Karkalam Kavithai By E. Akash. கார்காலம் கவிதை - ஏ. ஆகாஷ்

கார்காலம் கவிதை – ஏ. ஆகாஷ்

விளையாடிக்
கொண்டிருந்தேன்
வெளியில் மழை

வீட்டுக்கு
வந்தேன்
வீட்டுக்குள்ளும் மழை…

பலர் சூடாய்
சமைத்து
சாப்பிட்டுக் கொண்டு
இரசிக்கிறார்கள் மழையை
பால்கனியில் நின்று

நாங்களோ
பாலுமில்லாமல்
கனியுமில்லாமல்
சுருன்டு கிடக்கிறோம்
பசியில்..

என் நண்பர்கள்
பேப்பரைக் கிழித்து
கப்பல் விட்டார்கள்

நானோ
வீட்டுக்குள் தேங்கிய
நீரில்
தேடிக்கொண்டிருந்தேன்
புத்தகப் பையை…

பலர்
சுவற்றில் சாய்ந்து
அமருவார்கள்

நாங்களோ
சுவர்
சாய்ந்து விடுமோ
என்ற
அச்சத்திலே
அமருகிறோம்…

இரவில்
தூங்குமெங்களை
தட்டி எழுப்புகிறது
நள்ளிரவு மழை..

விடிந்தது வானம்
விடியவில்லை
எங்கள் வாழ்வு

கொட்டித் தீர்த்த
மழையை
இராவெல்லாம்
திட்டித் தீர்த்தாள்
அம்மா…

காலையில்
சொல்லிக்கொண்டு
போகிறார் ஒருவர்
இரவு நல்ல
மழையென்று…

தேங்கிய நீரை
வெளியேற்றிக்
கொண்டிருந்த
அம்மாவைத் திரும்பிப்
பார்த்தேன் நான்..