ஆத்தா கடை கவிதை – இரா. கலையரசி
பதுங்கு குழியில இருந்து
தலையை எட்டி பார்க்குது
ஆத்தா சுட்ட இட்டலிகள்.
ஆவியில் வெந்து தணிந்து
ஆர்வமாய் வெளியுலகம் பார்க்கின்றன.
சுருங்கிய துணியா இருக்குது
ஆத்தா முகவரிக் கோடுகள்.
அடைத்த அடுப்பு “திகுதிகு”ங்க
காத்து வந்து ஆட்டம் காட்டி
வக்கணை செஞ்சுட்டுப் போகுது.
சிறுசும் பெருசுங்களும் ஒருசேர
அடுப்பைக் காத்து அமர்ந்திருக்க
தினமும் தவமிருக்கும் பூனை,
நாக்கைத் தொங்க விட்டபடி
நாய்களும் ஆசையாய்ச் சுற்றிவரும்.
தண்ணீரில் படர்ந்த கைகள்
பொறுக்கப் பொறுக்க இட்டலிகளை தடவி
செல்லமாய் எடுக்க
பசை இல்லா சுவரொட்டியாய்
“பசக் பசக்”கென இடம் மாறின.
பசித்த வயிறுகள் பார்த்திருக்க!
சில்லறை கைகளில் குலுங்க
கடன் அட்டைகளும் முன்னேறின.
காசில்லா உடைந்த வட்டிகளும்
முன்னுக்கு வர காத்திருந்தன.
ஆத்தாவின் கைகள் முகம் பாராது
இட்டலிகளை இட்டு நிரப்பியது.
வந்த சில்லறைகள் சிதறிட
வாடிய முகங்கள் பூத்திருந்தன.
அடுத்தடுத்த அடுக்குகளில்
ஆத்தாவின் இரக்கமும் அன்பும்
இட்டலிகளாக சிகரம் தொட
தங்களின் வரிசைக்கு ஆர்வமாய்
கண்களை விரித்தபடி
நாய்களும் பூனைகளும்..!