நூல் அறிமுகம்: அ.சி.விஜிதரனின் ‘ஏதிலி’ து.பா.பரமேஸ்வரி
நிலம் என்பது மண்ணால் ஆனதல்ல.”
ஆம். ஒரு நாடு என்பது உயர் தேசம் என்பது வெறும் காடுகளால் நதிகளால் மலைகளால் ஆறுகளால் சமுத்திரங்களால் மட்டுமே புடைசூழப்பட்டதல்ல. இவையனைத்தும் உயிர்களற்ற கானகத்தின் உயிரற்றவை போல மனித சமூகம் புழங்காதவரை. மனித உயிர் நிம்மதியாக வாழாத வரை காணி நிலமும் கள்ளறை சுமக்கும் நிதம் என்பது இயற்கையின் கோட்பாடு. அதிலும் மனிதருண்டு மனிதர் வாழும் மடமை என்பது உயிர்களின் படைப்பில் எங்கும் காணக் கிடைக்கா கருப்பு சரித்திரம். மனிதனை மனிதன் இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்கிற பாரதியின் ஆற்றாமை இன்றுவரை ஆற்றவியலா மாற்றத்தில் மட்டுமே உள்ளது. அதற்கான முன்னெடுப்பும் கசியவில்லை என்பதே இங்கு நம் வருத்தம். எந்த சாதியாக இருந்தால் என்ன.. எந்த மதமாக இருந்தால் என்ன… எந்த நிலமாக இருந்தால் என்ன…எந்த மறைத் தொழுபவர்களாக இருந்தால் என்ன.. எந்த மொழி பொழிபவர்களாக இருந்தாலென்ன…. எப்படியான உண்டி ருசிப்பவர்களாய் இருந்தாலென்ன… சக மனிதர்கள்.. இந்தப் பேரண்டவெளியில் ஜனித்த உயிர்கள் என்கிற படைப்பியக்கத்தின் அடிப்படையை உணர்ந்தால் போதுமானது. நிலத்தையும் நீரையும் இயற்கை வளத்தையும் கூறுபோடும் மனித மனமே மனிதரையும் பிரித்துக் கூறுபோட ஆரம்பித்தது.
ஆதி காலம் முதல் தொடர்ந்து வரும் போர்களும் படையெடுப்புகளும் அதிலும் சொந்த மண்ணிலேயே பிறந்த மாந்தர்களின் பிரிவினை, தேசத்தை விட்டு துரத்தப்படுவதும்அப்புறப்படுத்
ஆம். இலங்கையின் நம்மின மாந்தர்கள் ஈழத்தமிழர்கள் சிங்கள தேசத்தின் கோரப்பிடியில் குரல்வளை நெரிக்கப்பட்டது தமிழ் வரலாற்றின் இரத்தச் சரித்திரம். கொடுமை கொடுமை என்று ஓடோடி போனதற்கு அங்கே ஒரு கொடுமை தலைவிரித்து ஆடிய தாம். அபயம் தேடி அவயம் சுமந்து அபயக்குரல் ஓலமிட பிறந்த மண்ணில் நசுக்கப்பட்டு கையேந்தி வந்த மக்கட்கு உயிர்பிழைக்க நம்பிக்கையின் அதீதத்தில் சிறு வெளிச்சத்தைத் தேடி வந்த பரிதாபங்களுக்கு நம் தமிழ் மண் காண்பித்தது என்ன..? ஆதரவா அல்லது மெல்லமெல்ல சித்திரவதித்த ஆயுதமா.. சொந்த மண்ணை தொலைத்து அகதிகளாக உயிரை மட்டுமே தாங்கி அடைக்கலம் கேட்டு நம் மண்ணில் தடம் பதித்த அந்த முகங்களுக்கு அரசும் அரசாங்கமும் எப்படியான வரவேற்பை எதிர்காலத்தை வழங்கியது.. மனிதவாழ்வின் கணக்கிலடங்கா துயரங்களில் தலையானதாகக் கருதப்படும், இதுகாறும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த மண்ணை பிரிந்து அகதிகளாய் அயல்நாட்டில் கையேந்தி நிற்பது இது ஒரு நீடித்த பீடித்த சோகம். ஆம். அவர்கள் தாம் வாழ்ந்த இடத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்கள். நம்மிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள். இலங்கையின் ஈழத் தமிழர்களின் கோர காட்சிகள் முள்ளிவாய்க்கால் முனையில் முடிந்துப்போன பிணங்களின் கதறல்கள், இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சொந்த நாட்டில் பாதி அடைக்கலம் தேடி வந்த நாட்டில் முகாம்கள் என்ற பெயரில் மீதி என தங்களது உயிரையும் உடைமையையும் இழந்த இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு கதைக்கிறது ஆசிரியர் விஜிதரன் அவர்களின் “ஏதிலி” நாவல்.. இல்லை கதறுகிறார்கள் ஏதிலிகள். ஈழத்தின் எல்லா போக்குகளையும் பேசுகிறது நாவல். பக்கங்கள் ஒவ்வொன்றும் ஏதிலிகளின் துயர ஓலமும் இரத்த வாடையும் நாசியைப் புடைத்து செவிகளைத் துண்டாக்குகின்றன.
அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஈழத் தமிழர்களின் வெவ்வேறு பாடுகளைக் கதைகளாக வரலாற்றுப் பதிவேடுகளாகக் காலம் முழுதும் அழியா கல்வெட்டுகளாகப் பதிந்து நிற்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் பேசுவது கதை அல்ல நிலத்தை இழந்த ஈழ மக்களின் கண்ணீர் மொழி. குருதித் தெளிக்க தசைகள் கிழிய நரம்புகள் புடைக்க வதனமெங்கும் ஆறவியலா ஆழமான ரணங்கள் சுமந்து நடைப்பிணங்களாக நிதம் வாழ்வைத் தொலைத்து இறந்தகால இனிமைகளை நெஞ்சில் சுமந்து எதிர்காலத்தை மட்டுமே கையில் பத்திரமாக இறுகப்பற்றி எங்கேனும் போய்ச் சேருவோம் இறுதியில் என்கிற ஒருவிதக் குருட்டு நம்பிக்கையில் தூரத்தில் தெரிகிற ஒரு புள்ளியை மட்டுமே கைத்தடியாகப் பற்றி இந்திய முகாம்களைத் தேடி உயிரேனும் ஒட்டியிருக்க ஏதேனும் வழியுண்டா என்று குரல்கள் அற்றவர்களாக இங்கு தஞ்சம் புகுந்தனர் பரிதாபத்தின் சின்னங்களான ஏதிலிகள்.
இப்படி மு காம் வந்து சேர்ந்த இவர்களின் நிலை என்ன.. என்று தெரியுமா.. அனுபவித்த கொடுமைகள் அரசின் சூழ்ச்சிவலை, அவர்களுக்கென்று போடப்பட்ட சதித்திட்டங்கள் இல்லை அடக்குமுறைகள், பேசினாலும் பேசாமலிருந்தாலும் குற்றம். உரிமை மறுப்பு உயிர் வாழலாம் ஆனால் நடைபிணமாய். சிறைச்சாலைகள் பரவாயில்லை இவர்களின் முகாம் திராபகக் கதவுகளின் நுழைவாயிலைக் காணும்போது. மந்தைகள் ஆக்கப்பட்டனர். எந்த கோரிக்கைகளும் கூப்பாடுகளும் இதுவரை கேட்பாரற்றுக் கிடக்கின்றன. திராணியற்றுக் கிடக்கிறார்கள் நம் சகோதரர்கள். தேசம் அறிந்திருக்குமா இவர்களின் கண்ணீரை.. ஏன் அறிந்திராது….. நாம்தான் செவியிருந்தும் செவிடர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். நாம் மட்டும் வாழ வேண்டும் நம் குடும்பம் உடன் இனிதே. நமக்கு அப்பாற்பட்ட எதையும் கண்ணுறும் கவனம் நமக்கு போதிக்கப்படவில்லை இதுகாறும். இவர்கள் உண்ட அவதிகள் இலங்கையில் கொண்ட பாடுகள் முகாம்களின் அட்டூழியங்கள் என அன்றாடம் நாம் கேட்டுத்தான் வருகிறோம் சூடான செய்திகளாக அன்றைய பொழுதின் சுவாரஸ்யமாக. பேசிப்பேசியே பொழுதைக் கழிக்கிறோம். ஆனால் இவர்களின் எல்லா குமுறல்களும் மௌன சாட்சியாய் ஈழ மண்ணும் நம் இந்திய முகாம்களும் அதையும் தாண்டி ஆசிரியர் விஜயதரன் அவர்களின் இந்த நாவல்.
“காட்டாறு வெள்ளம் வழிகளை என்றும் பயன்படுத்தியதில்லை.”
ஆம். முற்றிலும் உண்மை வழிகளை எதிர்நோக்கிய வாழ்வு என்பது நிதர்சனமற்றது பயனற்றது. வாழ்க்கையை எப்போதும் அதன் சுவாரஸ்யத்தில் விட்டுவிட வேண்டும். அதில் எப்போதும் மகிழ்வுக்கான வெண்திரை மட்டுமே இருக்கும் என்ற எண்ணம் முட்டாள்தனம். சுமையும் சுகமும் வாழ்வும் தாழ்வும் அமைதியும் போராட்டமும் வெற்றியும் தோல்வியும் என..புதிர்களின் நகர்வுகளே வாழ்க்கை.ஏன் சில சமயங்களில் பெரும் தோல்விகளும் துயரங்களும் கூட சூழந்து அழுத்தலாம். அவற்றை முன்பே அறிய முற்படுபவன் சுவாரஸ்யத்தைச் சேகரிக்க முடியாது.அடுத்தடுத்தக் கட்டங்களை அடுத்தடுத்த நகர்வுகளில் விட்டுவிட்டுக் கடப்பதே வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கான வழிமுறை என்பதையே முதல் அத்தியாயத்தில் அவன் இவன் இரண்டு நண்பர்களின் வாழ்வில் ஏற்பட்ட தொய்வுகள் திடீர் திருப்புமுனைகள் பாதிப்புகள் அவற்றையெல்லாம் இவனிடம் அவன் சிலுவை தாங்கிய அந்த இருள் நாட்களை எழுத கட்டாயப்படுத்தும் கருப்பு இயேசுவாக அவன்.
“உறுதியானவற்றை எழுதத்தானே பேனா வேண்டும்.”
ஆசிரியரின் இந்த வரிகள் பல கோணங்களில் நமக்கான படிப்பினை.. உறுதியற்ற வாழ்க்கைப் பாடுகளில் எதுவும் நிரந்தரமானவை அல்ல. எதை நிச்சயம் என்று நினைத்து அழியாத நிலைப்பாட்டில் அச்சிட முடியும். காலமும் மனிதனும் கடத்தல்கள் தானே. இருத்தல் என்பது இருந்தும் இல்லாது போவது.
யாழ்ப்பாணத்திலிருந்து உயிர் வாழ்ந்தால் மட்டுமே போதும் என்று தப்பித்துப் பிழைத்து யாழ்பாணத்திலிருந்து கள்ள கப்பல் வழியே நம் இந்தியப் பெருங்கடலே தமக்கான வெளி என்று கரை தேடி முகாம் சேர வந்தவர்கள் அமுதாவும் அவள் குடும்பமும்.
“படகில் ஏறி வரும் போதே பாடையில் ஏறியதாகவேப் பட்டது.”
என்ற அமுதாவின் ஆழ்மன அச்சுறுத்தல் வெளிப்படுத்தும் வரிகள் கலங்க வைத்தன. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று அடாத நம்பிக்கையில் நம் தமிழன்னை மடி வந்தடைந்த அவளுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல மீண்டும் ஒரு இடியே தலையில் விழுந்தது. காரணம் நமக்கு வேண்டுமானால் சாதிய சாக்கடை என்பது மூக்கைப் பிடித்துக் கடந்து செல்லும் அன்றாடம். கடல் கடந்து உயிர் பிழைக்க வந்த ஏதிலிகளிடம் சற்றும் இரக்கமின்றி நீங்க என்ன சாதி என்று கேட்கும் சிதில மனம் உலகிலேயே இங்கு நம் பாரதத்தில் மட்டுமே அதிலும் நம் தமிழ்நாட்டில் அதிகப் புழக்கம்.நமக்கே உரித்தான தன்னியல்பு.அத்துடன் முடிந்ததா என்ன.. நிலத்தில் தடம் பதித்த அவர்களுக்கு இதயத்தில் சம்பட்டியால் தடம் பதித்தனர் முகாமி அரசியலாளர்கள். நிலங்களின் அரசியலில் இதுவும் இருக்கும் தானே என ஆச்சரியம் இல்லை நமக்கு. அதிர்ச்சி தான் ஈழத்தமிழர்களுக்கு என்கிறது இரண்டாம் அத்யாயம்.
வாழ்க்கை ஒருவரை வாழக் கற்றுக் கொடுக்கிறது என்று கூறுவதைவிட கடினமான இந்த வாழ்க்கையை வாழ வாழ்பவரை கடினமானவராகத் தகவமைக்கிறது. காரணம் வாழ்க்கையை மாற்றும் திறனைக் காட்டிலும் எதிர் கொள்ளும் உறுதியும் வைராக்கியமும் ஒருவருக்கு போதுமானதாக இருக்கும் என்பதே காலம் நமக்கு வழங்கும் பாடம். இதையே ஷாமினியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. இப்படியானதொரு வாழ்க்கையை அன்றாட வாழ்வில் அனேக ஷாமினிகள் கடந்து வந்துள்ளனர் கடந்து கொண்டும் இருக்கின்றனர். ஷாமினியின் வாழ்வில் அவள் எடுக்கும் சொந்த முடிவுகள் மட்டுமே இதற்கான முக்கிய காரணமாக ஆசிரியர் முன்வைப்பது. வாழ்க்கைச் சூழலும் முகாமின் அகதி வாழ்க்கையும் அவளை இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கும் கடின மனநிலையை வழங்கிச் செல்கிறது. ஒவ்வொரு தன்னிச்சை முடிவும் ஷாமினிக்கு வெற்றியின் அருகாமையையோ அவளது வாழ்க்கைப் பாடுகளுக்கான ஒரு இறுதித் தீர்ப்பையோ வழங்கி விடவில்லை ஆயினும் தனித்து எதிர்த்துப் போராடும் வல்லமையை வழங்கியது என்பதே மூன்றாம் அத்தியாய ஈழ ஏதிலியான ஷாமினி நமக்குக் குறிப்பாக நிற்கிறாள்.
“அடையாளம் இல்லாமல் போவது என்பது ஒரு இழப்பு என்றால் அடையாளம் காண முடியாமல் இருப்பது இன்னொரு இழப்பு.”
மனித வாழ்வு என்பது நம்மை சுற்றி இருப்பவர்களை அடையாளம் காண்பதிலிருந்தே தொடங்குகிறது. சொந்த மண்ணில் அந்நிய படுத்தப்படும் யாவரும் அகதிகள். அதேபோல் நிலத்தை விட்டு அகதிகளாய் புலம்பெயர்ந்தவர்கள் எப்போதும் அடையாளம் தொலைத்தவர்கள். தாய்நாடான இத்தாகாவிற்குத் திரும்பப் போராடிய ஒடிசியஸ் தமது தாயகம் அடைந்தபோது அது தனக்கானது தன்னுடையது என அடையாளம் காண முடியாத உரிமைப் பாராட்டவியலா அவல நிலையை அடைந்தார். அது மட்டுமல்லாது தம் நிலத்தை விட்டு வாழ்வாதாரத்திற்காக புலம்பெயரும் ஒவ்வொரு அகதியின் அசல் நிலையும் இதுவே என்கிறது நான்காவது அத்தியாயம்.
முகாமி அகதிகளின் வாழ்க்கையின் சோக நிலை, தமிழனே தமிழக அரசே தமிழ்நாடே கதி என்று சரணாகதி அடைந்த அகதிகளுக்குக் கிடைத்தச் சலுகைகள் என்ன.. வாழ்வு என்ன.. கண்ணீர் மல்கச் செய்கிறது ஐந்தாவது அத்தியாயத்தின் பக்கங்கள். உயிர்மட்டும் மிச்சமாய் மற்றவை எல்லாம் எச்சமாய் வழங்கப்பட்ட கோர சரித்திரம் அகதி முகாம். சிங்களர்களால் புறக்கணிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நம் தேசம் அரவணைத்துக் கரைச் சேர்த்ததாய் மார்தட்டிக் கொக்கரிக்கும் நமக்கு மறைக்கப்பட்ட இருட்டடைப்பின் பிழைகள் ஒரு காத தூரம் வெறும் செய்தியாகவே தேனீர் இடைவெளி விவாதப் பொருளாகவே கடந்தும் சென்றது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் நமக்குப் பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை. இந்த அகதிகள் மண்ணை விடுத்து உலகம் முழுவதும் சுற்றி அலைகிறார்கள் வாழ்வாதாரத்திற்காக. பெரும்பாலும் இது ஒரு உலகளாவிய அரசியல் தானே. அரசு என்றானபின் அரசியல் என்பதும் விதிவிலக்கல்லவே. தொகுப்பின் ஆறாவது அத்தியாயம் முன்கதை பின்கதை என இரு வெவ்வேறு கதைகளைத் தனக்குள் உள்ளொடுக்கி உள்ளது. மையம் என்னவோ ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஆனால் பல போராட்டங்கள் வெறும் எழுத்துக்களாக எங்கோ பதுக்கி வைக்கப்படுவதை காட்சியப்படுததுகிறது பக்கங்கள். துணிந்து எதிர்ப்பவர்களுக்கு உலகின் எந்த மண்ணிலும் நீதி இல்லை. இனி போராட துளியும் மனிதர்களுக்குத் திராணி இல்லை.
வாழ்க்கையை அறிந்துக் கொள்ள முயற்சிப்பது ஒரு ஆகச் சிறந்த தவம். எந்த உறவாக இருந்தாலும் உன்னத அன்பு இழப்பை பொருட்டாகப் பார்க்காது. அதிலும் தூய காதல் சாதி மதம் வசதி வாய்ப்புகளைக் கடந்தும் பேரிழப்புகளில் கூட துணைநிற்கும் என்பதையே ஏதிலியின் ஆறாம் அத்தியாயம் குகனின் தூயக்காதலைப் புடம் போட்டு நமக்குக் காட்டுகிறது. கண்ணிவெடியில் தனதொரு காலை இழந்தக் காதலியை உவர்ப்பின்றி ஏற்று வாழும் தூயக் காதலையும் பேசத் தவறவில்லை நாவல். உறவுகள் உதறினாலும் இறுதிவரை கலங்காது தம் துணையைப் பாதுகாக்கும் உண்மை காதல் இன்னும் பெருவெளியில் சாகாது வாழ்ந்து தான் வருகிறது என்பதை ஆழப்படுத்துகிறது இந்த அத்யாயம்.
“வீடுகளுக்கு கம்பிகள் மட்டும் இல்லை அப்படி ஒரு வாழ்க்கை தான் இங்கு..”
சொந்த நாட்டிலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் என அகதிகளான இரு தோழிகள் தமது அவல வாழ்க்கையை கடித சம்பாஷணையில் பகிர்கிறதைப் பரிமாறுகிறது ஏழாவது அத்தியாயம். வேறு எந்த தேசத்திலும் நடைமுறையில் இல்லாத பிள்ளைகளுக்கான இந்திய மனப்பாடக் கல்வித் திட்டத்தைத் தமது பக்கங்களில் சில வரிகளில் சுட்டிக்காட்ட தவறவில்லை ஆசிரியர். முள்ளிவாய்க்கால் கோரங்கள் கண்முன் ஊசலாடுகிறது ஏழாவது அத்யாயத்தில்.சிங்களப் போர் சாதாரண மக்களையும் ஆயுதம் ஏந்தச் செய்த துர்பாக்கியம். ஒரு அழிவுப் போருக்குத் தாமாகவே முன்வந்து தயாரான மக்கள். ஆர்மிக்காரர்களின் இரக்கமற்ற அரக்க குணம்.
“மக்களுக்காகத் தானே நாடு.. மக்களே இல்லாமல் ஆக்கிவிட்டு எப்படி நாடு கிடைக்கும்..”
என்கிற அடிப்படை ஜனநாயகம் கூட அறிந்திராத சிங்கள அரசின் குண்டு தாக்குதலில் உயிரிழந்தும் உறுப்பிழருந்தும் பரிதவித்த மக்களைக்காட்சிப்படுத்துகிறது பக்கங்கள். சாமானிய ஜனங்கள் அரசுக்கு எதிராக இயக்கத்தில் பங்கேற்க என்ன காரணம். தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க.. இழந்ததைத் திரும்பப் பெற என எடுத்தியம்புகிறது ஏதிலி.
“ஒவ்வொரு நிமிடமும் ஒரு நாடு கிடைக்கப்போவது என்ற கனவில் தானே இருந்தோம்.”
ஒவ்வோர் ஏதிலியின் எதிர்பார்ப்பும் இதுவே. தமக்கான நிலத்தை தம் மண்ணை த்ம்மிடமிருந்துப் பிரித்திடாதிருக்க போராடும் மக்களின் இயலாமையை இப்படியான மனித அழிவுப் போருக்குத் தாமே தயாராகும் மக்களுக்கான இயக்கம். இவர்களின் அழுகுரல் எதனை கதறுகிறது.
“ஒன்று இந்த அரசாங்கம் இல்லாம போக வேண்டும். இல்லை நாங்கள் இல்லாம போக வேண்டும்.”
இரண்டுத் தேர்வுகளே மிகச்சரியான இந்த விருப்பத்தேர்வுகள் ஒருவரை இறுதிகட்ட அழிவுக்குக் கொண்டு சேர்க்கும் என்கிற மற்றுமொரு கம்பிகளற்ற முள்ளிவாய்க்கால் சிறைச்சாலைப் பற்றியும் பதிவிடுகிறது அத்தியாயம்.
“நம்பிக்கைகள் தான் இழப்புகளுக்குக் காரணம்.”
என அறிவுறுத்தும் எட்டாம் அத்தியாயம் போலீஸ் வழியில் தென்பட்டிடக் கூடாது என்ற அடர் நம்பிக்கை மேலோங்கிய நிலையில் ரமேஷ் வண்டியை ஓட்ட, நம்பிக்கை என்பது பொய்த்துப் போகும் என்று நிரூபணமானது.லைசன்ஸ் இல்லை என்று வேலைக்குச் சென்றுவிட்டுத் நள்ளிரவில் வீடு திரும்பும் முகாமை சேர்ந்த ரமேஷை
“இலங்கை தாயோழிகளா திருடிட்டு வந்தீங்களா..?
என்று கன்னத்தில் அறைந்து நிலைகுலையச் செய்தது தமிழக போலீஸ். முகாம் அகதிகள் என்றால் அத்துணை இளக்காரம். அவமானத்தால் கூனிக் குறுகி நின்றான் ரமேஷ். அகதி என்கிற ஒற்றை அடையாளத்தைக் கொச்சைப்படுத்திய போலீஸ் அதிகாரியின் அடக்குமுறை ஏளன ஆணவ அதிகாரத்தைத் விரியப்படுத்துகிறது நாவல். அத்துடன் நிறுத்திக் கொள்வார்களா நம் நாணயஸ்தர்கள்? 200 ரூபாய் பெற்ற பின்பே விடுவித்தனர் அவர்களை. உயிர் பிச்சை ஏந்தி தம்மையும் தம் மண்ணையும் நாடி வந்த ரஇந்த அப்பாவி எதிலிகளிடம் தங்கள் கையூட்டு சாகசங்களை நிகழ்த்தி வெற்றிக் கண்டது தமிழக போலீஸ் என்று சாடுகிறார் ஆசிரியர்.
“ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஒரு மனிதன் போகக்கூடாதா? எல்லைகள் ஏன் இப்படி இருக்கின்றன.”
வெளிநாட்டில் பிழைப்பிற்காக புலம்பெயரும் பெண்களின் சூழ்நிலையை இறப்பிற்குப்பின் பிணத்தைக் கூட தாயகம் அனுப்ப மறுக்கும் அரபு நாடுகளின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்துகிறது நாவல். இலங்கையின் ரிசானா நபீக், இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண் என புலம்பெயரும் பெண் தொழிலாளர்களின் மீது பலவித குற்றப் பத்திரிகைகள் சுமத்தப்பட்டு நடுவீதியில் தலையை வெட்டிக் கொன்று குவிக்கும் சவுதி நாட்டு வெள்ளை தாரிகள் உடுப்பில் ரத்தக்கறைத் தெறிக்காமலிருக்க பாதுகாக்கும் இந்த கொலை வெறியர்களின் மனது அடர்ந்த கொலைவெறிக் கறையை அப்பிக் கிடைக்கிறதே. வெட்டியபின் ஏதும் நடவாதது போல ஒரு அமைதி எங்கிருந்து இவர்களுக்குக் கிடைக்கிறது. குருதி உண்ட மனதும் உயிர் துடிப்பதைப் பருகிய விழிகளும் மறுத்துப் போனதே காரணம்.
“இறப்பு எப்படி மனிதருள் வலிமிகுந்த இழப்பாகக் கருதப்படுகின்றது..அது வரை யாரென்றே தெரியாத அவர்களின் இறப்பு எப்படி தாக்கம் செலுத்துகிறது..” வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களை ஏந்தி நிற்கிறது ஒன்பதாம் அத்தியாயம். பிணத்தைக் கூட லஞ்சமின்றி தர மறுக்கும் அரசாங்கக் கையூட்டுகள் எங்கும் எல்லாத்துறையிலும் கருவேல மரமாய் வேரூன்றிக் கிடக்கின்றன. மலர் அக்காவின் சடலத்திற்கு இதே அவலநிலை.பாடையிலும் பழுதைக் தேடுகிறது நம் இந்திய லஞ்சக் கலாசாரம். தோலுரித்துத் தொங்க விடுகிறார் ஆசிரியர்.
“ஒழுக்க மயிரா இருக்கத் தெரியாதுனா எதையாவது வாங்கிக் குடிசிட்டு சாக வேண்டியது தானே. நீங்க வாழணும்னு யார் அழுதா..?”
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நம் நாட்டில் உரிமைக் கோரும் சலுகை இல்லை அறிந்ததே.. அகதிகளுக்குமா …
தனியே ஒழுக்க விதிகள் உண்டு போல.. முகாம் தேசத்தில் சாதாரண சமூகப்பிரச்சனைகள் கூட இவர்களுக்கு சாமான்யாரைக் காட்டிலும் அதி மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. முகாம் அகதிகள் என்றால் உரிமையும் கடமையும் அடிப்படை மனித செயல்பாடுகள் என எதுவும் அவர்களைத் தீண்டக்கூடாது. இதில் எதில் அவர்கள் தவறுதலாக தடம் பதிய நேர்ந்தால் அதில் தயவு தாட்சண்யமின்றி கால்கள் துண்டிக்கப்படும் என்பதே முகாம் அகதிகளுக்கான அதிகபட்ச தண்டனை. இந்த கொடுமைக்கு அவர்கள் தங்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே வாழ முடியும்.இதற்கு சொந்த மண்ணிலேயே மடிந்து இருக்கலாம்.
“ஆட்டுக்குக் காவல் ஓநாய் என்ற கதை தான்.”
நிதர்சனமான நடப்பு. ஒரே இனம் மொழி குருதி சுமக்கும் உயிர்களான நம் ஈழத்தமிழருக்கு உதவ சுணக்கம் காட்டுவதும் அவர்களை முகாம் என்கிற பெயரில் சிறு தரமாக நடத்துவதும் அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுக்கும் பட்சத்தில் உலகில் உள்ள பிற நாடுகள் எங்கனம் இவர்களுக்கு உதவும்.
ஐநா சபை உட்பட அனைத்துமே இந்தப் சொந்த நிலமிழந்த அகதிகளை வைத்து அரசியல் நடத்தவே முற்படுகின்றன என்கிற நிதர்சனத்தை உலக அரசியலை உலக வெளிக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது பதினொன்றாம் அத்தியாயம். சுவாரஸ்யமான பல அரசியல் உண்மைகள். நம் சகோதரர்கள் காலம் முச்சொட்டிற்குமான வாழ்வைப் புடம்போட்டுக் காட்டுகிறது இந்த அத்தியாயம். ஐ நாவின் முகமூடியை அம்பலப்படுத்தியும் அமெரிக்க அரசின் பச்சாதாப நடிப்பையும் இந்திய அரசியலின் திரைக்குப் பின்னால் என அனைத்தையும் வெட்டவெளியாக்குகிறது இந்தப்பகுதி.
“எங்களின் நாங்கள் ஒதுக்கப்பட்ட மக்கள் தான்..”
ஈழத்தமிழர்களை தமிழகத்திலிருந்து தமிழ் மண்ணிலிருந்து புறத்தே ஒதுக்கி வைத்து பார்க்கும் அரசாங்கத்தின் கண்ணியமற்றப் பார்வை கம்பிகளில் சிறை கூண்டிற்குள் சிக்கி சித்திரவதைக்குள்ளாகும் இவர்களைப் பேசுகிறது பன்னிரண்டாவது அத்தியாயம்.
“நாங்கள் இந்த மண்ணில் அகதியாகக் காலடி வைத்த போது எங்களை எண்களாக தான் பார்த்தார்கள். நீ பிணங்களாக பார்த்து விடாதே மினு..”
ஏதிலிகள் என்றல்ல சொந்த மண்ணில் புறக்கணிக்கப்பட்ட அனைவரும் அகதிகளே. உயிராக சதைப் பிண்டமாக அரசும் அதிகாரிகளும் ஏன் பொது மக்களும் கூட கருதுவதில்லை இந்தப் பரிதாபப் சின்னங்களை. தாழ்த்தியும் ஏளனப்படுத்தியும் ஒதுக்கும் இவர்களின் மனங்கள் சிதிலமடைந்த சாக்கடைகள். வலியும் வேதனையும் உயிருக்கே உரித்தானதை உணராத மனிதர்கள் அல்லவா சுமந்துள்ளது இம்மாநிலம்.
“மொழி ஒன்றாக இருந்தாலும் நிலம் வேறு அல்லவா.’
வலியால் வலிமை தாங்கிய இவர்களை பக்கம் ஒன்றிலும் பதியமிட்டுப் பதறிய ஆசிரியர் வாசகரை கண்ணீர் காமாலையில் மூழ்த்துகிறார்.
“மக்களின் நிலைமைகளுக்குப் பதில் தேடினால் அரசின் கரங்கள் உங்கள் கைக்கு கைதுகள் என விலங்கு மாலை வழங்கும்.”
உண்மை தானே. இது அகதிகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதல்ல. சமகால அனைவருக்கும் பொருந்தும் ஒரு கூற்று.மற்றவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என அகதிகளைப் போல் இங்கு ஏராளம் காணலாம். ஆனால் அவர்கள் அப்படியேதான் விடுபடவேண்டும். அவர்களுக்கென கரம் உயர்த்துவோர் வாய்க்குப் பூட்டு போட்டும் கரங்கள் சங்கிலியிடப்பட்டு விடும்.
“மதம் பெருசுன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்குது.திங்கிறதுக்கு சோறு இல்ல. இதுல பேஸ்புக்ல கடவுளுக்கு சண்டை..”
மதம் எனும் மதம் பிடித்த மனிதர்கள் மதம், கடவுள் வழிபாடு, பாரம்பரியம், பண்பாடு சடங்குகள் என மனிதத்தை மறந்து மதத்தைக் கூறு போடுகின்றனர். மதப் பித்து மக்களை கோவில்களுக்கும் மடங்களுக்கும் பணத்தை வாரி இரைக்கச் செய்கிறது. ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்கவோ அடிப்படை வசதிக்காகவோ இல்லாமையை சமன்படுததவோ உதவுவதற்கோ தங்கள் பணத்தை வழங்க மறுக்கும் மதவியாதிகள்.
இலங்கை அகதிகளை பொறுத்தவரை சிங்கள தேசத்தில் வாழ்வா சாவா என்ற போராடுவதை விட இந்த சிறை வாழ்க்கையே தேவலாம் போல என்ற மன நிலைக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர். காரணம் இங்கு அசலில் சேரியும் முகாமும் ஒரு போலவே. ஒடுக்கப்பட்டவர்கள் எளியவர்கள் என்றான பின் சொந்த நாட்டை சேர்ந்த சேரிகளும் ஒன்றே புலம்பெயர்ந்த அகதிகளும் சமமே இங்கு.
SRILANKA WHAT NEXT…
என்கிற அகதிகளுக்கு எதிரான..
சிங்கள போரின் முடிவிற்கு பின்பாக இலங்கை அரசு இந்தியாவில் அகதிகளாகப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களைத் தங்கள் வசம் நாடு திருப்ப வேண்டி பற்பல உத்திகளைக் கையாள்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இறுதிப்பகுதி. முள்ளிவாய்க்கால் வரலாறு, இலங்கையின் போருக்குப் பின்பு சிறையிலடைக்கப்பட்ட தமிழர்களின் கண்ணீர் காதை, ஐநா சபை சொந்த தேசம் திரும்பும் அகதிகளுக்கு ஒரு லட்சம் சன்மானம் தருவதாக அறிவித்தக்கப்பட்டதைப் பற்றிய தகவல் என இறுதிப் பக்கங்கள் சிங்களப் போர் பின்பான தந்திரங்களின் படிமங்கள்… இங்கிருந்தாலோ உயிர் மிச்சம் கொண்டு கிடைக்கும் வேலை செய்து பிழைக்கலாம் முகாம் சிறைச்சாலை என்னும் சுதந்திர சாலையில்.. அதே வேளை இலங்கை சென்றால் பிழைப்பிற்கு வழியின்றி வாழ்வாதாரத்தை எப்படி நடத்துவது என்பது ஒரு புறம் இருக்க மீண்டும் குரூரத்தின் கோரத்தில் மூழ்த்தி விட்டால்.
ஒவ்வொரு பக்கமும் வியாக்கியானங்களை மட்டும் கொட்டி ஆதங்கத்தை ஆற்றும் படைப்பாக முற்றிலும் இல்லை. மாறாக நம் ஈழ ஏதிலி மக்களின் துயரங்களை உண்டு பண்ணும் வினையூக்கிகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வாக ஆசிரியர் தமது கருத்துக்களை இறுதி அத்தியாயத்தில் பாடுகளோடு பதிவிட்டுள்ளார். கோரிக்கைகளையும் கூப்பாடுகளையும் முன் வைத்த தமது சொந்த மண்ணில் இவர்களின் உணர்வுகள் கேட்பாரற்று கிடந்தன. தன்னிலத்திலேயே அனாதைகளாக அகதிகளாக நீண்ட நெடிய காலங்களை இந்த ஏதிலி மக்கள் கடந்துள்ளனர். அங்கேயும் அகதிகளாக இருந்து மிச்சமாக உயிர் மட்டுமே வாழ வழி தாருங்கள் என்று பாதம் பற்றி மன்றாடிய அவர்களுக்கு நம் தேசமும் மற்றொரு முள்ளிவாய்க்கால் தான் வழங்கியது. அகதிகளாக வாழ்வதில் அப்படி என்ன சிரமம்? சொந்த நாட்டிலே வக்கற்றுத் தானேஇங்கு வந்தனர். சற்றே முன் பின் இருந்தால் என்ன என்கிற நம் ஏளன பேச்சுகளுக்கு முகாம்களில் இழைக்கப்பட்ட கைதி வாழ்க்கை அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது நாவல். இதை வெறும் புனைவாகக் கண்டு அவ்வளவு எளிதாக வாசித்து கடத்தி விட முடியாது. பல்லாயிரக்கணக்கான நம் தமிழின மக்களின் கண்ணீரில் நின்று வறண்ட துயரங்களை தவிப்புகளை நரகத்தின் மிச்ச சொச்சங்களை அவர்களின் முகங்கள் தனக்குள் சூடிக்கொண்டு சேமித்த பாடுகளை ஒதுக்கி கனத்த மனத்துடன் எழுத்தின் வழியே படிமங்களாக வடிவம் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு நாவலின் பின்புலம் தம்மை அதிர்ந்த அசைத்த ஏதோ ஒன்றின் தாக்கம் வரி வடிவமாகும். அவற்றில் நாவலாசிரியர் பாத்திரங்களாக நின்று பேசுவார். ஆனால் ஏதிலியைப் பொருத்தவரை ஈழம் என்கிற வார்த்தைக்கான விளைவுகளை அனுபவித்து உயிர் சாட்சியாக நிற்கிறார் ஆசிரியர் விஜிதரன். ஏதிலி உயிருள்ள ஒரு ஓவியம் என்பதற்கான இதைவிட ஒரு சாட்சி ஏது.
“நிலத்தை மனதில் தாங்கியவர்கள். ஆனால் வேரை இழந்தவர்கள்.”
ஆம். நிலத்தை மனதில் மட்டுமே தாங்கியவர்களுள் ஆசிரியரும் ஒருவர் என்பதே ஏதிலியின் ஜனனம். வாழ்நிலையே மனிதனின் மனநிலையை தீர்மானிக்கிறது. பலர் இங்கிருந்தபடியே எதிர்கொள்கின்றனர் போராடுகின்றனர். பலர் வாழ்நிலையில் சிக்கிக்கொள்கின்றனர். அரசாங்கத்தின் தயவை எதிர் நோக்கியே இந்த ஊழியர்கள் உத்திரவாதமற்ற நிலையில் மண்ணை பிரிந்து சொந்த பந்தங்களைத் தொலைத்து நிச்சயமற்ற வாழ்க்கைக்கான சாட்சிகளாக நிற்கின்றனர். நாவல் முழுதும் பலதரப்பட்ட பாத்திரங்கள். மனப்பிறழ்வு கொண்டவர், இயலாமையில் இன்னல் படுபவர், துயரங்களை உண்ணபழகியவர், அவமானத்தில் வாழக் கற்றவர், பாதுகாப்பின்மையை உணரும் ஏதிலிகள் என பாத்திரங்களின் அணிவகுப்பு அவர்களின் பாதிப்புகளை நமக்குள் சுமத்திவிட்டு செல்கிறது. நம் பசிக்கு நாமே புசிக்க வேண்டும் நம்மவர் பட்ட துயரங்களை நாம் தானே எழுத வேண்டும். அப்போதே அதன் வலியும் வாதையும் சமூகத்தின் முன் உயிர்ப்பான விரியப்படுத்த முடியும். அவர்களுக்கான குரலை உயர்த்திப் பிடித்து விட முடியும் என்கிற அப்படத்தை நாவலின் வழியே உறுதிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். திரைக்குப் பின்பான முகாம் இனமக்களின் சோகங்கள் ஏதிலியாக வெளிப்படுத்திய ஆசிரியரின் எண்ணமும் லட்சியமும் எழுத்தில் பூரணத்தைத் தந்த போதிலும் அவரின் கனவு நனவாக வேண்டும் என்கிற வாழ்த்துதலுடன் எம் சகோதரர்களின் வரலாற்றை வாசித்தும் விமர்சித்தும் கனத்த மனத்துடன் நிறைவு செய்கிறேன்.
அற்புதமான ஒரு வரலாற்று ஆவணத்தை இலக்கிய உலகில் பதிவிட்ட ஆசிரியர் விஜிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
நன்றி.
நூல்: ஏதிலி
ஆசிரியர்: அ.சி.விஜிதரன்
விலை: ரூ. 250/-
பக்கம்: 294
வெளியீடு: சிந்தன் புக்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]