இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அரிதான வளர்ச்சியினைக் காண முடிந்தது, அடுத்த கால் நூற்றாண்டில் 3லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினையும், 20ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் 6 விழுக்காடு வளர்ச்சியினையும் கண்டது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தொடக்க நிலையில் தொடர்ந்து விரைவான விரைவான வளர்ச்சியினைப் பெற்றிருந்தாலும் அத்துடன் சமுதாயத்தில் சமனின்மை என்ற நிலையும் காணப்பட்டது. 1980க்கு முன்பு அரசியல் மற்றும் கொள்கைகள் வாணிபச் சார்பு, வளர்ச்சிச் சார்பு என்ற இரண்டிற்கும் எதிரானதாக இருந்தது. ஆனால் 1980க்கு பின் வளர்ச்சிச் சார்பு மற்றும் வாணிபம் சார்பு நிலைக்கு ஆதரவான அரசியலும், கொள்கைகளும் உருவானது. 1990களில் சந்தைச் சார்பு நிலையினைப் பின்பற்றிய இந்தியா பன்னாட்டுப் பொருளாதாரத் தளங்களில் தடம் பதிக்கத் தொடங்கியது. வாணிபச் சார்பின் உத்திகள் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவானது ஆனால் சந்தத்தைச் சார்பு உத்திகள் நுகர்வோர்களுக்கான ஆதரவான நிலையுடையது. சந்தை சார்பு உத்திகள் போட்டியினை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கும். இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியும் உள்நாட்டு வாணிபம் மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் இதன் விளைவுகள் அரசியல் பெருக்கத்தினால் வட்டார மற்றும் வகுப்புச் சமனின்மை அதிகரித்தது, மொழிசார் தேசியத்தின் தாக்கம் குறைந்தது, அரசியல் காரணங்களினால் நலன் சார் அணுகுமுறைகள் உருவாகியது.
இந்தியாவில் தனிக் கட்சி ஆதிக்கம் முடிவுற்று கூட்டணி ஆட்சிகள் ஒன்றி அரசியல் தொடர்ந்து நடைமுறையிலிருந்தது. 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் (ஐ.மு.கூட்டணி), பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (தே.ஜ.கூட்டணி) போட்டியிட்டது. தேர்தல் முடிவில் ஐ.மு.கூட்டணி 218 இடங்களிலும், தே.ஜ.கூட்டணி 181 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐ.மு.கூட்டணியானது மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. இக் கூட்டணி 2004 முதல் 2009 முடிய ஆட்சியில் இருந்தது. மீண்டும் 2009ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 262ல் ஐ.மு.கூட்டணியும், 159ல் தே.ஜ.கூட்டணியும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. இக் கூட்டணி ஆட்சி முழுமையாக பத்து ஆண்டுகள் மே 2009 முதல் மே 2014வரை நீடித்திருந்தது. பல மாநிலக் கட்சிகள் ஐ.மு.கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 7 – 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல், முதலீட்டைப் பெருக்குவது, வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கூலியினை அளித்து குடும்பத்திற்கான சம்பாத்தியத்தை உருவாக்குவது, வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்துவது போன்றவை இடம் பெற்றிருந்தது (GoI 2004).
ஐ.மு.கூட்டணி அரசின் ஜனரஞ்சக திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், சீர்திருத்தங்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தியது மற்றும் உள்கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்தியது போன்றவற்றைக் குறிப்பிடலாம் (Maitreesh Ghatak et al 2014). அதே சமயம் பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம், விலை உயர்வு, இந்தியப் பணம் வலுவிழந்தது, நிதிப் பற்றாக்குறை போன்றவை ஐ.மு.கூட்டணி அரசில் காணப்பட்டது. மார்ச் 7, 2005ல் பிரதமர் மன்மோகன் சிங் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றும்போது, இரண்டாவது பசுமையை புரட்சியானது பழம், காய்கறிகளின் உற்பத்தியினைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றார். இதற்காகத் தோட்டக்கலை இயக்கம் (mission) உருவாக்கப்பட்டு நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள், கருவுற்ற தாய்மார்கள் பயனடையும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் இந்தியத் திட்டக் குழுவினால் வடிவமைக்கப்பட்தைக் குறிப்பிட்டார். இரண்டாவது பசுமைப் புரட்சியானது, பொது-தனியார்-பங்கேற்புடன் நடத்தப்படும் என்றும், இதனை நடைமுறைப்படுத்த அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானிக்கப்பட்டது என்றார். இதன்படி 1) நீர் ஆதாரப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு உணவு உற்பத்தியை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காண்பது, 2) அறுவடைக்கும் பிந்தைய நிலைகளில் வீணாகும் விளைபொருட்களின் அளவினைக் குறைப்பது, சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது, பன்னாட்டு அளவில் விவசாயிகள் வேளாண் வாணிபத்தில் பங்கேற்பை ஊக்குவிப்பது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்தியா உலக உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியினை மேற்கொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டது.
ஐ.மு.கூட்டணி அரசைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய அறைகூவல்களை எதிர்கொண்டது. அவை, 1) பொருளாதார அறைகூவல்கள் 2) அரசியல் அறைகூவல்கள் ஆகும். பொருளாதார அறைகூவல்களைப் பொருத்த அளவில் உள்கட்டமைப்புகளுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துதலின்போது பெரும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது. உயர் பொருளாதார வளர்ச்சியானது திறனுடைய தொழிலாளர்களின் தேவையினை அதிகரித்தது. ஆனால் அடிப்படையில் இந்தியாவால் குறைந்த திறனுடையவர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.மு.கூட்டணி அரசானது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால் அதில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. ஏழைகளுக்கான திட்டமாக இது இருந்தாலும் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்தது. அரசியல் ரீதியாகக் காங்கிரஸில் இரட்டைத் தலைமை காணப்பட்டது. பா.ஜ.கவின் இந்துத்துவ கொள்கை வேரூன்றி இருந்தது. காங்கிரஸ் தலைமுறை, வாரிசு அரசியல் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ரீதியாகச் செயல்பாடுகள் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் தோய்வு காணப்பட்டது. நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
2004-05ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. 2005-06ல் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், மருத்துவத் தாவரங்கள், வாசனைப் பொருள் உற்பத்தித் தாவரங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2005-06ல் ஒன்றிய அரசின் உதவியுடன் வேளாண் சீர்திருத்த விரிவாக்கத்திற்கு மாநில அரசுகள் திட்டம் செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்பட்டது. 2005-06ல் வேளாண்மைக்கான நடைமுறை ஆராய்ச்சி முன்னோடித் திட்டத்திற்கான தேசிய நிதி உருவாக்கப்பட்டது. இத்துடன் இதே ஆண்டில் தேசிய வேளாண் கண்டுபிடிப்புகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. வேளாண் சந்தை படுத்துதலுக்கு 2003 வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 2006ல் பாரத் நிர்மாண் என்ற கால வரம்பு (2005 – 2009) திட்டம் அறிவிக்கப்பட்டது. விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டம், பிராதான மந்திரி கிராம சாலை திட்டம், விரைவுபடுத்தப்பட்ட கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டம், இந்திரா வீட்டு வசதி திட்டம், ராஜீவ் காந்தி கிராம மின் இணைப்பு திட்டம், கிராம பொது தொலைப்பேசி போன்றவற்றை உள்ளடக்கி ஒரு குடையின் (பாரத் நிர்மாண்) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. நீர் ஆதாரம். வெள்ள மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு திட்டம் மார்ச் 2005ல் தொடங்கப்பட்டது. நீர்த் தேக்கம் பழுது பார்த்தல், மறுசீரமைப்பது, நீர்த் தேக்கத்தை மீண்டும் பெறுவது போன்றவை இந்தியாவில் 16 மாவட்டங்களில் 700 நீர்த் தேக்கங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட்டது. இதனால் 20000 ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்தது (GoI 2005).
இந்திய விவசாயிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, தனிநபர், உறவினர்கள்;, முகவர்கள், வண்டிக்காரர்கள், வியாபாரிகள் போன்ற ஆதாரங்களின் வழியாக அதிக அளவிற்குக் கடன் பெற்று வேளாண் சாகுபடி செய்பவர்களாக இருக்கின்றனர். 1951-61ல் கிராமப்புறக் கடனில் 75 விழுக்காடு முறைசாரா வழியாக அதிக வட்டிக்கு வண்டிக்காரர்களிடம் பெற்றிருந்தனர். இதனைப் போக்க 1969, 1980ல் இந்திய அரசு வங்கிகளை தேசியமயமாக்கியது. இதன் விளைவு 1991ல் இவ்வகைக் கடன் 25 விழுக்காட்டிற்குக் கீழ் குறைந்தது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபின் முறைசார் (நிறுவனக் கடன்) திடீரென வீழ்ச்சியடைந்தது. 1992ல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையான வேளாண்மைக்கு “இலக்கின் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குதல்” பரிந்துரைக்கப்பட்டதால், விவசாயிகள் அதிக வட்டிக்கு முறைசாரா வழியாக மீண்டும் கடன் பெறத் தொடங்கினர். அரசு அளித்த வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அவர்களின் சாகுபடி செலவை எதிர்கொள்ள முடியாத நிலையே இருந்தது. இதனால் விவசாயிகள் மேலும் அதிகமாகக் கடன் பெறத் தொடங்கினர். எனவே, ஐ.மு.கூட்டணி அரசானது 2004-05 முதல் 2007-08 முடிய வேளாண் கடன் வழங்கலை இரட்டிப்பு ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வேளாண் குடிகளில் கடன்பட்டோர் 48.6 விழுக்காடாக இருந்தது 2013ல் 51.9 விழுக்காடாக அதிகரித்தது. இக் கடன் நிலை மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாட்டுடன் காணப்பட்டது. கடன்பட்ட விவசாயிகளின் பங்கானது உச்ச அளவாக ஆந்திரப் பிரதேசத்தில் 93 விழுக்காடாகும். தேசிய அளவில் வேளாண் குடிகளில் கடன் பெற்றோரில் 60 விழுக்காட்டினர் நிறுவனம் சார் கடனாளிகள் ஆவார்கள். விவசாயப் பணிகள் மேற்கொள்ளக் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்க 1998ல் கிசான் கிரெடிட் அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியானது உள்ளடக்கிய நிதி முறையினைப் பின்பற்றியதால் ஐ.மு.கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2013ல்) விவசாயிகளுக்கு 392 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது. இவர்கள் பெறும் கடனைச் சரியான தவணைக்குள் திருப்பிச் செலுத்தப்பட்டால் பூஜ்ய வட்டி என்று அறிவிக்கப்பட்டது. அரசின் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 2003ல் வேளாண் குடிகளின் சராசரிக் கடன் ரூ.12885லிருந்து 2013ல் ரூ.47000ஆக அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது 375 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது (Sher Singh Sangwan 2015).
2008-09ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்களின் கடன் ரூ.6000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைந்தனர். தேசிய விவசாயக் கொள்கை செப்டம்பர் 2007ல் தேசிய விவசாயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2007-08ல் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகவர் விரிவாக்கத் திட்டம் 300 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது. இதன்படி வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கோதுமை, நெல், பருப்பு உற்பத்தியை 10 மில்லியன் டன், 8 மில்லியன் டன், 2 மில்லியன் டன் என்று முறையே 11வது திட்ட கால முடிவிற்குள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மே 2005ல் தொடங்கப்பட்டது. இதன்படி தோட்டக்கலை வட்டார அணுகுமுறையின் அடிப்படையில் உற்பத்தியினை அதிகரிப்பது, ஊட்டச்சத்து உறுதியினை சாத்தியமாக்குவது, வேளாண் குடிகளின் வருமானத்தை உயர்த்துவது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. மார்ச் 2005ல் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகவர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கு உதவி செய்தது. மார்ச் 2006ல் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் 3.4 லட்சம் ஹெக்டேர் பயனடைந்தது. அக்டோபர் 2006ல் தேசிய மூங்கில் இயக்கம் தொடங்கப்பட்டது இதன்படி மூங்கில் உற்பத்தியினை விளைவித்து வேலைவாய்ப்பை உருவாக்க முனைந்தது. 1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து டிசம்பர் 2006 முதல் புதிய வழிகாட்டுதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய நீர்த் தேக்கங்கள் பழுதுபார்த்தல், மறுசீரமைத்தல், புதுப்பித்தல் திட்டம் 2005ல் ரூ.300 கோடியில் தொடங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆகஸ்ட் 2007ல் தொடங்கப்பட்டது. தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் ஆகஸ்ட் 2007ல் வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க ரூ.2500 கோடி செலவில் தொடங்கப்பட்டது. எண்ணெய் வித்துக்களுக்கான தொழில்நுட்ப இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் விளைச்சல் விரைவான அதிகரிப்பை அடைந்தது. ஆனால் 1990களில் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சமையல் எண்ணெய் அதிகமாக இறக்குமதியானது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகள் இழப்பினை எதிர்கொண்டனர், சாகுபடி செய்யும் விளைநிலப் பரப்பும் குறையத் தொடங்கியது. மீண்டும் 2001ல் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வித்துக்கள் மீது வரி விதித்ததால் சமையல் எண்ணெய் விலை உயர்வடைந்தது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் எண்ணெய்வித்துக்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். 2010-11ல் இறக்குமதிக்கான சமையல் எண்ணெய் மீது வரிவிதித்தது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிப் பரப்பு அதிகரித்தது.

Source: Government of India (2016): Indian Public Finance Statistics 2015-2016,” Ministry of Finance, Department of Economic Affairs, Economic Division.

Source: GBGA (2013) “How has the Dice Rolled: Response to Union Budget 2013-14,” Centre for Budget and Governanace accountability, New Delhi, www.cbgaindia.org.
ஐ.மு.கூட்டணி அரசானது கிராமப்புற மேம்பாட்டிற்குப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம், பிரதான மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா, தேசிய சமுதாய உதவி திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் போன்றவை கிராமப்புற மேம்பாட்டிற்கு மன்மோகன் சிங் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது (Amit Basole 2017). ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டம் 2007ஆம் ஆண்டு விவசாயம் சார்ந்த துறைகளிலிருந்து வருகின்ற வருமானத்தை ஆண்டுக்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த கொண்டுவரப்பட்டது. இதற்கான ரூ.25000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விதை, உரம், தோட்டக்கலை, வேளானமை இயந்திரமயமாக்கல், வேளாண் விரிவாக்கம், பயிர்ச் சாகுபடி, சந்தைப் படுத்துதல், பரிசோதனை ஆய்வகம், நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, நீர்த் தேக்கம் மற்றும் கூட்டுறவு போன்றவற்றின் மீதான மேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தொடர் வேலை என்பது இயலாத நிலையினை உணர்ந்து தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம் செப்டம்பர் 2005ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத் திட்டம் பிப்ரவரி 2, 2006ல் நாட்டில் முதல்கட்டமாக 200 மாவட்டங்களில் ரூ.11300 கோடி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2009ல் இத்திட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறத்தில் திறன் குன்றிய உழைப்பாளர்களுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பினை அளிப்பதை நோக்கமாக்க கொண்டது. இத் திட்டத்தினால் கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்தக் குறிப்பாக நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இத் திட்டத்தில் சம்பூர்ணா கிராமின் ரோஜ்கர் யோஜனா திட்டமும், உணவுக்கு வேலைத் திட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் இத் திட்டம் 330 மாவட்டங்களிலும், 2008-09ல் 596 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வழியாக ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் 2006-07ல் 90.5 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டது. 2009-10ல் இது 283.6 கோடியாகவும், 2013-14ல் இது 220.4 கோடியாகவும் அதிகரித்தது (Ashok Pankaj 2017). இத்திட்டத்தைக் கிராமப்புற பஞ்சாயத்துகள் வழியான நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐ.மு.கூட்டணி அரசானது 2004ல் முதல் முறையாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தைத் துவக்கி கிராமப்புற மேம்பாட்டிற்கும் தனிக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது (GBGA 2009). கால்நடைகள் வேளாண்மை வளர்ச்சிக்கும், கிராமப்புற வருமான பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுவதால் 2013-14ல் தேசிய கால்நடை இயக்கம் ரூ.307 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2014ல் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், காளான், பூக்கள், நறுமணப் பொருட்கள், மரங்கள் போன்றவை வளர்ப்பதாகும். இதன்படி 11வது திட்டக் காலத்தில் இவற்றை பயிரிட 23.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. 2012ல் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியாவின் சர்க்கரை துறை முறைப்படுத்துதல் அறிக்கையின்படி கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் முக்கியமானது, சர்க்கரையைக் கொள்முதல் செய்து பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதாகும். 2010-11ல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்த ரூ.400 கோடி 2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2012-13ல் ரூ.1000 கோடியாக அதிகரித்தது (GoI 2013).
விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காகப் பேரா.ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராமப்புற கடன் நிலைக்கான வல்லுநர் குழு 2006ல் அமைக்கப்பட்டது.
இக்குழு ஜூலை 2007ல் தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தது. அதில் அளவுக்கு அதிகமான மக்கள் வேளாண்மையினைச் சார்ந்திருக்கின்றனர், கிராமப்புறம் தொடர்ந்து பெருமளவிற்கு பன்முகமடையாமல் உள்ளது, தலா வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது, பாசனத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது, வட்டார ஏற்றத் தாழ்வு அதிகரிப்பு, கடன் இருப்பில் பற்றாக்குறை, வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடு போதுமான அளவிற்கு இல்லாமல் உள்ளது, குறைவான தொழில்நுட்ப பயன்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைந்திருப்பது போன்ற அறைகூவல்களை இந்திய வேளாண்மை சந்திக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில் பிரதம மந்திரி தொகுப்பை நாட்டில் 31 மாவட்டங்களில் ரூ.28000 கோடிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தியது (GoI 2007). 2007-08ல் கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டமான ஆம் ஆத்மி பீமா யோஜனா தொடங்கப்பட்டது. வேளாண் துறையின் வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2009ல் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை, 2010-11ல் சில மாநிலங்களில் வறட்சி, 2012-13ல் தாமதமான பருவ மழை போன்ற நிலை நிலவியது. அதே சமயம் எப்போதும் இல்லாத அளவாக 2011-12ல் உணவு தானியம் 259.32 மில்லியன் டன் உற்பத்தியானது. எட்டாவது திட்ட காலத்தில் வேளாண் வளர்ச்சி சராசரியாக 4.8 விழுக்காடும், 9வது திட்டத்தில் 2.5 விழுக்காடும், 10வது திட்டத்தில் 2.4 விழுக்காடும், 11வது திட்ட காலத்தில் 3.6 விழுக்காடும் இருந்தது (GoI 2013) எனவே நீடித்த வேளாண் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு 12வது திட்டக் காலத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு வேளாண் வளர்ச்சியினை உறுதிசெய்ய முடிவெடுத்தது. ஆனால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஐ.மு.கூட்டணி ஆட்சி முடிவுற்றதால் இதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை.
இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறைக்குப் பிந்தைய காலங்களில் பல முதன்மைப் பயிர்களின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களில் அதிகரித்திருந்தது. ஆனால் 2001 – 2010ஆம் ஆண்டுகளுக்கிடையே பருப்பு மற்றும் பருத்தியின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்தது. நெல், சர்க்கரை, கோதுமை உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களுடன் ஒப்பிடும்போது 1990களில் அதிகரித்திருந்தது. பருத்தி உற்பத்தி 2000-01 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிக வளர்ச்சியை அடைந்ததற்கு முக்கியக் காரணம் பி.டி.பருத்தி ரக தொழில்நுட்பமாகும். ஆனால் இதனைச் சாகுபடி செய்ய அதிக செலவும், இடரும் இருந்ததால் 2010-11 மற்றும் 2015-16ல் உற்பத்தி வளர்ச்சி, உற்பத்தித் திறன் குறைந்தது.
அட்டவணை: வேளாண்மை செயல்பாடுகள் (விழுக்காடு)
விவரங்கள் | 1981-82 முதல் 1989-90 வரை | 1990-91 முதல் 1999-00 வரை | 2000-01 முதல் 2009-10 வரை | 2010-11 முதல் 2013-14 வரை |
வேளாண் வளர்ச்சி | 2.9 | 2.8 | 2.4 | 2.1 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி | 4.7 | 5.3 | 6.8 | 3.7 |
மொத்த நீர்பாசன பரப்பு வளரச்சி | 2.07 | 2.28 | 1.11 | 1.36 |
உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி | 2.8 | 1.79 | 1.03 | 0.66 |
Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.
அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வேளாண்மையின் போக்கு
விவரங்கள் | 2003-04 | 2004-05 | 2005-06 | 2006-07 | 2007-08 | 2008-09 | 2009-10 | 2010-11 | 2011-12 | 2012-13 | 2013-14 |
உண்மை வேளாண் வளர்ச்சி | 9.0 | 0.2 | 5.1 | 4.2 | 5.8 | 0.1 | 1.0 | 7.7 | 3.6 | 1.8 | 3.7 |
ஜிடிபி-க்கு வேளாண்மையின் பங்கு | 20.3 | 19.0 | 18.3 | 17.4 | 16.8 | 15.8 | 14.7 | 14.5 | 14.1 | 13.7 | 13.9 |
வேளாண்யின் மூலதன ஆக்கம் (ஜிடிபி-யில் மூ) | 2.1 | 2.1 | 2.2 | 2.2 | 2.3 | 2.7 | 2.6 | 2.3 | 2.4 | NA | NA |
உணவு தானிய உற்பத்தி (மி.ட) | 213 | 198 | 209 | 217 | 231 | 236 | 218 | 245 | 259 | 255 | 266 |
தலா உணவு தானிய இருப்பு (கிராம்) | 438 | 463 | 422 | 445 | 443 | 436 | 444 | 437 | 454 | 450 | 401 |
குறைந்த பட்ச ஆரவு விலை(ரூ) நெல் (சாதாரணம்) கோதுமை | 550 630 | 560 540 | 570 700 | 620 850 | 745 1000 | 900 1080 | 1000 1000 | 1000 1170 | 1080 1285 | 1250 1350 | NA NA |
Source: GoI (2017): “Economic Survey 2016-17,” Ministry of Finance, Government of India.
அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பீடு
ஆண்டு சராசரி | தேஜகூ (1998-04) | ஐமுகூ-I (2004-09) | ஐமுகூ-II (2009-13) | ஐமுகூ (2004-13) |
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (%) | 5.9 | 8.0 | 7.0 | 7.6 |
பொதுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%) | 5.4 | 6.1 | 10.4 | 8.1 |
உணவுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%) | 4.2 | 7.0 | 11.6 | 9.0 |
நிதிப்பற்றாக்குறை (ஜிடிபி யில் % ஆண்டுக்கு) | 5.5 | 3.9 | 5.5 | 4.6 |
அந்நியச் செலாவணி வரத்து (பில்லியன் டாலர்) | 2.85 | 15.44 | 16.19 | 20.22 |
வேளாண்மைக்கான விவசாயக் கடன் வளரச்சி (%) | 135.97 | 140.93 | 132.90* | 307.81* |
உணவு தானிய உற்பத்தி (%) | 202 | 218 | 244 | 229.6 |
குறிப்பு: * 2011-12 வரை
Source: Maitreesh Ghatak, Parikshit Ghosh, Ashok Kotwal (2014): “Growth in the Time of UPA – Myths and reality,” Economic and Political Weekly, Vol 49 (16), pp 34-43 and
http://www.rgics.org/sites/default/files/Facts-NDA-UPA.pdf.

Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.
ஒப்பீட்டு அளவில் பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5.9 விழுக்காடாக இருந்தது, ஐ.மு.கூட்டணி ஆட்சியின் முதல் காலகட்டத்தில் 8.0 விழுக்காடாகவும், இரண்டாவது காலகட்டத்தில் 7.0 விழுக்காடாகவும், ஒட்டுமொத்தமாக 7.6 விழுக்காடாகவும் இருந்தது. பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியைவிட ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி ஆண்டான 2012-13ல் பொருளாதார வளர்ச்சி அதிக அளவில் குறைந்தது. தொழில் மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சியானது ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் தே.ஜ.கூட்டணியின் ஆட்சியைவிட செயல்பாடுகள் சிறந்து காணப்பட்டது. ஆனால் உணவு பணவீக்கம், தே.ஜ.கூட்டணி அரசியைவிட (4.2 விழுக்காடு) ஐ.மு.கூட்டணி அரசில் (9.0 விழுக்காடு) அதிகமாக இருந்தது. ஆனால் அந்நியச் நேரடி முதலீடானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் ரூ.2.35 பில்லியன் டாலராக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 20.22 பில்லியன் டாலராக அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியமானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 1.6 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது 2.6 விழுக்காடாக அதிகரித்தது. இதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 50 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 61 விழுக்காடாக அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி அரசு பதவி ஏற்றபோது வேளாண்மை மீதான பொது-தனியார்-பங்கேற்பு முதலீடானது 2003-04ல் 20:80ஆக இருந்தது 24:76 என்று 2013-14ல் மாற்றம் அடைந்தது. மொத்த வேளாண்மைக்கான முதலீட்டில் பொதுத்துறை 20 முதல் 25 விழுக்காடு என்ற வீச்சில் 2003-04 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே இருந்தது. நீர்ப்பாசனமும் உணவு உற்பத்தியும் நேர்மறைத் தொடர்புடையது. 1980ல் நீர்பாசனப் பரப்பளவு அதிகமாக அதிகரித்திருந்தது ஆனால் 1990களில் இது குறைவான அளவிற்கே உயர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் பொதுத் துறை முதலீடு நீர்ப்பாசனத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கீடு செய்ததாகும். மொத்த உற்பத்தியில் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு 2005-06ல் 0.8 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது 2013-04ல் இது 0.6 விழுக்காடாகக் குறைந்தது. இது போல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு 1998-99ல் ஜி.டி.பியில் 0.44 விழுக்காடாக இருந்தது 2011-12ல் இது 0.32 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டுகளில் வேளாண் விரிவாக்கத்திற்கு 0.15 விழுக்காடாக இருந்தது 0.05 விழுக்காடாகக் குறைந்தது (Shantanu De Roy 2017).
உணவு விலையானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் மெதுவாக அதிகரித்தது ஆனால் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது வேகமாக அதிகரித்துக் காணப்பட்டது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது ஐ.மு.கூட்டணி காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் 2005-06 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே நெல்லுக்கு 11.3 விழுக்காடும், கோதுமைக்கு 10.1 விழுக்காடும், கரும்புக்கு 12.9 விழுக்காடும், பருத்திக்கு 9.2 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்பட்டது (Krishnasamy et al 2015). மேலும் இக் காலகட்டத்தில் 650 லட்சத்திற்கு மேல் விவசாயிகள் கடன் பெற்றனர். உணவிற்கான மானியம் மூன்று மடங்கு அதிகரித்தது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 35 கிலோ உணவு தானியம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. ஐ.மு.கூட்டணியில் தலா வருமானம் மூன்று மடங்கு அதிகரித்தது. இரண்டு லட்சம் கி.மீட்டருக்குமேல் கிராமப்புற சாலைகள் கட்டமைக்கப்பட்டது. வறுமையானது ஆண்டுக்கு 2 விழுக்காடு குறைந்தது (Govardhana Naidu 2016). ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் வேளாண் வருமானம் 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே 5.36 விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக வேளாண் சாகுபடியாளர்களின் வருமானம் 7.29 விழுக்காடு இதே காலகட்டத்தில் அதிகரித்திருந்தது (Ramesh Chand et al 2015).
ஐ.மு.கூட்டணி அரசில் எரிசக்தி உருவாக்கம், சாலைக் கட்டமைப்பு, ரயில் கட்டமைப்பு, கனிம வளங்களை எடுத்தல், தொலைத் தொடர்பு விரிவாக்கம் போன்ற முக்கியக் கட்டமைப்பின் மீது முதலீடுகள் செய்யப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பதியல் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 4.76 விழுக்காடாக தே.ஜ.கூட்டணியில் இறுதி காலமான 2003-04ல் இருந்தது 2008-09ல் 7.32 விழுக்காடாகவும், 2010-11ல் 8.4 விழுக்காடாகவும் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 7-8 விழுக்காடு அளவிலிருந்தது ஆனால் இது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக அளவிலான வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், கிராமப்புற ஏழைகள், பழங்குடியினரிடையே பெரும் கொந்தளிப்பு உருவானது. அதே நேரம், ஏழைகள் பெருமளவிற்குக் குறைந்தனர். 1993-94 மற்றும் 2004-05ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 0.74 விழுக்காடு ஏழ்மை குறைந்தது ஆனால் இது 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 2.18 விழுக்காடு ஏழைகள் குறைந்தனர், குறிப்பாக இது கிராமப்புறங்களில் 0.75 விழுக்காடு மற்றும் 2.32 விழுக்காடு என்று முறையே குறைந்தது குறிப்பிடத்தக்கது (Maitreesh Chatak et al 2014).
பொருளாதார சீர்திருத்தமானது வேளாண்மையில் சிறிய அளவில் பயிர் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பெரிதும் பாதித்து. கிராமப்புற உள்கட்டமைப்பு மீது பொதுத்துறை முதலீடு குறைந்தது, குறிப்பாக நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், சிறு விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடன் குறைந்தது போன்றவை வேளாண் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தது. 2011-12ல் வேளாண்மையை 59 விழுக்காடு ஆண் உழைப்பாளர்களும், 75 விழுக்காடு பெண் உழைப்பாளர்களும் சார்ந்திருந்தனர். உயர் பொருளாதார வளர்ச்சி கிராமப்புற வறுமையைக் குறைக்கக் கூடியதாகும். வேளாண் வளர்ச்சி 2விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு வரை அதிகரித்து இத்துடன் பொருளாதாரமும் 9 விழுக்காடு அதிகரித்தால் வேளாண் சார் துறைக்கும் வேளாண் சாரத் துறைக்கும் உள்ள வருமான இடைவெளியினை குறைக்கும் என்று திட்டக்குழு (2006ல்) கணித்துள்ளது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1981-82 முதல் 1989-90க்கும் 2010-11 முதல் 2013-14க்குமிமையே அதிக அளவில் குறைந்துள்ளது. வேளாண்மையின் முக்கியப் பயிர்கள் சீர்திருத்தக் காலங்களுக்குப்பின் பொதுவாகக் குறைந்த அளவு வளர்ச்சி காணப்படுகிறது (Shantanu De Roy 2017).
இந்தியப் பொருளாதாரத்தை பொருத்த அளவில் வேளாண்மையினை உள்ளடக்கிய முதன்மைத் துறையானது மற்ற இரு துறைகளான தொழில் மற்றும் சேவையைவிட மிகவும் பின்தங்கியதாகவும், அதிக பாதிப்பினை உடையதாகவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதே சமயம் வேளாண்மை சார் வேiவாய்ப்பு மற்றும் உற்பத்தியும் திடமான முன்னேற்றம் கண்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வேளாண் குடிகள் 70 விழுக்காட்டினர் போதுமான வருமானமின்றி வாழ்ந்து வருகின்றனர். வேளாண் சாராத துறையானது கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் வேளாண் சார் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் 2005ல் வேளாண் சாரா வேலைவாய்ப்பு 27 விழுக்காடாக இருந்தது 2010ல் 32 விழுக்காடாகவும், 2015ல் 42 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண்மை மூலம் போதுமான வருமானம் ஈட்ட முடியாதல் 52 விழுக்காடு வேளாண் குடிகள் கடனாளிகளாக உள்ளனர். இவர்கள் சராசரியாக ரூ.47000 கடனை உடையவர்களாக உள்ளனர். தொழிலாளர் அமைச்சகத்தின் கணக்கின்படி 76.9 விழுக்காடு கிராமப்புற குடிகள் மாதம் ரூ.10000 வருமானம் பெறுகின்றனர். 90 விழுக்காட்டுக் கிராமப்புறக் குடிகள் குறிப்பாக விவசாயிகள், கைவினைஞர்கள் அரசின் குறைந்தபட்ச கூலியினைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி வேளாண்மை மூலம் பெறும் வருமானம் 2003ல் ரூ.1060 ஆக இருந்தது 2013ல் ரூ.3844 ஆக அதிகரித்தது. இந்தியாவில் தற்போது 30 விழுக்காடு வேளாண் குடிகள் வண்டிக்காரர்கள், வணிகர்களிடம் கடன் பெற்றுள்ளனர் (Amit Basole 2017). இந்தியாவின் வேளாண்மையின் வழியாக பெரும் வருமானமானது 2004-05ல் ரூ.434160 கோடியாக இருந்தது 2011-12ல் ரூ.1144363 கோடியாக அதிகரித்தது. அதேசமயம் வேளாண் சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 9.27 கோடியிலிருந்து 7.82 கோடியாகவும், வேளாண் சாகுபடியாளர்களின் எண்ணிக்கை 16.61 கோடியிலிருந்து 16.62 கோடியாகவும் இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது (Ramesh Chand et al 2015).
மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு பணவீக்கம், பன்னாட்டு நிதி சிக்கல், எரிபொருள் விலை ஏற்றம், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதிக வட்டி வீதத்தினால் முதலீட்டில் பின்னடைவு, ஊழல் போன்ற நிகழ்வுகள் காணப்பட்டது. அதே சமயம் கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், கிராமப்புற சுகாதார இயக்கம், தகவல் அறியும் சட்டம், தொழில்நுட்ப மேம்பாடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னுரிமை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. (Anil Padmanabhan 2014). இந்திப் பொருளாதாரம் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரித்தது, பொருளாதார கட்டுப்பாடு இல்லாமல் தடையற்றதாக இருந்தது, வறுமை துல்லியமாக்கக் குறையத் தொடங்கியது, உள்கட்டமைப்புகள் அதிக வேகமெடுத்தது போன்றவை பல்வேறு தளங்களில் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றது (Maitreesh Ghatak et al 2014). ஒப்பீட்டு அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து பேரியல் பொருளாதார நிலைகளில் சிறந்ததாக இருந்தது.
1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக திறனை அடைவது என்ற இரட்டை இலக்கைக் கொண்டதாக இருந்தது. இதனைக் கட்டுப்பாடற்ற சந்தை வழியாக அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் உற்பத்தித் திறன் அதிகமானது. 1991ல் பொருளாதாரச் சீர்திருத்தின பிந்தைய நிலைகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்தது. 2003-04க்கு பிந்தைய ஐந்தாண்டுக் காலத்தில் 10 விழுக்காட்டிற்குச் சற்றே குறைவான வளர்ச்சியினை கண்டது. ஆனால் 2008ல் ஏற்பட்ட உலக நிதிச் சிக்கல் இந்த உயர் வளர்ச்சியினை முடிவிற்குக் கொண்டுவந்தது. இதனால் நீடித்த தொழிற் கொள்கை, வர்த்தகக் கொள்கை போன்றவை உற்பத்தித் துறையினைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் சேவைத் துறை விரைந்த வளர்ச்சியினை பெற்றது. வேளாண் துறையினைப் பொருத்தமட்டில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டதுமட்டுமல்ல மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உணவு தானிய தலா கையிருப்பானது குறைந்தது. இதற்கான காரணம், தாராளமயமாக்கப்பட்ட சந்தை மற்றும் தொழில், சேவைத் துறைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பதாகும்.
இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழையில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதால் நிலத்தடி நீர் பெருமளவிற்கு உரியப்படுகிறது. நீர்ப்பாசன ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு, கிணறு போன்றவற்றுக்கு அதிக செலவு ஏற்படுவதால் விவசாயிகள் கடன் பொறியில் சிக்குகின்றனர். இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சியானது நவீனத் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் தொடர்புடையது. இதனை அதிக அளவில் உள்ள குறு, சிறு விவசாயிகளால் மேற்கொள்ளாதது வேளாண்மையின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அன்மைக் காலமாக பல்வேறு காரணங்களினால் மண் வளம் நிறைந்த பகுதியில்கூட உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது. வேளாண்மை மீதான பொதுத் துறை முதலீடு குறைந்து காணப்படுவது போன்றவை வேளாண் துறையின் செயல்பாடுகளில் பிற்போக்கான நிலை உள்ளதற்கான காரணங்களாகக் கண்டறியப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் கட்ட ஆட்சியில் சிறப்பான பல அம்சங்கள் வேளாண்மையை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்டது அதன் வளரச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் இதற்கான முன்னெடுப்பு குறைவாகவே இருந்தது. அளவுக்கு அதிக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கவனம் செலுத்தப்பட்டதால், வேளாண் விளைநிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான வாட்டர்லூ வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
– பேரா.பு.அன்பழகன்