பொன்னியின் செல்வன் நாவலும் திரைப்படமும் எதனால் வெற்றிப் பெற்றது? கட்டுரை – இரா.தெ.முத்து

பொன்னியின் செல்வன் நாவலும் திரைப்படமும் எதனால் வெற்றிப் பெற்றது? கட்டுரை – இரா.தெ.முத்து




மூன்று முறை பொன்னியின் செல்வன் பார்த்தாகி விட்டது. கடலோர சென்னை ராயபுரத்தின் ஐட்ரீம், சென்னையின் புராதன ஊரான வில்லிவாக்கம் ஏஜிஎஸ் திரையரங்கு என மூன்று முறை பார்த்தாகி விட்டது.. அக்டோபர் 1 தொடங்கி அக்டோபர் 16 வரை நான் பார்த்த மூன்றுமுறைகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே பொன்னியின் செல்வன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடலோர ராயபுரத்திலும் ஹவுஸ்புல். படத்தின் இரண்டு பாகங்களுக்கான மொத்த பட்ஜெட் 500 கோடியை முதல் பாகத்தின் முதல் 25 நாட்களிலேயே பொன்னியின் செல்வன் வசூலித்து இருக்கிறது.

நாவலின் காட்சிகள் எவ்வாறு படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்ற ஆவலில் முதல்முறை பார்த்தேன். கலைஞர்கள் எவ்வாறு நடித்திருக்கிறார்கள் என்ற இன்னொரு ஆவல். மணிரத்னம் எப்படி எடுத்திருக்கிறார் என்ற மேலொரு ஆவல் என பார்த்தாகி விட்டது.

நாவலின் மையமான பாத்திரங்கள் அதன் உடல்மொழிகள் உணர்வுகள் சம்பவங்கள் சரடுகள் திரைக்கதை ஆகியிருக்கிறது.வசனங்களில் கல்கி கையாண்ட அதே வசனங்களை சில இடங்களில் ஜெயமோகன் கையாண்டிருப்பதில் தவறில்லை.

நீலகண்ட சாஸ்திரி, கே.முத்தையா, மே.து.ராசுகுமார், இன்குலாப், கோ.கேசவன், ஆ.சிவசுப்ரமணியன், அருணன், குற்றாலம் பேராசிரியர் பிரேமா, சிதம்பரம் பேராசிரியர் இ.மணமாறன் என சோழர்கள் குறித்து எழுதிய ஆவணங்கள் நூல்கள் என ஏற்கனவே நான் வாசித்து வந்திருக்கிறேன். ஆ.உமர்பாரூக் ஆதூரசாலை என்று தன் நாவல் ஒன்றிற்கு பெயரிட்டுள்ளார். சோழர்கள் காலத்தில் பராந்தகர் ஆதூரசாலை என்ற இலவச மருத்துவமனைகள் இயங்கிய செய்திகளையும் அறிகிறோம். சோழர்கள் ஆட்சி பொற்காலமா என்று மட்டும் கேள்வி எழுப்பி கடக்க இயலாது.

சங்ககாலத்தில் இருந்தே பசியும் வறுமையும் இருந்து வருவதை அறிவோம். 21 ஆம் நூற்றாண்டிலும் பசியும் வறுமையும் ஒழிந்த பொற்காலம் வந்தபாடில்லை.

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும் சேரா தியல்வது நாடு” என்றுதானே வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் சமூகத்தை நோக்கிச் சொல்லி இருக்கிறார்.

சமூக வளர்ச்சியில் சோழர்கள் காலம் எனும் இடைக்காலம் கி.பி 8 முதல் 13 வரை சமூக வளர்ச்சியின் ஒரு கட்டம்.

மனிதர்கள் தனக்கான உணவை உற்பத்தி செய்ய அறியாத ஆதி பொதுவுடைமை காலம் வளர்ச்சியின் ஒரு கட்டமெனில் உற்பத்தி செய்ய அறிந்த மானுட இனம் வளர்ந்து நாகரீகமடைந்து நிலங்களை பயண்படுத்தி கையகப்படுத்தி அதன் மீதான ஆதிக்கத்தை உருவாக்கி துண்டு துண்டாகக் கிடந்த தமிழ் நிலத்தில் ஒரு மத்திய அரசு, மத்திய சட்டம், ஆட்சிமுறை என வளர்ந்த காலம் என்பது சோழர்களின் வரலாறு மட்டுமல்ல; இடைக்கால சமூக வளர்ச்சியின் ஒரு கட்டம் அது என்பதை நாம் உள்வாங்கி்க் கொள்ள வேண்டும். சோழர்கள் பல துறைகளில் தொட்டதை நவீன இந்தியா, தமிழ்நாடு பின்பற்றி வருவதையும் அறிகிறோம்.

சோழர்கள் காலத்தில் நீர்பாசன முறைகள், கட்டிடக்கலைகள், பலவித மருத்துவமுறைகளை ஆதரித்தது; அறிந்தது, இலவச மருத்துவமனைகள், பல சமயப் போக்குகளுக்கு இடம் கொடுத்த தன்மை, உள்ளாட்சிமுறைகள், வரலாற்றை ஆவணப்படுத்துதல், உலகத்தோடான தொடர்பை வளப்படுத்துதல் என நிகழ்ந்தவைகள் சோழர்களுக்கு மட்டுமானதல்ல; அன்றைய காலத்தின் பாட்டாளிகள் கலைஞர்கள் அறிஞர்கள் மக்கள் போன்றோர்களின் உழைப்பில் நிகழ்ந்தவைகள்.

கடந்தகாலத்தின் அனுபவத்தில் இவைகளுக்கு சிறப்பான வடிவம் கொடுக்க பிற்காலச் சோழர்களுக்கு வரலாறு இடமளித்ததை என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். சோழர்கள் காலத்தில் கடுமையான வரி விதிப்புகளும் மனிதர்கள் தங்களை விற்றுக் கொள்வதான அடிமைமுறையும் நிலவியது என்பதையும் மறக்க கூடாது. தமிழ்இன வெறிக்கு எதிராக பதிலடி தருகிறோம் என்ற உணர்வில் இடைக்காலத்தில் சோழர்கள் காலத்தில் நிகழ்ந்த நல்ல அம்சங்களை, தமிழ் நிலத்தில் தமிழினம் வளர்ந்து வந்த வழியை மொத்தமாக நாம் புறக்கணித்துவிட இயலாது.

தமிழ்நாட்டில் புதிதாக வளர்ந்து வந்த அச்சு எந்திர காலத்தில் வாசிப்பதற்கு திரைப்படங்களில் பார்ப்பதற்கு புராணக்கதைகள் இதிகாசக்கதைகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவைகளுக்கு மாற்றாக தமிழர்களின் கடந்த காலத்தை அவர்கள் வரலாற்றை நாவலாக எழுத கல்கி முன் வந்தது தமிழ் தேசிய உணர்வு முகிழ்ப்பு என உணர வேண்டும்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் 1949 ல் எழுதி வெளியிட்ட பிற்காலச் சோழர் வரலாறு, இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் உ.வே.சாமிநாதர் ஓலைச்சுவடிகளிலிருந்து வெளியிட்ட சங்ககாலப் பாடல்கள் போன்றவைகள் தமிழ்நாட்டில் தமிழர்களின் மனதில் தங்களுக்கான வரலாற்றுத்தடங்களை தமிழினம் வந்த பாதைகளை அறிந்து மகிழ்ந்து தமிழ், தென்னகம், திராவிடம் என்ற உணர்வுகள் மேலோங்கிய காலம் கல்கியை பொன்னியின் செல்வன் எழுத இயக்குகிறது.

1951 முதல் 1956 என ஐந்தாண்டுகள் வாராவாரம் கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் நாவலை எழுதி வாசகர்களை ஈர்க்கிறார் கல்கி. இது புனைநாவலாக மாறுகிற பொழுது நந்தினி, ஊமைராணி, சேந்தன் அமுதன் சின்ன பழுவேட்டரையர் பூங்குழலி போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட கற்பனைப் பாத்திரங்களை கல்கி உருவாக்கிக் கொள்கிறார். அறிந்த வரலாற்றுப் பாத்திரங்களோடு கற்பனையில் உருவாக்கப்பட்ட இந்த பாத்திரங்களும் இணைந்து நாவல் உருவாக்குகிற மாயம் எனும் மாஜிக் எழுபதாண்டுகளாக தமிழ் வாசகர் மனங்களை கிளர்த்திக் கொண்டே இருக்கிறது.

நாவலின் போக்கிற்கு நியாயம் செய்திருக்கும் மணிரத்தினம், ஜெயமோகன், குமரவேலின் திரைக்கதையும் செயற்கை தனமில்லாத தோட்டாதரணியின் கலை இயக்கமும், தமிழ் நிலத்தின் வண்ணமான கருப்பு சிவப்பை வரலாற்று திரைப்படத்திற்கான இளமஞ்சள் வண்ணத்தை இயற்கை ஒளி சார்ந்தும் படம் பிடித்த ரவிவர்மனின் ஒளிப்பதிவு ஆடை அணிகலன்கள் என உறுத்தாத உறுப்படியான தொழிற்நுட்பம் சார்ந்து வந்த பொன்னியின் செல்வன் குழந்தைகள் வரை பார்த்து மகிழ்வதையும் அறிகிறோம்.

நாவலை அறிந்த அறியாத மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வருகின்றனர். இஸ்லாம் கிருத்துவ சமயத்தாரும் திரளாக வருவதை பார்க்க முடிகிறது. இரண்டு விசயங்கள் தமிழர்கள் உளவியலாக இயங்கி மக்களை திரையரங்கிற்கு ஈர்த்து வருகின்றது.

தமிழ்நாட்டின் மீதான தமிழ்மொழியின் மீதான ஒன்றிய அரசின் தொடர் புறக்கணிப்பும் சமஸ்கிருத இந்தி திணிப்புகளும் தமிழினம் வளர்ந்த வரலாற்றை மேலும் மேலும் அறிய வைக்கிறது. ஏழாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் வைகை கீழடி அகழாய்வுகள், ஒரு விதைநெல்லின் கரிமவேதி ஆய்வுப்படி தாமிரபரணி எனும் தென்பொருநை காலம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று எழுந்து வரும் தொல்தமிழர் நாகரீகம், கட்டிடக்கலை, அணிமணிகள் போன்றவைகளினால் தமிழர், அவர்களின் பண்பாடு துலங்கிய வழிகளை அறிவதற்கான ஊடகமாக அவர்கள் பொன்னியின் செல்வனை கொண்டாடினார்கள். சு.வெங்கடேசனின் வேள்பாரியை கொண்டாடி வருகிறார்கள். இதன் வழியாக மணிரத்தினம் இயக்கி சுபாஷ்கரன் – மணிரத்தினம் தயாரித்த அமரர் கல்கியின் மூலக்கதையிலான பொன்னியின் செல்வன் தமிழர்கள் வாழும் ஊரெங்கும் வெற்றிநடை போட்டு வருகின்றது.

பொன்னியின் செல்வனை மக்களிடம் கொண்டு போக மணிரத்தினம் அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் யூடியூப் காணொலிகள், அறிந்த அறியாத பல சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி பரப்புரை செய்தததும், மக்கள் மனங்களில் அறிந்தும் அறியாமலுமாக திரி விட்டிருந்த தமிழர் தமிழர் பண்பாடு போன்ற விடயங்கள் மேலெழும்பியதும் இன்னொரு தவிர்க்கவியலாத காரணமாகக் காண முடிகின்றது.

மூன்றுமணி நேர திரைப்படம் அலுக்க வைக்காமல் ஆதித்த கரிகாலனின் வாள்வீச்சு போல குந்தவையின் வசீகரப்பார்வை போல வந்தியத்தேவனின் கிண்டல் கேலி போல அருள்மொழிவர்மன் எனும் ராஜ ராஜ சோழனின் கம்பீரம் போல நந்தினியின் மந்திரச்சொற்கள் போல வானதியின் ஆட்டம் போல படம் ஈர்த்து அந்தந்த பாத்திரங்கள் திரையில் தோன்றுகிற பொழுது கை கொட்டி ஆரவாரம் செய்ய வைக்கிறது.

பெரும்பாலும் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து பொன்னியின் செல்வனுக்கு ஏதோ ஆகி விட்டதென பற்றி எழுந்து முதலமைச்சரிடம் விசாரிக்கும் மாமன்னர் சுந்தர சோழன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியான் ஜெயராம், வணங்காமுடி எனும் சிற்றரசர் வேடத்தில் ஒரு காட்சி என்றாலும் பிரம்மாதமான வசன உச்சரிப்பு உடல்மொழியில் ஈர்க்கும் பாலாஜி சக்திவேல், குந்தவையின் தோழி அருள்மொழிவர்மனின் காதலி நாட்டிய அணங்கு வானதியாக வரும் ஷோபிதா தூலிபாலா, சரத்குமார், பார்த்திபன் மையப்படுத்தும் பழுவேட்டரையர்கள், மதுராந்தக சோழன் ரகுமான், பெரிய வேளார் பிரபு என ஒவ்வொரு பாத்திரங்களுக்கான கலைஞர்கள் தம் வகிபாகத்தை சிறப்பாக செய்து ரசிகர்களை ஈர்க்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான படத்திற்கு தேவையான இசையை தமிழ்மண் சார்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தந்திருப்பதை படம் பார்க்கையில் உணர இயலும்.எல்லாப் பாடல்களுக்கும் பாடல்களின் சூழல் காலம் உணர்வுகளுக்கு ஏற்றார் போல இசையை அமைந்திருக்கிறார் நவீன காலத்தின் இசைக்கலைஞனான ரஹ்மான்.

இளங்கோ கிருஷ்ணன் எனும் நவீன கவிஞன் தமிழின் தொன்மையை அழகை துடிப்பை வேகத்தை எள்ளலை கெஞ்சலை அற்புதமாக இசையின் உணர்வுகளுக்கு தகுந்தபடி பாடல்கள் எழுதி மனங்களை வசீகரிக்கிறார். பாடலுக்கு இடப்படும் எழுத்தட்டையில் இதர சில கவிஞர்கள் பெயர் இடம் பெறுவது குழப்பத்தை தருகிறது. வார்த்தைகளை கேட்டுப் புரிந்து அசை போடும் அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை இணக்கமாக இருந்திருக்க வேண்டும்.

இளம் தலைமுறையினரை பொன்னியின் செல்வன் புத்தகம் வாங்கி படிக்க வைத்திருக்கிறார்.
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு முதியவர்களை தியேட்டருக்கு வரவழைத்திருக்கிறார் மணிரத்தினம்.
ஒவ்வொரு பாகமாக எடுத்து இருந்தால் ஒரு கலைப்படமாக இது தொலைந்து போயிருக்கும் ஒட்டுமொத்தமாக அதிவேக திரைப்படமாக இதை மாற்றியதன் வழி மணிரத்னம் பொன்னியின் செல்வன் மீதான இளைய தலைமுறையின் ஆவலை தூண்டி இருக்கிறார் ..

இரண்டாம் பாகம் பார்க்க வருபவர்களுக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை மக்கள்பதிப்பு நூலாக கொடுப்பதற்கு மணிரத்தினம் முன் வரலாமே.

வாழ்த்துகள் மெட்ராஸ் டாக்கீஸ் & லைக்கா புரடக்‌ஷன்ஸ். நாவல் கட்டி எழுப்பிய ஈர்ப்பை திரைப்படத்தில் சாதித்து விட்டார் இயக்குநர் மணிரத்தினம்.

இரா.தெ.முத்து