சம ஊதியம் கவிதை – சக்தி ராணி

சம ஊதியம் கவிதை – சக்தி ராணி




பகல் வெளிச்சம் வரும் முன்னே…இரவின் இருளில் எழுந்தாச்சு…

கதிரவனும் கதிர் விரிக்க…ஆக்கி சமைச்சு…கிளம்பியாச்சு…
கால் வயிறு நிரம்பலையே…
கொஞ்சம் குடிச்ச கஞ்சிக்குந்தான்…

வயிறு நிரம்ப காத்திருக்க…
காலமும் வகை செய்யலேயே…

கால் நோக…தூரத்தொலவு
நடந்த பின்னும்…சேரும் இடம்
வரவில்லை…நொடி வேகம்
சென்று சேர…ஊர்தி வசதியும்
வாய்க்கலையே…

ஒருவழியா…வந்த பின்னும்…
வேலை வாங்க காத்திருக்க…

மேஸ்திரியும்…வந்திருந்த
வேலையெல்லாம் ஒவ்வொன்னா
வகை பிரிக்க…

கிடைச்ச வேளையில்…மனமுவந்து
கல் சுமந்து போகையில…

என்னோட…வயதொத்த
ஆண் மகனும்…என்னைப்போல
கல் சுமக்க…சுமந்த பாரம்
மனம் கொள்ள விரும்பாம…
அப்பப்போ பேசிக்கொள்ள…

நேரப்பொழுது…போர போக்கில்
கதிரவனைக்கூட்டிச் செல்ல…
மாலை வேளை…உற்சாகமாய்
ஊதியமும் கைக்கு வர…

வந்த பணமும் எண்ணி எண்ணி
சேலைக்குள்ள…முடிஞ்சுக்கையில்…
கூடப் பேசிய ஆண்மகனின்…
கையில தான் …அதிகமான
ஊதியமும் தவழ்ந்து வர…

என்ன ஏதுன்னு…விசாரிக்க
பேச்சு மொழி பேசுகையில்…
அப்புறமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்…

ஒன்னா வேலை செஞ்சாலும்…
ஆம்பளைங்க வேலைப்பளு…
ஊதியம் எப்போதும் அதிகமென…

– சக்தி ராணி