நூல் அறிமுகம்: இரா. கவியரசுவின் *நாளை காணாமல் போகிறவர்* – மா. காளிதாஸ்
நாளை காணாமல் போகிறவர்
இரா. கவியரசு
தேநீர் பதிப்பகம்
₹110
எல்லாவற்றுக்கும் நமக்கு சொற்களின் தயவு தேவையாய் இருக்கிறது. இனிப்பாக இருக்கிறதென வாயில் போட, ருசிக்குப் பழகிய நாம், துப்ப மனமின்றி சூயிங்கம்மைப் போல மென்று கொண்டே இருக்கிறோம் சொற்களை. துப்பிய பின்னும் சொற்களின் பிசுபிசுப்பு நெடுங்காலத்துக்கு ஒட்டியிருக்கிறது என்பதை உணரத் தவறுகிறோம்.
எதுவுமே பேசாமல் இருக்கிறவனின் அமைதியைக் குத்தகைக்கு எடுத்தால், அல்ல முடியாத அளவு, யாரோ வீசிய சொற்கள் அல்லது யாரை நோக்கியோ வீசப்பட வேண்டிய சொற்கள், அவன் மனக்குளத்தில் தேங்கிக் கிடப்பதை அறியலாம்.
ஊறப் போட்டு விதைத்தால் கூட முளைப்பதில்லை பொக்கான சொற்கள். லேசாகத் தெளிக்கும் ஈரம் போதும் வீரியமான சொற்களுக்கு. விழித்திருக்கும் போது நாம் தூங்கவிடாத சொற்கள், நாம் தூங்கும் போது உலவிக் கொண்டே இருக்கின்றன. கல்லென்று நினைத்து நாம் எடுப்பதெல்லாம் சொல். கள்ளென்று நினைத்து நாம் குடிப்பதெல்லாம் சொல்.
சொற்களின் காடு பரந்து விரிந்தது. பழகாத வரை பயம் தரக்கூடியது. பழகிவிட்டால் பயன் தரக்கூடியது. சொற்களுக்கு ஒரே சுவை தான். திராட்சையாக, உலர்திராட்சையாக, திராட்சைரசமாக ருசி வேறுபாடு கொள்வது நம் மனநாக்கு தான். சொற்களுக்குள் தொலைந்து போவது போன்ற சுகம் வேறொன்றுமில்லை கலைஞனுக்கு. தன் வாழ்வின் பெரும்பகுதியைத் தெரிந்தே தொலைவதற்கு ஒப்புக் கொடுக்கிறான். சொற்களுக்குள் தொலைபவனை சொற்களே மீட்டு வந்து கரை சேர்க்கிறது.
“நாளை காணாமல் போகிறவரோடு” கலந்துரையாடிக் கொண்டே வெகுதூரம் வந்தபின் திரும்பிப் பார்த்தபோது, நானும் காணாமல் போயிருந்தேன்.
“ஒரு ‘அ’ எழுதினால் போதாதா
இவ்வளவு பெரிய கவிதைகள்
தேவை தானா?”
என்கிற கேள்வி ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
‘அ’ என்பது வெறும் உயிரெழுத்தா, எல்லாவற்றுக்குமான தொடக்கமா, அஞ்சலியா, அமைதியா, அன்பா, அடுக்கி வைக்கப்பட்ட சொல்லை ஆவேசமாகக் கலைத்த அலையா?
“அவனுக்கு கடல் மட்டுமே தெரியும்” என அழுத்தி அழுத்தி உச்சரிப்பது அவனுக்கு கடலே தெரியும், கடலின் ஆழம் தெரியும், ஆரவாரம் தெரியும், அமைதி தெரியும், உள்வாங்கவும் தெரியும், வெளியேறவும் தெரியும். கரையில் நின்று காற்று வாங்குகிற, காதல் செய்கிற, வேடிக்கை பார்க்கிற உனக்கு கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கும் ஆயிரம் கதைகள் தெரியுமா, துடுப்பு வழிக்கத் தெரியுமா, துப்பாக்கிச் சூடு தெரியுமா? உன்னைப் பொறுத்து உதயமும் அஸ்தமனமும் சூரியனின் அழகு வடிவங்கள். கடல் தெரிந்தவனுக்குத் தான் அது வாழ்வின், மரணத்தின் படிநிலை என்பது புலப்படும் என்கிறார்.
பனை என்பது மரம் மட்டுமே, நுங்கு மட்டுமே என அறிந்திருக்கும் இக்காலத் தலைமுறைக்கு, அதன் நுனி முதல் வேர் வரை ஒரு பாகம் கூட வீணாவதில்லை என்கிற சிறப்பை வரிக்கு வரி உணர்த்துவதோடு, அந்த தொப்பூழ்க்கொடியை அறுத்துவிடத் துணியும் கார்ப்பரேட் உலகையும், சாலை விரிவாக்கம், நகரமயமாக்கம், தொழில் கட்டமைப்பு என்கிற பெயரில் பனை போன்ற எத்தனை மகத்துவங்களைப் பொத்திப் பாதுகாக்க முடியாமல் நாம் இழந்து வருகிறோம் எனக் காட்சிப்படுத்தும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது.
இதே நவீன உலகின் நுகர்வுக் கலாச்சாரத்தை வேறொரு பரிமாணத்தில் காட்டும் “மாடலிங் மனிதனின்” அசைவுகள் ஒவ்வொன்றும் அங்ககீனம் செய்கின்றன.
“நினைவில் யாரையாவது
புணர்ந்து கொண்டே நடந்து செல்
உடல் எழுச்சியுடன் இருக்கும்
பார்வையாளர்கள் அசந்து
போவார்கள்.”
வெறுமனே உள்ளாடைக்கான விளம்பரத்தைப் பகடி செய்வதாக மட்டும் அவ்வளவு எளிதாக இதைக் கடந்து போய்விட முடியாது. இங்கே உள்ளாடையாகக் காட்சிப்படுத்தப்படுவது எது? புணர்தல் எது? உணர்தல் எது? மயக்கத்திலேயே வைத்திருக்கச் செய்வதன்வழி தனக்கான லட்சியத்தை நோக்கி நகரும் ஆபாச அரசியல் என ஒவ்வொன்றாய்க் கண்முன் விரிகிறது.
“மது நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு” என்று சொல்லிக் கொண்டே முக்குமுக்கு மதுக்கடைகளைத் திறந்து வைத்து, உள்ளாடை தெரிய தெருவில் மயங்கிக் கிடப்பவனுக்கும், உள்ளாடையோடு மட்டும் வருகிற ஆஜானுபாகுவான உடலைக் கண்டு மயங்கிக் கிடப்பவர்களுக்கும் பெரிதாக என்ன வித்தியாசம்?
“முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையிலிருந்து பூ உதிர்கிறது
தாங்க முடியவில்லை”
என்ற கல்யாண்ஜியின் கவிதை தான் நினைவுக்கு வந்தது கவியரசுவின் “திரும்பி அமர்ந்திருப்பவள்” கவிதையைப் படித்த போது.
முகம் தெரியாத பெண்ணொருத்தியின் தலையிலிருந்து பூ உதிர்கிறதென்றால் முன் அமர்ந்திருப்பவள் யார்? இளம்பெண்ணா? மடியில் காதலனைக் கிடத்தியிருப்பவளா? அவன் கொஞ்சலால் தலையிலிருந்து பூ உதிர்கிறதா? தாங்க முடியாத மன அழுத்தத்தில் இருப்பவள் தன்னையும் மீறி விம்மும் போது பூ உதிர்கிறதா? பால் கட்டிக் கொண்ட மார்பைக் குழந்தை கடித்ததும் வலி பொறுக்காது தலையை நிமிர்த்துகையில் உதிரும் பூவா? கிளை விரித்துக் கொண்டே போகிறது கவிதை. முதுகைக் காட்டி அமர்ந்திருப்பவளின் நிர்வாண ஓவியமும் இதே உணர்வுகளையே கிளர்த்துவதாகத் தோன்றுகிறது.
“ஆப்பிளை உருட்டி
அவளைத் திரும்புமாறு
அழைக்கிறீர்கள்.”
என்கிற போது, ஏமாற்றப்பட்ட ஏவாளின் முதுகு தெரிகிறது. எப்படி யோசித்தாலும் பெண் என்பவள் வெறும் சதைப்பிண்டமாகவே கண்ணுக்குத் தெரிபவர்கள் முன், வெட்கத்தால் குறுகுதல், இழுத்துப் போர்த்துதல், ஒதுங்கிப்போதல் என்பனவெல்லாம் வெறும் சடங்காகவே தென்படும்.
நாம் எந்த மாதரியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் குத்தூசியால் குத்தித் திரும்பத் திரும்ப நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு நாளையும் நாம் எவ்வாறு கடத்திக் கொண்டிருக்கிறோம், கடந்து போன நாட்கள் நம்மை எந்த இடத்தில் நிறுத்தியிருக்கின்றன, இனிவரும் நாட்களில் நாம் எப்படித் தொலைவோம், இன்றைய நாள் நம்மை என்ன செய்து கொண்டிருக்கிறது என நமக்கு நாமே சுய ஆய்வு செய்து கொள்வதற்கான பரிந்துரையாகவே “முழுமையாக வாழ்ந்துவிட்ட நாள்” கவிதை செதுக்கப்பட்டுள்ளது.
மழை குறித்த “கார்காலம்”, “மழை விற்பவன்” கவிதைகளில், நனைதலும், உலர்தலும், நிரம்புதலும், வடிதலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானவை என்பதைச் சொல்லாமல் சொல்லி நகர்பவர்,
“ஒழுகும் வீடென்பதால்-
எல்லா மழையும்
ஒன்றாகச் சேர்ந்து மூச்சுவிடுகிறது.”
எனும்போது, மழை மூழ்கடித்தல் என்பது எத்தனை பெரிய கொடூரம், அதன் நசநசப்பு எளிய வாழ்வில் மேற்கொள்ளும் வல்லுறவு எத்தகைய தாக்கம் என்பதைக் குடைக்குள் ஒளிந்து கொண்டு கணக்கிட்டுவிட முடியாது.
மழையை ஒரு பொட்டலமாகக் கட்டி விற்க முடிந்தால் இந்த வாழ்வு, எவ்விதமாக மாற்றுருக் கொள்ளும், மழையை வெறுக்க வெறுக்க அல்லது விரும்ப விரும்ப, மழை நம்மோடு எவ்வாறு உறவாடத் தொடங்குகிறது என்பதைக் கவியரசு கூர்ந்து நோக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது.
“மழையை விற்கலாம் என்று
புதிதாகக் கடையைத் திறப்பவன்
எந்தப் புள்ளியிலிருந்து
மழையை அறுப்பதெனத் தெரியாமல்
அதன் பின்னே ஓடிக்கொண்டே
இருக்கிறான்
………………………………………………..
………………………………………………..
கோபத்தில்
கடையைப் பிளக்கும் கூட்டம்
வெறியில் மழையைப்
பச்சையாகக் கடிக்க ஆரம்பிக்கிறது
ஓட்டைப்பற்கள் வழியே தப்பிக்கிறது
மழை.”
இங்கே மழையை மழையாகப் பார்க்காமல், மூச்சு முட்டுமளவு நம் அன்றாட வாழ்வைப் பலவிதங்களில் நெருக்கும் இன்பமாகவும் துன்பமாகவும் உருவகப்படுத்தும் போது வேண்டாமென்று ஒதுக்கினால் கூட இன்பமும் துன்பமும் எவ்வாறெல்லாம் நமக்குள் உழன்று கொண்டே இருக்கின்றன என்கிற கோணமும் வெளிப்படுகிறது.
தலைப்புக் கவிதையான “நாளை காணாமல் போகிறவர்”, பகட்டோடும் படாடோபத்தொடும் உலாத்திக் கொண்டிருந்தவர்களை மட்டுமல்லாது, எளிய மக்களையும் இன்றைய கொரோனா காலகட்டம் எங்கு கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
“சாவு கிராக்கி என்றவன்
அவரை அடிக்கச் சென்ற
கணத்தின் கதவுகளை
உதைக்கிறான்.”
என்ற வரிகள், சாமான்யனின் வங்கிக்கணக்கில் இன்றளவும் வரவு வைக்கப்படாத லட்சங்களின் லட்சணத்தையும், லட்சம் என்றதும் வாய்பிளந்து மல்லாக்க விழுந்துவிடுவோம் என்ற அசட்டு நம்பிக்கையில் அடுத்தடுத்து உதிர்க்கப்படும் வெற்று அறிவிப்புகளையும், நமக்கே தெரியாமல் தலைப்பாகையைப் போல நம் தலையில் சுற்றப்பட்டிருக்கும் லட்சக்கணக்கிலான கடன் தொகையையும்,
“தேநீர், சலூன் கடைகளில்
அவர் உட்கார்ந்த இடங்களில்
மிதக்க ஆரம்பிக்கிறது லட்ச ரூபாய்”
என்ற வரிகளின் வழி, குறிப்பால் உணர்த்தி, போகிறபோக்கில் ஓங்கி அறைந்திருக்கிறார். இங்கே தேநீர்க் கடை என்பதின் பின்னுள்ள அரசியலும் உற்றுநோக்கத் தக்கது.
சொற்கள் நம்மை ஆட்சி செய்யும், அதிகாரம் செலுத்தும், அடக்கி ஆளும், தன் கவர்ச்சியால் திரும்பிப் பார்க்க வைக்கும், நாய்க்குட்டி போல் கூடவே வரும். கொஞ்சுவதற்காகச் சொற்களைத் தோளில் தூக்கிப் போடுவதில் தவறில்லை. விக்கிரமாதித்யனின் பிசாசைப் போல எந்நேரமும் தோளில் சொற்கள் தொங்கும் போது தான் வாழ்க்கை, நம் கனவுகளிலிருந்தும் நனவுகளிலிருந்தும் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுகிறது.
இந்தத் தொகுப்பிலுள்ள “சுவரொட்டி” கவிதை, பல்வேறான உணர்வுகளை எனக்குள் கிளர்த்தியது. சுவர் எது, சுவரொட்டி ஒட்டும் நான் யார், சுவரொட்டியை நின்று நிதானித்து வாசிப்பவர்கள் யார், சுவரொட்டியைத் தின்னும் மாடுகள் எவை, யாருக்காக சுவரொட்டி ஒட்டப்படுகிறது, சுவரொட்டியை ஒட்டிய பிறகு சுவர் என்னவாயிற்று? ஒரு விரும்பத்தக்க அல்லது விரும்பத்தகாத ஒரு சொல், என் மனச்சுவரில் என்னாலோ அல்லது பிறராலோ ஒட்டும்போது அது என்னவெல்லாம் செய்கிறது, ஒருமுறையோடு ஒட்டுவது நின்றுவிடுகிறதா, இங்கு விளம்பரம் செய்யாதீர் என அவ்வளவு எளிதில் நம் மனதில் அச்சுப் பதித்துவிட முடியுமா, அச்சுப் பதித்த பின்னும் வரம்புமீறி ஒட்டப்படும் சொற்களுக்காக எங்கு முறையிடுவது, ஏற்கனவே ஒட்டிக்கொண்ட சொற்களை எவ்வாறு பிய்த்தெறிவது, மாடு மாதிரி சொற்களை அசைபோட்டுக் கொண்டே இருக்கும்படியான சூழல் நமக்குள் எப்படி நிகழ்ந்தது?
காதல், காமம், அரசியல், வஞ்சம், வன்மம், புகழ், பெருமை, பிறப்பு, இறப்பு என எத்தனை விதமான சுவரொட்டிகளைத் தான் எனக்குள் ஒட்டுவீர்கள்? ஒரு பழஞ்சுவராக அல்லது ஒரு புதுச்சுவராக நான் மிளிர வாய்ப்பே இல்லையா?
“கடந்து செல்லும் ஒவ்வொருவரும்
என்னைப் போலவே பூரிப்பார்கள்
என்று
அடுத்தடுத்த சுவரொட்டிகள்
தயார் செய்தேன்.”
என்று கவிஞன் கூறும் போது, சுவரொட்டிகள் என்பவை வெறும் கவனச் சிதறல்கள் மட்டுமா? விளம்பர உத்தி மட்டுமா? என அடுக்கடுக்காகக் கேள்விகள் படிந்து கொண்டே இருக்கின்றன.
“இந்த ஊரில்
ஒரே ஒரு கழிவறை தான் உள்ளதா?
அதுவும் தாழ்ப்பாள் இல்லாததா?”
என்று கவியரசு கேட்கும் போது அவ்வளவு குமட்டுகிறது. நமக்குள் எவ்வளவு கழிவுகள்? எப்படியாவது கழித்தால் போதும். “நாற்றம் ஒன்றே மாறாதது” என்கிற சொல்லாடல்களுக்குள் நாம் சிக்கி வெகுகாலமாகிவிட்டது. நாற்றம் என்றால் நறுமணம் என்ற கற்பிதம் வழக்கொழிந்தே போய்விட்டது. நம் துர்நாற்றத்தை மறைப்பதற்காகத் தாழ்ப்பாள் இல்லாத ஏதாவதொரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறோம்.
நல்லவன், நியாயமானவன், நேர்மையானவன், பழிபாவத்துக்கு அஞ்சுபவன், சொன்ன சொல் தவறாதவன், பிறன்மனை நோக்காதவன் என நமக்கு நாமோ அல்லது பிறரோ மூடி வைத்த கதவின் மீது, வடியட்டுமென்று நாமே உலர்த்தப்போட்ட ஈரத்தால், நாளடைவில் துருவேறி, நம் நிர்வாணமும் துர்நாற்றமும் ஒருநாள் வெளிப்படும்போது அவ்வளவு அருவருப்பாக இருக்கிறது. இருந்தும் கதவுக்குப் பின்னால் வரிசையாக நம் போல் நிற்கும் முகங்களைக் கண்டு ஆற்றாமை அடைகிறோம் என்பதை,
“துர்நாற்றம் தாளாமல்
திரும்பிக் கொள்ளும் கதவுகள்
நாசிகளைப் பிடுங்கி
தங்களுக்குப் பக்கத்திலேயே
நிற்க வைக்கின்றன
வரிசை மாறாமல்.”
எனக் கவிஞன் முடிக்கும் போது நம்மீது அவ்வளவு முடைநாற்றம் அடிக்கிறது.
ஒவ்வொரு தத்துவமும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தத்துவங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கு மட்டுமின்றி, எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவையாக கட்டமைக்கப்பட்டதா, தத்துவ விசாரங்களில் பொருந்தியிருக்கும் அடிப்படை உண்மைகள் வாழ்வோடும் வாழ்வின் எதார்த்தத்தோடும் எந்த அளவு நெருக்கத்தில் உள்ளன, தத்துவத்தின் சாரங்களை சாமான்யன் அவ்வளவு அசட்டையாகக் கடப்பதற்குப் பின்னால் உள்ள நெருக்கடிகள் என்ன, சொல்லப்படாத அல்லது சொல்ல வைக்காத அத்தனை தத்துவங்களோடு உலவிக் கொண்டிருப்பவர்கள் ஞானிகள் பட்டியலில் சேர்வதெப்போது? என்பது ஒருபுறம் இருக்க, சிவப்பு குறித்தோ, புரட்சி குறித்தோ ஐயப்பாடுகளோ, சிந்தனைகளோ எழாதபடி அவை ஒட்டுமொத்தமாக மழுங்கடிக்கப்பட்டிருப்பதும், பழையபடி மன்னராட்சிக்குப் பழக்கும் அடிமை மனோபாவத்திற்கான ஒழுங்கில் பிசிறு தட்டாதபடி நேர்த்தியாகக் கட்டமைக்கப்படும் காரணிகள் குறித்தும் ஓங்கி செவுளில் அறைவது போல் உள்ளது,
“இருளில் மறைநாடகங்களுக்கு
சாட்சியாக ஒத்திகை பார்க்கும்
கணத்தில்
நீ
மிக மெல்லிய தீற்றலாக
மறைந்து போகிறாய்
அல்லது
நாங்களே உன்னை
விரும்பிப் புதைக்கிறோம்
இவ்வளவு சிவப்பாக
இந்த நகரத்துக்கு
நீ தேவையில்லை
சூரியனே!”
என்கிற வரிகள். நகரமயமாக்கமும், கொஞ்சம் தவறினாலும் தன் இடத்தைப் பிடிப்பதில் உள்ள போட்டியைக் கருத்தில் கொண்டு நமக்கென்ன என்று நழுவிச் செல்வதில் காட்டும் முனைப்பும் போராட்ட வடிவங்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி கடக்கும் மனநிலையே வாய்க்கப் பெற்றிருக்கிறோம் என்பது எவ்வளவு அபத்தம்? அதே நேரம்,
“புரட்சியாளரின் உடைகள்
வாடகை என்று நமக்குத் தெரியாது
அவர் சொந்தமாக எதுவுமே
பேசுவது கூட இல்லை.”
என்பதில் உடைகள் என்பதைக் கருத்துகள் எனக் கொண்டால், ஒவ்வொரு புரட்சியாளனுமே கருத்துகளை இந்த சமூகத்தில் இருந்து தானே பெற முடியும்? கருத்துகளை வடிவமைத்துத் தானே அணிந்து கொள்ள முடியும்? சொந்தமாக உடைகள் தைத்துக் கொள்கிற வசதி இருந்தால் அவன் ஏன் புரட்சியாளன் ஆகப் போகிறான்? அப்போதும் அவன் தனக்கான நிர்வாணத்தை மறைக்க உடைமைகளை எவரிடத்தும் பிடுங்கவில்லையே.. வாடகைக்குத் தானே எடுக்கிறான்… அதைப் பகடி செய்வது என்பது, அவன் நிலையைவிடப் பரிதாபமாக இல்லையா?
எவருமே, எதையுமே சொந்தமாகப் பேசவோ சிந்திக்கவோ கூடாத சூழலை நோக்கியும், புரட்சி என்பது எந்த வடிவத்திலும் உருப்பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிற கார்ப்பரேட் சமூகத்திற்குக் கவரி வீசுவது போலும், வெகுஜனப் பொதுப்புத்தி போலும் இருக்கிறது புரட்சியாளர்கள் குறித்த முன்வைப்பு. மேலும் கருத்துகள் உள்ளிட்ட எதுவும் யார்க்கும் பொதுவானது என்ற கம்யூனிச சித்தாந்தத்தைக் கேலிக்குள்ளாக்குவது போலும் உள்ளது.
திட்டமிட்டு படிமம், குறியீடு வகைமைகளோடு எழுதப்படுகிற கவிதைகள் தானாகவே இருண்மை முகமூடியை அணிந்து கொள்கின்றன. தன் போக்கில் எந்தவொரு அலங்காரமுமின்றி இயல்பான மொழிநடையில் எழுதுகிறவையே காலத்துக்கும் கனிந்து நிற்கும். “நாளை காணாமல் போகிறவர்”, எப்போதும் நம்மோடு இணைபிரியாது வாழ அவ்வளவு பிரியப்பட்டவராக இருக்கிறார். வாழ்த்துகள் கவியரசு. நன்றி.