிநய வர்ஷினி கலைக்கூடம்’ சார்பில் அவரே வெளியிட்ட நூல் இது. இந்நூல் மறுபதிப்பு காணவேண்டியது தமிழ்நாடகக்சூழலுக்கு மிகவும் தேவையான ஒன்று.
பேராசிரியர் ராஜு அவர்களின் துணைவியார் ஹேமமாலினி அவர்கள் கடந்த ஆண்டு, எதிர்பாராத விதமாக காலமானார். ஹேமமாலினி அவர்கள் சிறந்த நடனக்கலைஞர். தனது வீட்டிலே நடனப்பள்ளி ஒன்றையும் நடத்திவந்தார். பேராசிரியர் ராஜூவுக்கு எல்லாமாக இருந்தவர் அவர். உண்மையில் அவரது மறைவு ராஜூவுக்கு ஒரு பேரிழப்புதான். தனது துணைவியாரின் நடன வாழ்வு குறித்த ஓர் ஆவணப்படம் தயாரிக்கிற முயற்சியில் தற்போது ராஜூ ஈடுபட்டுள்ளார். தனது துணைவியார் குறித்த நினைவுகளை ஒரு காத்திரமான கலை அனுபவமாகப் பதிவு செய்ய இம்முயற்சி அவருக்கு உதவக்கூடும்.
இன்றைக்கு தமிழின் நவீன நாடகச்செயல்பாடுகள் முன்பு போல் இல்லை. நீளத்திலும் அகலத்திலும் விரிந்தும் பரந்தும் உள்ளது. 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தஞ்சையில் எனது ஒருங்கிணைப்பில் தமுஎகச சார்பில் நடத்தப்பட்ட ‘தென்னிந்திய மக்கள் நாடக விழாவில்’ 29 குழுக்கள் அழைக்கப்பட்டன. அவற்றில் நான்கு குழுக்களைத்தவிர 25 குழுக்களும் தமிழ்நாடு,புதுவை போன்ற தமிழ் பேசும் மக்கள் பகுதிகளில் செயல் படுபவைதான். அது போல 2019 இல் சென்னையில் 5 நாட்கள் நடைபெற்ற தென்னிந்திய நாடக விழாவில் 32 குழுக்கள் பங்கெடுத்தன. இச்செயல்பாடுகள் எதிர்காலத்தில் மென்மேலும் விரிவடைய சாத்தியங்களுள்ளது.
தொடக்க காலத்தில் அதாவது 1970களின் இறுதியில் எண்பதுகளில் தொடக்கத்தில் நாடகத்தை ஒரு பயில்நெறியாக கல்விப்புலத்தில் பயின்று நாடகம் செய்தவர்கள் என பார்த்தால் பேரா.எஸ்.பி.சீனிவாசன், பேரா.ராமானுஜம், பேரா.ராஜூ ஆகிய மூவரும்தான். கோபாலி, ராஜாமணி போன்றோர் நாடகப்பள்ளியில் பயின்றவர்களெனினும் நாடகச்செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடாது போய்விட்டார்கள். பின்னர் கே.எஸ்.ராஜேந்திரன் தேசிய நாடகப்பள்ளிக்கு சென்றார். பணி நிமித்தமாக டில்லியிலேயே இருந்துவிட்டார். அவ்வப்போது வந்து ஒரு சில தயாரிப்புகளை தமிழ்நாட்டில் செய்தபோதிலும் பெரும்பாலான அவரது நாடகப்பணிகள் டில்லியில்தான். கடந்த இருபதாண்டுகளில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர்கள் என்று பார்த்தால் 18 பேருக்கு மேல் தற்போது தமிழகத்திலுள்ளனர்.
தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர்கள் வந்து விட்டால் நமதுநாடகச்செயல்பாடுகளில் மிகப்பெரும் ‘மாயம்’ நிகழ்ந்துவிடும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை; அப்படிச் சொல்ல வரவுமில்லை. தேசிய நாடகப்பள்ளியில் போய் ச்சேர்ந்து படிப்பதற்கான சூழலையும் உந்துதலையும் கடந்த கால நமது நாடக செயல்பாடுகள் அளித்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக மட்டுமே இதைச்சொன்னேன்.
எனினும் அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகாவில் நவீன நாடகச்செயல்பாடுகளுக்கு இருப்பது போன்ற ஒரு சமூக ஆதரவு, அரசு நிறுவனங்களின் ஆதரவு நமது தமிழ்நாட்டில் நவீன நாடகங்களுக்கு இல்லை. இன்றைய நாடகச்செயற்பாட்டாளர்கள் முன் உள்ள சவால் அது. அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்றும் யோசிக்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற பேரா.ராஜூ அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
எனவே பேரா.ராஜூ அவர்கள் பணி ஓய்வுக்காலத்தினை நமது நாடகச்செயற்பாட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும், ஏனெனில் பேரா.ராஜூவிடமிருந்து தமிழ் நாடக உலகம் பெறவேண்டியது இன்னும் நிறைய உள்ளது.
கட்டுரையாளர்: [email protected]