பழைய பஞ்சாங்கம் – 26: பரீட்சைக்கு பேனா இல்லையென்றாலும்  பரவாயில்லை!  – ராமச்சந்திர வைத்தியநாத்

பழைய பஞ்சாங்கம் – 26: பரீட்சைக்கு பேனா இல்லையென்றாலும் பரவாயில்லை! – ராமச்சந்திர வைத்தியநாத்

பரீட்சைக்கு பேனா இல்லையென்றாலும்  பரவாயில்லை! பழைய பஞ்சாங்கம் - 26 - ராமச்சந்திர வைத்தியநாத் எந்தத் தேர்வாயினும் சம்பந்தப்பட்டவர்களிடம் அது சற்றே பதட்டத்தைத்தான் ஏற்படுத்தி விடுகிறது. இதுவே துவக்கக் கல்வியாக இருப்பின் தேர்வில் தோற்றோர் இடைநிற்றல் வாய்ப்பும் இருந்து வருகிறது. இது…
தேர்வு சிறுகதை – சாந்தி சரவணன்

தேர்வு சிறுகதை – சாந்தி சரவணன்




“ராகுல் ராம் விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்தது.”

தமிழ்செல்வி, “ராம் குழந்தையை திட்டாதே டா” என்றார்

அக்கா, “நீ சும்மா இரு, கஷ்டப்பட்டு இவனை G.E சேர்த்து, கல்லூரி கட்டணம், தேர்வு கட்டணம், பயணக் கட்டணம் எனக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். இவன் என்னவென்றால் எளிதாக இரண்டு தாள் அரியர் வந்துள்ளது எனச் சொல்றான். அதுவும் இல்லாமல் இப்போழுது மறுமதிப்பீடு செய்யக் கட்டணம் கொடுங்கள் எனக் கேட்கிறான். நான் களாவாடிக் கொண்டு தான் வர வேண்டும். இவன் ஓழங்காக எழுதியிருந்தால் தேர்வாகி இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து என புலம்பிக் கொண்டிருந்தான்.

அத்தை, “நான் எல்லா தேர்வும் நல்லா எழுதினேன்.” எங்க. பேராசிரியர் கூட தேர்வு தாளை இணையவழியாக சரிபார்த்து 85 மதிப்பெண் வரும் எனச் சொன்னார்கள். மறுமதிப்பீடு கட்டணம் கட்டு என சொன்னார்கள். அதனால் தான் கேட்கிறேன்.

“அப்பாவை கட்டணம் கொடுக்க சொல்லுங்க அத்தை”. நான் என்ன எழுதினேன் என எனக்கு தானே தெரியும் என ஆவேசமாக அவன் பேசியது, தமிழுக்கு தன்னுடைய பிம்பமாக அவன் காட்சி தருவது போல் இருந்தது.

அவளின் நினைவலைகள் சற்றே பின்நோக்கி சென்றது.

“ல்* பல்கலைக்கழகத்தில் *வெட்டியியல்” பட்டயம் படிக்க ஆர்வம் வந்த காரணம், ஒரு பயிலரங்கில் “ஜாங்கிரி எழுத்துகளை” கற்றுக் கொண்டவர்கள் அனைவரும் மூத்த தோழர்களாக இருக்கிறார்கள் “ஜாங்கிரி எழுத்துகளை” கற்றுக் கொண்டு அந்த எழுத்துகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க சிலர் முன் வரவேண்டும் என மூத்த தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

“பேசும் மொழி பல உண்டு. ஆனால் எந்த மொழிக்கு எழுத்து வடிவம் உள்ளதோ அதுவே நீடிக்கிறது” என்றார்.

“ஜாங்கிரி எழுத்துக்களை” வருங்கால தலைமுறைக்கு சொல்லித் தரலாம் என் ஊக்கப்படுத்தினார்கள். அந்த பயிலரங்குக்கு பின் தமிழும், சகதோழமைகளும் “ஜாங்கிரி எழுத்துக்களை” பள்ளியில் சென்று கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

பள்ளியில் சென்று கற்றுக் கொடுப்பதை தொடர் செயலாக செய்ய எண்ணியதால் “ல்* பல்கலைக்கழகத்தில் பட்டயம் படிப்புச் சேரலாம் என தமிழும் பயிலரங்கம் கலந்துக் கொண்ட மற்ற தோழமைகளும் முடிவு செய்தனர்.

தொலைநிலைக் கல்வி விண்ணப்பம் அனுப்பி அனைவரும் “ல்” பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, வகுப்புகளில் கலந்து கொண்டு *வெட்டியியல்” தேர்வும் எழுதி முடித்தனர்.

யாரும் எதிர்பாரத கொரானா தொற்று பரவுவியதால் வாய்மொழித் தேர்வும், ஆய்வுக்கட்டுரையும் சமர்பிக்க எந்த ஒரு அறிக்கையும் “ல்* பல்கலைக்கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியாகவில்லை.. பெரும்பாலன பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை இணைய வழியாக நடத்தி முடித்தனர்.

“ல்* பல்கலைக்கழகத்தை தமிழ் தொடர்பு கொண்டபோது, இணைய வழியாக நடத்த இயலாது. “ஒரே நாள் நேரில் வந்து சமர்பித்துச் செல்லுங்கள்” என தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் பெண்கள் பல ஊர்களில் இருந்து “ல்* பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வு அறிக்கையை சமர்பித்து, வாய் மொழி தேர்வு இரண்டையும் முடித்து வந்தனர்.

“தேர்வு முடிவுகள் விரைவில் ‌‌வந்துவிடும்” என்றனார்.

நாட்கள் நகர்ந்தன. “ல்* பல்கலைக்கழகத்தை தமிழ் தொடர்பு கொண்டபோது, “கொரானா காரணத்தினால் முடிவுகள் தாமதமாகிறது”, என்றனர்.

அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஒரு நாள் அதிசயமாக, “ல்” பல்கலைக்கழகத்திலிருந்து இன்று தேர்வு முடிவுகள் வெளிவரும்.. யாரெல்லாம் தேர்வில் தேர்வு ஆகவில்லையோ அனைவரும் தேர்வு கட்டணம் கட்டி விடுங்கள் என ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக அலைப்பேசியில் தெரிவித்தார்கள்.

என்ன ஆச்சரியம்! . நாம் எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும் சரியான பதில் நமக்கு ஒரு போதும் கிடைக்காது. இன்று மட்டும் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன் அழைத்து முன் அறிவிப்பு அளித்தது ஆச்சிரியமாக இருந்தது. அனைவரும் இது எப்படி சாத்தியம் என் கேள்வியோடு காத்திருந்தனர்.

எப்படியோ “ல்” பல்கலைக்கழகத்தில் எழுதிய தேர்வு முடிவுகள் இன்று வெளியாகப் போகிறது. 47 வயதிலும் படிச்சு நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கை நிறைவேற ‌போகும் நாள் என ஆவலோடு மாலை வர போகும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தாள், தமிழும், தோழர்களும்

அவர்கள் அளித்த தகவலின்படி, தேர்வு முடிவுகள் வந்தது.

தமிழுக்கு தலையே சுற்றியது. “வெட்டியியல்” தேர்வில் தான் தேர்வாகவில்லை என்ற செய்தி அவளை நிலைக் கொள்ளாமல் செய்தது. அவள் தேர்வாகதது என்பதை விட ஒற்றை எண் மதிப்பெண் பெற்று தேர்வாகவில்லை என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உடன் எழுதிய தோழமைகளில் ரதி மட்டுமே தேர்வு! ரதி டிஸ்டிங்ஷன் வாங்கும் பெண்மணி. சிறு வயது முதலே வெட்டியியல் எழுத்துக்களைப் பார்த்து அதன் மேல் மையல் கொண்டவர். *வெட்டியியல்” படிக்க வேண்டும் என்ற அவருடைய ஆர்வம் திருமணம் முடிந்து தான் இந்த பட்டயம் படிப்பு வழியாக நிறைவேற்றிக் கொண்டவர். அவரின் மதிப்பெண் அவரை மிகவும் பாதித்தது. தேர்ச்சி தான் ஆனால் அது “என்னுடைய மார்க் இல்லை”. நான் இன்னும் அதிகமாக பெற்று இருப்பேன் என ஆதங்கப்பட்டு கொண்டு இருந்தார்’

இதைவிட மிகவும் சிறப்பான செய்தி என்னவென்றால் தேர்வு எழுதிய சில தோழமைகள் தேர்வே எழுதவில்லை என முடிவுகள் வெளியாகியிருந்தது. ‌

இந்த ஒரு தகவல் தான் தமிழுக்கும் தமிழுடன் தேர்வு எழுதிய தோழமைகளுக்கு ஒரு செய்தியை உறுதிப்படுத்தியது. “ஏதோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது.” “இது நம்முடைய மதிப்பெண் அல்ல” என்று.

மாணவர்கள் செய்யும் தவற்றை தட்டிக் கேட்கலாம். ஆனால் . பல்கலைக்கழகத்தில் நடந்தால் எப்படி? பதில் யாரிடமும் இல்லை.

மாணவர்கள் அனைவருக்கும் இது மற்றொரு கேள்வியாக எழுந்தது.

தோழர்களிடமிருந்து வரும் அழைப்பு இவள் தோழர்களிடம் ஆலோசனை பெறுவதென மனம் சூழன்று கொண்டே இருந்தது.

இன்று என்று பார்த்து தன் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழல். அங்கிருந்து அலைபேசியில் பேசவும் முடியவில்லை. ஆனாலும் பேசினாள்.

தமிழும் ஷோபாவும் தான் சேர்ந்து வெட்டியியல் தேர்வுக்கு தயாரானார்கள்.

தமிழ் ஷோபாவை அழைத்து என்ன செய்யலாம் என இருவரும் ஆலோசித்தனர். அப்போது அவர்கள் நினைவில் உதித்தவர் நிலா மேடம். பக்குவமாக ஆணையர் அவர்களிடம் பேசுவார். ஆதலால் நாம் கான்பிரன்ஸ் கால் செய்து நிலா மேடத்தை பேச சொல்லாம் என‌ முடிவு செய்து அவரிடம் தகவல் பகிர்ந்து கொண்டார்கள்.

நிலா மேடம் அனுபவம், நாம் அனைவரும் சேர்ந்து இமெயில் அனுப்பி வைக்கலாம் என அவரின் தோழர் வழியாக ஆலோசனை பெற்று ஆணையர் மற்றும் “ல்” பல்கலைக்கழகம் அனைவருக்கும் இமெயில் அனுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு இருந்த மறுதேர்வு அட்டவணை தேதி பின் அறிவிக்கப்படும் என‌ சுற்றறிக்கை “ல்” பல்கலைக்கழகத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சி.

தமிழ் மறுமதிப்பீடு மற்றும் அரியர் தேர்வு இரண்டிற்கும் கட்டணம் கட்டினாள். பலர் அரியர் தேர்விற்கு பணம் கட்டினார்கள்.

ரதி, மறுமதிப்பீடு செய்ய தேர்வு கட்டணம் கட்டபோவதில்லை.

ஏன் என்று கேட்ட தமிழிடம் எனக்கு பல்கலைக்கழகத்தின் மேலிருந்த நம்பிக்கை போய்விட்டது என்றார்.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இது மிக பெரிய பிரச்சனை.

அதே போல் தமிழோடு சேர்ந்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கலாவும் தேர்வு எழுதியிருந்தார். அவரும் தேர்வாக வில்லை. ஆனால் அவர் மறுமதிப்பீடு விண்ணப்பமோ, அரியர் தேர்வு விண்ணப்பமோ எதுவும் செய்யவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்திடம் நமது கோரிக்கையை வைக்கும் போது அனைவரும் சேர்ந்து வைப்பது தானே சரி.

தமிழ் அவர்களை அலைபேசியில் அழைத்து மேடம் தங்களின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை. தாங்கள் நிச்சியமாக தேர்வு ஆகியிருப்பிர்கள் இருந்தும் ஏன் தாங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? என கேட்டாள். அதற்கு அவர் நாம் கேட்டாலும் பல்கலைக்கழகத்திலிருந்து நமக்கு சாதகமாக பதில் வராது என்றார்.

ஆசிரியராக இருந்து கொண்டு ஒரு தவறு நடப்பதை கேட்காமல் இருப்பதும் தவறு தானே? என கேட்டாள் தமிழ். ஆனால் மனதில் ஒரு ஆசிரியரின் முயற்சிக்கு கூட முற்றுப்புள்ளி வைத்துவிட்டதே பல்கலைக்கழகம் எனவும் தோன்றியது.

ஒருபக்கம் “வெட்டியியலை காப்போம்”. ஜாங்கிரி எழுத்துக்களை அனைவரும் கற்க வேண்டும். மொழி வளர்ப்போம் என பிரசங்கம் செய்வது. மறுபுறம் “வெட்டியியல்’ படிக்கும் மாணவர்களை வேடிக்கையாக எடுத்துக் கொள்வது. இதுவே “திங்கிலம்” படிப்பு‌ என்றால் ஒரு ஈர்ப்பு. ‘திங்கிலம்” பேசினால் முதல் உரிமை.

ஒப்பீடு எழுத்துக்கள் தெரிந்தால் தானே பழமையை உணர முடியும். இதை “ல்” பல்கலைக்கழகத்திற்கு நாம் சொல்லி தர வேண்டுமா?. “வெட்டியியல்” ஆர்வாலர்களை இப்படி மூடக்க என்ன காரணம். இதற்கும் அவர்களுக்கு பதில் இல்லை.

அதே சமயம் ஜாங்கிரி எழுத்துக்களை கல்வி வழியே கற்காமல் புத்தகங்கள், ஆராய்ந்து கற்வர்களே பலர்.

சில சமயங்களில் இப்படி தோன்றினாலும் சமூகம் ஒரு தாளை அதன் மதிப்பீடுகளை வைத்து தானே அவர் கற்றலை உறுதி செய்கிறது. இதில் எப்போது மாற்றம் வரும்.

மனம் சிந்தனைகளை சிதறிக் கொண்டேயிருந்தது. எப்படியும் தேர்வு கட்டணம் கட்டியாகிவிட்டது. பல்கலைக்கழகத்தில் யாரோ ஒருவரின் தவறால் தவறு நடக்க சாத்திய கூறுகள் இருக்கலாம். நம் முயற்சியை கைவிட வேண்டாம், முயற்சி திருவினையாக்கும்., என தொடர்ந்து இமெயில், மெஸேஜ், அலைபேசி என கோரிக்கையை தமிழ் “ல்” பல்கலைக்கழகத்தின் முன் வைத்து கொண்டே இருந்தாள்.

ஒரு நல்ல பேராசிரியர், துணை வேந்தர் துணையுடன் அந்த முயற்சிகள் தொடர்ந்துக் கொண்டு இருந்தன,

அதே நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுவன் ரித்விக், சிறுவயது முதல் மாநில முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என பெற்றோர்களால் மற்றும் சமூகத்தால் மூளை சலவை செய்யபட்டவன் கொரானா காரணத்தால்,சமீபத்தில் 10வது 12வது தேர்வு ரத்தான செய்து கேட்டு பல நாட்கள் உளவியியல் சிக்கலில் சீக்குண்டான். தேர்வு எத்தனை பிரச்சனைகளை சமூகதில் உருவாக்குகிறது..

இதற்கிடையில் நம்பிக்கையுடன் காத்திருந்த “வெட்டியியல்” பட்டயம் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் கோரிக்கையும் ஏற்று தேர்வு தாள்கள் மறுபரிசீலனை செய்யுமாறு ஆணையர் உத்தரவு ‌அளித்தார்.

ஆம் சில தினங்களில் “பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனர்” என்ற அறிவிப்பு வெளியானது” அதிலும் சிலர் தோல்வியை தழுவினர். அதிலும் மறு தேர்வு எழுதிய ஒரு தோழருக்கு தேர்வு எழுதவில்லை என வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேறு வழியின்றி தோழமைகள் மறு தேர்வு எழுதியது நினைவிற்கு வந்தது.

“அத்தை அத்தை அப்பாவிடம் பேசுங்கள்” என்ற ராகுலின் குரல் கேட்டு நினைவு திரும்பினாள் தமிழ்.

ராம், ராகுல் கண்டிப்பாக தேர்வாகி இருப்பான். அப்படி மறுபதிப்பிடும் செய்தும் தேர்ச்சி ஆகவில்லை என வந்தால் பார்த்துக் கொள்ளலாம். சில நேர்ங்களில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என வெளியாகி, அதை பார்த்து தவறான முடிவு எடுத்த மாணவர்களை நாம் இழந்து இருக்கிறோம். அதன் பின் அந்த மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிரிண்டிங்க மிஸ்டேக் என செய்தி தாள்களில் பார்த்துள்ளோம்…..

ஏன் என் வாழ்க்கையிலும் அவ்வாறு நடந்தது உனக்கு தெரியும் தானே. தேர்வு என்பது ஒரு மதிப்பீடு. அவ்வளவு தான். அதுவே பிள்ளைகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக கூடாது. அந்த நிலையில் பிள்ளைகளின் மனநிலை சார்ந்தே அவர்கள் அதை வெளிப்படுத்த முடியும். உளவியல் ரீதியாக சிந்தித்து பார்த்தால் பிள்ளைகளின் நிலையை நாம் உணர முடியும்.

ஏன் சமீபத்தில் இணைய வழி வகுப்பு, இணைய தேர்வு என சிறு வயது குழந்தைகள் mute செய்துவிட்டு விளையாடியதையும், கல்லூரி மாணவர்கள் ஒப்பன் புக் தேர்வுயென பார்த்து எழுதியதை நாம் பார்த்ததை மறந்துவிட்டாயா? அப்போது எங்கு சென்றது இந்த தேர்வு முறை வரைமுறைகள் டா…

“மதிப்பெண்” என்பது நமது வயது போல நம்பர் தான்டா. ஆனால் நம் உள்ளுணர்வு நம்மை “முயற்சி செய்” என சொல்லும் போது முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி தான்.

“ராகுலின் உறுதி சொல்கிறது அவன் பாஸ்” என்று என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அத்தை என தமிழை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் ராகுல்.

திருமதி. சாந்தி சரவணன்
சென்னை

என்னைச் சிந்திக்கத் தூண்டிய இரு சம்பவங்கள்! கட்டுரை – த.வி. வெங்கடேஸ்வரன்

என்னைச் சிந்திக்கத் தூண்டிய இரு சம்பவங்கள்! கட்டுரை – த.வி. வெங்கடேஸ்வரன்




நான்காம் வகுப்பில் ஆசிரியர் திருக்குறளில் ‘புலால் உண்ணாமை’ குறித்துப் பாடம் எடுத்தார். மறுநாள் வகுப்புக்குள் நுழையும்போது பெரும் சலசலப்பு. வள்ளியின் பெற்றோர், ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.

“இவளுக்கு மீன் குழம்புனா ரொம்பப் பிடிக்கும். இனிமேல் அசைவம் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா. எங்களையும் சாப்பிடக் கூடாதுனு சொல்றா” என்று வருத்தப்பட்டார் வள்ளியின் அம்மா.

ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளியிடம் காரணம் கேட்டார்.

“சார், நீங்கதானே புலால் உண்ண வேண்டாம்னு பாடம் எடுத்தீங்க… அதனாலதான் எனக்கு ஒரு உயிரைக் கொன்னு சாப்பிட விருப்பமில்லை” என்று வள்ளி சொன்னவுடன் ஆசிரியர் அதிர்ந்துவிட்டார்.

“அது என் கருத்து இல்லம்மா. திருக்குறளில் சொன்னதைத்தான் சொல்லிக் கொடுத்தேன்” என்று ஆசிரியர் சொன்னபோது பரிதாபமாக இருந்தது.

“வள்ளி சொல்லிருச்சுல்ல, இனிமேல் நம்ம வீட்ல அசைவம் சமைக்க வேணாம்” என்று வள்ளிக்கு ஆதரவாக நின்றார் அவள் அப்பா.

“இறைச்சி இல்லைனா எப்படி உடலுக்கு வலு வரும்?” என்று கோபத்துடன் கேட்டார் வள்ளியின் அம்மா.

ஒருவழியாகப் பிரச்சினை முடிந்து வள்ளியின் பெற்றோர் கிளம்பினார்கள். அன்று முதல் வள்ளியின் வீட்டில் அசைவம் செய்வதில்லை. தான் கொண்ட கொள்கையில் அவ்வளவு உறுதியாக இருந்தாள் வள்ளி.

வகுப்பில் குழுவாகப் பிரிந்து, அந்தந்த மாணவர்களோடு மட்டும்தான் நெருக்கமாகப் பழகுவார்கள். ஆனால், எந்த ஒரு குழுவோடும் அடையாளப்படுத்தப்படாத ஒரே ஒரு ஜீவன் வள்ளி மட்டும்தான்! அனைவரிடமும் நட்பாக இருப்பாள்.

பள்ளியில் விசித்திரமான தண்டனை இருந்தது. வகுப்பில் பேசினால், வீட்டுப் பாடத்தை முடிக்காமல் வந்தால், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், பெற்றோர் ஆசிரியரிடம் புகார் கூறினால் அந்தத் தண்டனை அளிக்கப்படும். மாணவராக இருந்தால் இரண்டு மாணவியர் இடையே அந்த வகுப்பு முழுவதும் உட்கார வேண்டும்; மாணவியாக இருந்தால் இரண்டு மாணவர்களுக்கு நடுவே உட்கார வேண்டும். அடித்தால்கூடத் தாங்கிக்கொள்வோம். இந்தத் தண்டனை அதைவிட வலியாக இருக்கும் அந்த வயதில்.

நடுவில் மாணவர் உட்கார்ந்தால், இரண்டு மாணவியரும் விலகி விலகி உட்காருவார்கள். முகத்தைச் சுளிப்பார்கள். மற்றவர்கள் அந்தக் காட்சியைக் கண்டு சிரிப்பார்கள். வள்ளியின் அருகே உட்கார தண்டனை கிடைத்தால் நிம்மதியாக இருக்கும். அவள் முகம் சுளிக்க மாட்டாள். நட்புடன் சிரிப்பாள். இயல்பாக இருப்பாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நான் சந்தித்த முதல் பெண் வள்ளிதான்!

திடீரென்று வள்ளி பள்ளிக்கு வரவில்லை. மஞ்சள் காமாலை என்று பேசிக்கொண்டார்கள். சில நாட்களில் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மணி அடிக்கப்பட்டது. வள்ளி இறந்ததால் இன்று விடுமுறை என்று அறிவித்தார்கள்.

எல்லோரும் அவள் வீட்டுக்குச் சென்றோம். நான் நேரடியாகச் சந்தித்த முதல் மரணம். வள்ளியின் அம்மா கதறிக்கொண்டிருந்தார். அசைவற்று அமர்ந்திருந்த அவள் அப்பா, திடீரென்று வீட்டிலிருந்த சாமிப் படங்களை எடுத்து உடைத்தார்.

“நீ இருப்பது உண்மையாக இருந்தால் என் வள்ளியை உயிரோடு கொடு” என்று கத்தினார்.

எனக்குள் இந்தக் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. பாபரின் மகன் ஹுமாயுன் நோய்வாய்பட்டபோது, ‘இறைவா என் உயிரை எடுத்துக்கொண்டு, என் மகனைப் பிழைக்க வை’ என்று கடவுளிடம் வேண்டினார். ஹுமாயுன் பிழைத்துக்கொண்டார் என்று ஆசிரியர் கூறியது நினைவில் வந்தது. அதேபோல் சிவனேசரின் மகள் பூம்பாவை, சிறு வயதில் பாம்பு தீண்டி மடிந்து போக, அவளின் சாம்பலை கபாலீசுவரர் முன்வைத்து சம்பந்தர் தேவாரப் பதிகம் பாட, அந்தப் பெண் உயிர்பெற்று எழுந்தாள் என்கிறது சிவ புராணம். வள்ளி அப்பாவின் பக்தியைக் கண்டு, வள்ளி உயிரோடு வந்துவிடுவாள் என்று நம்பினேன். ஆனால், அவள் திரும்பவே இல்லை.

யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத, எல்லாரிடமும் அன்பும் பரிவும் கொண்ட வள்ளி ஏன் சிறு வயதில் மடிய வேண்டும்? எவ்வளவோ அநியாயங்கள் செய்வோர் நன்றாக இருப்பது ஏன்? வள்ளியின் அப்பா மனமுருகி வேண்டியபோதும் பூம்பாவைப் போல வள்ளி உயிரோடு வராதது ஏன்?

இப்படிப் பல்வேறு கேள்விகள் என்னுள் எழுந்தன. வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் கதாகாலட்சேபம் செய்ய வந்தவர்கள் பலரை என் கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். பலரும் ‘நீ சின்னப் பயல் இப்போது உனக்கு ஏதும் புரியாது’ என்று துரத்திவிடுவார்கள். என் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி ராமகிருஷ்ண விஜயம், ஜோதிடம், குண்டலினி சக்தி போன்ற பல்வேறு நூல்களைப் படித்தேன். தேடலின் வழியே நான் வந்தடைந்தது பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ எனும் சிறு நூல். அதுதான் எனக்குப் புதிய வெளிச்சம் தந்தது.

முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை எனக்கும் புவனாவுக்கும்தான் போட்டி, யார் இரண்டாம் இடத்தைப் பிடிப்போம் என்று. முதலிடம் எப்போதும் பார்த்திபனுக்குத்தான். அதில் யாருக்கும் துளிகூடச் சந்தேகம் இருந்ததில்லை. ஆசிரியர்கள்கூட யார் இரண்டாம் இடத்துக்குப் போட்டி என்றுதான் கேட்பார்களே தவிர, முதலிடம் பற்றி மூச்சுக்கூட விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட பார்த்திபனைத்தான் அன்று அந்தக் கோலத்தில் சந்தித்தேன்.

பேருந்து செலவுக்கு என் வீட்டில் வசதி இல்லை. எனவே, ஆறாம் வகுப்பு முதல் நான் சேர்ந்த புதிய பள்ளிக்கு 40 நிமிடங்கள் நடந்துதான் செல்ல வேண்டும். வாரன் சாலை பிள்ளையார் கோயிலைத் தாண்டினால், சாலையின் இருபுறமும் மரம் அடர்ந்து நிழல் தந்துகொண்டிருக்கும்.

ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது திடீரென்று, “ஏய் வெங்காயம்…” என்று ஒரு குரல் கேட்டது. வெங்கடேஸ்வரன் எனும் என்னை ஆரம்பப் பள்ளியில் சக மாணவர்கள் ‘வெங்காயம்’ என்றுதான் கூப்பிடுவார்கள். பார்த்திபனை நாங்கள் ‘பன்’ என்றுதான் கூப்பிடுவோம்.

பழகிய குரல். திரும்பிப் பார்த்த நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்.

ஐந்து, ஆறு ஆடுகளை மேய்த்துக்கொண்டு, கையில் கழியுடன் பார்த்திபன் நின்றுகொண்டிருந்தான். அந்தக் கோலத்தில் அவனைக் கண்டதும் எனக்கு ஒரே படபடப்பு. என்ன செய்வது என்று தெரியாமல், அங்கிருந்து பள்ளிக்கு ஓடிவந்துவிட்டேன். ஏன் இப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. முதல் மதிப்பெண் வாங்கியவனை நான் ஆடு மேய்க்கும் கோலத்தில் எதிர்பார்க்கவில்லை.

அவன் குச்சியைத் தரையில் ஊன்றியபடி நிற்கும் கோலம் இன்றும் நினைவில் இருக்கிறது. அவன் முகத்தில் நண்பனான என்னைக் கண்டதில் மகிழ்ச்சி தெரிந்தது. அவன் எவ்வளவு ஆசையாக என்னுடன் பேச நினைத்திருப்பான்! எனக்கும் அவனிடம் பேச ஆசைதான். ஆனாலும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஏன் ஓடிவந்தேன் என்று இன்றுவரை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன்.

பீமண்ணபேட்டையில் வள்ளி வீட்டின் அருகேதான் பார்த்திபன் வீடு. தினமும் ஒன்றாகப் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்வோம். வழியில் பம்பரம், கோலிக்குண்டு விளையாடுவோம். அவன் குடும்பம் ஏழ்மையானது. நன்றாகப் படிக்கும் பார்த்திபன் ஏன் படிப்பைத் தொடரவில்லை? இப்படிச் சூழ்நிலையால் கல்வி மறுக்கப்பட்டு எவ்வளவு ராமனுஜன்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருப்பார்கள்? எவ்வளவு கலாம்களை இழந்திருப்போம்?

எங்கள் குடும்பமும் செல்வச் செழிப்பில் திளைத்ததில்லை. ஆனாலும், எனக்குக் கல்வி மறுக்கப்படவில்லை. சாதி, வறுமை, குடும்பச் சூழல் போன்றவை இந்தச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன என்று என்னை உணர வைத்த சம்பவம் இது.

பார்த்திபா, இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

த.வி. வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி

நன்றி : இந்து தமிழ் திசை

Karkaviyin Kavithaigal 9 கார்கவியின் கவிதைகள் 9

கார்கவியின் கவிதைகள்

இரட்டை நீல டிக்குகள்
**************************
முன்பெல்லாம்
மாதம் ஒருமுறை
டேடா செலுத்துபவன்
இப்பொது மூன்றுமாத சந்தாவிற்கு பழகி விட்டேன்….

ஏதோ ஒரு குழுவில்
நீ உரையாடி சென்ற
பொழுதும்
சேகரிக்கப்படாத
உனது எண்ணை
கிளிக் செய்து
டிபியை மட்டும்
பலகாலம் பார்த்து
வெளியேறுகிறேன்…

இப்பொது கிடைத்த
தைரியத்தில்
ஹாய் என கூறிவிட்டேன்
உன் முகம் காணாமல்
சிறு அங்குல பெட்டிக்குள்

ஒற்றை சாம்பல்
டிக்குகள்
நெஞ்சை சற்று அமைதிக்குள்ளாக்கியது
நீ ஆன்லைன் இல்லாத
வெறுமையை தந்தது..

இரட்டை சாம்பல் டிக்குகள்
நீ வந்து சென்ற
சுவடுகளை டிக் செய்து சென்றது

இரட்டை நீல டிக்குகள்
வியர்வை வழிந்தோட
என்ன ரிப்ளை என
நடுக்கலில் உறைந்தேன்
என் பெட்டியில்

நீண்ட நேர
பச்சை நிற
டைப்பிங் சொற்களுடன்
தொடர்புள்ளிகளின்
முடுவில்
கிடைத்தது…

“ஊ இஸ் திஸ்”

அகலப்பரந்த ஆழியில்
இரு சொட்டு
நீர்த்திவலையாய்
என்னுள் தடம்பதித்தது
இரட்டை நீல டிக்குகள்…..

தொலைப்பேசி நினைவுகள்
**********************************
ஊரெல்லாம் அழைக்காத பெயரை
என் வீட்டின் பின்னால் ஒலிக்க பழகியது

யாசகம்
கேட்பவனாய்
வாசலில்
நின்று கொண்டிருந்தோம்
சில நேரம்
நானும் அம்மையும்
சில நேரம்
நானும் அக்கையும்

ஆசையோடு
பேசிய
அண்ணனின்
எதிர்பார்ப்பை
யாசகத்திற்கு
கேட்கும் நிலையில்
சொல்லப்பட்டது
‘யார் அங்கே பேசுவது’

வாயடைத்தை
நிலையில்
ஆணைகளெல்லாம்
மறந்து போனது
அண்ணனுக்கு

பொறுமையில்
வைத்து
சில்லரை போட்டது
போல்
தொட்டுப்பார்த்து
பரிமாறிக் கொள்கிறாள்
அன்பை
என் அன்னை….

இன்று ஆறங்குல
பெட்டியில்
அண்ணனின் முகத்தையே
பார்க்கும் பொழுது
வடியும்
கண்ணீரில்
தொலைபேசி
நினைவுகள்….!

எழுதாத தேர்வு
******************
தேடும் இருளுக்கு  நிலவின் ஒளி
எட்டித் தொடும் அலைக்கு நிலா
மிஞ்சிய பசியை போக்கும் பூனை
கெஞ்சிய யாசகனின் தட்டில் நூறு

வெற்றிக்கு தேர்வுகள் அவசியம் இல்லை
கேள்விகளில் வாழ்க்கையும் இருப்பதே இல்லை
ஆம் எழுதிவிட்டேன் தேர்வை
யாரும் காணாத புது விடையை

கடல் முழுதும் வெளிச்சம் இல்லை
அலை தொலைவில் நிலவின் எல்லை
அறிதலும் புரிதலும் வாழ்வியல் தந்திரம்
கிடைக்காதது கிடைத்தால் இயல்கையின் மந்திரம்

இருக்கும் இடத்தில் இயற்கை வராது
எல்லாம் உனக்கென உறுதியாய் தராது
உழைத்திடு அனு தினம் விழிப்போடு
வெற்றிகள் கிடைத்திடும் உன் கையோடு

Muthal Vaguppu Pothuthervu Book By Andanur Sura Bookreview By Era Savithri நூல் அறிமுகம்: அண்டனூர் சுராவின் முதல் வகுப்பு பொதுத்தேர்வு – முனைவர். இரா. சாவித்திரி

நூல் அறிமுகம்: அண்டனூர் சுராவின் முதல் வகுப்பு பொதுத்தேர்வு – முனைவர். இரா. சாவித்திரி




நூல்: முதல் வகுப்பு பொதுத்தேர்வு
ஆசிரியர்: அண்டனூர் சுரா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்று ஒரு தொடரை மாணவர் எழுதி இருந்தால் தவறாக எழுதி இருக்கிறார் என்று அதனைக்கடந்துவிடலாம் இதையே ஓர் ஆசிரியர் கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்குக் கற்பித்தால் மாணவர்கள் நிலை என்ன? என்ற வினாவின் அடிப்படையில் எழுந்த ஒரு கற்பனைக்கதை தான்” முதல் வகுப்பு பொதுத்தேர்வு  கதையை எழுதியவர் அண்டனூர் சுரா.

ஆசிரியர் தவறாக வரலாற்றைக் கற்பித்த நிலையில் தவறு எனத் தெரிந்து கொண்ட மாணவன் எப்படி அதை சரி செய்ய முயற்சி செய்கிறான் என்பதும் அதில்அவனுடைய மனப் போராட்டமும் உள்ள உறுதியும்  எப்படிக்கதை வடிவம் கொள்கிறதுஎன்பதும் முதல் வகுப்பு பொதுத்தேர்வு ஆகிறது.

ஐந்தாம் வகுப்பு மாணவன் வயது அனுபவம், மனநிலை அடிப்படையாக இதை எப்படி அணுகுகிறான் அதற்கு ஆசிரியரின் எதிர்வினை என்ன என்பதெல்லாம் சுவையாகச் சொல்லப்படுவது உண்மைதான். ஆனால் எடுத்த உடன் ஒருசரித்திர ஆசிரியர் இவ்வளவு பிழையான வரலாற்றை க்கற்பிக்க முயல்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஆசிரியர் சமூகத்திற்கு இழுக்கு அல்லவா .இப்படி ஒரு கதையை எழுதலாமா என்ற பொதுப்புத்தியோடு இருந்தால் இக் கதையைத்தொடர்ந்து படிக்க முடியாது .சிறார் நாவல் என்பது சிறுவர்கள் மனநிலையில் படிக்க வேண்டுமோ என்று சமாதானம் செய்து   கொண்டு கதையைத் தொடர்ந்து படிக்கலாம்.

சிவப்பிரகாசம் சரித்திர ஆசிரியர். தான் சொன்னதை மாணவர்கள் கேட்க வேண்டும் என்கிற ஆதிக்க ஆசிரியர் மனோபாவம் உடையவர். மற்றபடி கற்பித்தல் திறனில் அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அவருடைய எழுத்தாற்றல் வகுப்பின் கரும்பலகையில் எழுதி இருந்த தாஜ்மகாலை க்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்ற வரிகளில் முழுவடிவம் கொண்டிருந்தது. சிவப்பு ,மஞ்சள் ,பச்சை வண்ண சுண்ணாம்புக்கட்டிகளால் அலங்காரமாக எழுதப்பட்டிருந்த அந்த தொடர் ஆசிரியரின் திறமையைப் பறைசாற்றியது மிகுந்த கவனத்தோடு அவர் வரைந்த தாஜ்மகால் ஓவியம்  பக்கத்தில் பகீரத கவனத்துடன் வரையப்பட்ட சிவாஜியின் ஓவியம் பொறுப்புணர்ச்சியுடன் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்க்கும் போது இவ்வளவு திறமையுடன் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடம் தவறாக இருக்குமா என்ன என்று பொதுப்பார்வை நினைக்க வைக்கும் போது ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எம்மாத்திரம் ?

சத்ரபதி சிவாஜியை முழுமையாக உருவாக்கிய திருப்தியில் வகுப்பின் கடைசி வரிசையில் சென்று கரும்பலகையைப் பார்த்தபடி தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்றார். மாணவர்கள் பின்தொடர்ந்து சொன்னார்கள். அடுத்து நம் கதாநாயகன் சுரேந்திரன் எப்படி அறிமுகமாகிறான் பாருங்கள். பார்வைக்கு அவன் பாவமாகத் தெரிந்தான். தலைக்கு அவன் எண்ணை வைக்கவில்லை. மெலிந்த குச்சி போன்ற தட்டான் உடல்வாகு கொண்டவன். அவன் உடுத்தியிருந்த சீருடை அவனுக்குச் சற்றும் பொருந்தாமல் தொள தொள என இருந்தது சிவப்பிரகாசம் அவனது கண்களை கழுகுக் கண் கொண்டு பார்த்தார் அப் பார்வையில் அவன் முகம் ஒடுங்கி நடுங்கி இருந்தது.

வாசிக்கத் தெரியும் தானே! அவன் நடுங்கிக்கொண்டு “வாசிப்பேன சார் .” வாசிக்க வேண்டியது தானே ! தப்பாஎழுதி இருக்கீங்க சார். ஆசிரியர் மேல் முதல் அம்பு பாய்கிறது . 30 வருட பணி அனுபவத்தில் இதற்கு முன்பு யாரும் இப்படியாக குற்றம் கடிதல் புரிந்ததில்லை இவன் மட்டும் கேள்வி கேட்கிறான். சிவப்பிரகாசம் உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு  அடேய் நான் எழுதி இருப்பதில் என்ன பிழை கண்டாய் ?எழுத்துப் பிழையா ?சொற்பிழையா? சுரேந்திரன் மார்போடு இறுக்கி கட்டி இருந்த கையை மெல்ல விலக்கி “சரித்திர ப்பிழை சார்” என்று இன்னும் ஓர் அம்பை எய்கிறான் .மற்ற மாணவர்கள் விதிர்விதிர்த்தார்கள் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் தாஜ்மகாலைக்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்ன சொல்ல வருகிறேன் .

நேத்து வரைக்கும் தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான். இன்றைக்கு எப்படி சத்ரபதி சிவாஜி ஆனார்? அக்கேள்வியை அவன் குழந்தைத் தனத்துடன் கேட்டிருந்தாலும் கேட்டலில் ஒரு துடுக்குத்தனம் இருந்தது. கேள்வியில் தடுமாற்றமும் பதற்றமும் இருந்திருக்கவில்லை எனும்போது ஐந்தாம் வகுப்பு மாணவன் அரியணை ஏறிய அரசனாகக் காட்சியளிக்கிறான். சிவப்பிரகாச த்தின் தொடரும் தாக்குதல்கள் மிக பலவீனமானவை.

தஞ்சைப்பெரிய கோயில் பக்கத்தில் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலை இருப்பதுபோல் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கோட்டையை கட்டிய விஜயரகுநாத தொண்டைமான் சிலை இருப்பது போல ஒரு வாதம் செய்வதும் சுற்றுலா புகைப்படங்களைக்காட்டி தாஜ்மகால் பக்கத்தில் சத்ரபதி சிவாஜி சிலை இருப்பதால் தான் சொல்வதே சரி என்று தன் கட்சியை நிறுவ முயலும் பரிதாபம் தான் அது .விடுவானா சுரேந்திரன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகில் பெரியார் ஈவேரா சிலை இருப்பதால் கோயிலைக் கட்டியவர் அவரா?

எங்கள் ஊர் நீர் தேக்கத் தொட்டியில் பக்கத்தில் காந்திசிலை இருப்பதால் தொட்டியைக்கட்டியவர் காந்தியா என்று கேட்டவுடன் அவர் கட்டிய பொய்மைக்கோட்டைகள் சரிந்தாலும்  அதிகாரம் பேசுகிறது. சுரேந்திரன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதுபெற்றோர் வந்து மன்றாடியதால் திரும்பவும் சேர்க்கப்பட்டான் தாஜ்மகாலை க்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்று 200 முறை எழுதிக்கொடுத்தபின்னரே   அவன் தேர்வுக்கு அனுமதிக்கப் படுகிறான்.

பொதுத்தேர்வுஒரேவினா. 60 மதிப்பெண்கள். தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? நான்குமே தவறான பதில்கள். குழப்பத்தில் ஆழ்ந்த சுரேந்திரன் இறுதியில் ஒரு முடிவெடுத்து தேர்வு எழுதினான் . சரியான விடையை எழுதுக  என்ற தொடர் அவனுக்குத் தெளிவைக் கொடுத்ததாக கதை நிறைவடைகிறது. திறமையாக க்கற்பித்தல் வேறு உண்மையாகக் கற்பித்தல் வேறு என்பது இக் கதையின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வரலாற்றுத் திரிபுகள் தொடர்ந்து நிகழலாம் அதை த்திருத்துவதற்கு யாரும் முன்வரவில்லை என்றால் வரலாறு மாறிவிடும். அதைத்தொடர்ந்து தவறுகள் மிகுதியாகும் அபாயம் வரலாம். தவறாகச்சொல்வதை சரி என்று சாதிக்கும் அதிகாரத்தின் குறியீடாக செருக்கு நிறைந்த சரித்திர ஆசிரியரும், உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்று உறுதியுடன் உண்மையை வெளிப்படுத்தும் ஒரு குரலாக சுரேந்திரனும் படைக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்துக்கும் தண்டனைக்கும் பயந்து மௌனம் சாதிக்கும் மாணவர்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும் சமூகத்திற்குக் குறியீடுகளாகப் படைக்கப்பட்டுள்ளனர்  சிவப்பிரகாசம் என்னும் கதை மாந்தர் படைப்பு வெற்றிக்கு அவரைப் பற்றிய அறிமுகம், வர்ணனை, அவர் மனப்பான்மையை  வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றைக் காரணிகளாகக்கூறலாம்.

சரித்திர வகுப்பு எடுக்கையில் பாடத்துடன் தொடர்புடைய மன்னன், மகுடம், மாளிகை, வாள்,உடை, உடைமைகளை வரையாமல் அவர் பாடத்துக்குள் நுழைபவர் அல்லர். அவர் நடத்துவது குறைவாக இருந்தாலும் அவரது மெனக்கெடல் நிறைவானதாக இருக்கும். அதற்கு உகந்ததாக தேர்ந்த கையெழுத்தும் எதையும் நுணுக்கமாக வரைந்து அசத்தி விடும் அசாத்தியமும் அவருக்குக்கை கூடி இருந்தது (பக்கம் 10)

பயந்த மாணவர்களின் செயல், வர்ணனைகள் எதற்கும் பயந்து பழக்கத்துக்கு அடிமையாகிப் போகிற சமுதாயத்தைச் சித்திரமாக்கும் வரிகளாகின்றன. . “மாணவர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல் ஒவ்வொரு ஆசனமாகச்செய்து முடிப்பார்கள்.” (பக்கம் 21) விளைவுகள் பற்றி கவலைப்படாது மேலும் மேலும் தான் நினைத்ததைச்சாதிக்கும் ஆதிக்க மனப்பான்மையைப் பொருத்தமான சொற்களில் வெளிப்படுத்தும் ஆசிரியரின் எழுத்துத்திறம் பாராட்டுக்குரியது.

சிவப்பிரகாசரின் பண்பினை வெளிப்படுத்தும் தொடர்கள் இவை. அப்பள்ளிக்கு வரும் எத்தகைய பிரச்சினையையும் தீர்க்கவேண்டிய. பிரச்சினையைத் தீர்த்தும் ,பெரிதாக்க வேண்டிய பிரச்சனையைப் பெரிதாக்கியும் தன் இருப்பைப் பள்ளி சரித்திரத்தில் தக்க வைக்க முடிந்திருக்கிறது. (பக்கம் 30)

தான் நினைப்பதைத் தன் மாணவன் கூற வேண்டும் என்ற மமதையால் அவர் செய்யும் செயல்களை மன உறுதியுடன் எதிர்கொள்கிறான் சுரேந்திரன். ஒவ்வொருமுறையும் அவன் மன உறுதி வெளிப்படுகிறது. தன் தோற்றத்துக்கு யோகா போன்ற கவசங்களை அணிந்து தன்னை பெரிய சக்தியாக காட்டிக்கொள்ளும் நிலை இச்சமூகத்தில் பொய்யும் மெய்யும் இரண்டறக் கலந்து நிற்கின்ற நிலையினைக் காட்டுகிறது.

ஒரு வினை அதன் எதிர்வினை இணைந்து ஒரே ஒரு நிகழ்வாக அமைந்த இச்சிறார் நாவல் 55 பக்கங்களைக் கொண்டுள்ளது. குறியீட்டு இயல் வகையில் அமைந்த இந்த நாவலை சிறார் எந்த அளவில், எந்தவகையில் எதிர்கொள்வார்கள் என்பது கேள்விக்குறி .மாணவர்களின் உணர்வுகள் பற்றிக் கவலைப்படாமல் திறம்படக் கற்பித்தல் தொழிலைச் செய்யும் ஆசிரியராக ஒரு ரோபோவையும் உணர்வற்ற ஜடப் பொருளாக மாணவர்களை நினைத்துப் பாடம் நடத்துவதாக வெற்று இருக்கைகளையும் காட்டி இருக்கும் அட்டைப்படம் சிந்தனைக்கு உரியது.

மாணவன் தொடங்கி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருடைய சமூகப் பொறுப்புணர்வை யும் உணர்த்துதல் என்ற அடிப்படையில் இந்த நாவல் வெற்றிபெற்றாலும் குறியீட்டியல் வகை நாவலுக்கு ஏற்ற இன்னும் பொருத்தமான கற்பனையை இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

முதல் பருவத் தேர்வைவிட ஆறாம் பருவத் தேர்வு எந்தவிதத்தில் முக்கியமானது? – பேராசிரியர்.நா.மணி

முதல் பருவத் தேர்வைவிட ஆறாம் பருவத் தேர்வு எந்தவிதத்தில் முக்கியமானது? – பேராசிரியர்.நா.மணி

  ‌உயர் கல்வித் துறையில் பணியாற்றுவோருக்கும் உயர் கல்வித் துறை பற்றி நன்கு அறிந்தோருக்கும் அதில் படித்த, படித்து கொண்டு இருக்கும் மாணவர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும். "இறுதித் தேர்வை நடத்தாமல் எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது"…