கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்

கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்




அது
என் கனவில் ஓடிய
அதே நீரோடை தான்
ஒவ்வொரு துளியிலும்

மணல் மேல் கூழாங்கற்கள்
அதன் மேல் கண்ணாடி நீர்
அடி வரை இருந்தவற்றை
தெளிவாய்க் காட்டி
சாத்திய வளைவு நெளிவுகளுடன்
மனதிலிருந்து நழுவி
எங்கோ ஓடியது ஓடை
ஜீவ நதியாய்

நாளின் முதல் சூரியக் கதிர்களில்
ஒளிரும் பிரதிபலிப்புகள்
தங்க மணலின் நகர்வாய்
மீண்டும் மீண்டும் அதன் அடியில்
அதன் வழியெங்கும்

கரைகளைத் தொட்டுத் தொட்டு
தன்னை வடிவமைத்த அது
துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தது
ஓரிரண்டு இடங்களில்

ஓர் ஓடையின் சத்திய இலக்கணங்கள்
ஒவ்வொரு அசைவிலும் நகர்விலும்
பின்னியபடி நெளிந்தோடின

சொர்க்கத்தின் குளிருடன்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிய
அதன் இசைத் துண்டுகளில்
வழிந்தோடியது மகிழ்ச்சி கலந்த மயக்கம்

முணுமுணுப்பற்ற சுழல்களின்
சூத்திர முடிச்சுகள்
ஓடையின் ஆழம் நோக்கிப் பயணித்தன
அவிழ்த்து விடை அறிந்து கொள்ள

கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி

பெயர் தெரியாப் பூக்களே ஏராளம்
அப்பூக்களின் மணம் கரைந்த நீர்
வழிந்தது வழியெங்கும்
வாசனைத் திரவமாய்

தன் பரப்பில் விழுந்த
வனப் பறவைகளின் ஒலிகளில்
அன்று விரும்பிய ஒன்றை
அவ்வெளி எங்கும் எதிரொலித்தது இயற்கை
ஆதி மண்ணின் தேவ கானமாய் மாற்றி

இலைகளும் பூக்களும்
துடுப்பற்ற ஓடமென
எதிர்ப்பும் இலக்கும் இன்றி
ஓடின ஓடையின் வேகத்தில்

குளிர்காலக் காலையினால்
அந்த நீரோடையே
நிறம்பி வழிந்து கொண்டிருந்தது

அணுவின் அமைதியுடன்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்தது பிரபஞ்சம்
ஓர் ஓடையாய்ச் சுருங்கி

கால் நனைத்தேன்
கபாலம் வரை ஏதேதோ பரவியது
அதில் குளிரும் இருந்தது

ஆனாலும்
ஓடையின்
ஏதோ ஒரு பரிமாணத்தில் ஒளிந்திருந்த
அதன் அந்தரங்க வரிகளை
என்னால் வாசிக்கவே முடியவில்லை
இன்று வரை

ஆதித் சக்திவேல்

வறுமை கவிதை – வெ.நரேஷ்

வறுமை கவிதை – வெ.நரேஷ்




வா என் அருமை வறுமையோ வா
என்னைத் தீண்டிச் செல்ல வா

உன்ன உணவும்
உடுத்த உடையும் இல்லை வா
இருக்க இடமும் இல்லை
உன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வா

கல்வியும் இல்லை
கனவுகளும் இல்லை
என்னை மீண்டும் மீண்டும்
தீண்டிச் செல்ல வா

என் வருமையைப் பற்றி
வாய்விட்டுப் பேச வயசும் இல்லை
வளர்ந்தபின் கேட்டால் அதிகார தொல்லை வா

சாலை ஓரம் உறங்குகிறேன் விடிவதற்குள் வா
விழித்துக்கொண்டால் சந்திப்போம்…

-வெ.நேரேஷ்

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்




தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது –
வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள்
எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில்

நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள்
விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும் பறிகொடுத்து
படர்ந்து நிழல்தரும்
கிளைகளில் வசித்த
பறவைகள் அத்தனையும் வேறுகிளைகளைத்தேடி
அகதிகளாய்ப் பறந்துபோன பறவைகளின் வசிப்பிடங்களையும் தேடுகிறேன்

பறவைகளின் இடமாற்றத்தால் தடுமாற்றமானது
ஆறறிவுகள் அறியாமல்
செய்த வினைகளும்

கோடாரிகளை தூக்க கட்டுப்பாடுகள் இருந்திருந்தால்
காலியான ஆக்சிஜன் உருளைகள் தட்டுப்பாடோடு உருண்டிருக்கா.

வழியெங்கும் காற்றினை சுத்திகரிக்கும்
மரங்களின் ஆலைகளை அழித்தபின்
மனிதஇனத்தின் உயிர்காக்கும்
ஒட்டுமொத்த சுவாசக்காற்றையும் சுமந்து
அதே வழித்தடத்தில் பயணிக்கிறது சுவாச சுமையுந்துகள்

சுவாசங்களைப் புதுப்பிக்கும் விருட்சங்களின் விசேசங்களை அறிந்திருந்தால்
அவசியமிருந்திருக்காது மருத்துவ படுக்கைகளும்

ஏதோ ஒருகிளையின் பழத்தினை தின்றுதிரியும் பறவையின்
எச்சிலில் முளைக்கும் மரங்கள் தீங்கு செய்தோருக்கும் நிழல்தந்து
கார்பன் துகள்களை
உள்வாங்கி சுவாசிக்கும் உயிர்களுக்கு பிராண வாயுவினைத்தரும்
அதிசயமரத்தை விதைத்த ஆக்சிஜன் பறவையின்முன்
வெட்கப்பட்டு தலைகுனிந்து நிற்பதையறியாமல்
பறந்துசெல்கின்றன அப்பறவைகள்….

கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“இதற்குத்தானே ஆசைப்பட்டேன்”
*************************************
பிறக்கையில் கொங்கையமுது
தவழ்கையில் மண்ணமுது
நின்றபின் பிஸ்கட் சாக்லேட்டமுது
வளர்ந்த்பின் இன்னபிற இனிப்பமுது
வாலிப வயதில் விளையாட்டு
பருவம் வந்ததும் காதல்களியாட்டம்
மணந்தபின் கவின்மிகு கலவி
நடுத்தர வயதில் பணம் பொருள் செல்வம்
முதிர்ந்தபின் நோயற்ற வாழ்வு
இறுதியில் வலியற்ற இறப்பு,
இதற்குத்தானே ஆசைப்பட்டான்!
ஆனால் எதுவுமே ஏகமாய்
கிட்டுவதில்லை!!
துன்பத்தின் தூறல்கள் தூவானமாகி
துரத்தும் கவலைகள் கானல் நீரென
துடிக்கும் கனவுகள் துவண்டு போக!
துடிப்பும் ஒருநாள் நின்றுபோகும்,
தூயவனின் தாள்சேரும் சுகமான இறுதி நாளுக்கு….
ஏங்கிஏங்கி தவித்து நின்றான் மானிடன்!

திக்குத் தெரியாத காட்டில்”
********************************
தத்தித் தத்தி
தாயவளை கரம்பற்றி
சுத்திச் சுத்தி வந்து!
பற்றிப் பற்றிப்
பள்ளிப்புத்தகம் தனைக்
கற்று கற்று தேறி
சுற்றி சுற்றி
சுழல் விழியாள் காதலை
தேற்றி தேற்றி தொலைத்து
ஓடி ஓடி
வேலைதனைத்
தேடித் தேடி அலைந்து பெற்று!
பாத்துப் பாத்துப்
பெண்ணவள மனைவியாக்கி
பொத்திப் பொத்திப் பாதுகாத்து
சேத்துச் சேத்து
வைத்த பொருள்தனை
காத்துக் காத்து வைத்துத்
தூக்கித் தூக்கி
வளர்த்த வாரிசுகளோ
தாக்கித் தாக்கிப் பேச
தொங்கித் தொங்கி
முதுமையால் உடல்
மங்கி மங்கிப் போக
சுட்டுச் சுட்டுத்
திக்குத் தெரியாத (இடு)காட்டில்!
மண்ணொடு மண்ணாகிப் போனானே போக்கத்த மனிதன்!

“எழுத்தறிவித்தோனே ஏகன்!”
**********************************
ஆசிரியர்கள்!
அரும்பெரும் பட்டங்கள்!
ஆதாயம் தரும் பதவிகள் !
அனைத்தும் மாணவர்கட்கு
அறிவால் போதித்து!
கற்றுத்தரும் பெற்றுத்தரும்!!
ஆரவாரம் இல்லா
அணையா சுடர்கள்!

ஆசிரியர்கள்!
ஆயிரம் ஆயிரம் இளவல்களை
அலுங்காமல் நலுங்காமல்
ஆங்கே உயரத்தில் அமர்த்திடும்
அரிய பணி ஆற்றிடும் இவர்கள்!
ஏனோ ஏணியை போல்
“ஏறல்” முடிந்ததும்
எங்கோ புறந்தள்ளப்படுவர்!

ஆசிரியர்கள்…
ஆக சிறந்த சமுதாயம்
ஆக்க பிறந்த ஆசான்கள்!
அவர்கள் இல்லையேல்..
ஆவிபிரிந்த உடல்போல்
ஆகிவிடும் அழிந்துவிடும்!

ஆசிரியர்கள்
அவமதிக்கும் நாடும் அரசும்!
அமைதி விலகி
ஆக்கம் விலகி
அவ்வியம் தழுவி
அழிவது உறுதி!

அனைவர்க்கும்,
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
குருவே சரணம்!!

அவர் சைக்கிள் போட்டி!!
*****************************
அம்மாவின் அஞ்சரை பெட்டியில்
அஞ்சி நடுங்கி அரண்டு புரண்டு! ஐம்பது பைசா ஆட்டைய போட்டு!
அண்ணாச்சி சைக்கிள்கடையில்
அரைமணி நேரம் வாடகை எடுத்து!
அரைடஜன் நட்புகள் ஒன்றுகூடி,
போட்டாப்போட்டி பந்தயத்தில்!
மிதித்து மிதித்து பறந்தேன்!
மிதந்து மிதந்து மகிழ்ந்தேன்!
மின்னலென வெற்றி பெற்று!
கிரிக்கெட் மட்டை பரிசு பெற்று!
அம்மாவிடம் வெற்றியை பகிர!
அஞ்சறைபெட்டி ஆட்டையை மன்னித்து
அன்பு அம்மா! வாரியணைத்து
ஆசைதீர உச்சிமோர்ந்து ஆசிதந்தாள்!

– மரு உடலியங்கியல் பாலா

பேரழகியின் பேனா…!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

பேரழகியின் பேனா…!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




அந்த கருப்பு நிற பேனாவும்
வெள்ளைப் பேப்பரும்
ஈரக்காற்றிலே மிதக்கின்றன.

மனமெனும் பந்தலில்
அடுக்கி வைக்கப்பட்ட
எழுத்துக்களைச் சுமந்தவாறு,

இரவு முழுவதும்
கண்களில் மேய்ந்து
கொண்டிருந்த
பல எழுத்துக்கள்

கண்களை
திறந்ததும் மறைந்து
கொள்கின்றன
இமைகளென்னும்
கதவுகளுக்கு பின்னே ,

“வானத்திலிருந்து
கீழ் நோக்கி வரும்
மழைத்துளி தரையில்
விழும் பொழுது
பூத்துக் கரைந்து விடுகிறது
கானல் நீராகிய கனவுக்குள்ளே ”

“ஊர்ந்து
செல்லும் கட்டெறும்பு
ஒன்று கருப்பு மையினைத்

தடவியவாறு ஊர்ந்து செல்கிறது
அவள் எழுத முற்பட்ட
எழுத்துக்களை எழுதியவாறு ”

கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

ஏக்கம் சிறுகதை – சுபாஸ்ரீ. செ

ஏக்கம் சிறுகதை – சுபாஸ்ரீ. செ




நீங்கள் சிறந்த பேச்சாளராக விருது பெற்றதற்கு இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது, இதன் மூலம் நீங்கள் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? என்று சரமாரியாக கேள்விகளை பத்திரிக்கையாளர்கள்  கவிதாவிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அந்தப் பெரும் கூட்டத்தின் இடையே அவள் பதில் சொல்ல தொடங்கும்போது கீங் கீங் என்ற அலாரம் அடிக்க தொடங்கியது நான்கு மணியை காட்டியது கடிகாரம். கனவா? கனவிலாவது என் ஏக்கம்  நிறைவேறுகிறதே என்ற பெருமூச்சுடன் தன் அன்றாட பணிகளை செய்ய தொடங்கினால் கவிதா.

மனதினில் பள்ளிப் படிப்பின் போதே பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசிய பல பரிசுகளைப் பெற்ற போது தமிழாசிரியரும், நண்பர்களும் நீ ஒரு சிறந்த பேச்சாளராக வரப்போகிறாய் என்று சொன்னதை நினைத்து ஒரு சிறு புன்னகையுடன் அந்த பழைய நினைவுகளிலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள்.

அப்பாவின் உடல்நிலையை காரணம் காட்டி கல்லூரி முடித்தவுடன் ஒரே மாதத்தில் திருமணம், திருமணத்திற்குப் பிறகு ஏக்கங்களை  தனக்குள்ளே புதைக்கும் படி ஆனதை  நினைத்து அடிக்கடி வருந்துவதை தவிர கவிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்னங்க காபி என்று தன் கணவரை எழுப்பினால், காபியை குடித்துவிட்டு  அவரும்  இன்னிக்கு என் ஆபீஸ்- ல்  மீட்டிங் அதனால் லஞ்ச்  வேண்டாம் அவங்களை அரேஞ்ச் பண்ணிப்பாங்க  என்று சொல்ல, நேற்றே சொல்லி இருக்கலாமே சொன்னால் அதற்கு ஏற்றார்போல் சாதம் வைத்து இருப்பேன் ல்ல என்று சொல்ல, உடனே அவள் கணவர் குமாரோ, ஏன்  இந்த மகாராணி கிட்ட சொல்லிட்டு தான் நான் மீட்டிங் கூட அட்டென்ட் பண்ணனும் போல என்று சொல்லிக்கொண்டே குளியலறையில் நுழைந்தான். இதைக் கேட்ட கவிதாவிற்கு பெண்களின் அடிமைத்தனம் என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பில் பேசிய பேச்சு போட்டியில் தான் பேசி முதல் பரிசு பெற்றதை நினைத்து மனதிற்குள் அழுது கொண்டிருந்தால், என் ஏக்கங்களை நான் யாரிடம் சொல்வது என்ற சிந்தனையுடன் கவிதா தன் மகனின் அறைக்கு சென்று பிரணவ் சீக்கிரம் எழுந்திரு உன்னுடைய ஃபேவரைட் பூஸ்ட் பிரஷ் பண்ணிட்டு குடிச்சுக்கோ குளிச்சிட்டு கிளம்பு, அம்மா டிபன், லன்ச் எல்லாம் பண்ணிட்டேன் ரெடியா இருக்கு. அம்மா, இன்னைக்கு என் ஃபிரண்டு  அசோக்கு பர்த்டே அதனால இன்னிக்கு அவனோட ட்ரீட் மா என்று சொல்ல, ஏன்டா இதை நேற்றே சொல்லக்கூடாதா என்று வாயை எடுத்த கவிதா ஏனோ சரிப்பா என்று நிறுத்திவிட்டாள்.

தனக்கு ஆதரவாய் தோன்றும் ஒரே உறவு தன் மகளிடம் சென்றால் அவள் பிளஸ்டூ படிக்கிறாள் நாலரை மணிக்கே  எழுந்து படித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா, டீ தம்ளரை நீட்டிக்கொண்டே டைம் ஆகுதுமா  என்று கவிதா சொல்ல அவளும் இதோ அஞ்சு நிமிஷத்தில்  கிளம்புறேன்  அம்மா என்று சொல்லிக்கொண்டே பையில் புத்தகங்களை  வைத்து பள்ளி செல்ல ஆயத்தமானாள்.

எல்லோரும் வீட்டிலிருந்து கிளம்பியவுடன்  சற்று அமைதியாக உட்கார்ந்த கவிதாவிற்கு அமைதி தன் பழைய நினைவுகளில் சென்றது.

என்னங்க நான் பேச்சுப்போட்டியில் கலந்து நிறைய பரிசு வாங்கியிருக்கிறேன் அதையெல்லாம் அம்மா வீட்டில் இருக்கு அதை இங்கே எடுத்து வரவா என்று கவிதா திருமணமான புதிதில் கேட்டதையும் அதற்கு குமார் அதெல்லாம் உனக்கு இனிமேல் எதுக்கு போதும் என்னையும் எங்க அம்மா, அப்பா, இன்னும் நமக்குன்னு குழந்தை குட்டி வரும் அதை கவனிச்சா போதும், போ போய் சூடா ஒரு காபி போட்டு தா தலை வலிக்குது என்று சொன்னது இன்று நினைக்கையிலும் அவள் கண்களில் கண்ணீர் வரத்தான் செய்தது.

ஏனோ அன்று அவள் கண் முன்னே எல்லாம் வந்து சென்றதை அவளால் தடுக்க முடியவில்லை. கனவு கனவாகவே போனதற்கு காரணம் பெண்ணினம் என்றால் சமையலறையும் வீட்டில் உள்ளவர்களை கவனிப்பது மட்டும் என்று நினைக்கும் சில ஆண்களினாலா? கடவுள் எழுதிய என் தலைவிதியா? திருமணத்திற்குப் பின் என் ஆசைகளை வாழ்ந்து காட்டாமல் என் மனதிற்குள் புதைத்த நான் தானா? என்ற கேள்விகளை சுமந்தபடி அன்றைய பகல் பொழுது கழிந்தது.

மாலையில் அவளது கணவர் வீட்டிற்கு வரும்போதே ஏதோ டென்ஷனாக இருப்பது போல் அவள் உணர்ந்தால் உடனே ஒரு கப் காபி எடுத்துக்கொண்டு அருகில் சென்றாள். ஏங்க ஏதாவது பிரச்சனையா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று கவிதா கேட்க, ஆமா பிரச்சனைதான் ஆனா உன்கிட்ட சொல்லி என்ன யூஸ் என்று சொல்ல இதை கவனித்துக் கொண்டிருந்த ப்ரீத்தா ஏம்பா என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே அதை தீர்க்க முடியுமா? முடியாதா? என்று சொல்ல முடியும் னு சொல்ல, ஏனோ தன் மகள் கேட்கும்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை, உடனே தன் பிரச்சனைகளை கூறினார். அதாவது இன்னிக்கி நடந்த மீட்டிங் அப்போ ஒரு ப்ரோக்ராம் ஒன்னு பண்ண சொன்னாங்க அது கொஞ்சம் டஃப் டாஸ்க்கா இருந்தது நாளைக்கு சப்மிட் பண்ணனும் என்று குமார் சொல்ல உடனே பிரீத்தா அம்மாவுக்கு ப்ரோக்ராமை பற்றி தெரியும் தான் அப்பா கொஞ்சம் அவங்ககிட்ட கேட்கலாமே என்று சொல்ல, நல்லா சொன்ன போ உங்க அம்மா வா அவளுக்கு என்ன தெரியும் எப்போ பார்த்தாலும் எதையோ பறிகொடுத்தவ மாதிரி எதோ யோசனையோட அமைதியா வே இருப்பா என்று குமார் சொல்ல, ஆமாம் பிரீத்தா அம்மா கு லாம் அந்த அளவுக்கு நாலெட்ஜ் இல்ல என்று பிரணவும் சேர்ந்துகொண்டான்.

உடனே ப்ரீத்தாவிற்கு கோபம் வந்தது அப்பா நீங்கள் அம்மாவை எங்க முன்னாடியே இப்படி பேசறது நால தான் பிரணவும் இப்படி பேசறான் என்று சொல்லிக்கொண்டே அம்மாவிடம் திரும்பி அம்மா இதை உங்களால் செய்ய முடியும் நீங்கதான் இத செய்யறீங்க, எத்தனை முறை நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் ல ப்ரோக்ராமிங் ப்ராஜெக்ட் கு எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அப்பாக்கும், பிரணவுக்கும் நீங்க தான் உங்கள் திறமையை ப்ரூஃப் பண்றீங்க ஓகேவா என்று சொல்லியவுடன் தன் கணவர் குமார் ரை பார்த்தால் அவரும் மகள் சொன்னதால் அதை பற்றி சொல்ல கவிதா கோ இது கனவா?இல்லை நிஜமா? என்று தோன்றினாலும் தன் கணவர் சொல்வதை நன்றாக கவனித்தாள்.

அன்று கொஞ்சம் நேரம் ஆனாலும் அதை முடித்துவிட்டு தான் உறங்க சென்றாள் கவிதா. காலையில் எழுந்து எப்பொழுதும்போல் தன் கணவரை காபி கொடுத்து எழுப்பி விட்டாள். ஏன் கவிதா என்னை நான் சீக்கிரமா தானே எழுப்பிவிட சொன்னேன் எப்போதும் போல எழுப்பிவிட்டு இருக்க ப்ரோக்ராமிங் இன்னும் முழுசா முடிக்கவில்லை இன்றைக்கு கண்டிப்பாக சப்மிட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல, அவள் நான் அதை முடித்து விட்டேன் என்று சொன்னவுடன் குமார் ஆச்சரியமாக நம்பாமல் பார்த்தான்.

பிறகு ரிப்போர்ட்ஸ் பார்த்துவிட்டு அவனுக்கு மிகவும் சந்தோசம் முதன் முறையாக ரொம்ப நன்றி கவிதா. நீ எனக்குப் பெரிய ஹெல்ப் பண்ணி இருக்க தெரியுமா என்று சொன்னதை கேட்டவுடன் கவிதாவின் சந்தோஷத்திற்கும் அளவே இல்லை.

எல்லா மனிதர்களும் எதிர்பார்ப்பது இந்த சின்ன சின்ன ஆதரவும் பாராட்டுதலும் தானே!

அன்று மாலை மிகவும் சந்தோஷத்துடன் குமார் வீட்டிற்கு வந்து பிள்ளைகள் முன் என்ன மன்னிச்சிடு கவிதா நான் பண்ணது தப்புதான் ஆனா உன்ன பத்தி புரிஞ்சிக்காம உன்ன ரொம்ப மட்டமா பேசி இருக்கேன், இனிமே இப்படி பேசமாட்டேன். பிள்ளைங்க முன்னாடியே எத்தனையோ முறை உன்னை மட்டம் தட்டி பேசி இருக்கேன் அப்போது எல்லாம் ப்ரீத்தா தான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவா. உன்னோட திறமை எல்லாம் அவளுக்கு தான் புரிஞ்சிருக்கு, நான் காது கொடுத்துக் கூட கேட்காதது என் தப்பு தான் என்று சொல்ல, பிரணவும் சாரி மா நான் கூட உங்க மனச கஷ்ட படுறமாதிரி பேசிருக்கேன் என்று சொல்ல, உடனே குமார் நானும் நீ அப்படி நடந்துகிட்டது ஒரு காரணம் தானே உன் முன்னாடியே அம்மாவை புரிஞ்சிக்காம பேசியிருக்கேன், இனிமேல் நானும் என்னை மாத்திக்கணும் என்று சொல்லிவிட்டு சரி, இன்னிக்கு எல்லோரும் சேர்ந்து டின்னருக்கு வெளியே போகலாம் என்று குமார் முடிக்க எல்லோர் மனதிலும் சந்தோஷமும் நிம்மதியும் தவழ்ந்தது.

எல்லோரும் சேர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும்போது, அப்பா அம்மாக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு தெரியுமா என்று ப்ரீத்தா சொல்ல, தெரியலமா என்று குமார் சொல்லிக்கொண்டே கவிதாவின் பக்கம் திரும்பி நீயே சொல்லு உன்னுடைய ஆசை என்னவென்று என்று கேட்க கவிதாவும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் எனக்கு நல்ல பேச்சாளர் ஆகணும்னு ஆசை ங்க கல்யாணமான புதிதில் உங்க கிட்ட சொன்னேன் எங்க வீட்டுல நிறைய பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன் அதிலிருந்து பரிசு எல்லாம் எங்க வீட்டுல இருக்கு, எடுத்துட்டு வர வாங்க னு கேட்டேன். நீங்க அப்ப வேண்டாம்னு சொன்னீங்க, என்று கவிதா சொல்ல குமாரின் முகம் மாறியது நான் எவ்வளவு சுயநலத்துடன் இருந்திருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டே கவிதா உன் ஆசை என்னவோ அதற்கான முயற்சி எடு. நாங்கள் உனக்கு பக்கபலமாக இருப்போம் என்று சொல்ல தன் ஏக்கம் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன் வீட்டினுள் நுழைந்தாள் கவிதா.

– சுபாஸ்ரீ. செ

எண்ணம் ஈடேறும் சிறுகதை – நிரஞ்சனன்

எண்ணம் ஈடேறும் சிறுகதை – நிரஞ்சனன்




அம்மா, பானிபூரி வேணும்?

பலூன் விற்றால் தான் காசு ….. அப்புறம் பார்ப்போம்….

மக்கள் கூட்டம், அவரவர் தேவைக்கு இருப்புக்கு ஏற்ப கடைகளில் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனங்கள் அதிகம் இருக்கும் வீதியில் 12 வயது கூட இல்லாத பொண்ணு, அவங்க அம்மா க்கு பலூன் காற்று அடித்து உதவிக் கொண்டு இருக்கிறாள். அன்றைய விற்பனையில் அவர்களின் வாழ்க்கை…..

பலூன் விற்பனைக்கு கொடுத்து சென்றவன் ஒரு பலூன்னுக்கு இவளோ கொடுத்து விடனும்….. எங்கேயும் ஓட முடியாது, எங்க ஆளுக சுற்றி சுற்றி தான் இருக்காங்க….மிரட்ட…

முதலிலே காசு வாங்கிக் கொண்டு கொடுத்து இருக்கலாம், ஆனால் எப்படி விற்பனை செய்கிறார்கள் அதை பொறுத்து இறுதியில் வசூல் வேட்டை….. கேட்கவே கொஞ்சம் பரிதாபம் தான்…. அதிக விலைக்கு விற்றால் கூட அவர்களுக்கு கிடைப்பது அந்த சொற்ப பணமே……

நம் கதாநாயகி கொஞ்சம் சுட்டி & துணிச்சல், வியாபாரி கூப்பிட்டு, இவளோ பலூன் கொடுத்து இருக்கீங்க, விலை என்ன? சேர்ந்தவுடன் வாங்கிக்கோ, அதை விடுத்து அவ்ளோ சம்பாதித்த கொடுன்னு சொல்லக் கூடாது என சொல்லி விடுவாள்…..

இப்போ விற்பனை தொடங்க ஆரம்பம்…… பலூன் விற்பனையில் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ சொற்ப காசு தான், ஆனால் அவள் செய்யும் விற்பனை யுக்தியில் அதிக பலூன் விற்பாள், அது அவளின் திறமை…… சிலர், எல்லாரும் வந்து வாங்க வேண்டும் என நின்ன இடத்தில் நின்று கொள்வார்கள்….. அதற்க்கு போட்டி, இங்க அதிக கூட்டம் வரும் நான் தான் என ஒரு கும்பல், அந்த கும்பலுக்கு சப்ப கட்டு கட்ட 2 பேர்…..

நம்ம நாயகிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அவளைப் பொறுத்த வரை அதிக விற்பனை அதிக லாபம் அவ்ளோ தான்…. 1 பலூன் ரூ.20 என்றால், வாங்கினால் அவளின் திறமை….. நிற்பவர்கள் 20 கீழ வர மாட்டார்கள், நம் நாயகி அப்படி அல்ல, அதிகம் வாங்குவோரிடம் அதற்க்கு தக்கன விலை நிர்ணயம், ஆனால் நஷ்ட பட மாட்டாள்…..

ஒரே ஓட்டம் தான், தேங்கிய நீரா இல்லாமல் ஆறு போல நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் கடல் என்னும் மக சமுத்திரம் அடைய முடியும் என்ற நம்பிக்கை. 15 பலூன்கள் எடுத்துக் கொண்டு ஓடுவாள், இவளோ குழந்தை மற்றவர்கள் கையில் இருக்கும் குழந்தைகள் தேடிக் கண்டு ஓடுவாள்….. கலர் கலரா கூட கேட்ட கலர் என அவளின் விற்பனை யுக்தி தனி ஃபார்முலா….

நம் நாயகிக்கு பானிபூரி கண்டதும் உண்ண ஆசை, ஆனால் அவளிடம் இருக்கும் பைசா பூரிக்கு பற்றாது, இன்னும் விற்பனை செய்ய வேண்டும், ஆனால் கூட்டம் பார்த்தா, பூரி கிடைக்காது போல, என்ன செய்யலாம் என யோசித்தாள்…..

எவ்ளோ ? என்றவளிடம், 8 பத்து ரூபாய் என்றான்.. … கையில் இருக்கும் காசை எண்ணினாள், போதுமானதாக இல்லை…..

பலூன் விற்க போன பூரி இறாது, இவன் கடன் க்கு தர மாட்டான்…, எண்ணம் சரியா இருந்தால் ஈடேறும் என்பது பிரபஞ்ச விதி அல்லவே…..

ஒரு பெண் கை குழந்தையுடன் வந்தாள், இவள் நினைத்தாள் பலூன் வாங்க என, வந்தவள் பூரி நோக்கி போக, சற்று ஏமாற்றம்…… ஆனால் குழந்தை கீழ விட்டு பூரி சாப்பிட முடியாது, அவளும் திருக்க திருக்க முழிக்க….. நான் வேனா தட்டு பிடிக்கிறேன், நீ சாப்பிடு க்கா என்றது அந்த பிஞ்சு மனசு…..

ஒரு தாய இருந்து கொண்டு, ஒரு குட்டி பிடிக்க எடுத்து சாப்பிட மனசு வருமா…. நான் ஒன்னு நீ ஒன்னு தட்டு நீ பிடி என்றதும் அவளின் கால்களை தரையில் காணோம்….. அதாவது எண்ணங்கள் பறக்க தொடங்கி விட்டது……

உடனே பலூன் ஒரு கையில், தட்டு ஒரு கையில்…… அவளே ஊட்ட….வேணும் அளவிற்கு இருவரும் உண்டு விட்டு….. அவளின் திருப்தி அவளின் முகத்தில் தெரிந்தது…. கிளம்பும் போது, குட்டி பாப்புக்கு இந்த பலூன்…. எவ்ளோ மா?

அட போ க்கா……

நகர்ந்து சென்று கூட்டத்தில் மறைந்தாள், அடுத்த விற்பனைக்கு…….

அன்றைய அவளின் கனவு நிறைவேறியது……

– நிரஞ்சனன்

பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி

பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி




உன் நினைவுகளுடனும்
அவற்றின் கனவுகளுடனும்
பேசிக் கொண்டிருக்கிறேன்
தூக்கமில்லா இரவில்

“நம்மை அழ வைத்தவளை
அலற வைப்போனே ஆம்பளையாம் ”
எனக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா
உன்னை வாழ வைப்பதே…

உன் தீண்டல்களால்
எந்தத் துலங்கல்களுமில்லை
உன் மௌனம்தான்
ஓங்கி அரைகிறதெனை

ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் அப்படியே
என்னிடமோ ஒன்றேயொன்றுதான்
காதல், கடைசி வரை

எந்நேரமும் காதல்
தூக்கி அலைகிறேன்
பாரம் ஏதுமின்றி
பறக்கும் மனது

எனக்கு நீ ஆச்சர்யம்
உனக்கு நான் சௌகர்யம்
காதலே அனைத்தின் அஸ்திவாரம்
ஆகவே வாழ்க்கை அபூர்வம்

உன் பரவச பாவனைகள்
என்னுள் ஏதேதோ செய்ய
இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னொரு ரோமியோ- ஜுலியட்

– ராஜா ஆரோக்கியசாமி

அப்பாவின் கனவுக்குள்  மகனின் ஆசை……!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

அப்பாவின் கனவுக்குள் மகனின் ஆசை……!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




பை நிறைய
கொண்டு போன
பலூன்களையெல்லாம்
விற்று தீர்த்துக்
கொண்டிருந்தார் அப்பா

அவ்வப்போது
மகன் சொல்லி
அனுப்பிய சைக்கிள்
மனதின் கண்ணெதிரே
வந்து நின்று
ஞாபகபடுத்தியது ,

கடைசி பலூனை
விற்பனை செய்த போது
கண்ணுக்குள்
வந்து ஓடிக்கொண்டிருந்தது
அந்த சைக்கிள் ,

“பாக்கெட்டைத் தடவிப்

பார்க்கும்பொழுது
காற்றில்லாத பலூனாக
தரையில்
வீழ்ந்து கிடக்கிறது
மகன் சொல்லியனுப்பிய
கனவு சைக்கிளின்
சக்கரத்தில் ஆணி
குத்தியது போல்

கடல் காற்றோடு
தன் மூச்சுக்காற்றும்
கலந்திருந்தது
கையிலிருந்த
கடைசி பலூன்
வெடித்து சிதறியதால் ….!!!

கவிஞர் ச. சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,