School Teacher Ve. Shankar's Dudduduu (*டுட்டுடூ* சிறார் நாவல் ) Tamil Children Novel Book Review By Dhisharathi.

நூல் அறிமுகம்: *டுட்டுடூ* சிறார் நாவல் – ப. திஷாரதி 



நூலின் பெயர் : டுட்டுடூ
ஆசிரியர் : வே. சங்கர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 64
விலை : 60
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எந்தவித நூலைப் எழுதுவதற்கு முன்பும், அதற்குறிய தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தனித் திறமையே வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.  அது மட்டுமின்றி, இது ஒரு சிறார் நாவல்.  இந்த நாவலின் தலைப்பைப் பார்க்கும்போதே அதைப் படித்தே ஆகவேண்டும் என்கிற முடிவு மனதினுள் அனைத்துக் குழந்தைகளுக்கும் வரவேண்டும்.  அப்படி ஒரு முடிவை என் மனதும் எடுக்கவைத்தது  இந்நாவலின் தலைப்பு.

அடுத்ததாக முன்னுரையைப் பற்றிக் கண்டிப்பாகக் கூறவேண்டும். அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்டதுபோல், நான் செய்யும் செயல்களைப்போலவே இருந்தது.  இந்நாவலின் தலைப்பைப் பார்க்கும்போது வந்த ஆர்வத்தைவிட, முன்னுரையைப் படிக்கும்போது என் ஆர்வம் இன்னும் அதிகமாகியது.

புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பிக்கும் நிலையில்,  ஒரே ஒரு எண்ணம்தான் என்மனதில்.  இது ஒரு நாய்க்குட்டியின் கதையாகத்தான் இருக்கும் என்று.  ஆனால், முதல் வரியைப் படிக்கும்போதே பள்ளிக்கூடத்தைப் பற்றியும், பள்ளியில் மாணவர்கள் செய்யும் செயல்களைப்பற்றியும் அருமையாக வெளிப்படுத்தியிருந்தார் இந்நூலின் ஆசிரியர்.  

அப்போதே என் மனம் என்னுடைய 5ஆம் வகுப்பு வரை நடந்த நிகழ்வினுள் அழைத்துச் சென்றது.  அதுமட்டுமின்றி என் அம்மாவிடமும், பாட்டியிடமும் எவ்வாறு நான் நடந்துகொள்வேனோ அதைப் போலவே இருந்தது. சின்னச் சின்னத் தருணங்களில் என்னுடைய உறவினர்களுடன் உரையாடிய நினைவுகள் என் மனதில் வந்துபோயின.

இந்நாவலில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இனிமையாக இருக்க, ஆசியர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள்,  மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு சூட்டப்பட்ட  பெயர்கள் என அத்தனையும் அருமை.

பள்ளி இடைவேளையில் நடக்கும் நிகழ்வுகள், சத்துணவிற்காக செல்லும் தருணங்கள், பின்பு வீட்டிற்கு திரும்பிச் செல்லும் தருணங்கள் என அனைத்தும் மறக்காமல் நியாபகப்படுத்திக் கொண்டே இருந்தது இந்த டுட்டுடூ – சிறார் நாவல்.

School Teacher Ve. Shankar's Dudduduu (டுட்டுடூ) Tamil Children Novel Book Review By Na. Geetha. Book Day is Branch of Bharathi Puthakalayam.

இதில் மிகவும் பிடித்த விசயம் என்னவென்றால் டுட்டுடூ நாய்க்குட்டி ஒவ்வொருவரிடமும் அழகாக நடந்துகொண்டதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு அருமையாக வெளிப்படுத்தி இருப்பதுதான்.

டுட்டுடூ விளையாடும்போது வந்த சிரிப்பு, டுட்டுடூ கஷ்டத்தில் இருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு அழுகைதான் வந்தது.  இப்படி ஒரு நிகழ்வு எல்லாம் என் வாழ்வில் நடந்ததைப்போலவே இந்நிமிடம் வரை உள்ளது.  வெளிப்படையாகச் சொன்னால், இதை ஒரு கதையாக எண்ண முடியவில்லை. 

ஓவியப்போட்டி,  வாட் இஸ் திஸ் என்கிற ஆங்கிலப் போட்டி என அனைத்தும் என்னை மெய்மறக்க வைத்தது.  இவை அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், இந்நாவலை மேலும் சிறப்பித்தது  “ எங்கள் வீட்டு நாய்க்குட்டி, வெள்ளை நிற நாய்க்குட்டி” என்கிற பாடல் வரிகள்.

அந்தப்பாடலை கடைத்தெருவிற்கு செல்லும்போதுகூட ஆழ்வி பாடிக்கொண்டே போனது, அதன் பின் டுட்டுடூ-வைப் பார்த்ததும்  ஆழ்வியும், முகிழனும் எவ்விதத் தயக்கமும் இன்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, ஆழ்வியின் அம்மா டுட்டுடூவை வளர்க்க சம்மதித்தது எல்லாம் அருமை.  

அனைத்தையும் தொடர்ந்து வாசிக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வரவழைத்தது. ஆனால்,  கடைசி வரி என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது அந்த வரி “ டுட்டுடூவின் கண்களில் நம்பிக்கை ஒளி மின்னியது “ என்ற வரிதான்.

கடைசியாக நான் ஆழ்வியாகவே மாறிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.  இந்தக்கதை என்றும் என் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.  நானும் ஒருநாள் இதுபோன்றதொரு டுட்டுடூவைப் பார்க்கமாட்டேனா என்ற ஏக்கத்துடன் இந்நாவல் பற்றிய என் சிறு பார்வையை முடித்துக்கொள்கிறேன். நன்றி.

ப. திஷாரதி
(பதினொன்றாம் வகுப்பு மாணவி)

School Teacher Ve. Shankar's Dudduduu (டுட்டுடூ) Tamil Children Novel Book Review By Na. Geetha. Book Day is Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: *டுட்டுடூ* சிறார் நாவல் – ந. கீதா



நூலின் பெயர் : டுட்டுடூ
ஆசிரியர் : வே. சங்கர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 64
விலை : 60
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

குட்டிக்குட்டி கதைகளாக இருந்தால்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்ற போக்கையே மாற்றி அமைக்கும் விதமாக வே. சங்கர் அவர்களின் படைப்பு அமைந்திருக்கிறது.

நாவலுக்கே உரிய சுவாரஸ்யத்துடனும் நடையுடனும் அமைந்திருக்கிறது இந்த “டுட்டுடூ”. ஆழ்வியின் எதிர்பார்ப்பில் தொடங்கி நாய்க்குட்டியைக் கண்டது முதல் அதைத் தேடிக் கண்டடையும் வரை, அடுத்து என்ன நடக்கும், நாய்க்குட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நகர்கிறது இச்சிறார் நாவல்.

நாவலின் பெயரைக் கேட்டதுமே குழந்தைத்தனம் வந்தமர்ந்து கொள்கிறது மனதில். நாவலின் முகப்புப் பக்கத்தையும் தலைப்பையும் கண்டவுடன் சிறுவயது சண்டைகள் மனதில் ஒரு கணம் தோன்றி மறைந்தன. ’டூ’ என்று காய் விட்டுக் கொள்வதும் பின் சில நொடிகளில் விரல்களை மடக்கிப் ’பழம்’ விட்டுச் சேர்ந்து கொள்வதுமான நிகழ்வுகள் வந்துபோயின.

நாவலை வாசித்தபோதுதான் தெரிந்தது டுட்டுடூ என்பது கதையில் வரும் நாய்க்குட்டியின் பெயர் என்று. எதன் காரணமாக ஆசிரியர் டுட்டுடூ என்ற பெயரை அமைத்திருந்தாலும் நாவல் காயாக அல்லாமல் பழமாகவே அமைந்திருக்கிறது.

நாவல் என்றால் பொழுபோக்கிற்காக மட்டுமே அமைந்தால், அது சிறப்பல்லவே!. நாவலினூடே பல அரிய தகவல்களையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர்.

School Teacher Ve. Shankar's Dudduduu (டுட்டுடூ) Tamil Children Novel Book Review By Na. Geetha. Book Day is Branch of Bharathi Puthakalayam.

உதாரணமாக நாய்களின் வகைகள், நாய்களுக்கான முக்கியத்துவம் போன்றவற்றைக் கூறலாம். பெண் நாய்களை வளர்க்கத் தயங்கும் மக்கள் என்று கூறியுள்ள போது, மனிதர்களில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைவென்றால் நாய்களிலுமா? என்ற எண்ணம் துளிர்விடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
நாவலில் அமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. புத்தக வாசத்தைப் பற்றி தூதுவையும், மானசியும் பேசிச்செல்லும் வார்த்தைகள், ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் புதைந்து கிடைப்பவை.

ஆசிரியர்களை குழந்தைகளின் மனதில் அழகாக சித்தரித்திருக்கிறார். கணித ஆசிரியர் என்றாலே பயப்படும் மாணவக் கண்மணிகளுக்கு வனமலர் ஆசிரியர் ஒரு வரப்பிரசாதம்தான்.

குழந்தைகளுக்கே உரிய நகைச்சுவையையும், துடுக்குத்தனத்தையும், நாவலில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, ”திஸ் இஸ் எ பப்பாளி ஃப்ரூட்” என்ற கொற்றவனின் கூற்றையும் “திஸ் இஸ் எ நொங்கு, நவ் ஐ ஆம் தொங்கு” என்ற விமலனின் கூற்றையும் கூறலாம்.

ஆசிரியர் கையாண்டுள்ள மொழிநடை குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கிறது. காசு இருந்தால் மட்டும் போதாது மனசும் வேணும் பிறருக்கு உதவிட என்ற எண்ணத்தை விதைக்கிறது ஆழ்வியின் பேச்சு.

குழந்தைகளுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிவிட முடியாதபடி, பெரியோர்களுக்கெனவும் சிற்சில நிகழ்வுகளை அமைத்துச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.
ஆக மொத்தத்தில் ‘டுட்டுடூ’ காயாக அன்றி கனியாக மனதில் பதிகிறது.

School Teacher Ve. Shankar's Dudduduu (டுட்டுடூ) Tamil Children Novel Book Realese in Erode Bharathi Puthakalayam Branch on September 6th 2021

ஈரோட்டில் “டுட்டுடூ” (சிறார் நாவல்) புத்தக வெளியீடு



06.09.2021 திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு பாரதி புத்தகாலயம், ஸ்டேட் பேங்க் ரோடு, ஈரோட்டில் எழுத்தாளர் வே. சங்கர் எழுதிய “டுட்டுடூ” (சிறார் நாவல்) புத்தக வெளியீடு குறைந்த எண்ணிக்கையிலான வாசகர்களின் முன்னிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.

புத்தக ஆர்வலரும் வாசகருமான திரு.ரமேஷ் அவர்கள் வந்திருந்த வாசகர்களை வரவேற்று நூல் ஆசிரியரைப் பற்றியும் நூலைப் பற்றியும் சிறந்தமுறையில் அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை நல்கினார்.

தொடர் நிகழ்வாக திரு.ரமேஷ் அவர்கள் “டுட்டுடூ” சிறார் நாவலை வெளியிட முதல் பிரதியை நூல் ஆசிரியரின் நெருங்கிய நண்பரான திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அடுத்த பிரதியை பாரதி புத்தகாலயத்தின் செல்லப்பிள்ளையும் நெடுநாளைய வாசகருமான திரு.பாபு அவர்கள் வெளியிட அதை பசுமை உலகம் பொறுபாளர் திரு.மனமோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூலின் சிறப்பு குறித்தும் கதையின் சாராம்சம் குறித்தும் பாரதி புத்தகாலயத்தின் விற்பனையாளர் திருமதி.ராணி அவர்கள் சிறப்புரை ஆற்றியது நூல் வெளியீட்டு விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது.

சிறார் இலக்கியத்தின் கூறுகள் குறித்தும் சிறார் இலக்கிய நூல்களை குழந்தைகளின் மத்தியில் கொண்டு செல்லவேண்டியதின் அவசியம் குறித்தும் திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பேசியது சிறப்பு.

வந்திருந்த வாசகர்களில் திரு.மகேஷ், திரு.பாலஜவகர் மற்றும் திரு.ஸ்டீபன் ராஜா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

”டுட்டுடூ” சிறார் நாவலின் ஆசிரியர் வே. சங்கர் அவர்கள் தனது ஏற்புரையில் இந்நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் குறித்தும் அது எவ்வாறு வடிவம் பெற்றது என்பதனையும் விலாவாரியாகப் பேசினார்.

பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் இளங்கோ

இறுதியாக, பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் தோழர்.இளங்கோ அவர்கள் நன்றி நவிழ புத்தக வெளியீட்டு விழா எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவுற்றது.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/