இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி

இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி




இலங்கையில் மே 9 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள், நாடு மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியால் சீர்கேடு அடைந்துகொண்டிருந்த நிலையில் அதற்கு ஒரு கூர்மையான நிவாரணத்தை அளித்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் அமைப்பு முறை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் முழுமையாகக் கவ்விப்பிடித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குப் பிரதான காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. ஜனாதிபதியான கோட்டபய ராஜபக்சே தன்னுடைய நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆட்சிக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாக தன் மூத்த சகோதரர் மகிந்தா ராஜபக்சேயை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரியிருக்கிறார். முன்னதாக, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டிருந்தது.

ராஜபக்சே அரசு மேற்கொண்ட பேரழிவு தரத்தக்க முடிவுகள்தான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். வரிகளை வெட்டியது, வேளாண்மைக்குப் பயன்படுத்துவதற்கான ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது, வெற்று ஆரவாரத் திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடுகளைச் செய்தது, எதேச்சாதிகார ராஜபக்சே ஆட்சி மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் வருவாயைக் குறைத்தது, வேளாண் உற்பத்தியைச் சீர்குலைத்தது, கடன் சுமை அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது.

கோவிட் பெருந்தொற்று பொருளாதார நெருக்கடியை மேலும் விரைவுபடுத்துவதற்கே இட்டுச் சென்றது. இதன் காரணமாகச் சுற்றுலா முற்றிலுமாக நின்றதால் அந்நியச் செலாவணி வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்துடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் நின்றுவிட்டது.

பொருளாதாரம் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, மக்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விலைவாசிகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தாங்கமுடியாத அளவிற்கு நிலைமைகள் சென்றபின்னர் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கிவிட்டார்கள். மார்ச் 31இலிருந்து கிளர்ச்சியாளர்கள் மத்திய கொழும்பு, காலிமுகத்திடல் பூங்கா பகுதியிலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியேயும் அணிதிரண்டு, முகாமிட்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் நடந்து வந்த இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் போராட்டமானது, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் பெற்றிருக்கிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களின் இக்கிளர்ச்சி இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 28 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள். பின்னர் மீண்டும் மே 5 அன்று இரண்டாவது ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால் நடைபெற்றன. இதிலும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் பெரிய அளவில் பங்கேற்றார்கள். இந்த வேலை நிறுத்தங்களின்போது ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் ராஜினாமா செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து பீதியடைந்த ஜனாதிபதி கோட்டபயா, இரண்டாவது முறையாக ஒரு மாத கால அளவில், மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. எனினும் போராட்டக்காரர்கள் அதனை மீறினார்கள். உண்மையில் ஆட்சியாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மே 9 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பவவை, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காக, ராஜபக்சே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும்.

மகிந்த ராஜபக்சே, போராடுவோரின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்வதற்குப் பதிலாக, தன் கட்சி (எஸ்எல்பிபி) ஆதரவாளர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவர்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் விதத்தில் பேசிய பின்னர், அவருடைய ஆதரவாளர்கள் வெளியே வந்து, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், அவர்களின் தற்காலிக பந்தல்களை நாசமாக்கி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து காலி ஃபேஸ் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தார்கள். அங்கே நின்றிருந்த காவல்துறையினர் இவர்களை அடக்குவதற்குத் தவறிவிட்டனர்.

ஆளும் கட்சித் தரப்பு ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கேவலமான வன்முறை நடவடிக்கைகள்தான் கொழும்புவுக்கு வெளியிலும் போராட்ட உணர்வைக் கொண்டு சென்று, இதற்குப் பதிலடி கொடுக்கும் நிலையை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் இல்லம், டெம்பிள் ட்ரீஸ் முன் (Temple Trees) கூடி, அதனைத் தாக்க முற்பட்டார்கள். இறுதியாக, பிரதமர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட மகிந்த ராஜபக்சேயும் அவருடைய குடும்பத்தினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பிற்காகக் கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்தினரின் அனைத்து வீடுகளும், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.

இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும், சமாஜி ஜன பாலவெகயா கூட்டணி (SJB alliance), ஜனாதிபதி கோட்டபயா தலைமையின்கீழ் அமையும் எவ்விதமான அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்திலும் இணைய மாட்டோம் என அறிவித்தது. கோட்டபயாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளும், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆகியவையும் புதிய தேர்தல்கள் நடைபெறும் வரையிலும் இடைக்கால ஜனாதிபதியும், இடைக்கால அரசாங்கமுமே வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

நாட்டில் அளவிடற்கரிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி கோட்டபயா வெளியேற வேண்டும் என்று கோருவது நியாயமே. ஏனெனில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் குளறுபடிகளுக்குப் பிரதான காரணமே இவர்தான். இவரால் உருவாக்கப்பட்டதுதான் இப்போதிருந்துவரும் எதேச்சாதிகார தேசியப் பாதுகாப்பு அரசு. பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் பின்னிப்பிணைந்தவைகளாகும்.

ராஜபக்சே ஆட்சி அகற்றப்படுவதுடன், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஜனநாயக பூர்வமான முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும். மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு அரசும் கலைக்கப்பட வேண்டும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மக்கள் ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கான கொள்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ராஜபக்சே குலத்தினரின் மீதான மாயை காணாமல் போயிருப்பதன் காரணமாக அது சிங்கள பெளத்தமத தேசியவாதம் மங்குவதற்கும் இட்டுச் செல்வதுடன், அதற்குப் பதிலாக மொழி மற்றும் மத சிறுபான்மையினர் மீது ஜனநாயக பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய அனைத்து மக்களின் ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்கப்படும் என நம்புவோம்.

இலங்கை அரசாங்கம், கடன் பெறுவதற்காக, சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியம் அளிக்கும் நிபந்தனைகள் என்பவை, சமூக நலத்திட்டங்களில் வெட்டு, சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் தனியார்மயத்தை மேலும் விரிவுபடுத்திட வேண்டும் என்பவைகளாகும். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இவற்றுக்கு உட்படுவதைத் தவிர வேறு வழியில்லை.. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான கட்டமைப்பு நெருக்கடிக்கு இது தீர்வாகாது.

இதற்கு எதிராக மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்திலும், நிதிமூலதனத்தின் இழிவுகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்திடும் விதத்திலும் ஒரு மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஓர் அபூர்வமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளில் மறுகட்டமைப்பை ஏற்படுத்திடவும், அத்தகைய மாற்றத்திற்கான போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிடவும் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

(மே 11, 2022)
(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

கொரோனா -19 பீடையும் பொருளாதார நெருக்கடியும் – வே.மீனாட்சி சுந்தரம் 

கொரோனா -19 பீடையும் பொருளாதார நெருக்கடியும் – வே.மீனாட்சி சுந்தரம் 

அண்மையில் (ஜூலை ,11, 2020) ரிசர்வ் வங்கி கவர்னர் “,கொரோனா-19 தொற்றால் விளைந்த ஆரோக்கிய சீரழிவும் பொருளாதார நெருக்கடியும் கடந்த நூறு அண்டுகளில் இல்லாத ஒன்று” என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதை  ஆங்கில பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிட்டன. யுத்தம்,…
நாம் பொருளாதர மீட்சிக்குள் நுழைந்துகொண்டிருக்கவில்லை -இன்னொரு திடீர்த்தகர்வு வந்து கொண்டிருக்கிறது – கிரேஸ் ப்ளேக்லீ (தமிழில்: செ.நடேசன்)

நாம் பொருளாதர மீட்சிக்குள் நுழைந்துகொண்டிருக்கவில்லை -இன்னொரு திடீர்த்தகர்வு வந்து கொண்டிருக்கிறது – கிரேஸ் ப்ளேக்லீ (தமிழில்: செ.நடேசன்)

  உலகெங்கிலும் பங்குச்சந்தைகள் ஊரடங்கு நீக்கப்பட்டு, மத்திய வங்கிகள்  பொருளாதாரத்துக்குள் பணத்தைக்கொட்டத்துவங்கியதும், அணிவகுத்து வருகின்றன. ஆனால் பொருளாதாரம் சீர்பட்டுக்கொண்டிருக்கவில்லை: அதற்குமாறாக, இன்னொரு பேரழிவை ஏற்படுத்தப்போகும் திடீர்த் தகர்வுக்கு,புயலுக்குமுந்தைய அமைதியைப்போல, இருக்கப் போகிறது. உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகள் இதற்கு முன் இல்லாத…
உயிர் கொல்லி நோய் கோவிட்-19 பின்னணியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரப் பெருமந்தத் தாக்கத்தின் போது (1929-1939) பெற்ற படிப்பினைகளும்: பேரா. கா. அ. மணிக்குமார்

உயிர் கொல்லி நோய் கோவிட்-19 பின்னணியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரப் பெருமந்தத் தாக்கத்தின் போது (1929-1939) பெற்ற படிப்பினைகளும்: பேரா. கா. அ. மணிக்குமார்

  அமெரிக்கப் பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் விளைவாக 1929 இல் ஆரம்பித்து அடுத்த பத்தாண்டுகள் நீடித்த உலகளாவிய பொருளாதாரப்பெருமந்தம் வரலாற்றில் முதலாளித்துவம் சந்தித்த மாபெரும் சவாலாகும். ஏற்றுமதிச்சந்தையில் வீழ்ச்சி, உணவு, வர்த்தக விளைபொருட்களின் தேக்கம், விலை சரிவு, சுங்கத்தீர்வை, முத்திரை காகிதம், பத்திரப்பதிவுகள்…