நூல் அறிமுகம்: *கழிவறை இருக்கை* – இரா.செந்தில் குமார்
நூல்: கழிவறை இருக்கை
ஆசிரியர்: லதா
வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ்
பக்கம்: 224
விலை: ரூ.225
காமம் குறித்தான முழு புரிதல் இல்லாத நமது சமூகத்திற்கு மிகவும் தேவையான ஆய்வு நூல்.
காமம் குறித்து பொது வெளியில் பேசுவதே அசிங்கமாக பார்க்கப்படும் சமூகத்தில் ஒரு பெண் இவ்வளவு விரிவாக இதைப்பற்றி எழுதி இருப்பது மிகப்பெரிய விசயமே.
கழிவறை இருக்கை என்ற தலைப்புக்கு அவர் கூறும் காரணங்கள் மிகச்சரியாக பொருந்தி போகிறது.
உடலுறவு என்பது வெறுமனே ஆணும் பெண்ணும் உடலால் இணைவதன்று அது உள்ளத்தால் இணைவது. ஆனால், கெடு வாய்ப்பாக இங்குள்ள பெரும்பாலான தம்பதியர் இயந்திரத்தனமாகவே உடலுறவு கொள்கின்றனர் என்ற அவரது கூற்றையும் மறுப்பதற்கில்லை.
பெண்கள் உச்சநிலை அடைவது பற்றி 99% ஆண்களுக்கு அக்கரை இல்லை. ஆண்கள் உச்சமடைந்து விந்து வெளியேறிய பிறகு தனது கடமையை முடித்து கொண்டு நிம்மதியாக திரும்பி படுத்துவிடுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு அப்போது தான் கிளர்ச்சியே துவங்குகிறது. அமைதியாக இருந்திருந்தால் கூட பெண்கள் நிம்மதியாக தூங்கிவிடுவார்கள் ஆனால் இந்த நிலையில் அவர்களின் தூக்கமும் கெட்டு காமமும் முழுமை பெறாத அவல நிலையே தொடர்கின்றது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் உடலுறவையே வெறுக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
“”பெண்ணின் உணர்வுகளை மதிக்காமல் தனது உந்துதலை மற்றுமே நிறைவேற்றும் ஆண்களுக்கு பெண்கள் எப்போதும் கழிவறை இருக்கையாகவே பயன்படுகிறாள். அதற்கு சுயஇன்பமே மேலானது “” என்ற அவரின் ஆதங்கம் நம்மை வெட்கி தலைகுனிய வைக்கிறது.
திருமணம் தாண்டிய வெளி தொடர்புகள் பற்றிய ஆழ்ந்த புரிதலை ஒரு உரையாடல் மூலமாக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
காதல் என்பது இயற்கையாக தோன்றும் உணர்வு அது ஒருவரிடம் மட்டுமே ஏற்பட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்ற ஆசிரியரின் கருத்தை எளிதாக புறந்தள்ளிவிடவும் முடியாது.
விடலை பருவ குழந்தைகளுக்கு பாலியல் குறித்தான தெளிவை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும். அவை வீடுகளில் உரையாடலாக நால்வர் கூடுமிடத்தின் பேசு பொருளாக எதையும் மூடி மறைக்காமல் வெட்ட வெளிச்சமாக்கி ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்த வேண்டியது நமது சமுதாய கடமையாகும் என்ற ஆசிரியரின் விருப்பம் போற்றத்தக்கது.
சுய இன்பம் குறித்தும், பெண்களின் மெனோபாஸ் குறித்தும் தெளிவான புரிதலை வழங்கியுள்ளது சிறப்பு.
நம் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்து நம்மை சுற்றி இருப்போருக்கும் புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் வாசிப்பின் வழியாக உணர முடிகிறது.
என்னை அதிர்ச்சியூட்டிய வரிகளை பகிர்ந்து கொள்வதும் அவசியம்
“கலவி கொள்ளும் போது ஒரு முறையேனும் சிரிக்கவில்லை எனில் நீ தவறான நபருடன் கலவி கொள்கிறாய்”.
இரா. செந்தில் குமார்