வெ. நரேஷ் கவிதைகள்

வெ. நரேஷ் கவிதைகள்




* உழைக்கச் சென்றவன்
உறங்க மறுத்ததால்
உதவியாய்ச் சென்ற
இடது கைகள்.

* உடைமையைச் சுமந்து
உழைப்பினைத் தொடர்ந்து
உதிரத்தை இழந்து
இறப்பினைப் பெறுபவனே
உழைப்பாளி.

* வறுமையில் வாழ்பவனை
வரவேற்றது
டீ கடை பெஞ்சு.

* அறுவடை செய்து
நெல் குவித்த பிறகு
எதிரில் நிற்பான் முதலாளி
பாதியைப் பறிமுதல் செய்ய.

* கரையோரம் வாழ்ந்து வந்தோம்
ஓட்டுக்காகக் குடிசைக்குள்
கனவுகளை விதைத்து
ஆங்காங்கே கட்டிக் கொண்டான் மாளிகையை.

* ஆள்காட்டி விரலைக் காட்டிவிட்டு
மை பூசிக்கொண்டு வருகிறார்கள்
அவர்களின் முகத்தில்.

-வெ. நரேஷ்

Kanavugal Meipadattum Book By Ramadevi Rathinasami Bookreview By Kamalalayan நூல் அறிமுகம்: ரமாதேவி ரத்தினசாமியின் கனவுகள் மெய்ப்படட்டும் - கமலாலயன்

நூல் அறிமுகம்: ரமாதேவி ரத்தினசாமியின் கனவுகள் மெய்ப்படட்டும் – கமலாலயன்




“வரலாறு நெடுக, பெயரற்றவர் ஒரு பெண்ணே” [Throughout History, anonymous was a woman] என்ற மேற்கோள், இப்புத்தகத்தின் அணிந்துரையில் காணப்படுகிறது. எழுதியிருப்பவர், வரலாற்று ஆய்வாளரான நிவேதிதா லூயிஸ்.

“பெண்கள் எழுதவும் தொடங்கிவிட்டார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரியது. அப்படி என்ன எழுதி விட்டார்கள்? அவர்களைப் பற்றி அவர்களே எழுதுகிறார்கள். அதுதான் மகிழ்ச்சிக்குரியது.” வாழ்த்துரையில் தோழர் க. பாலபாரதி இவ்வாறு எழுதியிருக்கிறார். மேனாள் சட்டமன்ற உறுப்பினராகப் புகழ் பெற்ற பாலபாரதி, ஒரு சிறந்த கவிதாயினியும் கூட. அவர் இப்புத்தகம் எதைப் பற்றியது என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது கவனத்துக்குரியது: “பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற பல கட்டுரைகள், வடிவமைப்பில் அழகோடும், நேர்த்தியோடும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன… இந்நூலின் ஆசிரியர் ரமாதேவி, ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க அமைப்பில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் என்பதைக் கூடுதல் சிறப்பம்சமாகப் பார்க்கிறேன்…”

கனவுகள் அதிலும் குறிப்பாக நல்ல கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றே நாமனைவரும் விரும்புகிறோம். வெறும் விருப்பம் மட்டும் போதுமானதாயிருப்பதில்லை; அது நிறைவேற கடுமையான முயற்சிகள் தேவைப்படுகின்றன. பெண்கள் எப்படியெல்லாம் வரலாற்றில் தமது சாதாரண விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குக்கூட போராடியிருக்கிறார்கள் என்பதை இந்நூலின் கட்டுரைகள் அழுத்தமாக விவரிக்கின்றன.

“வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட பெயர்கள் பெண்களுடையவை. பெண்கள் நடந்து வந்த தடங்கள் கவனமாக நீக்கப்பட்டன. பெண்களுக்கென தனி வரலாறு பதிவு செய்யப்படவே இல்லை” – என்று ரமாதேவி ஓர் இடத்தில் எழுதிச் செல்லுகிறார். இதை மேற்கோள் காட்டுகிற நிவேதிதா லூயிஸ், பண்டைய எகிப்து நாகரிகத்தின் இரண்டாவது பெண் ஃபாரோவாக ஆட்சி செய்திருந்த ஹஷப்சுட்டின் வரலாற்றை எடுத்துக்காட்டாக கூறுகிறார். அவள் மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட அரசி. அவள் இறந்த சில வருடங்களிலேயே அவளுடைய சிலைகளுக்கு தாடியும் மீசையும் வரையப்பட்டு அவள்   அவனாக மாற்றப்பட்டாளாம்! 5000 ஆண்டுகள் கழித்து, அகஸ்டா மாரியட் என்ற ஆய்வாளர், சமூகம் மறந்த ஹஷப்சுட்டை, அவளுடைய வரலாற்றை மீட்டெடுத்து, உலகின் முன் கொண்டு வந்திருக்கிறார்!

ஆசிரியர் ரமாதேவி, தன் ‘மனத்திலிருந்து…’ ஒரு விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார். தன்னை வளர்த்தெடுத்து, தன்னம்பிக்கையூட்டிய ‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ எனும் பேரியக்கத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். “சிறு வட்டத்திற்குள் இருந்த என்னைக் , கைப்பற்றி அழைத்து வந்து, இப் பெரு உலகை, உலகெங்கும் வாழும் பெண்களை, அவர்களின் கடினமான வாழ்வியல் சூழலை அறிந்துகொள்ள” வைத்தது ஆசிரியர் இயக்கமே என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் ரமாதேவி.

நூலில் 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கனவுகள் மெய்ப்படட்டும், மனைவியின் கனவுகளைக் கேட்டுப் பாருங்கள், சமையலறை ஒரு சிறை, இது என்ன சமூக நீதி, No Means No, சுயம் தொலைக்கும் அம்மாக்கள், ஆணின் சர்வரோக நிவாரணி, ஓ… ரெண்டாங் கல்யாணமா?, உழைப்பாளர் சிலையில் பெண் எங்கே?, அவனால் முடியுமெனில், அவளால் ஏன் முடியாது?, வீடு என்னும் வன்முறைக் களம், பெண்ணுக்கு வேண்டும் பேச்சுரிமை, கற்பைப் பொதுவில் வைப்போம், வரதட்சணையும் சீர்வரிசையும், இலட்சுமண ரேகைகள், பெண் என்னும் பேராற்றல் – ஆகியவை.

கட்டுரைகளின் தலைப்புகளே அவற்றின் உள்ளடக்கத்தையும் பளிச்செனப் புலப்படுத்திவிடக்கூடியவை. தான் முன் வைக்கும் கருத்துகளை நிறுவுவதற்குரிய தரவுகளையும், எடுத்துக்காட்டுகளையும், மேற்கோள்களையும் தேவையான இடங்களில் தந்திருக்கிறார். புள்ளி விவரங்களும் இடம்பெற்று இவர் கூறும் கருத்துகளின் உண்மைத்தன்மைக்கு சான்றளிக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பின்வரும் விவரங்களைக் காணலாம்:

“இந்தியக் குழந்தைகளுள் 53% குழநதைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்கள். இங்கு நடைபெறும் திருமணங்களுள் 45% திருமணங்கள் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகழ்கின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 7.14 கோடி பெண்கள் தனித்து வாழ்வதாகத் தரவுகள் கூறுகின்றன.”

சங்கப் பாடல்கள், தொல்காப்பியம் உள்ளிட்ட மரபுவழி இலக்கியங்களையும் எடுத்துக்காட்டுகளாக மேற்கோள் இடுகிறார். சினிமா வசனங்களை, வடிவேலு நகைச்சுவைகளையும் பயன்படுத்துவதன் மூலம், வாசிக்கும் வாசகரின் மனதில் எளிமையாகப் பதியச் செய்கிறார்.

ஆசிரியராகவும், தொழிற்சங்க நிர்வாகியாகவும் ஏராளமான அனுபவங்கள் பெற்றிருக்கிறார் என்பதை கட்டுரைகள் விவரிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர்- இப்படியான பொறுப்புகளையும் வகிப்பதால் பல்வேறு நாடுகளிலும் ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப் போன்ற பன்னாட்டு அமைப்புகள் நடத்தும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். இவ்வாறான பன்முகத் தன்மைகளின் அடித்தளம் ஆழமானது. சிறுவயது முதலே, இவர் விரும்பியதைப் படிக்கவும், இயங்கவும் பெருவெளி அமைத்துத் தந்திருக்கிறார் இவருடைய அன்னையார் மாலதி. “என் அம்மாவெனும் சிநேகிதிக்கு இந்நூலை சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்கிறார் ரமாதேவி.

மகளை வளர்த்து ஆளாக்குகிற, ஒரு தாயின் பங்கு எப்படியிருக்க வேண்டும் என்பது இது ஒரு சான்றாகலாம்…!

‘எத்தனையெத்தனை இயற்கைப் பேரழிவுகள் புரட்டி எடுத்து அழிவுக்குள்ளாக்கிய போதும், பூமி தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. அதுபோலவே எத்தனை துயர்கள் வந்தாலும், குடும்பம் – சமூகம் – அரசியல் – பொருளாதாரம் – எல்லாமும் சூறாவளியாய்ச் சுழற்றி வீசினாலும்கூட, மன வலிமை என்ற ஒற்றை அஸ்திரம் தாங்கி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க வாழ்வைத் தன் வசப்படுத்தி விடுகிறார் பெண்’ – என்று நிறுவுகிறார் ஆசிரியர். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற கனவுகளை நனவாக்க அவள் நடத்தும் போராட்டத்தை, இக்கட்டுரைகள் பல்வேறு கோணங்களில் எடுத்துரைக்கின்றன.

“தினம் தினம் உன் கனவு நோக்கிப் பற. பறக்க முடியாவிட்டால் ஓடு. ஓட முடியாவிட்டால் நட. நடக்கவும் இயலாவிட்டால் ஊர்ந்தாகிலும் செல்” என்ற சீனப் பழமொழியைப் பொருத்தமாக மேற்கோள் காட்டியுள்ளார்.

“பெண்கள் ஒரு துறையில் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்பட்டால், வழக்கமான ‘பெண் வாழ்க்கை’யைத் தியாகம் செய்தால்தான் முடியும். ஆண் தன் இலக்கு நோக்கி முன்னேறும்போது, ஒட்டுமொத்த குடும்பமும் கை கொடுக்கிறது; ஆனால் பெண் உயரே பறக்க ஆசைப்பட்டால்…?” – இக்கேள்விக்கான விடையை ஆசிரியர் தந்திருக்கிறார்; வலி மிகுந்த வரிகளில் அதை வாசிக்கும்போதுதான் அவற்றின் ஆழத்தை உணர முடியும். சற்றே நேரம் ஒதுக்கி அவரவர் வீட்டில் மனைவியரின் கனவுகளை கேட்டுப் பாருங்கள் என்கிறார் ரமாதேவி.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) எழுதியவற்றுள் மிகவும் புகழ் பெற்ற கதை. ‘சமையலறை ஒரு சிறை’ என்ற கட்டுரையின் மூலம், மேற்கண்ட கதையை உயிர்ப்புடன் அறிமுகம் செய்கிறார்.

“விதவிதமாய்ச் சமைத்தாலும் தனக்கான உணவை அவள் ஒருபோதும் நிதானமாய் ருசித்ததில்லை ; அவளது கோபங்களும், புலம்பல்களும், கண்ணீர்களும் சமையலறைச் சுவர்கள் மட்டுமே அறிந்திருப்பவை. அவள் கனவுகள் கடுகுகளைப் போல வெடித்து, பின் கருகிப்போய் விடுகின்றன. அம்பையின் சிறுகதை நாயகியின் கையை முகர்ந்து பார்த்து மருமகள் வியக்கிறாள்: “இந்தக் கையில்தான் எத்தனை நூற்றாண்டு கால சமையல் மணம்?” – ஆம்; மூவாயிரம் ஆண்டுகளாய் அடுக்களையில் பூட்டி வைத்துள்ள கனவுகள் மட்டுமே அவளிடம்…” – அவர்கள் பூட்டி வைத்திருக்கும் கனவுகளைத் திறக்கவல்ல சாவி ஆண்களாகிய நம்மிடம்தான் என்கிறார் கட்டுரையாளர்.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழும்: “எனில், ஆணின் உதவியிருந்தால்தான் பெண்ணின் கனவுகள் நனவாகுமா?” – இதற்கு மற்றொரு கட்டுரையில் மறுமொழி கிடைக்கிறது: “அன்று தாய்வழிச் சமூகத்தில் காடுகளை அளந்த பாதங்கள் இன்று உலகையே அளக்க விரும்பும்போது, மலை போல் வரும் தடைகளை இடது கையால் தூக்கி எறிந்து, தன் கனவுகளில் கால் பதிக்க அவளால் முடியும். ஆனால் விட்டுக்கொடுத்தலே பெண்ணிற்கான அறம் என போதிக்கப்பட்டிருப்பதால், தன் கனவுகளை விட்டுக்கொடுத்து தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கட்டுண்டு கிடப்பவள் வேறு யாரோ அல்ல. உங்களின் அம்மா, மனைவி, சகோதரி, மகள் – யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்…”

‘No Means No’ – கட்டுரை இன்று பொதுவெளியில் அநேகமாக தினமும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் தொடர்பானது: பள்ளிக் குழந்தைகளாக ஆசிரியர்களை நம்பி பள்ளிகளுக்குப் போகிற பெண்கள் – சின்னஞ்சிறுமிகள் – சில ஆசிரியர்களாலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு அவல நிலைக்குள்ளாகி வரும் சூழல் பற்றிய சிந்தனைகள் நிரம்பியது. பெண்களைத் தாயாக, பூமியாக, தெய்வமாக கொண்டாடும் தேசம் இது என்று பீற்றிக்கொள்வதில் குறைச்சலில்லை. ஆனால், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது போதாதென்று, மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்யப்படவும் விதிக்கப்பட்டுள்ள அபலைக் குழந்தைகளுக்கு ஏது நீதி?

குழந்தைத் திருமணங்கள் குறித்த கட்டுரை நம் நெஞ்சங்களில் கூரிய ஈட்டியெனப் பாயும் பல அதிர்ச்சிகரமான உண்மைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறது: ‘பெங்களூரில், 15 வயதே நிரம்பிய தன் பேத்திக்கு திருமணம் செய்ய மகன் முயல்வதை எதிர்த்தார் என்பதற்காக, தந்தையென்றும் பாராமல் மகனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருக்கிறான்!; ‘உலக அளவில் மூன்று விநாடிகளுக்கொருமுறை ‘குழந்தைத் திருமணம்’ ஒன்று நடைபெறுகிறது. அவற்றில், மூன்றில் ஒரு திருமணம் நம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த விஷயத்தில், உலக நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது! இம்மாதிரியான பல செய்திகள், ஆதாரங்களுடன் அணிவகுத்துத் தொடர்கின்றன…

பாலியல் கொடுமைகள் நடக்கும் போதெல்லாம், “பெண்கள்தாம் கவனமாக இருக்க வேண்டும்; அகால நேரங்களில் இவர்கள் ஏன் தனியாகப் போனார்கள்? கண்களைக் கவரும்படியான கவர்ச்சிகரமான உடைகளுடன் அடக்கமில்லாமல் பொது இடங்களில் திரிந்தால், இப்படித்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்…” என்று பாதிக்கப்பட்ட பெண்களையே பொறுப்பாளிகளாக்கி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாகவே ஒட்டு மொத்த சமூகத்தின் அணுகுமுறையும் இருக்கிறது. அரசு, நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் – எல்லாத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டோரைக் குற்றம் சாட்டியே விரல்கள் நீள்கின்றன… இந்த அணுகுமுறை மாறினால் ஒழிய, ஆண்களின் நடத்தையும் மாறாது என்று சுட்டிக்காட்டுகிறார் ரமாதேவி: 

“ஆண் குழந்தைகளின் சிறகுகளைத் தடவிக்கொடுத்து, அழகு பார்த்து, ஊட்டமளித்து வளர்க்கும் அம்மாக்கள், பெண் குழந்தைகளுக்கு சிறகுகள் வளர அனுமதிப்பதேயில்லை. இந்நிலை மாற வேண்டும்…” “பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியவுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரம் அறிவுரைகள் கூறும் நாம், அதே வயதுடைய ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை சக மனுஷிகளாய் நேசிக்கக் கற்றுத் தருவோம். அவர்களது உணர்வுகளை நேர்படுத்துவோம். வீரம் மட்டுமே ஆணுக்கான அழகல்ல; ஒழுக்கமும் ஆண்மையே என்பதை உணர வைப்போம்” 

– சமூகத்தின் பொதுப்புத்தியும், அணுகுமுறையும் இந்த விஷயத்தில் அடியோடு மாறினால் ஒழிய பெண்களைப் பற்றிய ஆண்களின் கண்ணோட்டம் மாறாது. ரமாதேவியின் இந்த நூல் அளவில் சிறியது. ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் கூர்வாளாகத் திகழ்கிறது. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், ‘உயிருடன் இருப்பதே வாழ்க்கை’ என நாம் நிறைவடைந்து நின்று விடுகிறோம். மாறாக, “உயிர்ப்புடன் இருப்பதே வாழ்வின் அடையாளம்” என்று நிறுவுகிறது இந்த நூல்.

“ஒவ்வொரு கட்டுரையின் நிறைவிலும் ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ என்ற சொற்றொடருடன் முடிக்கிறார், ரமாதேவி. வாசித்து முடித்ததும் உங்கள் மனதில் ‘ஆமென்’ – அப்படியே ஆகட்டும் என்ற சொற்கள் தோன்றுமானால், அது இந்த நூலின், ஆசிரியரின் வெற்றி” என்று நிவேதிதா லூயில் அணிந்துரைத்துள்ளார். ‘ஆமென்!’

நூல்: கனவுகள் மெய்ப்படட்டும்
வெளியீடு: சுவடு பதிப்பகம்,
மு.ப. 2021 – 11.104;
ரூ.100/-
எண்: 142, வேளச்சேரி, முதன்மைச் சாலை, பூண்டி பஜார், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600 059.

Kal Mulaitha Kanavugal Book By Pavalar Karumalai Thamizhanan Bookreview by Era Ravi நூல் அறிமுகம்: பாவலர் கருமலைத் தமிழாழனின் கால் முளைத்த கனவுகள்! – கவிஞர் இரா. இரவி

நூல் அறிமுகம்: பாவலர் கருமலைத் தமிழாழனின் கால் முளைத்த கனவுகள்! – கவிஞர் இரா. இரவி




மரபுக்கவிதை என்றவுடன் நினைவிற்கு வரும் ஆற்றல் மிக்க பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று வருபவர். மரபுக்கவிதைப் போட்டி என்றால் முதல்பரிசு இவருக்குத்தான் என்பது முடிவான ஒன்று. தித்திக்கும் மரபுக் கவிதைகளைப் பல்வேறு இதழ்களில் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக்கி வருகிறார். வெளியிட்டவுடனேயே மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி விட்டார்.

‘கால் முளைத்த கனவுகள்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ஆய்வறிஞர் தகடூர் தமிழ்க்கதிர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தமிழ்க்கால்கள் என்ற பொதுத் தலைப்பில் 38 கவிதைகள் உள்ளன. இனமொழியைக் காத்திடுவோம் என்று தொடங்கி இன்பமான இரவுகள் என்று முடித்துள்ளார். குமுகக் கால்கள் என்ற பொதுத் தலைப்பில் 43 கவிதைகள் உள்ளன. கனவுக் கால்கள் என்ற பொதுத் தலைப்பில் 47 கவிதைகள் உள்ளன. ஆக மொத்தம் 128 கவிதைகள் உள்ளன. மரபுக்கவிதை விருந்து வைத்துள்ளார். மரபுக்கவிதை ஆர்வலர்கள் அனைவரும் வாங்கிப்படிக்க வேண்டிய நூல். வளர்ந்து வரும் கவிஞர்களும் படிக்க வேண்டிய நூல். சொற்களஞ்சியமாக கவிதைகள் உள்ளன.
தமிழை உனைக் காக்கும் !
தாழ்வாக எண்ணும் தமிழா தமிழ்மீது
காழ்ப்பை அகற்றிநீ காத்திடு கண்ணாக
வீழ்த்தும் கலப்பினை வீழ்த்து தமிழ்மொழி
வாழ்ந்திருந்திருந்தால் வாழ்த்திடுவாய் நீ ! ( 1 )

திட்டமிட்டுத் தமிழில் பிறமொழிச் சொற்களை கலந்து பேசி மொழிக்கொலையை ஊடகங்கள் தங்குதடையின்றி நடத்தி வருகின்றன. தட்டிக் கேட்க நாதி இல்லை என்ற துணிச்சலில் தொடர்ந்து செய்கின்றன. அதற்கான கண்டனத்தைக் கவிதைகளில் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள்.
தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்.
தமிழ் வீழ்ந்தால் தமிழன் வீழ்வான
என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

அருந்தமிழில் பேச வைப்போம்!

அருந்தமிழில் பேசுவதே குற்றமாக
அடிக்கின்றார் குழந்தைகளைப் பெற்றவர்தாம்
பெருமையுடன் மம்மியென அழைப்ப தற்குப்
பெருந்தொகையைக் கட்டணமாய்ச் செலுத்து கின்றார்!

கருவுதிர்த்த காலத்தே அப்பள் ளிக்குக்
கால்தேய நடந்துஇடம் கேட்கின் றார்கள்
உயர்பெருமை மண்ணுக்குள் புதைத்தோரன்றோ!

மம்மி என்றால் செத்த பிணம் என்ற பொருள் புரியாமலே மம்மி என்று அழைக்க்ச் சொல்லும் மடமை, மண்மூடிப் போக வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகின்றது. அறிவியல் மேதை அப்துல் கலாம் தமிழ்மொழியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றவர் என்பதைத் தமிழன் உணர்ந்திட மறுக்கின்றான். தமிழகத்தின் இழிநிலையை கவிதை வரிகளின் மூலம் இடித்துரைத்து உள்ளார். பாராட்டுக்கள்.

( 2 )
கவிதைகளின் தலைப்புகளே தமிழ்ப்பற்றைச் சித்தரிக்கின்றன. தொழுவோம் போற்றி, நினைக்காத நாளில்லை, தை மகளே வா, தமிழ்ப்பொங்கல் தா, தமிழரின் கட்டடவியல், பாவேந்தரின் தமிழியக்கம், இப்படி தமிழ்ப்பற்று விதைக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
வேட்டை நடத்து
காதலித்தால், குற்றமென்று
கழுத்தறுக்கும் கூட்டமொன்று
சாதலினைத் தெருக்கள் தம்மில்
சாதனையாய் நடத்துகின்றனர்!
ஆதியிலே இல்லா ஒன்றை
அடிமனத்துள் வளர்த்துக் கொண்டு
சாதிகளில் கீழ்மேல் ஆக்கிச்
சரித்திரத்தை மாற்றுகின்றார்.

ஆதியில் இல்லை இந்த கொடிய சாதி, பாதியில் கற்பிக்கப்பட்ட ஒன்று, உயர்ந்தவன், தாழ்ந்தவன் மனிதரில் இல்லை. ஆணவக் கொலைக்கு முடிவு கட்டுவதே பகுத்தறிவு பெற்ற மனிதருக்கு அழகு என்பதையும் சாதிவெறியைச் சாகடித்து மனிதனாக மாறு என அனல்பறக்கும் கவிதை வரிகளால் மனித விலங்குகளுக்கு புத்தி புகட்டி உள்ளார். பாராட்டுக்கள். சாதியை மறந்து சங்கமிக்க வலியுறுத்தியது சிறப்பு.

இன்றைய தாலாட்டு!
அழிக்காமல் இயற்கையினைக் காக்க வேண்டும்
அறிவியலை நன்மைக்காய் ஆக்க வேண்டும்
விழியாக மனித்ததை வளர்க்க வேண்டும்
வீண்பகைமை வேற்றுமையைக் களைய வேண்டும் கண்ணுறங்கு!
( 3 )
இன்றைக்குத் தாலாட்டு பாடுகின்ற பழக்கமே வழக்கொழிந்து விட்டது. பாடவும் தெரிவதில்லை. தாலாட்டுக் கவிதையில் இயற்கையைக் காக்க வேண்டும். அறிவியலைத் தீமைக்குப் பயன்படுத்தாமல் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது சிறப்பு. மனிதம் வளர்க்க வேண்டும், இப்படி அறநெறிக் கருத்துக்களை அழகிய தாலாட்டாக வடித்தது நன்று.

எதுகை, மோனை ,இயைபு ,முரண் என பலவகை இலக்கணங்களுடன் வெண்பா சந்தப் பாடல்கள் என கவிநயத்துடன் பொருள்நயத்துடன் கவிதைகள் வடித்து இருப்பது சிறப்பு.
கொஞ்சம் பொறு கண்ணே!

குடும்பத்தைக் காக்கவொரு தலைவன் இல்லை
குடியினிலே மூழ்கியவன் கிடப்ப தாலே
நடுக்கடலில் துளைவிழுந்த படகு போல
நசுக்குகின்ற வறுமையிலே அமிழ்ந்து போனாள்!

தமிழ்நாடு இன்று தள்ளாடுது என்றால் மிகையன்று, குடும்பத் தலைவன் மட்டுமல்ல, கல்வி பயிலும் மாணவனும் குடித்துவிட்டு வீழ்ந்துகிடக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. குடியின் கேட்டை அறிந்து மதுக்கடைகளை உடன் மூடிட ஆள்வோர் முயல வேண்டும். ஆனால் இங்கு ஆள்வோரே மது ஆலைகளின் அதிபர்களாக இருப்பது வெட்கக்கேடு. விழிப்புணர்வு விதைத்துள்ளார் கவிதையில்.

பச்சோந்தி!
மரத்திற்கு மரம்தாவும் மந்தி போல
மனம்தாவிக் கட்சிகளை மாற்றிக் கொள்வர்
உரமின்றிக் கொள்கையின்றிப் பதவிக் காக
உருவத்தை ஏற்றார்போல் மாற்றிக் கொள்வர் ( 4 )

இன்றைக்கு அரசியல் நிலை, அவல நிலை, அன்று கொள்கைக்காக கூட்டணி வைத்தனர். இன்று கோடிகளுக்காகக் கூட்டணி வைக்கின்றனர். தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்காவிடில் உடன் கட்சி மாறி வசனம் மாற்றி பேசும் மனிதர்கக்ப் பச்சோந்தியோடு ஒப்பிட்டு வடித்த கவிதை நன்று. இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது.

மனிதம் எங்கே?
வங்கிகளில் கோடிகளைச் சுருட்டி யோர்கள்
வான்வழியில் செல்கின்றார் அயல்நாட் டிற்கே
தங்குவதற்கோ அழகான மாளி கைகள்
தரமான உணவுவகை உல்லா சங்கள்

கோடிகளை கொள்ளையடித்து விட்டு விமானம் ஏறி வெளிநாட்டிற்குத் தப்பி விடுகின்ற்னர். அவர்களைக் கைது செய்து வர துப்பின்றிப் பிடிப்பதற்கு ஆருடம் பார்த்து வரும் அவலம். நாட்டின் நடப்பை அரசியல்வாதிகளின் நடிப்பை கவிதை வரிகளில் சுட்டி விழிப்புணர்வு விதைத்துள்ளார்.
நெஞ்சுவலி கைகால்கள் குடைச்ச லோடு
நேர்நிற்க உட்கார இயன்றி டாமல்
துஞ்சுகட்டில் தனில்படுக்க முடிந்தி டாமல்
துடிதுடித்து நான்கொடுத்த குரலைக் கேட்டே
அஞ்சிவந்த என்மனைவி என்னைக் கண்டே
அடைந்துள்ள நிலையதனைப் புரிந்து கொண்டு
கொஞ்சமுமே கடத்தாமல் தானி தன்னில்
கொண்டுவந்து மருத்துவமாம் மனையில் சேர்த்தாள் !

இறுதியாக மீண்டு வந்தேன் என்ற கவிதையில் நூலாசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் நோயுற்று சிகிச்சைப் பெற்று மீண்டு வந்ததையும் மரபுக்கவிதையாக வடித்துள்ளார். தமிழ் போலவே வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். நீங்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும், வளரும்.
( 5 )

Interpretation of dreams (sigmund freud) Book in tamil translated by Nagoor Rumi Book Review by Saguvarathan. நூல் விமர்சனம்: கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் பிராய்ட்) | தமிழில்: நாகூர் ரூமி - சகுவரதன்

நூல் விமர்சனம்: கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் பிராய்ட்) | தமிழில்: நாகூர் ரூமி – சகுவரதன்




கனவுகளுக்கு பல கற்பிதங்கள் காலம் காலமாய் இருந்து வருகின்றன.

ஒரு கனவு கண்டு விட்டால் அதை நாம் எல்லோரிடமும் சொல்லி விடக்கூடாது என்றும் கனவுகளை சரியாக விளக்குவதற்கு என்று தகுதி படைத்த சிலரால் தான் முடியும் என்றும் விடியற்காலையில் காணும் கனவு தான் பலிக்கும் என்றும் பகலில் காணும் கனவுகள் பலிக்காது என்றும் பல கற்பிதங்கள் உள்ளன.

தான் கண்ட கனவுக்கு பொருள் தேடி என் பாட்டி வீடுவீடாய் அலைவதைக்கண்டிருக்கிறேன். சிலநேரங்களில் மௌனமாய் அழுதுகொண்டிருப்பாள். தாத்தாவிடம் திட்டுவாங்கிக்கொண்டிருப்பாள்.புரியாது எனினும் நான் கண்ட கனவுகள் விழித்ததும் மாயமாகி விடுவதால் யாரிடம் சொல்வது என திணறியிருக்கிறேன்.

குறிப்பாக பாலுணர்வு கனவுகளைச் சொல்லலாம். பிறரிடம் சொல்லவும் முடியாமல் நண்பர்களிடம் பகிரவும் தெரியாமல் தவித்திருக்கிறேன். கனவில் காணும் குறியீடுகளை வைத்து அர்த்தம் சொல்லக்கூடிய சாமியாடி களையும் பார்த்திருக்கிறேன். செய்ய மறந்த சடங்குகளை , தாமதப்படுத்தும் நல்ல காரியங்களை செய்யச்சொல்வார்கள்.

கனவு என்பது குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானதா என்ன ? எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தானே. எல்லோருமே இப்படியான அர்த்தத்தை தேடித்தான் செல்கிறார்களா ?

நாகூர் ரூமி தன் முன்னுரையில் இப்படி கூறுகிறார்.

” கனவு காண்பது மனிதகுலத்திற்கு பொதுவான செயல்பாடு தான் என்றாலும் இஸ்லாம் இந்து புத்தம் கிறிஸ்துவம் போன்ற உலகப் பெரும் மதங்களில் ஊறி வாழும் மனங்களை கொண்ட இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் கனவானது ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக செயல்படுகிறது.” இன்றல்ல நேற்றல்ல .மனிதன் தன்னைப் பற்றி தனக்கே தெரியாத உண்மைகளை அறிந்து கொள்ள பல யுகமாய் ஆர்வமாய் இருந்திருக்கிறான். உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் உணவு தயாரித்து பாதுகாக்கவும் மட்டுமே குழுவாக வாழவில்லை மனிதன் . தன் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் சக மனிதன் தேவைப்படுகிறான்.கனவுகளுக்கும் அப்படிப்பட்ட மனநிலையில்தான் உள்ளான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சில தனிமனிதர்களின் சேவைகளுக்கும் சாதனைகளுக்கும் தான் இந்த உலகமே கடமைப்பட்டுள்ளது
என்பது வியப்பு தரக்கூடிய விஷயம் . ஆனாலும் உண்மையே.

அந்த ஒரு சிலரில் சிக்மன்ட் பிராய்டும் ஒருவர். ஆனால் அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் மனித மனம் என்னும் மகத்தான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள செலவிட்டார் . அதன் பலனாக அவர் கண்டறிந்த உண்மைகள் இந்த உலகம் முழுவதிலும் ஒலித்து அதன் சிந்தனைப் போக்கையே மாற்றியது.

அதுகாறும் மனிதனை அரசியல் ரீதியாகவும் பொருளாதாரம் இலக்கியம் சமயம் கலாச்சாரம் பண்பாடு தத்துவம் போன்றவர்களின் மூலமாக அறிந்து வந்த உலகு முதன்முதலாக உளவியல் ரீதியாக ஆழமாக அறிந்து கொண்டதும் சிக்மண்ட் பிராய்ட் மூலமாகத்தான்.

ஒரு மருத்துவராக , குறிப்பாக நரம்பியல் நிபுணராக, தொழில் செய்த பிராய்ட் எத்தனையோ புத்தகங்களில் தான் கண்டறிந்த உண்மைகளை சொல்லி இருந்தாலும் அவருடைய இந்த “கனவுகளின் விளக்கம்” என்னும் நூல் மிகச் சிறந்ததாகவும் உலகை மாற்றிய ஐந்து நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

மொத்தம் 10 கட்டுரைகளில் தனது தேர்ந்த எளிய மொழி நடையால் வாசகர்களுக்கு புரியும் வகையில் சுருக்கி தந்திருக்கிறார் நாகூர் ரூமி அவர்கள்.
1. சிக்மன்ட் ப்ராய்ட் யார்?
2. கனவைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகள்
3. கனவுகளை விளக்கும் முறை
4. கனவு என்பது விருப்ப நிறைவேற்றம்
5. கனவில் சிதைவு
6. கனவுகளின் நதிமூலம்
7. மாதிரி கனவுகள்
8. கனவு செய்யும் வேலைகள்
9. கனவுகளின் உளவியல்
10. முற்றுப்புள்ளி.

உப தலைப்புகளை வாசிக்கும் போதே நாகூர் ரூமி அவர்களின் கடுமையான உழைப்பு தென்படுகிறது. கனவின் குணாம்சங்கள் பற்றி ப்ராய்டு இவ்வாறு கூறுகிறார். கனவு தானாக எதையும் சொல்வதில்லை. நம் நனவு வாழ்வின் அனுபவங்களிலிருந்து அது காட்சிகளை அமைகிறது. கனவுக்கு அபார ஞாபக சக்தி உண்டு .

பொதுவாக நமக்கு சாதாரணமாக வரும் கனவுகளின் மூலம் கனவு காண்பதற்கு முந்திய நாள் அல்லது அதற்கு முந்திய நாள் நிகழ்ச்சியாக இருக்கும். எல்லா கனவுகளும் பெரும்பாலும் குறியீட்டுத் தன்மை கொண்டவை கனவின் காட்சிகளே குறியீடுகள். ஒவ்வொரு கனவும் ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ்மனதில் இருக்கும் விருப்பம் என்று நிறைவேற்றி விட்டதாக காட்டும் அது பெரும்பாலும் பாலுணர்ச்சியை சம்பந்தபட்டதாகவே இருக்கும்.

கனவுகள் நம்முடைய வாழ்வில் தனித்தனியே பார்க்கும்போது சம்பந்தமற்ற பல விஷயங்களை ஏதோ ஒரு தொடர்பின் அடிப்படையில் ஒன்று சேர்த்து காட்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம் .ஆனால் அவை அப்படி அல்ல. கனவுகள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை வாய்ந்தவை . இக்கருத்து தவறானது என்று வாதிடுவதற்கு இல்லை. இயற்கை உளவியலில் இதற்கு விளக்கம் காண முடியும் என்று ப்ராய்டு கூறுகிறார்.

ஆதிகாலத்திலிருந்தே கனவை இரண்டு முறைகளில் விளக்கி வந்துள்ளனர் என ப்ராய்டு கூறுகிறார். ஆனால் அவை விஞ்ஞான ரீதியில் அல்ல என்றும் சொல்கிறார். முதல் முறை ஒரு கனவை அப்படியே முழுசாக எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வேறு ஒன்றை வேறு ஒரு அர்த்தத்தை அதன் இடத்தில் வைப்பது இது குறியீட்டு முறை எனக் கூறுகிறார் .

இரண்டாவது முறை அவிழ்க்கும் முறை என்று சொல்கிறார் இந்த முறையானது கனவை ஒரு சங்கேத பாஷையாக எடுத்துக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் கனவை விளக்க முற்படுகிறது. இந்த கனவை மட்டும் பார்க்காமல் கனவு காண்பவர் உடைய குணம் மற்றும் அவரது சூழ்நிலை வாழ் நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்று கூறுகிறார். கனவானது மனநோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். அதேசமயம் நோய்க்கான தீர்வை சுட்டும் வழியாகவும் உள்ளது என்று பிராய்டு கண்டார்.

அதை விளக்குவதற்கு நோயாளிகள் மருத்துவர்கள் ஒத்துழைக்க வேண்டியிருந்தது. அடிப்படையில் பிராய்டு ஒரு மனநோய் மருத்துவர் . குறிப்பாக ஹிஸ்டீரியா எனப்படும் மன நோய்க்கு ஆளானவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அவர் பல வருஷங்கள் செயல்பட்டார் இம்முறையில் தான் கனவை ஆராய்ந்திருக்கிறார். கனவுகளின் வகைகள் பகுப்பாய்வுகள் விளக்கங்கள் என நூல் முழுவதும் விரவியுள்ளன. இறுதி கட்டுரையான முற்றுப்புள்ளி என்னும் கட்டுரையில் நாகூர் ரூமி மிக முக்கியமான ஒன்றை குறிப்பிடுகிறார் .

” பிராய்டின் மிக முக்கியமான பங்களிப்பு கனவுகள் விருப்ப நிறைவேற்றங்களாக செயல்படுகின்றன என்பது. அவருடைய முக்கியமான தவறு எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் பாலுணர்வு என்று அவர் முடிவு கட்டியது தான். நிறைய கனவுகளுக்கான பிராய்டின் விளக்கம் மலையைப் பிடுங்கி எலியை விரட்டும் கதையாகவும் அவருடைய பண்டிதத்தை காட்டுவதாகவே உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது .

எனினும் மனிதனுடைய ஆழ்மனதின் இருட்டான பகுதிகளில் துணிச்சலாக டார்ச்சை அடித்து பார்த்தவர் சிக்மன்ட் ப்ராய்ட் என்பதை விழிகளை மூடும் போதெல்லாம் நாம் எண்ணிப் பார்த்தே ஆக வேண்டும்.”

நூலின் பெயர் : கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் பிராய்ட்)
தமிழில்: நாகூர் ரூமி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 70/

Karunya Kanavugal Poem By Vasantha Dheepan. வசந்ததீபனின் காருண்ய காலக் கனவுகள் கவிதை

காருண்ய காலக் கனவுகள் கவிதை – வசந்ததீபன்




அழகான கனவுகள்
நெய்யப்படுகின்றன
இதயங்கள் தோறும் வானவில்
குடிகாரர்களைக் கண்டால்
கண்ணீர் வருகிறது
பாவம் தங்களைத் தாங்களே
எரியூட்டிக் கொள்கிறார்கள்
ஆனாலும் அவர்கள் மேல்
இரக்கப்பட முடியவில்லை
மெளனத்தில் புதைந்து போவது…
மரணத்தின் வாசலுக்கு அருகில்
மண்டியிட்டு பிரார்த்திப்பது
இன்று நீ
நாளை நான்
மரணத்தின் வாயில் அடைபடுவதில்லை
புனிதத்தை உடைப்பதற்கல்ல
பாவத்தை கட்டமைப்பதற்கல்ல
சத்தியத்தை விளைவிப்பதற்கே
நேசம்
போர்வையாய் உபயோகிக்கிறான்
செருப்பாய் பயன்படுத்துகிறான்
சக ஜீவியாய்
அவளை அவன்
எப்போதும் நடத்துவதில்லை
அழகான கனி
அறுத்துப் பார்க்கிறேன்
புழுக்கள் மயம்
மண்ணில் பிறந்த தேவதை
மனதில் குடியேறினாள்
வாழ்க்கை சொர்க்கலோகமானது
அழகான உலகம்
அழகான வாழ்க்கை
அசிங்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்
உன் தாகம் தீர்க்க
ஜீவநதியாய் ஓடிவருகிறேன்
அணைகட்டி தடுக்காதே
இதழ்கள் நீட்டி எதிர்கொள்
கற்பாறைகள் கண்விழிக்கின்றன
பசும்புற்கள் பாடுகின்றன
கருணையைப் பொழிகிறது மழை

Karaiyum Kanavugal ShortStory by Shanthi Saravanan. கரையும் கனவுகள் குறுங்கதை - சாந்தி சரவணன்

கரையும் கனவுகள் குறுங்கதை – சாந்தி சரவணன்




யாழினிக்கு பிடித்த இரு சக்கர வாகன பயணம் ஏனோ இன்று  ஒருவித மரண பயத்தோடு கணவன் யுவன் பின்னே அமர்ந்து கொண்டு விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி அடர்ந்த மழையில் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.   

கொரோனா  ஊரடங்கு ஜூம் வழி கல்யாணம் என வரலாற்று மாற்றங்களோடு திருமணம் நடந்து முடிந்த ஒரே மாதத்தில் கரு தரிக்கும் பாக்கியம்  யாழினிக்கு கிட்டியது. 

வீட்டிலிருந்து பணி புரியும் முறை சென்ற மார்ச் 2020 முதல் பழகி விட்டோம். திடீரென நேற்று மேலாளர் அலைபேசியில் ஆள் குறைப்பு அறிவித்துள்ளார்கள் பணியில் தொடர அறிவித்தவர்களில் யாழினியும் ஒருவர். உடனே சென்னை வந்து பணி துவங்க வேண்டும் என்றார். தனியார் நிறுவனம். கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே பணி என்பது தெரிந்தது தானே. 

யுவன் வேலை வேறு சற்று பிரச்சனையில் உள்ளது. குடும்பம் வளர ஆரம்பித்துவிட்டதால் யாழினியின் வருமானம் கருவுற்ற நேரத்தை மகிழ்வோடு கழிக்க அவசியம் என்பதால் இந்த பயணம். கட்டுப்பாடுகளை கடந்து சென்னை வந்தாகிவிட்டது. யாழினி பார்த்து இறங்கு என்றான் யுவன். மேலாளரைப் பார்த்து பணி உறுதி செய்தாகிவிட்டது.  

“இனி பிரச்சினை இல்லை”  என்ற மனைவியை “இயலாமை” வேதனையோடு பார்த்தான் யுவன். அவன் மனம் அழுவதை யாழினி உணர்ந்தாள். சமாளித்துக் கொண்டு, “ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என உள்ளே சென்றாள். 

புதிதாக அடித்திருந்த  சிவப்பு வண்ணம் அடர்ந்த மழையில்  கட்டிடம் அழுவது போல் கரைந்து கொண்டிருந்தது. அறியாமல் யாழினிக்காக காத்திருந்தான் யுவன்.