கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29 – நா.வே.அருள்
ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள்
*****************************
அதிகாரம்
தனது இறுதி ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்த போது
அமைதி
தன் முதல் ஊர்வலத்தை நடத்தத் தொடங்கியது.
இராவணனுக்குச் சமமாக
சுருட்டிவைத்திருந்த சொந்த ஆசனத்திலமர்ந்த
அநுமனைப் போல
அதிகாரங்களின் ஊர்வலத்திற்கு எதிராக
அமைதியின் முதல் ஊர்வலம்!
கருப்பையிலிருந்து வெளிவருகிற குழந்தையைப்போல
புரட்சி
விவசாயியின் கருப்பையிலிருந்து
இந்திய மண்ணை முகர்ந்து பார்க்கிறது.
அதிகாரம் –
தனது இறுதி முடிவை
சட்டங்களின் மூலமாக எழுதுகிறது
வன்முறையின் மூலமாக அமல்படுத்துகிறது
அமைதியின் காவலர்களோ
சமாதானப் புறாக்களை வானில் பறக்கவிட்டு
மனித குலத்தைப் பாதுகாக்கிறார்கள்.
விவசாயி
காட்டின் மகன்
அவன் கர்ப்பத்தில் காடு
மரங்களை நாற்காலியாக்கியவர்கள்
ஒரு காட்டையே அழிக்கிறார்கள்
மேலும் அந்த நாற்காலியைச் சுடுகாட்டில்
சிதையைப்போல அலங்கரிக்கிறார்கள்.
எரிமலைகள்
டிராக்டர்களில் ஊர்வலம்போகப் பழகிக் கொண்டன
எரிமலைக்குள்
அக்கினியின் வரலாறு
ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது.
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்