உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையும் இந்தியாவின் நிலையும் உண்மையைத் தேடி – ஆயிஷா. இரா. நடராசன்

உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையும் இந்தியாவின் நிலையும் உண்மையைத் தேடி – ஆயிஷா. இரா. நடராசன்




நம் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அம்மையார் சமீபத்தில் பெருமிதத்தோடு குறிப்பிட்ட ஒரு விஷயம் உலக- கண்டுபிடிப்பு தரவரிசையில் நம் நாடு பலபடி முன்னேறி 40 வது இடத்தை பிடித்து விட்டது என்பது சர்வதேச கண்டுபிடிப்பு இன்டெக்ஸில் நம் நாடு 81 வது இடத்தில் இருந்து 40 வது இடம் நோக்கி முன்னேறிவிட்டது என்பது சிறப்பான செய்தி அல்லவா. குஜராத் பல்கலைகழகத்தின் இளம் பெண்களுக்கான ‘ஹர்-ஸ்டார்ட்’ (Her – START) திட்டத்தை தொடங்கி வைத்தபோதுதான் நம் ஜனாதிபதி அம்மையார் இப்படியாக பெருமிதம் கொண்டிருக்கிறார். நமக்கும் மகிழ்ச்சியே.

அதென்ன சர்வதேச கண்டுபிடிப்பாளர் இண்டெக்ஸ்,..? பொதுவாக நம் நாட்டில் அறிவியல் – தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் நிலை என்ன? நம் நாடு பட்டினி இண்டெக்ஸ், வளர்ச்சி கணக்கீடு, கல்வி என்று பெரும்பாலான உலகளாவிய தரவரிசைகளில் பின் நோக்கி அதிர்ச்சிப் பயணம் செய்து துயரம் தரும் காலத்தில் கண்டுபிடிப்பு தரவரிசை நம்மை ஆச்சரியப்படுத்துவது உண்மைதானா? கண்டுபிடிப்பாளர் என்றால் யார்? எதை வைத்து இந்த (கண்டுபிடிப்பு) சர்வே எடுக்கப்படுகிறது. இப்படி கேள்விகள் எழுவது நியாயம்தான். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அறிவியல் – தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்பது கண்டுபிடிப்பு (Invention). புதுமை புகுத்துதல் (Innovation) முன்னேற்றுதல் (IMPROVING) என்ற மூன்றையும் உள்ளடக்கியதாக பொதுவில் சொல்லப்படுகிறது.

ஒரு பேனாவையே கண்டுபிடிப்பது வேறு. ஏற்கனவே இருப்பதை மேம்படுத்துவது வேறு. ஒவ்வொரு படிநிலை முன்னேற்றமும் உரிமம் பெற தகுதியானதே விதவிதமான பேனாக்கள் சந்தையில் இருப்பதை காணலாம். இங்க் பேனா, இங்க் டேங்க் பேனா, பந்துமுனைப் பேனா, ஜெல் எனும் கூழ்மப் பேனா மூடி வைத்தது பின்னே பித்தான் வைத்தது தானியங்கி பேனா என அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாவகைக்கும் உரிமம் பெறப்பட்டு அதனதன அறிவுசார் உடைமை (Intellectual property rights) அதன் கண்டுபிடிப்பாளருக்கு தக்க விதத்தில் சென்று சேரவேண்டும்.

நவீன யுகத்தில் மனித வளர்ச்சி அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு – இது இன்னாருடைய பங்களிப்பு – என்று உரிமச் சான்று தரும்- அமைப்பு மறுமலர்ச்சியை இத்தாலியில் 1474ல் தொடங்கியது. ஆனால் அப்படி ஒரு தரச்சான்று அளிக்கும் முறை ஆதி கிரேக்கத்திலும் சீனத்திலும் கூட இருந்ததற்கு சான்று உண்டு இங்கிலாந்தில் முதல் ஆங்கிலேய வர்த்தகம் சார்ந்த கண்டுபிடிப்பு உரிமம் 1449ல் உத்தெய்னம்- ஜான் என்பவருக்கு கண்ணாடி தயாரிக்கும் முறைக்காக நான்காம் ஹென்றி மன்னரால் வழங்கப்பட்டது. அப்போதைய இங்கிலாந்தில் யாருக்குமே ஜன்னல் கண்ணாடிகள் செய்யத் தெரியாது. 1561 முதல் 1590 வரை முதலாம் எலிசபெத் மகாராணி தன் கையொப்பமிட்டு குறைந்த பட்சம் 50 சான்றிதழ்களாவது தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக வழங்கியுள்ளதையும் வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது. மன்னர் முதலாம் ஜேம்ஸ் தன் மனப்போக்கில் வேண்டப்பட்டவர்களுக்கு எல்லாம் உரிமங்களை வாரி வழங்கியபோது இங்கிலாந்து (அப்போதைய) பாராளுமன்றம் சர்வதேச அளவில் முதல் கண்டுபிடிப்பு- உரிமம் நடைமுறை சட்டம் – என்கிற ஒன்றை 1624ல் நிறைவேற்றியது. பிறகு தொழிற்புரட்சி ஆண்டுகளை உலகம் அடைந்த நாட்களில் அறிவியல் வளர்ச்சி மேலும் தெளிவான நடைமுறைகளை நோக்கி கண்டுபிடிப்புகளை பதிவுசெய்தலை பரிணாமம் அடையவைத்தது.

இந்தியாவில் தன் கண்டுபிடிப்புகளக்காக சில பெயர்கள் பிரபலமாக அறியப்பட்டது அவரவர்களின் நூல்களால் தான். சுஸ்ருதா மருத்துவ நூலும், நம் சங்க காலத்தின் வானவியல் கணிதத்தை தந்த சிலேட்டர், குடுக்கை நன் கணியார் என தமிழிலும் உண்டு. ஆங்கிலேயர்கள் 1911ல் இந்திய உரிமம் மற்றும் வடிவமைப்பு (Patents & Design Act) உரிமை சட்டத்தை அறிமுகம் செய்தது. 1950ல் இச்சட்டம் முதல்முறை திருத்தப்பட்டாலும் 1957ல் நேரு அரசு இன்னும் தெளிவான அனைவருக்கும் பயன்படும் உரிமம் பெறும் சட்டத்தை – கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சட்டமாக மாற்றிட பரிந்துரைகளை வழங்குமாறு நீதியரசர். எம். ராஜகோபால் ஐயங்கார் கமிட்டியை நியமித்தது. அதன்படி அப்போது (1959) ஒரு முறை சட்டம் திருத்தப்பட்டது.

ஆனால் 1972, ஏப்ரல் 20 அன்றுதான் தெளிவான ஒரு கண்டுபிடிப்பு உரிமச்சட்டம் நம் நாட்டில் அமலுக்கு வந்தது. இது ஏறத்தாழ முப்பதாண்டுகள் கழித்து 1999ல் உரிம சட்டதிருத்த மசோதா மூலம் மேலும் கணினி இயல் – சந்தை வர்த்தகம் என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டு அதன்பின் 2002ல் ஒருமுறையும் 2005ல் ஒரு முறையும் மாற்றத்திற்கு உட்பட்டு டில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை நகரங்களில் இந்திய அறிவுசார் உடைமை-பதிவு அலுவலகங்களை திறந்து நவீன மயமாக்கப்பட்டது. இருமல் மருந்து, செருப்பு, கைபேசி பல்பு, குண்டூசி முதல் குவாட்டர் பாட்டில் வரை சகலத்திற்கும் அங்கே (சர்வலோக ) உரிமம் வழங்கப்படுகிறது. உரிமம் பெறத்தக்க கண்டுபிடிப்பாக எது இருக்க முடியும் என்பதற்கு அந்த அலுவலகத்தில் ஆயிரம் பக்கத்திற்கான (!) ஒரு வழிகாட்டி புத்தகம் கூட உள்ளது. (அதற்கும் உரிமம் வாங்கி வைத்து இருக்கிறார்கள்!)/

நம் நாட்டின் தற்போதைய சிக்கல் மிகவும் வினோதமானது. பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு சென்ற மாதம் நம் ‘கண்டுபிடிப்பு உரிமம் பெரும் சூழல் அமைப்பில் அவசர மூலதனம் ஏன் தேவை எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தது. இந்தியாவை அறிவார்த்த பொருளாதாரமாக்கிட (Intellectual – knowledge economy) தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதன் அவசியத்தை அவசரத்தை அந்த அறிக்கை விளக்கியது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விபரங்கள் நமக்குள் பல புதிர்களை விதைப்பனவாக உள்ளன.

ஒரு உற்பத்தி பொருள் மீதோ அல்லது கண்டுபிடிப்பின் மீதோ அறிவுசார் சொத்துரிமை கோரும் உரிம- அனுமதி இருவகை. ஒன்று இந்திய உரிமம் கோரும் அயல் கண்டுபிடிப்பாளர்களுடைய கண்டுபிடிப்பு உரிம-அனுமதி விண்ணப்பம். இரண்டாவது உள்ளூர் கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பம் முதல் முறையாக 2021 -2022 ல் அயல் விண்ணப்பங்களை விட உள்ளூர் கண்டு பிடிப்பாளர்களின் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. சென்ற பத்தாண்டு காலத்தைவிட (2010-19) இந்த புத்தாண்டின் தொடக்கமே சாதனை. 2010/19 காலகட்டம் தனக்கு முந்திய பத்தாண்டு காலகட்டத்தைவிட இருமடங்கு அதிக கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 2022-2023 பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் – உள்ளூர் விண்ணப்பங்கள் மேலும் அதிகரிப்பதையே புள்ளிவிபர போக்கு நமக்கு காட்டுவதாகவும் பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேச தரப்பட்டியல் வெளியானது. 80 விதவிதமான அளவுருக்களின் அடிப்படையில் அது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. கார்னெல் பல்கலைக்கழகம், இன்சீடு எனம் அமைப்பு மற்றும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் இணைந்து நடத்துவது அது இன்சீடு என்பது ஒரு (Institute of European Administration of Business Affairs) பொருளாதார கல்வி வர்த்தக அமைப்பு. பிரான்சு, அபுதாபி, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உண்டு. இன்சீடு(In SEAD) என்ற தனது இதழில்தான் அந்த தரவரிசையை அது வெளியிடுகிறது. இன்சீடு. ஒரு கல்வி நிறுவனம் எம்.பி.ஏ எம்.சி.ஏ என்று பட்டப்படிப்பும் உண்டு.

இந்த தரவரிசை இரு பிரதான அளவுரு வகைப்பாடுகளை கொண்டது. ஒன்று உள்ளீட்டு (கண்டுபிடிப்பு) அளவுரு மற்றது வெளியீட்டு (கண்டுபிடிப்பு) அளவுரு. இவற்றை மேலும் பல படிநிலை அளவுருக்களாக பிரிக்கிறார்கள். 2007ல் வெறும் 17 படிநிலை அளவுருக்காளாக இருந்ததை 2019ல் 120 படிநிலைகளாக பிரித்துவிட்டார்கள். காரணம் உண்டு. 2019ல் ஐ.நா. சபையின் கண்டு பிடிப்பு தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சி எனும் அறிக்கை வெளிவந்தது. அது ஆண்டுதோறும் உலக நாடுகளிடையே தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல்பூர்வமான நிலைத்த வளர்ச்சி குறித்த தரப்பட்டியலை வெளியிட முடிவு செய்தது. (நிலைத்த வளர்ச்சி –தரவரிசை பற்றி யாருமே பேசுவது இல்லை. ஏனெனில் இந்தியாவின் தர – இடம் கம்போடியா, வங்காளதேசத்திற்கும் கீழே உள்ளது- முதலாம் இடம் பின்லாந்து, 121-வது இடத்தில் இந்தியா).

இந்தியாவின் கண்டுபிடிப்பு –உரிமம் பெறும் நடைமுறை மிகுந்த சிக்கல் நிறைந்த நீண்ட போராட்டம் ஆகும். எனவே பெரும்பாலும் யாருமே நேரடியாக விண்ணப்பிப்பது இல்லை. அதற்கென்று இடைத்தரகர்கள் பெருகிவிட்டார்கள். இந்த நடைமுறை – சிவப்பு (திண்டாட்டத்தை) நாடா பள்ளத்தாக்கை நம்பி சுமார் இரண்டு லட்சம் வழக்குரைஞர்கள் பணியாற்றும் தனித்துறையே உள்ளது. நானும் எடிசன்போல பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவேன் எனும் குழந்தைப்பருவ கனவை விதைப்பவர்கள் – உரிமம் பெருகிற பின் விளைவு தெரிந்தால் அறிவியலைவிட்டே ஓடிவிடுவார்கள். ஷரத்து (9) 1ன் படி ஒவ்வொரு விண்ணப்பமும் வந்த ஒரு வருடத்திற்குள் கண்டுபிடிப்பு குறித்த தரச்சான்று தரும் அரசு அங்கீகாரம் பெற்றவர்களால் தரப்பட்ட சான்றாதார விபர அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதைவிட கொடுமை 21(1)ம் ஷரத்து. உரிம அலுவலர் உங்கள் விண்ணப்பத்தில் ஒரு எழுத்து பிழையை கண்டுபிடித்து விட்டாலும் நீங்கள் முதலில் இருந்து –வேறு புதிய விண்ணப்பத்தை‘விலை‘ கொடுத்து வாங்கி மீண்டும் பயணத்தை முதல் பெட்டியில் இருந்து தொடங்கவேண்டும். ஒவ்வொரு படிநிலைக்கும் பழையபடி (இடைத்தரகர்) கட்டணம் உங்களை தாளித்து விடும் அவலம் ஒருபுறம். அதே விஷயத்தை தானும் கண்டுபிடித்ததாக சும்மா யாரோ ஒருவர் –ஒரு கடிதம் கொடுத்தாலும் நீங்கள் அம்போ.

இந்த நிலையில் 2016ம் வருடம் தேசிய அறிவுசார் உரிமை- கொள்கை என்ற ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது. தனது புதுமை – கண்டுபிடிப்பு உரிம அலுவலக சோதனைகளின் தேறாது என்று தெரிந்தேகூட ஒருவர் உரிம விண்ணப்பம் அளிக்க முடியும் என்று நம் நாட்டின் கொள்கை வாசல் திறந்து விட்டது. ஒருபுரம் உயர் கல்வியில் தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி (R&D) – உள்ளூர் செலவீனத்திலும் தனியாரை வரவழைத்து 2013ல் 5% மாக இருந்ததை 2018 ல் 7% மாக உயர்த்தி காட்டி இருக்கிறோம் (ஆதாரம் யுனெஸ்கோ அறிக்கை) 2015 – 16 ல் 838 ஆக இருந்த பத்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு உரிமம் கொரும் விண்ணப்ப எண்ணிக்கை மேற்கண்ட காரணங்களால் 2019 – 20 ல் 2,533 ஆக உயர்ந்துள்ளது.

உரிமம் கோரி விண்ணப்பித்த அளவுருவில் உலகின் 40 வது இடம். சரிதான் சற்றே அருகில் வைத்து கணக்கீட்டை பரிசீலித்தால் பெரிய அதிர்ச்சியே ஏற்படுகிறது. சிஜிபிடி இயக்குனர் அலுவலக (controller General of Patents, Designs, Trademarks and geographical Indications) சமீபத்திய அறிக்கை ஒரு விஷயத்தை நம் கவனத்திற்கு கொண்டுவருகிறது. நம் நாட்டில் கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பங்களில் கைவிடப்பட்ட அல்லது 9(1) மற்றும் 21(1) விதிகளின் படி ஏற்கப்படாத விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2010 – 11 ல் 5186 ல் இருந்து 2019 / 20 ல் 23, 291 ஆக உயர்ந்து விட்டது. இதை சர்வதேச தரக் கணக்கீடு கணக்கில் எடுத்ததா என்பதே புதிராக உள்ளது. ஆக நம் நாட்டில் கண்டுபிடிப்பு உரிமம் பெற விண்ணப்பித்தவர்களையும் பெற்றவர்களையும் எண்ணிக்கைப்படி ஒப்பிட்டால் மொத்தமாக 4.2 சதவிகிதம் பேர் மட்டுமே உரிமம் பெறுகிறார்கள் என்று சி.ஜி.பி.டி யின் அண்மை அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. இதற்கான காரணம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுவது என்னவென்றால் உயர்கல்வி மற்றும் இந்திய நிறுவனத்துறைகளில் கண்டுபிடிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்த ரசீது (ஆதாரம்) இணைப்பது உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு ஒரு நிபந்தனையாக 2016 முதல் அமலானது. உரிமம் பெற்றிருக்க வேண்டியதில்லை. விண்ணப்பித்தாலே போதும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) முதல் தளவாட ஆய்வு நிலையம் (DRDO) அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) ஏன் நம் எல்.ஐ.சி முதல் வங்கிகள் வரைகூட – வேலை பார்க்கும் ஒருவர் ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால் தன்சொந்த பெயரில் கண்டுபிடிப்பு உரிமம் பெறமுடியாது. அந்த நிறுவன தலைமையிடம் அனுமதி கோர வேண்டி உள்ளது மட்டுமல்ல கண்டு பிடிப்பாளரின் உழைப்பை அந்த நிறுவனத்தின் கூட்டுமுயற்சி என்று பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதும் நிறுவன விதிமுறைகள் உங்களை சுயமாக கண்டுபிடிப்பாளராக செயல்படமுடியாத நிலையும் நீடிக்கிறது.

கண்டுபிடிப்பாளர் சபீர்பாட்டியா ((HOT MAIL) ஹாட் மெயில் – புகழ்) சமீபத்தில் சொன்னதைப்போல ஒரு கண்டு பிடிப்பை நிகழ்த்துவதைவிட அதை பதிவு செய்து உரிமம் பெருவதற்கு பலநூறு மடங்கு செலவு செய்யும் கொடுமை இந்தியாவைத்தவிர வேறு எங்குமே கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளுக்கு உதவித்தொகை வழங்குவதை குறைத்து, சாந்தி சொரூப பட்னாகர் விருது உட்பட முன்னூறு அறிவியல் விருதுகளையும் கிடப்பில் போட்டுவிட்ட மத்திய அரசு – கண்டுபிடிப்பு உரிமம் பெறும் படி நிலைகளில் சிக்கல்களை களைந்து எளிமை படுத்தியாவது உதவ வேண்டும். அதற்காவது நமது மேதகு ஜனாதிபதி அம்மையாரின் பெருமிதம் உதவ வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

– ஆயிஷா. இரா. நடராசன்

வீழ்ச்சியை நோக்கி வீறு நடை கட்டுரை – அ.பாக்கியம்

வீழ்ச்சியை நோக்கி வீறு நடை கட்டுரை – அ.பாக்கியம்




அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு கடந்த ஆண்டைவிட 19 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் போயல் கடந்த வாரம் ஏற்றுமதி அமைப்புகளுடன் நடத்திய கூட்டத்தில் இந்த சரிவை பற்றி விவாதித்தார்.

கடந்த வாரம் தொழில் துறை தொடர்பான கூட்டத்தில் பேசிய இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் முதலீட்டின் இலக்கும் வேலைவாய்ப்புக்கு உள்ள இடைவெளியை விளக்கினார். வேலை வாய்ப்பு உருவாக்கம் படுமோசமாக உள்ளது.

பொதுவாக முதலீட்டின் அளவு 107 சதவீதமாக இருந்தாலும் வேலை வாய்ப்பு 13 சதம் என்ற நிலையில் பரிதாபமாக உள்ளது.

மொபைல் போன் தயாரிப்பில் முதலீடு 38 சதவீதம் இலக்கை எட்டினாலும் அரசாங்கத்தின் இலக்குகளில் வெறும் 4 சதவீதம் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது

எலக்ட்ரானிக் துறையில் முதலீடு 4.89% உள்ளது இது மிக மிக குறைவானது தான் ஆனால் வேலைவாய்ப்பு அதைவிட மோசமாக 0.39 சதவீதமாக உள்ளது.

ஆட்டோ மொபைல்கள் ஆட்டோ பாகங்கள் ட்ரோன்கள் ட்ரோன் உதிரி பாகங்கள் மேம்பட்ட செல் பேட்டரி போன்றவற்றில் வேலை வாய்ப்பு 0 சதவீதமாக உள்ளது.

மொத்தத்தில் அக்டோபர் மாதம் ஏற்றுமதி வீழ்ச்சி முதலீட்டில் தேக்கம் வேலை வாய்ப்பு வீழ்ச்சி என்று மோடி அரசு வேறு நடை போடுகிறது.

– அ.பாக்கியம்

அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)

அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)




சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்:ச.வீரமணி)

இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம்.  இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.

காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)

மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘…சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், …’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது.

நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.

சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்

சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.

இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.

அக்டோபர் புரட்சியின் பாரம்பர்ய மாண்புகள்

அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பர்யத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு  இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய  நான்கு அம்சங்களை  அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.

(1)  தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார்.  மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்திட்டார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட  ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தினை உறுதியுடன் எதிர்த்திடாமல்  தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.

இன்றைய  ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது.  ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும்.

இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.

சரியற்ற மதிப்பீடுகள்: 20ஆம் நூற்றாண்டில் சோசலிம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ருஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று  அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும்,  இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.

முன்னூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது.   சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது.  முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது.  ஆனால் அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய – லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது  அவசியம் என்பதை உணர்ந்திட முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை.

சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.

சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர்  எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு  வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது. இது ஒரு பிழையான சிந்தனையாகும்.

அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம், அல்லது, மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் —  அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுபாட்டுக் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த  ஆட்சிப்பரப்பை மீளவும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.  அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற  நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும்.

உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில்  எய்தப்பட்ட வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து, குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.

துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.  இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும்.

இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.

சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்

சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்ற எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.

அரசின் வர்க்க குணம்

மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும்.  முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின்  சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணமாகும்.

எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது.  தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசில் சமர்ப்பித்தார்.  ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்தசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.  சோவியத் யூனியன், முதலாளித்துவ  நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும்,  மிகவும் விரிவானமுறையில்  1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின்  சமர்ப்பித்தார். இதற்கு “சித்தாந்தம் குறித்த கேள்விகள்” (“Questions of theory”) என்று தலைப்பிட்டிருந்தார்.  எனினும், இவ்வாறு  வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது. இதனை  மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச்  சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில்  தீர்மானிக்கப்பட வேண்டியதாகும்.

தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும்,  வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார். “முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக் கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளிவர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது.”

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு  ஐரோப்பிய சோசலிச நாடுகள்,  சோவியத் யூனியனில் இருந்தைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை.  இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.

சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப் பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.

எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு,  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட்  கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்கப்பின் கட்சித் தலைமையின்  சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த  பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில்  கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது  கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால்,  மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது.

அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை.  அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.  இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.

இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகிடாவாக மாறியது.  சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த  பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன.

இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப்  பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது,  அவசியமான  திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.

சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்:  சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவதான பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர்-விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது.  ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது.  தொழிலாளி – விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை எய்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள். உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது.  ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும்,  சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார்.

தோழர் லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட் தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம் எழுந்தது.   விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன்  காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தனர்.

எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர் ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார். அவ்வாறு சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் சோவியத் யூனியன் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது.  அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள்.  நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால் மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும்,  வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும்.  சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு, எவ்விதத் தொய்வுமின்றி அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.

ஆனால் “சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்”, செல்வாக்கு செலுத்தியதன் காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை,  கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன் காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.

தத்துவார்த்த உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of Ideological Consciousness):  அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை (collective ideological consciousness of the people) வலுப்படுத்தத் தவறியமையாகும்.  மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான் சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும். இதனை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாதி திரிபுக்கு (revisionist deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய ஆபத்தாக (casualty-ஆக) மாறியது.

இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத்  யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது.

இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு, மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின் அறிவியல் மேற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும்.  உலக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கபூர்வ அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக் கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.

நடப்பு முதலாளித்துவ நெருக்கடி – சோசலிச மாற்று

மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே வழி, சோசலிசம்தான்.  இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும் ஒரே மாற்று சோசலிசம்தான்.  2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும் ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மேலும் அதிகரித்திருக்கின்றன.  முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்க எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.

முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி எவ்வளவுதான்  உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான்  இருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும்,   இன்றையநிலையில் இவை அனைத்தும் தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன.  தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன் என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன.  இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பணியைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது. நமது கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடும், ஸ்தாபனத்தின் மீதான பிளீனமும் இந்தியாவின் நிலைமைகளில் அகக்காரணியை (கட்சியை) வலுப்படுத்தும் குறிக்கோளை எய்தக்கூடிய விதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய தினம் தன் நிலையை சர்வதேச அளவில் வலுவாக்கிக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மூன்று முக்கிய குறிக்கோள்களை எய்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

முதலாவதாக அது இப்போது மீதம் இருந்துவரும் சோசலிஸ்ட் நாடுகளைக் கலைத்திட விரும்புகிறது. இரண்டாவதாக,  அணிசேரா இயக்கத்தின்கீழ் முக்கியமாக இருந்த  மூன்றாம் உலக நாடுகளை வலுவிழக்கச்செய்வதன்மூலம் எதற்கும் இலாயக் கற்றவைகளாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக, உலகத்தின்மீது பொதுவாகவும், குறிப்பாகத் தனக்குப் போட்டியாக வருபவர்கள் யார் என்று கருதுகிறதோ அவர்களை அழித்து ஒழித்து, தன்னுடைய ராணுவ மற்றும் பொருளாதார மேன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்கிறது.

ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக வலுவானத் தத்துவார்த்த தாக்குதலால் வெற்றிபெற முடியவில்லை.  ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தை சுதந்திர சந்தையுடன் சமமாக்கப் பார்க்கிறது. இத்தகைய நிலைப்பாட்டுடன்,  தன்னுடைய மேலாதிக்கத்தையும் மற்றும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ‘சுதந்திர சந்தைகளை’த் திணிப்பதை எதிர்த்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தலையிடுகிறது.

ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகள்’ மற்றும் ‘மண்ணின் மாண்புகள்’ ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறோம் என்ற பெயரில் சுயேச்சையான இறையாண்மை நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகத் தலையிடுகிறது. இவ்வாறு ராணுவத் தலையீடுகளின் மூலமடாக அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவந்த முதலாளிவர்க்கம் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, தேசிய இறையாண்மையை மிகவும் புனிதமானதாக உயர்த்திப்பிடித்தது. இன்றையதினம், ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகளை’ப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாடுகளின் தேசிய இறையாண்மையை மறுதலித்து, ராணுவ ரீதியாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியம், வெறித்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கம்யூனிசத்தை, சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் சமப்படுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத்து சமப்படுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சட்டங்களை இயற்றி இருக்கிறது.  செக் குடியரசு, போலந்து போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கம்யூனிச அடையாளங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமாகத் தடை விதித்திருக்கின்றன.

கடந்த இருபதாண்டுகளில் இந்தப் போக்குகள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர் மார்க்சியத்தை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் மார்க்சியத்தைப் பல்வேறுவிதமாக திரித்திடும் சித்தாந்தங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டன. இவற்றின்மூலம் மக்களைக் குழப்பிடும் பணி வெகுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

பின்-நவீனத்துவம் (Post-Modernism): ஏகாதிபத்தியமும், உலக நிதி மூலதனமும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பு சித்தாந்தங்களை உருவாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் அனைத்து முற்போக்கு சித்தாந்தங்களையும் மறுதலித்திட முனைகின்றன.  வர்க்கப் போராட்டம் மறைந்துவிட்டது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பங்களிப்பு மறுதலிக்கப்பட்டுவிட்டது போன்ற சிந்தனைகள் முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள சித்தாந்தம்தான், பின்-நவீனத்துவம் என்பதாகும்.

பின்-நவீனத்துவம் என்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் வெற்றிபெற்று, சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உருவான முதலாளித்துவ தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும்.  இத்தத்துவமானது மார்க்சியம் உட்பட எந்தவொரு தத்துவமோ, அரசியலோ உலகளாவிய அளவில் இருந்திடமுடியாது என்று நிராகரிக்கிறது.  பின்-நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையோ அல்லது சோசலிசத்தையோ ஒரு கட்டமைப்பு (a structure) அல்லது ஒரு முறை (a system) என்கிற விதத்தில் அங்கீகரித்திடவில்லை. இவ்வாறு, இது, உலக நிதி மூலதனத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமாகும். ஏனெனில் இது வர்க்கங்கள் இருப்பதை மறுதலிக்கிறது. எனவே, வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பனவற்றையும் மறுதலிக்கிறது. மேலும் இது, அடையாள அரசியலை உந்தித்தள்ளுவதற்கும், மக்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமுமாகும்.

கலாச்சாரா மேலாதிக்கம் (Cultural Hegemony): இந்தக் கால கட்டத்தில் ஏகாதிபத்தியமும், நவீன தாராளமயமும்  தங்களுடைய கலாச்சார மேலாதிக்கத்தை வலுவாக நிறுவியுள்ளன.  இவை மக்களைத் தங்களுடைய தகவல் (Information), தொடர்பு (Communication) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) என்கிற மூன்று ஐசிஇ (ICE) ஆகியவற்றைத் தங்களுடைய மெகா கார்ப்பரேஷன்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்வதில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கின்றன.  தங்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மூலமாக செய்திகளைத் திரித்துக்கூறுதல் என்பதும், மக்களிடம் கூறப்படும் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதும் இவற்றின்  ஏகபோகமாக மாறியிருக்கின்றன.  கலாச்சாரத்தை வணிகமயமாக்குவது உலகமயத்தின் ஒரு பகுதியாகும்.

வர்க்க மேலாதிக்கத்தின் காரணமாக, உலகமயக் கலாச்சாரம் மக்களை தங்களுடைய எதார்த்தமான  வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கத்தரித்துவிட முயல்கிறது. இவர்களின் கலாச்சாரம் என்பது அழகியலை மேம்படச் செய்வதற்கானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை மற்றும் ஏழ்மை  ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்கானதாகும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தன் ஆளுகையை அதிகரித்துக் கொள்வதற்கும், மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.

பின்-உண்மை (Post-Truth): மார்க்சியத்திற்கும், சோசலிசத்திற்கும் எதிராக, முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்தான், பின்-உண்மை (Post-Truth) என்பதாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய 2016ஆம் ஆண்டின்  அகராதியில் ‘இந்த ஆண்டின் புதிய வார்த்தை’ என இதனைக் குறிப்பிட்டு, இதன் பொருளை வரையறுக்கும்போது, உணர்ச்சிக்கும் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் எழுப்பப்படும் வேண்டுகோள் அளவிற்கு  மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தாத சொற்றொடர் என்று கூறுகிறது.

டொனால்டு டரம்ப் மற்றம் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். ஈராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றம் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதிலிருந்து இதனை நோம்  அறிந்துகொள்ள முடியும்.  மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றம் முஸ்லீம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும்.

பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், “ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி  அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்,” என்று கூறிவந்தான் அல்லவா?  அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும்  முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிதுருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல.

இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல.

மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம்  அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, “துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்” அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும்.  மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்.

இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும்  சீர்குலைக்கும் விதத்தில்,  நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.

இந்திய நிலைமைகளில் சோசலிசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை,  இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் கெட்டிப்படுத்திட முடியும்.

எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?

அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு,  அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.

அதன் பொருள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.

அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது. சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும்.

அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப்படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல்  அடிப்படையில் அமைந்திடும்.  சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையை தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு(collective) மேற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.

அக்டோபர் புரட்சி : உலகத்தை மாற்ற முடியும்

மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: “தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்.”  அக்டோபர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும்.  பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் புரட்சி மற்றம் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட அக்டோபர்புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்துவரும்.  அக்டோபர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.

(கேரள மாநிலம், திருச்சூரில், 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது  அவர் கூறியதிலிருந்து சில அம்சங்கள்.)

லூலா வெற்றியின் முக்கியத்துவம் கட்டுரை – தமிழில் ச.வீரமணி

லூலா வெற்றியின் முக்கியத்துவம் கட்டுரை – தமிழில் ச.வீரமணி




பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் லூயிஸ் இனாசியா லூலா (Luiz Inacio ‘Lula’ da Silva) வெற்றி பெற்றிருப்பது, உலகம் முழுவதும் ஒருவிதமான நிவாரணப் பெருமூச்சுடன் வரவேற்கப்பட்டிருக்கிறது. அதிதீவிர வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோ (Jair Bolsonaro)வைத் தோற்கடித்து பிரேசில் ஜனாதிபதியாக அவர் வென்றிருப்பது, பிரேசிலின் எதிர்காலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2022 அக்டோபர் 30 அன்று நடைபெற்ற தேர்தலில், லூலா, (PT) எனப்படும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற போல்சனாரோவிற்கு 49.1 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. 1980களில் ஜனநாயகம் மீளவும் புதுப்பித்து சீரமைக்கப்பட்ட பின்னர் இப்போது நடந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே 21,25,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பதவியிலிருந்த ஒரு ஜனாதிபதி தேர்தலில் தோற்பது என்பதும் இதுவே முதல் தடவையாகும்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதே லூலா எளிதாக வெற்றிபெற்றுவிடுவார் என்று தேர்தல் கணிப்பாளர்கள் பலர் முன்கூட்டியே ஊகித்திருந்தார்கள். அதேபோன்றே பல்வேறு ஆய்வுகளும், போல்சனாரோவைவிட லூலா இரண்டு இலக்க புள்ளிகள் முன்னணியில் இருப்பார் என்று காட்டின. எனினும், இக்கணிப்புகள் அனைத்தும் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற முதல் சுற்று முடிவின்போது தவறு என்று மெய்ப்பிக்கப்பட்டன. செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையில் போல்சானாரோ 43.20 விழுக்காடு வாக்குகளே பெற்றிருந்த அதே சமயத்தில், லூலா 48.43 விழுக்காடு பெற்று வென்றார். வெற்றி பெறும் வேட்பாளர் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் தோல்வியடைந்ததால், இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் லூலா 50.9வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

லூலா 2003க்கும் 2010க்கும் இடையே இரு தடவை பிரேசில் ஜனாதிபதியாக இருந்தார். இது அவருக்கு மூன்றாவது தடவை. இந்தத் தடவை அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனெனில் இந்தக் காலகட்டத்தில் பிரேசில் கணிசமான அளவிற்கு மாறியிருக்கிறது.

லூலா முதல் தடவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பண்டங்கள் சந்தையில் ஓர் ஏற்றம் இருந்தது. இதன் காரணமாகத் தொழிலாளர் கட்சி அரசாங்கம் சமூக நலத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்து, பல லட்சக்கணக்கான பிரேசில் மக்களை, வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்டது. 2014 இறுதிக்குள், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலாவும் அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின்னே வந்த டில்மா ரூசூஃப் (Dilma Rousseff)-உம் சேர்ந்து பிரேசில் பசி-பட்டினிக் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பிரகடனம் செய்தனர்.

இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. உணவு மற்றும் சத்துணவு இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீதான பிரேசிலியன் ஆய்வு வலைப்பின்னல் (Brazilian Research Network on Food and Nutritional Sovereignty and Security) ஒன்றின்படி, 3 கோடியே 31 லட்சம் மக்கள் தற்போது பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள், இது சென்ற ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும் என்றும் தெரிவிக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் பிரேசிலில் சுமார் 7 லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள். இதற்கு ஆட்சிபுரிந்த போல்சனாரோவின் நிர்வாகச் சீர்கேடே காரணமாகும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற கூற்றையே போல்சனாரோ ஏற்க மறுத்தார். அதனால் அது பரவுவதைப்பற்றி அவர் கிஞ்சிற்றும் கவலைப்படாது இருந்தார். இதனால் நாட்டில் சுகாதார நெருக்கடியைக் கையாள முடியாத நிலை இயற்கையாகவே ஏற்பட்டது. அறிவியலை மறுத்த போக்கும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக சுகாதாரச் செலவினங்களில் வெட்டை ஏற்படுத்தியதும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை அதிகரித்தது. அந்த சமயத்தில் தடுப்பூசிகள் உற்பத்தியிலும், அவற்றை விநியோகிப்பதிலும் நடைபெற்ற ஊழல்கள், அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற குணத்தைத் தோலுரித்துக் காட்டின.

போல்சனாரோ பகுத்தறிவற்ற, அறிவியலற்ற நபர் மட்டுமல்ல, புவி வெப்பமயமாதலை மறுக்கின்ற நபராகவும் இருந்தார். இந்தப் பார்வைகளும் இதனுடன் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடும் பிரேசிலின் பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்த இட்டுச் சென்றன, மழை பெய்துவந்த அமேசான் காடுகள் பெரிய அளவில் எரியத் தொடங்கின. நடைபெறும் ஆபத்தை சூழலியல்வாதிகளும் (environmentalists), பசுமை செயற்பாட்டாளர்களும் (green activisits) விரிவான அளவில் எடுத்துச் சொல்லி இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தபோதிலும், இந்த நபர் அவற்றை யெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்த நிலங்கள் பெரும் வேளாண்-வர்த்தகக் கார்ப்பரேஷன்களுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும் விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டிருக்கின்றன.

அரசியல் அரங்கில், போல்சனாரோ ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை ஏவினார். பிரேசிலில் முன்பிருந்தவந்த ராணுவ மற்றும் எதேச்சாதிகார ஆட்சிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவினைத் தெரிவித்தார். தன்னுடைய பாசிஸ்ட் ஆதரவு கொள்கைகளை வெட்கமேதுமின்றி வெளிப்படையாகவே பறைசாற்றத் தொடங்கினார், தொழிற்சங்கங்களையும், பூர்வகுடி மக்களையும், பெண்களையும், பெரும்பான்மை இன மக்களிடமிருந்து வித்தியாசமான பாலியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்திடும் சிறுபான்மையினரையும் (sexual minorities) கடுமையாகத் தாக்கினார். கம்யூனிச விரோத, இடதுசாரிகள் விரோத சிந்தனைகளைக் கொண்டாடினார்.

இவருடைய அறிவியலற்ற, பகுத்தறிவற்ற, சிறுபான்மையினருக்கு எதிரான, கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடுகளின் காரணமாக இவர் சுவிசேஷ கிறித்தவர்களின் ஆதரவினைப் பெற்றிருந்தார். இவர்கள்தான் இவருடைய முக்கியமான ஆதரவு தளமாகும். பிரேசிலியன் அரசியலிலும் சமூகத்திலும் வலுவான பிற்போக்கு சக்தியாக விளங்கும் சுவிசேஷ கிறித்தவ போதகர்கள், போல்சனாரோவிற்குப் பின்னர் அணிதிரண்டிருந்தனர், அவருடைய அறநெறி நிலைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்தனர். இத்தகைய மதஞ்சார்ந்த வலதுசாரிகள் இடதுசாரிகளுக்கு எதிராகத் தீவிரமாக போதனைகள் செய்து வந்தார்கள். ‘லூலா ஆட்சிக்கு வந்தால் தேவாலயங்களையெல்லாம் மூடிவிடுவார்’ என்று கூறி வந்தார்கள். இந்தவகையில்தான் போல்சனாரோ வலதுசாரி சிந்தனாவாதிகளை அணிதிரட்டினார். அதன்மூலம் சமூகப் பிரிவுகளை ஆழமானமுறையில் ஏற்படுத்தி வந்தார்.

போல்சனாரோவின் ஆதரவுத் தளமாக சுவிசேஷ கிறித்தவர்கள் இருப்பதோடு அல்லாமல், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்திடும் உயர் வர்க்கத்தினர், வர்த்தகப் புள்ளிகள் மற்றும் பெரு முதலாளிகள் வர்க்கத்தினரும் அவரை ஆதரித்து வந்தார்கள். வேளாண கார்ப்பரேஷன்கள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களும் இவருடன் இருந்தனர். இவ்வாறு போல்சனாரோவின் பின்னால் அனைத்துத் தீவிரவாத வலதுசாரிகளும் அணிவகுத்திருந்தனர். இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ஆதரவு போல்சனாரோவிற்கு இருந்ததன் காரணமாகத்தான் இவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் இவருக்கு ஆதரவாக இருந்தன. இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு, பொய் மூட்டைகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பினர்.

இதற்கு நேரெதிராக, லூலாவிற்கோ சமூகத்தின் வறிய பிரிவினர் முழுமையாக ஆதரவு அளித்தனர். இவ்வாறு ஏழை மக்கள் முழுமையாக லூலாவுடன் இருப்பதால் பயந்துபோன போல்சனாரோ, குறைந்த வருமானம் ஈட்டும் குடிமக்களுக்கு நேரடியாக பணம் அளிக்கும் ஒரு சமூக நலத் திட்டத்தை ஆக்சிலியோ பிரேசில் (Auxilio Brasil) என்ற பெயரில் கொண்டுவந்து அவர்களை வென்றெடுத்திட முயற்சித்தார். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் போல்சனாரோவின் அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்து, அனைத்துத்தரப்பினராலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஒரு குறுகியகாலத் திட்டமாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்தத் திட்டமானது மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று ஏழை மக்கள் மத்தியில் இருந்த லூலாவின் ஆதரவு தளத்தில் சற்றே சரிவை ஏற்படுத்தியதால், போல்சனாரோ இத்திட்டத்தைத் தொடர்ந்தார்.

இவ்வாறான அனைத்து முயற்சிகளின் விளைவாகவும், போல்சனாரோ லூலாவிற்கு கடும் போட்டியை இப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அளித்தார். மேலும் போல்சனாரோ வலதுசாரி சக்திகள் மற்றும் மத்தியக் கட்சிகளின் (centre parties) ஆதரவுடன் நாடாளுமன்றத்திலும் (Congress), ஆளுநர்களுக்கான தேர்தல்களிலும் (governorships) மற்றும் பிராந்திய அளவிலான சட்டமன்றங்களிலும் (regional assemblies) (இவை அனைத்துக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலுடன், முதல் சுற்றுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.) பெரும்பான்மை பெறவும் இட்டுச் சென்றது. போல்சனாரோ மொத்தம் உள்ள 27 மாநிலங்களில் 14இல் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் (Congress) வலதுசாரிக் கட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை (மொத்தம் உள்ள 513 இடங்களில்) 249 இடங்களை (இது பாதிக்குச் சற்றே குறைவு) அதிகரித்துக்கொண்டுள்ளன. லூலாவின் தொழிலாளர் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 141 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இவ்வாறு வலதுசாரிகள் பிரதிநிதித்துவம் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் வலுவாக உள்ளதால் லூலா தன் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதை சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றன. இவர் ஆட்சி புரியும் காலத்தில் இவர்களுடன் சில சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.

லூலா வெற்றி பெறுவதற்காக ஏற்கனவே சில சமரசங்களைச் செய்துகொண்டிருக்கிறார். இவர் தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும்போது சுவிசேஷங்களில் உள்ள போதனைகளிலிருந்தும், கடவுள் குறித்தும் சுவிசேஷ கிறித்துவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் சில வேண்டுகோள்களை விடுக்க முயற்சித்தார். இவருடைய துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர், ஜெரால்டோ அல்க்மின் (Geraldo Alckmin), இவருடைய முன்னாள் போட்டியாளர் மற்றும் மத்தியக் கட்சியின் (Centre Party) தலைவர். லூலாவின் கூட்டணி, கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், தாராள-முதலாளிகள் (liberal-bourgeois) என அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், வலதுசாரிகள் வளர்ச்சியை முறியடிப்போம், அமேசான் காடுகளைப் பாதுகாப்போம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்கிற ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்துள்ளனர்.

லூலாவின் வெற்றி பிரேசில் முழுவதும் உள்ள ஏழை மக்களால், ‘சுதந்திரமும் ஜனநாயகமும் மீளவும் கிடைத்துவிட்டது’ என்கிற உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரே, இந்த வெற்றியை ஜனநாயக இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறார். அவர், வறுமை, பசி-பட்டினிக் கொடுமை, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல் மற்றும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து அதனைப் பாதுகாத்தல் ஆகிய பிரச்சனைகள் உடனடியாக கவனம் செலுத்தப்படும் என்று உறுதிமொழியை அளித்திருக்கிறார்.

லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரித் தலைவர்களின் ஆட்சி அதிகரித்துக் கொண்டிருப்பது, உலகத் தலைவர்களை ஜனாதிபதி லூலாவை வாழ்த்துவதற்கு இட்டுச் சென்றுள்ளன. இவருடைய வெற்றி நிச்சயமாக ‘பிரிக்ஸ்’ (‘BRICS’), (இதில் இந்தியாவும் ஓர் அங்கம்) மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள ‘செலாக்’ (CELAC) போன்ற பன்னாட்டுக்குழுக்களுக்கும் புதியதொரு நம்பிக்கையைக் கொண்டுவரும்.

இப்போது நடைபெற்ற தேர்தல்களில் போல்சனாரோ தோற்கடிக்கப்பட்டபோதிலும், அவர் பெற்றுள்ள வாக்குகளிலிருந்து சாமானிய மக்கள் மத்தியில் வலதுசாரி சித்தாந்தம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. லூலா நிர்வாகம், தான் அளித்திட்ட தேர்தல் உறுதிமொழிகளை அமல்படுத்தத் தவறினால், ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தவறினால், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கத் தவறினால், பசி-பட்டினிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், வலதுசாரிகள் மீளவும் தலைதூக்குவதற்கு இருக்கின்ற அச்சுறுத்தலைத் தடுக்க முடியாது.

(நவம்பர் 2, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

“யாரையும் விட்டு விடாதீர்கள்.” கட்டுரை – அ.பாக்கியம்

“யாரையும் விட்டு விடாதீர்கள்.” கட்டுரை – அ.பாக்கியம்



Yaraiyum Vittu Vidathirkal Artikal By A Bakkiam "யாரையும் விட்டு விடாதீர்கள்." கட்டுரை - அ.பாக்கியம்

இந்த வருடம் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் சபை உலக நாடுகளுக்கு அறிவித்த கருப்பொருள்தான் “யாரையும் விட்டு விடாதீர்கள்”.

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் முயற்சியில் உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய், சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கிற மோதல்கள், தீவிர வானிலை மாற்றம், போன்ற காரணிகள் உலகின் உணவு பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

ஐநா சபை அறிக்கையின்படி உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2021-ல் 828 மில்லியனாக உயர்ந்து உள்ளது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 10% ஆகும்.

உலகப் பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும் 2030-ம் வருடம் மேலும் 670 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடத்தின் கருப்பொருளாக “யாரையும் விட்டு விடாதீர்கள்” என்பதை தேர்வு செய்துள்ளது.

உலகின் உழைப்பாளி மக்களை சூறையாடி பெறும் நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் மோடி, பைடன், சுனாக் போன்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட போவதில்லை.

மக்கள் சீனம் உணவு பாதுகாப்பை முக்கிய கொள்கையாக ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை ஆதரித்து எதிர்வினை ஆற்றியுள்ளது.

உணவு பாதுகாப்பு என்பது எல்லா மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் போதுமான பாதுகாப்பான சத்தான உணவுகள் கிடைப்பதற்கான சமூக மற்றும் பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். அது மக்களின் உணவு விருப்பங்களையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் சீனம் உணவு பாதுகாப்பு பற்றி தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு 25 சதவீதம் தானியங்களை சார்ந்தே இருக்கிறது. உணவு பாதுகாப்பில் தானியங்கள் முக்கிய பங்கு வைக்கிறது.

சீனாவின் தானிய உற்பத்தி 2015 ஆம் ஆண்டு 650 மில்லியன் டன் களிலிருந்து 682. 85 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

சீனாவில் 140 கோடி மக்களும் ஒரு வருடம் முழுவதும் உண்ணக்கூடிய அளவிற்கு அரிசி மற்றும் கோதுமைகளை இருப்பு வைத்துள்ளது.

சீனா உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர். மூன்றாவது மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர். சோயா சோளம் மற்றும் பயிர் விதைகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு.

சீனா மக்களின் உணவு பாதுகாப்பை பற்றிய அதிக கவலை கொண்டுள்ளது எனவே உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பை விரிவாக்கம் செய்கிறது இயந்திர மயமாக்கலை மேம்படுத்தி வளர்ச்சியில் கூடுதல் முதலீடுகளை செய்கிறது. உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய நாடாக சீனா இருக்கிறது.

அதே நேரத்தில் சீனா உலக மக்களின் பசியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. இதற்கான உறுதியை அளித்துள்ளது. உணவு விநியோகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இணைந்து தெற்கு தெற்கு ஒத்துழைப்பு என்ற அறக்கட்டளை நிதியை நிறுவி நிதி உதவி செய்து வருகிறது.

சீனா மலரும் நாடுகளில் 25 விவசாய திட்டங்களை தொடங்கியுள்ளது அந்த திட்டப் பகுதிகளில் பயிர்களின் விளைச்சலை 30 முதல் 60% வரை உயர்த்தி உலக அளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது.

உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழில்நுட்பங்களை ஊக்கிவிக்கும் உதவிகளை செய்துள்ளது.
140 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் விவசாய பரிமாற்றங்களை நடத்தி வருகிறது.

சீனாவின் விவசாய வல்லுநர்கள் பல்வேறு நாடுகளின் துறைகளில் செயல்பட்டு உள்ளூர் விவசாயிகளின் சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவி வருகிறார்கள்.

சீன நாட்டின் விவசாயத் துறை கண்டுபிடித்த கலப்பின அரிசி அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் 8 மில்லியன் ஹெடேர்களில் வளர்ந்து வருகிறது. சராசரி வருட மகசூல் உள்ளூர் அரிசியைவிட ஹெக்டேருக்கு 2 டன்கள் அதிகமாக மகசூல் செய்யப்படுகிறது.

வளரும் நாடுகளுக்கு 30 ஆயிரம் கண்களுக்கு அதிகமான அளவில் தானியங்களை அவசர மனிதாபிமான உதவியாக சீனா வழங்கியுள்ளது.

உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பையும் உலக மக்களின் பசியை போக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் முயற்சிகள் வெல்லட்டும்.

– அ.பாக்கியம்

2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு – எஸ்.விஜயன்

2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு – எஸ்.விஜயன்




ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் அறிவிக்கப்படும் ஆறு நோபல் பரிசுகளில் இயற்கை விஞ்ஞானத்திற்கான மூன்று நோபல் பரிசுகள் பற்றி சர்ச்சைகள் தோன்றியதில்லை. இயற்கை விஞ்ஞானம் என்று நான் கூறுவது இயற்பியல், வேதியல், மருத்துவம் அல்லது உடற்கூறியல் ஆகும். ஏனென்றால் இயற்கை விஞ்ஞானத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்களின் பங்களிப்பு என்பது சக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டு அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடம் பதித்த ஆய்வுகளாகும். மற்ற மூன்று நோபல் பரிசுகள் சமூக விஞ்ஞானத்திற்கானது. அவை இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகியவையே. இவற்றில் சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. இவையாவும் அரசியல் கலப்படமற்றது என்று கூறமுடியாது. குறிப்பாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 1969லிருந்துதான் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பரிசானது ஆல்பிரட் நோபல் உயிலில் கூறியபடி ஏற்படுத்தப்பட்டதல்ல அவருடைய உயில் படி ஐந்து நோபல் பரிசுகளே வழங்கப்பட்டு வந்தன. பொருளாதாரத்திற்கான பரிசு பொருளாதார விஞ்ஞானத்திற்கான நோபல் நினைவுப்பரிசு என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பென் பெர்னன்க், டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டைவிக் ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி காலங்களில் ஏற்படும் வங்கிகள் திவாலாக்கள் நெருக்கடியை நீண்டகாலத்திற்கு இட்டுச் செல்லும் என்று கண்டறிந்ததே இவர்களின் பங்களிப்பு.

இதுவரை வழங்கப்பட்ட 53 பரிசுகளில் அனைத்தும் அறிவியல் பூர்வமற்றது என்று கூறமாட்டேன். அம்ரித்யாசென், ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ், லியோன்டியஃப் போன்றவர்களின் பணி அற்புதமானது. இன்னொரு பக்கம் அறிவியலுக்குப் புறம்பான கட்டுரைகளுக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊகவணிக அம்சங்களை கொண்ட பொருளாதார நடவடிக்கைகளின் மீதான ஆய்வுகளை நான் அறிவியலுக்குப் புறம்பானது என்கிறேன். பொருளாதார ஆய்வுகளை அறிவியல் பூர்மான ஆய்வுகளாக முன்னெடுத்துச் சென்றதில் முதன்மை பங்கு வகித்தவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்லாந்து அறிஞர் ஆதாம்ஸ்மித். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிவியல் ஆய்வுமுறை பாரம்பரியம் டேவிட் ரிக்கார்டோவுடன் நின்றுபோய்விட்டது. அதிலிருந்து அறிவியல் ஆய்வுமுறைக்கும் அறிவியல் அல்லாத ஆய்வுமுறைக்குமான போராட்டம் பொருளாதார அரங்கில் நடந்து வருகிறது.

பொருளாதாரம் என்பது சமூக உற்பத்தியுடனும் செல்வ உற்பத்தியுடனும் தொடர்புடையது. பெருவீத உற்பத்தி என்பது சமீபகாலத்தியது. பெருவீத உற்பத்தி இல்லாமல் சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் கிடையாது. சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல் சிக்கல்களை அடையாளம் காணும் ஆய்வுகளும் இல்லை. எனவேதான் நாம் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பொருளியல் அறிஞர்கள் பற்றி கேள்விப்பட்டது கூட கிடையாது. இந்தியாவில் பண்டைகாலத்தில் விமானம் தயாரிக்கப்பட்டது பிளாஸ்டிக்சர்ஜரி நடத்தப்பட்டது என்று கூறிக் கொண்டு விமான்சாஸ்த்ரா, பிளாஸ்டிக்சாஸ்த்ரா என்று என்று சமஸ்கிருத இலக்கியங்களைக் கூறுபவர்கள் கூட ஸம்பத்சாஸ்த்ரா அல்லது ஸம்பத்சூத்ரா என்ற இட்டுக்கட்டிய சமஸ்கிருத ஸ்லோகங்களை இதுவரை கூறமுடிவதில்லை.

தற்போது நாம் காணும் சிக்கலான பொருளாதார அமைப்பில் ஒவ்வொரு மனிதர்களும் பங்களிப்பாளர்களாகவும் பங்கெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவரையொருவர் சார்ந்த உற்பத்திமுறை நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொருவரும் அவரவர் உழைப்புச்சக்தியை மதிப்புடைய நுகர்வுப்பொருளாகவோ சேவையாகவோ பொதுச்செல்வத்திற்கு மாற்றிவிட்டு தனக்கு வேண்டிய நுகர்வுப்பொருளையும் சேவையையும் பொதுச்செல்வத்திலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். இது ஆதாம் ஸ்மித்தின் கருத்து. இதற்குள் உள்ள சிக்கல்களை கையாள்வதே பொருளாதாரம். ஒவ்வொருவரின் உழைப்புச்சக்தியை பொதுச்செல்வமாக மாற்றுவது பொதுச்செல்வத்திலிருந்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்வது ஆகியவற்றிற்கான நடைமுறைகள் காலப்போக்கில் தாவிப்பாய்ச்சல் முன்னேற்றத்தில் நடந்துவருகிறது. இதில் தனிநபர்களின் பாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர்களே காலப்போக்கில் செல்வாக்கு உடையவர்களாகவும் சமூகத்தின் திசைவழியை தீர்மானிப்பவர்களாகவும் மாறுகின்றனர். எனவே தனிநபர்களின் நலன்களை புறக்கணித்து சிக்கல்களை தூயவடிவில் ஆய்வு செய்ய முடியாது. இயற்கை விஞ்ஞானத்திற்கு இப்பிரச்சனை கிடையாது. அது இயற்கை விதிகளை ஆய்வு செய்கிறது. இயற்கை விதிகள் என்பவை மனிதர்களுக்கோ தனிநபர்களுக்கோ அப்பாற்பட்டு சுயமாக இயங்குவது. பொருளாதாரம் அப்படிப்பட்டதல்ல. எனவே இதில் அறிவியல்முறை அறிவியல் அல்லாதமுறை என்று கோடுகிழிப்பது சிரமமாக உள்ளது.

தற்போதைய உற்பத்தியமைப்பில் பணம் சரக்காக உருவெடுத்து, சரக்கு திறனுடைய உற்பத்திமுறைக்குள் சென்று மற்றொரு மதிப்பு கூட்டப்பட்ட பயனுள்ள சரக்காக மாறி மீண்டும் பணவடிவம் எடுக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் இந்த சுற்றோட்டம் தங்குதடையின்றி நடைபெறும்வரை பொருளாதாரச் சிக்கல்கள் என்பது கிடையாது. இவற்றில் பணம் என்பது உற்பத்தி நடவடிக்கையில் இறங்காமல் சுயேட்சையாக மதிப்புக்கூட்டல் நடவடிக்கையில் இறங்கினால் அது ஊகவணிகத்திற்கு இட்டுச் செல்லும் என்ற முடிவுக்கு பொருளாதாரப் போக்குகளை ஆய்வுசெய்த இருபதாம் நூற்றாண்டு அறிஞர்களில் குறிப்பிட்ட சிலர் வந்தனர். மொத்த பொருளாதார இயக்கத்தை இது சீரழித்துவிடும் என்ற முடிவுக்கும் வந்தனர். அத்துடன் மதிப்புக் கூட்டல் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டாலும் சுற்றோட்ட நடவடிக்கைகளே மதிப்புக்கூட்டல் நடைபெறுவதை உத்தரவாதம் செய்கிறது என்றும் சுற்றோட்ட நடவடிக்கைகளில் பணவடிவத்தை சற்று எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் கூறிவந்தனர். எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு என்பதே ஜான் மேனார்டு கீன்ஸ் போன்றவர்களின் வாதம். அரசு அல்லது சமூகத் தலையீடு இல்லாத தூய நடவடிக்கைகளாகவே பொருளாதார நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதற்குள்ளேயே சிக்கல்களை சரிசெய்யும் ஏற்பாடு இருக்கிறது என்று கூறுபவர்கள் சுதந்திர சந்தைவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஒருபுறம் இந்த இரண்டு முகாம்களும் மோதிக்கொண்டிருக்க, பொருளாதார நெருக்கடிகள் காலவட்டத்தில் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது.

நெருக்கடிகளுக்கு காரணம் என்ன அதை எப்படிக் களைவது என்று நடைபெற்ற ஆய்வுகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. நெருக்கடி காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவது பலவீனமானவர்களும் சிறுகுறு தொழில்களுமே. இவர்களின் எண்ணிக்கை ஆகப்பெரும்பான்மையானது. காலவட்ட நெருக்கடிக்கு தீர்வு கிடையாது என்று முடிவுக்கு பொருளாதார அறிஞர்கள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது. அதனால்தான் நெருக்கடிக்குள் உள்ள ஒருசில புள்ளிகளை ஆய்வு செய்வது அதைக் களைந்து நெருக்கடியின் தாக்கத்தை குறைக்கலாம் என்ற ஆய்வுகள் பெருகிவிட்டன. அதில் ஒன்றுதான் இந்தாண்டு நோபல் பரிசுபெற்ற ஆய்வு.

ஒரு பலூனை நாம் ஊதிக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் அது வெடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வெடித்த பலூனின் கிழிந்த பகுதியை ஆய்வுசெய்து இந்த இடத்தில் ஏன் கிழிந்தது என்ற ஆய்வை நடத்துவது போன்றதே இதுவும். இந்த இடத்தில் இனி கிழியாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதே அந்த ஆய்வு கொடுக்கும் தீர்வு. ஆனால் ஊதிக்கொண்டே போகும் பலூன் இன்னொரு இடத்தில் வெடிப்பதை இந்த ஆய்வின் முடிவு தடுக்க முடியாது. யாரும் பலூன் வெடிப்பதற்கு ஒட்டுமொத்த காரணமான அதன் அழுத்தம் ஏன் கூடுகிறது அதை எப்படித் தடுப்பது என்ற ஆய்வுக்குள் செல்வதில்லை.

திரும்பத் திரும்ப நிகழும் உற்பத்தி நடவடிக்கைகள், அவற்றை உத்தரவாதம் செய்யும் சுற்றோட்ட நடவடிக்கைள் ஆகிய இரண்டும் செல்வ உற்பத்தியின் அங்கங்களாகும். சுற்றோட்ட நடவடிக்கைகளில் முக்கியமானது உற்பத்திசெய்யப்பட்ட சரக்கு பணமாக மாறி அது மீண்டும் உற்பத்திக்கான அடிக்கூறுகளாக விளங்கும் சரக்குகளாக மாறவேண்டும். இந்த இடத்தில்தான் பணத்தின் பங்கு முக்கியமானது. உற்பத்திக்கான அடிக்கூறுகளுக்கான பணம் இல்லையேல் உற்பத்தி இல்லை (உற்பத்தி என்பதை நான் இங்கே பொருளுற்பத்தி மற்றும் சேவை இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்). பணத்தைக் கையாள்வது வங்கிகளாகும். நெருக்கடிகளில் வங்கிகள் திவலானால் பணம் சுற்றோட்டத்திலிருந்து விலகும், உற்பத்தி நிகழ் முறை நின்றுபோகும். எனவே வங்கிகள் பொருளாதாரத்தைப் பற்றிய சித்திரத்தை வழங்கும் ஒரு கேந்திரமான புள்ளி எனலாம் (Vantage Point). 2022ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற டக்ளஸ் டையமண்ட், பிலிப் டைவிக் ஆகியோர் வங்கிகள் திவாலாகும் போக்கை ஆய்வு செய்து அதற்கான ஒரு புள்ளியில் மாதிரியை உருவாக்கினார்கள். இந்த புள்ளியல் மாதிரிக்கு டையமண்ட்-டைவிக் புள்ளியல் மாதிரி என்று பெயரிடப்படு அழைக்கப்படுகிறது. அந்த புள்ளியில் மாதிரியை 1930-40களில் நடைபெற்ற பெரும் பின்னடைவு (Great Depression) காலத்தில் நிகழ்ந்த வங்கி திவாலாக்களுக்குப் பொருத்தி டையமண்ட்-டைவிக் புள்ளியல்மாதிரி செல்லுபடியாகத்தக்கது என்று பென் பெர்னன்க் நிறுவினர். இதுவே இவர்களின் பங்களிப்பாக கருதி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் இவர்களின் புள்ளியில்மாதிரி வழியாக 1930களில் நிகழ்ந்தவை சாதாரண பொருளாதாரத் தேக்கம் நீண்டகால பெரும் பின்னடைவாக மாறியது என்பதே இவர்கள் கண்டறிந்தது. இந்த முடிவு பல்வேறு கேள்விகளுக்கு உட்பட்டது. 1930களிள் பெரும் பின்னடைவு பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வந்துவிட்டன.

பொருளாதார காலவட்டம் என்பது பெரு வளர்ச்சி (Boom) – மட்டுப்படல் (Slow down) – தேக்கம் (Stagnation) – பின்னடைவு (Recession) – பெரும் பின்னடைவு (Depression) – மீட்பு (Recovery) – பெருவளர்ச்சி (Boom) என்று பொதுவாக வகைப்படுத்துகிறார்கள். இந்த காலவட்ட சுழற்சியில் அரசு தலையீடு மூலம் தேக்கத்திலிருந்து மீட்புக் கொண்டுவர முடியும். தேக்கத்திலிருந்து பின்னடைவுக்குள் சென்றால் அதை நெருக்கடி கட்டம் என்கிறார்கள். பெரும் பின்னடைவு ஏற்பட்டால் அது கடும் நெருக்கடியாகும். 1930களில் ஏற்பட்டது பெரும் பின்னடைவாகும். 2008ல் ஏற்பட்டதை பெரும் பின்னடைவு என்று கூறத் தயங்குகிறார்கள். அதை உயரிய பின்னடைவு (Great Recession) என்றழைக்கிறார்கள். ஆனால் இதன் தாக்கம் பெரும் பின்னடைவைவிட அதிகம். கடந்த காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட செல்வமானது இதன் தாக்கத்தை குறைந்தால்தான் 1930கள் அளவிற்கு இது வெடிக்கவில்லை. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பலமுறை நெருக்கடி கட்டத்திற்கு சென்றிருக்கிறது. நெருக்கடி ஏன் என்பதில் கவனம் கடந்த காலங்களில் செலுத்தப்படவில்லை.

நோபால் பரிசு பெற்றவர்கள் உருவாக்கிய புள்ளியல்மாதிரி என்ன? அது செல்லுபடியாகத்தக்கது என்று எப்படி நிறுவினார்கள்? என்ற கேள்விகளுக்குள் புகுந்தால் ஆழமாக செல்லவேண்டியதிருக்கும் பொருளியல் கற்றலில் பயிற்சியில்லாதவர்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே நான் அதற்குள் செல்லவில்லை நானும் தொழில்முறையாக பொருளியல் பயின்றவனில்லை. நான் வாசிப்பு மூலம் கற்றறவைகளுக்கு ஒரு வரம்பெல்லை உண்டு. என்னுடைய பார்வையில் குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும், எனக்கு மாறுபாடு இருக்கும் அம்சங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவை அறிவியல் சார்ந்த ஆய்வுமுறை என்ற அளவோடு கூறுகிறேன்.

தகவல் விஞ்ஞானத்தின் (Data Science) அடிப்படைகளில் முக்கியமானது இயல்பான மாற்றங்களை தகவல் கிடங்காக மாற்றினால், மாற்றங்களைப் பற்றிய பயனுள்ள முடிவுகளை எடுக்க முடியும் என்பதுதான். இங்கே ஊகங்களுக்கு இடமில்லை. உதாரணமாக ஒரு நகரின் குறிப்பிட்ட சாலையில் உணவு விடுதி வைத்திருப்பவர், குறிப்பிட்டகாலம் சென்றபின் ஒவ்வொரு நாளும் எந்தவகை உணவுப் பதார்த்தம் எந்தளவு விற்பனையாகும் என்பதை அறிவார். கேட்டால் இது அனுபவத்தின் மூலமாக கண்டறிவது என்பார். தகவல் விஞ்ஞானத்தில் பல நூறு நாட்களாக உண்மையில் விற்பனையான பதார்த்தங்களையும் அதன் அளவுகளையும் தகவல் கிடங்கில் போட்டு தகவல் கிடங்கிலிருந்து பயனுள்ள முடிவைக் கொடுக்கும் மென்பொருளை இணைத்தால் புதன்கிழமை மாலைநேரத்தில் எவ்வளவு இட்லி விற்பனையாகும் என்று சொல்லும். இது ஊகத்தின் அடிப்படையில் நிகழ்வதல்ல. நீண்டகால நிகழ்வுப்போக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பது

வங்கிகளை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு பணத்தை நிரந்தர வைப்புக் கணக்கில் போடுபவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டியைவிட அதிக வட்டிக்கு நீண்டகாலத்திற்கு தொழில்முனைவோருக்கு கடனாகக் கொடுத்து, இரண்டு வட்டிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பயன்படுத்தி லாபகரமாக நடத்தப்படும் தொழிலே வங்கித்தொழில். இதில் வைப்புக்கணக்கில் போடுபவர்கள் குறைந்த கால முதிர்விற்கும் தொழில்முனைவோர் நீண்டகால முதிர்விற்கும் நிற்பவர்கள். இந்த முதிர்வு இடைவெளியானது வங்கிகள் சந்திக்கும் தொழில்-அபாயம் ஆகும். இந்த முதிர்வு இடைவெளியை முதிர்வுமாற்றம் என்று அழைக்கிறார்கள். முதிர்வுமாற்ற அபாயத்தின் உச்சகட்டம் என்பது வைப்புக்கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வைப்புக்கணக்கை முடிக்க விண்ணப்பிக்கும் போது வங்கிகளால் அவர்களுக்கு பணம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். இதை வங்கிஓட்டம் (Bank-run) என்றழைக்கிறார்கள். வங்கி ஓட்டம் திவாலாவிற்கு (Bank-rupture or bankruptcy) வழிவகுக்கும். 1930களின் பொருளாதாரப் பெரும்பின்னடைவின்போது பல வங்கிகள் வங்கிஓட்டத்தின் விளைவாக திவாலாகின. முதிர்வு மாற்றத்ததால் நிகழும் தொழில் அபாயத்தை ஆய்வு செய்து அபாயத்தை குறைக்கும் உபாயத்தை நோபல்பரிசு பெற்றவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

வைப்புக் கணக்கு வைத்திருப்போர் தங்களுடைய எதிர்காலச் செலவை குறுகிய காலத்திற்கு மட்டுமே கணிக்க முடியும் என்பதால் அவர்கள் குறுகிய கால முதிர்வை தெரிவு செய்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் தேவைப்படும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு கொடுக்கப்படும் வட்டியானது முதிர்வு வட்டியைவிட குறைவாகவே இருக்கும். எனினும் அனைத்து வைப்புக்களுக்கு வாடிக்கையாளர்களும் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடிக்கும் நிலை என்பது வராது. வங்கிகள் திவாலாகும் என்ற அச்சத்தில் அல்லது ஊகத்தில் அனைத்து வைப்புக்கணக்கு வாடிக்கையாளர்களும் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடிக்கும் முடிவை எடுக்கிறார்கள். இயல்பான நிலையில் எத்தனை பேர் முதிர்வுக்கு முன்பே கணக்கை முடிக்க கோருவார்கள் என்பதை நாம் தகவல் விஞ்ஞானத்தை வைத்துக் கூறமுடியும். ஆனால் அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே நேரத்தில் கணக்கை முடிக்கக் கோரும் நிகழ்வை நாம் தகவல் விஞ்ஞானத்தைக் கொண்டு கூறமுடியாது, ஏனென்றால் இது ஊகங்களில் அடிப்படையில் நிகழ்வது. நோபல் பரிசாளர்கள் உருவாக்கிய மாதிரியில் லாம்டா என்றொரு நிகழ்தகவு (Probability) வருகிறது. இது முதிர்வு முன்கூடலின் இரண்டு விதங்களையும் உள்ளடக்குகிறது. ஊகத்தையும் உள்ளடக்கிய நிகழ்தகவின் அடிப்படையில் உருவாக்கிய மாதிரியானது எப்படி அறிவியல் ரீதியாகச் சரியாக இருக்கும் என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

பொருளியல் வளர்ச்சியில் வங்கிகளை சுற்றோட்டத்தை உத்தரவாதப்படுத்தும் இடைநிலை ஏஜண்டுகள் என்று இவர்கள் அழைக்கிறார்கள். பெருவீத உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் வங்கிகள் கட்டத்தை தாண்டி பல்வேறு இடைநிலை ஏஜெண்டுகள் வந்துவிட்டன. உதாரணத்திற்கு 2008ம் ஆண்டு தோன்றிய சப்பிரைம் நெருக்கடியானது பிணையுறுதியுடைய கடன் பொறுப்பு ஆவணம் (CDO – Collatralised Debt Obligation) மதிப்பிழத்ததன் வாயிலாக தோன்றியது. கடன் கொடுத்த வங்கிகள் கடனாளியிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களை பிணையுறுதிகளாகக் கொண்டு இன்னொரு பெரிய நிறுவனத்திடம் கடன் வாங்கும் முறையே CDO. வெறும் வாடிக்கையாளர் – தொழில்முனைவோர் என்ற கட்டத்தைத் தாண்டி, கடன்பத்திரத்தையே ஒரு சொத்தாக அனுமானித்து அதன் உடைமையாளர் அதற்கு பெருங்கடன் கொடுப்பவர் என்ற கட்டத்திற்கு வந்து அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுவிட்டது. அடுக்கடுக்கான இந்த இடைநிலை ஏஜண்டுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட். இது அனைத்துக்கும் இவர்கள் ஆய்வு பொருந்தும் என்று கூறுகிறது நோபல் பரிசு கமிட்டி.

வால்ஸ்ட்ரீட்டை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அமெரிக்காவின் பொருளாதார வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் அறிவார்கள். நோபர் பரிசு பெற்ற பென் பெர்னன்க் 2006 முதல் 2012 வரை அமெரிக்க ரிஸ்ர்வ் வங்கியான பெடரல் வங்கியின் தலைவர். இவரை பணிக்கமர்த்திய அதிபர் புஷ் இவர் ஒரு பொருளாதாரப்புலி, நெருக்கடிகளை ஊதித்தள்ளும் ஆற்றல் படைத்தவர் என்பதால் நியமித்தார். இவர் கண்டுபிடித்த கோட்பாடு இவர் கண்முன்னாலேயே நொறுங்கிப் போனதை இவரே ஏற்றுக் கொள்கிறார். 2008ம் ஆண்டில் பெடரல் வங்கித் தலைவர் என்ற முறையில் இவர் திவாலாகிக் கொண்டிருந்த ஏஐஜி என்ற நிறுவனத்திற்கு பிணையாக விதியை மீறி நிதியளித்தார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. நீதிமன்றத்தில் இவர் அளித்த வாக்குமூலம், “செப்டம்பர்-அக்டோபர் 2008 என்பது 1930களில் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட உலகில் ஏற்பட்ட அனைத்து நிதிநெருக்கடிகளிலேயே மிகவும் மோசமானது.” “அமெரிக்காவில் உள்ள 13 முக்கியமான நிதி நிறுவனங்களில் 12 நிதி நிறுவனங்கள் ஒரிரு வாரம் கூட தாக்குப்பிடிக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது” இதையொட்டி பெடரல் வங்கியின் பணவியற் கொள்கை மோசமானது என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளானது. நெருக்கடியானது ஐரோப்பியாவிற்கு பரவியவுடன் அங்கு இருந்த ஐரோப்பிய மத்திய வங்கி (Eurpean Central Bank ECB)யானது 80 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் கடைப்பிடித்த அதே நெறிமுறைகளை கையாண்டதால்தான் நெருக்கடி வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆக, இவர்கள் பரிந்துரைத்த வங்கிகள் அல்லது பொருளுற்பத்தியின் இடைநிலை ஏஜண்டுகளுக்கான கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைகள் செயல்படவில்லை அல்லது அமலாக்கப்படவில்லை அல்லது அமலாக்க முடியவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

புஷ் அரசுக்குப் பின் வந்த ஒபாமா அரசும் பெர்னன்க்கையே பெடரல் வங்கியின் தலைவராக தொடர அனுமதியளித்தது. அத்துடன் நெருக்கடி தீர்வுக்கான கொள்கைகளையும் வரையறுக்கும் உரிமையை இவருக்கு வழங்கியது. இவருடைய தீர்வாக Quantitative Easing (அளவு அடிப்படையில் எளிதாக்குதல்) என்ற கொள்கையை முன்மொழிந்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் மூன்று பலமான அமைப்புகளைச் செயல்படுவதாகக் கூறலாம். ஒன்று Treasury எனப்படும் மத்திய அரசின் நிதியமைப்பு, இரண்டு வால்ஸ்ட்ரீட். அனைத்து நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தை உள்ளிட்ட அனைத்தையும் வால்ஸ்ட்ரீட் என்று வகைப்படுத்துகிறேன். மூன்றவாது பெடரல் வங்கி. பெடரல்வங்கி என்பது பணவியல் அமைப்புமுறையின் (Monetary System) கொள்கை வகுக்கும் அமைப்பு. மக்கள் உற்பத்தியிலும் சேவையிலும் ஈடுபட்டு செல்வத்தைப் படைக்கின்றனர். படைக்கப்பட்ட மொத்த செல்வத்தில் உற்பத்தியாளர்களான மக்களுக்குக் கிடைக்கப் பெற்றதுபோக மீதி அனைத்தும் உபரியே. இது வரிவடிவில் அரசுக்கும் சுற்றோட்ட ஏற்பாட்டாளர் என்பதால் வால்ஸ்ட்ரீட்டுக்கும் செல்கிறது. 2008 நெருக்கடியின் போது வால்ஸ்ட்ரீட் அடிவாங்கி சுருண்டுவிட்டது, மத்திய அரசின் நிதியமைச்சகத்திலோ 240 பில்லியன் டாலர்கள் (தற்போது 1.37 ட்ரில்லியன்) பற்றாக்குறை. பணவியல் கொள்கைவழித் தலையீட்டின் மூலமே உயிரூட்ட வேண்டும் என்ற நிலையில் உருவானதுதான் பெர்னன்க்கின் திட்டம் Quantitative Easing. இத்திட்டப்படி பெடரல் வங்கியே மதிப்பில்லாத CDOக்களை வாங்குவதன் மூலம் சந்தையில் அவை சுற்றோட்டத்திற்கு திரும்பும் என்பதே எதிர்பார்ப்பு. இதுவரை இது நடைபெறவில்லை. மூன்றாம் QE 2021ல் நடந்தது என்றால் 2008 பின்னடைவிலிருந்து மீளவில்லை என்பதே அதன் அர்த்தம். இதன்விளைவு கடுமையான பணவீக்கம், ஏனென்றால் படைக்கப்படாத மதிப்புக்கு பணம் அச்சடிக்கப்பட்டது என்பதாலேயே. இதை சமாளிக்க வட்டிவீதத்தை இப்போது ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறந்துபோன சடலங்களுக்கு உயிர் கொடுத்து புனையப்பட்டு எடுப்பட்ட ஜோம்பி திரைப்படங்ளை நினைவூட்டுவது Quantitative Easing.

பிலிப் டைவிக்கின் நிபுணத்துவப் பட்டியலில் சொத்து மதிப்பிடல் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சொத்து மதிப்பிடலில் புதிய கோட்பாடுகளை உருவாக்கி இரட்டை பற்றாக்குறை நாடான அமெரிக்காவை (மத்திய பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி இறக்குமதியில் பற்றாக்குறை) நோக்கி உலகத்தில் உருவாகும் உபரிச்செல்வம் பாயவைக்கிறது. டாலர்களில் சொத்தை சேமிக்க விரும்புவர்கள் எந்த வட்டியும் இல்லாமல் அமெரிக்க கருவூல பிணைப்புப் பத்திரத்தை வாங்குவார்கள். கொஞ்சம் வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வால்ஸ்ட்ரீட் பாதைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கே நிறுவனங்களின் மதிப்பை ஊதிப் பெரிதாக்கும் கோட்பாடுகள் வாயிலாக காகிதத்தில் அதிக மதிப்பை பெறும் நிறுவனங்களில்தான் முதலீடு செய்வார்கள். ஓயாமல் அமெரிக்காவை நோக்கிப் பாயும் உலக உபரிப் பணம் அவர்களின் இரட்டைப் பற்றாக்குறைக்கு நிதியளிக்கிறது. 2008ம் ஆண்டு நெருக்கடி இந்த புதிய கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிவிட்டது. வங்கி திவாலாக்களில் இந்த புதிய கோட்பாடுகளின் பங்களிப்பை மறுத்துவிட்டு உருவவானதுதான் டையமண்ட்-டைவிக் புள்ளியில்மாதிரி என்று இதிலிருந்து தெரிகிறது.

அத்தோடு நில்லாமல் பெர்னன்க் பெடரல் வங்கித் தலைவராக இருந்தபொழுது இவருக்கு வேண்டிய நிதி நிறுவனங்களுக்குச் சாதகம் செய்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. குடியரசுக்கட்சிக்காராரக தன்னை அறிவித்துக் கொண்டவர். அமெரிக்க அரசின் சமூகப்பாதுகாப்பு செலவுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். குறிப்பாக வலதுசாரி பொருளாதாரக் கொள்கையாளர் அதாவது சுதந்திர சந்தைக் கோட்பாட்டாளர் பொருளாதாரத்தில் அரசு தலையீட்டை எதிர்ப்பவர், எனினும் இவர் பதவி வகித்த காலத்தில் அரசு தலையீட்டின் மூலம் பெருநிறுவனங்களுக்கு சாதகம் செய்தவர். இந்தப் பின்னணியில்தான் நான் நோபல் பரிசு பெற்றவர்களின் பணிகளை பார்க்கிறேன். தோல்வியடைந்த கொள்கைகள், அறிவியல் பூர்வமான நிறுவப்படாத கோட்பாடுகள் ஆகியவை எப்படி பரிசுக்கு தகுதி பெற்றவையாகின்றன என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

அடிப்படையில் டையமண்ட-டைவிக் புள்ளியல்மாதிரி பொருளாதார அம்சங்களை மிகவும் குறுக்கி எளிமைப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. பெர்னன்க் ஆய்வானது இந்த புள்ளியல்மாதிரியை நிறுவவேண்டும் என்ற முனைப்புடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது அறிவியல் வழிமுறையல்ல என்றே நான் கருதுகிறேன். நான் புரிந்து கொண்டவரை சமூகஉற்பத்திமுறை மேலும் மேலும் பலமடைந்து சமூக செல்வம் பெருகிவரும் அதேநேரத்தில் அதன்பலன்களை அனுபவிப்பது சமூக அளவில் நடைபெறாமல் தனிநபர்களின் செல்வாக்கில் நடைபெறுகிறது. இந்த முரண்பாட்டை தீர்க்காமல் நெருக்கடிகளை தடுக்க முடியாது. இதற்குள் சென்று ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வுகள் நடைபெறவில்லை என்று கூறமாட்டேன். நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவை வெளிச்சத்திற்கு வந்து நடைமுறைப்படுத்தினால் சமூகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் தனிநபர்களின் அங்கம் குறைந்துபோகும் என்பதால் வெளிச்சத்துக்கு வரவில்லை. எனவே இது ஒரு நீண்ட நெடிய போராட்டமாகும்.

எஸ்.விஜயன்
சென்னை
25-10-2022

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இந்தியாவை  உலகில் பசி-பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இந்தியாவை உலகில் பசி-பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




தமிழில்: ச.வீரமணி

அக்டோபர் 13 அன்று 2022ஆம் ஆண்டுக்கான உலகப் பசி-பட்டினி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், உலகில் பசி-பட்டினி நிறைந்த நாடுகளில் சென்ற ஆண்டு 101ஆவது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 107ஆவது இடத்திற்குச் சரிந்திருக்கிறது. இந்த அட்டவணையானது  மக்களின் பசி-பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை நிலைமைகளைக் காட்டக்கூடிய ஒன்றாகும். இந்த அட்டவணையின்படி இந்தியா, அதன் அண்டை நாடுகளில் உள்ள மக்களின் நிலைமைகளை விட மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் உலகில் கீழ்நிலையில் உள்ள பல நாட்டு மக்களின் வாழ்நிலைமைகளைவிட இந்தியாவில் மக்களின் வாழ்நிலைமைகள் மோசமாக இருக்கின்றன. உலகப் பசி-பட்டினி அட்டவணையில், தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவைவிட மோசமாகவுள்ள ஒரேயொரு நாடு யுத்தத்தால் சின்னாபின்னமாகியுள்ள ஆப்கானிஸ்தானம் மட்டுமேயாகும்.

உலகில் மிகவும் அதிக அளவில் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ள நாடாகவும், உணவுப் பாதுகாப்பில்லாத மக்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை ஸ்தாபனத்தின் மதிப்பீடானது, இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 22 கோடிக்கும் மேலான மக்கள் தொடர் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருப்பதாகவும், 62 கோடிக்கும் மேலான மக்கள் அரைப்பட்டினி நிலைக்கும் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. உலக அளவில் பார்த்தோமானால், உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் தொடர் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள் மற்றும் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பசி-பட்டினி மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை நிலை ஏற்படக் காரணம் மோடி அரசாங்கத்தின் கேடுபயக்கும்  கொள்கைகளேயாகும். 2016இல் பணமதிப்பிழப்பு அறிவித்ததிலிருந்து 2020இல் கோவிட் பெருந்தொற்றின்போது சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட காலம் வரையிலும் மோடி அரசாங்கம், மக்களின் வாழ்வாதாரங்களின் மீது ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல்கள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவைகளாகும்.

மக்களின் துன்ப துயரங்களைச் சுட்டிக்காட்டி அறிக்கைகள் எதுவும் வெளிவருமானால், இந்தியாவின் சித்திரத்தைச் சீர்குலைப்பதற்காகவே இவ்வாறு அறிக்கைகள் வெளியாகியிருக்கிறது என்று கூறி, இந்த அரசாங்கம் உடனடியாக அதனை மறுப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. இப்போது ஐ.நா.மன்றத்தின் உலகப் பசி-பட்டினி அட்டவணை வெளியாகியுள்ள சமயத்திலும் அரசாங்கம் அதேபோன்றே செயல்பட்டிருக்கிறது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின்மை மிக மோசமான அளவிற்குச் சென்றிருப்பதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அதனைச் சரி செய்திட நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், அதனை ஏற்க மறுத்து, பசி-பட்டினி குறித்து “பிழையான கருத்து” என்று கூறியிருக்கிறது.

இந்தியாவில் வறுமையோ, பசி-பட்டினிக் கொடுமையோ இல்லை என்று உலகம் நம்ப வேண்டும் என்று பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் விரும்புகிறது. மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்தே, வறுமையை மதிப்பீடு செய்வதற்காக, அதிகாரபூர்வ வறுமைக்கோட்டை வரையறுக்கும் வேலையை கைவிட்டு விட்டது. மக்களின் உண்மையான வாழ்நிலைமை குறித்து தரவுகள் தயாரிக்கும் வேலையை கைவிட்டுவிட்டது அல்லது அவ்வாறு தரவுகள் தயாரிக்கப்பட்டாலும் அதனை வெளியிட அனுமதிப்பதில்லை.

நாட்டில் ஏழை மக்கள் படும் துன்ப துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டவரக் கூடாது என்பதற்காகவே மோடி அரசாங்கம் அதிகாரபூர்வ தரவுகளில் அனைத்துவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கி இருக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனம், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 47 லட்சம் பேர் இறந்ததாக மதிப்பிட்டுள்ள அதே சமயத்தில், மோடி அரசாங்கமோ இவ்வாறு கணக்கெடுத்திருப்பது பிழையானது என்று கூறியிருக்கிறது. மாறாக, அரசின் மதிப்பீட்டின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைத்து அளிக்கப்பட்டது. சமீபத்தில் அரசாங்கம் அளித்த மாதிரி பதிவு முறை தரவு (Sample Registration System data), கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அநேகமாக அதீத இறப்புகள் இல்லை என்கிறது.

இதேபோன்றே, தொழிலாளர் தரப்பு ஆய்வறிக்கைகளும் (official periodic labour force surveys), கோவிட் சமூக முடக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் வேலையின்மையில் உயர்வு இல்லை என்றே காட்டுகிறது. வறுமையை மதிப்பீடு செய்வதிலும் கூட, புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள பலபரிமாணங்கள் வறுமை அட்டவணை (Multidimensional Poverty Index) என்னும் புதிய அட்டவணை, இந்தியாவில் வறுமை நிலை முக்கியமற்ற நிலைக்கு (insignificant level) வீழ்ச்சியடைந்துவிட்டது என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நாட்டிலுள்ள புள்ளிவிவர முறையே, அரசுக்காக பிரச்சாரம் செய்திடும் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது. நாடு ‘சொர்க்க பூமி’யாக விளங்குகிறது என்று காட்டுவதற்கு எதுவெல்லாம் ஆதாரமாக இருக்குமோ அது மட்டுமே அரசுத்தரப்பில் வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் வறுமை மற்றும் பசி-பட்டினிக் கொடுமை  தொடர்பாக மதிப்பிடும் மிகவும் முக்கியமான தரவு, தேசிய மாதிரி சர்வே அலுவலகம் நடத்திடும் தேசிய நுகர்வு செலவின ஆய்வுகளேயாகும். முன்னெப்போதும் இல்லாத விதத்தில் மோடி அரசாங்கம் 2017-18இல் இது தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிடாமல்  நிறுத்தி வைத்தது. அதன்பின்னர் நுகர்வு செலவினம் குறித்து ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவே இல்லை.

சமீப காலங்களில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியும் கோடிக்கணக்கான மக்களை வறுமை நிலைக்கும், உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும் தள்ளியுள்ள நிலையில், பொது விநியோக முறையை விரிவுபடுத்த வேண்டும், அது மிகவும் முக்கியமாகும் என்பதை மோடி அரசாங்கம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சென்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  அரசாங்கம் கிராமப்புற மக்களில் குறைந்தபட்சம் 75 விழுக்காட்டினருக்கும், நகர்ப்புற மக்களில் 50 விழுக்காட்டினருக்கும் மான்ய விலையில் உணவு தானியங்களை அளித்திட வேண்டும் என்பது அரசமைப்புச்சட்ட விதியாகும்.  சென்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு ஏற்கனவே 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்து 2021இல் எடுத்திருக்க வேண்டிய மக்கள் கணக்கெடுப்பு இன்னமும் தொடங்கப்படவே இல்லை. இவ்வாறு கணக்கெடுப்பு நடத்தாததால், 12 கோடி பேர் இச்சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படாமல் இருக்கின்றனர்.

நிலைமைகளை மேலும் மோசமாக்கும் விஷயம் என்னவென்றால், ஆதார் பதிவு செய்கிறோம் என்ற பெயரிலும், டிஜிடல் செய்கிறோம் என்ற பெயரிலும் 4.4 கோடிக்கும் மேலான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் இது மிகவும் தீவிரமாகச் செய்யப்பட்டிருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படுவோர், 2011இல் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை நினைவுகூர்வது பயன் அளித்திடும். எனினும், ஏழை மக்களின் ரேஷன் கார்டுகள் மிகப் பெரிய அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய இடத்தில் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயர்களை ஆட்சியாளர்கள் சேர்த்துள்ளார்கள். இவ்வாறு சேர்க்கப்பட்டதற்கு எவ்விதமான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

கோவிட் நெருக்கடி ஏற்பட்ட சமயத்திலும்கூட, அரசாங்கம் தன்னுடைய கையிருப்பில் 10 கோடி டன்களுக்கும் மேலான உணவு தானியங்களை இருப்பு வைத்திருந்த போதிலும் கூட, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இருந்து வந்த பயனாளர்களுக்கு மட்டுமே உணவு தான்யங்களை விநியோகம் செய்தது. பொருளாதார நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட,  பல லட்சக்கணக்கான மக்களுக்கு மான்ய விலையில் உணவு தானியங்களை அளித்திடுவதற்கான முயற்சி எதையும் எடுத்திடவில்லை. பொது விநியோக முறையை நாடு முழுவதற்கும் அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திரும்பத் திரும்பக் கோரி வந்தது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல லட்சம் பேர்களாக அதிகரித்த நிலையில் இது அவசியம் தேவைப்பட்டது.  ஆயினும் உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழிந்த உணவு தானியங்களைப் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறந்த விடாமல், பொது விநியோக முறையை விரிவுபடுத்தாமல், ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ என்னும் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று கூறிக்கொண்டிருந்தது.

சமீப ஆண்டுகளில்  உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரித்து, உயர் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால், உணவுப் பாதுகாப்பின்மையும், பசி-பட்டினி நிலைமையும் அதிகரித்திருக்கின்றன. 2022இல் பல மாதங்களில் இதே கால கட்டத்தில் சென்ற 2021இல் இருந்த விலைவாசிகளை விட உணவுப் பொருள்களின் விலைகள் 7-9 விழுக்காடு அதிகரித்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் மோடி அரசாங்கம் எரிபொருள் மீது கடுமையாக வரி விதித்தது. இவ்வாறு எரிபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால்தான் உணவு உட்பட அனைத்தின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. மேலும் ஒன்றிய அரசாங்கம் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக சாமானிய மக்கள் மீதும், சிறிய உற்பத்தியாளர்கள் மீதும் வரிச் சுமையைக் கடுமையாக ஏற்றி இருக்கிறது. இவ்வாறு வசூலிக்கும் ஜிஎஸ்டி வரிகளில் நியாயமாக மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய பங்கையும் அளிப்பதில்லை. பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை அளிப்பதுடன் அவற்றின் கடன்களையும் தள்ளுபடி செய்யும் அதே சமயத்தில், சாமானிய மக்கள், அவர்கள் வாங்கும் பொருள்கள் மீதும் வரி விதிக்கிறது.  பொருளாதாரத் தாராளமயத்தின் காரணமாக உரங்கள், சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள் முதலியனவற்றிற்கு இறக்குமதியையே அதிகம் சார்ந்திருப்பதால், சமீப ஆண்டுகளில் இந்தப் பொருள்களின் விலைகள் உலக அளவிலான பண வீக்கத்திற்குக் காரணமாக அமைந்தன.

புள்ளி விவரங்களைக் காட்டி நாட்டின் உழைக்கும் மக்களை முட்டாள்களாக்கிட முடியாது. இந்த அரசாங்கத்தின் கேடுபயக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை எப்போதும் மக்கள் மறக்கமாட்டார்கள். வேலையின்மை, வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை இன்றைய தினம் எரியும் பிரச்சனைகளாக மாறி இருக்கின்றன. இத்தகைய மக்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களுக்கு இந்த அரசாங்கத்தைப் பதில் சொல்ல வைத்திடுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் நாட்டிலுள்ள அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது மக்களை அணிதிரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டிருக்கிறது.

(அக்டோபர் 19, 2022)
நன்றி: ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்




லால் பகதூர் சாஸ்திரி நேரு தலைமையிலான அமைச்சரவையில் 1951-1956ல் ரயில்வே அமைச்சராகவும், 1957முதல் நாட்டின் முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பின்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். 1961ல் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நேரு மறைந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி 9.6.1964ல் இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியானார். ஜனவரி 11, 1966வரை 19 மாதங்கள் இவர் ஆட்சியிலிருந்தார். இவரை மறைக்கப்பட்ட பிரமதர் என்று அழைப்பதுண்டு. சாஸ்திரி பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அரசியல் ரீதியாக இந்தி எதிர்ப்பு, பஞ்சாப் தனிமாநிலக் கோரிக்கை, கோவாவை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைப்பது போன்றவை அறைகூவல்களாக இருந்தது. பொருளாதார நிலையில், சில ஆண்டுகளாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில் வளர்ச்சியில் சரிவு, செலுத்து நிலை இருப்பில் (Balance of Payment) மோசமான நிலை, கடுமையான உணவு பற்றாக்குறை போன்றவை முதன்மையான பிரச்சனைகளாக இருந்தது. பல மாநிலங்களில் வறட்சி நிலவியதால் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்தது. 1939-1952 காலகட்டங்களில் உணவு பற்றாக்குறை காணப்பட்டது. 1953-54 முதல் 1958-59வரையிலான காலகட்டங்களில் உணவுப் பொருட்களின் விளைச்சல் அதிகமாக இருந்ததால் நிலைமை சீராக இருந்தது. அதற்கடுத்த ஆண்டுகளில் தேக்கமான நிலையே நீடித்தது. 1962-63ல் சாதகமற்ற காலநிலையினாலும், வெள்ளத்தாலும் கோதுமை, அரிசி பற்றாக்குறை நிலவியது. இக்காலத்தில் கோதுமை உற்பத்தி 10.8 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 12.0 மில்லியன் டன்னாக இருந்தது). செப்டம்பர் 1963க்கு பின்பு கோதுமை விளைச்சல் அதிகரித்ததாலும், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிக அளவிற்கு உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. 1962-63ல் நெல் மற்றும் இதர தானியங்களின் விளைச்சல் 31.9 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 34.8 மில்லியன் டன்னாக இருந்தது). இதனால் நியயாவிலைக் கடைகள் மூலமாக 1962ல் 1 மில்லியன் டன், 1963ல் 1.1 மில்லியன் டன், 1964ல் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் 1962-63ல் பொதுச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை 33 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதனிடையே இந்திய அரசு பாக்கிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்தது. சந்தையில் அரிசி விலை அதிகரித்திருந்தது பொருளாதார அளவில் மட்டுமல்ல அரசியல் மட்டத்திலும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது. எனவே அரசு துரிதமாக உணவுப் பதுக்களைக் கடுமையாகக் கையாண்டு தடுத்தது. அதிக உணவு உற்பத்தி செய்ய அடுத்த போத்திற்கு (season) வழிவகை செய்தது. கோதுமையை, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய அன்னிய செலாவணியை ஒதுக்கியது, விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தது அவர்களை ஊக்குவித்து ராபி போகத்திற்கு அதிக பயிர் செய்யும்படி செய்தது. இதற்கிடையே தென்னிந்திய மாநிலங்களில் அரிசி பற்றாக்குறை கடுமையாக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்திருந்தது. எனவே சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெல் உற்பத்தியினைப் பெருக்கவும், அதற்கானச் செலாவணியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் இச்சிக்கலைப் போக்கக் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை போன்ற உணவுப் பொருட்கள் மாற்றாக வழங்கப்பட்டன. 1965ல் இந்த நிலைமையே நீடித்தது. 1966-67ல் பீகாரில் பஞ்சம் உருவெடுத்தது. இதனால் 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைப் போக்க அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்து சமாளித்தது (Rakesh Ankit 2020). 1965-1966ல் இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டன் கோதுமையினைப் பொதுக் கடன் திட்டம் (பி.எல்.480) மூலம் இறக்குமதி செய்தது. இதனால் 40 மில்லியன் மக்களின் பசி போக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால் இந்தியா உணவு இறக்குமதி செய்தது இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக 1966ல் இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு டாலருக்கான பணமாற்று மதிப்பினை ரூ.4.76லிருந்து ரூ.7.50 ஆகக் மாற்றப்பட்டது. இதனால் கடும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது (Ramachandra Guha 2017).

உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருந்ததால் பொதுமக்களுக்கு உணவுத் தேவையினைக் குறைக்க வாரத்தில் ஒருநாள் உண்ணா நிலையில் இருக்க வேண்டும் என்று சாஸ்திரி வேண்டுகோள் வைத்தார். இதற்கான பலன் நாடுமுழுவதும் காணப்பட்டது. இதனை “சாஸ்திரி விரதம்” என்று அழைக்கப்பட்டது. தீவிர உணவு பற்றாக்குறையினைப் போக்கத் தினமும் ஒருவேளை உணவினை தவிர்க்கும்படியும் கோரிக்கை வைத்தார். இதனால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்கவும் இறக்குமதியினைக் குறைக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக “ஜெய் கிசான்-ஜெய் ஜவான்” என்ற முழுக்கதை முன்னெடுத்தார்.

உணவு பற்றாக்குறையினைப் போக்க அரசு உணவு கூட்டுறவுச் சட்டத்தை நிறைவேற்றியும், விவசாயிகளை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யவும் ஊக்குவித்தது. விவசாயக் கடன் வசதியினை உருவாக்கியும், ரசாயன உரம் பயன்படுத்தவும், நீர்ப்பாசன வசதி மற்றும் விவசாய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அரசு வழங்கியது. விளைச்சல் உயர வாய்ப்பு இருந்த அதேசமயம் கட்ச் முதல் காஷ்மீர் வரை கோடைக்கால தாக்கத்தினால் 1965ல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைகள் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகவே சாஸ்திரி பிரதம அமைச்சரான காலத்தில் உணவுப் பஞ்சம் பெருமளவிற்கு இருந்தது. இதற்காக நீண்டகால தீர்வாகப் பசுமைப் புரட்சி வித்திடப்பட்டது. நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் சார்ந்த அணுகுமுறையில் மாற்றப்பட்டு சாஸ்திரி காலத்தில் வேளாண் சார் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. சாஸ்திரி வேளாண்மைக்காக கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தன்னுடைய அமைச்சரவையினைச் சார்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களான ஹரின் முகர்ஜி மற்றும் பூபேஷ் ஆகியோரால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

பஞ்சத்தால் இந்தியாவின் உணவுத் தொகுப்பின் இருப்பு தீர்ந்திருந்தது. உணவு உற்பத்தியில் உபரியாக இருந்த சில மாநிலங்கள் இந்த நிலைமையினை தீர்க்க ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இத்துடன் இந்தியா-பாக்கிஸ்தான் போரைக் காரணம் காட்டி பி.எல் 480 ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இந்தியாவிற்கு உணவுக்காக அளித்த அனைத்து மானியத்தையும் நிறுத்திவிட்டது. சாஸ்திரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இடைத்தரகர்களையும், உணவு பதுக்கலையும் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கடிதம் எழுதினார். எதிர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் இரண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். 1) 1 மில்லின் மக்கள்தொகைக்கு அதிகமாக இருந்த 6 நகரங்களில் விகிதாச்சார உணவு விநியோகமும், முறைசாரா உணவு விநியோகத்தை 1 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள 105 நகரங்களில் நடைமுறைப்படுத்தினார். 2) உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் மீது வழக்குத் தொடுத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது (Ramachandra Guha 2017). அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் உணவு பகிர்மான முறையினை நடைமுறைப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் மட்டுமே சாத்தியப்பட்டது. 1965ல் மாநில உணவு வாணிபக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி மாநில அரசு நேரடியாகவே வேளாண் உணவுப் பொருட்களை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தது. ஆனால் இது போதுமான அளவிற்கு வெற்றியினை பெறவில்லை. எனவே நீண்டகால அடிப்படையில் உணவு உற்பத்தியைப் பெருக்கவும், சுயச்சார்பினை அடையவும் கொள்கைகள் வகுக்கப்பட்டு பசுமைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதனை இந்திரா காந்தி பிரதம அமைச்சராக இருந்த காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் (Bipan Chandra 2008).

சாஸ்திரி பிரதமராக இருந்தபோது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் தோல்வியினை எதிர்கொண்டது. நாட்டின் தேசிய வருமானம் குறைவான அளவிற்கே வளர்ச்சியினை கண்டது. பொருட்களின் விலை அதிக அளவிற்கு உயர்ந்தது. உணவு தானியப் பற்றாக்குறை கடுமையாக நிலவியது. எனவே உணவு உற்பத்தியினை அதிகரிக்கப் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தார். நேருவின் ஜனநாயக சோசியலிசக் கொள்கையினை சாஸ்திரி பின்பற்றினாலும், நேருவினால் அமைக்கப்பட்ட திட்டக்குழுவினை மாற்றி அமைத்தார். இதன்படி திட்டக்குழுவின் உறுப்பினர்களின் காலம் வரையற்ற நிலையில் இருந்ததைக் குறிப்பிட்ட காலம்வரை பணியாற்ற வழிவகை செய்தார். மேலும் திட்டக்குழுவிற்கு இணையாக “தேசிய வளர்ச்சிக் குழு” 1964ல் பொருளாதார, அறிவியல் அறிஞர்களைக் கொண்டு உருவாக்கினார். சாஸ்திரி நேரு வழியில் பயணித்தாலும் கனரக தொழிலுக்கு முன்னுரிமை என்று இருந்ததை வேளாண்மைக்கான முன்னுரிமை என மாற்றி அமைத்தார்.

தன்னுடைய அமைச்சரவை சகாக்களையும், உயர் அதிகாரிகளையும் ‘கிராமங்களுக்குச் செல்லுங்கள், மக்களையும், விவசாயிகளையும் சந்தியுங்கள்” என்றார்.

நேருவினால் முன்னெடுக்கப்பட்ட கனரக தொழிலுக்கான வளர்ச்சியானது சாஸ்திரி காலகட்டத்தில் வேளாண்மையினை மேம்படுத்த முன்னுரிமை தரப்பட்டது. சாஸ்திரி பிரதம மந்திரி ஆனதும் முதல் பணியாக வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்தார். மழை பொய்த்துப்போனதால் உணவு உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை நிலவியது. அரசின் உணவுக் கையிருப்பும் குறைந்துவிட்டது. இதனைப் பயன்படுத்தி கள்ளச் சந்தை நடவடிக்கைகள் பெருகியது என்பதை உணர்ந்து இதற்கு நீண்டகாலத் தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களிடம் இதற்கான பொறுப்பினை ஒப்படைத்தார். சுப்பிரமணியம் உடனடியாக வேளாண் விஞ்ஞானிகளை அங்கீகரித்து, அவர்களின் ஊதியத்தை உயர்த்தி, வேலைக்கான சூழ்நிலையினை மேம்படுத்தி அரசின் அதிகார வர்கம் தலையிடாமல் பார்த்துக்கொண்டார். வேளாண்மையில் தனியார் துறையினை ஊக்குவிப்பது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அன்னிய நேரடி முதலீடு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தை புத்துயிர்பெறச் செய்தார், மாநிலங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள் துவக்கவும், அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் சாகுபடியினை அதிகரிக்கப் பரிசோதனை பண்ணைகள், இந்திய விதைக் கழகம் போன்றவை உருவாக்கப்பட்டது. பி.சிவராமன், எம்.எஸ்.சாமிநாதன் போன்ற வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி மெக்சிகன் கோதுமை விதை வகையினை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1965ல் இந்திய-அமெரிக்க (சுப்பிரமணியம் – ஃபிரிமேன்) ஒப்பந்தத்தின்படி இந்தியா கணிசமான அளவிற்கு வேளாண்மை மீதான முதலீட்டை அதிகரிக்கவும், கிராமப்புறக் கடன் வழங்கச் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், ரசாயன உர உற்பத்தியினைப் பெருக்கி அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது (Ramachandra Guha 2017). வேளாண்மை உற்பத்தியினை அதிகரிக்கச் சந்தை நோக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது.

எல்.கே.ஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் 1964ல் துவக்கப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைய மூன்று முக்கிய பிரகடனங்கள் செய்யப்பட்டது (அதிக மகசூல் தரும் உயர் ரக விதைகள் பயன்படுத்துதல், உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், நீர்ப்பாசன விளைநிலங்களுக்கு மேம்படுத்தப்பட்ட இடுபொருட்களைப் பயன்படுத்துதல்). வலதுசாரி கட்சியினரும், எதிர்க் கட்சிகளும் வேளாண்மையில் முன்னெடுக்கப்பட்ட செயல்களால் முதலாளித்துவ விவசாயம் உருவாகும் என்றும் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே பயன் உடையதாக இருக்கும் என விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் 1966-67ஆம் ஆண்டு வேளாண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட புதிய முறையினால் கோதுமை உற்பத்தியானது 5.5 விழுக்காடு அதிகரித்தது. சாஸ்திரி இந்தியாவில் வேளாண்மையில் முதல் சீர்திருத்தத்தினை கொண்டுவந்தார் இதனால் இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்ல உலகில் வேளாண்மை உற்பத்தியில் முன்னணி நாடாகவும் உள்ளது.

வேளாண்மை செலவு மற்றும் விலைக் குழு 1965ல் துவக்கப்பட்டது, இக்குழுவானது வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையினைத் தீர்மானிப்பதற்கான பரிந்துரையினை வழங்குகிறது. முதன் முதலில் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலையினை இக்குழு பரிந்துரைத்தது. பழமையான நெல் ரகங்களின் பயிர்செய்யும் கால அளவு குறைந்தது 6 மாதங்களாக இருந்தது இதனைக் குறைக்கும் பொருட்டு குறுகிய கால நெல் ரகமான ஐ.ஆர்8 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு மூன்று போகம் பயிரிடும் நிலை உருவாக்கப்பட்டது. இதுபோன்றே கோதுமையில் புதிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது (ICAR 2022).). இவருடைய காலத்தில் உணவு பற்றாக்குறை அதிக அளவிலிருந்ததால் 1966-67ல் 10 மில்லியன் டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அரசின் பல்வேறு நடவடிக்கையின் காரணமாக இது 1970ல் 3 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

சாஸ்திரி காலத்தில் வெண்மைப் புரட்சிக்கு அடிக்கோலப்பட்டது. பால் உற்பத்தியைப் பெருக்கி, அளிப்பினை அதிகரிக்கத் தேசிய பிரச்சார இயக்கத்தை உருவாக்கினார். குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்தில் 1965ல் குரியனால் தேசிய பால் வளர்ச்சி கழகமும், அமுல் பால் கூட்டுறவும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பால் பற்றாக்குறையாக இருந்த இந்தியா தன்னிறைவினை அடைந்துள்ளது. இன்று உலக அளவில் அதிக பால் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றமடைந்துள்ளது.

சாஸ்திரி காலத்தில் 1964-65ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.8.96 லட்சம் கோடியாக இருந்தது 1965-66ல் ரூ.8.73 லட்சம் கோடியாகக் குறைந்தது அதாவது 2.63 விழுக்காடு குறைந்தது. தலா வருமானம் ரூ.16836 ஆக இருந்தது ரூ.16423ஆக குறைந்தது அதாவது 2.45 விழுக்காடு குறைந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையும் நாட்டின் நிகர தேசிய உற்பத்திக்கு 1965-66ல் ரூ.99.45 மில்லியன் பங்களிப்பினை வழங்கியது (1964-65ல் இது ரூ.102.14 மில்லியனாக இருந்தது) (Jagdish N Bhagwati and T.N.Srinivasan 1975).

அட்டவணை: சாஸ்திரி காலத்தில் இந்தியப் பொருளாதார மாற்றம் (2011-12 விலை அடிப்படையில்)

விவரங்கள்        1964-651965-66
வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி (விழுக்காடு)8.7-9.6
உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வழங்கல் துறைகள் (விழுக்காடு) 7.43.3
வர்த்தகம்உணவகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு (விழுக்காடு)6.71.9
நிதி, மனைத் தொழில், தொழில்முறை சேவை (விழுக்காடு)   2.83.0
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூ.கோடியில்)896221872598
தலா வருமானம் (ரூ) (at NNP)  1683616423

Source: GoI (2022): Economic Survey 2021-2022.” Ministry of Finance, Government of India.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் 57 விழுக்காடு பங்களிப்பும், தொழில் துறை 28 விழுக்காடும், சேவைத் துறை 15 விழுக்காடு பங்களிப்பும் 1950-51ல் இருந்தது 49 விழுக்காடு, 31 விழுக்காடு, 21 விழுக்காடு என முறையே 1964-65 மாற்றமடைந்தது. சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டமானது தோல்வியினைத் தழுவியது. அதிக மக்கள் தொகை பெருக்கம், விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவை நிலவியது (Sanjeet Kashyap 2019).

சாஸ்திரி பிரதம அமைச்சராக இருந்தபோது அரசியல் ரீதியாகக் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். பல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார் என்றும், காஷ்மீர் பிரச்சனை, பாக்கிஸ்தானுடனான போர், வியட்நாம் போர் மீதான நிலைப்பாடு போன்றவை  இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது. உஸ்பெகிஸ்தான் என்ற நாட்டில் உள்ள தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்தான 10.01.1966ல் திடீரென சாஸ்திரி காலமானர். சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் நவீன வேளாண் வளரச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கினார், தாரளமயக்கொள்கைக்கான முன்னெடுப்பும் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இவரைப் பற்றி இந்திரா காந்தி குறிப்பிடுகையில் “அவர் இயல்பாக மிகவும் கண்ணியமானவர், அமைதியானவர் ஆனால் போரின் போது அவர் நமது மன உறுதியை வலுவாக ஊக்குவித்தார், நாட்டின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு பங்களித்தது தேசத்திற்குத் தலைமையை ஏற்று வழிநடத்தினார்” என்றார்.

சாஸ்திரி 582 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும், இவருடைய காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் காணப்பட்டன அதனைத் திடமாகவும், நீக்குப்போக்குடன்  எதிர்கொண்டார். இவர் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார், சிக்கல்களைத் தீர்க்க கூட்டு முயற்சியினை மேற்கொண்டார். தன்னுடைய அமைச்சரவை முடிவுகள்  தீவிர ஆலோசனைக்குப் பிறகே மேற்கொண்டார் (Ramandeep Kaur 2019). வேளாண்மை வளரச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சியே இன்று இந்தியா உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

– பேரா.பு.அன்பழகன்

சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்புகளைத் தருகிறது கட்டுரை – அ.பாக்கியம்

சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்புகளைத் தருகிறது கட்டுரை – அ.பாக்கியம்




இந்த ஆண்டு நாட்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸ் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Xi Jinping 20வது CPC தேசிய காங்கிரஸிற்கு தனது அறிக்கையில் “வளர்ச்சி” பற்றி 100 முறை குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு புதிய வளர்ச்சி முறையை உருவாக்குவதையும், விரைவுபடுத்துவதையும், உயர்தர வளர்ச்சியைப் பின்பற்றுவதற்கும் சீனாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

நாட்டின் புதிய வளர்ச்சித் தத்துவத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகவும், உண்மையாகவும் பயன்படுத்தவும் வேண்டும்.

சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைத தொடர வேண்டும்.

உயர்தரத் திறப்பை (high-standard opening-up,) ஊக்குவிக்க வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் வகையில் புதிய வளர்ச்சி வடிவத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ஜி அழைப்பு விடுத்தார்.

இவை அனைத்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார ஓட்டங்களுக்கு இடையே நேர்மறை தொடர்புகளை கொண்டுள்ளது.

உலகத்திற்கான வாய்ப்புகள்:

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த 10 ஆண்டுகளில் 54 டிரில்லியன் யுவானில் இருந்து 114 டிரில்லியன் யுவானாக வளர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 18.5 சதவீதமாக உள்ளது. இது 7.2 சதவீத புள்ளிகள் அதிகரித்து வருகிறது என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

2013 முதல் 2021 வரையிலான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சராசரியாக 38.6 சதவீதம் வரை சீனா பங்களித்துள்ளது என்றும் இது ஒட்டுமொத்த ஜி 7 நாடுகள் வளர்ச்சியை விட அதிகமானது என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NBS) வெளியிட்ட விவரங்கள் அடிப்படையில் தெரிவித்தார்.

தற்போதைய COVID-19 தொற்றுநோய், முதலாளித்துவ நாடுகளால் அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம், உலகமயமாக்கலுக்கு எதிராக குறிப்பாக சீனாவுக்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்காக, சீனா தனது புதிய “இரட்டை சுழற்சி” வளர்ச்சி முறையை வெளியிட்டது.

உள்நாட்டு சந்தையை பிரதானமாகக் கொண்டு அதே நேரத்தில் வெளிநாட்டு சந்தையை பலப்படுத்தக்கூடிய முறைகளைக் கையாண்டு தற்காத்துக் கொண்டது.

சீனாவின் புதிய வளர்ச்சி முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் உள்ள வளர்ச்சி வளையம் அல்ல.

வெளி உலகிற்குத் திறக்கும் அதன் அடிப்படை தேசியக் கொள்கைக்கு சீனா என்றும் உறுதிபூண்டுள்ளது. பரஸ்பர நன்மை பயக்கும் திறப்புக் கொள்கையை கடைபிடிப்பதில் சீனா உறுதிபூண்டுள்ளது என்றும் ஜி கூறினார்.

“அதன் சொந்த வளர்ச்சியுடன் உலகிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், அனைத்து மக்களுக்கும் அதிக நன்மைகளை வழங்கும் திறந்த உலகளாவிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தனது பங்களிப்பை வழங்கவும் சீனா பாடுபடுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

உயர்தர திறப்பு:

ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை சீனா பல மடங்கு உயர்த்தி உள்ளது. 82வழித்தடங்களுடன், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில்கள் இப்போது 24 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 200 நகரங்களை இணைத்துள்ளது.

ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கிய போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் பயணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்ந்து.

மொத்தம் 1.02 மில்லியன் TEU(twenty foot equivelent unit) சரக்குகள்(containers) கொண்டு செல்லப்பட்டன.

இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சீனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ., லிமிடெட் வழங்கிய தரவுகளை குறிப்பிட்டார்.

– அ.பாக்கியம்
முகநூல் பதிவிலிருந்து