பாசதீபங்கள் சிறுகதை – ச. லிங்கராசு

பாசதீபங்கள் சிறுகதை – ச. லிங்கராசு




சில்லெனக் குளிர்காற்று முகத்தில் அறைய, அதைப் பொருட்படுத்தாது வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான் செழியன். வளைவுகளைச் சீராகக்கடந்த அந்த இருசக்கர வாகனம் தன்கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருந்ததது. வண்டியின் வேகத்தைவிட அவன் மனதின் வேகம் அதிகமாக இருந்தது.’ இன்று எப்படியாவது மலரிடம் பேசி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிவிடவேண்டும்’ மனதோடு பேசிக்கொண்டான் செழியன்.

செழியன், ஒன்றிய அரசின் அலுவலகத்தின் இளநிலை எழுத்தராகப் பணிபுரிபவன். மலர் சுமாரான தோற்றத்தில் அறிவாற்றல் கொண்ட பெண். வாசிப்பு அவளை
முற்போக்கான சிந்தனை கொண்ட பெண்ணாக மாற்றி இருந்தது. அவளுடைய அணுகுமுறை, பேச்சு, வேலையின் மீது அவளுக்கிருந்த அக்கறை, நல்ல இரசனை இவையெல்லாமே செழியனை ஈர்த்தது.

மலைவாசஸ்தலத்தில் அமைந்திருந்த ஒன்றிய அரசின் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த மலர்,ஆரம்பத்தில் தானுண்டு தன்வேலை
என்றிருந்தவள் நாளடைவில் எல்லோருடனும் சகஜமாகப்பழக ஆரம்பித்திருந்தாள்.

மலர் பிறந்து ஒருவருடத்திற்குள் தாயின் அரவணைப்பையும் பாசத்தையும் இழந்தாள். உடன்பிறந்த அக்கா அன்னையானாள். தந்தையையும் பிரிந்து ஒருவருடம்
ஓடிவிட்டது. இந்த அலுவலகத்தில் பணியிலிருந்தபோது அவர் மறைந்ததால் கருணை அடிப்படையில் மலருக்கு இளநிலை எழுத்தர் வேலை கிடைத்து.
உடன்பிறந்த அண்ணன் அண்ணியுடன் ஐக்கியமாகி வெகு நாட்களாகிவிட்டது.

தந்தை இரு பெண்களையும் கண்களாய் நினைத்தவர்.இரண்டு பெண்களுக்குமே அவர் நல்ல வசதிகளை ஏற்படுத்திவிட்டுத் தான் மறைந்தார்.
அக்காவும் தங்கையும் பாசமலர்களாய்த் திகழ்ந்தார்கள். மலரின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரக்கதையா? செழியன் இதை எல்லாம் கேள்விப்பட்டதும் மலர்
மீது அனுதாபம் கொண்டான்.

காலம் மலரையும் செழியனையும் நண்பர்களாக்கியது. ஆனால் அலுவலகமோ அவர்களை வழக்கமான பார்வையில் வைத்திருந்தது. நண்பர்களைக் காதலராக்கிப் பார்ப்பதும், காதலர்களைக் கணவன் மனைவியாக் கிப்பார்ப்பதும் அலுவலக உலகத்திற்குக் கைவந்தநிலையாயிற்றே!

பரஸ்பரம் தங்களின் வாழ்வியல், வாசிப்பு, இசை ரசனையைப் பற்றிப் பேசியவர்கள், திருமணம் என்ற வாழ்கையில் கடந்து போகமுடியாத முக்கிய விடயத்தில் வந்துநின்றார்கள். செழியனே இதை ஆரம்பித்து வைத்தான்.ஒரு வாரம் வரை இந்த பேச்சு நடந்துகொண்டு இருந்தது. அலுவலகம் அருகே வந்ததும் வண்டியின் வேகத்தைக்  கட்டுப்படுத்திய செழியன் அதைச் சாந்தப்படுத்தி நிறுத்திவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றான். அலுவலகம் களைக்கட்ட ஆரம்பித்திருந்தது.
மதிய உணவுக்குப்பின் மலரிடம் பொதுவான சில விசயங்களைப் பேசிய செழியன், முக்கியமான விசயத்திற்கு வந்தான்.

” என்ன மலர் இந்த ஒருவாரமா நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பிடிகொடுக்காமல் இருக்கிறீர்கள்? நானும் என்மனைவி தமிழரசியும் இரவு வெகுநேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம், அவள் தம்பி புகழுக்கு உங்களைப் பேசி முடிக்கலாமென்று……” அவன் முடிக்கவில்லை.

“எனக்கு இந்த திருமணம் பத்திலெல்லாம் எந்த கனவும் இல்லே ஆர்வமும் இல்லே இதைபத்திஎல்லாம் நீங்க வலைப்படாதீர்கள் செழியன்” என்று சிரத்தையின்றி பதில்சொன்னாள் மலர்.

” என்சிங்க உங்கள் உண்மையான நண்பனா நலம்விரும்பியா இதை நான் செய்யக்கூடாதா”

செழியனின் குரலிலிருந்த பவ்வியம் மலரை ஏதோசெய்தது. அதைச் சரிசெய்யும் நோக்கில் மலர், “என்  உடன்பிறந்தவன் கூட  இதையெல்லாம் நினைக்காதபோது நீங்கள் சிரத்தை எடுப்பதைப் பார்த்து நிறையப் பெருமைப்படுகிறேன் செழியன் ஆனால்……..”

“என்ன ஆனால்…அக்காவைப் பற்றி கவலைப்படுகிறீர்களா…நல்ல ஒரு கருணை இல்லத்தில் அக்காவை………..”

“நிறுத்துங்கள் செழியன்” மலரின் குரல் ஓங்கியது. அனைவரும் திருப்பிப் பார்த்தார்கள். செழியன் அதிர்ச்சியடைந்தான்.  மலர் இப்படிக் குரலுயர்த்திப் பார்த்ததில்லை. மலர் தாழ்ந்த குரலில், ஆனால் தீர்க்கமாகச் சொன்னாள்.

“என் அக்காவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் செழியன்?  அவள் எனக்குத் தாயானவள். இரண்டு வயதில் நான் தாயை இழந்தபோது, அக்கா தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே தூக்கி எறிந்துவிட்டு என்னைத்தான் பறாதகுழந்தையாய் ஏற்றுக்கொண்டு இன்றுவரை பாசத்தைத் தந்துகொண்டிருக்கிறாள்.  பொதுவாக வயதானவர்கள் குழந்தைக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்தக் குழந்தையைத் தவிக்கும்படி செய்துவிட்டு நான் மணவாழ்க்கையைப் பற்றி நினைக்கமுடியுமா? அப்படி நினைத்தால் நான் உடன் பிறந்தவளாக இருக்கமுடியாது.
கடைசிவரை எனக்காக அவள் அவளுக்காக நான்……என்னை மன்னியுங்கள் செழியன்

செழியன் திக்பிரமைகொண்டவனாய் மலரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.