போர் சிதைத்த நிலத்தின் கதை (இது வேறு கதையல்ல) 21 – மணிமாறன்
மனிதர்கள் தன் முன் நகரும் வாழ்வை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை எழுத நினைத்திட்ட தொடர்தான். எழுத நினைப்பதை,நினைத்ததை அப்படி அப்படியே எழுதிட முடியுமா?. எழுதிக் கடந்திட எழுத்து அனுமதிக்குமா?. அதனால்தான் தொடரின் முதல் பத்தியை வாசிக்கத் துவங்கியதில் இருந்து நாம் இப்பிடியுமா கடந்திருக்கிறது அவர்களின் தினசரி என நினைத்துக் கொண்டே வாசிக்கிறோம். ஒற்றைத் தன்மை படிந்திருக்கும்
கதைகளை,நாவல்களை,புகலிடத்து சர்ச்சைகளை வாசித்துப் பழகியிருந்த எனக்கு. எழுதித் தீராப் பக்கங்கள் எனும் பத்தித் தொடர் தனித்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு பத்தியை படிக்கிறோம். அதற்குள் சமறிகள் குறித்த ஒரு புரிதலுக்கு வந்தால் ,அடுத்த பத்தியில் நாடோடிகளைப் போல ரூம் ரூமாக அலைக்கழிகிற பெரும் கூட்டம் எந்த சமறி ஒழுங்குள்ளும் வர ஏலாது என்பது புலப்படுகிறது. ஒருவிதத்தில் சமறிகள் சென்னை மேன்சன் வாழ்க்கையை நினைவூட்டுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சிலவற்றிலும் கம்யூன்கள் முழுநேர ஊழியர்களுக்காகவே இயங்கி வருவதையும் ஞாபக மூட்டுகிறது. ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு தன்மை. ஒன்றைப் படிக்கிறோம் அவ்வளவுதான் அடுத்த நொடியில் புத்தகத்தில் வேறு ஒரு புதிய காட்சி நகர்கிறது .
எழுபதுகளின் கடைசியில் சொந்த நிலத்தில் இருந்து துவங்கிய. பயணம் நிற்காமல் தொடர்கிறது. எத்தனை துயரங்கள்,எத்தனை சள்ளைகள். அத்தனையையும் கடப்பதும்,பின் தொடர்வதுமான இந்தப் பெருங் கூட்டத்தின் கதையை தன்னுடைய கதைக்குள்ளிருந்து எழுதியிருக்கிறார் செல்வம் அருளானந்தம்.
தன்னிலிருந்து வெளிப்படுகிற தன்கூட்டுக்கதைகள் இவை. எல்லாவற்றையும் சொல்லில் வடித்திட முடியாது. தன் அனுபவத்தை தன்னுடன் பாரீஸில் பல நாட்கள் இருந்தவர்களின் அனுபவமாகவும் மற்றவர்களின் அனுபவத்தையும் கூட ரசனை கொண்ட வித்தையாகவும் உருமாற்றுகிறார் செல்வம். பத்திகளுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்புகளை தனித்துப் படித்துப் பார்த்தால் அதுவே வாசகனுக்கு தனித்த அனுபவத்தை தரக் கூடியதாக இருக்கிறது..
வில் விறட்டனும்,விமலதாசும், அவிட்ட பாரிசில அவியவிடாத கோழி, மாஸ்ரரும்,நரகலோக நங்கையும், றிச் கேக்கும் அரிச்சந்திர மயான காண்டமும்,பாதர் ஓடியோவுடன் பொங்கலும் கொம்யூனிசமும்..
இவையெல்லாம் எடுத்துக்காட்டாக சொல்லப்பட்ட தலைப்புகளே. பெரும் சிக்கலான வாழ்வினை நகைத்து உருளும்படியாகச் சொல்வது அவ்வளவு ஒன்றும் எளிதில்லை. அத்தனை லகுமொழியில் சம்பவங்களை அடுக்குகிறார் செல்வம். யாழ்ப்பாணத்தில் இருந்து அத்துக் கிளம்பி கருமாயப்பட்டு, கவலைப்பட்டு
நாடற்று தேசாந்திரியாக திரிந்து கொண்டிருப்பவர்கள் பட்ட பாடுகளின் வலியை நுரைக்க, நுரைக்க காடிப் புளிப்பேறிய மதுவின் சுவையாக்கி வார்த்தைகளில் வடித்தெடுக்கிறார் அருளானந்தம். .யாழ்ப்பாணத்து தெருவில் கிடந்த பலரும் பாரிஸில் அகதிகளாகி அவ்வப்போது ரோமிற்கும், ஸ்வீடனுக்கும் கனடாவிற்கும் அலைந்த கதையை, அதன் துயரச் சாம்பல் படிந்திடாத தனித்த பகடியான ஒரு மொழியில் சொல்லியிருக்கிறார் செல்வம்.
காலம் குறித்த பிரக்ஞையை புத்திசாலித்தனமாக வாசிப்பவனுக்குள் கடத்திவிடுவதில் மகா கெட்டிக்காரார்கள் எழுத்தாளர்கள். தன்னுடைய முதல் கட்டுரையான கொண்டலிலை மழை கறுக்கத் தோன்றிய தேவதைகள். எனும் தலைப்பு பத்தியில் கோயில் பூசாரியாகவும், சூசையப்பராகவும் இருந்தவரோடு சேர்த்து அப்போதிருந்த எம். பி யின் பெயரையும் சேர்த்துக குறிப்பிடுகிறார். அந்தக் குறிப்பே நமக்கு புத்தகத்தின் போக்கை புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. முதல்வரியிலேயே தொடரும் பகடி புத்தகத்தின் கடைசிச் சொல்வரையிலும் தொடர்கிறது.
எழுபதுகளில் நாடு கடத்திவிட ஏஜென்ட்கள் பட்ட பாடுகள் இத்தனை சுவாரஸ்யமானவை என்பது நிஜத்தில் எவருக்கும் விளங்கவில்லை. அதில் வடியும் அழுகாட்சியையே எல்லாம் காட்சிப் படுத்தியிருக்கின்றனர். செல்வத்தின் சொல்முறை முற்றிலும் வேறானது. ஒருவிதத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திவிடுவது லாபம் கொழிக்கும் தொழிலாகவும் இருந்திருக்கிறது. நடுவழியில் எவரேனும் பிடித்தால் தளரக்கூடாது. வலுவா பொய் சொல்லனும். அதிலயும் நம்புற மாதிரியே பொய் சொல்லத் தெரியனும். இலங்கையில் அரசுப் பணியில் இருக்கிறோம். சுற்றிப் பார்க்க பிரான்ஸ் வந்தோம் எனச் சொல்லனும். அப்படிச் சொன்னாலும் சந்தேகம் தீராது. ஆனால் நீங்கள்தான் அவரை நம்ப வைக்க பெரும் முயற்சி எடுத்திட வேண்டும்..
ஆஹா வெளிநாடு எண்டால் வெளிநாடுதானப்பா என்றபடியே மகிழ்கிறது சென்று இறங்கிய முதல் நாளின்போது மனம். பிறகுதான் எல்லாப் பிசகும் நடக்கிறது. பாத்ரூமில் குளிக்கிற போது கழிவுநீர் தங்களுக்கு கீழ் இருக்கும் வீடுகளுக்குள் இறங்குகிறது. வேறு என்ன ஒரே ரப்சர், தகராறு. இப்படித்தான் துவங்கியது பலருக்கும் புகலிட வாழ்க்கை. அதிலேயும் சண்டையும் வம்பும் தும்புமாக கிடைக்கயிலே இங்க எதுக்கு கிடந்து சாகனும், பேசாம கப்பல் ஏறுங்க. செத்தாலும் அங்கினயே கிடந்து சாவோம் எனும் நினைப்பு வரும்போதெல்லாம் பலருக்கு அவர்கள் வீட்டு பெண்களின் குரல் கேட்கத் துவங்குகிறது. வெளிநாட்டுக்கு போகயிலே நல்ல கோட்டு தைச்சு எடுத்துப் போகிறார்கள். போனவுடன் டிசைன் டிசைனா போட்டோ எடுத்து அனுப்பனும். இதுவும் கூட. அந்தந்த வீட்டுப் பெண்களின் ஆசைதான். அது எதுவும் நடக்கல. கோட்டுகள் எதன் குறியீடாகவோ பல ரூம்களில் இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்கிறது.
ஞாபகம் திறந்து கொள்ள பயணித்து, பயணித்து திரும்புவது எல்லோருக்கும்தான் நடக்கிறது. இங்கே பாரிஸில் மேற்கூரை கண்ணாடி வழியே விரிந்து வெளியேறும் நினைவு தன்னுடைய வாழ்விடத்தில்தான் போய் விழுகிறது. கூத்தும்,களிப்புமாகக் கிடந்த காட்சிகள் சித்திரங்களாக மன அரங்கினில் விரிகிறது. அதிலும் மனிதர்களுக்கு தூஷனங்களின் மீது இருக்கும் காதல் தனித்து எழுதப்பட வேண்டியது. அதனை எழுத்தாளர் வியோந்தம்மான் எனும் பகடித்தே வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனிதரின் வாழ்வினைக் காட்டுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார். வியந்தோம்மான் மாதிரியான ஆட்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். உடல் அலுப்பு மிகுதியாகும் வேலைகளின் போது கெட்ட வார்த்தை கதைகளைப் பேசுவதும்,அதற்கேயான சங்கேத மொழிகளை உருவாக்கி வைத்திருப்பதையும் தனித்து தொகுக்க வேண்டும் என்பதையே அம்மான் சொல்லும் கதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. சட்டென ஒரு புள்ளியில் சிரிப்பாணி கரைந்து சோகம் அப்பி தலைகவிழ்வதும் கூட நடக்கிறது. அம்மான் கூரை வேய்வதில் மகா கெட்டிக்காரர். பாரிஸின் கருக்கிருட்டு அறையில் அம்மானின் நினைவு கிளர்கிறது. நாளை எனக்கு புதிய பெயர் சூட்டப் போகிறார்கள். என் பெயர் அகதி. இங்கே எங்களுக்கென தனிக்கூரையுமில்லை. அதனை வேய்ந்து தர அம்மானுமில்லை…
இப்படி புத்தகம் முழுக்க சிரித்துக் களிக்கும் புள்ளிகள் உடைந்து அழுகையும் துயரமும் கொப்பளிக்கும் இடங்கள் வாசகனை வேறு ஒரு இடத்திற்கு நகர்த்துகின்றன. அகதியென பதியப் போகும் இடத்தில் என்னிடம் குறைவாக பணம் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. அப்படிச்சொன்னால் மீதப்பணத்தைக் கட்டிடச் சொல்லி நிர்பந்திப்பார்கள். என்னிடம் பணம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது பாரிஸில் சக தமிழர்களால் தரப்படும் முதல் பயிற்சி. இதனை மேலோட்டமாக கற்ற மனுஷன்தான் தட்சூன். பிரெஞ்சு அலுவலக விசாரணையில். உங்க ஊர் எது? பணம் இல்லை. உங்க பெயர் என்ன? பணம் இல்லை. உங்க அப்பா பெயர் என்ன?. தட்சூன் அளிக்கும் அதே பதில் பணம் இல்லை. நிஜத்தில் அவர் பெயர் கூட. தட்சூன் இல்லை. மாணிக்கவாசகர் எனும் பெயர் பிரெஞ்சு அதிகாரிகளின் வாய்க்குள் நுழையாததால் தட்சூன் ஆகிவிட்டார். தட்சூன் எனும் பெயர் ஸ்டைலாக இருப்பதால்,அதுவே அவரின் பெயராக நிலைத்தும் விட்டது.
யாழ்ப்பாணம் நகர வாழ்வில் இருந்து வந்தவர்களுக்கு பிரான்ஸின் கலாச்சார வாழ்க்கை அதிர்ச்சியூட்டக்கூடியதாகவே இருக்கிறது. பெயர் பதிவதற்கான மெத்ரோ பயணங்கள் இங்கே பலருக்கு புதிய உலகை திறக்கிறது. தனித்து பயணித்து தங்கள் சிக்கல்களைக் களைகிற ஆற்றலும் கூட வந்துவிடுகிறது. அதிலும் மெத்ரோக்களில் நகரும் காட்சிகளை ரகஸியமாக கவனிக்கும் பேராவலும் கூட உடன் வருகிறது. அருளானந்தர் நினைத்துக் கொள்கிறார். ஆத்துமாவோ பெலனானது. சரீரமோ பலவீனமானது. அதனால் மெத்ரோ பயணங்களின் போது ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்கிற போதும், கட்டித் தழுவுகிற போதும் ஒருபால் சேர்க்கையினரை கண்ணுறும் போதும் முதலில் ஏற்பட்ட கலாச்சாரம் குறித்த அச்சம் பிறகான நாட்களில் ஏற்படுவதேயில்லை.
அப்போதெல்லாம் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் புகலிடத்தில் எல்லரும் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனர். எல்லாம் சில நாட்களுக்குத்தான் சண்டை எப்படியும் முடிவுக்கு வந்துவிடும். நாம ஊருக்குப் போயிரலாம். பொடியங்கள் அடிச்சு மேலேறி வந்துக்கிட்டுத்தான் இருக்கினம்.. எப்படியும் வெற்றி கிட்டும். கொஞ்சம் பணம் சேர்ந்ததும் ஊருக்குப் போறேன். இயக்கத்தில குதிக்கிறேன்…இப்படி குரல்கள் விதவிதமாக கேட்டபடியேதான் இருக்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டலைந்த எவரும் புகலிடத்தினை விட்டு போன பாடில்லை என்கிற கசப்பான உண்மையையும் கூட பத்திக்குள் பதிவு செய்கிறார் செல்வம். ஊர் போய்ச் சேரும் விருப்பம் எல்லோரின் மனதிலும் முளைவிட்ட படியேதான் இருக்கிறது. பொடியன்கள் தயாராகிவிட்டார்கள்.சண்டை முடிந்துவிடும். என்பதுகளின் துவக்கத்தில் மனம் கேட்கத் துவங்கிய கேள்வி?. எந்தச் சண்டை. எப்போது முடியும் என்பதே.
பாரீஸிற்கு வந்து சேர்ந்த நாள் முதல் தினசரிகளை கடத்திட பெரும் பாடு பட வேண்டியிருந்தது. அதிலும் வேலை தேடி அலைவதும்,வேலை கிடைப்பதும் பெரிய துயரும் வலியும் கொண்டதாக இருந்தது. யாழ்ப்பாணத்தாள்கள் அடிக்கடி தங்களுக்குள் நினைத்துக் கொள்வது எல்லாப் பயலும் வந்துட்டான். பேசாம வேறு இடம் போயிர வேண்டியதுதான் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் சிலர் ரோமிற்கும்,கனாடாவிற்கும் பாரீஸை விட்டு இடம் பெயர்கிறார்கள். ஒரே நாடு,ஒரே ஊர்,ஒரே மதம் இருந்தாலும் இவுனுகள்லாம் வந்துட்டாய்ங்க,நாம வேற இடம் பார்க்க வேண்டியதுதான் என நிவேறு எந்தக் காரணமும் இல்லை. ஜாதி மட்டுமே. ஜாதியை தன் நெஞ்சில் இருந்து இறக்க முடியாமல் தடுமாறிக்கிடக்கிறது தமிழ்க்குடி. இத்தனைக்கும் அங்கே தமிழர்கள் செய்யும் வேலை இதுதான். ஹோட்டல்களில் பிளேட் கழுவுவது. ஏர்போர்ட்களில் கிளினிங். அல்லது வீட்டு வேலைகள் செய்வது. இதற்கே அரிக்கும் சாதிய வன்மத்தை அகற்ற முடியவில்லை தமிழர்களால்.
மனிதர்கள் சாப்பிட உறங்கத்தானே வாழ்கிறோம். உணவு குறித்த ஒவ்வாமை. சாப்பிடுகிற முறை குறித்த குழப்பங்கள். இவையெல்லாம் புகலிடத்தில் மனிதர்களைத் தடுமாறச் செய்கிறது. சாப்பிட மனம் ஒப்பாத போதெல்லாம் பேசாம ஊருக்கே போயிருவோம். பொடியங்கள் எப்பிடியும் போரை முடிவுக்கு கொண்டு வந்துருவாங்க என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் அழகும் கனிவும் கொண்ட பெண்கள் அமைந்துவிட்டால் போதும்,எல்லாம் சரியாகிவிடும். மொப்வாளி தூக்கி அலைகிற மனுஷர்களைப் பார்த்து வெரிகுட், வெரிகுட் எனச் சொல்லும் பேரழகிகளே அகதிகளை நிலத்தில் இறுத்தி வைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிலும் பாரீஸ் நகரத்துக் குடிக்கதைகள் சொல்லித் தீர்க்க முடியாததாகத்தான் இருக்கின்றன. அதுவரை பார்த்திராத வண்ணப் போத்தல்களால் ஈர்க்கப்பட்டே தமிழர்கள் குடிக்குள் வீழ்கிறார்கள். குடிப்பதற்கு இங்கே ஒருநூறு காரணங்களை எல்லோரும் சொல்கிறார்கள். இன்னைக்கு அடிச்சு துவைச்சுர வேண்டியதுதான் என நினைக்கும் மனிதர்களாகட்டும். மலையகத் தமிழரோடெல்லாம் குடிக்கும் படியா ஆகிப் போச்சே நம்ம பொழைப்பு என புலம்பும் யாழ்பாணத்தாரகட்டும். பெரும்போர் நிகழப் போகிறது குடிப்போம் என்றலைகிறார்கள்.
தெருவில் நின்று ஆண்களை அழைக்கும் பெண்கள் எதிர்ப்படும் போது முதலில் தடுமாறுகிறது மனம். மனதிற்குள் சொல்லிக் கொள்கிறார்கள் எவ்வளவு சிக்கல் இருந்தாலும் நம்ம ஊரில எல்லாம் இப்பிடிக் கிடையாது. கலாச்சார சீரழிவுகள் அற்றது நம்ம ஊரு என நினைக்கிறார்கள். ஆனாலூம் ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் முகவரி தேடி அலையும் போது தெருவில் தென்படும் சிறுவன் சொல்கிறான். பொடியன்கள் ஊரில எம்புட்டு பாடு படுறாங்க. துட்டு இருந்தா ஊருக்கு அனுப்பி வையுங்கள். இப்பிடி கெட்டுச் சீரழியாதீங்க என்கிறான். பாரீஸ் நகரத்துக் காட்சிப் படலம் எனும் பகுதி மிகவும் முக்கியமான பத்தியாக இருக்கிறது.
எழுபதிற்கும், என்பத்தைந்திற்கும் இடையில் நடந்த காட்சிப்பதிவுகள் அவை. குட்டிமணி,தங்கத்துரை மீதான தூக்குத்தன்டனையை ரத்து செய்யக் கோரி பெரும் போராட்டங்கள் புகலிடத்தில் நடந்திருக்கின்றன. சாத்தியமான வகைகளில் போராட்டம் நடந்திருக்கிறது. நடா எனும் மரபபான கொம்யூனிஸ்ட் வெளிப்படும் இடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 83 கலவரத்திற்குப் பலி தீர்க்க தன்னை தேடி வந்த சிங்களச் சிறுவனை குத்தி மல்லாத்துகிறது இனவெறி. அப்போது நடா என்னும் கொம்யூனிஸ்ட்டின் மனநிலையும்,செயல்பாடும் நமக்கு பல்வேறு அர்த்தங்களைத் தருகிறது.
நடா அண்ணன் சட்டையைக் கழற்றுகிறார். என்னையக் குத்துங்கடே, என்னையக் குத்துங்கடே என நெஞ்சைத் திறக்கிறார். கொள்கைப்பற்றுடன் வாழ்ந்த மரபான கம்யூனிஸ்ட் அவர். ரோட்டில் தலை தெறிக்க ஒடுகிறார். “”எனக்கு ஈழமும் வேண்டாம்,கம்யூனிஸ்ட்டும் வேண்டாம் என தலை தெறிக்க ரோட்டில் ஒடிக்கொண்டேயிருக்கிறார். அப்போது ஒடத்துவங்கிய நடா அண்ணன் போன்றோரின் கால்கள் எல்லாம் முடிந்து போன இந்த துயரக்காலத்திலும் கூட நின்றபாடில்லை.
1983 கலவரத்தில் யாழ்ப்பாணம் தீயில் எரிகிறது எனும் செய்தி பாரீஸில் கசியத் துவங்கிய பிறகு பெரும் கலவரம் நிகழ்கிறது. எதிர்ப்படும் இளைஞனை நீ சிங்களவனா எனக் கேட்டு,கேட்டு அடித்து துவம்சம் செய்கிறார்கள். அப்போது எதிர்ப்படும் அயர்லாந்து சிறுவன் கேட்கும் கேள்வி வாசித்துக் கடந்த பிறகும் கடக்க முடியாத கேள்வியாக நீடித்தே இருக்கிறது. அவன் சொல்கிறான் சிங்களவர்கள் என்றால் தோற்றத்தால்,செயலில் ஐரோப்பியர் போல இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்களும் உங்களைப் போலத்தானே இருக்கிறார்கள். பிறகு எதற்கு இத்தனை பகையும்,வன்மும்.. இது போலான துயர நாட்களைக் கடந்திடத்தான் நிற்கவே நிற்காமல் உலகெங்கும் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
பயணங்கள் வாழ்வை கற்றுக்கொள்ள புதிய புதித பாதைகளை திறக்கின்றன. பாரிஸ் அலுப்பூட்டும் போது ரோமிற்கு பயணிக்கிறார்கள். ரோம் பயணம் நிகழ்கிற ரயிலில் தமிழர்கள் உட்கார்ந்து பயணிக்க முடியாது. பயணச்சீட்டு இல்லை. ரோம் போக ஒரிஜினல் விசா இல்லை. ரயில் சீட்டுக்கு அடியில் பயணித்தே கடக்க வேண்டும். அதிலும் காலை மடகௌகி ஒடுக்கி சீட்டிற்கு அடியில் படுத்து பயணிப்பதும்,போலிஸில் சிக்கி சித்திரவதை அனுபவிக்கும் போது கூட மலைகளையும் மலர்களையும் ரசித்துக் கடக்கும் மனம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடம்தான் ஈழமே தவிர ரசனை சினிமா ஈடுபாடு என யாவற்றிலும் தமிழ்நிலத்தின் சாயல் படிந்துதான் இருக்கிறது. இங்கே எப்போதும் கொண்டாட்டங்களின் போது எம்.ஜி.ஆரின் பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. துயரத்திலிருந்து விடுதலை பெற்றிடும் ஒற்றைக்கருவியாக கலையே அங்கு யாவருக்கும் கைவசமாகியிருக்கிறது. அதனால்தான் மாலைநேரக் கொண்டாட்டங்களின் போது றிச் கேக்கும் அரிச்சந்திர மயான கண்டத்தின் காட்சிகளும் இங்கே விளம்பப்படுகிறது.
அகதிகள் வாழ்வில் சில பயணங்கள் அச்சமூட்டுபவையாக அமைந்துவிடுகின்றன. அதிலும் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். புகலிடத்தில் எனக்கு எந்த சிக்கலுமில்லை என்பதை நிருபிக்க பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. ஒரு திருமணத்தின் போதான வீடியோ கேசட் ஒளிபரப்பினால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணமே நின்றுவிடுகிறது. பாரீஸில் நிகழ்ந்த திருமணக்கொண்டாட்ட நிகழ்வு வீடியோ கேசட்டாக ஈழம் பறக்கிறது. ஆட்டம் பபாட்டம் கொண்டாட்டமாக நடந்தேறிய திருமணம் அது. வீடு வீடாக தரமுடியாது என்பதால் டெக்கை வாடகைக்கு எடுத்து ஒரே இடத்தில் ஒளிபரப்பி எல்லோருமே பார்க்கிறார்கள். பிறகென்ன. நடக்க இருந்த கல்யாணம் தடைப்பட்டது மட்டுமே மிச்சம். என்னதான் புரட்சி பேசிக் கொண்டு திரிந்தவர்கள் என்றாலும் இருபது தடியன்கள் தனித்திருக்கும் அறையில் ஒரு பெண் வந்து குடியேறுவதும் ரூமை பங்கிட்டு கொள்வதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வமானவை. ஒரு பெண்ணின் வருகை எப்படியெல்லாம் நிலையை தலைகீழாக மாற்றும் என்பதையும் பத்தி நமக்கு உணர்த்துகிறது. இயக்கப் பொடியன் மாரை அடித்ததிற்காக தப்பிப்பிழைத்து பிரெஞ்சு தேசம் வந்தவர் செல்வராசு. ஆனால் இங்கே தெருவோரத்தில் விளம்பர நோட்டிஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறான். அங்கேயும் கூட காதல் துளிர்க்கிறது. பொதுவாக தமிழர்கள் சுத்தபத்தம் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்கள். அதனால்தான் நான் பெருமை கொள்கிற மனிதனாக இருப்பதற்காக காதலை பலியிடுகிறார்கள். என்ன இருந்தாலும் அந்நிய தேசத்து ஆளுல்ல என்று விலகி தனிகிறார்கள்.
போர் சூழல் உருவாக்கிய துயரத்தைக் கடந்திட மனிதர்காள் பட்ட அவஸ்தையை பகடியாக கடத்தும் இந்த நூலிற்குள் விதிவிலக்கான பத்தி அழுகை எனும் பத்தி. ஓடும் பேருந்தில் தனித்து கதறி அழுது கொண்டிருக்கும் துயரச் சித்திரம் வெகு நாட்களுக்குப் பிறகும் கூட எழுத்தாளனை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. தம்பி ஏனடா அழுகிறாய் எனக் கேட்ட போது. அண்ணன் இயக்கத்துக்குப் போயிட்டான். நானாவது தப்பிப்பிழைத்து உயிரோடு இருக்கட்டும் என என் அம்மாதான் என்னை கஷ்டப்படுத்தி இங்கே அனுப்பி வைத்தாள். ஆமிக்கேம்பில் இருந்த செல் அடிச்சு அம்மை இறந்திட்டாள். அவள் இறந்து மூனுநாளு கழிச்சுத்தான் செய்தியே இங்கு வந்தது எனக் கதறுகிறான்.
இப்படி எத்தனை துயரங்கள். தாயகத்தில் உறவுகள் இறந்த செய்தி புலம் பெயர் நாடுகளுக்குப் பல வாரங்கள் கழித்து வருவதும். ஐரோப்பாவில் எல்லைகளைத் தான்டும் போது பெயர் தெரியாத நாடுகளின் சிறைச்சாலைகளில் இறந்த பிறகான ஆண்டு பலவாக. அந்தச் செய்தி தாயகம் அடையாமல் இருப்பதும் எவ்வளவு பெரிய துயரம். எங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வாழ்வு ஏன் இத்தனை துயரமாக இருக்கிறது என்பதே புத்தகத்தை வாசித்து முடித்த பிறகும் கூட நீண்ட நாட்கள் நமக்குள் ஓடிக் கொண்டேயிருக்கிறது..
(காலச்சுவடு பதிப்பித்திருக்கும் செல்வம் அருளானந்தத்தின் எழுதித் தீராப் பக்கங்கள் எனும் நூலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்…)
பிரியங்களுடன்
ம.மணிமாறன்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவில் நகரும் புல்லின் நிழல்) 19 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (மீந்தவர்களின் சொல்) 20 – மணிமாறன்