கறி சோறு கவிதை – இரா.கலையரசி

கறி சோறு கவிதை – இரா.கலையரசி




அறுத்த ஆடுங்கல்லாம்
சத்தமில்லாமல் இருக்க!
பாய் கையில
துண்டுகளா மாறி
“கறுப்பு பை”ங்களுக்கு
போகுதுங்க எலும்புங்கறியுமாய்.!

வருசமெல்லாம்
பார்த்தே கடக்குது
“மாயி கண்”ணுங்க!
வட்டமான மரத்துல
“டொக் டொக்”ன்டு
கறி வெட்டுற சத்தம்
காதுல இசையா பாடுது.

கறுப்புப் பைகள் கனக்க
“ரோசாப்பூ நோட்ட”க் குடுத்து
வாங்கிப் போறாங்க
மனுசங்க!

மிச்சக் கஞ்சி ராப்பொழுதுல
இருந்துட்டாலே
மாயிக்கு கெளிப்புதான்
நாளைக்கு காலையில
பட்டினியா கெடக்க வேணாமே!

“கறி சோறு” தின்டதே
இல்ல மாயி!
கோலிக்குண்டு கண்ணுங்க
கறி வெட்டறதையும்
கணக்கா காசு வாங்கறதையும்
பார்த்துக்கிட்டே இருக்கு.

ஒண்ணாப்பு படிக்கிற
மாயி மனசு
காத்தில்லாத குகையா
ஏங்குது கறி சோறுக்கு!

அன்னைக்கு கடைக்கார பாய்
மாயி கையில
“கறுப்பு பை” தர
“எடுத்து போ” ல
“ஈகை திருநாள்” ன்டாரு
புரியல தான்.
“ரெண்டு விரலில சிக்கிருச்சு
மனசும் பையும்”.

ஆத்தாட்ட ஓடி வர
கம்பந்தட்டையத் தூக்கி

விலாச இருந்தவள
காப்பாத்தி வுட்டுச்சு
அவன் சொன்ன வார்த்தை
“ஈக திருநா”.

கொத்துன அம்மிக்கு
வேலை வந்திருச்சு.
கடைசியா கெடந்த
ஒன்ரெண்டு பூண்டுக
இஞ்சியோட சேர்ந்து
நசுங்கி வாசனைய
பரப்ப ஆரம்பிச்சிருச்சு!

அந்த கறுப்பு பை விலக
கறியும் எலும்புமா
உட்கார்ந்து இருக்குதுங்க.
அரிவாள்மனை மூக்கு வேர்க்க
இன்னமா அரியறா ஆத்தா.

அடுப்ப கூட்டி சட்டி வைக்க
அஞ்சாறு எண்ணெய
பட்டும் படாமல் தெளிக்கிறா.
“வருவேனா பாரு”ங்கறது
அவள் தெளிச்ச எண்ணெய்.

வதக்கிற கறி வாசம்
ஊருக்கெல்லாம் சொல்லுது
“மாயி வீட்டுல
கறி எடுத்திருக்காங்க.”.

ரேசன் கடை அரிசி
அன்னைக்கு பக்குவமா
வெந்திருச்சு!
நெசமாவே எச்சி
ஊருது மாயிக்கு!
வட்டியில சோறு வந்து சேர
அகப்பையில அரிஞ்சு
வைக்கிறா கறியையும்
எலும்பையும்.

“சொட்டான் போடற நாக்கை”
மெதுவா நிறுத்தி
பொசுக்க பொசுக்க
கறியும் சோறும்
ஒண்ணா பயணம்
போறாங்க!
“கறி சோறு” சொவைச்ச
நாக்குக்கு தண்ணீர் தரல
சொவை மாறிடுமாம்.

இரா.கலையரசி