சக்தியின் கவிதைகள்
ஒரு கிராமத்தின் கதை…..!!!!
********************************
காத்திருப்பேன் தூண்டிலுடன் குளக்கரையில் மீனுக்காய்
கெண்டை விழும் கெழுத்தி விழும்
சில சமயம் நண்டும் விழும்
காஞ்ச மணல் மேலே
சாஞ்சிருக்கும் கிளிஞ்சலெல்லாம்
என்னவளின் பாதம் பட
நொறுநொறுத்துக் குரல் எழுப்பும்
தரை அமர்ந்த தவளையெல்லாம்
அவள் பார்க்க ‘டைவ்’வடிக்கும்
அவளழகில் மயங்கிக் கெண்டை
மீன்களெல்லாம் வாய் பிளக்கும்
வகை வகையாய் இடையசைத்து
வரவேற்கும் நாணலெல்லாம்
ஒற்றைக் கால் கொக்குகளோ
மதிப்பளித்து காலிறக்கும்
கரையேற நீந்தி வந்த
நீர்ப் பாம்பு தடுமாறும்
வெண்மேகம் குடை பிடித்து
நீர் தெளித்து வரவேற்கும்
சர்க்கரையாய்ப் பேச்சிருக்கும்
அக்கறையும் கலந்திருக்கும்
உள்ளங்கை ரேகையெல்லாம்
உழைச்சுழைச்சு தேய்ஞ்சிருக்கும்
மாமா என அழைத்து
அருகமர்வாள் மனசோ
நூலறுத்த பட்டமெனச்
சிறகடிக்கும்
குளக்கரையில் கதை தொடங்கும்
கும்மிருட்டு சூழும் வரை
ஊராரின் வெறும் வாய்க்கு
சர்க்கரையாய் எம் கதைகள் காதுகளில்
தேனாய் இனிக்கும் ……….. !!!!!!
சுடுகாடு…..!!!!
****************
தீண்டப்படாத
எம்மக்களின்
ஒவ்வொரு பிணமும்
பொது வழிப்பாதையை
தீண்ட முடியாமலேயே கடந்து
போகிறது
இந்த சுதந்திர இந்தியாவில்,
காதல் சூனியம்….!!!!
*************************
உனக்குப்
பிடிக்கவில்லை
என்றால் நீ
தூரமாகவே
இருந்துவிடு,
உந்தன்
நினைவுகளை
மட்டும்
என்னருகிலேயே
வைத்துக் கொள்கிறேன்,
நீ இல்லை
என்றதும்
மாட்டுக்
கொட்டகையிலிருந்து
அவிழ்த்துக் கொண்ட
பசுவின் கன்றைப்
போல அலைகிறேன்,
உந்தன்
காலடி பட்ட
மண்னை
எடுத்து பத்திரமாக
வைத்துக்
கொண்டேன்,
உன்
ஞாபகத்திற்காக அல்ல,
பில்லி சூனியம் செய்து
ஏவி விடுவதற்காக….!!!!!!!!!
******************************
பனிக்கட்டியாகக் கரைந்து
உருகிப் பனியாறாய்
ஓடிக் கொண்டிருக்கிறது
அவனின் நினைவு,
நினைவிலே வருபவன்
கனவில் கூட நெருங்கி
வர மறுக்கிறான் வயதெனும்
பாத்திரமாக நீ இருப்பதால்,
மந்திரம் தந்திரமாக
தனக்குள்ளே அவனை
வரவழைக்க முயற்சிக்கிறாள்
மூக்கணாங்கயிறைக் கையுறையிலே
வைத்து அலைபவள்
இச்சையெனும் பச்சைக் கொடியை
உடல் முழுவதும் பூசிக்கொண்டு
அலைந்து திரிபவள்
அலமாரியில் கிடக்கும்
வாசிக்காத புதுப் புத்தகமாய் மினுக்குகிறாள்,
தனிமையில் வாடிய போது
எனது உடலை யாரோ
தீண்டியது போல சில உணர்வுகள்
ஊஞ்சல் கட்டி ஆடின.
மேலாடையாகப் போர்த்திய
மேகத்துணி காற்றின் வேகத்தால்
கலைந்து போய்விடுகிறது
அவன் வருவானா……?
ஊாரடங்கு
எடுத்துக்கொள்வானா …..?
உலக உருண்டை சுழலட்டும்,
அவனின் நினைவுகளை
நான் அசை
போட்டுக்கொண்டே இருப்பேன்
வாசலில் கட்டிய
கன்றுக்குட்டியைப் போல…….!!!!
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

