ஊமைச்சாமி சிறுகதை ஜி. சியாமளா கோபு
திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்களின் அருகே சாமியார்கள் குழுக்களாக இருக்க எமலிங்கத்தின் அருகில் நானும் இங்கேயே இருந்து விட்டேன். என்னை மற்றவர்கள் யாரு எவரு எந்த ஊரு என்ன விவரம்னு அங்கே இருந்த பத்து பதினைந்து பழைய சாமியார்களும் கேட்டுப் பார்த்துட்டு எதுக்கும் வாயைத் திறக்கவில்லைனு ஊமைசாமின்னு அவுங்களே ஒரு நாமகரணம் சூட்டிட்டாங்க. அதுவே நிலைச்சும் போச்சு.
கடவுளைத் தேடிக்கினு வந்தவங்க இந்த திருவண்ணாமலையில் சிவனே இருக்கறதா சொல்றாங்க. ஊரே மலை. மலையே சிவன் என்று நம்புறவங்க மாசாமாசம் பவுர்ணமிக்கு கிரிவலம் வராங்க. சித்தருங்க நடமாடற பூமின்னு சொல்றாங்க. மன நிம்மதி வேண்டி இங்க வந்து உக்காந்தவங்க நிறைய பேரு. என்னை மாதிரி வந்து ஒளிஞ்சிகினு இருக்குறவங்க இருப்பாங்களான்னு தெரியலை. கேக்க முடியுமா? என்னையும் யாரும் கேக்க வேண்டாம். நானும் யாரையும் கேக்க வேண்டாம்னு தானே ஊமை சாமியா இருக்கேன். ஒவ்வொத்தருக்கும் தான் எத்தனை பிரச்சினை.
மரகதம்மாவும் தணிகாச்சலமும் தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மிக வசதியானவங்க. மகனுக்கு திருமணம் முடிந்து சொத்துக்கள் மகன் கையிலும் அதிகாரங்கள் மருமகள் கையிலும் வந்து போன பின், வாழ்வதே வேதனையானதால் “கண் காணாம காசிக்கு போயறலாம்னா வண்டிக்கு துட்டு இல்ல” என்று இதோ இங்க வந்து உட்கார்ந்துட்டாங்க. நான் பேசலைன்னாலும் மத்தவுங்க ஊர் கதை உலகக் கதை குடும்பக் கதைன்னு பேசறதைக் கேட்டு குடும்பம்னு ஒண்ணு இல்லாதது நல்லதா போச்சுன்னு நெனச்சுக்குவேன்.
வந்த புதுசுல ஏதேனும் ட்ரஸ்ட்காரவங்க உணவு, உடை, பெட்ஷீட் என்று கொண்டுவந்து கொடுத்தால் அதை எல்லாம் வாங்கிக்குவேன். சாப்பாட்டுக்கு ஒரு குறையுமில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி கிரிவலப் பாதை சாமியார்ங்களுக்கு அரசாங்கம் கொடுத்த வாக்காளர் ஆதார் மற்றும் அடையாள அட்டையை நானும் ஊமைச்சாமி என்ற நாமத்தில் வாங்கி வெச்சிக்கிட்டேன். போலீஸ் தொல்லை இருக்காதுன்னு தான்.
ஆனால் இப்போவெல்லாம் யாரு கூடவும் உக்காருவதுமில்ல. ஏதாவது குடுக்கறாங்கன்னு கூப்ட்டாலும் என்னன்னு கேக்கறதுமில்லை. மரகதம்மா தான் மனசு கேக்காம எதையாவது வாங்கியாந்து குடுக்கும். எப்போவாவது எழுந்து எமலிங்கத்திற்கு எதிரில் மலையடிவாரத்தில் காட்டுப் பக்கம் இயற்கை உபாதைக்கு ஒதுங்குறதும். காலங்காலையில் குளிரோ மழையோ பனியோ பின்னாலிருக்கும் குளத்தில் குளித்து கட்டியிருக்கும் வேட்டியை துவைத்து எமலிங்கத்தை ஒட்டியுள்ள முள்ளு புதரில் காயப் போடறதும் மட்டும் தான் என் அன்றாட வேலை. மற்ற நேரமெல்லாம் என்னை அந்த ஜினா தேடறதை விட அதிகமா எனக்குள் என்னைத் தேடிட்டு இருக்கேன்..
எவ்வளவுக்கெவ்வளவு நான் அமைதியாகிப் போனேனோ அவ்வளவுக்கவ்வளவு தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களும் ஊர்க்காரவங்க ஒண்ணு ரெண்டு பேரும் கண் மூடி உட்கார்ந்திருக்கும் என் முன் பழங்களை வெச்சி விழுந்து கும்பிட்டு போறாங்க “இந்த சாமியை”
“கும்பிட்டுப் போனால் போன காரியம் ஜெயம் தான்” என்று பேராகிப் போச்சு. இத்தனைக்கும் என் முன்னாடி விழுந்து கும்பிடற எவரையும் கண் திறந்து பார்ப்பதுமில்லை. ஒரு குங்குமமோ துண்ணூரோ தருவதில்லை.
‘அவரு கையால நாம குடுக்குற பழத்தை வாங்கிட்டாருன்னா அப்புறம் நம்ம வாழ்க்கை ஓஹோன்னு ஆயிடும்னு’னு சனத்துக்கு நம்பிக்கை பெலத்துப் போச்சு. ஆனா உண்மைக்கு எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. அவுங்கவுங்க நம்பிக்கை அவுங்கவுங்களுக்கு. இதுல நான் சொல்ல என்ன இருக்கு? நான் தான் எதையுமே சொல்றதில்லையே. இதுக்கு மட்டும் என்னத்தை சொல்லப் போறேன்?
“இந்தா, சாப்பாடு வந்திருக்கு கண்ணைத் திறந்து பாரு.” மரகதம்மா என் முகத்தருகே தட்டை நீட்டினாள்.
சுவரோடு சாய்ந்த வாக்கில் கண் மூடி உட்கார்ந்திருந்த நான் கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். வந்த புதுசுல இங்க கிடைக்கிற காசுல கவுச்சியும் தண்ணியும் வாங்கி சாப்பிடறதுண்டு. என்னவோ இப்போவெல்லாம் சாப்பாட்டுல நாட்டமில்லாம போச்சு. காதுல சதா நேரமும் ஓலமிடற குரல் வயித்துல பசியை அடக்கிருச்சு.
“என்ன வேண்டாமாமா?” என்று சிமென்ட் சிலாபில் உட்கார்ந்திருந்த தணிகாச்சலம் கேட்டார்.
“ம்” என்று நீண்ட பெருமூச்சொன்று விட்டு “இந்த ஊமைச்சாமி ஏன் தான் இப்படி அன்ன ஆகாரம் இல்லாம கிடக்கோ தெரியலை.” என்று ஆதங்கப்பட்டவள் அவரருகே அமர்ந்து கொண்டாள்.
“அவரை ஏன் தொந்தரவு செய்றீங்க.. எங்கிட்ட குடுங்க. நான் சாப்பிட்டுக்கிறேன்” ன்னு சொன்னான் புதுசா வந்த முப்பத்தி அஞ்சு வயசு மதிக்கத் தக்க தாடியும் மீசையுமா அழுக்குத் துணியோட நடுத்தர வயது ஆள். குளிச்சி பல நாள் இருக்கும் போல. அழுகிப் போன பழ வாசனை வந்தது அவனிடம்.
“டேய் கஞ்சா குடிக்கி. இப்பத் தானே ஒரு தட்டு நிறைய வாங்கித் தின்னே” என்ற மரகதம் “உன்னை மாதிரி கஞ்சா வலிக்கிற ரெண்டொத்தனுங்களாலே தான் இங்க இருக்கற சாமியாருங்க பேரே கெட்டுப் போவுது. எதுக்கு இப்படி சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு சோம்பேறி சோறு துன்னுக்கிட்டு இங்க உக்காந்திருப்பே. உனக்கு வீடு வாசல் இல்லே? போய் சேரு வூட்டுக்கு” என்று சிடுசிடுத்தாள்.
“அவனோட எதுக்கு கச்சிக் கட்டிக்கிட்டு இருக்கே?” என்றார் தணிகாச்சலம்.
“பின்னே என்னங்க? நாமளே நிம்மதி வேணும்னு வீடு வாசல் சொத்து சுகம் சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டு ஒழிச்சிட்டு இங்க வந்து சிவனேன்னு உக்காந்திருக்கோம். இந்த கஞ்சாகுடிக்கி நம்ம பக்கத்துல வந்து உக்காந்துக்கிட்டு கழுத்தை அறுக்குது”
“ஆங். நான் கஞ்சா குடிக்கிறதை நீ கண்டியா? நானும் எல்லாத்தையும் விட்டுட்டு சிவனேன்னு இங்கே வந்து உக்காந்திருக்கேன்” என்று சீறினான் அவன்.
“விடு மரகதம். வீட்டை விட்டுட்டு இங்க வர்றவங்க எல்லாரும் உடம்பை விட்டுட்டு வர்றதில்லையே. அதேப் போல அவுங்க பழக்க வழக்கத்தையும் கொண்டு தானே வராங்க. இங்க வந்து உக்காந்ததுமே எல்லாருக்கும் தெளிவு பிறந்திடுமா என்ன? சோத்துக்கும் துணிக்கும் ஆலாப் பறப்பாங்க தான். கொஞ்ச நாள் ஆகும். ஆடி அடங்கி உக்கார. இதோ நம்ம ஊமைசாமியைப் போல” என்றார்.
பொத்தானை அமுக்கினா பாட்டுப் பாடற ரெகார்ட் பிளேயர் மாதிரி அந்த ஆளு தொணதொணன்னு ஏதேதோ பேசிக்கிட்டே இருந்தான்.
“நீ கிளப்பி விட்டுட்டே. இன்னைக்கு ராத்தூக்கம் அவ்வளவு தான்.” என்றார் தணிகாச்சலம். ‘ஏண்டா’ என்றிருந்தது மரகதத்திற்கு.
எனக்குத் தெரியும் அவன் ஒரு கஞ்சாகுடிக்கின்னு. பாம்பின் கால் பாம்பறியாதா என்ன! நான் கண்களைத் திறந்து அவனை ஒரு பார்வை பார்க்கவும் “பழமெல்லாம் வீணாப் போவுதேன்னு கேட்டேன்” என்று பம்மினான் அவன்.
ஏதோ கல்யாண ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. பேச்சை நிறுத்தி விட்டு எல்லாருமே பொண்ணு மாப்பிள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இத்தகைய புற வாழ்க்கை சமாச்சாரங்கள் எல்லாம் நாட்டமில்லாமல் போய் விட்டது எனக்கு. கண்களை மூடிக் கொண்டேன். கண்ணை மூடிக்கிட்டா காது கேக்காம போய்டுமா என்ன? இல்லையே. காது கேக்குதே. பாபாய். பாபாய்ன்னு குரல் கேக்குதே. கடவுளே. விரட்டிக்கிட்டே இருக்குற அந்த குரல் காதுல விழாம இருக்கணும்னு கண்ணை இறுக்க மூடிக் கொண்டேன். இனி எந்நேரம் கண்ணைத் திறப்பேனோ?
“சாமி..சாமி..ஊமைசாமின்னு” குரல் கேட்டது. இவ்வளவு நேரமும் கேட்டுக்கிட்டு இருந்த பாபாய் என்று ரீங்காரமில்ல இது. தென்றல் வந்து தீண்டியதைப் போல குளுமையா இருந்தது இந்த குரல். “சாமி. ஊமைசாமி”.
சட்டென்று கண்ணைத் திறந்து பார்த்தேன். பின்னாடி கிராமத்துல இருந்து வழக்கமா வரும் ஏழெட்டு வயசிருக்கும் கவுன் போட்டிருந்த பெண் குழந்தையும் அதன் இளம் தாயும் நின்றிருந்தனர். எம் முன்னால ஒரு வாழைப்பழத்தை வெச்சி கும்பிட்டுட்டுதுங்க. அடிக்கடி வர்றவங்க தான்.
“சாமி”
என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் குரலை அடக்கி சாமின்னு இந்த குரல் கேட்கணும்னா இதோ இது மனிதப் பிறவி இல்ல. இதோ மலையா இருக்கிற அண்ணாமலையார் தான் சின்ன உருவாக எதிரில் நிக்கிதுன்னு தோணிச்சி. அப்பா அண்ணாமலையானேன்னு வாயைத் திறந்து கூப்பாடு போட்டு விடுவேனோ என்று பயமாயிருந்தது. கிட்டத்தட்ட ஆறேழு வருஷம் இருக்குமா? இருக்கும். நான் வாயைத் திறந்து ஆறு வருஷம்.இருக்கும். கண்ணைத் திறந்து பார்த்தேன்.
அதை என் அனுமதின்னு நெனச்சி அந்த தாய்க்காரி சொன்னா “சாமி காலையில உங்களை கும்பிட்டுட்டுப் போனோமே. இன்னைக்கு கோர்ட்டுல சாதகமா தீர்ப்பு வந்திருச்சு. உங்க கிட்ட எப்பவும் நானும் எம் புருஷனும் வந்து அழுவோமே. எங்க பூர்விக வீடு எங்களுக்குன்னு பாகம் ஆயிருச்சு”
நான் என் முன்னே இருந்த வாழைப்பழத்தை எடுத்து அந்த குழந்தையின் கையில் கொடுத்தேன். சிமென்ட் சிலாபில் உக்காந்திருந்த மரகதம்மா “ஏ பாப்பா, உனக்கு அதிர்ஷ்டம் தான் போ. சாமி பழம் கொடுத்திருக்கு. உன் வாழ்க்கை ஓஹோன்னு ஆகப் போவுது”ன்னு அங்கேயிருந்தே சத்தமிட்டாள். எப்போவாவது இதைப் போல யாருக்காவது பழம் கொடுப்பது வழக்கம் தான். இன்னைக்கு என் மனசார கொடுத்தேன் என்பது தான் உண்மை.
மரகதம்மாவின் சந்தோஷத்தைக் கண்டு அந்த குழந்தையின் தாய்” சாமி உங்க ஆசீர்வாதம் தான் எங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்குது சாமி” ன்னு நெஞ்சமுருகிக் கண்ணீர் விட்டு அழுதாள். சாமி நமக்கு ஏதோ பெரிய ஆசீர்வாதம் செஞ்சிட்டாருன்னு புரிந்து கொண்டு “சாமி, ஞாயித்துக் கிழமை எனக்கு பிறந்த நாள். அன்னைக்கு காலையில வந்து உங்களை பாக்கறேன்”ன்னு சொல்லிட்டு போச்சு.
இப்படி இவுங்க எல்லாம் அழுது தொழுவறதுக்கு நான் என்ன நிஜமாலுமே சாமியா? இல்லையே. சாதாரண ஆசாமியா? அதுவும் இல்லையே? கேடுல கேடு கேட்ட ஆசாமியாச்சுதே. கடவுளே. இந்த குரல் காதுல கேக்குதே. பாபாய்..கண்ணை மூடிக் கொண்டேன்.
காட்சி கண்ணுக்குள் விரிந்தது.
நெல்லூர் பக்கத்தில ஒரு கிராமம். வெங்கி என் பேரு. பதிமூணு வயசுல அரிசி மில்லுல வேலை செஞ்சி என் பதினஞ்சு வயசு அக்காவை காப்பாத்திக்கிட்டு இருக்கேன். அப்பாவும் அம்மாவும் செத்துப் போய்ட்டாங்க. அக்கம்பக்கம் பெரியப்பா சித்தப்பா மாமன் சித்தி பெரியம்மான்னு நெறைய உறவுங்க. ஆனா எங்க பூர்வீக வீட்ல நானும் என் அக்காவும் தான். அக்கா எனக்கு அம்மா மாதிரி. நல்லா சமைக்கும். துணி துவச்சி போடும். வேலைக்கு போகாத அன்னைக்கு உடம்பு பூராவும் எண்ணை வெச்சி தேய்ச்சி சுடுதண்ணி போட்டு குளிக்க ஊத்தும். சுடச்சுட ஆக்கிப் போடும்.
அன்னைக்கு வேலைக்குப் போயிட்டு திரும்பறப் போது நல்ல மழை. ஓரமா ஒதுங்கி நின்னு வீட்டுக்கு வரும் போது கதவு திறந்திருந்தது. இந்நேரத்தில கதவை திறந்து போட்டுட்டு அக்கா எங்கே போச்சுன்னு வீட்டுக்குள்ள போறேன். கரென்ட் கட் ஆகி கும்மிருட்டு. உள்ளறையில யாரோ கூவுற சத்தம் கேட்டது. வாசல் விளக்குப் பிறையில இருக்குற விளக்கை எப்படியோ தட்டுத் தடுமாறி பத்த வெச்சி கதவைத் தள்ளிக்கிட்டு வேகமா போனேன். எங்க அக்காவை எங்க சொந்த பெரியப்பன் கெடுக்க பாக்கறான். அந்த பிள்ள அலறி துடிக்கிது. இது எத்தனை நாளா நடக்குதோ? சத்தம் போட்டா உன்னை கொன்னுடுவேன்னு மிரட்டிக்கிட்டு இருக்கான். நெஜமாகவே அவன் கையில கத்தி இருந்தது. எங்கே அக்காவை குத்திப் புடுவானொன்னு நெனச்சி விளக்கை அவன் மூஞ்சியில வீசிட்டு மேல பாஞ்சேன். சண்டையில புரண்டோம். அவன் கையிலிருந்த கத்தி இப்போ என் கையில. ஒரே குத்து. அலறி கீழே விழுந்தான் எங்க பெரியப்பன்.
அய்யய்யோ தம்பி கொன்னுட்டியேன்னு அக்கா தன்னை மீறி கூப்பாடு போட்டுச்சு. .போலீஸ் பிடிச்சிட்டுப் போச்சுன்னா அடிச்சே கொன்னுடுவாங்க.. எங்கேயாவது ஓடி போய்டுடா தம்பின்னு கெஞ்சிச்சு.
அதோட கூப்பாடு கேட்டு ஆளுங்க வர்ற சத்தம் கேட்டுச்சு. நம்ம சொந்தக்காரனுங்க உன்னை அடிப்பாங்க. நிக்காதே. கிளம்புன்னு என்னை புழக்கடைப் பக்கம் விரட்டிச்சு. இருட்டுக்குள்ள ஓடினேன். எதிரில் வந்த லாரியிலே ஏறி நெல்லூரில் இறங்கினேன்.
அப்புறம் எங்கெங்கோ சுத்தி கடைசியில ஹைதராபாத் வந்து சேர்ந்தேன். ஜினா தான் வேலை கொடுத்தாரு. என்ன வேலை? சின்ன பையன் சைக்கிளில் கஞ்சா பொட்டலம் எடுத்துட்டு போய் பக்கத்து பள்ளிக்கூடம் காலேசுன்னு விக்கணும். அப்புறம் கத்தி போய் வாலு வந்தது டும்டும்முன்னு சைக்கிள் போய் காரு வந்தது. கஞ்சாவோட பொம்பளைங்களை இட்டுன்னு போய் விடறது, திரும்ப கூட்டியாரதுன்னு. தேன் எடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பானா? எனக்கும் இந்த பழக்க வழக்கம் அத்துப்படி. எந்த அக்காவுக்காக கொலைகாரனாகி இங்க வந்தேனோ அதை மறந்து எத்தனையோ அக்காக்களை நானே கொண்டு போய் விடற மாதிரி ஆகிப் போனேன். போதையில அப்படி ஆனேனா? அல்லது போதைக்காக அப்படி ஆனேனான்னு தெரியலை. ஆக மொத்தம் இதை எல்லாம் யோசிக்க கூடிய மனநிலையில் இல்லை நானு. ச்சூன்னு ஏவினா கறியை கவ்விட்டு வர நாயாத் தான் ஆகிப் போனேன்.
ஜினா சம்சாரம் என்னை கண்ணாலம் கட்ட சொல்லி எத்தனையோ கெஞ்சியது. ஊஹூம். அந்த தப்பை மட்டும் நான் செய்யலை. ஒருவேளை அப்படி குடும்பம் குழந்தை குட்டின்னு இருந்திருந்தா அம்மாம் பெரிய பாதகம் செஞ்சிருக்க மாட்டேன். ஆனா நான் கொலைகாரன். எந்நேரமும் போலீஸ் என்னைத் தேடி வரும். இதுல நிரந்தரமான எந்த உறவும் வேண்டாம்னு தான் அக்காவை அப்புறம் சந்திக்க முயலவேயில்லை.
முத தப்பு செய்யத் தான் பயம். அடுத்தடுத்து செய்யும் போது மனசு மரத்து தான் போனது. ஜினா வீட்டு மேலே ரூம்பு கொடுத்திருந்தாங்க. அவுங்களோட ஏழு வயசு பெண் குழந்தை தன்யஸ்ரீ எந்நேரமும் என்னை ஒட்டிக்கிட்டே கிடக்கும். அன்னைக்கு ஜினாவோட பொறந்த நாள். ஊர்ல இருக்குற பெரிய மனுஷங்க மட்டுமல்லாம அத்துணை மொள்ளமாரி முடிச்சவிக்கிகளுக்கு அங்கே தான் விருந்து.
அவனுங்க யாரும் செய்யாத தப்பை வீட்டுக்குள்ள நம்பி விட்ட நான் அன்னிக்கு செய்தேன். எனக்கோ வழக்கத்தை விட ஓவர் டோஸ். பேசாம என் ரூம்புக்கு வந்து படுத்துட்டேன். ஒண்ணு பொம்பளை இருப்பா. இல்லையா பொம்பளை சமாச்சாரம் டிவியில ஓடும்.
பாபாய்…..அப்படின்னா சித்தப்பான்னு தன்யஸ்ரீ கூப்பிட்டுக்கிட்டு என் அறைக்குள்ள வந்தது. விதி? பாபாய் வேண்டாம் வேண்டாம்ன்னு அழுதது காதில விழலை. என் கையில துடிக்க துடிக்க செத்துப் போச்சு. சட்டுன்னு போதை தெளிஞ்சது எனக்கு. அய்யய்யோ ஜினா கொன்னுடுவானேன்னு தான் முதல்ல தோணிச்சி. எடுத்தேன் ஓட்டம். இதே தப்பை செஞ்சவனை குத்திக் கொன்ன நீதிபதியா இருந்த நான் போதையாலே தப்பு செஞ்சிட்டு எங்கெங்கோ ஓடறேன். கடைசியில இந்த திருவண்ணமலைக்கு வந்தேன். யாராவது என்னை உத்துப் பார்த்தாக் கூட ஜினாவுக்கு செய்தி போய்டுமோன்னு உயிருக்கு பயந்து கிடந்தேன்.
உடம்போட வந்த பழக்க வழக்கமும் இங்கே வந்த பின்னும் தொடரத் தான் செய்தது. ஆனா ராத்திரி நிம்மதியா தூங்க முடியலை. லாகிரி இல்லாம கிடந்தா ஓரளவுக்கு தூக்கம் வரவே அதை எல்லாம் விட்டோழிச்சிட்டேன். திரும்ப ஊருக்கு போகலாமான்னு நினைப்பு வரும். பழைய இடத்துக்குப் போனா பழைய வாழ்க்கையும் வருமே. வேண்டாம். ஊர்ல உலகத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அமைதியைத் தேடி இந்த திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வர நான் எதுக்கு அமைதியை தேடி வெளியே போகணும். அஞ்சு வருஷம் ஆச்சு. இனி என்னை யாரும் தேட மாட்டாங்கன்னு தோணவே ஓட்டம் நின்னு உக்காந்துட்டேன்.
உடம்பு உக்காரவும் மனசு எழுந்துட்டுது.. பெரியப்பனை கொல்லாம இருந்திருந்தா? ஜினாவோட சேராம இருந்திருந்தான்னு என்னென்னவோ நினைப்புகள். தன்யஸ்ரீக்கு செஞ்சது மட்டுமல்ல நான் செஞ்சது எல்லாமே தப்புகள் தான். நான் செஞ்ச தப்பெல்லாம் ஒரு பெரிய மூட்டையா கட்டி என் மேல வச்சிருக்கறதைப் போல பாரமாயிருக்கு. எல்லாத்தையும் விட மகள் மாதிரி என் மடியில் கிடந்த குழந்தையின் பாபாய் என்ற குரல் என்னைக் கொல்லுது. இதுல நான் ஊமைச்சாமியாம். என்னைக் கும்பிட்டா நல்லதாம். இது எப்படி? அன்னைக்கு ஒரு நிஜ சாமியாரு உபதேசம் செஞ்சிக்கிட்டு இருந்தாரு. நம்ம தப்பை உணர்ந்துட்டோன்ம்னா அது தான் இருக்குறதுல பெரிய தெளிச்சியாம். நானும் செஞ்ச பாவத்தை உணர்ந்து ஊனினை உருக்கியதால் உள்ளொளி பெருகியது போலும். யானுன்னை தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன். எங்கெழுந்து அருளுவதினியே என்று பற்றிப் பிடித்துக் கொண்டு விட்டேன் சிவனை. ஆனாலும் காதில் இந்தக் குரல் கேட்கத் தானே செய்கிறது? அது தான் ஆயுசுக்கும் தூக்கி சுமக்க வேண்டிய எனக்கான தண்டனையோ?
ஞாயித்துக்கிழமை காலை ரமணாஸ்ரமத்தில் இளையராஜா வந்திருக்கிறார் என்று எல்லோரும் போய் விட்டிருந்தனர். எனக்கு வயிறு சரியில்லை. எதிரே மலையடிவார காட்டுக்குள் ஒதுங்கிட்டு வரலாம்னு எழுந்தேன். அந்த கஞ்சாகுடிக்கி. போதையா உறக்கமா மயக்கமா என்று பிரித்தறிய முடியாத நிலையில் சிமென்ட் சிலாபில்
படுத்துக் கிடந்தான். சரி தான் என்று போய் விட்டேன். வழக்கமாக அமரும் புதர் மறைவில் அமர்ந்திருந்த போது சாமி ஊமைசாமி என்று குரல் கேட்டது. எட்டிப் பார்த்தேன். அந்த குழந்தை தான். இன்னைக்கு பிறந்தநாள். என்னை பார்க்க வருவேன்னு சொன்னதே. இங்கே தேடிக்கிட்டு தனியாவா வந்தது என்று எழுந்தேன். இப்போ என்னை விடு என்ற குரல் கேட்டது.
விரைந்து வெளியே வந்தேன். அந்த கஞ்சா குடிக்கி பிள்ளையை இழுத்துக் கொண்டு ஒரு புதர் மறைவிற்கு போவது கண்ணில் பட்டது. எங்கிருந்து தான் எனக்கு அந்த ஆங்காரம் வந்ததோ! ஒரு மரக்கிளையை உடைத்து கொண்டு அவன் பின்னால் ஓடி நடு மண்டையில் நச்சென்று ஒன்னு போட்டேன். ஐயோ அம்மான்னு அலறி விழுந்தான். பாப்பா ஓடு ஓடுன்னு பதறினேன். ஊமைசாமி பேசுமான்னு திகைச்சு நின்னது அது. ஓடுன்னு சொல்லிட்டு இருக்கும் போதே அவன் ஒரு பெரிய கல்லை எடுத்து என் பின்னம் மண்டையில் நச்சென்று அடித்தான். மண்டை பிளந்திருக்கும் போல. ஏன்னா என்னோட உயிர் அந்த பிளவின் வழியே வெளியே போவதைப் பார்த்தேன். அதே வேகத்தில் என் கையிலிருக்கும் கட்டையால் மீண்டும் அவன் நடுமண்டையில் ஒரே அடி. அவனும் பொத்தென்று கீழே விழுந்தான்.
அந்த பாப்பா சாலையைக் கடந்து ஓடுயது. கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ஓடி வந்தாங்க. ஊமைச்சாமி பிள்ளையை காப்பாத்திருச்சுன்னு அவுங்க ஆளாளுக்கு சொன்னது என் காதில் விழுந்தது. தாய் அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டதும் என் கண்கள் மூடிக் கொண்டது. கண்ணை மூடிகிட்டா காது கேக்காதா என்ன? சாமி.. சாமி.. ஊமைச்சாமி..ன்னு எல்லாரும் அழறது காது கேட்டது..பாபாய் என்ற குரல் கேட்கவில்லை. பாரம் என்னை விட்டு போயிருச்சு. உடம்பு லேசாயிருச்சு. இதோ என் உசுரு ஓங்கி உயர்ந்திருக்கும் திருவண்ணாமலை உச்சிக்கு போய் அங்கே உலாவிக் கொண்டிருக்கும் மற்ற சித்தர்களோடு அங்கேயே நிலை கொண்டு விட்டது.
ஜி. சியாமளா கோபு