Election2024- Modi- National security | மோடி அரசு -தேசிய பாதுகாப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “தேசிய பாதுகாப்பு”

எண்: 9 மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் தேசிய பாதுகாப்பு சொன்னது 'இந்தியாவின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்துதல்; உள்நாட்டு/வெளிநாட்டு பாதுகாப்பில் சமரசமற்ற அணுகுமுறையை அறிமுகப்படுத்துதல்' 'நமது பாதுகாப்புக்கான கருவிகளை மேலும் உள்நாட்டுமயமாக்கும் வகையில், பாதுகாப்புத் துறையில் ‘இந்தியாவிலேயே…
Election2024- Modi- economy | மோடி அரசு - பொருளாதாரம்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “பொருளாதாரம்”

எண் : 8 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் பொருளாதாரம் சொன்னது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் நான்காவது பெரிய அல்லது மூன்றாவது பெரிய நாடாக…
“கடன் பொறி இராஜதந்திரம் ” – அ.பாக்கியம்

“கடன் பொறி இராஜதந்திரம் ” – அ.பாக்கியம்




சீனாவின் கடன் பொறியால் இலங்கை திவால்! பாகிஸ்தானில் நெருக்கடி! சொத்துக்களை கைப்பற்ற திட்டம்! என்று சீன எதிர்ப்பு சாக்கடைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் ஊடகங்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளை கோபம் அடைய செய்துள்ளது. முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான கொள்கைகளை உடைய ஒரு நாட்டின் வளர்ச்சி அவர்களின் அடித்தளத்தையே ஆட்டிப்படைப்பதாக அச்சப்படுகின்றன. எனவே சீனாவிற்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளனர் அதில் ஒன்றுதான் இந்த கடன் பொறி ராஜதந்திரம்.

இந்த வார்த்தைகளை 2018 ஆம் ஆண்டு உருவாக்கி வலைதளங்களில் பரப்பி சுமார் சில மில்லியன்கள் தேட ஆரம்பித்தனர். டொனால்ட் ட்ரம்ப், பைடன், உலக வங்கி மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் சீனாவுக்கு எதிரான இந்த வார்த்தைகளை ஊதி பெரிதாக்கினார்கள். சீனா தற்போது அமலாக்கி வருகின்ற பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் 149 நாடுகள், 32 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் 200க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இவையெல்லாம் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. எனவே தான் சீனாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டனர்.

முதல்கட்டுக்கதை:

சீனா பெல்ட் அண்ட் ரோடு தங்களை ஒருதலை பட்சமாக அறிவித்து பிற நாடுகளை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது! உண்மையில் சீனாவின் மேம்பாட்டு நிதியகத்தின் மூலமாக இரு தரப்பு தொடர்புகள், ஒப்பந்தங்கள் மூலமாக திட்டம் வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக கடன் பெறும் நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அந்த நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களின் அடிப்படையில் கடன் பெறுபவர்கள் இதை தீர்மானிக்கிறார்கள்.

இரண்டாவது கட்டுக்கதை:

சீனா கடன் வாங்கும் நாடுகளை சிக்க வைப்பதற்காக கடுமையான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்படுத்துகிறது! உண்மையில் சீனா உலக வங்கி மற்றும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் கொடுப்பதை விட மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை கொடுக்கிறது. வட்டியை தவிர வேறு எந்த நிபந்தனைகளும் சீனா விதிப்பது இல்லை.

கடன் வாங்கும் நாடுகள் கடனை மறுசீரமைப்பதற்கும் விதிமுறைகளை கொடுக்கிறது தவிர்க்க முடியாத நேரங்களில் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடிய சலுகைகளும் இந்த கடன் வழங்கும் திட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது

ஆகஸ்ட் 2022 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 23 வகையிலான வட்டி இல்லா கடன்களை தள்ளுபடி செய்தது. 2000-2019 இடையில் ஆன காலத்தில் சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை மறுசீரமைத்துக் கொடுத்தது.
இந்தக் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொடுத்த 3.4 பில்லியன்கள் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்தது.

உலக வங்கி மற்றும் ஐ எம் எப் போன்ற நிறுவனங்கள் கடன் கொடுத்து நாட்டை அடிமையாக நிபந்தனை போடுகிறது சீனா வட்டிக்கு மட்டும் கடன் கொடுக்கிறது.

மிகவும் பின்தங்கிய அடிமட்டத்தில் இருக்கும் கூடிய நா, அதற்கு மேல் இருக்கக்கூடிய நடுத்தர நாடுகளுக்கும், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கடன் கொடுக்க மறுக்கும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சீனா, அந்த நாட்டின் வளர்ச்சிக்காக கூடுதலாகவே கடனை வழங்கி வருகிறது.

சுமார் 150 நாடுகளுக்கு 1.5 ட்ரீல்லியன் டாலர்களை நேரடி கடனாகவும் வர்த்தக கடனாகவும் சீனா வழங்கி வருகிறது.

மூன்றாவது கட்டுக்கதை:

சீனா கடனை திருப்பி கொடுக்காத நாடுகளின் சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வது என்ற கதைகளை கட்டிவிடுகின்றனர். சீனா இதுவரை கடன் திருப்பி செலுத்தாத எந்த ஒரு நாட்டின் சொத்துக்களையும் கைப்பற்றவில்லை. ராணுவ தளங்களையும் அமைக்கவில்லை. மாறாக அமெரிக்கா 159 நாடுகளில் 845 ராணுவ தளங்களை வைத்துள்ளது. இதில் 1,73,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம்:

இந்த கடன் பொறி ராஜதந்திரத்திற்கு இலங்கையின் அம்பாந் தோட்டைத் துறைமுகத்தை உதாரணமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். பெல்ட் அண்ட் ரோடு பகுதியாக தெற்கு கடற்கரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கடன் கொடுத்து அதற்கு ஈடாக சீன கடற்படை ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டது என்று கதை கட்டுகிறார்கள்.

அம்பாந்தோட்ட துறைமுகத்தை கட்ட வேண்டும் என்று சீனாவால் அல்ல இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு திட்டம் உருவாவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு திட்டத்தை உருவாக்கியது.

இலங்கை அரசாங்கம் இத்திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் நிதி உதவியை கேட்டிருந்தது. இவர்கள் நிதி உதவி இல்லை என்று மறுத்து விட்டார்கள். இலங்கை அரசு சீனாவை அணுகியது. சீனாவின் “சைனா துறைமுக குழுமம்” ஒப்பந்தத்தை பெற்றது சீன வங்கி நிதியளிக்க ஒப்புக்கொண்டது. இவை அனைத்தும் 2007 ஆம் ஆண்டு அதாவது பெல்ட் அண்ட் ரோடு திட்டம் சீனாவால் துவங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிந்து விட்டது. இதை சீனா பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்காக ஆலோசனை உருவாக்கி கடன் கொடுத்து பிடித்துக் கொண்டது என்று நடக்காத ஒரு விஷயத்தை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறது ஏகாதிபத்தியம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் சுமைக்கு சீனா தான் காரணம் என்று கதை கட்டுகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டு கடன் 50 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் சீனாவின் பங்கு மிகக்குறைவான 9%மட்டுமே. இலங்கையின் கடன்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்டது. சீனாவை விட உலக வங்கியும் ஜப்பானும் இலங்கைக்கு கூடுதலாக கடனை கொடுத்துள்ளார்கள்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், வெளிநாட்டு கடன் நெருக்கடி அதிகமானதால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தது ஆனால் சர்வதேச நாணய நிதியகம் உதவி செய்யவில்லை.

வேறு வழியின்றி கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் குத்தகைக்கு விட முடிவு செய்தது. முதலில் இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களை இலங்கை அரசு அணுகியது. ஆனால் அவர்கள் குத்தகைக்கு எடுக்க தயாராக இல்லை மறுத்துவிட்டார்கள். இதன் பிறகு சீன அரசு நிறுவனமான China Merchants Ports Holdings பேச்சுவார்த்தை நடத்தி 1.12 பில்லியன் டாலருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது. இதனால் இலங்கை அரசு தனது கடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நோக்கத்திற்காகச் சீனா கைப்பற்றியது பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்கிறது. இது கட்டுக்கதை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவாகு தெளிவுபடுத்தி உள்ளார். சீனா ஒரு பொழுதும் துறைமுகத்தை கடற்படை தளமாக பயன்படுத்தவில்லை என்று பயன்படுத்துவதற்கு அனுமதியும் இல்லை என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் மக்கள் கொந்தளிப்புக்கும் உலக வங்கி சர்வதேச நாணய அமைப்பு காரணம் என்பதை மறைப்பதற்காக அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் சீனாவின்மீது பழிசுமத்தி திசைதிருப்புகிறார்கள்.

81% கடன் தொகை ஐ.எம்.எப் மற்றும் ஜப்பான் நாட்டினுடையது. குறுகிய காலத்தில் மட்டும் IMF இலங்கைக்கு 16 முறை கடன்வழங்கி உள்ளது. மேற்கத்திய நாடுகளின் நவீன தாராள மையக் கொள்கைகளை அமுல்படுத்த கட்டாயப்படுத்தியதும் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியதில் தான் இலங்கை நெருக்கடிக்கு உள்ளானது.

உகாண்டாவில் உள்ள Entebbe சர்வதேச விமான நிலையம்:

கடன் பொறி ராஜதந்திரத்திற்கு உகண்டா நாட்டு விமான நிலைய கட்டுமானத்தைப் பற்றிய கட்டுக் கதைகளை உருவாக்குகிறார்கள்.

உகாண்டா நாட்டில் அமைந்துள்ள எண்டெபா விமான நிலையத்தை விரிவு படுத்துவதற்கான ஒப்பந்தம் சீனாவுடன் ஏற்பட்டது சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இந்த திட்டத்திற்காக நிதி வழங்கியது. 207 மில்லியன் டாலர் கடனை 2% வட்டிக்கு மட்டுமே கடன் கொடுத்தது. இத்திட்டம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் வருவதாகும்.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜார்னல், இந்தியாவின் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை, உகண்டாவின் சில பத்திரிகைகள் சீனா விமான நிலையத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுதி வருகிறார்கள். அது மட்டுமல்ல ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்றும் எழுதுகிறார்கள். உகாண்டா கையெழுத்து போடவே இல்லை என்று பொய் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.

ஒப்பந்தத்தின் நகலை பெற்று பகுப்பாய்வு செய்து கடன் அளிப்பவர் விமான நிலையத்தை கைப்பற்றுவதற்கான எந்த சரத்தும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர். சர்வதேச திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கான நிலையான விதி ஒன்று உள்ளது. அதாவது திட்டத்திற்கான அல்லது பண பிணையத்திற்காக எக்ஸ்ரே கணக்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று சரத்து உள்ளது. அமெரிக்க சார்பான பத்திரிகைகளின் பிரச்சாரத்தை உகாண்டா நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறையே மறுத்துவிட்டது இருந்தாலும் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

உண்மையான கடன் பொறி:

சீன “கடன் பொறி இராஜதந்திரம்” என்று பிரச்சாரம் செய்வது அமெரிக்காவும் சர்வதேச நாணய நிதியம், தங்களது மோசடிகளைத் திசைதிருப்புவதற்காக செய்யக்கூடியதாகும்.

அபரிமிதமான அதிக வட்டி விகிதங்களுடன் கொள்ளையடிக்கும் கடன்களை உலகளாவிய நாடுகள் மீது திணிக்கும் அமெரிக்காவின் கடன் பொறி ராஜதந்திரம்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

சீனக் கடன்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.அவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அவை தனியார்மயமாக்கல் திட்டங்கள், மற்றும் IMF மற்றும் உலக வங்கி கடன்களைப் போல கட்டமைப்பு சரிசெய்தல், சிக்கன நடவடிக்கை போன்றவற்றுடன் இணைக்கப் படவில்லை.

உண்மையில்,IMF, உலக வங்கி கடன்கள் பொதுத்துறைகளை தனியார்மயமாக்குதல், சமூக நலத்திட்டங்களைக் குறைத்தல், மேற்கத்திய முதலாளித்துவ நலன்களை வளப்படுத்த வர்த்தக தாராளமயமாக்கல், ஆகியவற்றின் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

கொள்ளையடிக்கும் வட்டி விகிதங்கள், இந்தக் கடன்களை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை உறுதிசெய்கிறது. கடன் வாங்கும் நாடுகளை ஏழைகளாக வைத்து, வளர்ச்சியடையாத நிலையில் அவர்களை அடைத்து, மேற்கத்திய முதலாளிகள் மேலும் கொள்ளையடிப்பதையும், வளங்களைப் பிரித்தெடுப்பதையும், இவர்களின் கடன் உறுதிசெய்கிறது. இதுதான் உண்மையான கடன் பொறி.

அ.பாக்கியம்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 15 நரேந்திர மோடியின் 2.0வும்  வேளாண்மையும் – பாகம்-2  பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 15 நரேந்திர மோடியின் 2.0வும் வேளாண்மையும் – பாகம்-2 பேரா.பு.அன்பழகன்




2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில். இந்தியாவை உலகளவில் முதன்மை தேசமாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, இந்தியாவில் தயாரிப்பது, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப் பு, பெண்களுக்கானச் சமத்துவம், நல்லாட்சி, உள்ளடக்கிய வளர்ச்சி, உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 354 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் பா.ஜ.க தனித்து 303 இடங்களில் வெற்றிபெற்றது. இது பா.ஜ.க 2014ல் வெற்றி பெற்றதைவிடக் கூடுதலாக 21 இடங்களில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியானது பா.ஜ.க சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றியது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசியல் சாசனப் பிரிவு 370 விலக்கிக்கொள்ளப்பட்டது. குடியுரிமை சட்டம் முஸ்லீம் அல்லாத இந்தியாவில் குடியேறிய மூன்று நாடுகளின் (பாக்கிஸ்தான். பங்களாதேஷ்; ஆப்கானிஸ்தான்) மக்களுக்குக் குடியுரிமை, முஸ்லீம் மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுதல், ராமர் கோவில் கட்டுவதற்கானப் பணிகள் துவக்கம், புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட அடிக்கல், முஸ்லீம் பெண்களுக்கு எதிரான மும்முறை தலாக் ஒழிப்புச் சட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற அதிரடி அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியது. 2019ன் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, 2019 மற்றும் 2021களுக்கிடையே மூன்று அலைகளின் தாக்கத்தினால், நாடுமுழுவதும் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதால் இந்தியா பொருளாதார அளவில் நிலைகுலைந்து போனது. உற்பத்தி நிறுத்தம், வேலையின்மை அதிகரிப்பு, வறுமை, போக்குவரத்து தொடர்பு அறுபடுதல், அரசுச் செலவு அதிகரிப்பு போன்ற விளைவுகள் உருவானது. இதில் வேளாண்மைத் துறை உட்பட அனைத்து துறைகளும் பெரும் பாதிப்பிற்கு உண்டானது. வேளாண்மையில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வேளாண்மை நடவடிக்கைகள் பெருமளவிற்குப், (குறிப்பாகப் பஞ்சாப். ஹரியானா. உத்திரப் பிரதேசம். கேரளா) பாதித்தது. 2019ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் இந்திய அளவில் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை உருவாக்கியது. மோடி அரசு 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிப்பது, 2024ல் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது, நீர் சேமிப்பைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் நிறுத்துவது, சுகாதார அளிப்பை மேம்படுத்துவது, அனைவருக்கும் வீட்டு வசதி, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.102 கோடி மதிப்பீட்டில் 7000 திட்டங்களுக்கு (குழாய் நீர் இணைப்பு, சாலை, நீரப்பாசனம், சுகாதாரம், டீஜிடல் இந்தியா, நகர்ப்புற வசதி) ஒதுக்கப்பட்டு நடைமுறைகளை மேற்கொள்வது என்று பல செயல்பாடுகளை மோடியின் 0.2வில் முன்னெடுத்தது.

நீர் சேமிப்பு நடவடிக்கையின் முதல் படியாக ஜல சக்தி என்ற புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஜல சக்தி அபியான் (Jan Shakti Abhiyaan) மற்றும் ஜல ஜீவன் மிஷ்ன் (Jal Jeevan Mission) என்ற இரு திட்டங்கள் நீர் சேமிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் முக்கிய நோக்கம் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் 2024குள் குடிநீர் இணைப்பை ஏற்படுத்தித் தருதல். நீர் வீணாகுவதைத் தடுக்கப் புதிய உத்திகளைக் கடைப்பிடித்தல். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 43 முதல் 55 லிட்டர்வரை தண்ணீர் அளிப்பது போன்றவையாகும். சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். 2018ல் ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டு தரமான மருத்துவத்தைச் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக மருத்துவக் காப்பீடு மற்றும் நல மையங்கள் வழியாகச் சுகாதாரம் அளிக்க ரூ.1.50 லட்சம் கோடியில் சுகாதார மையங்கள் கிராமப்புறங்களில் 2022ல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று இருக்க இருப்பிடம் அடிப்படையானதாக உள்ளதால் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா தொடங்கப்பட்டு 20 மில்லியன் வீடுகளுக்குப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க 2016ல் திட்டமிடப்பட்டது. இவ்வீடுகள் அனைத்து வசதிகளும் (தண்ணீர் குழாய் இணைப்பு. மின் இணைப்பு உட்பட) உள்ளடக்கியதாக இருந்தது.

2021ல் வெளியிடப்பட்ட SAS அறிக்கையின்படி இந்தியாவில் விவசாய குடும்பங்கள் தங்களின் மாத வருமானத்தில் 37 விழுக்காடு மட்டுமே வேளாண் சாகுபடி வழியாகப் பெறுகின்றனர். 40 விழுக்காடு வருமானம் கூலியின் வழியாகவும் , 15 விழுக்காடு கால்நடை வளர்த்தல் மூலமாகவும் , 6 விழுக்காடு வேளாண் சாரா வணிகம் மூலமாகவும் , 1 விழுக்காடு நிலம் குத்தகைக்கு விடுவதன் மூலமாகவும் பெறப்படுகிறது. 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. இடுபொருட்களுக்கான மானியத்தைத் தொடர்ந்து வழங்குதல், உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தரமான இடுபொருட்களைப் பயன்படுத்துதல், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்கக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்வது, வேளாண் உற்பத்தியில் அதிக அளவிற்கு உபரியை உருவாக்கிச் சந்தை படுத்துதல் , வேளாண் மற்றும் வேளாண் சாரா இரண்டுக்குமான வர்த்தக நிர்யினை அதிகரிப்பது, நேரடியாக விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு தீவிரமாக நடைமுறை படுத்திவருகிறது.

10000 புதிய விவசாயிகள் உற்பத்தி அமைப்பை அடுத்த ஐந்தாண்டுகளில் தொடங்கி விவசாயிகள் பலன்பெற மாநில அரசுகள் மின்-சந்தை (e-NAM) தொடங்க அனுமதி அளிப்பது, வேளாண்மையில் பூஜ்ய செலவிலான திட்டம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

வேளாண்மையில் மின்சாரப் பம்பு செட்டுகள் நீர்ப்பாசன வசதியினை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால் மின் பற்றாக்குறை நிலவிவருவதால் தடையற்ற மின்சாரம் கிடைப்பது இல்லை. எனவே அரசு முறைசார ஆற்றலைப் பயன்படுத்திப் பம்பு செட்டுக்களை நீர் இறைப்பிற்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஜூலை 2019ல் நீர்ப்பாசன வசதிக்காக மோட்டார் பம்பு செட் பயன்பாட்டிற்குப் பிராதான் மந்திரி கிசான் உர்ஜா சுரகூஷ உத்தன் மஹாவியான் திட்டம் (PM-KUSUM) அறிமுகப்படுத்தப்பட்டது. டீசல், மண்ணெண்ணெய் பயன்பாட்டிற்கு மாற்றாகச் சூரியஒளியினைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதன்படி 20 லட்சம் விவசாயிகளுக்குப் பம்பு செட்டுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இத்துடன் 15 லட்சம் விவசாயிகளுக்குச் சோலார் பம்பு செட்டுகள் 60 விழுக்காடு மானியத்துடன் , 30 விழுக்காடு அரசுக் கடனுடன் அமைத்துத் தர முடிவெடுக்கப்பட்டது. சோலார் பேனல் வழியாக உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை விற்கவும் விவசாயிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உபரியாக உள்ள வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளில் சந்தைப் படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் பெற இயலும். இதற்கு முக்கியத் தேவையாகக் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகளை உருவாக்கித் தரப்படுகிறது. 162 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவை நபார்டு (NABARD) உதவியுடன் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அழுகக்கூடிய பொருட்களான பால், இறைச்சி, மீன் ஆகியவற்றை விரைவுப் பரிவர்த்தனைக்குக் கொண்டு செல்லா ஏதுவாக இந்திய ரயில்வே ‘விவசாயி இரயில்’ பொது-தனியார்-பங்கேற்புடன் இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுய உதவிக் குழு உதவியுடன் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த முறையில் தோட்டக்கலையை மேம்படுத்த ஏற்றுமதி சந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மானாவாரி பயிரிடும் பகுதிகளை ஒருங்கிணைந்த முறையில் பல்லடுக்கு பயிர்செய்தல், தேனி வளர்த்தல், சூரியஒளி பம்புகள், சூரியஒளி உற்பத்தி போன்றவை ஏற்படுத்தவும், வேளாண்மையில் பூஜ்ய செலவின் அடிப்படையிலான திட்டத்தை விரைவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த மேம்பாட்டுக்குப் பிரதம மந்திரி கதி சக்தி என்ற திட்டத்தின்படி சாலை, ரயில்வே. விமான நிலையம், துறைமுகம், பொருண்மை போக்குவரத்து, நீர் வழிப் போக்குவரத்து, போக்குவரத்து உள்கட்டமைப்பு, போன்றவற்றை வலுப்படுத்த முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவுச் சாலைகளை உருவாக்க ரூ.2000 கோடியில் 25000 கி.மீ அமைக்கவும், மக்கள் மற்றும் பொருட்களை வேகமாகப் பயனிக்கவும், எடுத்துச் செல்லவும் பலநிலை போக்குவரத்து வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ட்ரோன்கள் முறையைப் பயன்படுத்தி வேளாண் விளைச்சலைக் முன் கணிப்பு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல், வேளாண்மையைத் தாக்கும் புதியவகைப் பூச்சிகள் அழிப்பு, மண்ணின் உயிர்ச்சத்தை அதிகரிப்பது போன்றவை நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுபோல் வேளாண்மை மீதான முதலீடுகள் குறிப்பாக நீர்ப்பாசம், ஆராய்ச்சி, சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற முயற்சிகளும் அரசு மேற்கொள்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு வேளாண் சார்புத் துறைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்புத் திட்டம் 2000ல் அன்றைப் பிரதமர் வாஜ்பாயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் செயல்பாடுகள் அரசியலைக் கடந்து கிராமப்புறச் சாலை இணைப்பு மற்றும் மேம்பாட்டில் நல்ல முன்னேற்றம் கண்டதால் கிராமங்களில் சமூக-பொருளாதாரத் தளங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 97 விழுக்காடு குடியிருப்புகள் சாலை இணைப்பைப் பெற்றுள்ளது. மோடியின் ஆட்சியில் பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் பகுதி மூன்றுக்கு ரூ.8020 கோடியில் 1.25 லட்சம் கி.மீ சாலை அமைக்க 2019ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து வரும் 1000 நாட்களுக்கு ஒருநாளைக்கு 130 முதல் 135 கி.மீ சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 30000 கி.மீ சாலைகள் பசுமை தொழில்நுட்பம் முறையிலும், பிளாஸ்டிக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்டும் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.

ஜூன் 2020ல் பாராளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு செப்டம்பர் 2020ல் இவற்றைச் சட்டமாக்கியது. அதன்படி ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்’, ‘வேளாண் விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்’, ‘விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம்’ நடைமுறைக்குக் கொண்டுவந்தது. இச்சட்டங்களின் முதன்மை நோக்கங்களாக, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பது, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நாட்டின் எப்பகுதியிலும் நல்ல விலைக்கு விற்கத் தடையற்ற நிலையினை உருவாக்குவது, தனியார் மண்டிகளை ஊக்குவித்து வேளாண் விவசாயிகளுக்கு வருவாய் பெறும் நோக்கினை மேம்படுத்துதல். வேளாண் விளைபொருட்களை அறுவடைக்காலங்களில் கொள்முதல் செய்து அவற்றைச் சேமித்துவைத்தல் போன்றவை ஆகும். இதனால் வேளாண் உள்கட்டமைப்புகள் தனியார் முதலீடுகளால் வலுப்பெறும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும், விவசாயிகள் லாபமடைவார்கள் என்று எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த பட்ச ஆதரவு விலை நாளடைவில் நீர்த்துப்போகக்கூடும். விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள ஏபிஎம்சி என்கிற மண்டி அமைப்பு நடைமுறையில் காணாமல் போகலாம். வேளாண்மை பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றடையும் இதனால் விவசாயிகளின் உரிமைகள் பறிபோகும் போன்ற காரணங்களில் விவசாயிகளிடம் கடுமையான எதிர்ப்பு உருவானது.

வேளாண் ஒப்பந்த முறை 1960களில் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 1990களில் தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் ஒப்பந்த முறையிலான சாகுபடி செய்யும் முறையிருந்தது. பின்னால் இது 12க்கு மேற்பட்ட வேளாண் பயிர்கள் என விரிவானது. இவ்வொப்பந்தத்தில் உள்நாட்டுத் தனியார் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்த வேளாண்மையை மேற்கொண்டது.

2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதன் முதலில் தமிழ் நாட்டில் இச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு 2019ல் வேளாண் ஒப்பந்தச் சட்டம் கொண்டுவந்தது அதனைத் தொடர்ந்து ஒடிசாவில் 2020ல் கொண்டுவரப்பட்டது.

வேளாண் ஒப்பந்தச் சட்டத்தினால் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துதல், தரமான விதைகள், வேளாண் விரிவாக்கம், உறுதிப்படுத்தப்பட்ட சந்தைப் படுத்துதல் மற்றும் விலை போன்றவற்றில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும் நடைமுறையில் கடந்த காலங்களில் இம்முறையில் வேளாண் விளைபொருட்களின் தரத்தைக் காரணம் காட்டி ஒப்பந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்ய முன்வராத நிலையும், நிறுவனங்கள் தாமதமாகப் பணம் வழங்குதல், குறைவான விலைக்குக் கொள்முதல், தரம் குறைந்த இடுபொருட்கள் அளிப்பு, பயிர் செய்வதில் இழப்பு ஏற்படும்போது எந்தவித இழப்பீடும் வழங்கப்படாதது. அதிக அளவில் இடுபொருட்களின் செலவு, நிலைத்த நிலையிலான ஒப்பந்த விலை, நிறுவனங்கள் ஒப்பந்தத்தைத் தன்னிச்சை செய்யும் உரிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. வேளாண் ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்த பட்ச நிலம் என்ற வரையறையை நிபந்தனையாக வைத்ததால் சிறு, குறு விவசாயிகள் இதனால் பயன் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கான முக்கியக் காரணம் குறைந்த அளவு நில உடைமையாளர்கள் அனுமதிப்பதால் போக்குவரத்துப் பரிமாற்றச் செலவு அதிகமாகும் என்பதாகும் (Sukhpal Singh 2022).

அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகளால் டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாளடைவில் ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமளவிற்குத் திரண்டு ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் டெல்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் அறவழியில் முற்றுகைப் போராட்டத்தினை நவம்பர் 25, 2020இல் முன்னெடுத்தனர். இப்போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள 500க்கு மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து அனைத்து இந்திய விவசாயிகள் போராட்ட கூட்டு ஒருங்கிணைப்புக் குழு (All India Kisan Sangharsh Coordination Committee) உருவாக்கப்பட்டது. போராட்ட காலங்களில் 750க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 358 நாட்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு வேறு வழியின்றி அடிபணிந்து இந்த மூன்று சட்டங்களையும் நவம்பர் 19, 2021 அன்று திரும்பப் பெறுவதாக அறிவித்தது. விவசாயிகள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இப்போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இந்தியாவில் இயற்கை வேளாண்மைக்கான சூழலைப் பற்றி பன்னாட்டு நிபுணர்களின் பங்கேற்புடன் நிதி ஆயோக்ஏ ஏற்பாட்டில் மே 2020ல் நடந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கப் பாரதிய ப்ராக்ரித்திக் க்ரிஷ் மேம்பாட்டுத் திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme) தொடங்கப்பட்டது. இதற்காக அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி உதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேரும், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேரும் பயனடைந்திருக்கிறது.

விவசாயிகளின் முக்கிய வருமான ஆதாரங்களில் கால்நடைகள் வளர்த்தலும்; ஒன்றாகும். இதற்காகப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாகப் பால் உற்பத்தியானது இந்தியப் பொருளாதாரத்திற்கு 5 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. இத்துறையில் 8 கோடி விவசாயிகள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தியா உலக அளவில் பால் உற்பத்தியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. உலக பால் உற்பத்தியில் இந்தியா 23 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. 2014-15ல் 146.31 மில்லியன் டன் பால் உற்பத்தியாக இருந்தது. 2020-21ல் இது 209.96 மில்லியன் டன்னாக அதிகரித்தது. தலா பால் நுகர்வானது 427 கிராம் என்ற அளவில் தற்போது உள்ளது. 2020ல் ரூ.15000 கோடி மதிப்பில் கால்நடை உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும்.

மே 2020ல் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டம் ரூ.2050 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதன்படி மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, போக்குவரத்துச் சங்கிலித் தொடரை மேம்படுத்துவது, மீன் சந்தைப் படுத்துதலுக்கான கட்டணம் உருவாக்குவது போன்றவை ஆகும். இதுபோல் வேளாண்மையை வளப்படுத்த டிராக்டர், விசை கலப்பையின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உணவுப் பதப்படுத்தும் துறையை மேம்படுத்தவும் ஒரு குடையின் கீழ் நடைமுறைப்படுத்த பிரதான் மந்திரி கிசான் சம்பதா திடடம் (PM Kisan SANOADA Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது.

உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் நகரமயமாதல் அதிக அளவில் காணப்படுவது, மக்கள் தொகை அதிகரிப்பு, நுகர்ச்சியில் பெருமளவிற்குக்காண மாறுபாடுகள் போன்ற நிலையில் தாவர எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரித்திருந்தாலும் பற்றாக்குறை நிலவிவருகின்றது. எனவே அரசானது உடனடியாக தீர்வாகச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து தேவையினை நிவர்த்தி செய்கிறது (Sekhar 2022). இந்தியாவில் அன்மைக் காலமாகச் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியை அதிகமாக சார்ந்திருக்கவேண்டிய நிலை உள்ளதால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களை அதிகமாக உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 2021ல் தேசிய சமையில் எண்ணெய் இயக்கம் – பனை எண்ணெய் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி பனை எண்ணெய் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு அதற்கான விலையினை அரசு உறுதி செய்கிறது. இதன் விளைவு தற்போது 3.70 லட்சம் ஹெக்டேர் பனை பயிரிடப்பட்டுள்ளது. பனை எண்ணெய் வழியாகப் பெறப்படும் தாவர எண்ணெய்யானது மற்றவற்றைக் காட்டிலும் 10 – 46 மடங்கு ஒரு ஹெக்டேருக்கு எண்ணெய் பெறப்படுகிறது. அதுபோல் உற்பத்தித் திறன் மற்றவற்றைவிட 4 டன் ஒரு ஹெக்டேருக்குக் கூடுதலாக விளைச்சல் தரக்கூடியதாக இருக்கும். இதனால் இந்தியாவில் பனை எண்ணெய் இறக்குமதி வரும் காலங்களில் குறையக்கூடும்.

இந்தியா உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. கரும்புச் சாகுபடியில் 5 கோடிக்கு அதிகமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்குச் சராசரியாக 35.5 கோடி கரும்பும். 3 கோடி டன் சர்க்கரையும் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரை உற்பத்தியானது உள்நாட்டு நுகர்விற்குப் போக எஞ்சியதை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரும்புக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையும். தனியார் சர்க்கரை ஆலைகள் அதிகமாக இயங்கிவருவதால் சர்க்கரை உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2018-19 நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கமானது தற்போது 36 விதை ரகத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது. உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தச் செயல்படுத்துகிறது. ஒன்றிய அரசானது இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்தி ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை நீக்கும் நோக்கத்தை தற்போது நடைமுறைப்படுத்துகிறது. இயற்கை விவசாயமானது சுற்றுப்புறச் சூழல் சார்ந்த நீடித்த வளர்ச்சி மூலம் மண்வளத்தைப் பாதுகாப்பது, ரசாயன உரப்பயன்பாட்டிலிருந்து விடுபடுவது, குறைவான நீர்ப்பாசன முறையைப் பயன்பாட்டில் கொண்டுவருவது போன்றவை அடிப்படையாகக் கொண்டது. பாரதியா பிரகிருதிக் கிருஷ் பத்திதி திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme -BPKP) இயற்கை வேளாண்மைக்காகக் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக இந்த திட்டத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேர், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேர் பயனடைகிறது.

Source: GoI (2022): “Economic Survey 2021-22”, Government of India.

வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியானது 2017-18ல் 6.6 விழுக்காடு என்று இருந்தது அடுத்த வந்த ஆண்டுகளில் 2.6 விழுக்காடு (2018-19) , 4.3 விழுக்காடு (2019-20) , 3.6 விழுக்காடு (2020-21) , 3.9 விழுக்காடு (2021-22) என மாற்றமடைந்தது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாக 18.3 விழுக்காடாக 2017-18ல் இருந்தது 2021-22ல் 18.8 விழுக்காடாக விளிம் பு அளவில் அதிகரித்துள்ளது. இக்கால கட்டத்தில் அரசு முதலீடானது நிலையாக 2 – 3 விழுக்காடு அளவிற்கானதாக இருந்தது ஆனால் தனியார் முதலீடானது ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது.

2020ல் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பெருமளவிற்குப் பாதிக்கும் சூழல் உருவாக்கியது. இச்சட்டத்தால் குறைந்த பட்ச ஆதார விலையினை இழக்கவும், வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் பெருநிறுவனங்கள் முக்கிய பங்காற்றவும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் பாதிப்படையலாம், மானியங்கள் குறைக்கப்படலாம், மண்டிகளின் (APMC) செயல்பாடுகள் முடக்கப்படும், என்ற அடிப்படையில் விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டு இச்சட்டங்களுக்கு எதிராகக் கடுமையான முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசு வேறு வழியின்றி இச்சட்டங்களை விலக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தில் வேறுவழிகளில் இவற்றை முன்னெடுக்க வாய்ப்புண்டு. ஒப்பந்த முறை விவசாயத்தில் அரசு அதிகமாக அக்கறை காட்டி வருகிறது. இம் முறை பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டதில் பல பின்னடைவுகளை (ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக நிறுவனங்கள் முறித்துக்கொள்ளுதல், பெருநிறுவனங்கள் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தப்படுத்தி தங்களின் நோக்கிற்காகச் சாகுபடி செய்ய வலியுறுத்துதல், லாபம் இன்மை) விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் குறு விவசாயிகள் (ஒரு ஹெக்டேர் கீழ்) மொத்த விவசாயிகளில் 1960-61ல் 40.7 விழுக்காடாக இருந்தவர்கள் 2018-19ல் 76.5 விழுக்காடாக அதிகரித்திருந்தனர். இவர்களின் சராசரி சாகுபடி நிலப்பரப்பு 0.41 ஹெக்டேராக இருந்தது 0.38 ஹெக்டேராக இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது. இந்தியாவில் தீவிர வறுமைக் கோட்டின் கீழ் 80 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்கிறது தரவுகள். இதில் பெருமளவிற்குச் சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். தேக்க நிலையிலான இந்திய வேளாண் துறையின் வளர்ச்சி, குறைவான வேளாண் வருமானம், அளவிற்கு அதிகமான உரப் பயன்பாடு, இடுபொருட்களுக்கானச் செலவு அதிகரிப்பு, குறைந்து வரும் மண் வளம், நிலத்தடி நீர் தொடர்ந்து குறைந்தது வருதல் போன்றவை பெரும் அறைகூவல்களாக இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இவற்றின் விளைவு விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலையினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒவ்வொரு 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகத் தரவுகள் தெரிவிக்கிறது. மொத்த விவசாயிகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பங்கு 0.006 விழுக்காடாகும். மொத்த தற்கொலையில் 11.2 விழுக்காடு விவசாயத் தற்கொலைகளாக உள்ளது பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாகும் (Chris J Perry et al 2022).

இந்தியாவில் நீர் செறிவு சாகுபடி பயிர்களான நெல், கோதுமை. கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் குறைவதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு மாற்றான அதே சமயம் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது (உலகிலே அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது). இப்பயிர் ரகங்கள் வறட்சியினை தாங்குவதாகவும், நீர் பயன்பாட்டைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும். பல் வேறு ஆய்வுகளின்படி இவ்வகைப் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது, ஆனால் இதற்கான இடுபொருட்கள் அதிகமாக உள்ளது. எனவே அரசு இதற்கான விலை உறுதிப்பாட்டை அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏற்படும். விவசாயத் தற்கொலைகளும் குறையும் (Chris J Perry et al 2022).

வேளாண்மைக்கு சில வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் மானியங்கள் தொடர்ந்து அதிக அளவில் வழங்கிக்கொண்டு வருகிறது. இது விவசாயிகளை ஊக்குவிப்பது மட்டுமல்ல உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வேளாண் மானியம் 15 முதல் 20 விழுக்காடுவரை அளிக்கிறது. நார்வே. ஜப்பான். தென்கொரியா நாடுகளில் 40 முதல் 60 விழுக்காடுவரை மானியங்கள் வழங்குகிறன. இந்தியாவில் வேளாண்மைக்கான மானியம் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சில மாநிலங்கள் (குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. மானியங்கள் உரம், பூச்சி மருந்துகள், விதைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக உற்பத்தித் திறன் உடையதாகவும். நீர்ப் பாசன வசதியினை உடையதாகவும் உள்ளது. சராசரி நில உடைமையானது வட இந்திய மாநிலங்கள் ஒப்பீட்டு அளவில் அதிகமாக உள்ளது. இதுபோல் குறைந்த பட்ச ஆதரவு விலையினை முதலில் கோதுமைக்கு வழங்கப்பட்டது, பின்னால் பிற பயிர் வகைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பசுமைப் புரட்சியும் அதிகமாக வட இந்திய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாகவே வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களைவிட மானியங்கள் அதிகமாகப் பெறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவிலான மக்களின் முக்கிய உணவாக அரிசி உள்ளது. இது பொது விநியோகம் வழியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளிடமிருந்து குறைந்த பட்ச விலையை அடிப்படையாகக் கொண்டு கொள்முதல் விலையில் (அதாவது குறைந்த பட்ச ஆதரவு விலையுடன் அம் மாநில அரசு அளிக்கக்கூடிய ஊக்கத் தொகையும் சேர்ந்தது) வேளாண் விளைபொருட்கள் வாங்கப்படுகிறது. இதனால் வட மாநில விவசாயிகள் நெல் சாகுபடியினை நோக்கிச் சென்றனர். நெல் பயிர் செய்ய அதிக அளவிற்கான தண்ணீர் தேவை (சராசரியாக 8 இன்ச் தண்ணீர் தேக்க வேண்டும்) உள்ளது. வட இந்திய மாநிலங்களில் தண்ணீர் ஆதாரம் தென்னிந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா. மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களில் கோதுமை சாகுபடி செய்பவர்கள் நெல்லை அரசு கொள்முதல் செய்வதால் அதிக அளவில் பயி ரிடத் தொடங்கினர். ஆனால் இதற்கான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் இம் மாநிலங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு இன்ச் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. தண்ணீரின் தன்மையும் குறைந்துவருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான சாகுபடியினை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது (Nitya Nanda 2021).

குறைந்த பட்ச ஆதார விலையைப் பொருத்தவரையில் மொத்தமாக நாட்டின் உற்பத்தியாகும் வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடைய விளைபொருட்கள் மட்டுமே இதனைப் பெறுகின்றன. மாநில அளவில் பார்த்தால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் 75 விழுக்காடு நெல், கோதுமை உற்பத்திக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினைப் பெறுகின்றன. மற்ற மாநிலங்களில் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே இவ்விலை கிடைக்கப்பெறுகிறது. இந்த நிலையினைப் போக்க அரசு சாகுபடி செய்கின்ற பயிர்களில் பன்முக முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அளவிற்கு அதிகமாக சில பயிர்களின் சாகுபடி குறைந்து தேவையான வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படும். அவை விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இம்முறையினை மேம்படுத்த மேலும் பல பயிர்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படவேண்டும். குறைந்த பட்ச ஆதரவு விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டுறவு முறைகளுக்கு உயிர்கொடுத்து விவசாய முறையை முன்னெடுக்க வேண்டும். இதனால் விவசாயிகள் இழப்பினைத் தவிர்ப்பதுடன் வேளாண்மையானது சமநிலை வளர்ச்சியினை அடையும் (Nitya Nanda 2021).

மோடியின் இரண்டாம் கட்ட ஆட்சி நிறைவுறும் நிலையில் உள்ளது. பூட்டன் (Bouton) என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இந்தியா கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, வேளாண்மையில் கடுமையான வீழ்ச்சி, வங்கி முறையில் பலவீனம், கடன் வழங்குதலில் பின்னடைவு பொன்றவை காணப்படுகிறது. 2014ல் ஆட்சிக்கு வரும்போது ‘அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி’ என்ற உறுதியை அளித்து வென்ற மோடி தற்போது 9 ஆண்டுகள் கடந்தும் இந்த உறுதிமொழியை நிறைவு செய்யப்படாமல் உள்ளது. மோடி நான் ‘இந்தியாவின் காவலன்’ என்று கூறி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். ஆனால் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நிலை மேலும் பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது. கோவிட் தொற்றுப் பரவலால் வறுமையிலிருந்து ஏற்கனவே விடுபட்டவர்கள் வறுமைக்குள் மீண்டும் தள்ளப்பட்டதும். வறுமைக் கோட்டிற்கு மேல் இருந்தவர்கள் வறுமையில் சென்றதுமான நிலை உள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு நீக்குப்போக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் இழக்கப்பட்டுள்ளது (Marshall Bouton 2019). பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்து பெருநிறுவனங்களுக்குச் சாதகமான நிலை உருவானது. இதனை எதிர்த்து விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவானது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாடு ஒரே தேசம் என்ற உத்தியை மோடி அரசு நடைமுறைப்படுத்துவதால் தற்போது மாநில அரசுகளின் உரிமைகளில் ஒன்றிய அரசு பறித்துக்கொள்கிற நிலை பரவலாகி வருகிறது. இதனால் வேளாண்மைத் துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறது. அரசியல் சூழலும், வாணிப சூழலும் இதற்குச் சாதகமாக உள்ளதால் பன்னாட்டு அளவில் வரிசைப்படுத்தப்படும் ‘எளிமையாக வணிகம் மேற்கொள்ளும் குறியீடு’ என்பதில் இந்தியா 2014ல் 134வது இடத்தில் இருந்தது தற்போது 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் தாரைவார்க்கப்படுகிறது, பெருநிறுவனங்கள் கோலோச்சுகிறது, சந்தைப்பொருளாதார நிலைக்கு இந்திய வேளாண்மையைக் கொண்டுசெல்ல அரசு துடிக்கிறது இதனால் பெருமளவிலான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வேளாண்மையிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இது விவசாயிகளை மட்டும் பாதிப்பாக பார்க்க முடியாது, நுகர்வோர், வணிகர்கள், சமுதாயத்தில் வாழும் விளிம்பு நிலை மக்கள் எனப் பரவலாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வருங்காலத்தில் இதற்காக அனைத்து தரப்பினரும் போராடவேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை விவசாயிகள் இயற்கையின் போக்கினால் பாதிப்படைந்து வந்தனர் ஆனால் தற்போது அரசியல் காரணங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதம், வேளாண்மை மீதான அரசு முதலீட்டை அதிகரிப்பது, வேளாண் இடுபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது, தேவையை நோக்கிய சாகுபடி செய்தல் போன்ற நிலைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாம் தற்போது உள்ளது.

பேரா.பு.அன்பழகன்

வாஸ்து கவிதை – ச.லிங்கராசு

வாஸ்து கவிதை – ச.லிங்கராசு




அவரவர் கலாச்சாரம் சொல்லும்
ஆடைகளில் நீங்கள் செல்லும்
பொழுதுகளில் அறியவில்லையா
இது பன்முகத்து பூமி என்று?
இல்லை இது ஒரே பூமி என்று
உளறும் நீங்கள் ஏன் உங்கள்
ஒரே ஆடையில் செல்வதில்லை?

வேஷங்களில் உங்களை வீழ்த்த
வேரெவரும் பிறக்கவில்லைதான்
வேறு எதுவும்உங்களிடம் இல்லை என்று
விளங்குவதற்கு இங்கு என்ன விற்பனர்கள் தேவையா?
சாஸ்திரத்தை கட்டிக்கொண்டு
சதிராடும் நீங்கள்
சாமன்யனின் சங்கடங்களைத்
தீர்த்து வைப்ப தெப்படி?

பொருளாதாரம் புதைகுழிக்குப்
போகின்ற நிலையிலும்
வானுயர சிலை வைத்து
வாழ்த்துப் பாடுகின்றீர்
வாஸ்து பார்த்து வடிவமைத்த
கட்டடத்திலும் நீங்கள் வசைப் பாடப்

போவது இன்னும் வாழும் நீதிகளை தான்!

ச.லிங்கராசு

பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் சாதனை கட்டுரை – அ.பாக்கியம்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் சாதனை கட்டுரை – அ.பாக்கியம்




கடந்த 10 ஆண்டுகளில் சீனா தனது பொருளாதாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வைக் கண்டுள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய காங்கிரஸின் தொடக்க அமர்வில் (ஞாயிற்றுக்கிழமை) ஜி சின் பிங் கூறினார்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் 54 டிரில்லியன் யுவானிலிருந்து 114 டிரில்லியன் யுவானாக (சுமார் $16 டிரில்லியன்) வளர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 18.5 சதவீதமாகும்.7.2 சதவீத புள்ளிகள் அதிகமாகும்.

சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 39,800 யுவானிலிருந்து 81,000 யுவானாக உயர்ந்துள்ளது என்று ஜி கூறினார்.

தானிய உற்பத்தியில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. மேலும் அதன் உற்பத்தித் துறை, அதன் அன்னியச் செலாவணி கையிருப்பு உலகின் மிகப்பெரியது என்றும் ஜி கூறினார்..

– அ.பாக்கியம்
முகநூல் பதிவிலிருந்து 

நாம் எதிர்காலக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது கட்டுரை – விஜய் பிரசாத் (தமிழில் : கி.ரமேஷ்)

நாம் எதிர்காலக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது கட்டுரை – விஜய் பிரசாத் (தமிழில் : கி.ரமேஷ்)




அன்பு நண்பர்களே,

சமூக ஆய்வு நிறுவனம் ட்ரைகாண்டினெண்டலின் சார்பில் வாழ்த்துகள்.

2022, ஏப்ரலில் ஐ. நா. வானது உலக நெருக்கடி எதிர்ப்புக் குழுவை உணவு, சக்தி, நிதிக்காக உருவாக்கியது. இந்தக் குழுவானது உணவுப் பணவீக்கம், எரிபொருள் பணவீக்கம், நிதித் துன்பம் (financial distress) ஆகிய மூன்று பெரும் நெருக்கடிகளைப் பின் தொடர்வதற்காக அமைக்கப்பட்டது.  2022 ஜூன் 8 அன்று வெளியிடப்பட்ட இரண்டாவது அறிக்கையானது, கோவிட் 19 பெருந்தொற்றுத் தாக்கிய இரண்டாண்டுகளுக்குப் பிந்தைய நிலையைக் குறிப்பிட்டது:

உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று 60 சதவிகிதத் தொழிலாளர்கள் பெருந்தொற்றுக்கு முன்னால் வாங்கிய உண்மை ஊதியத்தை விடக் குறைவாகப் பெறுகிறார்கள்; ஏழை நாடுகளில் 60 சதம் மிகவும் தீவீரமான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன அல்லது அதைப் பெறும் உச்சகட்ட ஆபத்தில் உள்ளன; வளரும் நாடுகளுக்கு தமது சமூகப் பாதுகாப்பு இடைவெளியை இட்டு நிரப்ப ஆண்டுக்கு 1.2 ட்ரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது; நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய முன்பு இல்லாத அளவுக்கு ஒரு வருடத்துக்கு 4.3 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.

இது துன்பத்திலிருக்கும் உலக நிலைமை குறித்துத் துல்லியமான ஏற்கக்கூடிய விளக்கம்.  நிலைமை இன்னும் மோசமாகவே போகப் போகிறது.

உலக நெருக்கடி எதிர்ப்புக் குழுவின்படி, பெருந்தொற்றின் போது அளித்த நிவாரண நிதியை ஏற்கனவே பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள் திரும்பப் பெற்று விட்டன.  ‘சமூகப் பாதுகாப்பு அமைப்புகளும், பாதுகாப்பு வலைகளும் போதுமான அளவு விரிவுபடுத்தப்படாவிட்டால் பட்டினியை எதிர்நோக்கும் வளரும் நாடுகளின் ஏழைக் குடும்பங்கள் ஆரோக்கியம் தொடர்பான செலவைக் குறைக்கக் கூடும்; பெருந்தொற்றின் போது தற்காலிகமாகப் பள்ளிகளை விட்டு வெளியேறிய குழந்தைகள் இப்போது நிரந்தரமாக வெளியேறும்; அதிகமான மின்சாரக் கட்டணங்களால் சிறு, குறு தொழில்முனைவோர் தமது தொழில்களை மூடி விடக் கூடும்’.

 

ரெனாட்டோ குட்டுசோ, லா உக்கிரியா, 1974.

2024 இறுதிவரை உணவு, எரிபொருள் விலைகள் உச்சத்திலேயே இருக்குமென்று உலக வங்கி கூறுகிறது. கோதுமை, எண்ணை வித்துக்களின் விலைகள் உயர்ந்து விட்டதால், முன்னேறிய நாடுகள் உட்பட,  தொழிலாளர் குடும்பங்கள் தமது உணவைத் தவிர்க்கத் டங்கி விட்டதாக உலகம் முழுவதிலிருந்தும் செய்திகள் வருகின்றன. இந்தப் பதற்றமான உணவு நிலைமையானது, ஐ.நா. பொதுச்செயலாளரின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நிதியின் சிறப்புத் தூதரான நெதர்லாண்டைச் சேர்ந்த குவீன் மாக்சிமாவை, ‘உலகில் இன்னும் அதிகமான நிலையின்மை வருவதற்கான மூலமாக இருக்கும்’ என்று கணிக்க வைத்துள்ளது. அடமான கடன்கள் (mortgage payments) மீது அதிகரிக்கும் வட்டி விகிதங்கள், பற்றாக்குறை ஊதியங்களின் தாக்கத்தைக் கணக்கில் கொண்டால் நாம் இப்போது ‘ஒரு சரியான புயலில்’ மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று உலகப் பொருளாதார அமைப்பு மேலும் கூறுகிறது. சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிரிஸ்டலினா ஜார்ஜிவா கினோவா கடந்த மாதம் ’வானம் இருண்டு விட்டதெனக்’ கூறினார்.

 

இந்த மதிப்பீடுகளெல்லாம் வலுமிக்க உலக நிறுவனங்களான சர்வதேச நிதியம், உலக வங்கி, உலகப் பொருளாதார அமைப்பு, ஐ.நா. (ராணியிடமிருந்து கூட) ஆகியவற்றிடமிருந்து வருகின்றன.  அவர்களெல்லாம் நெருக்கடியின் கட்டமைப்பு இயல்பைப் புரிந்து கொண்டாலும் கூட, அவர்கள் அதன் அடிப்படையில் இருக்கும் பொருளாதார நிகழ்வுகள் பற்றியோ அல்லது நிலைமைக்கு போதுமானபடி பெயர் வைப்பதிலோ கூட நேர்மையாக இருப்பதற்குத் தயங்குகிறார்கள். உலக முதலீட்டு நிறுவனமான கார்லைல் குழுமத்தின் தலைவர் டேவிட்.எம்.ரூபன்ஸ்டீன் அவர் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, அவர்களது பணவீக்க ஆலோசகர் ஆல்பிரட் கான் அவர்களை மக்களை பயமுறுத்தும் ‘ஆர்’ (Recession – மந்தநிலை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருக்குமாறும், அதற்குப் பதிலாக ‘வாழைப்பழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.  அந்த வழியில், ரூபன்ஸ்டீன் தற்போதைய நிலையில், ‘ நாம் வாழைப்பழ நிலையில் இருக்கிறோம் என்று கூற விரும்பவில்லை, ஆனால் நாம் இன்றிருக்கும் நிலையில்  அந்த நிலை தொலைவில் இல்லை என்று மட்டும் கூற முடியும்’ என்றார்.

வாழைப்பழம் என்பது போன்ற இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மார்க்சியப் பொருளாதார நிபுணர் மைக்கேல் ராபர்ட்ஸ் ஒளிந்து கொள்வதில்லை. மூலதனத்தின் மீது உலக சராசரி இலாப விகிதம் 1997லிலிருந்து சிறு பின்வாங்கல்கள் தவிர வீழ்ச்சி அடைந்து வருவதாக அவர் ஆய்வில் தெரிவிக்கிறார்.  இந்தப் போக்கு 2007-08 உலகளாவிய நிதி நெருக்கடியால் மேலும் அதிகரித்து 2008இல் பெரும் மந்தநிலைக்கு இட்டுச் சென்றது.  அதிலிருந்து உலகப் பொருளாதாரம் ஒரு ‘நீண்ட மந்தநிலையின்’ பிடியிலிருக்கிறது, (பெருந்தொற்றுக்கு சற்று முன்னால்) 2019இல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இலாபம் மிகவும் குறைவாக இருந்தது என்று அவர் வாதிடுகிறார்.

 

யில்டிஸ் மொரான் (துருக்கி), மதர், 1956

‘முதலாளித்துவத்தில் இலாபம்தான் முதலீட்டை ஊக்குவிக்கிறது’ என்று எழுதுகிறார் ராபர்ட்ஸ். ‘எனவே, வீழ்ச்சியடையும், குறைந்த இலாபமீட்டல் என்பது பலன் தரும் முதலீடு குறைந்த அளவில் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றது’.  உற்பத்தி செயல்பாட்டில் முதலீடு செய்வதற்கு பதிலாக முதலாளித்துவ நிறுவனங்கள் பங்கு மற்றும் பிணைச் சந்தைகள், கிரிப்டோ கரன்சிகளின் கற்பனை உலகத்துக்குள் சென்று விட்டன என்று ராபர்ட்ஸ் கூறுகிறார்.  இந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி சந்தை 60% சரிந்து விட்டது.  வடக்குலகில் இலாபம் சரிந்து வருவதால் முதலாளிகள் தெற்குலகில் இலாபத்தைத் தேடவும், அவர்களது நிதி, அரசியல் மேலாதிக்கத்துக்கு மிரட்டலாக இருக்கும் எந்த நாட்டையும் (குறிப்பாக சீனா, ரஷ்யா) அடித்துத் தள்ளவும், தேவையானால் இராணுவத்தைப் பயன்படுத்தி அதைச் செய்யவும் இட்டுச் சென்றுள்ளது.  

பணவீக்கம் செல்லும் பாதை மிகவும் கொடுமையானது.  ஆனால் பணவீக்கம் என்பது ஒரு ஆழமான பிரச்சனையின் அடையாளம்தானே தவிர அது காரணமல்ல.பிரச்சனை என்பது வெறும் உக்ரைன் போரோ, பெருந்தொற்றோ அல்ல, மாறாக புள்ளிவிவரங்களால் நிரூபிக்கபட்டதும் ஆனால் பத்திரிகை சந்திப்புகளில் மறுக்கப்படுவதுமாகும்:
நீண்டகால மந்தநிலையில் மூழ்கியிருக்கும் முதலாளித்துவ முறையால் தன்னை சரிசெய்து கொள்ள முடியாது.  இந்த ஆண்டு ட்ரைகாண்டினண்டால் வெளியிடப்பட்ட, மார்க்சிய பொருளாதார நிபுணர்கள் சுங்குர் சவ்ரானும் இ. அஹ்மத் டொனாக்கும் எழுதிய ‘நெருக்கடியின் கோட்பாடு’ இந்த விஷயங்களைத் தெளிவாக நிறுவும்.

இப்போதைக்கு முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடானது பணவீக்க நெருக்கடி போன்று எந்தப் பொருளாதார நெருக்கடியையும் சரிப்படுத்தும் எந்த முயற்சியும் 1923இல் ஜான் மேனார்ட் கீன்ஸ் எழுதியது போல், ‘முதலீட்டாளரை ஏமாற்றமடைய வைக்கக்கூடாது’.  செல்வந்தர்களான பணப்பத்திரம் வைத்திருப்பவர்களும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களும் வடக்குலகின் கொள்கைச் சாய்மானத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களது பண மதிப்பு- சிறுபான்மை வைத்திருக்கும் பல ட்ரில்லியன் டாலர் பணம் – பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.  கீன்ஸ் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதியதைப் போல அவர்கள் ஏமாற்றமடைய முடியாது.  

அமெரிக்காவும் ஐரோப்பிய மண்டலமும் எடுக்கும் பணவீக்கத்துக்கு எதிரான கொள்கைகள் அவர்களது நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் சுமைகளைக் குறைக்க முடியாது, நிச்சயமாகக் கடன் சுமையால் தத்தளிக்கும் தெற்குலகின் சுமையைக் குறைக்க முடியாது.  அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பொவெல் தமது நிதிக் கொள்கை ‘சற்று வலியைக் கொடுக்கும்’, ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் கொடுக்காது என்று ஒப்புக் கொண்டார்.  அமேசானின் ஜெஃப் பெசோஸ் ‘பணவீக்கம் என்பது குறைந்த செல்வமுடையவர்களை பெரிதும் பாதிக்கும் ஒரு பிற்போக்கு வரி’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார்.  வடக்கு அட்லாண்டிக்கில் உயரும் வட்டி விகிதங்கள் அப்பிரதேசத்தில் இருக்கும் சாதாரண மக்களுக்குப் பணத்தை மேலும் செலவுமிக்கதாக ஆக்குவது மட்டுமல்ல, அது தெற்குலகு தமது தேசியக் கடன்களைத் திரும்பச் செலுத்த டாலர்களைக் கடன் வாங்குவதை முற்றிலும் இயலாததாக்குகிறது.  உயரும் வட்டி விகிதங்களும், தொழிலாளர் சந்தையை இறுக்குவதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் வளரும் நாடுகளின் மீதும் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல்கள்.

வடக்குலகின் அரசுகளின் வர்க்க நலன் குறித்துத் தவிர்க்க முடியாதது எதுவும் கிடையாது.  வேறு கொள்கைகளுக்கு வாய்ப்புண்டு; அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறோம்:

* உலகப் பணக்காரர்களுக்கு வரி விதிக்கவும்.  உலகில் 2,668 பில்லியனர்கள் இருக்கிறார்கள், அவர்களது சொத்து மதிப்பு $12.7 ட்ரில்லியன்கள்; அவர்கள் சட்டவிரோத வரிப் பாதுகாப்பிடங்களில் குவித்து வைத்திருக்கும் சொத்தைச் சேர்த்தல் அது $40 ட்ரில்லியன்.  இந்தச் சொத்தைப் பயன்மிக்க சமூகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.  ஆக்ஸ்ஃபாம் குறிப்பிடுவது போல மிகவும் பணக்காரரான முதல் பத்துப் பேரிடம் உலகின் மக்கட்தொகையில் 140% அளவுள்ள 3.1 பில்லியன் மக்களிடம் இருப்பதை விட அதிகமான சொத்து உள்ளது.

* கற்பனையையும் தாண்டி உயர்ந்திருக்கும் பெரும் கார்ப்பரேஷன்களின் மீது வரி  விதிக்க வேண்டும்.  அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் இலாபங்கள் பணவீக்கத்தையும், நிவாரண அதிகரிப்புகளையும் தாண்டி 37% அதிகரித்துள்ளன.  முன்னணி நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் தலைமை அமெரிக்கப் பொருளாதார நிபுணரான எலன் செண்ட்னர், “அமெரிக்க உழைக்கும் வர்க்கம் ஈட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ‘முன்னெப்போதும் இராத அளவுக்கு” நீண்ட மந்தநிலையின் போது சரிவு இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.  மேலும் அதிகமான இலாபம் – ஊதிய சமநிலையை அவர் கோருகிறார்.

* இந்த சமூகச் செல்வத்தை பட்டினியையும், கல்வியின்மையையும் ஒழித்தல், சுகாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்குதல், பொதுப் போக்குவரத்தில் கார்பன் இல்லாத வடிவங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் செலவழிக்க வேண்டும்.

* பணவீக்கத்தை அதிகரிக்கும் உணவு, உரம், எரிபொருள், மருந்துகள் போன்ற பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும்.


பார்படோசைச் சேர்ந்த பெரும் எழுத்தாளர் ஜார்ஜ் லாமிங் (1927-2022) சமீபத்தில் நம்மிடமிருந்து மறைந்தார்.  அவரது 1966 கட்டுரையான ‘மேற்கிந்திய மக்கள்’ என்ற கட்டுரையில் அவர் சொல்கிறார், “நமது எதிர்காலத்தின் வடிவமைப்பு முடிவுறாமல் இருப்பது மட்டுமல்ல; அதற்கான சாரக்கட்டுக் கூட எழுப்பப்படவில்லை.’  இது ஒரு வலிமையான தொலைநோக்குப் பார்வை கொண்டவரின் வலிமையான உணர்வு.  அவர் மேற்கிந்தியத் தீவுகளில் கரீபியனில் இருக்கும் அவரது தாய்மண் அவரது மக்களை பெரும் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கக் கூடிய உயர்தன்னாட்சி பெற்ற பிரதேசமாக உருவாக்கப்படும் என்று நம்பினார்.  அவ்வாறு நடக்கவில்லை.  வினோதமாக, அந்தப் பிரதேசம் சர்வதேச நிதியத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்த சர்வதேச நிதியத்தின் ஜார்ஜீவா கினோவா இந்த வாக்கியத்தைத் தனது சமீபத்தியக் கட்டுரையில் மேற்கோள் காட்டினார்.  ஜார்ஜிவோ கினோவாவும் அவரது ஊழியர்களும் லாமிங்கின் உரையை முழுமையாகப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது.  அந்தப் பத்தி 1966இல் எவ்வளவு விளக்கமாக இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது:இந்த அரங்கில் வலிமையான பொருளாதார நிபுணர்களின் குழு இருக்கிறது என நான் நம்புகிறேன்.  அவர்கள் பிழைப்புக்காக புள்ளியியலைக் கற்பிக்கின்றனர்.  அவர்கள் சுதந்திரத்துக்கு ஒப்பீட்டு விலையை எதிர்பார்த்து எச்சரிக்கின்றனர் . . . (நான்) ஒரு சாதாரண பார்பாடியன் தொழிலாளியின் கதையை நீங்கள் மனதில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அவர் கடந்த பத்தாண்டுகளாக யாரைப் பார்க்கவில்லை என்று, ‘விஷயங்கள் எப்படி இருக்கின்றன’ என்றும் இன்னொரு மேற்கிந்தியரால் கேட்கப்பட்ட போது,  அவர் பதிலளித்தார்: ‘புல்வெளி பசுமையாக இருக்கிறது, ஆனால் அவர்கள் என்னை ஒரு சிறிய கயிற்றால் கட்டிப் போட்டு விட்டார்கள்’.

விஜய பிரசாத்
தமிழில் : கி.ரமேஷ்

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்



நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த

முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
நூல் வெளியீட்டு விழாவில் என். குணசேகரன் பேச்சு
சென்னை, மே 19 –

உக்ரைன் போரை பயன்படுத்தி உலக அரசியலை கட்டுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார்.

இ.பா.சிந்தன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதனன்று (மே 18) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட கட்சி கல்விக்குழு நடத்தி இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு என்.குணசேகரன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

இரண்டாம் உலகப்போருக்கு பின் போராற்ற உலகம் முழக்கம் எழுந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவும், ஜெர்மனை வளரவிடாமல் தடுக்கவும் நேட்டோ அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் நேட்டோ தொடர்கிறது. இந்த நேட்டோ காரணமாகவே ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது.

இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர மனிதநேய மிக்கவர்கள் வலியுறுத்துகின்றனர். உக்ரைன் ஆளும் கூட்டம் போரை நீட்டிக்க விரும்புகிறது. உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்யும் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பா, அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இந்தக் கூட்டம், போரை தங்களது லாப வேட்டைக்கும், மூலதன குவியலுக்கும் வாய்ப்பாக கருதுகிறது.

மேற்கத்திய, ஐரோக்கிய நாடுகள் ஆயுதங்களை ஒருங்கிணைந்த முறையில் தடையின்றி வழங்க வேண்டுமென்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே, போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது.

இந்தப்போரை பயன்படுத்தி ஐரோப்பிய, ஆசிய அரசியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோ பலப்படுத்துகிறது. நேட்டோவிற்குள் புதிய நாடுகளை சேர்க்கிறது. அதன்வாயிலாக ஏகாதிபத்திற்குள் உள்ள முரண்பாடுகளை கட்டுப்படுத்தி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை செய்கிறது.

மேலும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, சீனாவின் பொருளாதார, அரசியல் வல்லமையை கட்டுப்படுத்த இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. இதன்வாயிலாக உலக அரசியலை தனது ஆதிக்கதிற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏமன், சிரியாவை உருக்குலைப்பதிலும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவில் எல்ஐசியை விற்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு உள்ளது.

500 கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உலகம் வேட்டையாடப்படுகிறது; உலகின் இயற்கைவளம் அழிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும். பேச்சுவார்த்தை மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கு வெகுமக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.

அடையாள அணிதிரட்டல், இனவெறி போன்றவை வர்க்க ஒற்றுமையை சிதைப்பதோடு, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே உள்ளன. இதுவே உக்ரைன் போர் படிப்பினையாக உள்ளது. உக்ரைனில் இரண்டுமுறை ஆட்சிக்கவிழ்ப்பு நடந்துள்ளது. அவற்றை ஆரெஞ்ச் புரட்சி, மைதான புரட்சி என்றனர். ஆளும் வர்க்கத்தை முற்றாக வீழ்த்தி, கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமைவதுதான் புரட்சி. புரட்சி என்ற வார்த்தையை மலினப்படுத்த ஆட்சி கவிழ்ப்பை புரட்சி என்றார்கள்.

ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. மின்தேவைக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாலும், அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவின் துதிபாடியான பிரதமர் இந்த நிலையை எடுத்துள்ளார்.

சிஎன்என் போன்ற சேனல்கள் முதலாளித்துவாதிகளால் நடத்தப்படுகின்றன. அவை கார்ப்பரேட்டுகளின் குரல்களையே பிரதிபலிக்கின்றன. அவற்றை பின்பற்றியே பிற ஊடகங்களும் இயங்குகின்றன. ஊடகங்கள ஒருசார்பான செய்திகளையே வெளியிடுகின்றன.

போருக்கு எதிரான முழக்கம் அழுத்தமாக உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். இடதுசாரிகளின் பின்னால் உலகம் அணிதிரண்டால்தான் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்திய முறைமை அழிந்தால்தான் போர், வேலையின்மை, வறுமைக்கு முடிவு கட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினர்.

இந்த நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், க.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, எஸ்எப்ஐ மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, பாரதி புத்தகாலம் மேலாளர் எம்.சிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

2022 மே 19

Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75 – சுகந்தி நாடார்



கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்

ஒரு காலத்தில் கணினியும் கணினியியலும் ஒரு  தனிப்பிரிவாக ஒரு அறிவியலின் ஒருஅங்கமாகக் கருதப்பட்டது. இப்போது கூட  STEM என்று சொல்லிக் கொண்டு அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அமைத்து கொடுப்பதோடு இவை நான்கும் இணைந்த ஒருத் தனிப்பிரிவாக பிரிக்கப்பட்டு கற்றுத்தர வேண்டும் என்று  வலியுறுத்தப்படுகிறது. நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அறிவியல்பிரிவு, சமுதாய அறிவியல்பிரிவு, வீட்டுமேலாண்மை அறிவியல் என்று மூன்று பிரிவுகளாக பதினோராம் பன்னிரண்டாம் மாணவர்களுக்கு இருக்கும். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து இருப்பவர்களுக்கு,  அறிவியல் பிரிவிலும் கணிதம் கணினிப்பிரிவிலும் சிக்கலில்லாமல்  இடம் கிடைக்கும். 

இப்போது தமிழ்நாட்டில் எப்படி நடக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது ஒரு மாணவர் பயிலும் எல்லா பாடங்களிலும் இவை ஊடுருவி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. உலக தரத்தின்படி 20ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவியியல் பாடங்களை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் மிகக்குறைவாக இருந்தனர். இது பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று கருதிய அமெரிக்க தேசத்து அறிவியில் நிறுவனம் பிரதான அறிவியல் பாடங்களை என்று பெயர் கொடுத்து மாணவர்களுக்கு தொடக்க நடுநிலைப்பள்ளிகளிலேயே அவர்களுடையப் பாடத்திட்டத்தின் அடிப்படையாக இருக்கவேண்டியக் கட்டாயத்தை உணர்த்தினர்.
Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்
அதன் விளைவாக இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு வகையில் அமெரிக்கநாடு பலன் அடைந்து இருந்தாலும், மிக, மிக முக்கியமான மாற்றம், கணினியிலும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் ஏற்பட்டது. இந்த மாற்றம் எந்த அளவிற்கு என்பதை இன்றைய  அன்றாட வாழ்க்கையில் நாம் தினம்தினம் அனுபவித்து வருகின்றோம். தரவுகளின் இராஜியமாக உலகமே மாறிவிட்டது என்னும் பொழுது எந்தத் துறையை எடுத்துப் படித்தாலும் மாணவர்களில் கணினியியல் தகவல் தொழில்நுட்ப இயல் இரண்டிலும் இளம் வயதிலிருந்தே முறையாகக் கற்றால்தான் அவர்களால், அவர்கள் படிப்பைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளமுடியும்.

 கணினியியல் தகவல்தொழில்நுட்ப அறிவு என்று சொல்லும்போது, கருவிகளும் தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது முதல் குறிக்கோளாக இருந்தாலும் அடிப்படை கணினிஅறிவு  ஒருவருக்கு ஒரு அனுபவ அறிவாகக் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றது. ஒரு கல்விமுறையில் கணினியியலின் அனுபவ அறிவு மட்டுமின்றி மிக ஆழமான  தெரிதலும் புரிதலும் கொண்ட கணினி ஆளுமையும் வல்லமையும் இன்றைய மாணவர்களுக்கு கண்டிப்பாகத் தேவையாக உள்ளது.

இது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையின் மறுபக்கம் என்ன? கணினி ஆளுமையும் வல்லமையும் பெறக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு சமுதாயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே உருவாகி வருகின்றது. உலகின் மனிதவளத்தில் ஒரு சமமின்மைக் காணப்படுகின்றது. அதற்கு ஏழ்மை, அரசியல் சூழல் என்று நாம் காரணங்களை அடுக்கினாலும்  நாம் அனைவருமே நமக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்ற சேவைகளே போதும் என்று உலகின் மிக முக்கிய கணினி நிறுவனங்களை சார்ந்து இருக்க ஆரம்பித்து உள்ளோம்.

அந்த நிறுவனங்கள் நமக்குக் கொடுக்கும் சேவைகளுக்கு ஏற்றபடி  நம் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்திலிருந்து உலகில் எத்தனையோ கண்டுபிடிப்பகள் ஏற்பட்டன. அவற்றில் மின்சாரம், கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு, அணுசக்தி கண்டுபிடிப்பு, விமானத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் என்று நாம் சில முக்கியமானத் தொழில்நுட்பங்களோடு இன்றைய தகவல்தொழில்நுட்ப கணினியியல் தொழில்நுட்பம் உலகில் கொண்டுவந்த தாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படி ஒரு கல்வியாளர்களாக ஆராய்ச்சியாளர்களா நாம் தரவுகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தகவல் தொழில்நுட்பம்தான் மனித இனத்தை வேரோடு மாற்றிக்கொன்டு இருக்கின்றது.

உலக வரலாற்றில் ஒவ்வோரு தொழில்நுட்பமும் மனிதகுலத்தின் மேன்மைக்காகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அப்படிப்பட்ட பயன்பாடுகளின் எதிர்விளைவுகளை நாம்  இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். சென்னை வெள்ளம், மலேசிய வெள்ளம், ஆஸ்திரேலியா வெள்ளம், கலிபோர்னியாவில் காட்டுத்தீ, சூறைப்புயல்களின் தாக்கம் வழக்கத்திற்கு மாறான இடங்களிலும் காலத்திலும் பனிப்புயல் என்று நம்முடைய அன்றாட வானிலை இரு திசைதெரியா முள்ளாக அலைபுற்றுக் கொண்டு இருக்கின்றது. இவையெல்லாம் இயற்கையில் நம் அன்றாட தொழில்நுட்பங்களின் அதீத பயன்பாட்டினால் வந்தது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்

மின்சக்தி நமக்கு இயற்கையில் கிடைக்கின்றது என்று பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அவர்களால் 1752ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மின்சாரம் என்ற தொழில்நுட்பமாக மாற்றியது தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள். அவரைத் தொடர்ந்து சாமுவேல் இன்சுல் என்பவர் ஒரு ஆடம்பர மூலப்பொருளாக இருந்த மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தக்கூடிய  வகையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்தார். மின்சாரம் கண்டுபிடித்து ஏறத்தாழ 300 ஆண்டுகள் கழித்தும் இன்னும் ஏறத்தாழ 20%  உலக மக்கள் தொகைக்கு சரியான வகையில் மின்சாரம் கிடைக்கவில்லை.

மின்சாரப் பற்றாக்குறை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால்  மின்சாரத் தேவைக்காக பயன்படுத்தபபட்டு நிலக்கரி தொல்லுயிர் எச்சம் எரிசக்திகளினால் பைங்குடில் வளிக்களான (greenhouse gas) நீராவி கரிமல வாயு, ஓசோன் நைட்ரேட் ஆக்ஸைடு, மீத்தேன் ஆகியவை சுற்றுச்சூழலை பாதித்துக் கொண்டே இருக்கின்றது என்று நமக்குத் தெரியும். அதனால்தான் நீர் காற்று சூரியசக்தி என்று இயற்கை வழியில் நாம் எரிசக்தியைக் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நாம் பயன்படுத்தும் அடுத்தத் தொழில்நுட்பத்தில் மிக முக்கியமானது போக்குவரத்துத் தொழில்நுட்பம் இருசக்கரவாகனம் முதல் விண்வெளியில் செல்லும் விண்கலம்வரை அனைத்தும் தங்கள் கழிவுகளாக தங்கள் பங்கிற்கு சூழவியலை மாசுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. அதனால்தான் இன்று மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியில்  நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியையும் நடத்தி வருகின்றன. நாம் இன்று பயன்படுத்தும் மகிழுந்து 1885களில் கண்டுபிடிக்கப்பட்டது. 1903ல் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்

இத்தனை நூற்றாண்டுகளில்  இவற்றின் பாதிப்பு சூழவியலில் என்ன என்று தெரியுமா? ஒரு சராசரி நான்கு சக்கர மகிழுந்து 4.5 லிட்டர் கல்லெண்ணெயிலிருந்து (petrol) பயன்பாட்டில் எட்டு கிராம் கரிமல வாயுவையும் 4.5 லிட்டர் வளியெண்ணெய் (diesel) பயன்பாட்டிலிருந்து ஏறத்தாழ பத்துகிராம் கரிமலம் வெளியாகின்றது என்றும் அமெரிக்க சூழவியியல் ஆணையம் தெரிவிக்கின்றது. அமெரிக்க வாஷிங்டன் நகரிலிருந்து ஜெர்மனிவழி சென்னை சென்று அதேபோல ஒருவர் திரும்பிவரும் பயணத்தில் 4.6 டன் கரிமல வாயுவை வெளியிடுகிறது என்று myclimate.org என்ற தளத்தில் அறிந்துகொண்டேன். அணுசக்தியினால் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட விளைவை உலகம் என்றுமே மறவாது.  

 நான் இவ்வாறு பாதகமான விளைவுகளை எடுத்துச் சொல்வதால் அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை. கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட  தொழில்நுட்பங்கள் தங்களின் மனித பயன்பாட்டைப் பார்த்தனரே தவிர அதனால் விளையும்  பாதகமான விளைவுகளை எண்ணிப்பார்க்கவில்லை.

அதே போலத்தான் இந்த கணினித் தொழில்நுட்பமும். ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசி வெளிவந்த காலக்கட்டத்திலிருந்து கணினித் தொழில்நுட்பம் பொது மக்களிடேயே மிகவேகமாகப் பரவினாலும் அதனுடைய பாதகமான தாக்கம் இயற்கைச்சூழலை மட்டுமல்ல மனிதவளத்தையே சூறையாடிக்கொண்டு இருக்கிறது. மனிதம் என்பது கற்றலும் பொருள் ஈட்டுவது மட்டும் தானா?  மனித நோக்கமே  பணிசெய்து பொருள் ஈட்டி பலபல சொத்துக்களைப் பெருக்குவதுதான் என்றால் நமக்கும்  மற்ற உயிரினங்களுக்கும் என்ன வேறுபாடு ஐந்தறிவு உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் அறம். ஒவ்வோரு உயிரினத்திற்கும் ஓர் அறம் உண்டு. ஆனால் மனிதனின் அறம் எது என்பதை எப்படி  ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் நிச்சயிக்கலாம்?

இயற்கையை  தன்னைச் சுற்றிய சக மனிதர்களை, அரவணைத்துப் போக நமக்குத் தெரியவேண்டுமே? இது இங்கே வாழ்க்கைத் தத்துவமாக சொல்ல வரவில்லை. தன்னையும் நம் சமுதாயத்தையும் நாம் பேணி வாழாவிட்டால் அங்கே சமூகம் என்பதே ஏது? நம்முடைய இன்றையக் கல்விமுறைகளும் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையை நமக்குள் வளர்க்கவில்லை.  அறநெறி என்பது ஒரு தத்துவப் பாடமாகவோ அல்லது ஆன்மீகமாகவோதான் பார்க்கப்படுகின்றது என்றோ யாரோ போட்ட வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். நாம் சுவாசிக்கும் காற்று மாசு பட்டபோது நாம் கவலைப்படவில்லை. நம் விவசாய நிலங்கள்  மனைகளாக தொழிற்சாலைகளாக மாறும்போதும் நாம் கவலைப்பட்டதில்லை. கவலைப்பட்டவர்கள் எல்லாம் அதைக் கல்விச்சூழலில் கொண்டுவரவும் இல்லை.

 சமுதாய நல்லிணக்க நோக்கு இல்லாத ஒரு கல்வி எத்தகைய எதிர்காலத்தை நமக்கு உருவாக்கும்?

மனிதனுடைய எதிர்காலம் எல்லைகளை அரசியலை கலாச்சாரத்தை மொழியை  ஒரு கூட்டத்தினரின் தனித்துவத்தைப் பாதுகாப்பதிலும் அதை வளர்ச்சி அடையச் செய்வதிலுமல்லவா  ஒளிந்து இருக்கின்றது. இப்படி சமுதாய நோக்கோடு கூடிய நன்னெறிகொண்ட தலைமைப்பண்பு நாளைய நிறுவனர்களுக்கு, நாளைய தொழிலாளிகளுக்கு, நாளைய அரசாங்கத்திற்குத்  அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. அப்படிப்பட்ட அத்தியாவசியத்தை இன்றே இப்போதேப் பூர்த்தி செய்யத் தொடங்குவதுதான் கல்வி 4.0வின் அடிப்படை.

எப்படி அறிவியலுக்கான மனிதவளம் தேவை என்று தீர்மாணித்து STEM நம் பாடங்களில் கொண்டுவரப்பட்டதோ அதேபோல நம்முடைய எதிர்காலத்திற்கு இன்று பற்றாக்குறையாய் இருப்பது சமுதாய நல்லிணக்க நோக்கு சார்ந்த பாடப் பொருண்மைகள்? நம்மால் கொண்டுவர முடியுமா? நம் கல்வி முறையை மாற்றுவதன் மூலம் நம்  புவியை இயற்கை அழிவிலிருந்து காக்க முடியுமா? மனிதவளத்தை மேம்படுத்த முடியுமா? முடியும் என்று சொல்கிறது கல்வி 4.0.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்