இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 3 நேருவும் வேளாண் உள்கட்டமைப்பும் (1951-1964) – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 3 நேருவும் வேளாண் உள்கட்டமைப்பும் (1951-1964) – பேரா.பு.அன்பழகன்




இந்தியா சுமார் 200ஆண்டுகள் காலனி ஆதிக்கத்திலிருந்த காலத்தில் தன்சொந்த அடையாளங்களை இழந்திருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நவீன தொழில்நுட்பம் உலக அளவில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது எனவே இந்தியா உலக நாடுகளுடன் போட்டியிட்டு வளரவேண்டிய நிலைக்கு வந்தது. அதிக அளவிலான வறுமை, கல்வியறிவின்மை, வேளாண்மையில் பாரம்பரிய பின்பற்றல், பாரம்பரிய கிராமப்புறத்து தொழில்களை அழித்தொழித்தது, குறைவான உற்பத்தித் திறன், நிலப்பிரபுத்துவம், இடைத்தரகர்களின் கொடுமைகள், அளவிற்கு அதிகமான வேளாண்மையின் மீதான வரி, வங்காளப் பஞ்சம், பாக்கிஸ்தானிலிருந்து அகதிகள் வருகை, உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம், அதிக அளவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நிலமற்ற வேளாண்மை கூலிகளாக இருந்தது போன்றவற்றைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பாக வேளாண் துறையில் உடனடி நடவடிக்கையாக ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகைச் சீர்திருத்தம், கூட்டுறவு வேளாண்மை, சந்தைப்படுத்துதல், கடன் வசதி, போன்றவை இருந்தது (Sharma 2020). பல்வேறு துறைகளை வளர்ச்சியடையச் செய்யவும் பொருளாதார மேம்பாட்டை அடையவும் நேரு தலைமையிலான அரசுத் திட்டங்களை வகுத்தது. நேரு கலப்பு பொருளாதார முறையினை பின்பற்றினார். 15 மார்ச் 1950ல் நேருவைத் தலைவராகவும் பலதுறைகளின் அறிஞர்களை உறுப்பினராக கொண்டு திட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது (Bipan Chandra et al 2000). மாநில அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் உயர் அதிகார பீடமாகத் திட்டக்குழு செயல்பட்டது. நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் எவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதை வடிவமைத்துக் கொடுத்தது திட்டக் குழு (ஹரீஷ்கரே 2022). வேளாண்மை, இந்திய அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையில் பட்டியல் பிரிவு இரண்டில் 14ன் படி மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் சில அம்சங்கள் கூட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வேளாண்மையும், தொழில் துறையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. தொழிற் புரட்சியின் விளைவால் இயந்திரக் கருவிகள், வேளாண் சாதனங்கள், ரசாயன உரம், மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு பல நாடுகள் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்தது. இதுபோல் தொழில் துறைக்குத் தேவையானதைக் காப்பி, ரப்பர், சணல், பருத்தி, தேயிலை, கரும்பு போன்றவற்றை அளிக்கிறது. இரும்பு எஃகு, ரசாயனப் பொருட்கள், இயந்திரச் சாதனங்கள் போன்றவை நேரடியாகவே வேளாண்மைக்கான இடுபொருட்களை அளிக்கிறது. இதுபோல் பணித்துறை குறிப்பாக வர்த்தகம், நிதி நிறுவனங்கள், போக்குவரத்து வேளாண்மைத் துறையுடன் நெருங்கியத் தொடர்புடையது. எனவேதான் வேளாண்மைத் துறையினை இந்தியாவின் இதயம், முதுகெலும்பு என்று அடையாள படுத்தப்படுகிறது.

நேரு, தொழில் மற்றும் வேளாண்மை இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்தார். நவம்பர் 1952ல் நேரு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது “நாங்கள் நிச்சயமாகத் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் தற்போதைய சூழலில் விவசாயம், உணவு மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமது அடித்தளமான விவசாயம் வலுவாக இல்லாவிட்டால் நாம் உருவாக்க விரும்பும் தொழிலுக்கு வலுவான அடித்தளம் இருக்காது” என்றார். எனவே விவசாய வளர்ச்சியானது தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையானது என்று குறிப்பிட்டார். வேளாண்மையில் சீர்திருத்தம், பெரிய நீர்ப்பாசன கட்டமைப்பு திட்டங்கள், கூட்டுறவுக் கடன் நிறுவனங்களை வலுப்படுத்துவது, இடைத்தரகர்களை ஒழிப்பது, உழுபவர்களுக்கு நில உரிமை, சமுதாய மேம்பாட்டுத் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட திட்டங்கள், தீவிர பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பது, நில உச்சவரம்பு ஆகியனவாம். இச்சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் உபரியான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் இவ்விவசாயிகள் கடினமான உழைத்து வேளாண் விளைச்சலைப் பெருக்கும் நோக்கில் ஈடுபட்டனர். அதேசமயம் பகிர்ந்தளிக்கப்பட்ட உபரி நிலங்களைவிட உபரியாக கண்டறியப்பட்ட நிலங்கள் பல்வேறு காரணங்களினால் (அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்கள்) கையகப்படுத்த இயலாமல் இருந்தது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வெகுசில மாநிலங்கள் மட்டுமே நிலச் சீர்திருத்தங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தியிருந்தது. எனவே நிலச்சீர்திருத்தம் நேருவின் ஆட்சிக் காலத்தில் முழுமையாக வெற்றிபெறவில்லை என்றே குறிப்பிட வேண்டும் (Tirthankar Roy 2020).

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதனம்மையான பிரச்சனையாக உணவு பற்றாக்குறை இருந்தது. இதனை போக்க நீண்ட கால மற்றும் குறுகிய காலத் தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய காலத் தீர்வாக இந்திய அரசு அமெரிக்காவுடன் பி.எல் 480 என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அமெரிக்காவின் உபரி உணவுப் பொருட்களை 1956 முதல் 1966 வரை இறக்குமதி செய்து உணவு பற்றாக்குறையினைப் போக்கியது. 1956ல் 3 மில்லியன் டன் உணவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது இது 1963ல் 4.5 மில்லியன் டன்னாகவும், 1966ல் 10 மில்லின் டன்னாகவும் அதிகரித்தது (Manas Kumar Das, Contemporary History of India from 1947-2010) நீண்டகால நோக்கில் நேருவின் வேளாண்மை வளர்ச்சி கொள்கையினை நான்கு முக்கியக் குழுக்களாகப் பிரிக்கலாம் 1) உழவர் மேம்பாட்டிற்கானது, 2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 3) கிராமப்புற கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் இடுபொருட்களின் தேவைகளுக்கான உற்பத்திப் பகிர்வு, 4) வேளாண்மை மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை துரிதப்படுத்துதல் ஆகும் (Swaminathan 1990). வேளாண்மைக்கான அடிப்படை கட்டமைப்பான நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண் ஆராய்ச்சி, கடன் வசதி, சந்தைப் படுத்துதல், குத்தகை சீர்திருத்தம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. உழவர்கள் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு 1964ல் வேளாண் விளைபொருட்களுக்கான ஊக்க விலைக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் விளைபொருட்களுக்கு ஆதரவு விலையினை நிருணயம் செய்ய வேளாண் விலைக் குழு அமைக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கொண்டுவரப்பட்டு உற்பத்தி, பகிர்வு பொருட்களின் விலை சரிசெய்யப்பட்டன.

ஜே.சி.குமரப்பா குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்திய வேளாண்மைக்கான முன்னெடுப்பினை 1951ல் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த செலவு ரூ.1960 கோடியாகும் இதில் வேளாண்மைக்கு ரூ.601 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது அதாவது மொத்தத்தில் 31 விழுக்காடு பங்காகும். இதன் ஒருபகுதியாக நீர்ப்பாசன வசதியினை உருவாக்கப் பெரிய அணைகளான ஹிராகுட், பக்ரா நங்கல், சட்லெட்ஜ், நாகார்ஜூன சாகர், பவானி சாகர் கட்டப்பட்டது, இவற்றை நேரு இந்தியாவின் ‘நவீனக் கோவில்கள் என அழைத்தார். இந்தியப் பிரிவினையின்போது அதிகமான அகதிகள் பஞ்சாப் பகுதியில் வந்தடைந்தனர் இவர்களில் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தனர். எனவே அரசியல் அழுத்தம் மற்றும் அகதிகளாக வந்த மக்களின் வாழ்நிலையினை கருத்தில் கொண்டு நீர்ப்பாசன திட்டத்தைப் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் கிராமப்புற மேம்பாட்டிற்கும் நிலச் சீர்திருத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது (Tirthankar Roy 2020). வேளாண்மை துறைக்கு முன்னுரை அளித்திருந்தாலும் தொழில் துறையின் வளர்ச்சியினை விரைவுபடுத்த வேண்டியிருந்தது. இதற்கு அடிப்படைத் தேவை ‘மின்சாரம்’ எனவே வேளாண்மை-தொழில் வளர்ச்சிக்கும் சேர்த்து மிகப்பெரிய நீர்த் தேக்கங்களைக் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டது (கே.என்.ராஜ் 2022). உரத்தொழிற்சாலை, எஃகு ஆலைகள் போன்றவை வேளாண் மேம்பாட்டிற்கு அடிப்படையானது எனவே இவற்றைத் துவக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 1950ல் ஜவுளி கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ஜவுளி தொழில் மற்றும் தோட்டப் பயிர்கள் மீது தனியார் முதலீடுகள் அதிகரித்தது. கைத்தறித் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தியாவில் சிறு நிலவுடையாளர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அறிவியல் பூர்வமான வேளாண்மையினை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது எனவே கூட்டுறவு பயிர்செய்யும் முறையினைக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் அதிக அளவிற்கான நிலங்கள் இம்முறையின் கீழ் வந்துவிடும் என்றார். ஆனால் நடப்பில் இது வெற்றிபெறவில்லை. அறிவியல் பூர்வமான நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு மற்றும் உயிர் ஊட்டச்சத்து, நிலம் சரியாகப் பயன்படுத்துதல், உணவு தானிய சேமிப்பு போன்றவை சுற்றுப்புறச் சூழலியல் வழியாகச் சாத்தியமாகும் என்ற அடிப்படையில் இதற்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண்மை வளர்ச்சியினை அடையக் கிராமப்புறச் சாலை, மின்சாரம், வேளாண் சந்தை போன்ற கட்டமைப்புகள் இன்றி முடியாது என்று கருதினார் (Swaminathan 1990).

கிராமப்புற மக்களின் வாழ்நிலையினை மேம்படுத்தத் தகவல்தொடர்பு, சுகாதாரம், கல்வி ஆகிய நிலைகளை உயர்த்தி வேளாண்மையில் மேம்பட்ட விதைகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தியினை அதிகரிக்க இரண்டு திட்டங்களான 1) 1952ல் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (Community Development Project) என்ற வேளாண்மை விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. 2) பஞ்சாயத்து ராஜ் குறித்து ஆய்விட 1957ல் பல்வந்ராய் மேத்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டது அரசின் அதிகார வர்க்கமானது இதில் போதுமான ஈடுபாட்டினை காட்டவில்லை என்று குற்றம் சாட்டி பல்வேறு பரிந்துரைகளை இக்குழு அரசுக்கு வழங்கியது (அன்சர் அலி 1972). இதன் அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ் 1959ல் கொண்டுவரப்பட்டது.

கரும்பு, கோதுமை, சணல் போன்றவற்றில் புதிய வகை விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1954ல் தேசிய அளவில் மாடுகளின் கொள்ளைநோய் ஒழிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1958ல் தேசிய வேளாண்மை கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. கட்டாக்கில், மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் தொழில் துறைக்கு (ரூ.1080 கோடி, அதாவது மொத்தத்தில் 24 விழுக்காடு ஒதுக்கீடு) முன்னுரிமை அளித்தாலும் வேளாண் துறைக்கான (ரூ.950 கோடி, அதாவது மொத்தத்தில் 20 விழுக்காடு பங்கு) முன்னுரிமையும் தொடர்ந்தது. தொழில் துறை வளர்ச்சி ஆண்டுக்கு 7 விழுக்காடு என்ற அளவினை அடைய வேளாண் துறையின் உயர் வளர்ச்சியின்றி அடைய முடியாது என்று கருதப்பட்டது. உண்மையில் பாதிக்கு மேற்பட்ட தொழில்கள் வேளாண் தொழிலினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மேலும் தொழில் துறையினைவிட வேளாண் துறை வலுவான அடிப்படையினைக் கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான ரூ.8580 கோடியில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது மொத்த தொகையில் 21 விழுக்காடு ஆகும். இந்த திட்ட காலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வேளாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்ட காலத்தில் உணவு தானிய உற்பத்தி, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, சணல் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் வேளாண்மையில் அடைந்த முன்னேற்றம் இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் அடையவில்லை (முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உணவு தானிய உற்பத்தியின் இலக்கு 61.6 மில்லியன் டன் ஆனால் உண்மையில் 65.8 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது திட்டக் காலத்தில் இதன் இலக்கு 80.5 மில்லின் டன் ஆகும் ஆனால் 79.7 மில்லியன் டன் உற்பத்தியை அடைந்திருந்தது). உணவு தானிய உற்பத்தி மற்றும் அளிப்பு குறைவான அளவிற்கு வளர்ச்சியினை அடைந்திருந்தது ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பின் விளைவால் உணவுத் தேவை அதிகமாக இருந்தது (அன்சர் அலி 1972). இதனால் பணவீக்கம் அதிகரித்தது. உணவு தானிய தேவையினை இரண்டாம் திட்டக் காலத்தில் சரியாகக் கணிக்கத் தவறியிருந்தது. இந்தியப் பொருளியல் அறிஞரான கே.என்.ராஜ் அவர்களின் கருத்துப்படி “1950களின் தொடக்கத்தில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை உயர்வு மிகப் பெரிய நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவு தானியங்களின் விலை உயரும்போது, குறைந்த வருவாய்ப் பிரிவினரை அது வெகுவாகப் பாதிக்கிறது. அதனால் திட்டமிட்டபடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தடைகள் ஏற்பட்டுவிடுகின்றன” என்றார் (இந்து தமிழ் திசை, 31.08.2022, பக்கம் 9).

அட்டவணை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி (விழுக்காட்டில்)

விவரங்கள்1900-01முதல்
1946-47 வரை
1950-51 முதல்
1964-65 வரை
முதன்மைத் துறை0.42.6
தொழில் துறை1.56.8
பணித் துறை1.74.5
ஓட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP0.94.0
தலா வருமானம் (GDP யில்)0.11.9
மக்கள் தொகை0.82.0

குறிப்பு: 1947க்கு முந்தைய புள்ளிவிவரம் பிரிக்கப்படாத இந்தியாவைப் பற்றியது.
ஆதாரம்: Pulapre Balakrishnan (2007): “Visible Hand: Public Policy and Economic Growth in the Nehru Era,” CDS, WP:391 (www.cds.edu).

1951-1956ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது 17 விழுக்காடு அதிகரித்தது ஆனால் தொடர்ந்து பருவ மழை பொய்த்ததினால் 1956-1961 ஆண்டுகளில் இது 16 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது. ஒட்டு மொத்தத்தில் உணவு உற்பத்தியானது 108 மில்லியன் டன்னாக (1951ல் 55 மில்லின் டன்னாக இருந்தது) நேருவின் காலகட்டத்தில் அதிகரித்தது. ஆனால் இது உணவுத் தேவையினை நிறைவுசெய்யவில்லை எனவே 4 மில்லின் டன் உணவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. வேளாண் உற்பத்தித் திறன் சிறிய அளவிலே அதிகரித்தது. நிலச்சுவாந்தாரர்களின் கடுமையான எதிர்ப்பினால் நிலச் சீர்திருத்தம் பெரிய அளவிற்கு வெற்றியடையவில்லை. நேரு பொதுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்ததால் வேளாண்மையில் தனியார்த் துறை கால்பதிக்காமல் போனது. விவசாயிகளின் தலைவராக அறியப்பட்ட சௌத்ரி சரண் சிங் நேருவின் விவசாயக் கொள்கையினைக் கடுமையாக எதிர்த்தார். 1951 முதல் 1964-65 முடிய உள்ள காலகட்டங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4 விழுக்காட்டினை எட்டியது. 1949-50 மற்றும் 1967-98ஆம் ஆண்டுகளுக்கிடையே உணவு உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரித்தது ஆனால் உணவல்லாத உற்பத்தியில் 8 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது (அன்சர் அலி 1972). இது காலனி ஆதிக்க ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைவிட அதிக அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில் துறையின் வளர்ச்சியானது ஆண்டுக்கு 7 விழுக்காடும், வேளாண் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 3 விழுக்காடும் இருந்தது. இது ஒப்பீட்டு அளவில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளைவிட அப்போது அதிக அளவிலே இருந்தது. அதேசமயம் அதிகரித்த மக்கள் தொகைக்குத் தேவையான அளவிற்கு உணவு உற்பத்தி நடைபெறாததால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருந்தது. வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டதால் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. 1965-66 மற்றும் 1967-68ல் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக வேளாண்மை உற்பத்தி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. 1962ல் நிகழ்ந்த சீன படையெடுப்பு இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்தது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டது. வேளாண்மையின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினாலும், நேருவின் ஆட்சிக்காலத்தில் இடைத்தரகர்கள் ஒழிப்பில் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை, புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளால் உடனடியாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் நிலவியது போன்றவை வேளாண் வளர்ச்சியின் தடைக்கற்களாக அறியப்படுகிறது.

நேருவின் காலகட்டத்தில் பொதுத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அரசின் முதலீடானது 1950-1964ஆண்டுகளுக்கிடையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.9 விழுக்காடாக இருந்தது (Tirthankar Roy 2020) இதனால் மின்சார உற்பத்தி, நீர்ப்பாசனம், ரசாயன உர உற்பத்தி போன்றவை தொடங்கப்பட்டு வேளாண்மை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இதுபோல் தொழில் துறையின் மீதான முதலீடானது வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலிருந்தது. டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலை, நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு தேவையான சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலை, ரசாயன உரம் தயாரிக்கும் தொழிற்சாலை போற்றவை நேரடியாகவே வேளாண்மையினை தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அழைத்துச் சென்றது. தரமான விதைகள், வேளாண் ஆய்வகங்கள் போன்றவையும் வேளாண்மை வளர்ச்சியினை மேம்பாடு அடையச் செய்வதற்கு உதவியது. தொழில் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பான சாலை, பாலங்கள் போன்றவை வேளாண்மை மேம்பட வழிவகுத்தது. இந்தியாவின் நிலவிவந்த வறுமையினை ஒழிக்க உணவு உற்பத்தியில் சுயச்சார்பினை அடையவும், வேலைவாய்ப்பினை அதிகரிப்பதையும் முதன்மையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. நேருவின் அயல் நாட்டுப் பொருளாதாரக் கொள்கை அயல் நாட்டுப் போட்டியினைத் தவிர்க கட்டுப்பாடான (மூடிய) பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க பொது-தனியார்த் துறைகள் ஊக்குவிக்கப்பட்டது. இதற்காக இறக்குமதி சார்புநிலை பின்பற்றப்பட்டது. தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் அளவிற்கு அதிகமான மனித ஆற்றல் வேளாண்மையிலிருந்தது தொழில் துறைக்கு மடைமாற்ற வழிவகை செய்தது. நேரு ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியைவிட வேளாண்மை வளர்ச்சி அடைந்ததால் கிராமப்புற வறுமை குறைந்ததாக மான்டெக் சிங் அலுவாலியா குறிப்பிடுகிறார். இதுபோல் தல வருமானம் காலனி ஆதிக்கத்திலிருந்ததைவிட 50 விழுக்காடு நேரு காலத்தில் அதிகரித்திருந்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தது.

நேருவின் ஆட்சிக்காலம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அவர் மறைந்த 1964ஆம் ஆண்டுவரை உள்ளடக்கியதாகும். இக்காலகட்டங்களில் பொதுவாக நோக்கும்போது இந்திய வேளாண்மை புறக்கணிக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது. வேளாண்மையில் நிறுவன மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது ஆனால் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் மட்டுமே வேளாண்மைக்கு மொத்த திட்டச் செலவில் அதிக அளவாக ஒதுக்கீடு (வேளாண்மை மற்றும் நீர்ப் பாசனத்திற்கு 31 விழுக்காடு) செய்யப்பட்டிருந்தது அதற்கு அடுத்துவந்த ஐந்தாண்டு திட்டங்களில் ஒதுக்கீடு (விழுக்காட்டு நிலையில்) குறைக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் திட்ட காலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்ததற்கு முக்கிய காரணம் கூட்டுறவு வேளாண்மை, உள்கட்டமைப்பு, வேளாண் ஆராய்ச்சி, நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது, சாகுபடி பரப்பு அதிகரித்ததும் ஆகும். புதிய வேளாண்மை கொள்கை நடைமுறைகள் இயற்கையாகவே வேளாண்மை சிறப்பாகப் பயிரிடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இம்முறைகளினால், இந்தியா எதிர்கொண்ட உணவு பஞ்சங்களை எளிதாகக் கடந்துவர முடிந்தது (Bipan Cheandra et al 2008). ஆனால் 1960களின் பிற்பகுதியில் வேளாண்மையில் தேக்கநிலை உண்டானது. இதற்கு முக்கியக் காரணம் மக்கள் தொகை அதிகரிப்பாகும். அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய முடியாமல் போனது எனவே 1960களில் பிற்பகுதியில் உணவு தட்டுப்பாடு நிலவியது.

– பேரா.பு.அன்பழகன்

ஆடுகளை அமைதி படுத்துதல்: பிரச்சாரம் எப்படி செயல்படுகிறது – தமிழில் க.ஆனந்தன்

ஆடுகளை அமைதி படுத்துதல்: பிரச்சாரம் எப்படி செயல்படுகிறது – தமிழில் க.ஆனந்தன்




1970களில், நான் ஹிட்லருக்கு முன்னணி பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவரான ரேனி ரீபென்ஸ்தால் அவர்களை சந்தித்தேன், அவரின் காவியமான படங்கள் நாஜிக்களை மகோன்னதமானவர்களாக சித்தரித்திருக்கும். நாங்கள் இருவரும் கீன்யாவில் ஒரே தங்கும் விடுதியில் தங்கியிருக்க வேண்டியிருந்தது, அங்கு அந்த பெண்மணி ஒரு புகைப்படம் எடுக்கும் பணிக்காக வந்திருந்தார், அவர் ஹிட்லரின் இதர நண்பர்களுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து தப்பி வந்திருந்தார். அந்தப் பெண்மணி என்னிடம் தெரிவித்தது, அவருடைய படங்களில் ‘நாட்டுபற்று செய்திகள்’ இடம்பெற்றதிற்கு ‘மேலிடத்திலிருந்து வந்த ஆணைகள்’ காரணம் அல்ல, மாறாக, அவை ஜெர்மன் பொதுஜனத்தின் “அடிபணியும் வெற்றிடம்” (ஆட்டுமந்தை போல் என்கிறார்மொர்) பொறுத்தே இருந்தது என்றார்.

“அவர்களில், தாராளவாதிகளும், படித்த பூர்ஷுவாக்களும் இருந்தார்களா” என நான் வினவியதற்கு, “ஆம், குறிப்பாக அவர்கள்” என்றார் அவர்.

நான் சுற்றி பார்க்கும் போது தற்போது மேற்கத்திய சமூகங்களை பிரச்சாரங்கள் விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நான் இதைப் பற்றி நினைக்கிறேன்.

நிச்சயமாக நாம் 1930 களின் ஜெர்மனியிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறோம். நாம் வாழ்வது தகவல்களின் சமூகங்களில், நாம் சர்வதேசிய வாதிகள். நாம் எந்த காலத்திலும் இவ்வுளவு அறிந்திருக்கவில்லை, இவ்வுளவு அதிகமாக தொடர்பு இருந்ததில்லை, இதைவிட சிறந்த வகையில் தொடர்பில் இருந்ததில்லை.

நாம் அப்படித்தானா? அல்லது நாம் ஊடக சமூகத்தில் வாழ்கிறோமா, அங்கு மூளை சலவை நயவஞ்சகமாகவும், இடைவிடாமலும், நடைபெறுகிறதா? உணர்வுகள் நாட்டின் தேவை களுக்கும் பொய்களுக்கும் அல்லது கார்ப்பரேட் சக்திகளுக்கு ஏற்ப வடிகட்டப்படுகிறதா?

ஐக்கிய அமெரிக்கா மேற்கத்திய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேற்குலகின் 10 முதன்மையான ஊடகங்களில் 9 நிறுவனங்கள் வட அமெரிக்க கண்டத்தில் உள்ளன. இண்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்கள் -கூகுள், முகநூல், டுவிட்டர்-ஆகியவை பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கு சொந்தமானவை, அமெரிக்கர்களால் கட்டுபடுத்தப்படுபவை.

என்னுடைய வாழ்நாளில், அமெரிக்கா தூக்கி எறிந்தது அல்லது தூக்கி எறிய முயன்றது 50க்கு மேற்பட்ட அரசுகளை, அவைகள் பெரும்பாலும் ஜனநாயக பூர்வமாக தேர்தெடுக்கப்பட்டவை. அது 30க்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்களில் தலையிட்டுள்ளது. அது 30 நாடுகளின் மக்கள் மீது குண்டுகளை வீசியுள்ளது, அந்த நாடுகள் பெரும்பாலும் ஏழை நாடுகள், இதற்கெதிரான பாதுகாப்பு இல்லாதவர்கள், 50 நாடுகளின் தலைவர்களை கொலை செய்ய முயன்றுள்ளது. 20 நாடுகளில் அது விடுதலை இயக்கங்களை அடக்க போர் நடத்தியுள்ளது.

இத்தகைய படுகொலைகளின் அளவும், அவற்றின் பரந்துபட்ட தன்மையும் பெரும்பாலும் சொல்லப்படவில்லை, கவனத்தில் கொள்ளவில்லை மேலும் அதற்கு காரணமானவர்கள் இன்னமும் ஆங்கில-அமெரிக்க அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

காதாசிரியர் ஹரால்டு பிண்டர் இறப்பதற்கு முன் ஆண்டுகளுக்கு முன் 2008ல் இரண்டு அசாதாரணமான உரைகளை நிகழ்த்தினார், அது அமைதியை உடைத்தது :

“யு. எஸ். வெளியுறவுக் கொள்கையை சிறப்பாக கீழ்கண்டவாறு விளக்கலாம் . நீ எனது கு.யை முத்தமிடு அல்லது நான் உனது தலையில் காலால் உதைப்பேன். அது அந்தளவுக்கு எளிமையானது அந்தளவுக்கு முரட்டுதனமானது. அதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அது நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமாக இருந்தது. அது தவறான தகவல்களை அளிக்க அமைப்புகளை கொண்டிருந்தது, அது வெறிக்கூச்சலை பயன்படுத்தும், மொழியை திரிக்கும், அது ஏற்றுக் கொள்ள வைக்க முயல்வது போல் காட்டும், ஆனால் அவையனைத்தும் உண்மையில் பொய்மூட்டைகள். அது ஒரு வெற்றிகரமான பிரச்சாரம். அவர்களிடம் பணம் உள்ளது, அவர்களிடம் தொழிற்நுட்பம் உள்ளது, அவர்களிடம் அவர்கள் செய்த செயல்களிலிருந்து தப்பிவிட சகல வழிகளும் உள்ளது, ஆகவே அதை அவர்கள் செய்கிறார்கள்.

பிண்டர் நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு பேசிய போது இதைத் தெரிவித்தார் : அமெரிக்காவின் குற்றங்கள் அமைப்புரீதியிலானவை, மாறாதவை, கொடூரமானவை, வருத்தப்படாதவை, ஆனால் உண்மையில் மிகச் சில மக்கள் மட்டுமே அதைப் பற்றி பேசியுள்ளனர். நீங்கள் இதனை அமெரிக்காவிடம் கொடுத்திருக்க வேண்டும். அது உலகம் முழுவதும் துல்லியமாக அதிகாரத்தை பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறது, ஆகவே அது உலகம் முழுவதற்குமான நன்மை செய்பவர்கள் போல முகமூடி அணிந்து சுற்றிவருகிறது. அது மிகவும் புத்திசாலித்தனமான, சிலசமயம் நகைப்பாகவும், மிகவும் வெற்றிகரமாக ஹிப்னாசிஸ் செய்கிறது.

பிண்டர் எனது நண்பர் மற்றும் கடைசியான சிறந்த அரசியல் துறவி-அதாவது மறுதலிக்கும் அரசியல் பண்படுத்துவதற்கு முன், நான் அவரிடம் “ஹிப்னாசிஸ்” என்பது ரேனி ரீபென்ஸ்தால் சொல்லும் “அடிபணியும் வெற்றிடமா” என்று வினவினேன். அதற்கு அவர் “ஆம் ” என்றார்.

நமது அமைப்புகளான கார்ப்பரேட் ஜனநாயகத்தில், போர் என்பது பொருளாதார அவசியம், அது, பொதுத்துறை மான்யத்திற்கும் தனியார் துறை லாபத்திற்குமான பொருத்தமான திருமண பந்தம், முதலாளிகளுக்கு சோசலிசம், ஏழைகளுக்கு முதலாளித்துவம், 9/11க்குப் பிறகு யுத்த தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் விண்ணில் பறந்தன. மேலும் இரத்தம் சிந்தப்பட இருக்கிறது, அது தொழிலுக்கு மிகவும் உகந்தது.

இன்று மிகவும் லாபகரமான போர்களில் ஒவ்வொன்றுக்கும் அவைக்கென பிரத்யோக பிராண்ட் உள்ளது. அந்த யுத்தங்கள் “என்றென்றைக்குமான யுத்தங்கள்” என்றழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், ஈராக், ஏமன், தற்போது உக்ரைன். இவையனைத்துமே பொய் மூட்டைகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஈராக் மிகவும் இழிவான உதாரணம், அதனுடைய பேரழிவு ஆயுதங்களுக்காக யுத்தம், அது கடைசிவரை இல்லவே இல்லை. நேட்டோ 2011ல் லிபியாவை அழித்ததிற்கு பெங்காசியில் நடைபெற்ற கொன்றுகுவிப்பு காரணம் என நியாயப்படுத்தப்பட்டது, ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை , ஆப்கனிஸ்தான் 9/11க்கு வசதியான பழிவாங்கல் நடவடிக்கை எனப்பட்டது, ஆப்கான் மக்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இன்று, ஆப்கானிஸ்தான் பற்றிய செய்திகளென்றால் -தாலிபான்கள் எந்தளவுக்கு கொடூரனமானவர்கள் என்பதே-ஜோ பைடன் ஆப்கான் வங்கிகளின் ரிசர்வ் நிதியான 7 பில்லியன் டாலர்களை திருடிக் கொண்டதும், அதனால் ஆப்கான் மக்கள் பரந்து பட்ட அளவில் துயரங்கள் சந்திப்பதும் செய்திகள் கிடையாது. சமீபத்தில் வாஷிங்டனிலிருந்து செயல்படும் தேசிய பொது வானொலி இரண்டு மணி நேரம் ஆப்கனிஸ்தான் பற்றிய நிகழ்ச்சியை ஒலிபரப்பியது, அதில் அங்கு பட்டினியால் வாடும் மக்களைப் பற்றி 30 விநாடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜூன்மாதம் நடைபெற்ற நேட்டோ வின் உச்சிமாநாட்டில், இந்த அமைப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, ஒரு யுத்த உத்தி ஆவணத்தை நிறைவேற்றியுள்ளது, அந்த ஆவணத்தின்படி ஐரோப்பாவை மேலும் இராணுவ மயமாக்கி, இரஷ்யா மற்றும் சீனாவுடனான போர்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்கிறது. அது தனது சக அணு ஆயுத போட்டியாளர்களுடன் பலதளங்களில் போர் புரிதல் பற்றி பரிந்துரைக்கிறது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது அணு ஆயுத யுத்தம் பற்றி பேசுகிறது.

“நேட்டோவின் விரிவாக்கம் வரலாற்று வெற்றியாக உள்ளது” என அந்த ஆவணம் தெரிவிக்கிறது.

நான் அவற்றை நம்பமுடியாமல் படித்தேன்.

“அந்த வரலாற்று வெற்றியின்” அளவுகோல்தான் உக்ரைனில் நடைபெறும் போர், அது பெரும்பாலும் செய்தியல்ல, ஆனால், ஒருதலை பட்சமான, துதிபாடும் தேசிய வெறிக்கூச்சல், திரித்து கூறுதல், சில தகவல்களை வேண்டுமென்றே விட்டுவிடுவது ஆகியனவே.

கடந்த எட்டு வருடங்களாக உக்ரைனில், இரஷ்யாவின் எல்லைக்கு அருகில் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டதிற்கும், அவர்களின் இருப்பிடங்கள் கிரிமினல்தனமாக அழிக்கப்பட்டதிற்கும் எதிர்வினையாக பிப்ரவரியில் இரஷ்யா உக்ரைன் உள்ளே நுழைந்தது.

2014ஆம் ஆண்டில் அமெரிக்கா, உக்ரைனில் ஒரு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜனநாயக ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுபவரை வெளியேற்றிவிட்டு, அவருக்கு பதிலாக தங்கள் நபர் ஒருவரை அதிகாரத்தில் நிருத்தி வைத்தனர்.

சமீப காலத்தில் அமெரிக்காவின் “டிபன்டர் ஏவுகனைகளை” கிழக்கு ஐரோப்பாவில், போலந்து ஸ்லோவேனியா, செக் குடியரசு, நிச்சமயாக ரஷ்யாவை குறிவைத்தே நிறுத்தப்பட்டு, அதே சமயம் அதற்கு இணையாக, பொய்யான வாக்குறுதிகளை பல காலமாக, 1990ல் ஜேம்ஸ் பேக்கர் கர்ப்பசேவ் விடம் நேட்டோவை ஜெர்மனிக்கு அப்பால் விரிவு படுத்த மாட்டோம் என்பது தொடங்கி வழங்கி வருகிறது.

உக்ரைன் போரின் முகப்பு களம். நேட்டோ திறமையாக அந்த எல்லை நாட்டை வந்தடைந்துவிட்டது, அந்த நாட்டின் வழியே ஹிட்லிரின் படைகள் சூறாவளித் தாக்குதலை 1941ல் மேற்கொண்டன, அந்த போரில் சோவியத் யூனியனில் 23 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர்,

கடந்த டிசம்பரில் இரஷ்யா தொலைநோக்க பார்வையுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பு திட்டம் ஒன்றை முன்மொழிந்தது, மேற்கத்திய ஊடகங்களில் இது நிராகரிக்கப்பட்டது, கேலி செய்யப்பட்டது, மூடிமறைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை வரிக்கு வரி படித்தது யார்? பிப்ரவரி 24 தேதியன்று உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலின்ஸ்க்கி அமெரிக்கா உக்ரைனுக்க ஆயுதங்களை வழங்கி பாதுகாப்பு வழங்காவிடில் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதாக, மிரட்டல் விடுத்தார். இதுவே அமைதி குலைவதற்கு முன் கடைசி ஆத்திரமூட்டல்.

அதே நாளில் இரஷ்யா படைகள் உக்ரைனுக்குள் சென்றது- மேற்கத்திய ஊடகங்கள் இதனை ஆத்திரமூட்டலற்ற பிறவிக்குணத்தால் அவப்பெயர் என்று வர்ணித்தன, வரலாறு, பொய்கள், அமைதி ஆலோசனைகள், மின்ஸ்க் நகரில் டான்பாஸ் பகுதிக்காக ஏற்படுத்தப்பட்ட புனிதமான ஒப்பந்தகள் இவையனைத்தும் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

ஏப்ரல் 25ஆம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லாயிட் ஆஸ்டின்,” கியவ்” (உக்ரைன் தலைநகர்- மொர்) நகருக்கு பறந்து சென்றார், அங்கு அவர் அமெரிக்காவின் நோக்கம் இரஷ்ய பெடரேஷனை அழிப்பது என்றார், அதற்கு அவர் பயன்படுத்தி வார்த்தை ‘பலவீனப்படுத்துவது’. அமெரிக்கா விரும்பிய போர் அதற்கு கிடைத்துவிட்டது, அந்த யுத்தத்தை நடத்துபவர், அமெரிக்காவால் நிதி அளிக்கப்பட்டவர், ஆயுதந்தரித்த போலி மற்றும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளும் சிப்பாய்.

இவை எதுவுமே மேற்கத்திய வாசகர்களுக்கு விளக்கப்படவில்லை.

இரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது வேண்டுமென்றே மேற்கொண்டது, மன்னிக்க முடியாதது, ஒரு சுயாதிபத்திய நாட்டின் மீது படையெடுப்பது குற்ற செயலாகும். இதற்கு எந்த “ஆனாலும்” கிடையாது- ஒன்றே ஒன்றைத் தவிர,

உக்ரைன் யுத்தம் எப்போது ஆரம்பித்தது அதனை ஆரம்பித்தது யார்? ஐக்கிய நாடுகள் சபையின்படி, 2014 முதல் இந்த ஆண்டு வரை 14,000 மக்கள் கியவ் அரசு நடத்திய சிவில் யுத்தத்தில் டான்பாஸ் பகுதியில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலான தாக்குதல்கள் நவீன நாஜிகளால் மேற்கொள்ளப்பட்டது.

2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐடிவி தொலைகாட்சியின் ஒரு செய்தி தொகுப்பை, ஜேம்ஸ் மாட்டீஸ் என்ற புகழ்பெற்ற நிருபர் வழங்கியதை பாருங்கள், மரியபோல் நகரின் சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும் காயமடைந்தார், அந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனின் அசவ் பட்டாலியன் (நவீன நாஜிக்கள்).

அதே மாதத்தில் டஜன் கணக்கான இரஷ்ய மொழி பேசுபவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர் அல்லது எரியூட்டப்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தனர், ஒடீசா நகரில், அவர்கள் இருந்த தொழிற்சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது, பாசிச அடியாட்கள், நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டவரும், பண்டைய மொழி பேசுபவர்களின் எதிரியான வெறிபிடித்த ஸ்டீபன் பண்டேராவின் அடியாட்கள் அவர்கள். நியூயார்க் டைம்ஸ் பண்டாராவின் இந்த அடியாட்களை தேசியவாதிகள்’ என்றழைத்தது.

“இந்த நெருக்கடிக்கு கால கட்டத்தில் நமது நாட்டின் வரலாற்றுப் பணி ” என்ற அந்திரேய் பைல்ட்ஸ்கி இவர் அசவ் பட்டாலியன் நிறுவனர், “உலகத்தின் வெள்ளை இனங்கள் அவர்களின் இருத்தலுக்கான கடைசி சிலுவைப் போரில் தலைமை ஏற்று செமிடிக் இனங்களால் தலைமை தாங்கப்படும் மனிதர்களை விட கீழான பிறவிகளை எதிர்க்க வேண்டும்”.

பிப்ரவரி மாதத்திலிருந்து தங்களை தாங்களே ‘செய்தி கண்காணிப்பாளர்கள்’ என நியமித்துக் கொண்டவர்கள் தூக்கி நிறுத்த முயலுவது, (இவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகளிடம் நிதியுதவி பெறுபவர்கள்) உக்ரைனில் நவீன நாஜிக்கள் இல்லை என்ற அபத்தத்தை.

“ஏர் பிரஷிங்” என்ற பதம் ஒரு காலத்தில் ஸ்டாலின் தனக்கு வேண்டாதவர்களை வெளியேற்றும் போது பயன்படுத்தப்பட்டது, தற்போது அதுவே முக்கிய செய்தி நிறுவனங்களின் கருவியாகிவிட்டது.

ஒரு பத்தாண்டிற்குள் ‘நல்ல சீனா’ “ஏர் பிரஷ்” செய்யப்பட்டு ‘மோசமான சீனா’ அதற்கு பதிலாக வந்துவிட்டது. அது உலகத்தின் தொழிற்கூடம் என்பதிலிருந்து புதிதாக மொட்டவிழும் சாத்தான் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இதற்கு எதிரான ஏராளமான பிரச்சாரங்கள் அமெரிக்காவிலிருந்துதான் தொடங்குகிறது, அது அதன் பிறகு அமெரிக்காவின் போலிகளாலும், “சிந்தனை குளங்கள்” மூலமாகவும் பரப்பப்படுகிறதுஇழிவான ஆஸ்திரேலியாவின் “ஸ்டேரேடஜிக் பாலிசி இன்ஸ்டிடியுட்” போன்றவைகள், இவை யுத்த தளவாட உற்பத்தி நிறுவனங்களின் குரலாக ஒலிப்பவை, மேலும் பேராசை பிடித்த பத்திரிக்கையாளர் பீட்டர் ஹார்ட்சர், இவர் சண்டெ மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையின் நிருபர் சீனாவிற்கு ஆதரவாக பேசுபவர்களை, எலிகள், ஈக்கள், கொசு மற்றும் குருவி என்றழைப்பார், இந்த “பூச்சிகள்” அழிக்கப்பட வேண்டும் என கூறுவார்.

மேற்கு உலகில் சீனாவைப் பற்றிய செய்திகள் அனைத்துமே பீஜிங் அச்சுறுத்தல் பற்றி மட்டும்தான். “ஏர் பிரஷ்” செய்யப்பட்டிருப்பது சீனாவைச் சுற்றிலும் 400 அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளன என்பதை, அது ஆயுதங்களால் ஆன நெக்லஸ் போன்று ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கி பசுபிக், தென்கிழக்கு ஆசியா, கொரியா, ஜப்பான் வரை நீள்கிறது, ஜப்பானியத் தீவான ஒகினவானா மற்றும் கொரிய தீவான ஜெஜூ ஆகியன மருந்து கெட்டிக்கப்பட்ட பீரங்கி போல சீனாவின் முக்கிய தொழிற்நகரத்தை மிக மிக அருகிலிருந்து குறிவைத்துள்ளன. பெண்டகான் அதிகாரி ஒருவர் இதைப் பற்றி குறிப்பிடும் போது சீனாவிற்கான தூக்கு கயிறு என்று வர்ணித்தார்,

பாலஸ்தீனம் எனக்கு நினைவுக்கு தெரிந்த நாள் முதலாய் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது. பிபிசி யைப் பொறுத்தவரை அது இரண்டு முரண்பட்ட கருத்துகளால் ஏற்பட்ட மோதல் அவ்வுளவே. நவீன காலத்தில் மிக நீண்ட காலத்திற்கு, மிகவும் மிருகத்தனமான, சட்டவிரோதமான இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி தனது செய்திகளில் குறிப்பிடுவதே இல்லை.

தாக்கப்படும் ஏமன் மக்கள் செய்திகளில் இடம் பிடிப்பதே இயலாத காரியம். அவர்கள் ஊடகத்திற்கு மக்களல்ல, சவுதி அமெரிக்காவின் கொத்து குண்டுகள் மூலம் குண்டு மழை பொழிய வைக்கும் போது, குறி வைக்கும் சவுதி இராணுவ அதிகாரிகளின் அருகில் பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் இருந்து குறிவைப்பது குறித்து யோசனைகளை பகிர்ந்து கொள்ளும்போது, ஏமனில் 5 லட்சம் குழந்தைகள் உணவின்றி வாடுகின்றன.

இவ்வாறு சில செய்திகளை தவிர்ப்பது மூலம் மூளைச் சலவை செய்வது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் உலகப் போரில் மனிதர்களை(பிரிட்டன்) கசாப்பு செய்த செய்திகளை அமுக்கிய நிருபர்களுக்கு ”சர்” பட்டம் வழங்கப்பட்டது, அதன் பிறகு அவர்கள் அதனை தங்களது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்தனர். 1917ஆம் ஆண்டு மான்செஸ்டர் கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் சி. பி. ஸ்காட் அன்றைய பிரிட்டன் பிரதமர் லாயிட் ஜார்ஜ் அவர்களிடம் “மக்கள் (உண்மையை) தெரிந்து கொண்டால், நாளையே போரை நிறுத்திவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது, அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை” என்றார்.

மக்களையும் நிகழ்வுகளையும் இதர நாடுகளிலுள்ளவர்கள் இவர்களைப் பார்ப்பது போல் இவர்கள் அவர்களைப் பார்க்க மறுப்பது மேற்குலகின் ஊடக வைரஸ், இது கோவிட் போலவே அவ்வுளவு அழிவு சக்தி கொண்டது. இது உலகை நாம் ஒரு வழியாகக் காட்டும் ஆடி வழியே பார்ப்பது போன்றது, அந்த ஆடியில் “நாம்” என்றால் “ஒழுக்கம், தீமையற்றவர்கள்” அதே சமயம் “அவர்கள் அவ்வாறில்லை “. இது ஆழமாக ஏகாதிபத்திய பார்வை.

சீனாவிலும் இரஷ்யாவிலும் ஒரு வாழும் வரலாறு உண்டு என்பது அரிதாகக்கூட சொல்வதில்லை, அரிதாகக்கூட புரிந்து கொள்ளவும் முயல்வதில்லை. விளாதிமீர் புடின் என்றால் அடல்ப் இட்லர்,

ஜீ ஜிங் என்றால் பின்பு மான் சூ. காலத்தால் அழிக்க முடியாத சாதனைகளான, அருவருக்கத்தக்க ஏழ்மையை ஒழித்த சாதனையை யாருக்கும் தெரியாது. இது விபரீதமானது இழிநிலையானது.

நாம் எப்போது புரிந்து கொள்ள நம்மை அனுமதிக்கப் போகிறோம்? பத்திரிக்கையாளர்களை தொழிற்சாலை போன்று பயிற்றுவிப்பது இதற்கு தீர்வல்ல. டிஜிட்டல் கருவிகள் இதற்கான மந்திரக் கோலும் அல்ல. அது ஒரு வழிதானேத் தவிர அதுவே முடிவல்ல, அது டைப்ரைட்டரில் ஒரு விரலால் அடிப்பது போன்றது,

சமீப காலங்களில் சில மிகச் சிறந்த பத்திரிக்கையாளர்கள் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அதற்கு “டிபன்ஸ்டேரேட்டட்” (Defenstated) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் சில ‘கிறுக்கு பிடித்த’ பத்திரிக்கையாளர், அரசுக்கு எதிரான பத்திரிக்கையாளர், உண்மை விளம்பிகள் என இவர்களுக்குகூட இடமிருந்தது இன்று இடமில்லை.

ஜூலியன் அசாஞ் வழக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. ஜூலியனும் விக்கிலீக்ஸ்ம் கார்டியன் பத்திரிக்கைக்கு பரிசுகளையும் வாசகர்களையும் அளித்த போது “நியூயார்க் டைம்ஸ்” மற்றும் இதர சுயமுக்கிய ஆவண நாளிதழ்களில் அவர் கொண்டாடப்பட்டார்.

நிழல் அரசு(சிஐஏ போன்ற அமைப்புகள்- மொர்) இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவருடைய கனிணி ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட வேண்டும் என்று மிரட்டிய போது, அவரது பெயருக்கு களங்கம் விளைவித்த போது, ஜூலியன் மக்களின் எதிரியாக்கப்பட்டார். (அன்றைய) உதவி ஜனாதிபதி பைடன் அவரை “அதிநவீன தொழிற்நுட்ப பயங்கரவாதி” என்றழைத்தார். ஹில்லாரி கிளிண்டன், “நாம் இந்த மனிதரை டிரோன்கள் மூலம் அழிக்க முடியாதா?” என்று கேட்டார்.

தொடர்ந்து கொண்டிருக்கும் ஜூலியன் அசான்ஜ்க்கு எதிரான துஷ்ப்பிரயோகம் மற்றும் அவதூறுகள் -ஐ. நா. வின் சித்திரவதைக்கு எதிரான சிறப்பு தூதர் இதனை “மாப்பிங்” என்றழைக்கிறார்- இது சுதந்திரமான பத்திரிக்கைகள் தரந்தாழ்ந்து இருப்பதை காட்டுகிறது. நமக்கு அவர்கள் யார் என தெரியும். நான் அவர்களை இவர்களோடு கூட்டணியில் இருப்பவர்கள் என்பேன்.

பத்திரிக்கையாளர்கள் இதற்கு எதிராக எப்போது நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள்? இதற்கெதிரான உண்மையை உரத்து பேசும் பல பத்திரிக்கைகள் தற்போதே வலைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சிறந்த பத்திரிக்கையாளர் ராபர்ட் பேரியால் நிறுவப்பட்ட கன்சார்சியம் நியூஸ், மாக்ஸ் ப்ளுமென்தால் நடத்தும் கிரேசோன், மிண்ட் பிரஸ் நியூஸ், மீடியா லென்ஸ், டிகிளாசிபைடு யூகே, அலபோராடா, எலக்ட்ரானிக் இன்டிபிடா இன்னும் பலர் உள்ளனர் விடுபட்ட பெயருக்குரியவர்கள் என்னை மன்னித்துவிடட்டும்.

என்று எழுத்தாளர்கள் எழுந்து நிற்பார்கள், அவர்கள் 1930 களில் பாசிசம் தலைதூக்கிய போது அதற்கு எதிராக நின்றதைப் போல்? என்று சினிமா எடுப்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள், அவர்கள் 1940 களில் பனிப்போருக்கு எதிராக நின்றதைப் போல்? என்று நையாண்டி செய்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள் அவர்கள் சென்ற தலைமுறையில் நின்றதைப் போல்?

கடந்த 82 வருடங்களாக சரியானது என்ற நினைப்பில் ஊறிப் போனவர்களுக்கு, அதாவது கடைசி உலகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ பதிப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, ரெக்கார்டுகளை நேர்படுத்திட இது சரியான தருணமில்லையா, அவர்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தி, பிரச்சாரத்தை கட்டுடைக்க வேண்டாமா? அதற்கான அவசரம் முன்னெப்போதையும்விட இப்போது அதிகம்.

தமிழாக்கம் க, ஆனந்தன். Translation of article from Counter Punch September 8, 2022.

நூல் அறிமுகம்: மாதவராஜின் பொய் மனிதனின் கதை – எஸ். ஹரிராவ்

நூல் அறிமுகம்: மாதவராஜின் பொய் மனிதனின் கதை – எஸ். ஹரிராவ்




கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் ஒரு பெரும் வளர்ச்சி நாயக பிம்பம் ஊடகங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டு, பொய்யான செய்தி தகவல்களையும், மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி இரண்டாவது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. அவரது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிரமிப்பான பிம்பங்களை “பொய் மனிதனின் கதை” மூலம் எழுத்தாளர் மாதவராஜ் அம்பலப்படுத்தியுள்ளார் காலத்தின் அவசியம் கருதி, தமிழில் இப்படியான ஒரு பதிவின் தேவையையும்  அவசியத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது இந்தப் புத்தகம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தை எழுதிய ஜான் பெர்கின்ஸ் ஓரிடத்தில் குறிப்பிடுவார். அவருக்கு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் பயிற்சி கொடுத்த  நபர்,  வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களிடம் பணம் குவிக்கும் கட்டுமானப் பணிகளுக்கான திட்டங்களைத்த தீட்டி, அதனை செயல்படுத்தும் காண்ட்ராக்ட்கள் அமெரிக்க நாட்டு கம்பெனிகளுக்கு கிடைக்க வைப்பதற்கான தகிடுதத்த வேலைகளை தன் எல்லாவிதமான திறமைகளையும்  பயன் படுத்தி சாதிப்பது தான் அவருடைய வேலை என்பார். இப்படியான வேலைகளுக்காக உங்களை ஒரு EHM ஆக தயார் செய்வதே  எனக்களிக்கப்பட்ட பணி என்று கூறுவார். Economic Hit Man என்பது ஒரு நகைச்சுவையான பெயர் போல் உள்ளதே என்று இவர் கேட்பார்.  அதன் தீவிரத் தன்மை  தெரியாமல் இருக்கவே  பொருளாதார அடியாள் என்று நகைச்சுவையாக பெயர் வைத்துள்ளோம் என்பார் பயிற்சியாளர்.

பொய் மனிதனின் கதையை தலைப்பை வைத்து படிக்கத் துவங்கும் போது அப்படித்தான் நாமும் உணருவோம். ஏதோ மோடி பொய்களாக, முட்டாள்தனங்களாக மக்களை ஏமாற்ற செய்து கொண்டிருக்கிறார் என்று அலட்சியமாக படிக்கத் துவங்குவோம். 3வது அத்தியாயம் முடிந்து 4வது, 5வது அத்தியாயம் தாண்டும் போது நமக்குள்ளே ஒரு பீதி கிளம்பும்.  குஜராத் கலவரங்களைப் பற்றி படிக்கும் போது முதுகு தண்டு சிலிர்க்கக் கூடிய வில்லத்தனங்கள் வெளிப்படும். ஆனால், அவர் தன்னை மிக அமைதியானவராக சாந்த சொரூபியாக நாட்டிற்காகவே தன்னை அர்ப்பணிப்பதாக சதா சர்வ காலமும் காட்டிக் கொள்வார்.

சேத்தன் பகத் நடத்திய தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகளில் துவங்கும் மோடியின் பொய்யான முகத்திரையின் கிழிசல்கள் வெளிப்பட்டு, தொடரும் அத்தியாயங்களில் அவரது திருமணம், கல்வித்தகுதி, வாத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்பது, டிஜிடல் கேமரா இல்லாத காலத்தில் அதை பயன் படுத்தியதான பொய் ஆகியவை அம்பலப்பட்டு நிற்கும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தினால் ஏமாற்றப்பட்ட மக்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான “ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்” வாக்குறுதியில் ஏமாந்த ராணுவ வீரர்களின் போராட்டம் ஆகிய நிகழ்ச்சிகளின் விவரிப்பு படிக்கும் எவர் மனதையும் கலங்கடிக்கும். கோவிட் தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தே தங்கள் ஊர்களுக்குச் சென்ற அவலம், இறுதியாக இந்த நாட்டின் விவசாயிகளையும் விட்டு வைக்காத வேளாண் கொடும் சட்டங்களை எதிர்த்த போராட்டத்துடன் புத்தகம் முடிவு பெறுகிறது.

19 அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும்,மாதவராஜ் தனது வலிமையான உணர்ச்சி மிக்க எழுத்துக்களால் வாசகனை கிளர்ந்தெழச் செய்கிறார். இதற்காக ஒரு ஆராய்ச்சி மாணவனைப் போல் பல ஆதாரங்களைத் திரட்டி தகவல்களைச் சேகரித்துள்ளார்.  தனது கடினமான உழைப்பின் மூலம் ஒரு ஆவணம் போன்று இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதற்கான ஆதாரங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது

அதி தீவிர மோடி விசுவாசியாகிய எனது அமெரிக்க நண்பனுக்கும் எனக்கும் பல விவாதங்கள் காரசாரமாக, கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த புத்தகத்தை அவன் வந்த போது கொடுத்து படிக்கச் சொன்னேன். ஒரிரு நாட்களுக்குப் பிறகு புத்தகம் பற்றிய பேச்சு வந்த போது, புத்தகத்தில் உள்ள அனைத்தும் மறுக்க முடியாதவை என்று கூறி என்ன செய்வது என்று அலுத்துக் கொண்டான்அது தான் இந்த புத்தகத்தின் வெற்றி.

– எஸ். ஹரிராவ்

நன்றி: Bank Workers Unity

மாச்சில் சிறுகதை – அமீபா

மாச்சில் சிறுகதை – அமீபா




பளபளக்கும் வெள்ளை நிற காகிதத்தை கிழித்து அதனுள்ளிருந்து வட்ட வடிவமான அந்த கோதுமை பிஸ்கட்டை எடுத்து கடித்தார். மொறு மொறுப்பாக அது உடைந்தது.

பட்

திடீரென அவருக்கு நேற்று தெருவில் வைத்து நான்கு பேர் ஒருவனை அடித்தது நினைவில் வந்தது. தேங்காய் பிஸ்கட் சாப்பிடுகிறவனாம்.
ச் சே.. என்ன பிஸ்கட் அது. கரடுமுரடான வடிவத்தில், கடிக்கவே முடியாதபடி கடினமாக எப்படித்தான் அதை சாப்பிடுகிறார்களோ… அதுவும் சுலபத்தில் கெட்டுவிடும். தேங்காய் அது தெய்வத்திற்கு படைக்கும் பொருள். தேங்காயிலிருந்து பால் எடுக்க முடியும்… அதைப்போய் எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ… என பலவிதமாக யோசித்தார்.

தனது பொருளாதார வசதிக்கும், பசிக்கும் இதுவே உகந்தது என அவன் ஆத்திரத்துடன் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இவர் காதிலும் அது சரியாக விழவில்லை.

அதுவும் இந்த பக்கத்து வீட்டுக்காரன் இருக்கிறானே உப்பு பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு. உலகத்திலேயே நாங்கள்தான் அதிக ரோசமானவர்கள். அதனால் தான் நாங்கள் உப்பு பிஸ்கட் சாப்பிடுகிறோம் என சொல்லிக்கொண்டு திரிந்தான். ரோசம் கெட்டு இருந்தவனை உணர்வு பெற உப்பு பிஸ்கட் சாப்பிட சொன்னதே நாங்கள்தான் என அவர்கள் சொல்ல தொடங்கியதை அடுத்து இப்பொழுது உப்பும் இனிப்பும் கலந்து சாப்பிடுகிறார்கள் சதுரமான வடிவத்தில். என்ன வடிவம் இது… கொஞ்சமும் அழகியலே இல்லாமல் இருக்கிறார்கள். நிலவு போல, சூரியன் போல, பூமி போல அழகிய வட்ட வடிவத்திற்கு நிகர் உண்டா..

தன் கையிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து கண்களின் முன்னால் வைத்து பார்த்தார். அதன் வடிவம் அவர் மனதை கொள்ளை கொண்டது.

ஆனாலும் இதே வடிவத்தில், இதே போன்று உள்ள மைதா பிஸ்கட் சாப்பிடுபவர்களும், கோதுமை பிஸ்கட் சாப்பிடும் தம்மை போலத்தான் என்று சொல்லிக் கொண்டு திரிவதை இவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் எரிச்சல் பட்டார்.

தொலைவிலுள்ள ஊர்களிலெல்லாம் தேங்காய் பிஸ்கட்டை எடுத்து பிடிக்க முடியாதபடி அவர்களுடைய கட்டைவிரல் வெட்டப்படுவதாக செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தார். எப்படியோ போய்த் தொலையட்டும் என்று இருந்தார். அப்படியே இந்த சதுர பிஸ்கட்டை சாப்பிடுபவர்களையும் ஏதாவது செய்யட்டும் என நினைத்துக் கொண்டார்.

தன் வீட்டில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் எல்லாம் தீர்ந்த பிறகு புதிதாக வாங்குவதற்காக கடைத்தெருவிற்கு ஒரு நாள் சென்றார். அங்கே எங்கேயும் பிஸ்கட்டுகள் விற்பனையில் இல்லை. அதற்கு பதிலாக “கோதுமமிர்தம்” என்று ஒன்றை விற்றார்கள். அதைத்தான் இனி சாப்பிட வேண்டும் என்றார்கள். மஞ்சள் நிறத்தில் கொழக் கொழப்பாக பாட்டிலில் உள்ள அதைப் பார்த்த போதே இவருக்கு ஏதோ தோன்றி குமட்டிக்கொண்டு வந்தது.

கால காலமாக நான் சாப்பிட்டு வந்த பிஸ்கட்டை சாப்பிடக்கூடாது என சொல்வதற்கு இவர்கள் யார் என கேட்க நினைத்த போதே இவரது கட்டைவிரல் நடுங்கியது. ஆனால் இதே கேள்வியை கடைத்தெருவில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கட்டைவிரலே இல்லை. அது அவர்களிடம் இருந்தபோது நடுங்கியதே இல்லை.

– அமீபா

இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை – முனைவர் பு.அன்பழகன்

இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை – முனைவர் பு.அன்பழகன்




வேளாண்மைத்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினைச் செய்கிறது. வேளாண் பயிர் செய்யும் பணிகள் தொடங்குவதிலிருந்து அவற்றை சந்தை படுத்தும்வரை செலவிடப் பணம் தேவைப்படுகிறது. இந்திய விவசாயிகளில் பெருமளவிற்குச் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் ஆவார்கள். இவர்கள் பயிர் தொழிலுக்குத் தேவையான குறுகிய, நடுத்தர, நீண்டகாலக் கடனைப் பல்வேறு ஆதாரங்கள் வாயிலாகப் பெறுகின்றனர். இந்திய விவசாயிகள் தங்களின் பணத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள நிறுவன (Institutional) மற்றும் நிறுவனமல்லா (Non-Instituional) நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெறுகின்றனர். நிறுவனமல்லாக் கடன்களை முறைசாராக் கடன் எனவும் அழைக்கலாம். முறைசாராக் கடன்களை நிலச் சுவான்தாரர்கள், நிதி வணிகர்கள், தரகு முகவர்கள் போன்றவர்களிடமிருந்து பெறுகின்றனர். முறைசாராக் கடனின் வட்டி வீதம் 36 விழுக்காடு வரை உள்ளது. இதனால் விவசாயிகள் கடன் பொறியில் (Debt trap) வீழ்ந்துவிடுகின்றனர் (கடன் பொறி என்பது பழைய கடனைத் திருப்பி செலுத்துவதற்காகப் புதிய கடனை வாங்கத் துண்டும் நிலையாகும்). இந்த விவசாயிகளின் துயரினைப் புரிந்துகொண்ட அரசு பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் தொடர்ந்து திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. முறைசார் கடனை (நிறுவனக் கடனை முறைசார் கடன் எனவும் அழைக்கப்படுகிறது) அளிக்கக் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகள் என விவசாயிகளுக்குக் குறுகியகால, நடுத்தர, நீண்ட காலக் கடன்களை வழங்க வழிவகைகளை உருவாக்கித் தந்துள்ளது. 1951ஆம் ஆண்டு விவசாயிகளின் முறைசார் கடன் 10.2 விழுக்காடாகவும், 89.1 விழுக்காடு முறைசாராக் கடனாகவும் இருந்தது. 1966ல் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நவீன முறை விவசாயம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் விவசாய இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவை வாங்கவும், இயந்திரங்களைப் பயன்படுத்தவும் அதிக அளவிற்குப் பணம் தேவைப்பட்டது. 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கான ஒரு முக்கிய நோக்கம் வேளாண் வளர்ச்சிக்குத் தங்குதடையின்றி கடன் வழங்குவதாகும். 1970ல் வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகள் துவக்கப்பட்டது. இதனால் முறைசார்க் கடன் 1971ல் 32 விழுக்காடாக அதிகரித்தது. 1980ல் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதனால் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1991ல் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991ல் முதல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வங்கி நடவடிக்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. எனவே விவசாயக் கடன் அதிகரித்தது. 1991ல் மொத்த விவசாயக் கடனில் 65 விழுக்காடு முறைசார்க் கடனாக இருந்தது. மீண்டும் 1998ல் இரண்டாவது நரசிம்மம் குழுவின் பரிந்துரையின்படி வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்படி வங்கிகளுக்கான அதிகாரங்கள் நீக்குப்போக்குடன் செயல்பட அனுமதித்தது. வங்கிகள் துவங்க உரிமம் தேவை என்பது நீக்கப்பட்டது, இழப்பில் செயல்பட்டுவந்த வங்கிக் கிளைகள் மூடப்பட்டது, வட்டி வீத கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது, கடன் இலக்கு குறைக்கப்பட்டது. 1975ல் 5598ஆக இருந்த வங்கிக் கிளைகள் 1991ல் 11344ஆக அதிகரித்தது. இதனால் வேளாண்மைக்கான கடன் அதிகரிக்கத் தொடங்கியது.  ஆனால் 1991-2001ஆண்டுகளுக்கிடையே 28.67 விழுக்காடு மட்டுமே வங்கிகளின் கிளைகள் அதிகரித்தது. பெருமளவிற்கு வங்கிக் கிளைகள் கிராமப்புறங்களில் குறைந்தது. கடந்த 10ஆண்டுகளில் தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டதால் தற்போது (மார்ச் 2021ல்) 1.22  லட்சம் (பொது, தனியார் வங்கிகள்) வங்கிக் கிளைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது (www.rbi.org.in). வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கும் நடைமுறை உள்ளது.

1969ல் 14 விழுக்காடாக இருந்த முன்னுரிமைத் துறைக்கான கடன் பங்கானது 2002ல் 34.8 விழுக்காடாக அதிகரித்தது.  இதனால் வேளாண் துறை பெருமளவிற்குப் பயனடைந்தது. அதேசமயம்   வேளாண் துறையின் முறைசாராக் கடனின் பங்கு 4 விழுக்காட்டுப் புள்ளிகள் 1991 – 2002ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிகரித்தது. இம் முறைசாராக் கடனில் பெருமளவிற்கு நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். வங்கி விரிவாக்கம் குறைந்தது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அளவு குறைந்தது போன்றவை இதற்கான காரணங்களாகச் சுட்டப்படுகிறது. 2001க்கு பின்பு கிராமப்புறங்களில் வங்கி கிளைகள் விரிவாக்கம். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் மீண்டும் முறைசார் வேளாண் கடன்கள் 2002ல் 61.1 விழுக்காடாக இருந்தது 2013ல் 64 விழுக்காடாக அதிகரித்தது, 2015ல் இது 72 விழுக்காடாக மேலும் உயர்ந்தது ஆனாலும் நான்கில் ஒரு பங்கிற்குமேல் முறைசாராக் கடன் பெறப்பட்டிருந்தது (Ahubhm Sehal 2021). வங்கித்துறையில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய விவசாயிகள் சரியான வட்டி வீதத்தில் முறைசார்க் கடன்களைப் பெற்றுள்ளனர்.  அதே சமயம் பெரும்பகுதியான சிறு குறு விவசாயிகள் முறைசார் கடனை அணுகமுடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

Inthiya Velan Katanum Vivasayikalin Tharkolaikalum Article By Dr. P. Anpalagan இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை - முனைவர் பு.அன்பழகன்

Mjhuk;: Ashok Gulati and Ritika Juneja (2019): “Agricultural Credit System in India: Evaluation, Effectiveness and Innovations.” ZEF, Working Paper series 184, Centre for Development Research University of Bonn.

இந்தியாவின் அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள் வேளாண் கடனாக மொத்தக் கடன் அளவில் 1970ல் 9 விழுக்காடு அளித்திருந்தது.  இது தொடர்ச்சியாக அதிகரித்து 1990ல் 15.9 விழுக்காடாக உயர்ந்தது, ஆனால் 2000ல் 9.9 விழுக்காடாகக் குறைந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் இக்கடன் உயரத் தொடங்கியது, 2016ல் இக்கடன் 13.2 விழுக்காடாக உயர்ந்தது.  மொத்தக் கடனில் தொழில்துறைக்கு அதிக அளவில் (1970ல் 61.2 விழுக்காடு, 2016ல் 39.4 விழுக்காடு) அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (Shromona Gangulylk et al 2021). தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான NABARD (2018) கணக்கீட்டின்படி 2015-16ல் 61 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் முறைசார்க் கடனைப் பெற்றுள்ளதாகவும். 30 விழுக்காடு முறைசாராக் கடனையும் 9 விழுக்காடு முறைசார் மற்றும் முறைசாராக் கடனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறது.  நிஹாரிகா பாண்டே et al (2021) நடத்திய ஆய்வில் கோவிட் பெருந்தொற்று காலங்களில் வேளாண் கடன் 2020ல் சம்பா சாகுபடி காலத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்த விவசாயிகளில் 63 விழுக்காட்டினர் கடன் பெற்றவர்களாக இருந்தனர். இதில் 35 விழுக்காட்டினர் முறைசார்க் கடனும், 22 விழுக்காட்டினர் முறைசாராக் கடனும், இவ்விரண்டையும் 9 விழுக்காட்டினர் பெற்றிருந்தனர் என கணிக்கப்பட்டது.  இம் முறைசாராக் கடன் அதிக அளவில் நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயக் கடனின் அதிகரிப்பு பருவகாலத்தை சார்ந்துள்ளது. பருவமழை தொடங்கியவுடன் விவசாய நடைமுறைகள் உடனடியாக தொடங்கப்படவேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது. பருவம் தவறி பயிர்செய்வது எதிர்பார்க்கிற விளைச்சலைத் தராது. எனவே இதற்கானச் செலவுகளை எதிர்கொள்ள முறைசார் கடனைப் பெறுவதற்கு  அதிக நடைமுறைகளும், காலவிரயமும் உள்ளதால் முறைசாராக் கடனைப் பெற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உடனடியாகப் பயிர் வேலைகளைத் துவக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் அதிகப்படியான வட்டியையும் கருத்தில் கொள்ளாமல் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர்.  பல்வேறு காரணங்களினால் விவசாய உற்பத்தியில் இழப்பு அல்லது விளைபொருள்களுக்கான விலையின் வீழ்ச்சி போன்றவையினால் விவசாய வருமானம் குறைய நேரிட்டால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாமல் போகிறது. இது விவசாயிகளின் தற்கொலைக்கான முதன்மைக் காரணமாக உருவெடுக்கிறது. 1990களில் தொடங்கிய விவசாயிகளின் தற்கொலை இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு அன்மையில்  ஒன்றிய அரசினால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-Kisan Samman Nidhi)

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 1 டிசம்பர் 2018ல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி அளிப்பதற்காகத் துவக்கப்பட்டது.  ஒன்றிய அரசு இதற்கான நிதி உதவியினை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது. விவசாயிகளுக்கு நிதியுதவியினை நேரடியாகவே வழங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் விவசாயிகள் வேளாண் பயிர் வேலைகளைப் பருவ காலங்களில் தொடங்கப்படும்போது எதிர்கொள்ளும் நிதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உதவுகிறது. ஓவ்வெரு ஆண்டும் சம்பா, குறுவை, கோடை பயிர்களைப் பயிரிடத் தொடங்கும்போது பருவத்திற்கு ரூ.2000 வீதம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி போன்ற அடிப்படைச் செலவுகள் செய்ய இந்த நிதி உதவி பயன்படும்.  இந்த திட்டத்தினால் மார்ச் 2022 முடிய 11.78 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர், ரூ.1.82 லட்சம் கோடி இதுவரை (பிப்ரவரி 2022) நிதி உதவியாக அளிக்கப்பட்டுள்ளது (GoI 2022).  உத்திரப் பிரதேச மாநிலத்தில் உச்ச அளவாக 22.9 விழுக்காடு இந்திய அளவில் இத் திட்டத்தில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தினால் இரண்டுவிதமான நன்மைகளை விவசாயிகள் பெறமுடியும்,  1. வருமான உதவியினைப் பெறுதல் 2. வங்கிகளில் குறுகிய, நீண்டகாலக் கடன்களைப் பெறமுடியும்.  இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், ஆதர் அட்டை, வங்கிக்கணக்கு, நிலத்தின் உரிமையாளர் பெயர் போன்றவை ஒத்துப்போவதில்லை. அதிக அளவிற்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் பெறப்படுகிறது ஆனால் அவற்றைப் பரிசீலனைச் செய்ய போதுமானப் பணியாளர்கள் இல்லை.  இந்த திட்டம் நில உரிமையாளர்களை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் குத்தகைதாரர்களுக்கு, கிராமப்புற கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு, கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பொருந்தாது. இந்தியாவில் நாடு முழுவதும் குத்தகைக்குப் பயிரிடும் முறை பரவலாகப் பின்பற்றப்படுகிறது.  இவர்கள் உண்மையான உழுபவர்களாக இருந்தும் இவர்கள் இந்த திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  இந்த திட்டத்தில் நிதி தொகை பயனாளர்களுக்குச் சென்றடையக் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் சரியாக பதிவுசெய்யப்படாதது, பெயர்கள் ஒத்துப்போவதது போன்றவை ஆகும். ரூ.6000 ஆண்டுக்கு நிதி உதவி அளிப்பது விவசாயக் குடும்ப வருவாயில் 6.43 விழுக்காடாக உள்ளது.  சிறு குறு விவசாயிகள் அதிகமாக இந்த திட்டத்தினால் பயனடைகின்றனர்.  இது போன்ற திட்டங்கள் பல  மாநில அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (தெலுங்கானாவில் ரித்துபந்து என்ற திட்டம் 10 மே 2018லிருந்து ரூ.10000 ஒவ்வொரு விவசாயக் குடும்பங்களுக்கும்  நிதி உதவியாகச் செயல்படுத்தப்படுகிறது, ஆந்திரப் பிரதேசத்தில் ரிதுபரோசா 15 அக்டோபர் 2019லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.13500 நிதி உதவி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, ஒடிசாவில் காலியா என்ற திட்டம் டிசம்பர் 2018லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.10000 நிதி உதவி அளிக்கப்படுகிறது, மேற்கு வங்காளத்தில் விவசாயிகளின் நண்பன் என்ற திட்டம் வழியாக 1 ஜனவரி 2019ல் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ரூ.5000 நிதி உதவி வழங்கப்படுகிறது, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜிவ் காந்தி கிஷன் நியாய என்ற திட்டம் 3 மார்ச் 2020ல் ரூ.1000 – ரூ.13000வரை ஒவ்வொரு விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது)  (Kavitha et al 2021).

விவசாயக் கடன் வாங்கும் குடும்பங்களின் மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு முறைசார்க் கடனாகப் பெறப்படுகிறது (2018-19ல்). குறிப்பாகப் பெரிய நில உடைமையாளர்கள் 80 விழுக்காடுவரை முறைசார்க் கடனாகப் பெறுகின்றனர் ஆனால் சிறிய நில உடைமையாளர்கள் 28 விழுக்காடுவரை முறைசார்க் கடனைப் பெறுகின்றனர். பெறுகின்ற மொத்தக் கடனில் மூன்றில் ஒரு பங்கு பயிர் தொழிலைச் செய்யவும், ஐந்தில் ஒரு பங்கு நுகர்வுச் செலவிற்கும், 5 விழுக்காடு திருமணம், சடங்குகள், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை மேற்கொள்கின்றனர் (Kavitha et al 2021). விவசாயக் கடனுக்கும், வேளாண் உற்பத்திக்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. விவசாயிகளின் தற்கொலையினால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரமும் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறது. 

விவசாயிகள் தற்கொலை
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் கடந்த 25 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. விவசாயத் தற்கொலை என்பது விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் இரண்டையும் சேர்த்தது என்கிறது தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம்  (National Crime Records Bureau  – NCRB).    விவசாயிகள் தற்கொலைக்கு அடிப்படைக் காரணம் கடன் திரட்சியாகும் (Debt Accumulation).  பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அன்மைக் காலங்களாகப் பல்வேறு காரணங்களை முன்னிருத்தி வேளாண் தொழிலிருந்து அதிக அளவிற்கு விவசாயிகள் வெளியேறி மாற்று வேலைகளுக்கு (வேளாண் சாரா) செல்வதால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருவதால் உழவு உள்ளிட்டப் பணிகளுக்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இயந்திரம் பயன்படுத்துவதால் (குறிப்பாக நெல் கோதுமை போன்ற பயிர்களுக்கு) மொத்த உற்பத்திச் செலவில் 5 விழுக்காடு அளவிற்குக் குறைகிறது என்பது ஆய்வில் தெரிகிறது.  வேளாண் இயந்திரங்கள் அனைத்து விவசாயிகளும் வைத்திருப்பதில்லை.  குறு சிறு விவசாயிகள் வாடகைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் இயந்திரங்களைச் சொந்தமாகக் கடனில் வாங்குகின்றனர். இக்காரணங்களினால் விவசாயக் கடனளவு அதிகரிக்கிறது (Avinash Kishore  et al 2022).

2013ல் தெலுங்கானாவில் 89 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர். கர்நாடகாவில் இதே காரணத்திற்காக 77 விழுக்காடு விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 56 விழுக்காடும், மத்தியப் பிரதேசத்தில் 46 விழுக்காட்டினரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் மொத்த விவசாயத் தற்கொலையில் கடனின் காரணமாக 52 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  தொடர்ந்து பயிர்த் தொழிலில் வருமான இழப்பு, நுகர்ச்சிக்காக் கடன் வாங்குவதால் போன்றவற்றால் கடனில் விழ நேரிடுகிறது. இதனால் அதிக கடன் திரட்சியினால் தற்கொலை முடிவிற்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். சுக்பூல் சிங், மஞ்சீத் கவுர் மற்றும் கிங்ரா (2021) ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி ஆய்வு செய்தனர். இவ் ஆய்வின்படி 2000-2018ஆம் ஆண்டுகளுக்கிடையே 79 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர் என்றும், 21 விழுக்காடு விவசாயிகள் பிற சமூக பொருளாதாரக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்டனர் எனவும் கண்டறிந்தனர்.  மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 82.6 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டோர் என்றும், 65.85 விழுக்காட்டினர் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், மொத்த தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 92.63 விழுக்காடு முறைசாராக் கடன்களை நிதி வணிகர்கள், நிலச்சுவான்தாரர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் கடன் பெற்றவர்கள் ஆவார்கள். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 63.84 விழுக்காட்டினர் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர், 85 விழுக்காட்டினர் 18லிருந்து 50 வயதுக்குள்  இருந்தனர். இவ்வாய்வின் ஒரு முக்கிய வெளிப்பாடு பாதி அளவிற்கான (49.66 விழுக்காடு) தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களில் விவசாயி தற்கொலை செய்துகொண்டபின் வருமானம் ஈட்டும் நபர்கள் யாரும் இல்லை என்பதாகும். பஞ்சாப் அரசின் நேரடி நிதி உதவி மூலம் 95 விழுக்காடு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது (Avinash Kishore  et al 2022).

விவசாயத் தற்கொலை இந்தியாவில் முதன்முதலில் 1960களிலும் 1970களிலும் தமிழ்நாட்டில் காணப்பட்டது.  1990களில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிகழ்வுகள் ஏற்படத்துவங்கியது.  குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை உச்ச அளவாக அறியப்படுகிறது. இம் மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் தற்கொலையில்; 90 விழுக்காடாக உள்ளது. இதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் தற்கொலைகள் அதிக அளவில் காணப்பட்டது. 2014ல் சராசரியாக ஒரு நாளைக்கு 15 விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்தது இது 2015ல் 21 தற்கொலைகளாக அதிகரித்தது (Sukhpal Singh  et al 2021).  2020ல் மொத்தம் 10677 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது இது 2019விட அதிகமாக (10281) உள்ளது.  தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம் புள்ளி விவரத்தின்படி 1995-2019 ஆண்டுகளுக்கிடையே மொத்தம் 3,58,164 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது. இவ்விரு ஆண்டுகளில் நடந்த நாட்டின் மொத்த தற்கொலைகளில் விவசாயத் தற்கொலைகள் 12.53 விழுக்காடாக உள்ளது. 1995ல் நாட்டின் மொத்த தற்கொலையில் விவசாயத் தற்கொலைகள் 13.43 விழுக்காடாக இருந்தது 2004ல் 16.3 விழுக்காடாக அதிகரித்தது இது 2019ல் 7.61 விழுக்காடாகக் குறைந்துள்ளது.  விவசாயத் தற்கொலை வீதம் (1 லட்சம் மக்கள் தொகைக்கு) 1995ல் 5.3ஆக இருந்தது 2001ல் 7.1ஆக அதிகரித்தது இது 2011ல் 5.3ஆக மீண்டும் குறைந்தது, 2018ல் இது மேலும் குறைந்து 3.6ஆக இருந்தது (Sthanu R Nair 2022)

1990களில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் நிகழந்தது. 2010-2016ஆம் ஆண்டுகளுகிடையே நடந்த தற்கொலைகள் 2000-2010ஆம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற தற்கொலைகளைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.  1990களின் கடைசியில் விவசாயிகளின் தற்கொலையினைத் தடுக்க நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.Inthiya Velan Katanum Vivasayikalin Tharkolaikalum Article By Dr. P. Anpalagan இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை - முனைவர் பு.அன்பழகன்Mjhuk;: GoI (2021): “Accidental Death and Suicides in India 2020,” National Crime Record Board, Government of India.
ஆனால் இது சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே விவசாயிகளின் தற்கொலைகளை இது தடுக்கத் தவறிவிட்டது.  அதே சமயம் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களும், வேளாண் பொருள்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததாலும், விவசாய இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெறக் காரணமாக அமைந்தது.  2006ல் விவசாயிகளுக்கான புனர்வாழ்வு தொகுப்பு அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை நடந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.  2008ல் வேளாண் கடன் துடைப்பு மற்றும் கடன் நிவாரண திட்டம் (ADWDRS) துவக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டது. ஆனால் இதுவும் தேவைப்படுபவர்களுக்குக் கடன் அளிக்கவில்லை. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா 2016ல் துவக்கப்பட்டு விவசாயிகளுக்குக் காப்பீட்டு மூலம் பயிர் இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட்டது.  ஆனால் 2016 நவம்பரில் பணமதிப்பீட்டு இழப்பு கொண்டுவரப்பட்டதால் உயர் மதிப்புடைய பணமான ரூ.500, ரூ.1000 செல்லாமல் போனது. இந்த காலகட்டம் விவசாயிகளின் குறுவை பருவப் பயிர்செய்யும் நேரம் என்பதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு 2017ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன் விளைவு விவசாய இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. 2019ல் உருவான கோவிட் பெருந்தொற்றினால் பல மாநிலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது, விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டதால் வேளாண் பொருட்கள் சந்தை படுத்த இயலாமல் போனது இதனால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளானார்கள்.  2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் மத்தியில் பெரிய எதிர்ப்பினை உருவாக்கியது. குறைந்தபட்ச ஆதார விலையினை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் சுமார் ஓர் ஆண்டிற்கு நடத்தப்பட்டதால் 2021ல் இந்த சட்டங்கள் ஒன்றிய அரசினால் திரும்பப் பெறப்பட்டது. தற்போது (2022ல்) உக்ரைன்-ரஷ்ய போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டினால் உணவு பணவீக்கம் அதி அளவிற்கு உயர்ந்துள்ளது.  இதனைக் காரணம் காட்டி கோதுமை ஏற்றுமதியினை ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு அரசு கொள்கைகள், இயற்கைச் சீற்றம் போன்ற காரணங்களினால் விவசாயிகள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றனர் இதன் விளைவு தற்போதும் விவசாயத் தற்கொலைகள் ஆண்டிற்குச் சராசரியாக 10000க்கு மேல் தொடர்ந்துகொண்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்போது வேளாண் உற்பத்திச் செலவான C2+10% உடன் எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையான 50% செலவினைக் கணக்கில் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளுக்கான கடன் அளித்தாலும் தற்போதும் மூன்றில்-ஒரு பங்கு விவசாயிகள் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர் எனவே தனியார் கடனையும், வட்டியையும் முறைப்படுத்தவேண்டும்.  விவசாயக் கடன்களைத் தக்க நேரத்தில் நீக்குப்போக்குடன் எளிய வழிமுறைகளைக் கையாண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதுபோன்று விவசாயிகள் பயிர் தொழிலில் அதிக இழப்பினைச் சந்திக்கின்றனர் இதனைத் தடுக்க வேளாண் ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் (தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காட்டிற்குக் கீழ் ஒதுக்கப்படுகிறது).

References :
Avinash Kishore, Suriti Saini and Muzna Alvi (2022): “Assessing Direct Benefit Transfer of Agricultural Subsidies in Bihar and Odisha,” Economic and Political Weekly, Vol 57 (16), pp 36-42.

Dayandev C Talule (2021): “Sucide by Maharashtra Farmers: The Signs of Persistent Agrarian Distress,” Economic and Political Weakly, Vol 56 (51), pp 46-55.

Dipanjana Roj (2021): “Farmer Suicides in India, 1997-2013 Taking Stock of Data, Arguments and Evidence,” Economic and Political Weekly, Vol 56 (5), pp 50-60.

Economic and Political Weekly, Editorial (2021): “Government Policies Drive Farmars to Penury,” Economic and Political Weekly, Vol 56 (38), p 7.

GoI (2022): “Three Years of Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) – Press Information Burea,” Ministry of Infromation and Broadcasting, March 11, 2022, Government of India.

Kavitha H N, Pramod Kumar, P Anbukkani, R R Burman and P Prakesh (2021): “Income Support Schemes: Evaluation of PM Kishan vis-à-vis State Government Scheme,” Economic and Political Weekly, Vol 56 (34), pp 13-17.

NABARD (2018): “All India Rural Finanical Inclusion Survey 2016-17,” National Bank for Agriclture and Rural Development, Mumbai.

Niharika Pandya, Divya Veluguri, Aditi Roy, Poornima Prabhakaran and Linasay M Jaacks (2021): “Economic Impact of the 2020 COVID – 19 Lockdown on Indian Farmers,” Economic and Political Weekly, Vol 56 (50), pp 31-34.

Pradynt Guha and Tiken Das (2022): “Farmer’s Suicides in India,” Economic and Political Weekly, Vol 57 (5), pp 13-16.

Shromona Ganguly Mohua Roy (2021): “Development Banks and the changing Contour of Industrial Credit in India,” Economic and Political Weekly, Vol 56 (49), pp 50-57.

Shubham Sehal (2021): “Banking Sector Reforms of 1991 and Agricultural Credit,” Economic and Political Weekly, Vol 56 (50), p 5.

Sthanu R Nair (2022): “Rethinking Agrarin Susides in India,” The Indian Express 8.4.2022.

Sukhpal Singh, Manjeet Kaur and H S Kingra (2021): “Agrarian Crisis and Agricultural Labourer Suicids in Punjab,” Economic and Political Weekly, Vol 56 (13), pp 49-56.

“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்

“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்




வருங்கால இந்தியாவின் பலமா? பலவீனமா?

வாங்க பேசலாம்….

ஒரு தலைமுறை உயர் பொறுப்புகளுக்கு செல்வது தடைபட்டு சமூக படிநிலை உடையும் அபாயமும். இந்திய ராணுவத்தில் தேசத்திற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணிக்கும் இளைய தலைமுறைகளின் கனவு இத்திட்டத்தின் மூலம் சிதைந்துவிடும் என்ற அச்சமும் ஏற்படுகின்றது.

அக்னிபாத் குறித்து மத்திய அரசு சொல்வது என்ன ?

“அக்னிபாத்” திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவம் ஆக மாற்றவும். “அக்னிபாத்” திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தை இந்திய மக்களைப் போலவே இளமையாக ஆக்கிடவும். சேவையின் போது பெற்ற திறன்கள் மற்றும் அனுபவங்கள் இளைய தலைமுறைகளுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

அக்னிபாத் திட்டத்தின் விவரங்கள்…..

அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். இந்த வருடத்தில் இணைபவர்களுக்கு மட்டும் வயது வரம்பு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபாத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும்.இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.

இராணுவ ஆர்வலர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்…..

பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பணி நீட்டிப்பு செய்யப்படாமல், 21 அல்லது 23 வயதில் ராணுவப் பணியிலிருந்து வெளியேறும் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்று கேட்டு இளைஞர்கள் கொதித்தெழுகிறார்கள்.17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், 10 அல்லது பனிரெண்டாம் வகுப்பு முடித்ததுமே, இந்தப் பணியில் சேரும் இளைஞர்களின் மேற்படிப்பு என்ற வாய்ப்பு / கனவு பறிக்கப்படும். ஏற்கெனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டில் குறைவு. இந்த திட்டத்தால் உயர் கல்வி பயிலாத இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக கண்ணெதிரே அதிகரிப்பதைப் பார்க்க முடியும். காரணம் மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டமாக இருக்கும்.

மறுபக்கம், ராணுவ வேலை என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் பெற்றோர் உயர்கல்வி படிக்க வைக்காமல் பிள்ளைகளை அக்னிவீரர்களாக மாற்றும் அபாயமும் உருவாகலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 46 ஆயிரம் பேர் அக்னிவீரர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கப்படும். எஞ்சிய 75 சதவீதம் பேரும் கையில் சேவா நிதியுடன் மீண்டும் வேலையில்லா இளைஞர்களின் கூடாரத்துக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். உயர் கல்வியும் கிடைக்காமல், நாட்டு நடப்புக்கு எந்த தொடர்பும் இல்லாத ராணுவப் பயிற்சி முடித்த இவர்கள் எந்த வேலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள்? இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையுமா? கூடுமா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

– கவிதா ராம்குமார்

’மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்’ கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

’மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்’ கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




மோடி அரசாங்கத்தின் எட்டாண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாஜக பதினைந்து நாட்களுக்குப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது அது பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, உணவு தான்ய உற்பத்தி, சமூக நலத் திட்டங்கள் மற்றும் அயல்துறைக் கொள்கை சம்பந்தமாக அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளை உயர்த்திப்பிடித்திட வலியுறுத்தியிருக்கிறது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு ஒழிச்சலின்றி மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவே என்றும் பிரச்சாரத்தின்போது அது தம்பட்டம் அடிக்க முடிவு செய்திருக்கிறது.

எனினும், இவர்கள் பட்டியலிட்டுள்ள சாதனைகளில் காணப்படாதிருப்பது என்னவென்றால், மோடி அரசாங்கம், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (directive principles) குறிப்பிட்டுள்ள சமூக நீதி மற்றும் பொருளாதார நீதியை உத்தரவாதப்படுத்துவதற்கும் ஏற்றவிதத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அது என்ன செய்தது என்பதேயாகும்.

இது வேண்டுமென்றேதான் விடுபட்டிருக்கிறது. ஏனெனில் மோடி அரசாங்கமானது கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கும் அரசமைப்புச்சட்டத்திற்கும் அளப்பரிய அளவில் தீங்கினை ஏற்படுத்தி இருக்கிறது.

எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நாடாளுமன்றத்தை மதிப்பிழக்கச் செய்திடும் வேலையும், நாடாளுமன்ற நடைமுறைகளை இழிவுபடுத்திடும் வேலையும் மோடி அரசாங்கம் இரண்டாவது முறை பதவியேற்றபின்பு உக்கிரமடைந்துள்ளது. நாடாளுமன்றம் சென்ற ஆண்டில் நாற்பது நாட்களுக்கும் குறைவாகவே நடந்திருக்கிறது. கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளின் மீது போதிய அளவிற்கு விவாதங்கள் நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல, சட்டமுன்வடிவுகளை நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் நுண்ணாய்வுக்கு அனுப்பும் நடைமுறையே அநேகமாக ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. ஐமுகூ அரசாங்கத்தின் காலத்தின் மக்களவை 60 முதல் 70 விழுக்காடு சட்டமுன்வடிவுகளை நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு அனுப்பி இருந்தது. அது மோடியின் முதல் முறை ஆட்சிக்காலத்தின்போது 27 விழுக்காடாகவும், இரண்டாவது முறை ஆட்சிக் காலத்தின்போது வெறும் 13 விழுக்காடாகவும் வீழ்ந்தது. இத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரச்சனைகளை எழுப்புவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதும், சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படுகையில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதும் சேர்ந்துகொண்டுள்ளன. மாநிலங்களவையில் மூன்று வேளாண் சட்டங்களும் அடாவடித்தனமாக நிறைவேற்றப்பட்ட வழிமுறையே இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

நாடாளுமன்றத்தின் நடைமுறை சுருக்கப்படுவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் நெறிக்கப்படுவதும், ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையையே அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல்கள் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு கடிவாளமிடப்பட்டிருக்கிறது, நாளுக்குநாள் அது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் ஓர் அமைப்பாக மாறிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் பத்திரங்கள் விநியோகம், லஞ்ச ஊழலை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. இதன் வழியாக ஆளும் கட்சிக்கு நிதி திரட்டுவது என்பது உத்தரவாதப்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் நிதி திரட்டுவதற்கான வாய்ப்பு வாசல்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள் இப்போது ஒன்றிய அரசாங்கத்தின் அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் போன்றவற்றின் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தாலும், அமலாக்கத் துறையினராலும், வருமான வரித் துறையினராலும் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சுகாதார அமைச்சரும், மகாராஷ்ட்ர மாநில தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு கேபினட் அமைச்சரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். டஜன் கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றப் புலனாய்வுக் கழகத்தினராலும், அமலாக்கத் துறையினராலும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு நாணமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையினரால் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது.

அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுப்பது என்பதும், குடிமை உரிமைகளை நசுக்குவது என்பது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசத் துரோகக் குற்றப்பிரிவு போன்ற கொடுங்கோன்மை சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கின்றன. 2014க்கும் 2020க்கும் இடையே, ஏழு ஆண்டுகளில், சுமார் 690 வழக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 10,552 பேர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களில், அரசியல் செயற்பாட்டாளர்கள், குடிமை உரிமைகள் வழக்கறிஞர்கள், இதழாளர்கள் மற்றும் எழுத்தாளர்களும் அடங்குவர். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ என்னும் தேசத் துரோகக் குற்றப்பிரிவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களுக்கு எதிராக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. 2014லிருந்த 2021 வரையிலும் தேசத் துரோகக் குற்றப் பிரிவின்கீழ் 450க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைத் தடுத்திட, மிரட்டல் உருட்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதழாளர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதுடன், சில ஊடகங்களின் உடைமையாளர்கள் பொருளாதாரக் குற்றங்களுக்காகக் குறிவைக்கப்பட்டு, அது தொடர்புடைய ஏஜன்சிகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறி இருக்கின்றன.

மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப்படுத்தப்பட்ட எதேச்சாதிகார நடைமுறையானது ஜனநாயக அமைப்புமுறையின் கூட்டாட்சி அம்சத்தையே காலில் போட்டு மிதித்திருக்கிறது. மாநிலப் பட்டியலிலும், பொதுப்பட்டியலிலும் (concurrent list) உள்ள பல துறைகளில் மாநிலங்களுக்கு இருந்து வந்த உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் ஒன்றிய ஆட்சியின் கருவிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மாநில அரசாங்கங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சில சமயங்களில் மாநில அரசாங்கங்களின் வேலைகளில் குறுக்கிடுகிறார்கள்.

ஜனநாயகத்திற்குப் பதிலாக இவர்கள் மாற்ற விரும்புவது, பெரும்பான்மையினரின் ஆட்சியாகும். நாடாளுமன்றத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, மத மாற்றத் தடைச்சட்டம், கால்நடைகளை வெட்டுவதற்குத் தடை போன்ற சட்டங்களை சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்துமே சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதைக் குறியாகக் கொண்டவைகளாகும். இத்தகைய சட்டங்கள் இந்துத்துவா அமைப்பினர்களால் சிறுபான்மையினத்தவர் மீது குரூரமானமுறையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கெல்லாம் சட்டப்பூர்வமான பாதுகாப்பை அளித்து வருகின்றன.

இவை அனைத்தும் எதேச்சாதிகார ஆட்சியை ஒருமுகப்படுத்தும் அடையாளங்களாகும். ஆயினும் நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் முன்னணி செய்தித்தாள்களோ இவற்றை முழுமையாக வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குகின்றன. இந்தியாவை, இந்துத்துவா எதேச்சாதிகார அரசாக மாற்ற நடந்துகொண்டிருக்கும் எதார்த்த உண்மைகளை மிகவும் கவனத்துடன் மூடிமறைக்கின்றன.

பாஜக அரசாங்கத்தின் எட்டு ஆண்டு கால ஆட்சியின் மையமான உண்மை என்பது, இந்தியாவை, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின்படி மாற்றியமைக்க இடைவிடாது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதேயாகும். இதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இதுவரை இருந்துவந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு, நீதித்துறையின் பங்களிப்பு, நிர்வாக அமைப்பு மற்றும் ஊடகங்கள் தங்களின் நயவஞ்சகமான எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு சேவகம் செய்யக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரக் கொள்கையின் அனைத்து வரம்புகளும், இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியின்கீழ் ஏதேனும் படிப்பினையைப் பெற்றிருக்கிறோம் என்றால் அது நாட்டின் ஜனநாயகமும் அடிப்படைப் பொருளாதார, சமூக மற்றும் குடிமக்களின் குடியுரிமைகளும் ஆள்வோரால் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன என்பதேயாகும்.

– தமிழில்: ச.வீரமணி

(ஜூன் 1, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இந்தியாவின் வேளாண் சூழலியல் மாறுபாடுகள் கட்டுரை – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் சூழலியல் மாறுபாடுகள் கட்டுரை – பேரா.பு.அன்பழகன்




வேளாண்மை மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் தொழிற் துறைக்கு மூலப்பொருட்களை அளிக்கும் துறையாக உள்ளது. அன்மைக் காலங்களில் உரம், பூச்சிக்கொள்ளி மருந்துகள், செறிவூட்டபட்ட விதைகள், அதிக அளவிலான தண்ணீர் பயன்ப்பாடு போன்றவைகளால் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிபடைந்து மக்களின் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. அன்மையில் உலகளவில் சுற்றுச்சூழல் செயலாக்கக் குறியீட்டெண் 2022 (Environmental Performance Index 2022) வெளியிடப்பட்டது. இதன் கொள்கை நேக்கங்களாக, சுகாதாரச் சூழலியல், காலநிலை, சுற்றுச்சூழல் வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு 11 வகையான அறைகூவல்களை (வேளாண்மை, நீர் ஆதாரம் உட்பட) உள்ளடக்கி 40 தனிப்பட்ட சுற்றுச்சூழல் அளவீடுகளைப் பயன்படுத்தப்படுத்தி இந்த குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. இதன் மதிப்பு 0 லிருந்து 100க்குள் இருக்கும். 0 என்பது மிக மேசமான செயல்பாடாகவும். 100 என்பது மிகச் சிறப்பான செயல்பாடாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. மொத்தம் 180 நாடுகளின் மதிப்பு புள்ளிகளின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டுள்ளன. 77.9 மதிப்பெண் புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது 18.9 மதிப்பெண் புள்ளிகளுடன் இநதியா 180வது கடைசி இடத்தில் உள்ளது. இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மதிப்பெண் புள்ளியில் -0.60ஆக குறைந்துள்ளது. வேளாண்மையைப் பொருத்தமட்டில் இந்தியா 40 மதிப்பெண் புள்ளிகளுடன் 76வது இடத்தில் உள்ளது. நீர் ஆதாரத்தைப் பொருத்தமட்டில் 2.2 மதிப்பெண் புள்ளிகள் பெற்று 112வது இடத்தில் உள்ளது. வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குகின்றனர் ஆனால் மண், தண்ணீரின் தன்மை பாதிப்படைகிறது என்தை கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் மனிதர்களுக்கு நோய் ஏற்படுதல், வறண்ட பூமியாதல், நிலத்தடி நீர குறைதல், சமதள நீர்நிலைகள் வற்றுதல் போன்ற இடர்பாடுகள் எழுகின்றன (EPI 2022). வேளாண் சூழலியல் கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கத்தக்கதாக உருவெடுத்துவருகிறது. வேளாண் சூழலியல் என்பது வேளாண் சாகுபடி முறைகளில் காலநிலைகளுக்கு ஏற்ப இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை நிலையான முறையில் பயன்படுத்தி பாதுகாக்கவும் சமுதாய, விவசாயிகளின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும்.

தண்ணீர் வேளாண்மையின் ஒரு முக்கிய ஆதாரமாகும். தண்ணீர் சமூகபொருளாதார மேம்பாட்டின் ஒரு அடிப்படை அலகு ஆகும். சுகாதாரம், உணவு அளித்தல், ஆற்றலை உருவாக்குதல், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற நிலைகளில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. வளர்ந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவைகள் தண்ணீரின் தேவையினை பல மடங்காக அதிரிக்கச் செய்துள்ளது. உலகில் உள்ள தண்ணீர் இருப்பிற்கும் தேவைக்கும் பெருமளவிற்கு இடைவெளி உள்ளது. உலகில் 2.2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை, 4.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிவுநீர் வடிகால் வசதியினைப் பெற்றிருக்கவில்லை, 3 பில்லியன் மக்களுக்கு கை கழுவுவதற்கு தண்ணீர் இல்லை என்கிறது புள்ளிவிவரம். அதே சமயம் உலக அளவில் சுத்தமான குடிநீர் பருகுபவர்கள் 2002ல் 62 விழுக்காடாக இருந்தவர்கள் 2020இல் 74 விழுக்காடாக அதிகரித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் சபை முன்மொழிந்த “நீடித்த வளர்ச்சிக் குறிக்கோல்கள்” பூஜ்ய பசி, சுத்தமானக் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் வசதியினை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை முன்னிருத்தியுள்ளது. இவ்விலக்கினை 2030க்குள் அடைய வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனை அடைய தண்ணீரைத் திறனாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது.

தண்ணீர் வேளாண்மைப் பொருள் உற்பத்தியின் ஒரு முக்கிய இடுபொருட்களில் ஒன்றாகும். உலகின் மொத்த வேளாண்மைச் சாகுபடியில் 20விழுக்காடு நீர்பாசனம் மூலம் நடைபெறுகிறது இது மொத்த உணவு உற்பத்திக்கு 40 விழுக்காட்டுப் பங்கினை அளிக்கிறது. 2050ல் உலகில் உள்ள மக்கள்தொகை 10 பில்லியனாக இருக்கும் என்றும் இதனால் வேளாண் உற்பத்தி 70 விழுக்காடுவரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உலகளவில் வேளாண்மைக்கு 70 விழுக்காடு நன்னீர் (Fresh water) பயன்படுத்தப்படுகிறது (www.worldbank.org 2020). உலகிலேயே அதித மக்கள்தொகை பெருக்கம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய இரண்டு அறைகூவல்களையும் இந்தியா எதிர்கொள்கிறது.

இந்தியாவில் வேளாண்மை முதன்மைத் தொழிலாகும். 45.6 விழுக்காடு (PLFS 2019-20) அதவது 233.2 மில்லியன் மக்கள் வேளாண்மையில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் துறை நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கு 14 விழுக்காட்டு பங்கினை அளிக்கிறது. இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிகம் பயிர்செய்யும் நிலப்பரப்பினை (159.7 மில்லியன் ஹெக்டேர்) உடைய நாடாகும் (முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது). இது போல அதிக அளவிலான மொத்த நீர்பாசன பரப்பளவினைப் (88 மில்லியன் ஹெக்டேர்) பெற்றுள்ள நாடாகும். இந்தியா உலக அளவில் நெல், கோதுமை, எண்ணெய்வித்துக்கள், சணல், டீ, கரும்பு, பால், நறுமணப் பொருட்கள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை அதிகமாக உற்பத்தி செய்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதிக அளவிலான வளமான-நீர்பாசன விளைநிலங்கள் பாக்கிஸ்தானின் எல்லை பகுதிக்குச் சென்றது. அதிக அளவிலான மக்கள் புலம் பெயர்ந்து இந்தியாவிற்குள் வந்ததனர். இதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அமெரிக்காவின் உதவியின் அடிப்படையில் பிஎல் 480 வழியாக இந்தியா இறக்குமதி செய்து உணவுத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சம், போர், உலகளாவிய அரசியல் நெருக்கடி போன்றவையினால் இந்தியா வேளாண்மையில் சுயசார்பின்மையினை எட்ட திட்டடம் வகுத்து பசுமைப் புரட்சிக்கு 1960களில் வித்திட்டது. இந்த அடிப்படையில் வேளாண் சீர்திருத்தம் (நிலச் சீர்திருத்தம், வேளாண்மை நவீனமயமாக்கல், வேளாண் கடன் வசதி) முன்னெடுக்கப்பட்டது. தற்போது இந்தியா வேளாண்மையில் சுயசார்பு நிலையினை அடைந்து. உலகில் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. உலக நாடுகளுக்கு வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2020-21இல் இந்தியாவிலிருந்து வேளாண் பொருட்கள் மொத்த பொருட்களின் ஏற்றுமதியில் 14.30 விழுக்காடாகும் இதுவே இறக்குமதியில் 5.30 விழுக்காடாகும் (GoI 2022).

இந்தியாவில் 86 விழுக்காடு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். 55 விழுக்காட்டினர் நிலமற்ற விவசாயிகள், 70 விழுக்காட்டு விவசாயிகள் அமைப்புசாரா நிதி அமைப்புகள் வழியாகப் கடன் பெறுகின்றனர், நவீன விவசாய முறைகளைப் பெருமளவிற்கான விவசாயிகள் அணுக முடிவதில்லை, குறைந்தபட்ச ஆதரவு விலை 94 விழுக்காடு விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை, பருவநிலை மாற்றத்தினால் வறட்ச்சி. வெள்ளம் போன்றவற்றை பெருமளவிற்கான விவசாயிகள் எதிர்கொள்கின்றர். இடுபொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தினால் அதற்கு இணையாக வேளாண் பொருட்களின் விலை உயராததால் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். இக்காரணங்களினால் சுமார் 3.5 லட்சம் விவசாயிகள் கடந்த 23 ஆண்டுகளில் (1997 முதல் 2020) தற்கொலை செய்துகொண்டனர். இது இந்தியாவின் மொத்த தற்கொலையில் விவசாயிகளின் தற்கொலை 14 விழுக்காடாகும் (Mihir Shah et al 2022, Pradyht Gaha et al 2022). வேளாண்மை லாபகரமான தொழிலாகக் கருத இயலாத சூழலால் வேளாண்மையில் இருந்து அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். வேளாண்மைத் துறையின் வளர்ச்சியானது கடந்த 70 ஆணடுகளில் சாரசரியாக 2லிருந்து 3 விழுக்காடு வளர்ச்சி பதிவாகியுள்ளது. இவற்றை அதிகரிக்க தற்போது இந்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்திய வேளாண்மையின் முக்கிய அடிப்படை அறைகூவல்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஒன்று. பெருமளவிற்கு இந்திய வேளாண்மை மழையினை சார்ந்ததுள்ளது. இந்திய வேளாண்மையில் நிகர பயிர் சாகுபடி செய்யும் பரப்பில் (2018-19ல்) 71.6 விழுக்காடு நீர்பாசன வசதியினைப் பெற்றுள்ளது (1950-51ல் 20.8 விழுக்காடு). நீர்பாசன வசதி பெற்றுள்ள மொத்த நிலப்பரப்பில் 54.32 விழுக்காடு உணதானிய உற்பத்தி பயிர்கள் பயனடைகின்றன (மொத்த நெல் சகுபடி பரப்பில் 62 விழுக்காடும் கோதுமை சாகுபடி பரப்பில் 95.3 விழுக்காடும் நீர்பாசனம் மூலம் நடைபெறுகிறது). இந்தியாவில் தண்ணீர் இருப்பிற்கும் தேவைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

வேளாண்மைக்கு அடிப்படையாக தேவையான தண்ணீர் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு பயன்படுத்தப்படுகிறது (நிலத்தடிநீர், சமதளப் பகுதி தண்ணீர்). இந்தியாவில் உள்ள மொத்த சாகுபடி செய்கின்ற நிலத்தில் மழைநீர் பயன்பாடு 4000 கன சதுர கிலோ மீட்டராகும். 122 கன சதுர கிலோ மீட்டர் நீர்வள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்த நன்னீரில் 90 விழுக்காடு வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகும். வேளாண்மையில் நன்னீரின் தலா நுகர்வு ஒர் ஆண்டிற்கு 4913 முதல் 5800 கிலோ லிட்டர் ஆகும். 60 விழுக்காடு வேளாண் சாகுபடி மழையினைச் சாரந்துள்ளது. இந்தியாவில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்கள் (நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல்) போன்றவைகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. நெல்லிற்கு 5லிருந்து 8 செ.மீ தண்ணீரும் பிற தாவர வகைகளுக்கு 60லிருந்து 70 செ.மீ தண்ணீரும் தேக்கவேண்டியுள்ளது இதில் அதிக அளவிற்கு ஆவியாகிறது. நெல், கோதுமை, கரும்பு போன்றவை மொத்த பயிரிடும் பரப்பில் 41 விழுக்காட்டைப் பெற்றுள்ளது ஆனால் இது 80 விழுக்காடு நீர்பாசனத்தைக் கொண்டுள்ளது. இப் பயிரிடும் பரப்பில் அதித மழை, மழைப் பற்றாக்குறை, நிலத்தடி நீர் மட்டம் குறைதல் போன்ற காரணங்களினால் குறைய நேரிட்டால் உணவு பற்றாக்குறையும். உணவு பணவீக்கமும் ஏற்பட்டு பொருளாதாரத்தில் பாதிப்பினை உண்டாக்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உணவு பணவீக்கம் மிகவும் அதிக அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின் மோட்டர்கள் வழியாக அதிக அளவிற்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்தியாவின் நீர்பாசன முறைகளில் கிணற்று, ஆழ்துளைக் குழாய்ப் பாசனத்தின் பங்கு 2011-16ல் சுமார் 60 விழுக்காடாக உள்ளது இது 1950-56ல் 29 விழுக்காடாக இருந்தது. இந்தியாவில் 21 மில்லியன் மின்சார பம்பு செட்கள் நீர்பாசன பயன்பாட்டில் உள்ளன. பல மாநிலங்களில் வேளாண் நீர்பாசனத்திற்கான இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Upmanu Lall 2021). இந்தியவில் வேளாண்மைகாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது சீனா, பிரேசில் நாடுகளைவிட 2லிருந்து 4 மடங்குவரை அதிகமாகக் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் நீர் இறைப்பு செலவு அதிகமாகி வேளாண் பொருளின் மொத்த உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இந்தியாவின் 60 விழுக்காடு மாவட்டங்களில் அதிஅளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரில் ஃப்லோரைடு, ஆர்சனிக், மெர்குரி, யுரேனியம், மாங்கனீசு போன்ற நிலைகளில் காணப்படுகிறது. இதனால் வேளாண்மையில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்ல மக்களிடையே பல்வேறு நோய்களையும் உருவாக்குகிறது.

பசுமைப் புரட்சியின் ஒரு முக்கிய வெளிப்பாடு மற்ற பயிர்களைவிட நெல், கோதுமை, கரும்பு போன்றவைகளுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகும். பசுமை புரட்சி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தினை, பருப்பு, எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்தவர்கள் நெல், கோதுமை பயிர்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு, விலை, சலுகைகள் போன்ற காரணங்களை முன்னிருத்தி இவைகளைப் பயிரிடத் தொடங்கினார்கள். அரசு பொதுவிநியோகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு, மதிய உணவு திட்டம் போன்றவைகளுக்கு அரிசி, கோதுமைகளை பயன்படுத்தியது இதனால் இவற்றின் தேவை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் தொன்றுதொட்டு உட்கொள்ளும் உணவு முறையில் மாற்றம் அவ்வகை தானிய உணவு (கேழ்வரகு, சாமை, சோளம், கம்பு, போன்றவைகள்) தேவைகள் குறைந்தது. பயிரிடவும் விவசாயிகள் முன்வரவில்லை. நெல், கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசு சலுகைகள் கிடைத்தது. எனவே இந்த வகை வேளாண் பொருட்களின் சாகுபடியினை நோக்கி பெருமளவிற்கான விவசாயிகள் மாறிச் சென்றனர். நெல், கோதுமை பயிர் செய்வதற்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டது தொடர்ந்து இப்பயிர்களை பயிரிட்டதால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இத்துடன் இடுபொருட்களின் (உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையான விலை அதிகரிப்பு, விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காதது போன்றவைகளால் நெல், கோதுமை பயிரிடும் விவசாயிகள் பெரும் அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையினை எதிர்கொள்ள ஒரு சில மாநிலங்களில் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய அரசு ஊக்கப்படுத்துகிறது (ஒடிசாவில் தினைப் பயறு இயக்கம் 2017-18ல் துவக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் தினைப் பயறுகளை கொள்முதல் செய்ய தேஜஸ்வினி கிராமப்புற பெண்கள் அதிகாரமளித்தல் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது).

அதிக அளவிற்கான தண்ணீர் பயன்பாட்டை இனி வரும் காலங்களில் குறைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால் தெளிப்பு நீர்பாசனம், சொட்டுநீர்பாசனம், நீர்தேக்க பாசனம் போன்றவற்றைப் முறையாகப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியாவில் 13 விழுக்காடு மட்டுமே சிறிய வகை நீர் பாசன (minor irrigation) முறை பயன்படுத்தப்படுகிறது (இஸ்ரேலில் 99 விழுக்காடு) இதுவும் குஜராத். மத்தியப் பிரதேசம். ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே இந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது (Agarwal (2019).
பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா
வேளாண்மையில் நீர் பயன்பாட்டை திறனுடன் பயன்படுத்த 2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசினால் பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா துவக்கப்பட்டது. இதற்கான நிதியினை ஒன்றிய மாநில அரசுகள் 60:40 என்ற அளவில் பங்கீடு செய்துகொள்கிறன. இந்த திட்டத்தின் வழியாக 10.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்துள்ளது. இந்த திட்டத்தை ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சிறப்பாக நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதால் 80லிருந்து 90 விழுக்காடுவரை தண்ணீர் திறனாகப் பயன்படுத்தப்படுகிறது. 30.5 விழுக்காடு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. 28.5 விழுக்காடு உரப் பயன்பாடு குறைகிறது. உற்பத்தி திறன் அதிகரிக்கிறது (பழம் 42 விழுக்காடு, காய்கறிகள் 52 விழுக்காடு). இதுபோல் நீர்பாசனத்தில் 31.9 விழுக்காடு செலவு மிச்சப்படுகிறது (Ridham Kumar 2020). ரூ.50000 கோடி மதிப்பீட்டின்படி கால வரையறையினை 2019-20 என நிருணயம் செய்து அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வேறு சில நீர்பாசன திட்டங்களுடன் (AIBP, IWMP. OFWM. NMSA) தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை சாகுபடியில் தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளதற்கு தீர்வாக மாற்று பயிர்களை சாகுபடி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அன்மையில் மிஹிர் ஷ, விஜயசங்கர், ஹாரிஹ் ஆகியோரால் நடத்தப்பட்ட 11 மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கான, தமிழ்நாடு) நடத்தப்பட்ட ஆய்வின்படி 2015-16ல் இம் மாநிங்கள் நாட்டின் மொத்த நீர்பாசன பரப்பில் 66 விழுக்காடு நீர்பாசனத்தினைக் கொண்டுள்ளது. இம் மாநிலங்கள் நெல், கோதுமை, கரும்பு போன்வற்றை முதன்மையாக சாகுபடி செய்பவைகளாகும். இம் மாநிலங்களில் சூழலின் அடிப்படையில் மாற்றுப் பயிராகப் பருப்பு, ஊட்டச்சத்து மிகு-தானியங்களைப் பயிர் செய்ய தொடங்கினால் 18லிருந்து 36 விழுக்காடுவரை தண்ணீர் சேமிக்க முடியும் என்றும் அதே சமயம் நீர்-செறிவு வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3171 என்றால் மாற்றுப் பயிர்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3821 என்று கிடைக்கும் என்கிறது (Mihir Shah et al 2022). உலகளவில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிஅளவில் வாழும் நாடாக இந்தியா உள்ளது. இதனைப் போக்க மாற்று பயிர்களினால் உற்பத்தியாகும் ஊட்சத்து மிகு-தானியங்களை உட்கொள்ளலாம். எனவே மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிப்பதும் அதனை சந்தை செய்வதற்கான வழிவகைகளைக் காண்பது. இவ் வேளாண் பொருட்களுக்கு மக்களிடையே நுகர்ச்சிக்கான நாட்டத்தினை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமையாக உள்ளது.

நீர்மேலாண்மை திறம்பட செயல்படுத்த போதுமான கொள்கைகள் வகுத்து நடைமுறைபடுத்த. வேளாண்மை மற்றும் நீர்பாசனத் துறை அமைச்சர்கள், நீர்பாசன வடிநில காப்பாளர்கள், நீர்பாசன முகவர்கள், நீர்பாசன விவசாயிகள், விவசாய அமைப்புகள் ஓன்றிணைந்து நீர் மேலாண்மையினைத் திறம்பட நடைமுறைபடுத்ப்பட வேண்டும். மண் பரிசோதனை மையங்களை உருவாக்கி அதை ஒரு இயக்கமாக விவசாயிகளிடம் கொண்டுசெல்ல வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப மாற்றுப் பயிர்களை சுழற்சி முறையில் அல்லது ஊடு பயிராக சாகுபடிசெய்தல் அவசியமாகிறது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது. இதனை தடுக்க உணவு பாதுகாப்பு நடைமுறையின் அடிப்படையில் இவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். உணவு, தினைவகை உற்பத்திப் பொருட்களின் சேமிப்புக் கிடங்குகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். தற்போது அதிக அளவிற்கு உரங்கள். மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்கப்படுகின்றன அதனை இயற்கை இடுபொருட்கள், மண்வள மேம்பாடு, சுழலியல் சேவைகளுக்கு அளித்து நீடித்த வேளாண்மை வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் தினைவகைப் பயிர்களை சந்தைபடுத்தும் செயலில் ஈடுபடுத்தப்பட வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களை மறுசீரமைப்பு செய்து அனைத்து சுழலியல் ஆர்வளர்களை ஒன்றினைத்து வேளாண் மேம்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும்.

நூல் அறிமுகம் : நக்கீரனின் கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் – சூரியா சுந்தரராஜன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் – சூரியா சுந்தரராஜன்




சூடா ஒரு டீ சாப்பிடலாமா?

வாங்க…வாங்க….!

ஒரு 238 லிட்டர் தண்ணி சாப்டு போங்க…

என்ன புரியலையா? ஒரு குவளை தேநீரை தான் (அதான்பா டீ) அப்படி சொல்றேன்.

என்ன சொல்றீங்க! ஒரு கப் டீயே அதிகபட்சமா 30 மி.லி. தானே இருக்கும்னு கேக்குறீங்களா? நானும் அப்படித்தான் நெனச்சிட்டு இருந்தேன் இந்த புத்தகத்தை படிக்கிற வரைக்கும்.

அப்படி என்ன சொல்லியிருக்கு இந்த புத்தகத்துல?
வேற என்ன?
எல்லாம் மூன்றாம் உலகப்போருக்கு காரணகர்த்தாவான “தண்ணீர்” மகாபிரபுவ பத்திதான். இவரென்ன பண்றாருனா வளரும் நாடுகள்/ மூன்றாம்தர நாடுகள் என மேற்குலகினால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளிலுள்ள மக்களின் தாகத்தைக் கூட சரியாக போக்காமல், வளர்ந்த நாடுகள் எனக் கூறிக்கொள்ளும் மக்களின் காலணிகளினுள்ளும், ஆடைகளினுள்ளும் ஒளிந்து கொள்கிறார். இதைத் தான் ‘மறைநீர்’ (virtual water) என்கிறார் நூலின் ஆசிரியர்.

விவரமாகவே சொல்கிறேன். நெல் மணிகளை உற்பத்தி செய்வதற்கு நீர் தேவைப்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால், நெல் விளைந்தவுடன் அதற்கு தேவைப்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. அதேசமயம் அந்த நீர் அந்த நெல்லிற்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே? அந்த நீர் தான் ‘மறைநீர்’. இந்த மறைநீர்தான் உலகவர்த்தகத்தின் ஆஸ்தான நாயகன். இதனடிப்படையிலான பொருளாதாரம் ‘மறைநீர் பொருளாதாரம்’ என நாமகரணம் செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் புரிந்துக்கொள்ள சில கேள்விகளை நம்முன் வைக்கிறார் நூலின் ஆசிரியர். (பதில்களையும் அவரே கொடுத்துவிடுவார், கவலை வேண்டாம்.)

“பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல்நாட்டினருக்கு, பின்னலாடை தொழிநுட்பம் தெரிந்த மேல்நாட்டினருக்கு, அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல்நாட்டினருக்கு, இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா? பின் ஏன் அதை மட்டும் இங்கே உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறார்கள்?”

“காலணி (shoe) தயாரிப்பிற்கு புகழ் பெற்ற இத்தாலி, ஏன் வாணியம்பாடியிலிருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை இறக்குமதி செய்கிறது? அதுவே பதப்படுத்திக் கொண்டால் இலாபம் இன்னும் இரட்டிப்பாகுமே?”

இப்படி பல ‘ஏன்’களுக்கு முதலாளித்துவ பொருளாதார பார்வை, அளிக்கும் பதில் “மலிவான மனிதவளம்” (அதாவது, நிறையபேர் வேலையில்லாத வெட்டிபசங்களா இருக்காங்கோமா, போனாபோகுதுனு நமக்கு அவங்க வேலைபோட்டுத் தாங்களாம்). இதுதான் உற்பத்தியை பெருக்க சரியான பொருளாதார உத்தி என, எனது பொருளாதார ஆசிரியர் கூறியதை நினைத்துக் கொண்டேன். அப்படி எனில் மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறார் ஆசிரியர்,

“சிக்கன நீர்ப்பாசன வேளாண்மைக்கு புகழ்பெற்ற இஸ்ரேல், பல வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஏன் ஆரஞ்சு பழங்களை ஏற்றுமதி செய்வதில்லை?”

“கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த சவூதி அரேபியா ஏன் உற்பத்தியை குறைத்துவிட்டு இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது?”

“பன்றி இறைச்சியை சீனர்கள் விரும்பி உண்ணும் போது, சீன அரசாங்கம் அதன் உற்பத்தியை கட்டுபடுத்தி வருகிறது?”

இங்கெல்லாம் “மலிவான மனிதவளம்” எனும் பதம் எந்த வினையையும் ஆற்றவில்லையே. ஆக, இந்த எல்லா கேள்விகளுக்குமான ஒருவரி பதில் ‘நீர் அரசியல்’ பலவரி பதில் ‘மறைநீர் பொருளாதாரம்’.(விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதே அளவுநீர் தான் இன்றும் உள்ளது. ஒரு சொட்டுகூட கூடவும் இல்லை, குறையவும் இல்லை. இது அறிவியல் உண்மை. பின் ஏன் இந்த அளவுக்கு நீர் தட்டுப்பாட்டு? இந்நூலின் ஆசிரியர் உலகநாடுகளைச் சுற்றிவந்து பல காரணங்களை அடுக்குகிறார். இங்கு, நாம் தமிழ்நாட்டிலிருந்து சில உதாரணங்களை மட்டும் காண்போம்.

சென்னை, ‘இந்தியாவின் டெட்ராய்ட்’என்ற பெருமையின் பின் 1.1 டன் எடையுள்ள ஒரு கார் உற்பத்திக்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீரைத் தாரைவார்க்கும் ஏமாளித்தனம் ஒளிந்துள்ளது. விளைவு, மாநிலத்தின் தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரே ஒரு பின்னலாடையின் மூலம் 2700 லிட்டர் தண்ணீர் கப்பலேரி செல்கிறது. நாம், உலகிலேயே மிக வேகமாக வளரும் நகருங்களுள் திருப்பூர்தான் முதலிடம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறோம்.வாணியம்பாடியிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் 1 கிலோ பதப்படுத்தப்பட்ட தோலின் மறைநீர் அளவு 16,600 லிட்டர். விளைவு, வேறென்ன பாலாறுக்கு பால் ஊற்றியது தான். இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தில் ஏமாளியாக இருந்த ஆப்பரிக்க நாடுகளின் தற்போதைய நிலமையை நம் நகரங்களோடு ஒப்பிட்டு பீதியை கிளப்புகிறார் ஆசிரியர். மேலும், மறைநீர் பொருளாதாரம், தண்ணீர் தட்டுப்பாடு இவற்றிற்கிடையேயுள்ள உறவையும் இதன் பின்னணியில் இருக்கும் சூழலியல் தீமைகளையும் அவர் பட்டியலிடும் போது ஆச்சரியகுறி எனும் அணிகலனை முகம் அணிச்சையாக அணிந்துகொள்கிறது.

ஒரு அணையின் மேல்பகுதியில் இருக்கும் மக்கள் அதை திறக்கக்கூடாது எனப் போராடுவதும், கீழ்ப்பகுதியில் இருக்கும் மக்கள் திறக்க வேண்டுமென போராடுவதும் உலக வழமை வேளாண் அரசியல். காவிரி நதிநீர் பிரச்சனையில் கூட தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையில் நடப்பது இதுதான். ஆனால் இதற்கு நேர்மாறாக உள்ளது தமிழகத்தில் ஓர் அணை. திருப்பூர் நகரிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள ஒரத்துப்பாளையம் அணைதான் அது. காவிரியின் துணைநதியான நொய்யலின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தான் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்ஞாகி அணைக்கு மேல்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக தான் அணையின் கீழ்ப்பகுதி மக்கள் அணையை திறக்க வேண்டாம் என போராட்டம் செய்கிறார்கள். இதன் கொடூரம், ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் இளநீர் செந்நிரமாக மாறி போனதால் குடிக்க எவருமின்றி தொங்கிக்கொண்டிருப்பதில் வெளிப்படுகிறது. வாணியம்பாடி தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றை இராசயண கழிவுநீர் தொட்டிபோல் மாற்றிவிட்டன.

இந்த பின்னணியில் தண்ணீர் தட்டுப்பாட்டை பாருங்கள், ஒருபக்கம் தண்ணீர் மறைநீராக ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், இருக்கும் சொற்பநீரும் மாசடைந்து கிடக்கிறது. இங்குள்ள குடிநீரில் 72 விழுக்காடு குடிக்க லாயக்கற்றது என்று தமிழக பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது.

(குறிப்பு: இந்த இரசாயண கழிவுகள் ஒரு வழியாகக் கடலை அடையும்போது, கடலோர காடுகளான கண்டல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கண்டலைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள நக்கீரனின் இன்னொரு புத்தகமான அலையாத்தி காடு என்பதை படிக்கவும்).
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் சாயத்தொழிற்சாலைகளோ, தோல் பதனிடும் தொழிற்சாலைகளோ இல்லை. இப்பொருட்களை அந்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது. இக்காரணத்தில் இந்நாட்டின் தலைநகரம் ‘நீரின் நகரம்’ என அழைக்கப்படுகிறது.

தண்ணீரும் அதைச்சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்த்து இது போன்ற வளர்ச்சி எனும் ஆயுதம் தாங்கிய தொழிற்சாலைகளினால் ஏற்படுத்தப்படும் சுகாதார, உடல்நல கேடுகள் எனும் காயங்கள் நிகழ்கால கண்ணீர் சாட்சியங்கள். அதற்கு தனியே மேலும் சில புத்தகங்களை எழுத வேண்டும். இறுதியாக, வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் உள்ள செல்வ சீமாட்டிகள் ஆடம்பர கட்டிலில் புரண்டு விளையாட, ஏழைகளும், ஏழைநாட்டு மக்களின் வளங்களும் வதைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ‘சிவப்பு பொருளாதாரத்தை’ கைவிட்டு, ‘பச்சை பொருளாதாரத்தைக் கையிலெடுக்க அரசுகள் முன்வர வேண்டுமென இப்புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

– சூரியா சுந்தரராஜன்