மதுரை புத்தகக் கண்காட்சி அனுபவம் – இரா. சண்முகசாமி

மதுரை புத்தகக் கண்காட்சி அனுபவம் – இரா. சண்முகசாமி




புத்தக வாசிப்பு அனுபவம் மட்டுமல்ல புத்தகக் கண்காட்சியே ஒரு வாசிப்பு அனுபவமாக இருந்ததை தங்களோடு பகிர்கிறேன் தோழர்களே!

03.10.2022 மதுரை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் புத்தகங்கள், தோழர் Amalarajan Arulraj அவர்களின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்நிகழ்வில் குழந்தைகளுக்காக நான் பாடல் பாட தோழர் வாய்ப்பளித்தது, அவர் அளித்த அவரின் ஒரிகாமி நூல் பரிசு, சகலகலா வல்லவர் தோழர் #சதமிழ்ச்செல்வன் அவர்களின் வாசிப்புத் தேடல் கலை குறித்த உரை என முக்கனிச் சுவையாக நிறைந்திருந்தது.

முக்கியமான நிகழ்வை முதலில் சொல்லிவிடுகிறேன் அந்தக் குழந்தையின் பெயர் மாறவர்மன் செல்லைய்யா என நினைக்கிறேன். ஆஹா காகம்-நரி கதையை மூன்றாவது கட்டத்துக்குக் கொண்டு சென்றான். ஆம் நரியையும் உழைக்க வைத்து அதையும் பாட்டியிடம் வடை வாங்க வைத்து கதைக்கு புதிய உயிர் கொடுத்தான். நான், உழைப்புச் சுரண்டலை ஏமாற்றிய நரியை காகங்கள் அனைத்தும் கூடி காலி செய்ததை சொல்ல இருந்தேன். அப்போது “குழந்தைகள் யாராவது இந்தக் கதையை கூறுகிறீர்களா?” என்று நான் கேட்டபோது மைக்கை வாங்கி அழகியலை உருவாக்கினான் மாறவர்மன். சபாஷ் என்று அவனை உச்சிமுகர்ந்தேன்.

அடுத்து,

தமிழகத்தில் முதல் முறையாக புத்தகக் கண்காட்சி குளிரூட்டப்பட்ட மாபெரும் அரங்கில் நடந்தது எனில் அது மதுரை மண்ணில் தான் தோழர்களே. அது வாசகர்களுக்கும், குறிப்பாக புத்தக அரங்கில் தொடர்ச்சியாக பணிபுரிபவர்களுக்கும் மிகுந்த மனநிறைவாக இருந்தது. அதற்கு காரணம் மதுரை மண்ணின் செங்கொடியின் புதல்வன் தோழர். வெங்கடேசன் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பங்களிப்புமே காரணம் என்று தெரியவந்தபோது அவர்கள் இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்.

இன்னும் நிறைய அனுபவங்களை பகிரலாம். இன்ப அதிர்ச்சியாக தோழர் Venpura Saravanan அவர்களும், அவர்களின் இணையரையும் சந்தித்தது; அவர்கள் அளித்த உபசரிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

தூங்கா நகரின் புத்தகக் கண்காட்சியின் அரங்குகளில் இரண்டு நாட்கள் தூங்காமல் புத்தகங்களை வாங்கி குவித்த Visakan Purushothaman தோழரை இடையில் சந்தித்து இடையிலேயே விட்டுவிட்டு வந்தேன். அவர் இன்னும் அங்கே இருக்கிறாரா இல்லை புதுச்சேரி வந்துவிட்டாரா என்று தெரியவில்லை.

தோழர் Mohammed Sirajudeen அவர்கள் வேறெங்கேயும் புத்தகங்கள் வாங்காமல் பாரதி புத்தகாலயத்தில் மட்டுமே  வாங்கவேண்டும் என்பது போல நிறைய புதிய புதிய தலைப்புகளில் புத்தகங்களை குவித்து வைத்திருந்ததால் அங்கே புத்தகங்களையும், கூடுதலாக முகநூல் தோழர் Mohan Kumara Mangalam அவர்களின் நூல் ‘வைகைவெளி தொல்லியல்’ நூலை ‘கருத்து-பட்டறை’யிலும் மட்டுமே வாங்கிவிட்டு மற்ற அரங்குகளை காட்சிப்பொருளாக மட்டுமே பார்க்க நேரிட்டது. வீட்டில் இணையரின் கட்டுப்பாடும் கையை கட்டிப்போட்டது.

அய்யோ தோழர் சிவா கலகலவகுப்பறை அவர்களை மறந்தே விட்டேனே. அப்பப்பா இனிமையான பேச்சு, குழந்தைகளின் அரங்கை கடந்த 11 நாட்கள் பள்ளிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு ஒருங்கிணைத்தும், தொல்லியல் கண்காட்சியை அமைத்து அழகுபடுத்தியதையும் மறந்ததற்கு தோழரிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவருடைய நூலில் வந்த அழகியலை தோழர் அமலராஜன் அவர்களுடன் இணைந்து கலந்துரையாடியது மறக்கமுடியாத அனுபவம். அன்புத் தோழர் #சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!
Madurai Book Fair Experience - Ira. Shanmugasamy மதுரை புத்தகக் கண்காட்சி அனுபவம் - இரா. சண்முகசாமி
இப்படியாக மதுரை மண் மிகவும் அருமையாக வரவேற்று வழியனுப்பி வைத்தது!
இன்னும் சில சுவையான, நகைச்சுவையான செய்திகளை அடுத்த பதிவில் வழங்குகிறேன் தோழர்களே!
அழகிய மதுரை மண்ணிற்கு மிக்க நன்றி!
புத்தகங்களை இணையத்தில் பெற www.thamizhbooks.com
தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.
நிதானமான வேகம் கட்டுரை -R.இராஜமோகன்

நிதானமான வேகம் கட்டுரை -R.இராஜமோகன்




அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (setc) ஓட்டுனராகவும் ஓட்டுனர் பயிற்சி ஆசிரியராகவும் (DRIVING INSTRUCTOR)  32 ஆண்டுகள் பணிபுரிந்து சென்ற 2018 ஓய்வு பெற்றுள்ளேன்.

தமிழகத்தின் தலைநகரிலிருந்து அனைத்து மாவட்டங்களின் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து ஓட்டி இருக்கிறேன். ஆனாலும் அதிக காலம் வண்டி ஓட்டியது சென்னை கும்பகோணம் (தடம் எண் 303) வழித்தடத்தில் தான். பெரும்பாலும் இரவு நேரப் பணி தான்  தினசரி சாலைகளில் விபத்துகளைப் பார்த்துப் பார்த்து வேதனை அடைந்ததுடன் நானும் மிக மோசமான விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறேன் எனது தொழிலைப் பற்றி நினைக்கும்போது “மிகவும் பொறுப்பான கடமை உணர்வு மிக்க பொதுச் சேவை செய்து உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய உயர்வான தொழில் என பெருமை கொள்வதா ? அல்லது “அதிக படிப்பறிவில்லாத முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள் ( பேருந்து லாரி ஓட்டுனர்கள் பற்றி பொதுமக்கள் மத்தியில் அப்படித்தான் கருத்து நிலவுகிறது) தேர்ந்தெடுக்கக்கூடிய பாதுகாப்பு இல்லாத உயிரை பணயம் வைக்க கூடிய இரவு பகல் தூக்கம் இல்லாத மிக கடினமான தொழில் என வருத்தம் கொள்வதா?  ஒரு தீர்மானமான முடிவுக்கு வருவதற்கு நேரமில்லை வருடங்கள் உருண்டோடிவிட்டன.

 பதவி உயர்வு பெற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை பணியிடமாகக் கொண்டு பணி தொடர்ந்தேன்.  விபத்துக்களை ஆய்வு செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அதாவது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் எமது பேருந்துகளில் விபத்துகள் நேரிட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளுக்கு உதவி செய்து மாற்றுப் பேருந்துகளில் அனுப்பவேண்டும். காவல்துறையினருடன் இணைந்து TRAFFIC CLEAR செய்ய வேண்டும்.  விபத்தின் தன்மைக்கேற்ப காவல் நிலையம் அரசு பொது மருத்துவமனை மற்றும் RTO அலுவலகத்திற்கு நான் நாள் கணக்கில் அலைய வேண்டி இருக்கும். இறுதியாக ஆய்வறிக்கை ACCIDENT REPORT தயார் செய்து தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும் அதன் அடிப்படையில் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும். இதுவே என் பணி.

ஓட்டுநர் பணியை விட இந்த பணியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கொடுமையானவை. மிக மோசமான விபத்துக்களைப் பார்த்துப் பார்த்து, ஓய்வுக்குப்பின் எப்பாடுபட்டாவது சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும்

என்ற தீர்மானத்துடன் பத்திரிகைகளில் எனது அனுபவங்களைக் கட்டுரையாக எழுதினேன். அகில இந்திய வானொலி நிலையத்தின் காரைக்கால் பண்பலை 100.3-ல்  ஒரு மணி நேர பேட்டியளித்தேன். இந்த நிகழ்ச்சிஅனுபவம் அற்புதம்” என்கிற தலைப்பின் கீழ் 2020இல் ஒலிபரப்பாகி வானொலி நேயர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து TNSTC KUMBAKONAM மண்டல தலைமையக பயிற்சி பள்ளியில் ஓட்டுநர்களுக்கான ஒருநாள் சிறப்புப் பயிற்சி வகுப்பு எடுத்தேன். எமது நிர்வாகத்தினர் எனது வேண்டுகோளுக்கிணங்க சென்னை, திருச்சி, மதுரை பயிற்சிப் பள்ளிகளில் வகுப்பு எடுக்க என்னை அனுமதித்தனர்.  மேலும் கும்பகோணம் சுற்றி உள்ள பள்ளி கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கும் விபத்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தி வருகிறேன்

என்னுடைய வகுப்புகளில் கலந்து கொள்ளும் எனது தம்பிகளான ஓட்டுநர்களுக்கு நான் அறிவுரைகள் ஏதும் வழங்குவது இல்லை. மாறாக என் அனுபவங்களை விளக்கமாகச் சொல்லுகின்றேன். சாதாரண வகுப்பறையில் கரும் பலகையில் வரைந்து மிக மோசமான கொடூரமான விபத்துகளை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறேன்.  இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன வசதிகள் SENSOR CONTROL எதுவுமே இல்லாத வாகனங்களைச் சாதாரணமான manual steering – இல் இயக்கி ஒரே சாலையில் (போகவும் வரவும்) மற்ற வாகன ஓட்டிகளை (குறிப்பாகச் சைக்கிள் ஓட்டிகள்) எப்படி அனுசரித்து ஓட்டினோம் என்பதை விளக்குகிறேன். எப்போதுமே ஒரு ஹெவி ஓட்டுநருக்குச் சவாலாக இருப்பவர் மற்றொரு ஹெவி வண்டியின் ஓட்டுனர்கள் அல்ல.  இந்த வண்டியை அவர் எப்படி எதிர் கொள்வார் என்பதை இங்கிருந்தே அவரது மனநிலையை இந்த ஓட்டுனரால் கணிக்க முடியும். ஆனால் எந்த வகையிலும் கணிக்க முடியாதவர்கள், சவாலாக இருப்பவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் தான்!  எங்கிருந்து வந்தார், எந்த பக்கம் நுழைந்தார், நம் வாகனத்தை எப்படி முந்தினார் எதையுமே கணிக்க முடியாது.  பெரிய வண்டி ஓட்டுநர் RV  கண்ணாடியில் இருசக்கர வாகனத்தைக் கவனித்த அடுத்த வினாடியே புயல்போல் முந்தி சென்று விடும். முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் பற்றியோ எதிரில் வந்து கொண்டிருக்கும் வாகனம் பற்றிய பயமோ கவலையோ இல்லை. 

ஒருவர் மட்டும் செல்லும் இருசக்கர வாகனம் சரியான வேகத்தில் நிதானமாகச் செல்லும் என நம்பலாம். இருவர் செல்லும் வாகனம் ஓரளவு கவனமாகக் கடந்து செல்லும். மூவர் அல்லது நால்வர் (குறிப்பாக நண்பர்கள்) செல்லும் வாகனம் எந்தவிதமான விதிகளுக்கும் கட்டுப்படாது. அந்த நேரம் சாலையைப் பயன்படுத்தும் மற்ற

எல்லோரையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இன்றைய சமுதாயத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது  மூன்று இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஆனால் ஹெல்மெட் எத்தனை உள்ளது? அதை எத்தனை பேர் முறையாகப் பயன்படுத்துகிறோம்? எத்தனை ஹெல்மெட்டுகள் சுவாமி அறையில் தொங்க விடப்பட்டுள்ளன? ஹெல்மெட் என்பதன் உண்மையான அர்த்தம்உயிர்காக்கும் உத்தமதோழன் என்பதுதான். பயணத்தின்போது அணியவும் பின்பற்றவும் தேவை சில நிமிடங்கள் தான். அந்த சில நிமிடங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் பல வருடங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை உணருங்கள் ஹெல்மெட் அணிய தயங்காதீர்; இனிய உயிரை இழக்காதீர். இந்த சாலையைப் பயன்படுத்தும் யாரையும் நம்பாதீர்கள். யாருக்கும் முறைப்படி ஓட்டத் தெரியவில்லை, சாலை விதிகளை யாரும் அறிந்திருக்கவில்லை, முரட்டுத்தனமாக ஓட்டுகிறார்கள் என்று நினையுங்கள். நீங்கள் மட்டுமே எல்லாம் அறிந்து முறைப்படி ஓட்டுவதாக நம்புங்கள். இந்த நம்பிக்கையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பக்குவத்துடன் ஓட்டுவீர்களாயின் விபத்துக்கு வாய்ப்பே இல்லை

என்னுடைய கிளை மேலாளர் விபத்துக்குள்ளான ஓட்டுனரை விசாரிக்கும் போது அந்த ஓட்டுனர் கூறுவார் : அவன் வலது பக்கம் திரும்ப போகிறான் என்று நினைத்தேன் ஐயா அவன் திடீரென்று நிறுத்திவிட்டான் நம் வண்டி பின்னால் மோதி விட்டது என்பார். உன்னை இவர், அவன்  என்ன நினைத்தார் நீ என்ன நினைத்தாய் என்று நான் கேட்கவில்லை என்ன நடந்தது அதை மட்டும் சொல் என்பார்.  சாலையைப் பயன்படுத்தும் எவரும் என்ன நினைக்கிறார் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை மற்ற வாகன ஓட்டிகள் தீர்மானிக்க முடியாது. போதுமான இடைவெளியுடன் முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஒன்றினால் மட்டுமே பின்பக்கம் மோதலை தவிர்க்க முடியும் ஒரு பேருந்தின் பாதுகாப்பான வேகம் என்ன என்ற கேள்விக்கு 40 KMPH 50, 60 என்று பல ஓட்டுநர்கள் பதிலளித்தனர்.

பேருந்து மட்டுமல்ல வேறு எந்த வாகனமாக இருந்தாலும் சரி ; இடத்திற்குத் தகுந்த வேகமே பாதுகாப்பானது என்பதே சரியான பதில்.  60 KMPH தாண்டியும் கூட ஓட்டலாம்; அதற்கான சாலைகள் உள்ளன. ஆனால் நகர எல்லைக்குள் நெரிசலான சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், பள்ளி அருகாமையில் ரவுண்டானாக்களில், மேம்பாலங்களில், பேரிகார்டு ஸ்பீடு பிரேக்கரில், ரயில்வே கிராசிங்கில், சர்வீஸ் ரோடு துவக்க முடிவு சாலைகளில் அரசு பொது மருத்துவமனை சாலைகளில் இப்படிப் பல இடங்களுக்கும் பல வேகங்கள் உள்ளன. இவற்றை நினைத்துக் கொண்டே ஓட்ட  வேண்டியதில்லை. மூளையில் பதிந்து விட்டால் தானாகவே அந்தந்த இடங்களில் கைகள் அனிச்சையாகச் செயல்பட்டு வேகத்தை மட்டுப்படுத்தி விடும்

பல வருடங்கள் பேருந்து லாரிகளில் பணிபுரிந்து கூட பல ஓட்டுனர்களிடம் பல தவறான ஓட்டும் முறைகள் பதிந்து போயிருக்கும். அவை தவறானவை என்பது கூடப் புரியாமல் சுலபமானவை என்றே புரிந்து கொண்டிருப்பார்.  தன் கிளீனருக்கும்  அதையே சொல்லிக் கொடுப்பார். உதாரணமாகப் பகல் நேரங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்வது. அதாவது இவர் செல்லும்வரை எதிரில் வரும் எல்லா வாகனங்களும் வழிவிட்டு ஓரமாய் நிற்க வேண்டுமாம். இவர் சென்ற பின் தான் மற்ற வாகனங்கள் செல்ல வேண்டுமாம் இந்த விதியை இவர் (குறிப்பாக தனியார் பேருந்து ஓட்டுனர்கள்) எந்த பயிற்சி பள்ளியில் கற்றாரோ தெரியவில்லை. சாலையின் இடது புறம் மட்டுமே உங்களுடையது; வலதுபக்கம் எதிரில் வருபவர்களுக்குத் தான் சொந்தமானது எதிரில் வாகனம் வரும்போது லைட் போட்டு காட்டி (அது எந்த வாகனமாக இருந்தாலும் சரி) நிற்க சொல்ல எவருக்கும் உரிமை, அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் காவல்துறை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜன்ஸி வாகனங்களுக்கு மட்டுமே உரியது. அதேபோல் ஓட்டுனர் இருக்கையில் சரியாக நேராக நிமிர்ந்து அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து ஸ்டியரிங்கை முறையாக பிடித்து (க்ளாக் வைஸ் 3-9) ஓட்டினால் மட்டுமே அந்த வாகனம் ஓட்டுனருக்கு கட்டுப்பட்டு ஓடும். அப்படி தான் ஒவ்வொரு வாகனமும் உற்பத்தியின் போதே வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் ஓட்ட வேண்டும். மாறாக சீட்டில் CROSS ஆக அமர்ந்து ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்து மற்றொரு கையில் SHIFT ROD அல்லது ஹாரனை அலட்சியமாக அடித்து ஸ்டைலாக RV கண்ணாடியைப் பார்க்காமலேயே இடது பக்கம் அமர்திருப்பவருடன் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு ஓட்டுவீர்களாயின் இன்றல்ல நாளை அல்ல சில தினங்களுக்குள் நீங்களோ உங்கள் பயணியோ  அல்லது சாலையை பயன்படுத்திய யாரோ  ஒரு அப்பாவியோ மருத்துவமனையில் படுக்கப் போவது உறுதி. அதற்கான தண்டனையும் உமக்குத்தான், உயிரோடு இருந்தால் !

ஒரு சமுதாயம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு “நீ உனது குடும்பத்தை நேசி ஒவ்வொரு தனி மனிதனும் தன் உயிரைவிட குடும்பத்தை நேசித்து அதற்காகவே தன் உழைப்பை வாழ்க்கையை அர்ப்பணிப்பானாயின் இந்த சமுதாயம் மிக சிறப்பாக அமையும்” என அன்னை தெரசா கூறியதாகப் படித்திருக்கிறேன். ஒரு நல்ல ஓட்டுனராகிய நீங்கள் உங்கள் வாகனத்தை நேசியுங்கள். நேசிப்பு என்பது யாருக்கும் இரவல் கொடுக்காமல் இருப்பது மட்டுமல்ல. சிறப்பாகப் பராமரித்து அதன் தேவைகளைப் புரிந்து கொண்டு கழுவி துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். நேரமில்லையா (வாரம் ஒருமுறை) உங்கள் வாகனமானது எஞ்சின் சத்தம், ஹெட்லைட் வெளிச்சம், ஹாரன் சத்தம் போன்ற பல மொழிகளில் உங்களிடம் பேசும் என்னிடம் பேசி இருக்கிறது ! அந்த மொழிகள் உங்களுக்கு மட்டுமே புரியும் புரிந்துகொண்டு ஓட்டுங்கள் அழகாக ஓட்டலாம்

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்” எனத்துவங்கும் பழைய பாடலில் எங்கே வாழ்க்கை தொடங்கும் என்ற சரணத்தைக் கவியரசு கண்ணதாசன் நமக்காகத்தான் அன்றே எழுதி இருக்கிறார் என தோன்றுகிறது. அனுபவித்துக் கேளுங்கள் ஆழ் மனதில் ஆணி அடித்து  வைத்துக்கொள்ளுங்கள் நிதானமான வேகம் நிம்மதியான பயணம் அதிரடி வேகம் ஆபத்தில் தான் முடியும். சென்னை கோயம்பேடு காவல் நிலைய வாசலில் பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த வாசகம் கல்வெட்டு போல் மனதில் பதிந்து விட்டது அதாவது சாகசம் புரியும் இடம் சாலைகள் அல்ல மெதுவாகச் செல்பவர்கள் கோழைகள்  அல்ல உண்மைதான் நிதானமாகப் பொறுப்புடன் கவனமாக ஓட்டுபவரை கண்டால் மற்றவர்களுக்கு இலக்காரம் தான் பயந்த சுபாவம் ஓட்டத்தெரியாதவன் உள்ளவன் என்றுதான் நினைக்கின்றனர். பரவாயில்லை அப்படியே இருக்கட்டும் அதிவேகம் செல்பவன் யார் தெரியுமா அரக்கன்! மனித உயிர்களைப் பலி கொள்ளத் துடிக்கும் இரத்த வெறிபிடித்த மிருகம். நீங்கள் மனிதனா மிருகமா…?

இன்றைய வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துகளுக்கு அடுத்தபடியாக பெரும் சவாலாக மன உளைச்சலாக உள்ளது எரிபொருள் சிக்கனம் தான். நான் சொல்வதைக் கேளுங்கள். தானாக டீசல் பெட்ரோல் மிச்சமாகும். ஒரு தாய் வயிற்றில் இரட்டை குழந்தைகள் தான் விபத்தில்லா இயக்கம் எரிபொருள் சிக்கனம் ஒரு கல்லில் ஒரு மாங்கா அடித்தவன் திறமைசாலி ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடித்தவன் அதிர்ஷ்டசாலி நீங்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள். விபத்து விழிப்புணர்வோடு வாகனம் ஓட்டுங்கள் எரிபொருள் மிச்சமாகும்; எரிபொருள் சிக்கனம் எண்ணத்துடன் வாகனம் ஓட்டுங்கள் விபத்து ஏற்படாது அதற்கு நான் கேரண்டி! எரிபொருள் சிக்கனத்திற்கான உயரிய விருதினை நான் அன்றைய போக்குவரத்து செயலர் திரு தீபேந்திரநாத் சாரங்கி அவர்களிடம் பெற்றுள்ளேன். Nithanamana Vekam Article By R.Rajamohan நிதானமான வேகம் கட்டுரை - R.இராஜமோகன்இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என் மகன் “சொல்லவந்ததைச் சுருக்கமாகச் சொல்லி சிக்கனமாக எழுதலாமே” என்றார். எனக்கு அப்படி எழுத தெரியவில்லை. காரணம் என் சர்வீஸில் முப்பது ஆண்டுகளில் பல பேருந்துகளை ஒட்டியிருக்கும் மொத்த தூரம் 26 லட்சத்து 37 ஆயிரம் கிலோமீட்டர்கள் இதையும் தாண்டி ஓட்டிய சாதனையாளர்கள் இருக்கின்றார்கள். சிக்கனமாகக் கொஞ்ச தூரம் ஓட்டி இருக்கவில்லை, அதேபோல சிக்கனமாக எழுதவும் தெரியவில்லை என்னுடைய அனுபவங்களைப் போலவே  என்னுடைய விளக்கங்களும் சற்று விரிவாக தான் வருகின்றன.

அதிக வாகனங்களைக் கொண்டு செயல்படக் கூடிய எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அதன் ஓட்டுநர்களுக்கு விபத்தில்லா இயக்கம் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுக்க தயாராக உள்ளேன். ஓய்வு காலத்தில் பொழுதைப் போக்குவதற்காக இதில் நான் ஈடுபடவில்லை உழைத்து ஓய்ந்த பின்னும் என் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் அளித்து என்னை நம்பிக்கையுடன் புதிய ஓட்டுநர்களுக்கு வழிகாட்டியாய் அமர்த்தி அழகு பார்க்கும் எனது நிர்வாகத்திற்கு (SETC) நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் . 62 வயது நடந்து கொண்டிருக்கிறது இனி வாழப்போகும் நாட்கள் பயனுள்ளதாக என் ஓட்டுனர் சமுதாய தம்பிகளுக்காக விபத்துக்களைத் தடுத்திட என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றேன். விபத்துக்களே இல்லாத தமிழகமே எனது குறிக்கோள். விபத்துக்களைக் குறைத்திடும் உயிர் காக்கும் பணியில் அல்லும் பகலும் வெயிலிலும் மழையிலும் தளராமல் உழைக்கும் தமிழக போக்குவரத்து காவல் துறைக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கும்  இதே பணியில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு அமைப்புகளும் சிறு உதவியாக என் பணி அமையும் என நம்புகிறேன் நன்றி வணக்கம்.

R.இராஜமோகன்
SETC DI RTD
கும்பகோணம்
செல் :9952295910
9789604577

நூல் அறிமுகம் :  S.மாணிக்கவாசகத்தின் ’தூங்காமல் தூங்கி’ (போற்றத்தக்க பெருவாழ்வு கட்டுரை) – பாவண்ணன்

நூல் அறிமுகம் : S.மாணிக்கவாசகத்தின் ’தூங்காமல் தூங்கி’ (போற்றத்தக்க பெருவாழ்வு கட்டுரை) – பாவண்ணன்



போற்றத்தக்க பெருவாழ்வு
பாவண்ணன்

அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டிருக்கும் பேரனின் முதுகைத் தட்டியபடியோ அல்லது தோள்மீது சாய்ந்திருக்கும் பேத்தியின் காலைத் தட்டியபடியோ ஒன்றையடுத்து ஒன்றென கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் அவர்கள் கண்ட ஒவ்வொரு அனுபவத்துக்கும் காலும் கையும் இறக்கையையும் ஒட்டி கதைகளாக மாற்றிவிடுவார்கள். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். கதைகள் இல்லாத மனிதனே இல்லை.

இன்று தொழில்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. கல்வி பல கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது. வண்டலைக் கொண்டுவந்து சேர்க்கும் ஆற்றுவெள்ளத்தைப்போல புதிய கல்வியும் புதிய வேலையும் வாழ்க்கையில் புதிய அனுபவங்களைக் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. தொழில்சார் அனுபவப்பதிவுகள் இலக்கியத்தில் ஒரு முக்கியமான வகைமையாக இடம்பெறத் தொடங்கிவிட்டன. மயக்க இயல் மருத்துவராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த எஸ்.மாணிக்கவாசகன் என்னும் மருத்துவர் தன் பணிக்கால அனுபவங்களை தூங்காமல் தூங்கி என்னும் தலைப்பில் 2008இல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.

ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மயக்கவியல் மருத்துவர்தான் முதலில் சந்திக்கிறார். நோயாளியின் வயது, ஆரோக்கியம், நோயின் தன்மை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோயாளிக்குக் கொடுக்கவேண்டிய மயக்க மருந்தின் அளவை அவர் தீர்மானிக்கிறார். மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் நோயாளி மெல்லமெல்ல மயங்கி ஒருவித தூக்கநிலைக்குச் சென்றுவிடுகிறார். தசைகள் தளரத் தொடங்குகின்றன. அறுவை சிகிச்சை முடிந்ததும் மீண்டும் சுய உணர்வுக்கு மீட்டு வரும் மருந்தை அளித்து கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு நிலைக்குக் கொண்டு வருகிறார் மருத்துவர்.

கோட்பாடு அளவில் இப்படி சுருக்கமாகச் சொல்வது வேறு. வெற்றிகரமாக செயல்படுத்து வேறு. இடையில் எதிர்பாராத விதமாக சிக்கல்கள் நேரக்கூடும். ஒவ்வொரு சிக்கலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அறிவையும் அனுபவத்தையும் உள்ளுணர்வையும் துணையாகக் கொண்டு மருத்துவர் அவற்றை எதிர்கொள்கிறார். மருத்துவரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு புத்தம்புதிய அனுபவம். ஒவ்வொன்றிலும் ஒரு சாகசம் நிறைந்துள்ளது. தன் மருத்துவமனை வாழ்வில் தான் பெற்ற அனுபவத்தொகையிலிருந்து ஒருசில அனுபவங்களை மட்டுமே மருத்துவர் மாணிக்கவாசகன் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். அவர் இன்று இல்லை.

ஒவ்வொரு அனுபவப்பதிவிலும் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் வாழ்க்கைச்சூழலைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அறுவைக்கூடத்திற்குள் நோயாளி இருக்கும்போது, நோயாளியோடு தொடர்புடைய மனிதர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள். அவர்களிடையே வெவ்வேறு விதமான உறவுகள். உரசல்கள். மோதல்கள். ஒரு விரிவான காட்சியில் சிற்சில சொற்களோடு அவர்கள் அனைவருடைய சித்திரங்களும் இடம்பெற்றுவிடுகின்றன. இக்குறிப்புகள் ஒரு வாசகனை உடனடியாக ஒரு வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கிறது. இத்தகு அனுபவப்பதிவுகளின் வெற்றி என்பது, இவை ஏதோ ஒரு வகையில் மானுடவாழ்வுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கிறது என்னும் அம்சமே. அக்குறிப்புகள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. பத்து வரிகள் இருந்தாலும் போதும், வயல்சேற்றோடு கலந்து கரைந்துபோகும் உரப்பொடியைப்போல நெஞ்சின் ஆழத்தில் சென்று அவை தங்கிவிடுகின்றன.

இப்படிப்பட்ட அனுபவ நினைவோடைகள் ஏன் எழுதப்படவேண்டும் என்னும் கேள்விக்கு வேறெங்கும் காணமுடியாத மனிதர்களை இத்தகு அனுபவப்பதிவுகளே நமக்கு வழங்குகின்றன என்பதுதான் சிறந்த பதில். எல்லாப் பதிவுகளிலும் இழையோடிக்கொண்டிருக்கும் மருத்துவரின் கனிவும் மனிதாபிமானமும் இப்பதிவுகளை மிகமுக்கியமான தொகுதியாக மாற்றிவிடுகின்றன.

ஒரு பதிவு. இரு குழந்தைகளுக்குத் தாயான பிறகு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். கருக்குழாய் இணைப்பு சிகிச்சைக்காக அவள் வந்திருந்தாள். குழம்பிப்போன மருத்துவர் அவளிடம் கனிவோடு பேசியபோது உண்மை விவரம் தெரிந்தது. அவள் கடலோரத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆழிப்பேரலை அவளுடைய கணவனையும் குழந்தைகளையும் இழுத்துச் சென்றுவிட்டது. யாரும் இப்போது உயிருடன் இல்லை. கணவனின் தாயார் அவளுக்கு ஆறுதல் சொல்லி தம் குடும்பத்திலேயே தங்கவைத்துக்கொண்டார். பற்றற்ற பார்வையுடன் நடைப்பிணமாக இருந்த அவளுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்குவதற்காக, கணவனின் தம்பியையே அவளுக்குத் திருமணம் செய்துவைத்தார். குழந்தை இல்லாத வாழ்க்கை அவளுக்கு வெறுமை சூழ்ந்ததாக இருந்தது. ஒரு குழந்தை அவளுடைய வாழ்க்கைக்கு மலர்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கக்கூடும் என அவள் குடும்பம் நினைத்தது. மருத்துவத்தில் கருக்குழாய் இணைப்புக்கு வழி இருக்கிறது என எப்படியோ யார்மூலமாகவோ அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துவிட்டனர். எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும் சூழலற்ற அந்த அபலைப்பெண் பற்றற்ற குரலில் பகிர்ந்துகொண்ட சொந்தக்கதையைக் கேட்டு மருத்துவரும் ஒருகணம் நிலைகுலைந்து போய்விட்டார். மனபாரத்துடன் மெளனமாக சிகிச்சைக்காக அவளைத் தயார்ப்படுத்தினார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

இன்னொரு பதிவு. கழுத்துக்கழலையுடன் அறுவைசிகிச்சைக்காக ஒரு பெண்மணி மருத்துவமனைக்கு வந்தார். அவருக்குத் துணையாக பதினாலு வயதுப் பையனொருவனும் வந்திருந்தான். அறுவைக்கூடத்தில் மருத்துவர் மாணிக்கவாசகம் மயக்கமருந்து கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது மூத்த மருத்துவர் ஒருவர் வந்து, அதைத் தான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லி, அவரை மற்ற நோயாளிகளைக் கவனிக்க அனுப்பிவிட்டார். துரதிருஷ்டவசமாக மயக்க மருந்து செலுத்தியதும் நோயாளியின் உடலில் நீலம் பரவத் தொடங்கிவிட்டது. மாணிக்கவாசகம் அவசரமாக அறுவைக்கூடத்துக்கு அழைக்கப்பட்டார். நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு நோயாளியைத் தூக்கநிலையில் வெற்றிகரமாக மூழ்கவைத்தார் மாணிக்கவாசகன். அதற்குப் பிறகு அந்தக் கழலைநீக்க அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. கூடத்தைவிட்டு வெளியேறியபோது, அந்தத் தாயின் பையன் மாணிக்கவாசகத்தின் காலில் விழுந்து நன்றி சொன்னான். அதற்குப் பிறகுதான் பேச்சுக் கொடுத்து அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் மாணிக்கவாசகன். தந்தை இல்லாத குடும்பம். கொஞ்சம் நிலங்கள் உண்டு. சொந்தமாக பம்ப்செட்டும் இருந்தது. தாயும் மகனும் நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து குடும்பம் நடத்தினர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெண்மணி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது கருப்பைநீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டாள். பையன் இப்போது இளைஞனாகிவிட்டிருந்தான். தன் அம்மாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டான். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவள் மருத்துவமனைக்கு வந்தாள். வயிற்று வீக்கம். வலி. சோதனைகளில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. அப்போதும் அவன் துணைக்கு வந்திருந்தான். கையிலும் கழுத்திலும் தங்கச்சங்கிலிகள் கண்ணைப் பறித்தன. அவனுடைய புதுக்கோலம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. புற்றுநோயைப்பற்றியும் அவளைப் பிழைக்கவைப்பது கடினம் என்பதையும் நோயாளியிடம் எப்படி தெரிவிப்பது என்று மருத்துவருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அதனால் அவரைப் பார்ப்பதை ஒன்றிரண்டு நாட்கள் தவித்தார். பிறகு உண்மையைச் சொல்வதற்காக அந்தப் பெண்மணியைச் சந்தித்தார். துணைக்கு இருந்த மகனை சாப்பிட்டு வருமாறு சொல்லி அனுப்பிவைத்தாள் அவள். பிறகு, மருத்துவர் பேசுவதற்கு முன்பாக, மருத்துவரிடம் அவள் மனம் திறந்து பேசத் தொடங்கினாள். தனக்கு வந்திருக்கும் நோய் பற்றியும் தான் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது பற்றியும் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொன்னாள். நிலத்தில் தன்னோடு உண்மையாகப் பாடுபட்டு உழைத்த மகனுக்கு திருமணம் செய்துவைத்ததையும் அதற்குப் பிறகு அவனுடைய இயல்பு கொஞ்சம் கொஞ்சமாக திரிபடைந்துவிட்டது என்றும் சொன்னாள். செல்வம் சேர்க்கும் ஆசையால் மகன் சேரத் தகாதோரிடமெல்லாம் கூட்டுசேர்ந்து கெட்டுப் போனதையும் அவர்களோடு சேர்ந்து கோவில் நகைகளைத் திருடி விற்றுப் பணமீட்டுவதையும் சொன்னாள். ஒரு நள்ளிரவில் வீட்டுக்குப் பின்பக்கம் ஒரு சிலையைப் புதைத்துவைப்பதை நேருக்கு நேர் பார்த்தபோது அடிவயிற்றில் சுருக்கென்று ஒரு வலி படர்ந்ததையும் அக்கணத்திலிருந்து அந்த வலி பாடாய்ப்படுத்துவதையும் சொன்னாள். “என்னைத் தண்டிச்சதோடு விட்டுடு தெய்வமே, என் குடும்பத்தை ஒன்னும் செஞ்சிடாத. என் புள்ளைக்கு நல்ல புத்தியை கொடு” என்பது மட்டுமே இறைவனிடம் தான் முன்வைக்கும் பிரார்த்தனை என்றும் சொன்னாள். “அறுதலை பெத்த தருதலையாயிடுச்சின்னு நாலு பேர் சொல்றத காது கொடுத்து கேக்கறதுக்கு முன்னால நான் போய் சேர்ந்துடணும். என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர். எனக்கு ஆப்பரேஷன்லாம் செய்யவேனாம். போற உயிர் என் வீட்டுலயே போகட்டும்” என்று கேட்டுக்கொண்டாள். ஒழுக்கத்துக்கும் பாசத்துக்கும் நடுவில் ஊசலாடும் அந்தத் தாயின் வேதனை பல நாவல்களுக்குரிய களம்.

செயற்கை சுவாசம் கொடுக்கக்கூடிய வென்டிலேட்டர் கருவிகள் இல்லாத ஒரு காலத்தி மாணிக்கவாசகம் பணிபுரிந்திருக்கிறார். மூச்சுக்குத் தேவையான ஆக்சிஜனை ஒரு பையில் நிரப்பி, அதை ஒருவர் ஒரு நிமிடத்துக்கு பதினைந்து முறை என்கிற கணக்கில் சீராக அழுத்தி அழுத்தி சுவாசத்துக்காக இணைக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாக அனுப்புவதுதான் அன்றைய நடைமுறையாக இருந்தது. ஒருமுறை, திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துவிட்ட மருத்துவக் கல்லூரி மாணவியொருத்தியை அறுவைக்கூடத்தில் சேர்த்து சிகிச்சையளிக்கும் நெருக்கடி உருவானது. அறுவை முடிந்த பிறகும் சுயநினைவு திரும்புவதற்குத் தேவையான மருந்துகளை அளித்தபோதும் அவள் சுயநினைவுக்குத் திரும்பவில்லை. அவள் பிழைப்பாளா மாட்டாளா என்பதைத் தெளிவுற எடுத்துச் சொல்ல இயலாத நிலையில், இரவும் பகலும் மருத்துவர்கள் மாறிமாறி உட்கார்ந்து பன்னிரண்டு நாட்கள் தொடர்ச்சியாக செயற்கை சுவாசமளித்தனர். பதின்மூன்றாவது நாள் அவள் மெதுவாக கண்விழித்துப் பார்த்தாள். பிறகு மெல்ல மெல்ல சுயநினைவு பெற்றாள். ஓர் உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு பெரிய மனநிறைவு என்பதை அனைவருமே அக்கணத்தில் உணர்ந்துகொண்டனர்.

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பதற்காக பெற்றோர்கள் மகனிடம் சில கடுமையான சொற்களைச் சொல்லிவிட்டனர். அதைக் கேட்டு மனமுடைந்த மகன் மூட்டைப்பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான். உண்மையைத் தெரிந்துகொண்ட அவனுடைய பெற்றோர் அவசரமாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். உடனடியான முதலுதவி அவனுக்கு வழங்கப்பட்டது. பல மணிப் போராட்டத்துக்குப் பிறகும் அவனைக் காப்பாற்ற இயலவில்லை. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய மரணம் நிகழ்ந்தது.

மருத்துவரின் ஆசிரியர் ஒருவர் தன் மனைவியை அறுவைசிகிச்சைக்காக சேர்த்திருந்தார். கருணை நிறைந்தவர் அந்த ஆசிரியர். பள்ளியிறுதிக்கான தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு மாணவனுடைய தந்தையார் இறந்துவிட்டார். அன்றுதான் இறுதித்தேர்வு. அவனுடைய வீட்டுக்குச் சென்ற அந்த ஆசிரியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, மெல்ல பள்ளிவரைக்கும் அழைத்துவந்து தேர்வெழுத வைத்து, மீண்டும் அவனை வீடு வரைக்கும் அழைத்துச் சென்று இறுதிச்சடங்கு முடியும் வரைக்கும் உடனிருந்துவிட்டுத் திரும்பிய பெருந்தன்மையாளர். அப்படிப்பட்டவரின் மனைவிக்குத்தான் அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவைசிகிச்சை நல்லபடியாகவே முடிந்தது. மயக்கம் தெளிவதற்கான மருந்துகளைக் கொடுத்தபோது பிரச்சினை உருவானது. எதிர்பார்த்தபடி அம்மருந்து வேலை செய்யவில்லை. தசைகள் ஊக்கம் பெற்று மீண்டும் செயல்படத் தொடங்கி சுயநினைவு கூடிவர வேண்டிய நிலையில் அவர் நினைவு திரும்பாமலேயே இருந்தது. ஏன் அந்தச் சிக்கல் ஏற்பட்டது என்பதை ஒருவராலும் ஊகிக்கமுடியவில்லை. அறிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு ரசாயனமாற்றம் உடலுக்குள் நிகழ்ந்து அவருடைய உயிரைப் பறித்துவிட்டது. ஆசிரியரின் மனைவியுடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்பது நினைவில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது.

இரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆசிரியரைச் சந்தித்து ஆறுதலாகப் பேசிவிட்டு வரலாம் என்று சென்றார் மருத்துவர். எதிர்பாராத கணத்தில் பள்ளியில் ஒரு மாணவர் தவிர்க்கவேண்டிய பிழைகளைப்பற்றி அவர் எடுத்த பாடத்தைப்பற்றியதாக பேச்சு திரும்பியது. கல்லாப்பிழை, கருதாப்பிழை, நெஞ்சில் நில்லாப்பிழை, நினையாப்பிழை, சொல்லாப்பிழை, எழுதாப்பிழை என பிழைகளின் பட்டியலை மீண்டும் பகிர்ந்துகொண்டனர். அந்த மரணத்தில் என்ன பிழை நடந்தது என்று எங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை ஐயா என்று வருத்தத்துடன் அவர் தெரியப்படுத்தினார். அப்போது “இன்னொரு பிழையும் அப்பட்டியலில் உண்டு. சின்ன வயதி உங்களுக்குப் புரியாது என்பதால் நான் சொல்லவில்லை. இப்போது புரியும். அது முன்னம் எழுதினவன் கைப்பிழை” என்றார் ஆசிரியர். அது ஒரு ஆறுதல் சொல் என இருவருக்குமே தெரியும். மனிதர்கள் தம்மைத்தாமே தேற்றிக்கொள்ள இப்படி சில ஆறுதல் சொற்கள் சில நேரங்களில் தேவைப்படுகின்றன.

நூல் முழுக்க இப்படி எண்ணற்ற அனுபவக்குறிப்புகள். தொழிலில் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க ஒரு மருத்துவரின் வாழ்க்கையில் எண்ணற்றோரின் வாழ்க்கைத்துளிகள் கலந்திருக்கின்றன. மருத்துவர் மாணிக்கவாசகம் வாழ்ந்த வாழ்க்கையை போற்றத்தக்க பெருவாழ்வு என்று சொல்லலாம்.

(தூங்காமல் தூங்கி.- அனுபவக்கட்டுரைகள். எஸ்.மாணிக்கவாசகன். ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை. சந்தியா பதிப்பகம், 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை.ரூ.110)

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 30: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி



நான் தொடக்ககாலத்தில் கலைஞரின் இரசிகனாக இருந்தேன். இப்பவும் நான் அவருக்கு இரசிகன்தான். காரணம் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் வாசிப்பையும் எழுதுவதையும் சரிவிகிதத்தில் கடைப்பிடித்தார். அதிலும் இந்தக் காரியங்களையெல்லாம் நெருக்கடி மிகுந்த அரசியல் பணிகளுக்கு நடுவில் கலைஞர் செய்தது தான் உழைப்பின் சான்றாகக் கருதப்படுகிறது. ஒருமுறை என் நண்பர் ஒருவர் ஒரு இசைப்பாடல் கேசட்டைக் கொடுத்துவிட்டு அவரின் அபிப்பிராயத்திற்காகக் காத்திருந்திருக்கிறார். கையில் வாசித்தபடி ஒரு நூல், எதிரே தொலைக்காட்சியில் நெடுந்தொடர், அவ்வப்போது குறுக்காலே வரும் நண்பர்களுக்கு பதில், இவைக்கிடையில் ஒரு பக்கம் என் நண்பரின் இசை ஒலி வேறாம்.

என் நண்பருக்கு மனம் கசந்துவிட்டது, நம் பாடல்களை அவர் கணக்கிலே வைத்துக் கொள்ளவில்லை என்று. அப்படிப் பார்த்தோமேயானால் கவிதை நூலை வாசித்துக் கொண்டு நெடுந்தொடரை கவனித்திருக்க முடியுமா என்ன. ஆனால் கலைஞரால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடிந்தது, ஏனெனில் என் நண்பர் நொந்துபோய் கலைஞரிடம் விடைபெற்றபோது, அந்த கேசட்டில் வரும் 9 வது பாடல் கொஞ்சம் லென்த் தா இருக்கு அதைக் கொஞ்சம் சரி பண்ணுங்க மற்றபடி பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது என்றிருக்கிறார். குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்த என் நண்பர் தன் வீட்டில் பாடல்களை மொத்தமாகக் கேட்க , அந்த ஒன்பதாவது பாடல் கொஞ்சம் லென்த்துகத்தான் இருந்ததாம்.

ஒரு படத்திற்குப் பாடல் எழுதி படத்தின் கோ டைரக்டரிடம் கொடுத்து அனுப்பிருக்கிறார் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள். அந்தப் பாடலை கவனிக்கும் பணியை அந்தப் படத்தின் இயக்குநர் பார்ப்பதற்கு மாறாக படத்தின் தயாரிப்பாளர் பார்த்துவிட்டு, இன்னும் பாடல் பெட்டரா வேணும் எனத் திருப்பி அனுப்ப அந்த கோ டைரக்டர் இப்போது வாலியின் முன் விசயத்தைச் சொல்லிவிட்டு தர்மசங்கடத்தில் நின்றிருக்கிறார்.

கடுமையான கோபத்தில் வாலி அவர்கள் ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி, அங்கே ஆஃபீஸ் பாயாக வேலைபார்த்தவர்தானே இந்த தயாரிப்பாளர் என்றிருக்கிறார். கோ டைரக்டர் ஆமாம் எனக்கூற. வாலி அவர்கள், படம் தயாரிக்கிற அளவுக்கு பணம் வேண்டுமானால் அவருக்கு வந்திருக்கலாம், என் பாடலைக் குறை சொல்லும் அளவிற்கு அறிவு எப்போது வந்ததென்று அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றிருக்கிறார்.

என் அருமைத் தோழர் பாடலாசிரியர் தனிக்கொடி அவர்களின் மொழிநடை பதர்களற்றது. அது அவரது உரைநடையிலும் கவிதையிலும் ஏன் பாடல்களிலும் கூட தென்படும். தேவையற்ற சொற்களைத் தவிர்த்து எழுதப்படும் ஓர் இலக்கியம் அடர் செழிப்பானதாகும். தன் படைப்புகளில் மட்டும் அல்ல ஒரு வெள்ளை தாளில் எழுதுகையில் கூட இடத்தை விரயம் செய்யாதவர், ஏன் எழுத்துக்களைக் கூட நுணுக்கி நுணுக்கி எழுதுபவர். ஒரு முறை திரைப்படப் பாடல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இயக்குநர் சேரன் அவர்களின் “ஆட்டோகிராப்” படத்தில் வரும் “ஞாபகம் வருதே” பாடலில் அதிக முறை “ஞாபகம் வருதே” என்கிற சொல் வருவதாக விமர்சித்தார், அதுவும் ஓர் அழகுதானே தோழர் என்றேன். இல்லை தோழர், திரும்பத் திரும்ப ஒரே சொல் வருவதற்குப் பதிலாக வேறு பல சொற்களைப் பயன்படுத்தினால் அவை அந்தப் பாடலுக்கு இன்னும் கூடுதல் செழுமை சேர்க்கும் தானே என்றார்.

கவியரசு கண்ணதாசன், பழநிபாரதி, நா. முத்துக்குமார் போன்றோர் பாடல்களில் ஒரு பொருளை மையமாக கொண்டே ஒரு முழு சரணத்தையும் எழுதியிருக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஒரு சரணத்தில் 12 வரிகளுக்கான மெட்டு இருக்கிறதென்றால் ஒவ்வொரு இரண்டு வரிகளுக்கும் ஒரு பொருள் கூற வேண்டும் என்பது எனது பாணி. 12 வரிகளையும் ஒரு பொருளே விழுங்கிவிடல் என்பது காட்சிப் படுத்துவதற்கும் ஒரு தத்துவத்தை முழுமையாகச் சொல்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை ஆனால், ஒரு பாடலுக்கான கனம் இதில் கிடைத்துவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.

அதே போல் ஒரு பாடலில் முதல் வார்த்தைக்காக அத்தனை மெனக்கிடுவோம். காரணம் முதல் வார்த்தையில் இருக்கும் எளிமையும் புதுமையும் தான் மக்களின் மனங்களில் ஒட்டிக் கொண்டு முணுமுணுக்க வைக்கும். பாடல் முழுக்க முடிந்து போனாலும் இயக்குநர்கள், அந்த பல்லவிக்கு மட்டும் ஒரு ரெண்டு ஆஃப்சன் ட்ரைப் பண்ணுங்க கவிஞரே என்பார்கள் காரணம் பாடலை எப்படியாவது முணுமுணுக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். பல்லவியின் முதல் வார்த்தையை இரு முறை வருவது போல் செய்தால் அந்தப் பாடல் ஹிட் ஆகும் என்பார்கள். அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு, காரணம் ஒரு வார்த்தை இருமுறை பயன்படுத்தப்படும்பொழுது பாடல் குழப்பமின்றி நினைவிற்கொள்ள வசதியாக இருக்கும். “என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” எனும் சிவகார்த்திகேயன் பாடலும், “நாங்க வேறமாரி” எனும் அஜித் பாடலும் கூட இதற்காகத்தான். கடைசியாய்க் கூறிய பாடல்களில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. இதில் நம் சொந்த உழைப்பில் சொந்த வார்த்தைகளில் உருவாகிற பாடல்கள் வெற்றியடையும் போது தான் அது நமக்கானதாக இருக்க முடியும். ஒரு பாடலை வெற்றியடையச் செய்ய என்ன வேணும்னாலும் செய்யலாம் என்பது எப்படி சரியாகும்.

எண்ணற்ற கவிஞர்கள் என்னிடம் வந்து, எப்படி திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெறுவதெனக் கேட்கிறார்கள். முதலில் அவர்களிடம், உங்களுக்கு பாடல் எழுதத் தெரியுமா, என்கிற கேள்வியை முன் வைப்பேன். எழுதியதைக் காட்டுவார்கள். மிகவும் சுமாராக இருக்கும். வாய்ப்புக் கேட்பவர்கள் பாடல் எழுத தெரிந்து வருவதை விட ஆர்வக் கோளாறில் வருபவர்களே அதிகம். நான் யாரையும் நிராகரிப்பதில்லை. பாடல் எழுதத் தெரியாதவர்களுக்கு தேவையான பயிற்சியையும், பாடல் எழுதத் தெரிந்தவர்களுக்கு திரைப்படத் துறைக்குள் நுழைவதற்கான வழிகாட்டுதலையும் சொல்லித் தருகிறேன்.

சில கவிஞர்கள் அவர்களே மெட்டுப் போட்டு பாடலை உருவாக்கி பேப்பரில் வைத்துக்கொண்டு டெமோவாகப் பயன்படுத்துகிறார்கள். அது பாடும் போது கேட்கலாம் போல் இருக்கும். ஆனால் கவிதையாக ஓர் ஒழுங்கு இருக்காது. பாட்டுக்கு ஒரு சந்த நயம் இருக்கும் போதுதான் சப்த சுகம் இருக்கும். கவிஞர்கள் ஒரு நீளமான இசையற்ற சொற்களைக் கூட்டி ஒரு மெட்டில் பாடிக்காட்டுவது சுலபம். அது நாளை திரைப்படத்தில் கொடுக்கும் மெட்டுக்கு உங்களால் எழுதுவது கடினம். அல்லது எதற்கு தெரியாத ஒன்றை தவறாக செய்ய வேண்டும். குறைந்த பட்ச இலக்கண நடையாவது கற்றலே மெட்டுக்கான பயிற்சியாகவும் அமையும்.

சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி புரியுங்கள். இதில் வரும் சம்பளம் உங்கள் இலக்கைத் தின்றுவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். அதற்காக வேலையின்றி கையில் காசின்றி லட்சியத்தை அடைய முற்பட்டால் பசி உங்களையே தின்றுவிடும். முதலில் வாழ்தலிலேயே பெரும் கவனம் வேண்டும் பிறகே லட்சிம். எவராலும் நிராகரிக்க முடியாத அல்லது ஓர் ஐம்பது கவிதைகளில் எந்தக் கவிதையைப் படித்தாலும், இவன் விசயமுள்ளவன் இவனால் சிறந்த பாடலைத் தர முடியும் என்கிற நம்பிக்கையைத் தருவதுமாதிரியான ஒரு கவிதைப் புத்தகத்தை வெளியிட்டு அதைத் தனக்கான விசிட்டிங் கார்டாக வைத்துக் கொள்ளவேண்டும். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரின் முதல் கவிதை நூலான “வைகரை மேகங்கள்” தான். நண்பர் நா. முத்துக்குமாருக்கும் “பட்டாம்பூச்சி விற்பவன்” எனும் அவரின் முதல் நூல் தான் விசிட்டிங் கார்ட். இதற்காக நீங்கள் சில ஆண்டுகள் கூட உழைக்கலாம், காரணம் உங்கள் வாழ்க்கைப் பயணம் இதுதான் என முடிவு செய்துவிட்டால் உங்கள் பாதையை செப்பனிடுவது என்பது சிறந்த செயல்பாடுதானே.

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

இது “பாடல் என்பது புனைபெயர்” எனும் தொடரின் இறுதி வாரம் இன்று பாடல் வரிகள் இல்லையென்றால் எப்படி. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், சூர்யா நடிக்க நண்பர் வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” படத்திற்காக எழுதப்பட்ட ஒரு டம்மி பல்லவி உங்களுக்காக.

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

“வெய்யில ஊதக் காத்தா
மாத்திப் புட்டாளே
கையில பூவச் சுத்தி
ஏத்தி விட்டாளே
கண்ணுல சந்தோசத்த
ஊட்டி விட்டாளே
நெஞ்சுல குப்பை யெல்லாம்
கூட்டி விட்டாளே

கருகரு மேகந்தான்
கறுத்த தேகந்தான்
உருக்கி ஊத்துறா
கிறுக்கு ஏறுதே

அடியே நெஞ்சுமேல நெல்லுக்
காயப் போடேண்டி
உசுர மல்லிப்பூவு
கட்டிகிற தாரேண்டி

ஒன்னநா கட்டிக்கிற
என்னாடி செய்ய
இல்லன்னா சொல்லிப் போடி
என்னான்னு வைய

கொம்புகுத்திக் கூட நானும்
சாகவில்லயே
கொமரிப்புள்ள குத்தி
செத்துப் போனேனே”

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட அழகாகவோ என் உடலுறுப்புக்கள் இருக்கின்றன. உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட இனிமையாகவோ பேசுகிறேன் இசைகிறேன். இந்த அல்லதுக்கு அவசியமற்று நான் மட்டுமே உழைக்கிறேன். என்னை நீ கீழ் சாதிக்கார நாயே என்கிறாய். என்னை மட்டுமா நாயையும் சேர்த்து நீ கீழ்த்தரமாகப் பார்க்கிறாய். முதலில் நான் நாயிலிருந்தே தொடங்குகிறேன். உன்னால் நாய் துணையின்றி வாழமுடிகிறதா, நாய் பயமின்றி நடமாட முடிகிறதா. பிறகு என் துணையின்றி உன்னால் நகர முடிகிறதா. நடக்க முடிகிறதா. இந்த லட்சணத்தில் எதற்கு இந்த ஏற்றத்தாழ்வு. முதலில் சீவராசிகளில் நீ கீழ் நான் மேல் என்கிற மகா மட்டமான போக்கை நிறுத்து.

உன்னைப் பொருத்தவரை தலையில் இருக்கும் கிரீடம் உயர்ந்தது, பாதம் அணியும் செருப்புத் தாழ்ந்தது. நன்றாகச் சிந்தித்துப் பார் கிரீடத்தை நீ சுமக்கிறாய் செருப்பு உன்னைச் சுமக்கிறது. ஆனால் உன்னைச் சுமக்கும் செருப்பைத்தான் நீ கீழானதாகப் பார்க்கிறாய். அந்த செருப்பைத் தைக்கும் தொழிலாளிகளைக் கீழானவர்களாகப் பார்க்கிறாய். ஒன்று தெரியுமா உன் கிரீடத்தையும் உன் செருப்பையும் நானே உருவாக்குறேன். உன் மயிரை நானே சிரைத்து சுத்தம் செய்கிறேன். நீ ஆண்ட வம்சமென முறுக்கித் திரியும் மீசையை நான் தான் உன் முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கிறேன். நீ என்னை மலக் கழிவு அள்ளுகிறவனென இமையிறக்கிப் பார்க்கிறாய். இப்போதும் கூட நீ மேலே உண்ணுகிறதை கீழே கழிவாக அள்ளுவதை கீழ்மை என்று தான் பார்க்கிறாய், ஆனால் நான் உன் கீழ் கழிவை அள்ளுகிறவன் மட்டுமல்ல  நீ மேல் உண்ணும் உணவை விளைய வைப்பவனும்தான். நான் இத்தனை உனக்குச் செய்தும் நீ என்னை ஏறி மிதிப்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறாய். சக மனிதனை தாழ்ந்தவனாகப் பார்ப்பதாலும், சக மனிதனின் வாயிக்குள் மலத்தைத் திணித்துக் கொடுமை செய்வதாலும், சக மனிதன் காதலித்தால் அவனை வெட்டிச் சாய்ப்பதாலும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் நீ தான் கீழ்சாதி. சக உயிரை சமமாகப் பாவிக்காதவன். சக உயிரின் மேல் அன்பு செலுத்த வக்கில்லாதவன் நிச்சயமாக கீழ்சாதி தான். நான் கோபப்படவில்லை என்பதற்காக என்னைக் கோழை என்று நினைப்பது உன் அறியாமையே.

இயக்குநர் சுதா கோங்கரா அவர்களின் “இறுதிச்சுற்று”  படத்திற்கு நான் தீவிர விசிறி. பெண் பிள்ளைகளின் மேன்மையைப் பற்றி மிகவும் அழகாகச் சொல்லியபடம் அது. அவரின் இயக்கத்தில் சூர்யா அவர்கள் தனது 2D நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்த “சூறரைப் போற்று” படத்தில் ஒரு பாடல் எழுத அழைத்தார்கள். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை. இயக்குநரும் நானும் பாடலை எப்படி எழுதப்போகிறோம் என்பது பற்றிய விவாதத்தில் இருக்கும் போது அவருக்கு எனது “ஒத்த சொல்லாலே” பாடலுக்கு நான் விசிறி என்று அவர் சொன்னபோது மகிழ்ந்தேன். பாடலின் சூழலை அவர் சொன்ன போதே துள்ளிக் குதிக்க ஆரம்பித்தேன். காரணம் பேச வேண்டிய பொருள். ஒரு தலித்தின் பிணம் எடுக்கபட்டு தேரில் ஊர்வலமாக வருகிறதெனவும் அதில் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த சூர்யா ஆடி வருகிறார் எனவும் சொன்னார்கள். சும்மாவே ஆடுவோம். கொட்டுக் கெடச்சா குமுற மாட்டோமா. அதுவும் இந்த சூழல் திரைப்படத்தில் நடக்கிறது என்பதில் எனக்கு இரெட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான மெட்டை அமைப்பதில் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இயக்குநரும் பேருழைப்பைச் செலுத்தினர். ஓர் உதவி இயக்குநர், தம்பி கருமாத்தூர் அருளானந்தத்தின் உதவியுடன் ஏராளமான கூத்துக் கலைஞர்களின் பாடல்களை உசிலம்பட்டி பகுதி முழுக்கச் சேகரித்தார். இவையின் வாசத்தை எடுத்துக்கொண்டு மெட்டமைத்த போது தம்பி செந்தில்கணேஷின் குரல் அதை புயலாய் மாற்றி கேட்பவர் மனதைச் சுழற்றி அடித்தது.

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

பேதமற்று வீசும் காத்து பேதமற்றுப் பெய்யும் மழை ஆனால் மனித சமூகம் அப்படியா இருக்கிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் ஒரு சமூகமே   மிகக் கீழ்த்தரமாக நடத்தப் படுதலுக்காக எதை அழிப்பது.

பல்லவி
மண்ணுருண்ட மேல இங்க
மனுசப் பய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்டும் மூடிப் புட்டா
வீதியிலே போகும் தேரு
அண்டாவுல கொண்டுவந்து
சாராயத்தை ஊத்து
ஐயாவோட ஊர்வலத்தில்

ஆடுங்கடா கூத்து ஏழை பணக்காரன் இங்கு
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவாங்க சங்கு

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

சரணம்-1
நெத்தி காசு ஒத்த ரூபா
கூட வரும் சொத்துதானே – ஐயா
கூட வரும் சொத்துதானே
செத்தவரும் சேர்ந்து ஆட
வாங்கிப்போட்டு குத்துவோமே

சாராயம் குடிச்சவங்க
வேட்டி அவுந்து விழுமே
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே

ஆயிரம் பேர் இருந்தாலும்
கூட யாரும் வல்லடா
அடுக்குமாடி வீடிருந்தும்
ஆறடிதான் மெய்யடா

சரணம்-2
கீழ்சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா – ஐயா
ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதிக்காரனுக்கு – அந்த
மேல் சாதிக்காரனுக்கு
கொம்புருந்தா காட்டுங்கய்யா – ரெண்டு
கொம்புருந்தா காட்டுங்கய்யா

உழைக்கிற கூட்டமெல்லாம்
கீழ்சாதி மனுசங்களாம்
உட்கார்ந்து திங்கறவனெல்லாம்
மேல்சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு – அட
சாதியத் தூக்கிப் போடு
என்னங்கடா நாடு – அட
சாதியப் பொதைச்சு மூடு

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான போது உலகத் தமிழர் கொண்டாடினர். படத்தின் ரிலீஸ் டேட் அறிவிக்கப்பட்டது. தர்மபுரியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இந்த படத்தை  வெளியிட தடை கோரி புகார் அளித்ததன்பேரில் கோர்ட் படத்தை சில மாதங்கள் தடை செய்தது. புகாரில் மனுதாரர் படத்தில் எனது பாடல் ஜாதிய வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளதெனக் கூறியிருக்கிறார். என்னைப் பலபேர் தொலைபேசியில் மிரட்டினர். எனக்கு உருட்டல் மிரட்டலுக்கு எப்போதும் பயமில்லை. போராட்டக் களம் ஒன்றும் எனக்குப் புதிதில்லை. பேட்டிகளிலெல்லாம் கூறினேன் இது சாதிய வன்முறைக்கு எதிரான பாடல் என்று. ஆனாலும் விவாதத்துக்குறிய அந்தப் பாடலின் இரண்டாவது சரணம் நீக்கப்பட்டே படம் ரிலீஸானது. வருத்தம் தான் எனினும் அந்தக் குறிப்பிட்ட வரிகளுக்கு என் தம்பிகளும் அண்ணன்களும் டிக் டாக் பண்ணிருயிருப்பதில் தெரிந்த வெறித்தனமே என் பாடலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டேன். மேல் சாதிக் காரனுக்குக் கொம்பிருந்தா காட்டச் சொன்னேன் பாடலில், ஆனால் பிரச்சனையைக் கிளைப்பியவர் அனைவருமே இடைசாதி வகுப்பினரே.

சாதியும் மதமும் சீர்கெட்டுக் கிடக்கும் சூழலில் நாம் பிறர் வலி உணர்ந்தோ உணராமலோ உண்டு உடுத்தி உறங்கி வாழ்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதான் கீழ் வரும் ஒரு தனி இசைப்பாடலும்.

பல்லவி
மேல் சாதி கீழ் சாதி ஒண்ணுமில்லடா
ஓந்தேதி முடிஞ்சாக்கா மண்ணுக்குள்ளடா
திங்குற சோத்துல சாதி மணக்குதா
போடுற செருப்புல சாதி கனக்குதா… (2)

ரெண்டையும் தந்ததெல்லாம் நாங்கதான்
சண்டை மட்டும் போடுறீங்க நீங்கதான்

சரணம் 1
தோளுமேல துண்டுபோட்டுப் போகக் கூடாதா – நாங்க
காலுலதான் செருப்புமாட்டி நடக்கக் கூடாதா
டீக்கடை பெஞ்சுலதான் உக்காரவும் கூடாதா – அட
எங்கபுள்ள பள்ளியில இங்கிலீசுப் பேசாதா.. (2)

சரணம் 2
மாட்டுக்கறி திங்கிறவன் மட்டம் இல்லடா
நீயும் மனுசனத்தான் திங்கிறியே நியாயம் சொல்லடா
மலத்த கக்கூசுல ஒங்க கையி அள்ளாதா – அட
நாங்க போடும் ஓட்டு என்ன எலக்சனில செல்லாதா.. (2)

சரணம் 3
வேர்வ சிந்தி வெளைய வச்ச அரிசி வெள்ளடா – நாங்க
வெளுத்து வந்து தேச்சுத் தரும் வேட்டி வெள்ளடா
எல்லாத்துக்கும் நாங்க வேணும் பக்கத்தில ஒனக்கு – எங்கள
தொட்டா மட்டும் உங்கமேல ஒட்டிக்குமா அழுக்கு..(2)

தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி



Paadal Enbathu Punaipeyar Webseries 28 Written by Lyricist Yegathasi தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் “அசுரன்” திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு. எப்பவும் போல் இயக்குநரின் அழைப்பின் பேரில் அலுவலகம் சென்றேன். கதையின் அவுட் லைன் சொல்லிவிட்டு பாடலின் சூழலைச் சொன்னார். சூழல் காதல் தான், ஆனால் காலம் 1980. களம் திருநெல்வேலி. அன்று அவர் என்னிடம் சொன்ன விசயம் ரகசியமானது. இன்று எல்லாம் உலகம் அறிந்தது. ஏனெனில் அப்போது படப்பிடிப்பு நடந்திடாத சூழல். ஒரு பாடலாசிரிருக்குச் சொல்லப்படும் கதையை அவர் படம் வெளியாகும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது. அதேபோல் கொடுக்கப்படும் மெட்டும் இசை வெளியேறும்வரை பாதுகாக்கப்பட வேண்டும்.

அசுரனில் எனக்குக் கொடுக்கப்பட்ட சூழலுக்கு நான் எழுதிய பாடல்,

Paadal Enbathu Punaipeyar Webseries 28 Written by Lyricist Yegathasi தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசிஆண்:
கத்தரிப் பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
ஒன்னோட நெனப்பு
சொட்டாங்கல்லு ஆடயில
பிடிக்குது கிறுக்கு

பெண்:
வரப்பு மீசக்காரா
வத்தாத ஆசக்காரா
ஒன்ன நா கட்டிக்கிறேன்
ஊரு முன்னால – அட
வெக்கப்பட வேணா என்ன
பாரு கண்ணால

ஆண்:
மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே

பெண்:
காத்தாடி போல நானும் – ஒன்ன
நிக்காம சுத்துறேனே

ஆண்:
கழுத போலத்தான்
அழக சொமக்காத
எனக்குத் தாயேண்டி
கொஞ்ச வேணும் நானும்

பெண்:
அருவா போல நீ
மொறப்பா நடக்குறிய
திருடா மொரடா
இருப்பேன் உன்னோடதான்

சரணம் – 2
ஆண்:
கரகாட்டம் ஆடுது நெஞ்சு – ஒன்ன
கண்டாலே தெருவுல நின்னு

பெண்:
நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம்நீ

ஆண்:
ஆலம் விழுதாட்டம்
அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான்
தோது செஞ்சு தாடி

ஆண்:
இலவம் பஞ்சுல நீ
ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும்
அணைச்சா நிக்காதுடா

இப்படியான ஒரு பாடலை எழுதுவதற்கு திருநெல்வேலி மாவட்ட  நாட்டுப்புறப் பாடல்களை வாசித்துவிட்டு அதே வாசத்துடன் எழுத நினைத்து சென்னைக்குள் நூல் தேடி அலைந்தேன். கடைசியாக திருநெல்வேலி நாட்டுப்புறவியல் ஆய்வில் பேர்போன பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் வீட்டிற்கே சென்று சில நூல்களை அவரின் கைகளாலே வாங்கிக் கொண்டு வந்தேன்.

இந்தப் பாடலின் இதே மெட்டுக்கு நான் எழுதியிருந்த வேறு சில பல்லவிகளையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் “கத்தரிப் பூவழகி” மெட்டில் பின் வரும் பல்லவிகளையும் பாடிப் பார்க்கலாம்.

பல்லவி: (1)
ஆண்:
ஒருதரம் தொட்டுக்கிறேன்
ஒன்னநா கட்டிக்கிறேன்
செல்லமே ஒன்னவிட
ஒண்ணும் நல்லாலே – நம்ம
ரெண்டுபேரும் ஓடிடுவோம்
போடு தில்லாலே

பெண்:
தொட்டுக்க வேணாமுங்க
தொணைக்கும் வேணாமுங்க
மொத்தமா அள்ளிக்கங்க
ஒன்னோட வாறேன் – என்ன
மொழம் போட்டு வச்சுக்கோங்க
முன்னால போறேன்

பல்லவி: (2)
ஆண்:

கொட்டடி சத்தத்துக்கும்
கொல செய்யும் அழகுக்கும்
ஒடம்புல தழும்பாச்சு
ஒன்னப் பாத்தது – நெனச்சா
ஒருவருசம் பெய்யும் மழ
ஒண்ணா ஊத்துது

பெண்:
மல்லுவேட்டி கட்டிவந்தா
மந்தையில திருவிழாதான்
மருகிறேன் ஒண்ணாச் சேர
செம்மறி ஆடா – மனுசா
தாலிஒண்ணு வாங்கிக்கிட்டு
சீக்கிரம் வாடா

கத்தரிப் பூவழகி பாடல் மாபெறும் வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதை நண்பர் வேல்முருகனும் தங்கை ராஜலட்சுமியும் பாடியது கூடுதல் மண்வாசனையை கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியதற்காக நானும் நண்பர் யுகபாரதியும் பாண்டிச்சேரி தீண்டாமை முன்னணியினரால் பாராட்டப்பட்டோம்.

Paadal Enbathu Punaipeyar Webseries 28 Written by Lyricist Yegathasi தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

“கத்தரிப் பூவழகி கரையா பொட்டழகி”  இதன் இரண்டாவது வரியின் முதல் வார்த்தை “கரையா” , இது பாடகர் வேல்முருகனின் உச்சரிப்புப் பிழையின் காரணமாக மற்றவர்களுக்கு “கரையான்” என்று புரியப்பட்டது, ஆனால் இதையும் பாராட்டியவர்கள் ஏராளம். இதே போல் தான் “ஆடுகளம்” படத்தில் ஒத்துச் சொல்லால பாடலை ஒத்தக் கண்ணால என்று சொல்லி மேடையில் சிலர் அறிமுகம் செய்து வைப்பார்கள் என்னை. இப்படியான காரியங்கள் வெளியுலகில் எங்காவது நடந்தவண்ணம் இருந்து கொண்டேயிருக்கும்.

இதாவது பரவாயில்லை சில மியூசிக் சேனல்கள் என் பாடலுக்கு மற்றவர் பெயரையும் மற்றவர் பாடலுக்கு என் பெயரையும் போட்டுவிட்டு என்னையும் மக்களையும் குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இன்னும் கொடுமை என்னவென்றால் எனது திரைப்படப் பாடல்களை வாங்கும் நிறுவனங்கள் என் பெயரை ஏழு விதமான ஸ்பெல்லிங் பயன்படுத்தி எனது ராயல்டிக்கு ஆப்பு வைக்கிறார்கள். ஆதார் கார்டுக்காக எடுக்கிற ஃபோட்டோவும் ஸ்மார்ட் கார்டில் அச்சடித்துள்ள ஸ்பெல்லிங்கும் போலத்தான் இங்கே பல மியூசிக் கம்ப்பெனிகள் டெக்னீஷியன்கள் பெயரை இஷ்டத்திற்குப் போட்டு விடுகிறார்கள்.

அசுரனில்  “எள்ளு வய பூக்கலையே” பாடல் நண்பர் யுகபாரதி எழுதியிருப்பார். உண்மையில் இந்தப் பாடல் என் ஜார்னர். எனது தனி இசைப் பாடல்கள் பெரும்பாலும் இப்படி மக்களின் வாழ்வியல் பிரச்சனை குறித்தது தான். இயக்குநர் வெற்றிமாறனைப் பொருத்தவரை நான் ஒரு காதல் துள்ளல் பாட்டுக்காரன். அவரின் படங்களில் சோகப் பாடல்களும் எழுத வேண்டும் என்பது என் அவா.

இயக்குநர் சீனு ராமசாமி அண்ணன், அவரது இரண்டாவது படமான “தென்மேற்கு பருவக்காற்று” படத்திற்கு வசனம் எழுத என்னை அழைத்து அவரது திரைக்கதையைப் படிக்கக் கொடுத்தார். அவரின் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வாசித்தேன். அவ்வளவு பிடித்திருந்தது. அவரது கதையில் என் வம்சாவழியின் வாழ்விருந்தது. அந்த கதை நடக்கும் காலம் என் பால்யம் பார்தத்து. ரசித்து ரசித்து வசனம் எழுத நினைத்திருந்த அன்றைய நாளின் இரவில் தான் நான் என் முதல் படத்தை இயக்க ஒப்பந்தமானேன். நான் இயக்குநராகப் பரிணமித்தேன்.

ஆனால் பிற்காலத்தில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற ஒரு படத்தின் வசனகர்த்தா பணியைத் தவறவிட்டேன். ஒரு வேளை அந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியிருந்தால் இன்னொரு தேசிய விருது கிடைக்கத் தான் செய்திருக்கும். அப்படியெனில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்திற்கு மொத்தம் நான்காகியிருக்கும், அதில் ஏகாதசிக்கு ஒன்று என்று தானே கணக்குப் பார்க்குறீர்கள், இல்லை ஏகாதசிக்கு இரண்டு கிடைத்திருக்கும். இது தனிக்கதை.

அதே படத்தில் வசனம் மட்டும் இல்லை எனது “ஆத்தா ஓஞ்சேலை” பாடலை பயன்படுத்துவதாகவும் இருந்தது. அப்படி பயன்படுத்தப் பட்டிருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற வைரமுத்து அவர்களின் “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே” வுக்குப் பதிலாக “ஆத்தா ஓஞ்சேலை” பாடல் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்திருக்கும். இதுவும் நடந்திருந்தால் நான்கில் எனக்கு இரண்டு என்கிற கணக்கு சரிதானே. விருதுக்கெல்லாம் எனக்குக் குறையில்லை, ஏனெனில் ஆத்தா ஓஞ்சேலை ஒவ்வொரு நாளும் யாரோ ஒரு தாயால் ஒரு மகனால் நிசமான அன்போடு நான் பாராட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 22: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி



Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

என் அன்பிற்கினிய தம்பி உசிலை பகவான், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரை வந்திருந்த ஒரு தருணத்தில் தான் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்தின் நீளமான ட்ரெய்லருக்கு என் குரலில் கதைக்கருவைப் பதிவு செய்யக் கேட்டார். டெரிக் ஸ்டுடியோவில் பதிவு செய்தோம். நன்றாக வந்தது. மிக நேர்த்தியாக மண் வாசனையோடு படம் பிடித்திருந்தார், காரணம் அடிப்படையில் பகவான் ஒரு ஒளிப்பதிவாளர். ஏற்கனவே அவரின் “பச்ச மண்” குறும்படத்தால் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். இவர் “காக்கா முட்டை”, “கடைசி விவசாயி” போன்ற முக்கிய படங்களை இயக்கிய இயக்குநர் மணிகண்டனின் உற்ற தோழன். ஒரு நாள் நான் பேசிக்கொடுத்த அந்த ட்ரெய்லர் படமாகப் போகிறதெனவும் அதில் ஒரு பாடல் நான் எழுதவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள நான் எழுதிக் கோடுத்தேன். அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜெய கே தாஸ். “ஆரம்பமே அட்டகாசம்” “நாய்க்குட்டி படம்” போன்ற படங்களுக்கு அப்போது இசையமைத்திருந்தார். அந்தப் பாடல் தமிழ் சினிமா இதுவரை தொடாத சூழல்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் செய்முறை கலாச்சாரம் ஒரு விவசாயம் போல் நடக்கிறது. ஏன் இப்போது செய்முறை மட்டுமே நடக்கிறது விவசாயம் எங்கே நடக்கிறது என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. திருமண விழா, காதணி விழா, மார்க்கக் கல்யாணம், பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, முடியிறக்கு விழா என எண்ணற்ற பெயர்களில் விசேசம் நடத்துகிறார்கள். வழியே இல்லையென்றால் “வீட்டு விசேசம்” என்று வைத்து மொய் வாங்கிவிடுகிறார்கள். அந்த வீட்டு விசேசத்தை வீட்டில் வைக்காமல் மண்டபத்தில் வைப்பதை என்ன சொல்வது. “திருமண மண்டபம்” என்று பெயர் சூட்டிய மண்டபங்களில் திருமணம் மட்டுமா நடக்கிறது என்பதும் ஏன் இதுவரை “காதணி மண்டபம்” என்று ஒன்றில்லை என்பதும் ஒரு நகைச்சுவையான கேள்வி தான்.

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அந்தக் காலத்தில் திருமண பத்திரிக்கைகளில் “இரவு 10 மணி அளவில் “நாடோடி மன்னன்” “பாசமலர்” போன்ற திரைப்படங்கள் திரையிடப்படும்” என்கிற பின் குறிப்பு இருக்கும். காரணம் அன்றைக்கு பெரும்பாலும் திருமணம் இரவுகளில் தான் நடக்கும் அதிலும் வீட்டில் தான் என்பதால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த குடும்பங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். எல்லாரும் வீட்டிற்குள் படுத்துவிட்டால் “முதல் இரவு” எப்படி நடக்கும் என்பதாலேயே இந்தத் திரைப்பட ஏற்பாடு. இன்றைக்கு பத்திரிகை பின் குறிப்பில் மாலைகள் பண்ட பாத்திரங்களைத் தவிர்க்கவும் என்றிருக்கிறது. அப்படியெனில் உங்களுக்கு ஏன் வீண் செலவென்று பொருளல்ல, விரயமாகும் பணத்தை எங்களுக்கு மொய்யா வையுங்கள் என்று அர்த்தம். சரி இதிலாவது ஒரு நாகரீகம் இருக்கிறது, ஆனால் பல பத்திரிகைகளில் பழைய மொய் நோட்டைத் திருப்பிப் பார்க்கவும் என்றெல்லாம் சொல்கிறார்கள், இதன் உட்பொருள் உங்களுக்குப் புரியுமென்றே நம்புகிறேன். அதுவும் முன்பு இல்லாத ஒரு பழக்கம் நாளை திருமணம் என்றால் இன்றைக்கு இரவு மண்டபத்தில் பார்ட்டி கொடுக்கிறார்கள். அந்த பார்ட்டியே நண்பர்கள் நாளைய விழாவிற்கு அவசியம் வரவேண்டும் என்பதற்காகத்தான் ஆனால் இரவு வந்த நண்பர்களால் யாரும் காலை விசேசத்தில் கலந்து கொள்ள முடியாது காரணம் இரவு பார்ட்டி அப்படி இருந்திருக்கும்.

முன்பெல்லாம் விசேச வீடுகளிலோ மண்டபங்களிலோ மொய் எழுத ஆள் தேட வேண்டும். அப்படித் தேடும் போது அக்கம் பக்கத்தில் ஒரு படித்த ஆள் கிடைத்துவிட்டால் அவர் கருப்பனுக்கு நேர்ந்துவிட்ட ஆடுதான். அதிலும் வீட்டைச்சுற்றி யாரும் கிடைக்காவிட்டால் விசேச வீட்டுப் பையனே பலி கிடாய் ஆவான். அவன் புதிய ட்ரெஸெல்லாம் போட்டு பணம் வாங்கிப் போடும் ஒரு பெருசுக்கும் வெற்றிலை பாக்கு கொடுக்கும் இன்னொரு பெருசுக்கும் நடுவில் உட்கார்ந்து மொய் எழுதுதல் என்பது நெருப்பில் நிற்பதாய்த் தெரியும். காரணம் வந்திருக்கும் சொந்தபந்தங்களோடு பேச முடியாது நண்பர்களோடு ஜாலியா அரட்டைகள் செய்ய இயலாது. குறிப்பாய் புதிய தேவதைகளை லுக் விடவும் முடியாது பழைய தேவதைகளுக்கு ஒரு ஹாய் சொல்லவும் முடியாது. இப்படியாக ஒன்றுமில்லாமல் ஒரு விழா முடிந்த போவதை எந்த இளைஞனின் மனம் தான் தாங்கும் சொல்லுங்கள். இதற்காக ஒரு மாற்றம் செய்து சில பெரியவர்களை மொய் எழுத உட்கார வைத்தால் அந்த எழுத்தை விசேச வீட்டுக்காரன் நாளைக்கு வாசிப்பது கடினமாகி விடும் காரணம் அவர்கள் சித்திர எழுத்துக்களை உடையவர்கள். அந்த எழுத்து சீட்டாட்டத்தில் பணிபுரிந்த சித்தர்களுக்கு மட்டுமே புரியும். அதனால் இவர்கள் எப்பாடு பட்டாவது ஓர் இளைஞனை அந்த இடத்தில் நியமிப்பது. மொய் எழுத ஆள் கிடைக்காத பட்சத்தில் அது திருமண விழாவெனில் மணமகன் மொய் எழுத அமர்ந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி தான், ஏனெனில் அவர்கள் கல்யாணத்தையே இந்த மொய்க்காகத் தான் வைக்கிறார்கள். இதில் என் மாமாவும் நண்பருமான சிவமணி அவர்கள் மண்டபங்களில் மொய் எழுதுவதற்காக தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியை தியாகம் செய்தவர். என்ன ஆச்சரியம் என்றால் ஒரு ஊரில் பத்து மண்டபத்தில் விசேசம் என்றால் அந்த பத்து மண்டபத்திலும் சிவமணி இருப்பார். இப்போது “மொய் – டெக்” மிஷின் வந்துவிட்டது. மொய் எழுதிய கையோடு அதற்கான ரசீதை கையில் கொடுத்துவிடுவார்கள். சில இடங்களில் செல்லிலும் அனுப்பி விடுகிறார்கள்.

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

விசேசத்திற்கு பத்திரிக்கை அச்சடிப்பதும் அதை உறவினர்களுக்குக் கொடுப்பதென்பதும் பெரிய போராட்டம் தான். பத்திரிக்கையில் ஒரு பெயர் விடுபட்டாலும் பெரும் சண்டையாகிவிடும் என்பதால் அந்தந்தப் பகுதி ஓட்டு லிஸ்ட்டை வாங்கி அப்படியே எழுதிக்கொள்கிறார்கள். அதிலும் சில பெயர்கள் தவறிவிட்டால் பேனாவால் எழுதி இணைத்துக் கொள்கிறார்கள். தாய்மாமன்கள், வரவேற்பார்கள், பெரியப்பன் சித்தப்பன்மார்கள், தாய்வழிப் பாட்டனார்கள், தந்தை வழிப் பாட்டனார்கள், அங்காளி பங்காளிகள், சிறப்பு அழைப்பாளர்கள், நண்பர்கள், குட்டீஸ், “வலிமை” குரூப், “பீஸ்ட்” குருப் இனிமேல் “புஷ்பா” குரூப்பும் வந்துவிடும். இத்தனை பெயர்களை எப்படி ஒரு பத்திரிக்கைக்குள் அடைக்க முடியும்? முடியாததது என்று ஒன்றுமில்லை என்று இப்போது பத்திரிக்கை புத்தகம் போல் வந்துவிட்டது. அதிலும் அந்த பத்திரிக்கையில் விசேச வீட்டு ஆண்களின் புகைப்படங்கள் நம்மை அச்சுறுத்தின்றன. தன்னருகே புலி சிங்கம் நிற்பதுபோல் போட்டுக் கொள்கிறார்கள். சிலர் தான் வைத்திற்கும் பைக், கார், லாரி போன்றவற்றை போட்டுக் கொள்கிறார்கள். நான் வியந்த ஒரு பத்திரிக்கையின் முகப்பில் அவர்கள் வைத்திருக்கும் மண் அள்ளும் கொக்கி லாரியை போட்டிருந்தார்கள். ஒரு விசேத்தில் அடிபட்ட சிலர் மறு விசேசத்தில் பெற்றோர் பெயரைக்கூட விட்டுவிட்டு மணமக்கள் பேரை மட்டும் போட்டுவிட்டு ஜகா வாங்கியும் கொள்கிறார்கள்.

பல்லவி:
பொறந்தாலும் வைக்கிறான் விசேம்
இறந்தாலும் வைக்கிறான் விசேஷம்
இரண்டுக்குமே வாங்குறான்டா மொய்யி
தாலிய வித்துக்கூட தாய்மாமன் செய்யி

விசேசம் வைக்கிறது
விவசாயம் போல் ஆச்சுடா – விசேசப்
பத்திரிக்க பாத்துப் பாத்து
பாதி உயிர் போச்சுடா

சரணம் – 1
புத்தகம் போல் அச்சடிச்சுப்
பத்திரிக்கை கொடுக்கிறான் – அவன்
தொணை எழுத்த விட்டா கூட
துண்டப் போட்டு இழுக்கிறான்

விஜய் அஜித் ரசிகர்கள – விசேச
வீட்டுக்காரன் மிஞ்சாரம்
சாகப்போற கிழவியையும் – கட்டவுட்டில்
சாத்திதானே வைக்கிறான்

பத்துப் பேரு தின்னுபோறான்
நூத்தி ஒண்ண செஞ்சு
குறும்பாடு போட்டவனுக்கு
கொதிக்குதடா நெஞ்சு

லேப்டாப்பில் எழுதுறாங்க
இப்பல்லாம் மொய்யி
கேமராவில் பாக்குறாங்க – மொய்
கட்டாயமா செய்யி

சரணம் – 2
பத்திரிக்க குடுக்காமப்
பாதிப்பேரு வந்திடுவான்
கவருக்குள்ள கவிதவச்சு
கல்யாணத்தில் தந்திடுவான்

அரசியல்வாதி தலைமையில் – விசேசம்
வைக்குதிங்க ஊருடா
மான் கதைய ரொம்ப நாளா – தலைவர்
சொல்லுறது போருடா

இல்ல விழா நடக்குதுங்க
மண்டபத்தில் இங்கு
இல்லாதவன் மொய்யி செய்ய
பணம் காய்க்கு தெங்கு

வேட்டு போட்டுக் காசுகள
சாம்பலாக்கிப் போறான்
குவாட்டர்களப் பந்தியில
குடிதண்ணியாத் தாரான்

குழு:
அன்பு காட்டும் சொந்த பந்தம்
அப்பளம் போல் நொறுங்கிப் போச்சுடா
நின்னு பேசக் கூலி கேக்கும்
காலமாகச் சுருங்கி போச்சுடா

இந்த மொய் கலாச்சாரத்தை பெரிதாக எழுத இருந்து கொண்டே இருக்கிறது. இதை ஆய்வு செய்தால் நமக்கு தலையணை சைஸ் நூல் கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது. செய்த மொய் ரூபாயை ஒரு கஷ்ட சூழலில் ஒருவர் திருப்பி செய்யாவிட்டால் அது 10 ரூபாயாக இருந்தாலும் விழா முடிந்த சில நாட்களில் அதை வீட்டிற்கே சென்று வசூலித்தும் விடுவார்கள் என்கிற அவலம் மனிதாபிமான வாழ்விற்கு நேர் எதிரானது.

இந்தப் பாடல்தொட்டே எனக்கும் இசையமைப்பாளர் ஜெய கே தாஸுக்கும் நல்ல நட்பு மலர்ந்தது. நாங்கள் இணைந்து எண்ணிக்கையற்ற தனிப் பாடல்களை உருவாக்கினோம். அவை சில, பல மில்லியன் பார்வையாளர்களைத் தந்தன. அவரின் இசையில் ஒரு சுகம் உட்கார்ந்திருக்கும். நான் காலத்தால் ஒரு நூறு இசையமைப்பாளர்களையாவது கடந்திருப்பேன் அவர்களில் எனக்குப் பிடித்தவர்களின் பத்துப் பேர் பட்டியலில் இவருக்கும் ஒரு நாற்காலி உண்டு.

தொடர் 21: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 21: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




ஒரு பாடலுக்கான வண்ணத்தை அந்த படத்தின் கதையும் அந்தப் பாடலுக்கான சூழலுமே முடிவு செய்கின்றன. இதில் முதலில் இயக்குநர் ஒன்ற வேண்டும். அதன் பின் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இறுதியாக பாடகர்களும் தன் குரலை அந்த வண்ணத்தில் கரைத்து விடவேண்டும். இவற்றில் எங்காவது வேறொரு வண்ணம் எட்டிப் பார்த்தல் என்பது அந்தக் கதைக்கு இழைக்கப்படுகிற கேடாகிவிடும். திரைப்படத்தைப் பொருத்தவரை எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் எடுத்துக்கொண்ட கதையின் அன்பான வேலைக்காரர்களே.

மேற்கூரியவை திரைப்படப் பாடல்களுக்கென்றால் தனிப்பாடல்களைக் கையாளும் போது எனக்கொரு சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. தனிப்பாடல் எழுதுகிற போது பாடலுக்கான சூழலும் அதன் வண்ணமும் என்னுடையதாக இருக்கிறது.

ஒசூர் தமுஎகச நடத்திய ஒரு பாடல் பட்டறையை நடத்தியது. தமுஎகசவின் இன்றைய மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் அந்த பட்டறையை நடத்திக் கொடுப்பதன் பொறுப்பாளராக இருந்தார். அதில்  எப்போதும் போல் நவகவி, நான், வையம்பட்டி முத்துசாமி, தனிக்கொடி போன்ற கவிஞர்களும், கரிசல் குயில் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, கரிசல் திருவுடையான், துரையரசன் போன்ற பாடகர்களும் கலந்து கொண்டோம். அந்த நாள் மறக்கமுடியாத ஒன்றெனக்கு. மறைந்த தோழர் கவிஞர் வையம்பட்டி முத்துசாமி அண்ணன் அவர்கள் பார்க்கிறவர்களிடமெல்லாம், இவர் பெயர் ஏகாதசி. இவர் தான் ஆத்தா உன் சேலை பாடலை எழுதியவர் என்று பட்டறை முடியும் வரையிலும் அறிமுகம் செய்துவைத்தபடியே இருந்தார். அவர் ஒசூரைச் சேர்ந்தவர். இப்படிப்பட்ட மனம் யாருக்கு வருமென்று நான் வியந்த தருணம் அது.

அந்த பாடல் பட்டறையில் நான் எழுதியதுதான்,

“வாக்கப் பட ஆச – நா 
வளவி தொட ஆச 
அப்பன் வீட்டப் பிரிஞ்சு கொஞ்சம் 
அழுது பாக்க ஆச”

எனும் முதிர்கன்னி பற்றிய பாடல். இந்தப் பாடலுக்கும் அங்கே எதிர்ப்பு வந்தது. காரணம்,
எனது “வாக்கப்பட ஆச” மற்றும் அதற்கு முன்னால் எழுதப்பட்ட இன்னொரு கவிஞரின் பாடலான “எத்தன மொற வெக்கப்படுவா எங்கக்கா” போன்ற பாடல்கள் பெண் கல்யாணத்திற்காக ஏங்கியும் அதற்காக இந்த ஆண் சமூகம் படுத்துகிற பாடுகளை தாழ்மையோடு தாங்கியும் கொள்வதாக இருப்பதால்  பெண்கள் சோர்வாகிவிடுவார்கள் என்பது தான். இது உண்மையான காரணம் தான் ஆனால் மக்களின் சம கால வாழ்வை அதன் கண்ணீரை கலையும் இலக்கியமும் பதிவு செய்து ஆவனப்படுத்துதல் என்பது சரியான காரியம் என்றே எனக்கு இப்போதும் படும். அந்த விவாதத்திற்குக் காரணமே  பெண்ணுரிமைக்காக தன் வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் அவர்கள் அங்கே இருந்ததுதான். அவர் எப்போதும் பெண்ணை கம்பீரமாக உருவாக்கவே பாடுபட்டுக் கொண்டிப்பார். நான் அவர் வழியிலும் எனது பங்களிப்பை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.Paadal Enbathu Punaipeyar Webseries: 21 Written by Lyricist Yegathasi தொடர் 21: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அங்கே ஒரு காதல் பாடல் ஒன்றும் எழுதியிருந்தேன். அப்பாடலை அன்றைக்கு மனதார ரசித்துக் கொண்டாடினார் கவிஞர் தனிக்கொடி. இவரைப் போன்று பாடலையோ கவிதையையோ ஒரு எழுத்துப் பதரின்றி எழுத தமிழகத்தில் ஆளில்லை. தேர்ந்த படைப்பாளி கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டிகளில் மரபுக் கவிதைப் போட்டியிலும் புதுக்கவிதைப் போட்டியிலும் கலந்து கொண்டு இரண்டிலும் முதல் பரிசைப் பெற்றவர். தற்போது திரைப்படப் பாடலாசிரியராக மின்னிக் கொண்டிருக்கும் இவர் இரசித்த எனது தனிப்பாடலை நீங்களும் இரசிக்க வேண்டாமா.

பல்லவி
மழையென நீ பேச 
இலையென நனைகின்றேன் 
அலையோசை வளையோசை 
ஒன்றென உணர்கின்றேன் 

நுரையீரல் பை நிறைய 
அன்பினை ஊட்டுகிறாய் 
கறை ஏதும் படியாமல் 
காதலைச் சூட்டுகிறாய்

சரணம் – 1
ஒத்தடம் போல உன் தடம் பதிய 
பின்வரும் எந்தன் காலம் 
தாவர கீதம் படித்திட நாளும் 
பனித்துளி யாவேன் நானும்

காற்று வெளிகளில் பாறை முகடுகளில் 
காதலின் ரத்தம் கலந்திருக்கும் 
இறந்த காக்கைக்கும் இதயம் துடிக்கையில் – உன்
காதல் என்னில் கலந்திருக்கும் 

ஒருகாலும் உடையாமல் நாம் வாழ – ஒரு 
ஒப்பந்தம் செய்தே சேர்ந்தோமடி 
சிறு நேரம் மனத்தாபம் உண்டானால்
பெருந் தவத்தாலே தீர்த்தோமடி

சரணம் – 2
பிரியும் கண்ணில் பிரியம் வைத்து 
மீண்டும் அருகில் வருவாய் 
நாளை வரைக்கும் பாராதிருத்தல் 
நரகக் கொடுமை என்பாய்  

வளர்ந்த மரங்களும் வாயாடி பெண்போல் 
பூக்களை சாலையில் இரைக்கையிலே 
பாரதி கவிதைப் பேசி சென்றோம் 
நிலாவும் பழம்போல் மிதக்கையிலே 

இரு மேகத் துண்டாக கடல் வானில் – நாம் 
தலைகீழாய் அலைவ தில்லையடி 
சுடும் மண்ணில் நாம் நின்று விடும் மூச்சில் – சோறு 
செய்துண்ணல் என்றும் இன்பமடி

திரைப்படதிற்கு ஒரு பாடலாவது எழுதிட மாட்டோமா என்று புலம்பித் தவிப்பது முதல் கட்டம். முதல் பாடல் வாய்ப்புக் கிடைத்து எழுதி திரைக்கும் வந்தபின் இன்னொரு கட்டம் நோக்கி நகர்வோம், பின்பு நான்கைந்து பாடங்களுக்குப் பாடல்கள் எழுதிவிட்டோம் ஆனால் ஒரு பாடலும் வெளியில் சொல்லும்படி இல்லையே என மனம் அலையுறும். அதையடுத்து பத்துப் பதினைந்து பாடல்களுக்குப் பின் ஒரு பாடல் அல்லது இரு பாடல் வெற்றியான பின் மூன்றாம் கட்டம் நம்மை இழுக்கும். அந்தக் கட்டம், ஒவ்வொரு படத்திலும் இப்படி நான்கைந்து பாடலாசிரியர் பட்டியலில் சிக்கித் தனித்துவமின்றி கிடக்கிறோமே டைட்டிலில் நம் பெயர் சிங்கள் கார்டா வந்தா எப்படி இருக்கும் என்று தோன்றும். இப்படியாக அடுத்தடுத்த கட்டங்கள் வந்துகொண்டே இருக்கும். நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் எல்லா கட்டங்களையும் தாண்டிவிடலாம் என்பது உண்மையிலும் உண்மை.

இப்போதெல்லாம் எனக்கு பாடல் வாய்ப்புக் கிடைப்பதில் சிரமமில்லை, நமக்கு கிடைக்கும் பாடல் நாளை சேனலில் ஒளிபரப்பும் பாடலாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. சோகப் பாடலையோ அல்லது கதையை நகர்த்தும் (montage)  பாடலையோ சேனலில் ஒளிபரப்ப மாட்டார்கள்‌. சேனலுக்கு வராத பாடல் அவ்வளவாய் ஹிட் ஆகாது, ஆனால் அவ்வப்போது ஹிட் கொடுத்துக் கொண்டே வந்தால்தான் நமக்கு மார்க்கெட் இருக்கும். அதனால்தான் நாம் சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்ள ஒரு காதல் பாடல் அதிலும் டான்ஸ் இருப்பது போன்ற பாடலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.Paadal Enbathu Punaipeyar Webseries: 21 Written by Lyricist Yegathasi தொடர் 21: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அப்படியான பாடல்களில் ஒன்றைத் தான், நண்பர் ரமேஷ் சுப்பிரமணியம் அவர்கள் இயக்கி, நவீன் அவர்கள் இசைத்து, அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் பாடினார். பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட். அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்லாது இப்போதும் சேனலில் வலம் வந்துகொண்டிருக்கும் அந்தப் பாடல் தான் “வில் அம்பு” படத்தில் “ஆள சாச்சுப் புட்டா கண்ணால”.

பல்லவி
ஆள சாச்சுப்புட்டா கண்ணால
ஐயோ தாங்கலயே என்னால
மூச்ச வாங்கிப் போறா முன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால

நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி
குந்திக்கிட்டு ஆடுறா
நூத்தி எட்டக் கொண்டாங்கடா
பி.பி.யத் தான் ஏத்துரா

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால

சரணம் – 1
நா லுங்கிய ஏத்திதான் கட்டுவேன்
இப்போ தரையத்தான் கூட்ட வச்சா
நா சேட்டைய சேவையா செய்யுவேன்
ஏ வாலத்தான் சுருட்ட வச்சா

நானோ தனி ஆளு
அவ சேந்தா செம தூளு
ஒண்ணாம் நம்பர் ஃபோர் ட்வொன்டிய 
ஹீரோவா ஆக்கிப்புட்டா

நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால 

சரணம் – 2
ஓ நகத்த நீ கடிச்சிதான் துப்புற
அட தரையெல்லாம் பூக்குதடி
என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்குற
உள்ள ஜீவ்வுனு ஏறுதடி

போடி சண்டாளி 
உன்னால தவிச்சேன்டி
ஒண்ணாம் நம்பர் ஃபோர் ட்வொன்டிய 
ஹீரோவா ஆக்கிப்புட்டா

நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால

காணாம போனேன்டா கொய்யால (கொய்யால)
என்னமோ ஆச்சுடா மெய்யால (மெய்யால)
தலைகீழா நடக்குறேன் கையால (கையால)
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாடல் இயக்குநரின் வண்ணம். முதல் பாடல் என் வண்ணம்

தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




நான் 2000 ம் வருடம் நடிகை ராதிகாவின் ராடான் டிவியின் தயாரிப்பில் வெளிவந்த தொடர்களான “அவன் அவள் அவர்கள்” (மும்மொழி) மற்றும் சரத்குமார் தொகுத்து வழங்கிய “கோடீஸ்வரன்” போன்றவற்றில் என் குருநாதர் இயக்குநர் சி. ஜேரால்டு அவர்களிடம் உதவி இயக்குநராக பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் சூர்யா எனும் புனைப்பெயரில் இயங்கிக் கொண்டிருந்தேன். நான் சென்னை வராததற்கு முன்பும் இதே பெயரில் தோழர் வெண்புறா தீட்டிய அட்டை படத்தோடு “மீறல்” என்கிற நூலை தமுஎகச நாகமலை புதுக்கோட்டை கலை இரவில் வெளியிடப்பட்டது. சூர்யா எனும் பெயரில் மூன்று டிவி தொடர்கள் பணியாற்றி முடிப்பதற்குள் நடிகர் சூர்யாவும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவும் பிரபலமாகிவிட நான் என் புனைப்பெயரை ராஜினாமா செய்துவிட்டு ஏகாதசியாகவே ஆனேன் என்பது வேறுகதை. அந்த காலகட்டத்தில் தான் ராடன் டிவியில் “சித்தி” சீரியல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்தத் தொடரில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்த மாதேஷ் என்பவர் எனக்கு நண்பரானார். அவர் ஒருநாள் அவரின் வகுப்புத் தோழர் செல்வநம்பியை அறிமுகம் செய்து வைத்தார். செல்வநம்பி இசையமைப்பாளராகும் கனவோடு சென்னையில் இருப்பவர். அப்போது நான் திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கவில்லை. பிறகு நானும் செல்வ நம்பியும் நல்ல நண்பர்களானோம். எனது ஆரம்பகட்டத் திரைப்பாட்டுப் பயணத்தின் போது மெட்டுக்கு பாடல் எழுதுவதில் எனக்கிருந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.

நண்பர் மாதேஷ் தனது முதல் படத்திற்கு செல்வநம்பியைத்தான் இசையமைப்பாளராக போடுவேன் என அழுத்தமாக இருந்தார். எனக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. நினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன, நான் இயக்கிய முதல் படத்திற்கு பரணியை போடவேண்டிய சூழலாகிவிட்டது. மாதேஷ் இயக்குநர் ஆவதற்கு பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். போராட்டத்தில் வெல்லும் நாளில் அவரின் முதல்பட இசையமைப்பாளர் செல்வநம்பிதான் இருப்பார் என்றெல்லாம் யாரும் முடிவுசெய்துவிட முடியாது.

என் முதல் படத்திலும் அவர் இல்லை. என் இரண்டாம் படத்திலும் அவர் இல்லை. இடையில் நான் இயக்குவதாகயிருந்த ஒரு படத்திற்கு அவரை முடிவு செய்தேன். அந்தப்படம் இடையில் நின்றுவிட்ட போதிலும். படத்திற்காக அவர் எனக்குத் தந்த மூன்று மெட்டுக்களும் அதற்கு நான் எழுதிய வரிகளும் மறக்க முடியாதவை. இதன் கம்போஸிங் சிதம்பரத்தில் ஒரு ஹோட்டலில் நடந்தது. அது அவரின் ஊரும் கூட. பெரும்பாலும் சாப்பாடு அவரின் வீட்டில் தான். கம்போஸிங் நடந்துகொண்டிருந்த போது ஒரு நாள் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் நண்பர் கவிஞர் த. கண்ணன் வீட்டிலிருந்து மீன் குழம்பு சாப்பாடு சமைத்து எடுத்துவந்து என்னை உபசரித்தார் அந்த அன்பிற்கு  நிகர் ஏதுமில்லை.

பல்லவி
அவ நேரா பாத்தா த்ரிஷா 
தல சாச்சுப் பாத்தா சமந்தா  
அவ நடக்கும் போது அனுஷ்கா 
அட சிரிக்கும் போது சிநேகா 

அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ 
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2) 

எந்தக் கடையில அரிசி வாங்குறா 
இம்புட்டு அழகா இருக்கிறா 
எவர் சில்வர் தட்டப்போல பாவிமக – ஏ 
எதிர போகயில மினுக்குறா 

சரணம் – 1 
தலமுடி ஒண்ணு குடுத்தாக்கா 
அரணா கயிறு கட்டிக்கலாம் 
அருவா கண்ண குடுத்தாக்கா 
வேலிக்கு முள்ளு வெட்டிக்கலாம் 

பைசா நகரத்துக் கோபுரத்த 
பாதகத்தி மறச்சு வச்சா 
பாத்துப் போகும் கண்ணுக்கெல்லாம் 
பச்ச மொளகா அரச்சு வச்சா 

துண்டு மஞ்சளும் அவதொட்டா 
குண்டா ஆகிடுமே – அந்தப் 
பொண்ண ஒருநாள் பாக்காட்டா – ஏ 
கன்னம் வீங்கிடுமே 

அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ 
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2) 

சரணம் – 2 
தொறந்த வீட்டுக்குள்ள நொழஞ்சுக்கிடும் 
நாயப் போல காதலடா 
விரட்டிப் பார்த்தும் போகவில்ல 
அதுபோல் ஒருசுகம் காணலடா 

காதல ஜெயிக்க சாமிகிட்ட 
மொட்ட போடத்தான் வேண்டிக்கிட்டேன் 
கல்யாணம் முடிக்கச் சம்மதிச்சா 
காசு துட்ட நான் சேத்துக்குவேன் 

ரோசாப் பூவென ஏம்பொழப்பு 
அழகா மலரணுமே – அவ 
செவப்பா ஒருத்தனத் தேடிக்கிட்டா – நா
லூசா பொலம்பணுமே 

அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ 
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2) 

இது செல்வநம்பி மெட்டுக்கு சிதம்பரத்தில் நான் எழுதிய பாடல்கள் மூன்றில் ஒன்று. Paadal Enbathu Punaipeyar Webseries 20 Written by Lyricist Yegathasi தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி செல்வநம்பியின் கனவும் நிறைவேறியது அவர் “திட்டக்குடி” எனும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். நான் என் முதல் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த தவறினேன், ஆனால் அவர் என்னை அவரின் முதல் படத்தில் விட்டுவிடவில்லை. இறுகப் பிடித்துக் கொண்டார். திட்டக்குடி படத்தில் நான்கு பாடல்கள் எழுதினேன். அதன் இயக்குனர் சுந்தரம் அற்புதமான நண்பர். என் எழுத்துக்கள் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அவரின் அடுத்த படமான “ரங்க ராட்டினம்”  படத்திலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்புத் தந்தார். இதிலும் செல்வ நம்பியே இசை.

செல்வநம்பியும் நானும் குடும்ப நண்பர்களானோம். என் தோழி காளத்தி காளீஸ்வரன் தயாரிப்பில் “பெண் அழகானவள்” என்கிற  பத்து பாடல்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தை உருவாக்கினோம். Paadal Enbathu Punaipeyar Webseries 20 Written by Lyricist Yegathasi தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி அதில் அவர் இரண்டு பாடல்களும் பாடித்தந்தார். அவரின் குரலுக்கு நான் ரசிகன். சென்னை வீதியில் பெரிய பயணம் எங்களுடையது.

பல்லவி 
இதயத்தில தீயெரிய 
உயிர் மட்டும் தாங்கிக் கொள்ளுதே 
ஒரு பறவ உறவிழந்து 
ஊர் விட்டு ஊரு செல்லுதே 

புயல் காத்து வீசும்போது 
தீபம் பேசிடுமா 
உப்பு மேல பட்ட தூறல் 
நீங்கிடுமா

விழி சாஞ்சா வெளிச்சமில்ல 
உயிர் சாஞ்சா ஒண்ணுமில்ல 
நிலவொடஞ்சு விழுமா விழுமா 

சரணம் – 1
துன்பமெல்லாம் இவ நெஞ்சுக்குள்ள 
கூடி வந்து அடையும் 
கண்ணாடியா உயிர் இருந்திருந்தா 
எத்தன முற உடையும்  

கூட்டுக்குள்ளே தீயை யார் வைத்தது 
காதலெனும் விதியா 
இனி கொள்ளை போக உயிர் மீதமில்லையே 
கனவாகிப் போனதையா 

கண்ணீரால் பெண்ணொருத்தி 
தலைவாசல் தெளித்தாளே 
விதி எழுதி பார்க்கும் கூத்து
வருசமெல்லாம் தவமிருந்து 
பெற்ற வரம் வீணாச்சு 
இவ தனியா அலையும் காத்தோ 

சரணம் – 2 
தாயக்கட்ட நீயும் ஆடயில 
தப்புகள செஞ்ச 
காதலெனும் ஒரு பேரு வச்சு 
கத்தரிச்ச நெஞ்ச 

சிறு பிள்ளை போலே 
விளை யாடிடத்தான் 
பெண் இங்கே பொம்மை இல்ல  
ஒரு தீர்ப்பு சொல்ல – இங்க 
யாரும் இல்ல 
உள் நெஞ்சே உண்மை சொல்லும

பாவம் செஞ்ச குத்தத்துக்கு 
பரிகாரம் ஏதூமில்லையே  
வேரறுத்த பின்னாலே 
பூப்பூக்கும் யோகமில்லையே 

இது திட்டக்குடி பாடல்.
காதலெனும் பேர் வைத்து பெண்களை வேட்டையாடித் தின்று எலும்புகளை வீசுகின்ற ஆண் சமூகத்தின் நெற்றியில் ஆணி அடிப்பதான கருப்பொருள் இது. நாங்கள் தொடர்பு அறாத நட்பாய் இன்னமும் இருக்கிறோம்.