இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 15 நரேந்திர மோடியின் 2.0வும் வேளாண்மையும் – பாகம்-2 பேரா.பு.அன்பழகன்
2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில். இந்தியாவை உலகளவில் முதன்மை தேசமாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, இந்தியாவில் தயாரிப்பது, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப் பு, பெண்களுக்கானச் சமத்துவம், நல்லாட்சி, உள்ளடக்கிய வளர்ச்சி, உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 354 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் பா.ஜ.க தனித்து 303 இடங்களில் வெற்றிபெற்றது. இது பா.ஜ.க 2014ல் வெற்றி பெற்றதைவிடக் கூடுதலாக 21 இடங்களில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியானது பா.ஜ.க சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றியது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசியல் சாசனப் பிரிவு 370 விலக்கிக்கொள்ளப்பட்டது. குடியுரிமை சட்டம் முஸ்லீம் அல்லாத இந்தியாவில் குடியேறிய மூன்று நாடுகளின் (பாக்கிஸ்தான். பங்களாதேஷ்; ஆப்கானிஸ்தான்) மக்களுக்குக் குடியுரிமை, முஸ்லீம் மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுதல், ராமர் கோவில் கட்டுவதற்கானப் பணிகள் துவக்கம், புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட அடிக்கல், முஸ்லீம் பெண்களுக்கு எதிரான மும்முறை தலாக் ஒழிப்புச் சட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற அதிரடி அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியது. 2019ன் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, 2019 மற்றும் 2021களுக்கிடையே மூன்று அலைகளின் தாக்கத்தினால், நாடுமுழுவதும் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதால் இந்தியா பொருளாதார அளவில் நிலைகுலைந்து போனது. உற்பத்தி நிறுத்தம், வேலையின்மை அதிகரிப்பு, வறுமை, போக்குவரத்து தொடர்பு அறுபடுதல், அரசுச் செலவு அதிகரிப்பு போன்ற விளைவுகள் உருவானது. இதில் வேளாண்மைத் துறை உட்பட அனைத்து துறைகளும் பெரும் பாதிப்பிற்கு உண்டானது. வேளாண்மையில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வேளாண்மை நடவடிக்கைகள் பெருமளவிற்குப், (குறிப்பாகப் பஞ்சாப். ஹரியானா. உத்திரப் பிரதேசம். கேரளா) பாதித்தது. 2019ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் இந்திய அளவில் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை உருவாக்கியது. மோடி அரசு 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிப்பது, 2024ல் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது, நீர் சேமிப்பைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் நிறுத்துவது, சுகாதார அளிப்பை மேம்படுத்துவது, அனைவருக்கும் வீட்டு வசதி, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.102 கோடி மதிப்பீட்டில் 7000 திட்டங்களுக்கு (குழாய் நீர் இணைப்பு, சாலை, நீரப்பாசனம், சுகாதாரம், டீஜிடல் இந்தியா, நகர்ப்புற வசதி) ஒதுக்கப்பட்டு நடைமுறைகளை மேற்கொள்வது என்று பல செயல்பாடுகளை மோடியின் 0.2வில் முன்னெடுத்தது.
நீர் சேமிப்பு நடவடிக்கையின் முதல் படியாக ஜல சக்தி என்ற புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஜல சக்தி அபியான் (Jan Shakti Abhiyaan) மற்றும் ஜல ஜீவன் மிஷ்ன் (Jal Jeevan Mission) என்ற இரு திட்டங்கள் நீர் சேமிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் முக்கிய நோக்கம் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் 2024குள் குடிநீர் இணைப்பை ஏற்படுத்தித் தருதல். நீர் வீணாகுவதைத் தடுக்கப் புதிய உத்திகளைக் கடைப்பிடித்தல். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 43 முதல் 55 லிட்டர்வரை தண்ணீர் அளிப்பது போன்றவையாகும். சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். 2018ல் ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டு தரமான மருத்துவத்தைச் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக மருத்துவக் காப்பீடு மற்றும் நல மையங்கள் வழியாகச் சுகாதாரம் அளிக்க ரூ.1.50 லட்சம் கோடியில் சுகாதார மையங்கள் கிராமப்புறங்களில் 2022ல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று இருக்க இருப்பிடம் அடிப்படையானதாக உள்ளதால் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா தொடங்கப்பட்டு 20 மில்லியன் வீடுகளுக்குப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க 2016ல் திட்டமிடப்பட்டது. இவ்வீடுகள் அனைத்து வசதிகளும் (தண்ணீர் குழாய் இணைப்பு. மின் இணைப்பு உட்பட) உள்ளடக்கியதாக இருந்தது.
2021ல் வெளியிடப்பட்ட SAS அறிக்கையின்படி இந்தியாவில் விவசாய குடும்பங்கள் தங்களின் மாத வருமானத்தில் 37 விழுக்காடு மட்டுமே வேளாண் சாகுபடி வழியாகப் பெறுகின்றனர். 40 விழுக்காடு வருமானம் கூலியின் வழியாகவும் , 15 விழுக்காடு கால்நடை வளர்த்தல் மூலமாகவும் , 6 விழுக்காடு வேளாண் சாரா வணிகம் மூலமாகவும் , 1 விழுக்காடு நிலம் குத்தகைக்கு விடுவதன் மூலமாகவும் பெறப்படுகிறது. 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. இடுபொருட்களுக்கான மானியத்தைத் தொடர்ந்து வழங்குதல், உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தரமான இடுபொருட்களைப் பயன்படுத்துதல், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்கக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்வது, வேளாண் உற்பத்தியில் அதிக அளவிற்கு உபரியை உருவாக்கிச் சந்தை படுத்துதல் , வேளாண் மற்றும் வேளாண் சாரா இரண்டுக்குமான வர்த்தக நிர்யினை அதிகரிப்பது, நேரடியாக விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு தீவிரமாக நடைமுறை படுத்திவருகிறது.
10000 புதிய விவசாயிகள் உற்பத்தி அமைப்பை அடுத்த ஐந்தாண்டுகளில் தொடங்கி விவசாயிகள் பலன்பெற மாநில அரசுகள் மின்-சந்தை (e-NAM) தொடங்க அனுமதி அளிப்பது, வேளாண்மையில் பூஜ்ய செலவிலான திட்டம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
வேளாண்மையில் மின்சாரப் பம்பு செட்டுகள் நீர்ப்பாசன வசதியினை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால் மின் பற்றாக்குறை நிலவிவருவதால் தடையற்ற மின்சாரம் கிடைப்பது இல்லை. எனவே அரசு முறைசார ஆற்றலைப் பயன்படுத்திப் பம்பு செட்டுக்களை நீர் இறைப்பிற்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஜூலை 2019ல் நீர்ப்பாசன வசதிக்காக மோட்டார் பம்பு செட் பயன்பாட்டிற்குப் பிராதான் மந்திரி கிசான் உர்ஜா சுரகூஷ உத்தன் மஹாவியான் திட்டம் (PM-KUSUM) அறிமுகப்படுத்தப்பட்டது. டீசல், மண்ணெண்ணெய் பயன்பாட்டிற்கு மாற்றாகச் சூரியஒளியினைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதன்படி 20 லட்சம் விவசாயிகளுக்குப் பம்பு செட்டுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இத்துடன் 15 லட்சம் விவசாயிகளுக்குச் சோலார் பம்பு செட்டுகள் 60 விழுக்காடு மானியத்துடன் , 30 விழுக்காடு அரசுக் கடனுடன் அமைத்துத் தர முடிவெடுக்கப்பட்டது. சோலார் பேனல் வழியாக உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை விற்கவும் விவசாயிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உபரியாக உள்ள வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளில் சந்தைப் படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் பெற இயலும். இதற்கு முக்கியத் தேவையாகக் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகளை உருவாக்கித் தரப்படுகிறது. 162 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவை நபார்டு (NABARD) உதவியுடன் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அழுகக்கூடிய பொருட்களான பால், இறைச்சி, மீன் ஆகியவற்றை விரைவுப் பரிவர்த்தனைக்குக் கொண்டு செல்லா ஏதுவாக இந்திய ரயில்வே ‘விவசாயி இரயில்’ பொது-தனியார்-பங்கேற்புடன் இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுய உதவிக் குழு உதவியுடன் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த முறையில் தோட்டக்கலையை மேம்படுத்த ஏற்றுமதி சந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மானாவாரி பயிரிடும் பகுதிகளை ஒருங்கிணைந்த முறையில் பல்லடுக்கு பயிர்செய்தல், தேனி வளர்த்தல், சூரியஒளி பம்புகள், சூரியஒளி உற்பத்தி போன்றவை ஏற்படுத்தவும், வேளாண்மையில் பூஜ்ய செலவின் அடிப்படையிலான திட்டத்தை விரைவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த மேம்பாட்டுக்குப் பிரதம மந்திரி கதி சக்தி என்ற திட்டத்தின்படி சாலை, ரயில்வே. விமான நிலையம், துறைமுகம், பொருண்மை போக்குவரத்து, நீர் வழிப் போக்குவரத்து, போக்குவரத்து உள்கட்டமைப்பு, போன்றவற்றை வலுப்படுத்த முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவுச் சாலைகளை உருவாக்க ரூ.2000 கோடியில் 25000 கி.மீ அமைக்கவும், மக்கள் மற்றும் பொருட்களை வேகமாகப் பயனிக்கவும், எடுத்துச் செல்லவும் பலநிலை போக்குவரத்து வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ட்ரோன்கள் முறையைப் பயன்படுத்தி வேளாண் விளைச்சலைக் முன் கணிப்பு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல், வேளாண்மையைத் தாக்கும் புதியவகைப் பூச்சிகள் அழிப்பு, மண்ணின் உயிர்ச்சத்தை அதிகரிப்பது போன்றவை நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுபோல் வேளாண்மை மீதான முதலீடுகள் குறிப்பாக நீர்ப்பாசம், ஆராய்ச்சி, சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற முயற்சிகளும் அரசு மேற்கொள்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு வேளாண் சார்புத் துறைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்புத் திட்டம் 2000ல் அன்றைப் பிரதமர் வாஜ்பாயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் செயல்பாடுகள் அரசியலைக் கடந்து கிராமப்புறச் சாலை இணைப்பு மற்றும் மேம்பாட்டில் நல்ல முன்னேற்றம் கண்டதால் கிராமங்களில் சமூக-பொருளாதாரத் தளங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 97 விழுக்காடு குடியிருப்புகள் சாலை இணைப்பைப் பெற்றுள்ளது. மோடியின் ஆட்சியில் பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் பகுதி மூன்றுக்கு ரூ.8020 கோடியில் 1.25 லட்சம் கி.மீ சாலை அமைக்க 2019ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து வரும் 1000 நாட்களுக்கு ஒருநாளைக்கு 130 முதல் 135 கி.மீ சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 30000 கி.மீ சாலைகள் பசுமை தொழில்நுட்பம் முறையிலும், பிளாஸ்டிக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்டும் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.
ஜூன் 2020ல் பாராளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு செப்டம்பர் 2020ல் இவற்றைச் சட்டமாக்கியது. அதன்படி ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்’, ‘வேளாண் விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்’, ‘விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம்’ நடைமுறைக்குக் கொண்டுவந்தது. இச்சட்டங்களின் முதன்மை நோக்கங்களாக, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பது, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நாட்டின் எப்பகுதியிலும் நல்ல விலைக்கு விற்கத் தடையற்ற நிலையினை உருவாக்குவது, தனியார் மண்டிகளை ஊக்குவித்து வேளாண் விவசாயிகளுக்கு வருவாய் பெறும் நோக்கினை மேம்படுத்துதல். வேளாண் விளைபொருட்களை அறுவடைக்காலங்களில் கொள்முதல் செய்து அவற்றைச் சேமித்துவைத்தல் போன்றவை ஆகும். இதனால் வேளாண் உள்கட்டமைப்புகள் தனியார் முதலீடுகளால் வலுப்பெறும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும், விவசாயிகள் லாபமடைவார்கள் என்று எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த பட்ச ஆதரவு விலை நாளடைவில் நீர்த்துப்போகக்கூடும். விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள ஏபிஎம்சி என்கிற மண்டி அமைப்பு நடைமுறையில் காணாமல் போகலாம். வேளாண்மை பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றடையும் இதனால் விவசாயிகளின் உரிமைகள் பறிபோகும் போன்ற காரணங்களில் விவசாயிகளிடம் கடுமையான எதிர்ப்பு உருவானது.
வேளாண் ஒப்பந்த முறை 1960களில் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 1990களில் தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் ஒப்பந்த முறையிலான சாகுபடி செய்யும் முறையிருந்தது. பின்னால் இது 12க்கு மேற்பட்ட வேளாண் பயிர்கள் என விரிவானது. இவ்வொப்பந்தத்தில் உள்நாட்டுத் தனியார் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்த வேளாண்மையை மேற்கொண்டது.
2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதன் முதலில் தமிழ் நாட்டில் இச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு 2019ல் வேளாண் ஒப்பந்தச் சட்டம் கொண்டுவந்தது அதனைத் தொடர்ந்து ஒடிசாவில் 2020ல் கொண்டுவரப்பட்டது.
வேளாண் ஒப்பந்தச் சட்டத்தினால் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துதல், தரமான விதைகள், வேளாண் விரிவாக்கம், உறுதிப்படுத்தப்பட்ட சந்தைப் படுத்துதல் மற்றும் விலை போன்றவற்றில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும் நடைமுறையில் கடந்த காலங்களில் இம்முறையில் வேளாண் விளைபொருட்களின் தரத்தைக் காரணம் காட்டி ஒப்பந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்ய முன்வராத நிலையும், நிறுவனங்கள் தாமதமாகப் பணம் வழங்குதல், குறைவான விலைக்குக் கொள்முதல், தரம் குறைந்த இடுபொருட்கள் அளிப்பு, பயிர் செய்வதில் இழப்பு ஏற்படும்போது எந்தவித இழப்பீடும் வழங்கப்படாதது. அதிக அளவில் இடுபொருட்களின் செலவு, நிலைத்த நிலையிலான ஒப்பந்த விலை, நிறுவனங்கள் ஒப்பந்தத்தைத் தன்னிச்சை செய்யும் உரிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. வேளாண் ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்த பட்ச நிலம் என்ற வரையறையை நிபந்தனையாக வைத்ததால் சிறு, குறு விவசாயிகள் இதனால் பயன் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கான முக்கியக் காரணம் குறைந்த அளவு நில உடைமையாளர்கள் அனுமதிப்பதால் போக்குவரத்துப் பரிமாற்றச் செலவு அதிகமாகும் என்பதாகும் (Sukhpal Singh 2022).
அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகளால் டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாளடைவில் ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமளவிற்குத் திரண்டு ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் டெல்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் அறவழியில் முற்றுகைப் போராட்டத்தினை நவம்பர் 25, 2020இல் முன்னெடுத்தனர். இப்போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள 500க்கு மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து அனைத்து இந்திய விவசாயிகள் போராட்ட கூட்டு ஒருங்கிணைப்புக் குழு (All India Kisan Sangharsh Coordination Committee) உருவாக்கப்பட்டது. போராட்ட காலங்களில் 750க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 358 நாட்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு வேறு வழியின்றி அடிபணிந்து இந்த மூன்று சட்டங்களையும் நவம்பர் 19, 2021 அன்று திரும்பப் பெறுவதாக அறிவித்தது. விவசாயிகள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இப்போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இந்தியாவில் இயற்கை வேளாண்மைக்கான சூழலைப் பற்றி பன்னாட்டு நிபுணர்களின் பங்கேற்புடன் நிதி ஆயோக்ஏ ஏற்பாட்டில் மே 2020ல் நடந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கப் பாரதிய ப்ராக்ரித்திக் க்ரிஷ் மேம்பாட்டுத் திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme) தொடங்கப்பட்டது. இதற்காக அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி உதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேரும், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேரும் பயனடைந்திருக்கிறது.
விவசாயிகளின் முக்கிய வருமான ஆதாரங்களில் கால்நடைகள் வளர்த்தலும்; ஒன்றாகும். இதற்காகப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாகப் பால் உற்பத்தியானது இந்தியப் பொருளாதாரத்திற்கு 5 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. இத்துறையில் 8 கோடி விவசாயிகள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தியா உலக அளவில் பால் உற்பத்தியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. உலக பால் உற்பத்தியில் இந்தியா 23 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. 2014-15ல் 146.31 மில்லியன் டன் பால் உற்பத்தியாக இருந்தது. 2020-21ல் இது 209.96 மில்லியன் டன்னாக அதிகரித்தது. தலா பால் நுகர்வானது 427 கிராம் என்ற அளவில் தற்போது உள்ளது. 2020ல் ரூ.15000 கோடி மதிப்பில் கால்நடை உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும்.
மே 2020ல் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டம் ரூ.2050 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதன்படி மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, போக்குவரத்துச் சங்கிலித் தொடரை மேம்படுத்துவது, மீன் சந்தைப் படுத்துதலுக்கான கட்டணம் உருவாக்குவது போன்றவை ஆகும். இதுபோல் வேளாண்மையை வளப்படுத்த டிராக்டர், விசை கலப்பையின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உணவுப் பதப்படுத்தும் துறையை மேம்படுத்தவும் ஒரு குடையின் கீழ் நடைமுறைப்படுத்த பிரதான் மந்திரி கிசான் சம்பதா திடடம் (PM Kisan SANOADA Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது.
உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் நகரமயமாதல் அதிக அளவில் காணப்படுவது, மக்கள் தொகை அதிகரிப்பு, நுகர்ச்சியில் பெருமளவிற்குக்காண மாறுபாடுகள் போன்ற நிலையில் தாவர எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரித்திருந்தாலும் பற்றாக்குறை நிலவிவருகின்றது. எனவே அரசானது உடனடியாக தீர்வாகச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து தேவையினை நிவர்த்தி செய்கிறது (Sekhar 2022). இந்தியாவில் அன்மைக் காலமாகச் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியை அதிகமாக சார்ந்திருக்கவேண்டிய நிலை உள்ளதால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களை அதிகமாக உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 2021ல் தேசிய சமையில் எண்ணெய் இயக்கம் – பனை எண்ணெய் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி பனை எண்ணெய் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு அதற்கான விலையினை அரசு உறுதி செய்கிறது. இதன் விளைவு தற்போது 3.70 லட்சம் ஹெக்டேர் பனை பயிரிடப்பட்டுள்ளது. பனை எண்ணெய் வழியாகப் பெறப்படும் தாவர எண்ணெய்யானது மற்றவற்றைக் காட்டிலும் 10 – 46 மடங்கு ஒரு ஹெக்டேருக்கு எண்ணெய் பெறப்படுகிறது. அதுபோல் உற்பத்தித் திறன் மற்றவற்றைவிட 4 டன் ஒரு ஹெக்டேருக்குக் கூடுதலாக விளைச்சல் தரக்கூடியதாக இருக்கும். இதனால் இந்தியாவில் பனை எண்ணெய் இறக்குமதி வரும் காலங்களில் குறையக்கூடும்.
இந்தியா உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. கரும்புச் சாகுபடியில் 5 கோடிக்கு அதிகமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்குச் சராசரியாக 35.5 கோடி கரும்பும். 3 கோடி டன் சர்க்கரையும் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரை உற்பத்தியானது உள்நாட்டு நுகர்விற்குப் போக எஞ்சியதை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரும்புக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையும். தனியார் சர்க்கரை ஆலைகள் அதிகமாக இயங்கிவருவதால் சர்க்கரை உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2018-19 நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கமானது தற்போது 36 விதை ரகத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது. உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தச் செயல்படுத்துகிறது. ஒன்றிய அரசானது இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்தி ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை நீக்கும் நோக்கத்தை தற்போது நடைமுறைப்படுத்துகிறது. இயற்கை விவசாயமானது சுற்றுப்புறச் சூழல் சார்ந்த நீடித்த வளர்ச்சி மூலம் மண்வளத்தைப் பாதுகாப்பது, ரசாயன உரப்பயன்பாட்டிலிருந்து விடுபடுவது, குறைவான நீர்ப்பாசன முறையைப் பயன்பாட்டில் கொண்டுவருவது போன்றவை அடிப்படையாகக் கொண்டது. பாரதியா பிரகிருதிக் கிருஷ் பத்திதி திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme -BPKP) இயற்கை வேளாண்மைக்காகக் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக இந்த திட்டத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேர், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேர் பயனடைகிறது.
Source: GoI (2022): “Economic Survey 2021-22”, Government of India.
வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியானது 2017-18ல் 6.6 விழுக்காடு என்று இருந்தது அடுத்த வந்த ஆண்டுகளில் 2.6 விழுக்காடு (2018-19) , 4.3 விழுக்காடு (2019-20) , 3.6 விழுக்காடு (2020-21) , 3.9 விழுக்காடு (2021-22) என மாற்றமடைந்தது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாக 18.3 விழுக்காடாக 2017-18ல் இருந்தது 2021-22ல் 18.8 விழுக்காடாக விளிம் பு அளவில் அதிகரித்துள்ளது. இக்கால கட்டத்தில் அரசு முதலீடானது நிலையாக 2 – 3 விழுக்காடு அளவிற்கானதாக இருந்தது ஆனால் தனியார் முதலீடானது ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது.
2020ல் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பெருமளவிற்குப் பாதிக்கும் சூழல் உருவாக்கியது. இச்சட்டத்தால் குறைந்த பட்ச ஆதார விலையினை இழக்கவும், வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் பெருநிறுவனங்கள் முக்கிய பங்காற்றவும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் பாதிப்படையலாம், மானியங்கள் குறைக்கப்படலாம், மண்டிகளின் (APMC) செயல்பாடுகள் முடக்கப்படும், என்ற அடிப்படையில் விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டு இச்சட்டங்களுக்கு எதிராகக் கடுமையான முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசு வேறு வழியின்றி இச்சட்டங்களை விலக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தில் வேறுவழிகளில் இவற்றை முன்னெடுக்க வாய்ப்புண்டு. ஒப்பந்த முறை விவசாயத்தில் அரசு அதிகமாக அக்கறை காட்டி வருகிறது. இம் முறை பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டதில் பல பின்னடைவுகளை (ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக நிறுவனங்கள் முறித்துக்கொள்ளுதல், பெருநிறுவனங்கள் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தப்படுத்தி தங்களின் நோக்கிற்காகச் சாகுபடி செய்ய வலியுறுத்துதல், லாபம் இன்மை) விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் குறு விவசாயிகள் (ஒரு ஹெக்டேர் கீழ்) மொத்த விவசாயிகளில் 1960-61ல் 40.7 விழுக்காடாக இருந்தவர்கள் 2018-19ல் 76.5 விழுக்காடாக அதிகரித்திருந்தனர். இவர்களின் சராசரி சாகுபடி நிலப்பரப்பு 0.41 ஹெக்டேராக இருந்தது 0.38 ஹெக்டேராக இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது. இந்தியாவில் தீவிர வறுமைக் கோட்டின் கீழ் 80 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்கிறது தரவுகள். இதில் பெருமளவிற்குச் சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். தேக்க நிலையிலான இந்திய வேளாண் துறையின் வளர்ச்சி, குறைவான வேளாண் வருமானம், அளவிற்கு அதிகமான உரப் பயன்பாடு, இடுபொருட்களுக்கானச் செலவு அதிகரிப்பு, குறைந்து வரும் மண் வளம், நிலத்தடி நீர் தொடர்ந்து குறைந்தது வருதல் போன்றவை பெரும் அறைகூவல்களாக இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இவற்றின் விளைவு விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலையினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒவ்வொரு 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகத் தரவுகள் தெரிவிக்கிறது. மொத்த விவசாயிகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பங்கு 0.006 விழுக்காடாகும். மொத்த தற்கொலையில் 11.2 விழுக்காடு விவசாயத் தற்கொலைகளாக உள்ளது பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாகும் (Chris J Perry et al 2022).
இந்தியாவில் நீர் செறிவு சாகுபடி பயிர்களான நெல், கோதுமை. கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் குறைவதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு மாற்றான அதே சமயம் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது (உலகிலே அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது). இப்பயிர் ரகங்கள் வறட்சியினை தாங்குவதாகவும், நீர் பயன்பாட்டைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும். பல் வேறு ஆய்வுகளின்படி இவ்வகைப் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது, ஆனால் இதற்கான இடுபொருட்கள் அதிகமாக உள்ளது. எனவே அரசு இதற்கான விலை உறுதிப்பாட்டை அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏற்படும். விவசாயத் தற்கொலைகளும் குறையும் (Chris J Perry et al 2022).
வேளாண்மைக்கு சில வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் மானியங்கள் தொடர்ந்து அதிக அளவில் வழங்கிக்கொண்டு வருகிறது. இது விவசாயிகளை ஊக்குவிப்பது மட்டுமல்ல உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வேளாண் மானியம் 15 முதல் 20 விழுக்காடுவரை அளிக்கிறது. நார்வே. ஜப்பான். தென்கொரியா நாடுகளில் 40 முதல் 60 விழுக்காடுவரை மானியங்கள் வழங்குகிறன. இந்தியாவில் வேளாண்மைக்கான மானியம் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சில மாநிலங்கள் (குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. மானியங்கள் உரம், பூச்சி மருந்துகள், விதைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக உற்பத்தித் திறன் உடையதாகவும். நீர்ப் பாசன வசதியினை உடையதாகவும் உள்ளது. சராசரி நில உடைமையானது வட இந்திய மாநிலங்கள் ஒப்பீட்டு அளவில் அதிகமாக உள்ளது. இதுபோல் குறைந்த பட்ச ஆதரவு விலையினை முதலில் கோதுமைக்கு வழங்கப்பட்டது, பின்னால் பிற பயிர் வகைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பசுமைப் புரட்சியும் அதிகமாக வட இந்திய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாகவே வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களைவிட மானியங்கள் அதிகமாகப் பெறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவிலான மக்களின் முக்கிய உணவாக அரிசி உள்ளது. இது பொது விநியோகம் வழியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளிடமிருந்து குறைந்த பட்ச விலையை அடிப்படையாகக் கொண்டு கொள்முதல் விலையில் (அதாவது குறைந்த பட்ச ஆதரவு விலையுடன் அம் மாநில அரசு அளிக்கக்கூடிய ஊக்கத் தொகையும் சேர்ந்தது) வேளாண் விளைபொருட்கள் வாங்கப்படுகிறது. இதனால் வட மாநில விவசாயிகள் நெல் சாகுபடியினை நோக்கிச் சென்றனர். நெல் பயிர் செய்ய அதிக அளவிற்கான தண்ணீர் தேவை (சராசரியாக 8 இன்ச் தண்ணீர் தேக்க வேண்டும்) உள்ளது. வட இந்திய மாநிலங்களில் தண்ணீர் ஆதாரம் தென்னிந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா. மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களில் கோதுமை சாகுபடி செய்பவர்கள் நெல்லை அரசு கொள்முதல் செய்வதால் அதிக அளவில் பயி ரிடத் தொடங்கினர். ஆனால் இதற்கான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் இம் மாநிலங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு இன்ச் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. தண்ணீரின் தன்மையும் குறைந்துவருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான சாகுபடியினை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது (Nitya Nanda 2021).
குறைந்த பட்ச ஆதார விலையைப் பொருத்தவரையில் மொத்தமாக நாட்டின் உற்பத்தியாகும் வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடைய விளைபொருட்கள் மட்டுமே இதனைப் பெறுகின்றன. மாநில அளவில் பார்த்தால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் 75 விழுக்காடு நெல், கோதுமை உற்பத்திக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினைப் பெறுகின்றன. மற்ற மாநிலங்களில் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே இவ்விலை கிடைக்கப்பெறுகிறது. இந்த நிலையினைப் போக்க அரசு சாகுபடி செய்கின்ற பயிர்களில் பன்முக முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அளவிற்கு அதிகமாக சில பயிர்களின் சாகுபடி குறைந்து தேவையான வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படும். அவை விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இம்முறையினை மேம்படுத்த மேலும் பல பயிர்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படவேண்டும். குறைந்த பட்ச ஆதரவு விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டுறவு முறைகளுக்கு உயிர்கொடுத்து விவசாய முறையை முன்னெடுக்க வேண்டும். இதனால் விவசாயிகள் இழப்பினைத் தவிர்ப்பதுடன் வேளாண்மையானது சமநிலை வளர்ச்சியினை அடையும் (Nitya Nanda 2021).
மோடியின் இரண்டாம் கட்ட ஆட்சி நிறைவுறும் நிலையில் உள்ளது. பூட்டன் (Bouton) என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இந்தியா கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, வேளாண்மையில் கடுமையான வீழ்ச்சி, வங்கி முறையில் பலவீனம், கடன் வழங்குதலில் பின்னடைவு பொன்றவை காணப்படுகிறது. 2014ல் ஆட்சிக்கு வரும்போது ‘அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி’ என்ற உறுதியை அளித்து வென்ற மோடி தற்போது 9 ஆண்டுகள் கடந்தும் இந்த உறுதிமொழியை நிறைவு செய்யப்படாமல் உள்ளது. மோடி நான் ‘இந்தியாவின் காவலன்’ என்று கூறி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். ஆனால் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நிலை மேலும் பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது. கோவிட் தொற்றுப் பரவலால் வறுமையிலிருந்து ஏற்கனவே விடுபட்டவர்கள் வறுமைக்குள் மீண்டும் தள்ளப்பட்டதும். வறுமைக் கோட்டிற்கு மேல் இருந்தவர்கள் வறுமையில் சென்றதுமான நிலை உள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு நீக்குப்போக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் இழக்கப்பட்டுள்ளது (Marshall Bouton 2019). பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்து பெருநிறுவனங்களுக்குச் சாதகமான நிலை உருவானது. இதனை எதிர்த்து விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவானது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாடு ஒரே தேசம் என்ற உத்தியை மோடி அரசு நடைமுறைப்படுத்துவதால் தற்போது மாநில அரசுகளின் உரிமைகளில் ஒன்றிய அரசு பறித்துக்கொள்கிற நிலை பரவலாகி வருகிறது. இதனால் வேளாண்மைத் துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறது. அரசியல் சூழலும், வாணிப சூழலும் இதற்குச் சாதகமாக உள்ளதால் பன்னாட்டு அளவில் வரிசைப்படுத்தப்படும் ‘எளிமையாக வணிகம் மேற்கொள்ளும் குறியீடு’ என்பதில் இந்தியா 2014ல் 134வது இடத்தில் இருந்தது தற்போது 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் தாரைவார்க்கப்படுகிறது, பெருநிறுவனங்கள் கோலோச்சுகிறது, சந்தைப்பொருளாதார நிலைக்கு இந்திய வேளாண்மையைக் கொண்டுசெல்ல அரசு துடிக்கிறது இதனால் பெருமளவிலான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வேளாண்மையிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இது விவசாயிகளை மட்டும் பாதிப்பாக பார்க்க முடியாது, நுகர்வோர், வணிகர்கள், சமுதாயத்தில் வாழும் விளிம்பு நிலை மக்கள் எனப் பரவலாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வருங்காலத்தில் இதற்காக அனைத்து தரப்பினரும் போராடவேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை விவசாயிகள் இயற்கையின் போக்கினால் பாதிப்படைந்து வந்தனர் ஆனால் தற்போது அரசியல் காரணங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதம், வேளாண்மை மீதான அரசு முதலீட்டை அதிகரிப்பது, வேளாண் இடுபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது, தேவையை நோக்கிய சாகுபடி செய்தல் போன்ற நிலைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாம் தற்போது உள்ளது.
பேரா.பு.அன்பழகன்
து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்
இப்போதெல்லாம்..
***********************
இப்போதெல்லாம் நான் உறங்கிவிடுகிறேன் இரவில்..
படுக்கையில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுருக்கும் நோயாளியின் ஆறுதல்..
இப்போதெல்லாம் நான் பசித்து உண்கிறேன்..
புளித்த ஏப்பகாரனின் வாக்குமூலம்..
இப்போதெல்லாம் நான் கிறித்துவ போதகன்
வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் பிரகடனம்..
இப்போதெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடியாகிறது..
தற்கொலையில் உயிரிழந்த விவசாயிகளின் ஏளனப் பார்வை..
இப்போதெல்லாம் நான் கோமாளி வேடம் நடிப்பதில்லை எங்கும்..
வேட்டி அவிழ்ந்து அம்மணமான கலைஞனின் அறியாமை
இப்போதெல்லாம் நான் சாலையை இருபுறம் திரும்பிப் பார்த்துக் கடக்கிறேன்..
சவக்குழிக்குள் குடும்பஸ்தனின் அங்கலாய்ப்பு.
புத்தம் புது பூமி வேண்டும்
******************************
புத்தம் புதுபூமி பிறந்திட வேண்டும்..
அழகிய நீல வானம் விரிந்திட வேண்டும்..
மின்னும் மழைத்துளிகள் உரசிடவேண்டும்..
பசுமை பூத்து நிலமெங்கும் செழித்திட வேண்டும்..
மனிதர் மனம் மகத்துவம் சமைத்திட வேண்டும்.
மெய்மை தாங்கிய சொல் உதிர்த்திட வேண்டும்.
பொய்யே இல்லா உலகு படைத்திட வேண்டும்..
கள்ளமில்லா நெஞ்சு வார்த்திட வேண்டும்
மனிதம் என்ற ஆடையை
மனிதர் உடுத்திட வேண்டும்..
வாய்மை என்ற ஒன்றே
வாழ்வாய் மலர வேண்டும்
மத வெறி அற்ற பூமி
மண்ணில் மலர வேண்டும்
சாதிகளற்ற சமத்துவம்
பூமியில் வாய்க்க வேண்டும்
உயிர்களிடத்தில் அன்பு
உயர் கல்வி ஞானப் பெருக்கம்
தன்னிகரில்லா தனித்துவம்
தரணி முழுவதும் தமிழ்
வேண்டும் வேண்டும் இவையாவும்
விரைவு கொண்ட விடியல் வேண்டும்..
அடக்கம் செய்வோம் வன்முறை தனை
*********************************************
போதுமே இனி வன்முறை..
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம்
தேங்கியகழிவுகளை..
பரந்து பட்ட பூமியிது..
அமைதி நாடுவோம் நனி…
வேண்டாமே போர்.
போதுமே கண்ணீர்…
அணையுமோ அனல் தகிக்கும் செந் நீர்..
குருதியுண்ட வீச்சத்தின் நீச்சத்தில்
திணறுகிறது தேசத்தின் மூச்சு..
போதுமே வன்முறை…
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம் இனி
வாழ்வென்பது பெரும் பேறு
வழக்கொழிந்து கிடக்கிறது சகமனிதர் பாடு
போதுமே வன்முறை.
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடுவோம்…
குப்பைகளை…
து.பா.பரமேஸ்வரி.
சென்னை…
பெரு: ஆட்சிக் கவிழ்ப்பும் படிப்பினைகளும் கட்டுரை -அ.பாக்கியம்
தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி சிந்தனையாளரும், விவசாயிகளுடைய தலைவரும், ஆசிரியருமான பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, ஜூன் மாதம் பதவியேற்றுக்கொண்டார்
தென் அமெரிக்க நாட்டில் இடதுசாரி மற்றும் முற்போக்காளர்களின் எழுச்சியின் தொடர்ச்சியாக பெருநாட்டிலும் இந்த மாற்றம் ஏற்பட்டது. மக்கள் தலைவராக, போராட்ட களத்திலி ருந்து காஸ்டிலோ வெற்றி பெற்றார். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அனைத்து முயற்சி களையும் செய்தார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினுடைய எதிர்ப் பினை எதிர்கொண்டுதான் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்தார். அவரது முயற்சிகளுக்கு பெரும்பான்மை பலத்துடன் இருந்த வலதுசாரி பாராளுமன்றம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது.
காஸ்டிலோ எடுத்த முயற்சிகள்
- கல்வியறிவின்மையை போக்குவதற்கு உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை கல்விக்கான முதலீட்டை அதிகப்படுத்தினார். இதற்கான சமூகத் திட்டங்களை அமல்படுத்தினார்
- 2.2 மில்லியன் சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
- விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிக்கான திட்டங் களை உருவாக்கி அமல்படுத்தினார்
- 300 க்கும் மேற்பட்ட விவசாய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற கூட்டுறவு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்.
- பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 இடங்களில் 13 மில்லியன் மக்கள் பயனடையும் முறையில் 84 கோடி டாலர் ஒதுக்கி நிதி உதவி செய்தார்.
- சமையல் எரிவாயு விலையை 2.8 டாலராக குறைத்து வழங்கினார்.
- அரசியல் அமைப்பை திருத்தி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
- ஜனாதிபதியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அடிப்படை விதியாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த “தார்மீக இயலாமை“ என்ற வார்த்தையை நீக்குதல்,
- மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதியை வலது சாரிகள் பெருபான்மை என்ற பெயரால் பதவி நீக்கம் செய்யும் முறையை மாற்றிட திருத்தங்களை கொண்டுவந்தார்.
இவற்றையெல்லாம் சொத்துடைமை வர்கத்தால் சகித்துக் கொள்ள முடியுமா?
தார்மீகமற்ற தாக்குதல்
காஸ்டிலோவிற்கு பெரும்பான்மை இல்லாத சூழலை பயன்படுத்தி அடிக்கடி கவிழ்க்க முயன்றனர். அமெரிக்கா தலைமையிலான சுரங்க முதலாளிகளும், ஆலை முதலாளிகளும், ராணுவமும், ஆயுதப்படைகளும், கத்தோலிக்க தேவாலயங்களும், இடதுசாரி ஜனாதிபதி காடிலோவை நீக்குவதற்கான இம்பீச்மென்ட் அதாவது “தார்மீக இயலாமை” முறையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.
பல நேரங்களில் இந்த பெரும்பான்மையை எதிர்கொள்வதற்காக தனது மந்திரிகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக நிரந்தர தார்மீக இயலாமை என்ற தீர்மானத்தை கொண்டு வந்து தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
அதிகார துஷ்பிரயோகம் செய்வது, சட்டம் இயற்றுபவர்களை பதவிநீக்கம் செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது, ஊழல், கருத்து திருட்டு, கிளர்ச்சியை தூண்டி விட்டது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது (7.12.22) செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஸ்டிலோவை ஆதரித்த முன்னால் பிரதமர் அணிபால் டோரஸ் (Anibal Torres) இந்த குற்றச்சாட்டுக்காகவே இவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்று அவர்களின் சட்டம் கூறுகிறது.
“நிரந்தர தார்மீக இயலாமை” என்பது 180 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு விதி. இந்த விதிக்கு புறநிலை வரையறை எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். 19-ம் நூற்றாண்டில் இதை பைத்தியக்காரத்தனம் என்று கருதினார்கள். இப்போது இடதுசாரி ஜனாதிபதி இதை நீக்குவதற்கு எடுத்த முயற்சிகளை தடுத்து ஊழல் குற்றச்சாட்டை இதன் மூலம் சுமத்தி ஏகாதிபத்திய முதலாளிகள் ஆட்சியை கவிழ்த்து இருக்கிறார்கள்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் 18 மாத காலம் போட்ட சதி திட்டத்தை இப்பொழுது நிறைவேற்றி இருக்கிறார்கள். கார்டிலோ ஓ.ஏ.எஸ் (OAS-ORGANISATION OF AMERICAN STATES) என்ற அமைப்பிலும் முறையிட்டார்.
பயனில்லை.
வாஷிங்டனுக்கு ஒரு நிலையற்ற உலகம் இருந்தால் தான் தனது மேலாதிக்கத்தை செலுத்த முடியும். பெருநாட்டில் 2016 ம் ஆண்டுகளிலிருந்து அடுத்தடுத்து 5 ஜனாதிபதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தநிலை அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. காஸ்டிலோ பதவிக்கு வந்த பிறகு எங்கே ஒரு நிலைத்தன்மை உருவாகி விடுமோ என்ற அச்சத்தில் பெரு நாட்டை நிலையற்ற தன்மைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற சுயநலத்தால் அமெரிக்க தூதரகம் அனைத்து உதவிகளும் செய்து ஆட்சியை கவிழ்த்தது.
துணை அதிபராக இருந்த திருமதி டினா போலுவார்டெ (Dina Boluarte) உடனடியாக அதிபராக பதவிஏற்க சொல்லி அவரை அங்கீகரித்து காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஆதரித்தது.
டினா போலுவார்ட்டின் நியமனத்தை பெரு அரசாங்கம் கொண்டாடுகிறது என்று அமெரிக்க வெளியூர் துறை செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஜனநாயக ஸ்திர தன்மையை உறுதி செய்ததற்காக பெரு நாட்டின் சிவில் நிறுவனங்களையும், அதிகாரிகளையும், வெள்ளை மாளிகை பாராட்டியது என்றால் அவர்களை தவிர இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு வேறு யாரு அடித்தளமாக இருந்திருக்க முடியும்.?
உலகம் எதுவும் சொல்லாது அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவால் தூண்டப்பட்ட மற்றொரு சதி. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு லத்தீன் அமெரிக்காவின், இடது சக்திகளின் முன்னேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தாக்குதல். இந்த தாக்குதல், தந்திரங்கள், பொய்கள் நிறைந்த, ஒரு உண்மையான போரின் துவக்கமாகும் என்று வெனிசுலாவின் தேசிய அரசியல் அமைப்பு சபையின் தலைவர் டியோஸ்டாடா கப்பல்லோ கூறினார்.
மெக்சிக்கோ நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோர் பொருளாதார மற்றும் அரசியல் உயர் அடுக்கு பிரிவினர் திட்டமிட்டு காஸ்டிலோவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், காஸ்டிலோவுக்கு மெக்சிகோ அரசியல் புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
பொலிவியா நாட்டு ஜனாதிபதி லூயிஸ் ஆர்சின், காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஏற்கவில்லை என்றும், இது போன்று பொலியாவில் இரண்டு முறை முயற்சித்ததையும் ஓ. ஏ.எஸ் அமைப்பு மீண்டும் தவறான மதிப்பீடு செய்து, பெரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போயிருக்கிறது என்று கண்டித்தார்.
பெருவின் தலைநகரில் மிகப்பெரும் போராட்டங்கள் காஸ்டிலோவிற்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் அதிகாரத்திற்கு வருவதும், அவற்றை அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான பெரும் முதலாளிகள் ஆட்சியை கவிழ்ப்பதும் 1971-ம் ஆண்டு சிலி நாட்டில் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏகாதிபத்திய முதலாளித்த சுரண்டலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.
பெரு நாட்டிலும் காஸ்டிலோ சில நேரங்களில் சமரசம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர் சார்ந்திருந்த கட்சி பெரு லிப்ரே(Free Peru) பல நே
ரங்களில் அவருடன் இணைந்து இருக்கவில்லை. 130 பாராளுமன்ற பிரதிநிதிகளில் 101 பேர் காஸ்டிலோ எதிராக வாக்களித்தனர். பெரு லிப்ரா கட்சியின் உறுப்பினர்கள் 37 பேர்களும், ராஜினாமா செய்த அமைச்சர்களும் இவருக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.
இவற்றை காஸ்டிலோ அறிந்த போதிலும் வலதுசாரிகளின் கையில் அகப்பட்டு இருக்கக்கூடிய பாராளுமன்றத்தை கலைத்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கையில் முன் முயற்சி எடுத்தார்.
தொழிலாளர்களும் விவசாயிகளும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கலாம், ஆனால் நாட்டை ஆள்பவர்கள் பொருளாதார பலம் கொண்டவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துபவர்கள். அரசாங்கத்தை மாற்றினால் மட்டும் போதாது, அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்காக நாம் போராட வேண்டும். ஆனால் அங்கு செல்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பும், அணி திரட்டலும், நாம் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு புரட்சிகர தலைமையும் தேவை என்பதை இன்றைய சூழல் கோருகிறது.
பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று தெரிந்தும் காஸ்டிலோ மக்களை தெருக்களில் இறக்குவதற்கான முயற்சிகளை ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது.
பல நேரங்களில் பெரும்பான்மை இல்லை என்ற நிலைமையில் சமரசப் போக்கில் நடத்துவதற்கு முயற்சி செய்தாலும், முதலாளித்துவ வர்க்கம், தங்கள் வகுப்பைச் சேராத ஒருவரை, சாதாரண மக்களிடமிருந்து வந்த ஒருவரை, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்காது என்ற வரலாற்று அனுபவம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
பெருவின் அரசியல் நிலை நெருக்கடியாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் உள்ள இடதுசாரிகளை முற்போக்காளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவம், காலம் மாறிவருவதைக் காட்டுகிறது.
அமெரிக்கசதியால் கவிழ்க்கப்பட்ட பிரபலமான அரசியல்வாதிகளை மீண்டும ஆட்சிக்கு திருப்பி அனுப்புகிறார்கள். புதிய தாராளமயப் பொருளாதாரத்தில் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவால் இதில் எதுவும் செய்ய முடியாது. வாஷிங்டன் பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் அதன் கைப்பாவை தலைவர்களை கொண்டு எடுபுடி அரசை நிறுவும் வாய்ப்பை கூடிய விரைவில் இழக்கும்.
அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தொழிலாளர்களும் விவசாயிகளும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமல்ல, உண்மையான சக்தி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட, புரட்சிகர ஏழை விவசாயிகளின் அணி திரட்டலை நிரூபிக்கும் வகையில் அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி தலைவர்கள் மக்கள் போராட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள். மக்களிடமிருந்து அன்னியபட்டவர்களாக இல்லை. களப்போராட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
அ.பாக்கியம்.
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 10 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 2 பேரா.பு.அன்பழகன்
நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது எட்டாவது ஐந்தாண்டு திட்டம் (1992-93 முதல் 1996-97) நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யவும், உற்பத்தித் திறன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக அதிகரிக்கவும், பசுமைப் புரட்சி இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், வறண்ட நிலப் பரப்பில் வேளாண்மைச் சாகுபடியினைச் செய்யவும், எண்ணெய்வித்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்யவும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புற வறுமைக்கான முக்கியக் காரணம் விவசாயிகளிடையே நிலமற்றத் தன்மையாகும் என்றும் எனவே நிலச் சீர்திருத்தத்தை வேகப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டது. கிராமப்புறங்களில் நிலவும் வலுவற்ற உள்கட்டமைப்பே அவற்றின் பின்தங்கிய நிலைக்கான காரணமாகக் கருதப்பட்டு அவற்றை மேம்படுத்த 1995-96ல் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது (RIDF) கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை (NABARD) உருவாக்கியது. இதன்படி கிராமப்புறக் கட்டமைப்பினை மேம்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வேளாண்மைத் துறைக்குக் கடன் வழங்கியது (Chnandra Shekhar Prasad 2009).
நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்த உத்தியில் ஒன்றானதாக வேளாண் உற்பத்தி பொருட்களின் கொள்முதல் விலையினை உயர்த்தியதாகும். இது உழவர்கள் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியினை அதிகரிக்க ஊக்கப்படுத்தியது. வேளாண் உற்பத்தி பொருட்கள் தங்கு தடையின்றி வணிகப் போக்கிற்கு வழிவகைச் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டில் தளர்வு செய்யப்பட்டது.
விவசாயக் கடன்களை திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவற்றின் விளைவால் பெரிய விவசாயிகள் அதிக அளவிற்கு பயனடைந்து லாபம் ஈட்டினர். 1991-92ல் வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக 2 விழுக்காடு இருந்தது 1993-94ல் 4.9 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதியானது ரூ.700 கோடியாக 1990-91ல் இருந்தது ரூ.10840 கோடியாக 1993-94ஆக அதிகரித்தது. அதேசமயம் வேளாண்மையின் மீதான முதலீட்டில் தேக்க நிலை காணப்பட்டது.
முதல் கட்டப் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கிராமங்களை நோக்கிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார். இதன்படி வேளாண் இடுபொருட்களான மின்சாரம், உரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டது. 1991-92ல் இம்மூன்று இடுபொருட்களின் மானியமானது ரூ. 122.6 பில்லியன் ஆகும் (இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.22 விழுக்காடு) இது 1995-96ல் ரூ.279.4 பில்லியனாக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.62 விழுக்காடு ஆகும்). இம்மூன்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பாதி அளவிற்கு மின்சாரத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1970ல் நாட்டில் 35 விழுக்காடு கிராமங்களும், 1990ல் 90 விழுக்காடு கிராமங்களும் மின்சார வசதியினைப் பெற்றது (தற்போது 100 விழுக்காடு கிராமங்கள் மின்சார இணைப்பு பெற்றுள்ளது). இதன் விளைவு வேளாண்மையில் மின்சாரப் பம்ப் செட்டுகள் பயன்பாடு; அதிகரித்தது. அதுவரை பயன்பாட்டிலிருந்த கால்வாய் பாசனம், குழாய் நீர்ப் பாசன முறைக்கு மாற்றமடைந்தது. இதனால் விவசாயத்தில் விரிவாக்கம் அதிகமாக நடைபெற்றது. அதேசமயம் மின்சார பம்ப் செட்டுகளின் அதிக பயன்பாட்டால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு நீர்ப்பாசன பற்றாக்குறை ஏற்பட்டது. பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நெல் பயிர் செய்யும் பகுதிகள் பயன்பெற்று உற்பத்தி பெருகியது. வேளாண் உற்பத்தி உயர்ந்ததால் இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 1970களுக்கும் 1990களுக்கும் இடையில் 2லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினை கண்டது. இதனால் பஞ்ச காலங்களில் உணவு இறக்குமதி தவிர்க்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவால் 1980களில் வறுமை குறைய தொடங்கியது. குறிப்பாக 1990களில் வறுமை பெருமளவிற்கானதாகக் குறைந்தது. வேளாண் இடுபொருட்களின் விலைகளும் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகளின் வருமான இழப்பையும், கடன் அதிகரிப்பையும் எதிர் கொண்டனர். குறு, சிறு விவசாயிகள் இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் சாகுபடி செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் பெருமளவிற்கு வேளாண் பணிகளைத் தவிற்று வேளாண் சாராத் தொழில்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். இதன் விளைவு பெரிய முதலாளிகள், மனை வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் கைகளில் விளைநிலங்கள் மாறின. விளைநிலங்கள் பெருமளவிற்குச் சாகுபடியற்ற நிலங்களாக மாறத் தொடங்கியது. நிகர விளைநிலங்களின் பரப்பு குறையத் தொடங்கியது.
அரசு பஞ்ச காலங்களில் புதிய உத்தியினைக் கையாண்டு உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. பன்னாட்டு அளவில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்வதால் அதிக லாபம் பெற இயலும். அவ்வப்போது உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்படும் போது உள்;ர் விலைக்கு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைச் செய்வதால் பெரும் இழப்பினைச் சந்திக்க வேண்டியுள்ளது. உலக வர்த்தக மையத்தின் உருகுவே சுற்றின்படி விவசாய பொருட்களின் சுங்க வரியினைக் குறைத்ததால் வெளிநாடுகளுடன் காய்கறி, பழம், அதிக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் வரத்து அதிகமாகி உள்;ர் வேளாண் விளைபொருட்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனால் இந்திய விவசாயிகள் அதிக பாதிப்பினை அன்மைக் காலமாக எதிர்கொண்டு வருகின்றனர். பன்னாட்டு அளவில் அதிக தேவையினை உடைய பாசுமதி அரசி, சோயபீன்ஸ், மலர்கள், பழங்கள் போன்றவை சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைப்பதால் பல விவசாயிகள் பரம்பரைச் சாகுபடி பயிர்களிலிருந்து புதிய வகை பயிர்களுக்கு மாற்றினர் (Tirthankar Roy 2020).
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வேளாண்மையின் முக்கியப் பிரச்சனையாக நீர்ப்பாசன பற்றாக்குறை, அதிக அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியதால் தண்ணீர் உவப்பு தன்மையினை அடைந்தது. இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் இருந்தது. இவற்றால் 6 முதல் 13 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் கடன் தேவையினை அரசு முழு அளவிற்கு நிவர்த்தி செய்யும் நிலையினை அடையவில்லை. கடனுக்கான மானியம் அதிக அளவிலிருந்தது இதனால் ஆண்டுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண்மையின் மீது திணிக்கப்பட்டது (India Today 1995).
புதிய பொருளாதார சீர்திருத்தங்களினால் முதலீடு, தொழில், வேளாண்மை, பணித் துறைகள் ஆகியவற்றில் நேர்மறை வளர்ச்சியினைக் காண முடிந்தது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97 ஆண்டுகளுக்கிடையே சராசரியாக ஆண்டுக்கு 3 விழுக்காட்டுக்கு மேல் வளர்ச்சியடைந்தது ஆனால் இது தொழில் மற்றும் பணித்துறையினை ஒப்பிடும்போது குறைவான அளவிற்கே இருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் கிராமப்புற வறுமை 1992-93ல் அதிகமாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் இக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சமாகும். 1993-1998க்கும் இடைப்பட்ட காலகட்டங்களில் சமூகச்செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது. இதனால் வேளாண் கூலி 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்தது. இதே ஆண்டில் 6.3 மில்லியன் மக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தது. பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது 1996ல் 5 விழுக்காடாக்க குறைந்தது. உணவு தானிய மானியமானது 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.4 பில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் விளைநிலங்கள் உபரியானது என அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண் சார்ந்த முக்கியத் தொழிலான கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1995ல் இந்தியாவில் 69875 கிராமப்புற பால் கூட்டுறவு செயல்பட்டதில் 8.9 மில்லியன் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். இதில் 60 விழுக்காடு விவசாயிகள் குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள். ‘வெண்மைப் புரட்சி’ என்ற பால் உற்பத்தியினை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டது. இத் திட்டமானது கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது (Bipan Chandra et al 2008). வறுமையை ஒழிக்க 1997ல் தகுதியுடையவர்களுக்கான பொது விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேளாண்மை விளைபொருட்களின் கொள்முதல் அதிகரித்தது.
அட்டவணை: இந்திய வேளாண்மையின் போக்கு
வேளாண்மை தரவுகளின் விவரங்கள் | 1990-91 | 1995-96 |
இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் வேளாண்மையினை மொத்த மதிப்புக் கூட்டல் (விழுக்காடு) | 35.13 | 30.61 |
நிகரச் சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) | 143.00 | 142.20 |
மொத்த சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) | 185.74 | 187.47 |
உணவு தானிய உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) | 68.83 | 64.55 |
எண்ணெய் வித்துக்கள் (மில்லியன் ஹேக்டேர்) | 13.00 | 13.85 |
பருப்பு வகைகள் உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) | 13.28 | 11.88 |
உணவு தானிய ஏற்றுமதி (ஆயிரம் டன்னில்) | 666.60 | 5636.29 |
Source: Akina Venkateswarlu (2021): “Polititical Economy of Agricultural Development in India: Policies, Achievements and Concerns,” Aakar Books, Delhi.
அட்டவணை: வேளாண் சாகுபடியின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்திறனின் போக்கு (விழுக்காட்டில் ஆண்டுக்கான வளர்ச்சி😉
விளைபொருட்கள் | பரப்பளவு | உற்பத்தி | உற்பத்தித் திறன் | |||
1980 களில் | 1990 களில் | 1980 களில் | 1990 களில் | 1980 களில் | 1990 களில் | |
அனைத்துப் பயிர்களும் | 0.1 | 0.4 | 3.2 | 2.2 | 2.6 | 1.4 |
உணவு தானியங்கள் | -0.2 | -0.1 | 2.9 | 1.8 | 2.7 | 1.4 |
உணவல்லா பயிர்கள் | 1.1 | 1.5 | 3.8 | 3.3 | 2.3 | 1.4 |
நெல் | 0.3 | 0.5 | 3.6 | 1.9 | 3.2 | 1.3 |
கோதுமை | 0.5 | 1.7 | 3.6 | 3.1 | 3.1 | 1.6 |
சிறு தானியங்கள் | -1.4 | -1.8 | 0.4 | 0.2 | 1.7 | 2.0 |
பருப்பு வகைகள் | -0.1 | -0.2 | 1.5 | 1.0 | 1.6 | 1.7 |
எண்ணெய் வித்துக்கள் | 2.4 | 0.8 | 5.5 | 3.4 | 2.9 | 2.6 |
கரும்பு | 1.5 | 1.8 | 2.7 | 2.5 | 1.2 | 0.7 |
பருத்தி | -1.3 | 3.3 | 2.8 | 1.7 | 4.1 | -2.0 |
ource: Uma Kapila et al (2003): “Indian Economy Since Independance,”Academic Foundation, New Delhi.
1950-51 மற்றும் 1994-95ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த சாகுபடி பரப்பானது 132 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 188 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. மேம்படுத்தப்பட்ட விதையானது 1950-51ல் மிகவும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது 1996-97ல் 70 லட்சம் குவிண்டாலாக அதிகரித்தது. உரப் பயன்பாடு இக்கால கட்டத்தில் மிகக் குறைவாக 6900 டன்னிலிருந்து இது 14 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உரம் ஒரு ஏக்கருக்கு 1950-51ல் மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டது 1996-97ல் 77 கிலோவாக அதிகரித்தது. பூச்சிக் கொல்லியானது 2400 டன்னாக இருந்தது 59000 டன்னாக இதே காலகட்டங்களில் அதிகரித்தது. வேளாண்மைக்கான மின்சாரப் பயன்பாடானது 1980-81ல் 15200 மில்லியன் கிலோ வாட்டாக இருந்தது 1995-96ல் 85736 மில்லியன் கிலோ வாட்டாக அதிகரித்தது. 1990-91ல் மொத்த வேளாண்மையின் உள்நாட்டு உற்பத்தியில் அதன் ஏற்றுமதிப் பங்கானது 4.5 விழுக்காடாக இருந்தது 1995-96ல் 8 விழுக்காடாக அதிகரித்தது (Rao et al 2003).
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்ததை நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகள் அதிகராம் பெறும் 73 (ஏப்ரல் 24, 1993ல்) மற்றும் 74வது சட்டம் (ஜூன் 1, 1993ல்) கொண்டுவரப்பட்டது. இதன்வழியாக கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சாலை போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டது. 1988ல் தொடங்கப்பட்ட வேளாண் சூழலியல் வட்டாரத் திட்டமானது முன்னுரிமை நோக்கில் உள்கட்டமைப்பிற்கான முதலீடுகளைச் செய்தது.
நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.2 விழுக்காடாக இருந்தது இது ராஜீவ் காந்தி (5.7 விழுக்காடு) மற்றும் இந்திரா காந்தி (1980-84 கால கட்டத்தில் 5.5 விழுக்காடு) ஆட்சிக் காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருந்தது (Montek S Ahluwalia 2018). 1990களில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்ததால் வறுமையின் அளவு குறைந்தது. அதே சமயம் ஏழைகள் கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தனர். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு பெருமளவிற்கு நகர்ப்புறங்களுக்குச் சாதகமாக இருந்தது. 1990களில் வேளாண்மை வளர்ச்சியானது மிகவும் குறைவான அளவிற்கே இருந்தது. வேளாண் பயிர் சாகுபடியில் பெரும் மாற்றத்தைக் கண்டது. ஏற்றுமதி வழியாக அதிக லாபம் பெரும் நோக்கில் பழ வகைகள், காய்கறி, பூக்கள் பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். மற்ற பயிர் வகைகளின் சந்தைப் படுத்துதலின் கட்டமைப்பானது (குறிப்பாக மின்சாரம், சேமிப்பு கிடங்கு, சாலை போன்றவை) வலுவாக இல்லாததால் குறிப்பிடத்தக்க வெற்றியினை பெற இயலவில்லை.
உணவு ஆதாரம் அரசின் கையிருப்பில் (Buffer stock) 40 முதல் 50 மில்லியன் டன் இருப்பிலிருந்தது. இது மக்களுக்கு வழங்க போதுமானதாக இல்லை. பொதுவிநியோக முறையில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இது எளிதாகச் சென்றடைந்தது. பொது விநியோக முறையில் நடைமுறைப்படுத்துதலில் ஊழல் தலைவிரித்தாடியது. கள்ள வாணிபம் வழியாகப் பொதுவிநியோக உணவு தானியங்கள் விற்கப்பட்டன. 20 விழுக்காடு உணவு தானியம் தகுதியான நபர்களுக்குச் சென்றடையவில்லை. பசியும், குறை ஊட்டச்சத்தும் இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரமாகவே இருந்தது. மழைபொழிவு இல்லாததால் பஞ்சம் ஏற்பட்டு இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் காணப்பட்டது.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஒரு முக்கிய நிகழ்வாக அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுத் துவக்க (1995 முதல்) உறுப்பினராக்கியது. இதன்படி வேளாண் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது (இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த காப்பு வரி மற்றும் வணிகம் பற்றிய பொது ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதன்படி உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள் வேளாண்மைக்கு அளித்துவந்த மானியத்தை 10 விழுக்காட்டுக்குக் கீழ் குறைக்க வேண்டும், ஒவ்வொரு நாடும் 3லிருந்து 5 விழுக்காடு நாட்டின் மொத்த வேளாண் பொருட்களின் நுகர்ச்சியின் அளவில் இறக்குமதி செய்ய வேண்டும், பொது விநியோக முறையில் கட்டுப்பாடுகள் விதித்து உண்மையாக வறுமையினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. வேளாண் ஒப்பந்தத்தில் பசுமைப் பெட்டி (Green Box) மற்றும் நீலப் பெட்டி (Blue Box) என்பதைச் சேர்த்துக்கொண்டது. பசுமைப் பெட்டி என்பது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் ஆகும். நீலப் பெட்டி என்பது வருமான ஆதரவு மற்றும் கால்நடைகள் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தும் திட்டங்கள் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் பொருட்களின் மீது கட்டப்பாடுகளை விதித்தது. இவையனைத்தும் ஜனநாயக முறையில் இல்லாமல் உலக வர்த்தக அமைப்பு கடைப்பிடித்தவையாகும்.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் வழியாக வேளாண்மையினைப் பொருத்த அளவில் சறுக்கலைச் சந்திக்க வேண்டியிருந்தது. வளரும் நாடுகளில் வேளாண்மையின் முன்னேற்றத்திற்கு பல செயல்பாடுகளைச் செய்து வந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததால் அதன் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை செயல்பாடுகள் குறையத் தொடங்கியது. வேளாண்மைக்கான நிலம் மற்றும் நீர் தவிற்று, விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றுக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி காப்புரிமை பெறப்பட்டது. இதனால் காப்புரிமை வைத்திருந்த நிறுவனங்கள் இதன் விலைகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியது. பல வளரும் நாடுகளின் வேளாண் பொருட்கள் பன்னாட்டு நிறுவனத்தினால் காப்புரிமை பெறப்பட்டது. இவற்றைச் சாதாரண விவசாயிகள் (சிறு, குறு விவசாயிகள்) பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே இந்திய விவசாயிகள்; அறுவடையில் பெறப்படும் விளைச்சலின் ஒரு பகுதி தானியத்தை தங்களின் அடுத்த போக சாகுபடிக்காக விதையினை எடுத்தும் பயன்படுத்தும் முறை புழக்கத்திலிருந்து வந்தது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் தங்களின் விருப்பப்படி பயன்படுத்த இயலாது. குறிப்பிட்ட காப்புரிமை பெறப்பட்ட நிறுவனங்களில் இருந்து விதைகளைப் பெற்றுத்தான் பயன்படுத்த முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட காப்புரிமையும், சந்தைப்படுத்தும் முறையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். இந்தியா உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி மூன்று முக்கியச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து. அதன்படி 1) சந்தை அணுகல்: அளவுக் கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்படும் சுங்கக் கட்டணத்தை குறைப்பது. 2) உள்நாட்டு ஆதரவு: குறிப்பிட்ட சில உற்பத்தி பொருட்களுக்கு மற்றும் உற்பத்தி சாராத பொருட்களுக்கும் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 13.3 விழுக்காடு குறைத்தல். 3) ஏற்றுமதி மானியம்: 2005க்குள் மதிப்பின் அடிப்படையில் 24 விழுக்காடு மானியத்தை குறைத்தல் மற்றும் 14 விழுக்காடு பொருட்கள் அளவின் அடிப்படையில் குறைத்தல் ஆகும். பன்னாட்டு அளவில் இந்திய வேளாண்மைக்கு பெரும் வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் பசுமை பெட்டி மற்றும் நீலப் பெட்டி என்ற காரணிகளைப் பயன்படுத்தி சில நிபந்தனைகளை வளரும் நாடுகள் மீது விதித்தது. இதனால் இந்திய வேளாண்மையானது அதிக அளவில் பாதிக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றி கட்டுப்பாடற்ற வர்த்தக நடைமுறையினால் வேளாண் பொருட்களின் விலை குறைந்தது (பன்னாட்டுச் சந்தையில்). இதன் விளைவு இந்தியாவில் பன்னாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய வேளாண் பொருட்களின் விலையினைவிடக் குறைவாகச் சந்தையில் கிடைத்தது. பன்னாட்டுச் சந்தையில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ள பொருட்களை இந்திய விவசாயிகள் பயிரிட அதிக கவனம் செலுத்தினர். இவர்கள் பெரும்பாலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருந்தனர். ஆனால் குறு மற்றும் சிறு விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தத்தால் மொத்த அளவில் விவசாயிகள் அதிக இழப்பினைச் சந்தித்தனர். இதனால் வேளாண்மையிலிருந்து சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் பெருமளவிற்கு வெளியேறத் தொடங்கினர்.
1991-92ஆம் ஆண்டைப் பொருத்த அளவில் 1990-91ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் காணப்பட்டது. எனவே அரசு இவற்றைச் சரிசெய்யும் முயற்சியிலிருந்தது. பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் கணிசமாகக் குறைந்தது. இதற்கு அடிப்படையாகப் பகுதி அளவில் வேளாண்மையில் ஏற்பட்ட தோல்வியும், தொழில் வளர்ச்சி குறைந்ததுமாகும். மூன்றில்–ஒருபங்கு மக்கள் வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தும், அதன் பங்களிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றில்–ஒருபங்கினை மட்டுமே அளித்தது. வேளாண்மை வளர்ச்சிக்கு முதலீடு, குத்தகைச் சீர்திருத்தம், விவசாய கடன் அளிப்பை அதிகரித்தல், சரியான வேளாண் விலைக் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களை வேளாண்மையில் புகுத்துதல் போன்றவை கட்டாயத் தேவைகளாக இருந்தது. விவசாய இடுபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியக் குறைப்பு நடவடிக்கையினால் இடுபொருட்களின் விலை அதிகரித்தது. அதே சமயம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார வளர்ச்சி வங்கிகள் பெரும் இழப்பில் இயங்கிக் கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு போதுமான கடன் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் முறைசாரா நிதி அமைப்புகளிடமிருந்து அதிக வட்டிக்குக் கடனை பெற்றதால் கடன் சுமை அதிகரித்தது. அதே சமயம் அரசு 1992-93 வேளாண் விளைபொருட்களுக்குக் கணிசமான அளவிற்கு ஆதார விலையினை அறிவித்தது. 1993-94ல் தடையற்ற வர்த்தக நடைமுறையின் விளைவு வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியது, வேளாண் சார் தொழில்கள் பெருகத் தொடங்கியது. 1993-94ல் வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-95ல் பருவமழை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்ததால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது குறிப்பாக உணவு உற்பத்தியானது 185 மில்லியன் டன்னை எட்டியது. 1995-96ல் வேளாண்மை உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்தது. அரசு பொதுவிநியோக முறையின் வழியாக உணவு தானியங்கள் வழங்க அதிகமாகக் கொள்முதல் செய்ய தொடங்கியதால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வேளாண்மையில் லாபம் பார்க்க தொடங்கினர். இது வேளாண் சாகுபடியினை அதிகரிக்க உதவியது. ஆனால் இது நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளையும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 40 விழுக்காடு பயிரிடும் நிலப்பரப்பு மட்டுமே நீர்ப்பாசன வசதியினைப் பெற்றிருந்தது. பெரும்பாலான விவசாயிகள் மழைப் பொழிவினைச் சார்ந்திருந்தனர். நகர்ப்புறங்களில் தண்ணீர் பயன்பாடு பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் விவசாய நீர் ஆதாரங்கள் பறிபோனது. வறட்சி, பஞ்சம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, கடன் பொறியில் வீழ்ந்தது போன்ற நிலைகளினால் விவசாய தற்கொலைகள் அதிகரித்தது. 1995-2005ஆம் ஆண்டுகளுக்கிடையே 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் அதிக அளவிற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் தொழிலாளர்கள் வேலை இழப்பினைச் சந்தித்தனர், எனவே இவர்கள் கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கு வேலைவாய்ப்பிற்கும், அதிக கூலி பெறவும் புலம் பெயர்ந்தனர். இதனால் குறு, சிறு விவசாயிகளின் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியது. வேளாண் சாராத் தொழில்கள் கிராமங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் சாரா வருமானம் கிராமப்புறக் குடும்பங்களில் முக்கியப் பங்கினை எடுத்துக்கொண்டது. 1991ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாக உருவாகும் என்ற எதிர்பார்த்த நிலையில், இந்திய வேளாண் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 14 விழுக்காடு அளவிற்கே இருந்தது. வேளாண் சாரா பொருட்களின் மீதான தாராளமய நிலையும், வேளாண்மை பொருட்களின் மீது குறைந்த நிலையிலும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டது. இந்திய இறக்குமதிக்கு அதிக மதிப்புடைய பொருட்களின் மீது அதிக சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டது. 1980களிலும், 1990களிலும் இந்திய வேளாண்மைக்கான ஏற்றுமதி சார்ந்த நிலை காணப்படவில்லை. இக் காலகட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண் பொருட்களின் மீது விதிக்கப்பட்டது. வேளாண் ஏற்றுமதிக் கொள்கையால் 1994 முதல் தொடர்ந்து வேளாண் ஏற்றுமதி அதிகரித்தது. இக் கொள்கையால் பல சீர்திருத்தங்கள் (பொருட்களின் வர்த்தகத்துக்கு ஏற்ப எண்ணிக்கையை குறைத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டைத் தளர்வு செய்தல், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையினை ஒழித்தல் மற்றும் ஏற்றுமதிக் கடன் இருப்பை அதிகரித்தல்) நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் சட்ட திட்டங்களை வளர்ந்த நாடுகள் வகுத்தது இதனால் இது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் அமைந்தது. இந்திய வேளாண்மையின் மீதான மானியத்தை குறைந்தது என்பது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமான நிலையினை உருவாக்கித் தந்தது. வேளாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்கியது, இதனால் வேளாண்மை ஆராய்ச்சி கிராமப்புற உள்கட்டமைப்பு மீதான அரசின் ஆதரவு நிலைப்பாடு விளக்கிக் கொள்ளப்பட்டது. இதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது. வேளாண் தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, வேளாண்மையில் லாபம் பார்க்கும் பயிர் வகைகள் (பழம், காய்கறி, பூக்கள்) பயிரிட தொடங்கினர். இதனால் தனியார் முதலீடு வேளாண்மையில்அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையில் பொதுத் துறை முதலீடு மற்றும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1986-90ல் 7.92 விழுக்காடாக இருந்தது 1991-95ல் 7.26 விழுக்காடாகக் குறைந்தது (Narasimha Reddy et al 2009). வேளாண்மையில் அரசின் முதலீடுகள் குறையத் தொடங்கியது, வேளாண்மையின் நிலைமையினை பெரும் சிக்கலான நிலைக்குக் கொண்டு சென்றது.
– பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 6 ஜனதா அரசும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்
ஜன சங்கம், பாரதிய லோக் தளம், சோசியலிஸ்ட் கட்சி, மொரார்ஜி தேசாயின் பழைய காங்கிரஸ் ஒன்றிணைந்து 23.1.1977ல் ஜனதா கட்சியினைத் துவக்கி 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இத்துடன் பாபு ஜகஜீவன் ராமின் ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் இயக்கமும் ஒன்று சேர்ந்தது. 22.03.1977ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் ஜனதா கட்சி 298 இடங்களைப் பெற்று மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். இது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகச் சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா கட்சியானது வடஇந்திய மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் வெற்றியினைப் பெற்றிருந்தது ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொரார்ஜி அமைச்சரவையில் பாபு ஜகஜீவன் ராம், அடல் பிஹாரி வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், எச்.எம்.பட்டேல், சரண் சிங், மது தன்டவதே போன்ற முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இதன்பின் பல மாநிலங்களில் ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தது. மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி ஆட்சியானது நிலச் சீர்திருத்தத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இதன்படி உழவர்களுக்கு நிலம் சொந்தம், நிலக் குத்தகையை 50 விழகாட்டிலிருந்து 25 விழுக்காடாகக் குறைத்தல் உட்பட பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு ஒரு மில்லினுக்கு மேற்பட்ட ஏழை, நிலமற்ற விவசாயிகள் இம்மாநிலத்தில் பயனடைந்தனர்.
மார்சு 1977லிருந்து ஜூலை 1979முடிய 20 மாதங்கள் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தது. வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, உண்மையான சமூக நீதியினை செயல்படுத்துவது, செயல்படாமல் அல்லது முடங்கியிருந்த நிர்வாகத்தைச் செயல்பட வைப்பது என்ற அடிப்படையில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னால் சில நாட்கள் சரண் சிங் பிரதம மந்திரியாகப் பதவியிலிருந்தார். பல்வேறு சித்தங்களின் கூட்டு ஆட்சியாக (ஜனதா, ஜன சங்கம், சோசலிஸ்ட் கட்சி, இளம் துருக்கியர்கள், காங்கிரஸின் ஜனநாயக போராளிகள்) இது அமைந்தது. மொரார்ஜி தேசாய் காந்திய நெறியில் பயணித்தவராக இருந்தாலும் முதலாளித்துவச் சார்புடையவர், சரண் சிங் விவசாயிகள் சார்புடையவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான மனப்பான்மை உடையவர், ராஜ் நாராயண் கிராமப்புறத் தொழில் சார்ந்த நிலைப்பாடு உடையவர், ஜன சங்கத்தினர் உயர் ஜாதி ஆதரவாளர்கள் இவ்வாறு கலவையான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளவர் ஒன்று சேர்ந்து ஆட்சியினை நடத்தினர். மேலும் ஜனதா கட்சி வடஇந்தியாவில் அதிக செல்வாக்குடனும், தென்னிந்தியாவில் செல்வாக்கற்ற நிலையிலும் இருந்தது. பெரும் நிலக்கிழார்கள், நகர்ப்புற உயர் ஜாதியினர், இடைப்பட்ட ஜாதியினரின் ஆதரவு என ஜனதா கட்சிக்குக் காணப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் சமூகப் பதற்றம், ஏழை, பட்டியல் இன மக்கள் மீதான அடக்குமுறை இருந்தது. கிராமப்புறங்களில் ஏழைகள், நிலமற்ற விவசாயிகள், பட்டியல் இனத்தவர்கள் தங்களின் உரிமைக்காகப் போராடினர். நெருக்கடிக் காலங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்த லேவாதேவியர்களால் கொடுத்த கடனைத் திரும்பப் பெற இயலவில்லை எனவே ஜனதா ஆட்சிக் காலத்தில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் விவசாயிகளிடையேவும், ஏழை மக்களிடமும் பதற்றம் நிலவியது. இது ஜாதி மோதலை உருவாக்கியது. பல வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு பட்டியலினத்தவர்கள் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்ட செல்வங்களை ஒழிப்பதற்காக ஜனதா அரசு ரூ.1000, ரூ.5000, ரூ.10000 செலாவணியினை செல்லத்தக்கதல்ல என்று அறிவித்தது. நெருக்கடிக் காலத்தில் போராட்டம் சட்டப்பூர்வமானது இல்லை என்ற நிலையினை திரும்பப் பெறப்பட்டது. அந்நிய முதலீடு உச்ச அளவாக 40 விழுக்காட்டுக்கு மிகக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதிக்கும் கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதுபோல் ஐபிஎம் நிறுவனமும் தடைசெய்யப்பட்டது (Mint 2019). இரயில்வே துறை அமைச்சராக இருந்த மது தன்டவதே ஏழை மக்கள் பயணிக்கவும், துறையினை நவீனப்படுத்தவும் பல்வேறு சீர்திருத்தங்களை அத்துறையில் கொண்டுவந்தார்.
ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது காந்தியவாதிகள் மகிழ்ச்சியடைந்தனர். வேளாண்மையிலும், தொழில் துறையிலும் காந்திய சித்தாந்தம் பின்பற்றப்பட்டது. கிராமப்புறம் சுயச்சார்பினை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. துரிதமான வேளாண் உற்பத்தியினை அடையச் செய்தல் என்பது உணவு பற்றாக்குறையினை தீர்ப்பதற்கானதாக மட்டுமல்ல தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கும் சக்தியையும் உண்டாக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டது (Georger Cristoffel Lieten 1980). அடிப்படையில் பல்வேறு சித்தாந்தங்களில் கூட்டாக இருந்தாலும் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜனதா அரசின் முதன்மையான சித்தாந்தமாக முறைசாரா சிறு மற்றும் பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1978-1983) வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறு மற்றும் பாரம்பரியத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சுயச்சார்பினை அடையவும், உள்நாட்டுத் தொழில்களை உருவாக்கவும் உத்திகள் வகுக்கப்பட்டது.
ஜனதா அரசு பொறுப்பேற்றபோது வேலையின்மையும் வறுமையும் முக்கிய அறைகூவல்களாக இருந்தது. இந்த நிலை பொதுவாகக் கிராமப்புறங்களைச் சார்ந்ததாக இருந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் முயற்சியால் திட்டக்குழுவில் தொழில்துறையினை சார்ந்த வல்லுநர்கள் உறுப்பினர்களா இருந்த நிலையினை மாற்றி வேளாண் துறையினைச் சார்ந்த வல்லுநர்களை உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். இதனால் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டமிடுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நவம்பர் 1977ல் கங்கை நதி நீரைப் பகிர்வு செய்வதற்கு இந்திய-பங்ளாதேஷ்க்குமிடையே வற்று காலங்களில் (Lean season) 20500 கன அடி தண்ணீரும் மற்ற காலங்களில் 34500 கன அடி தண்ணீர் பெற ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மையினை மேம்படுத்த உதவியது (Ramachandra Guha 2017).
வேளாண் இடுபொருட்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன, குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்டது. இவ்விரண்டையும் பெரிய விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெற்றனர். இதனால் மானியம் 1977-78ல் ரூ.4500 மில்லியனாக இருந்தது 1979-80ல் ரூ.5700 மில்லியனாக உயர்ந்தது. உணவுப் பொருட்களின் கையிருப்பு அதிகரித்திருந்தது. இதனால் 1971ல் கிராமப்புற வறுமை 49 விழுக்காடாகவும் நகர்ப்புற வறுமை 56 விழுக்காடாகவும் இருந்தது குறையத் தொடங்கியது. எனவே உபரியாக இருந்த உணவு உற்பத்தியினை ஏற்றுமதி செய்ய ஜனதா அரசு வல்லுநர்களைக் கொண்ட பணிக் குழுவினை அமைத்தது. இக்குழு பாரம்பரிய வணிகப் பயிர்கள் மற்றும் உணவுப் பயிர்களை ஏற்றுமதி செய்யப் பற்றாக்குறை நிலவும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று ஜனதா கட்சி ஆட்சியில் நிதி அமைச்சராகவும் இருந்த சரண் சிங் குறிப்பிட்டார். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புறங்களில் வாழும் மேல்தட்டு வர்க்கம் நீண்ட காலமாகவே கிராமப்புற வெகுஜனங்களைச் சுரண்டி வாழ்ந்துவந்தனர் என்றும் அவர்கள் பொருளாதார வளர்ச்சியினைத் தங்கள் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டுள்ளனர் என்று சரண் சிங் குறிப்பிட்டார். இத்துடன் தொழில் துறையும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் கூட்டாகக் கிராம மக்களைச் சுரண்டுகின்றனர் என்றார். இதனால் காலம் காலமாக நிலமற்ற விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து தங்களின் பொருளாதார நிலையினை இழந்து வந்தனர் என்றார். எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1978-79ன் வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கு ரூ.10270 மில்லியன் ஒதுக்கப்பட்டது இது காங்கிரஸ் ஆட்சியில் 1975-76ல் ரூ.7270 மில்லியனா இருந்தது. ஜனதா ஆட்சிக்கு முந்தைய 20 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சியானது 20 விழுக்காடாக இருந்தது 1978-79ல் 1 – 2 விழுக்காடு அளவிற்கே வளர்ச்சி காணப்பட்டது. இது நெருக்கடிக் கால கட்டத்திலிருந்ததைவிட (8 விழுக்காடு) குறைவாகவே இருந்தது ஆனால் தொழில் துறை வளர்ச்சியானது 7 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது (துயல னுரடியளாi 2014). பல்வேறு முயற்சிகள் ஜனதா அரசினால் முன்னெடுக்கப்பட்டாலும் கிராமப்புற ஏழைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தனர் எனவே அமைப்பு ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1978-79ல் சுவிஸ் நாட்டுப் பொருளியல் அறிஞரான கில்பர்ட் எட்டியன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியக் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். இவ்வாய்வானது, வேளாண்மைக்கான நீர்ப்பாசன வசதியினை மேம்படுத்தியதால் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரித்ததாகவும், இனால் கிராமப்புற வருமானம், வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்று குறிப்பிடுகிறார். பசுமைப் புரட்சியின் விளைவினால் ரசாயன உரப் பயன்பாடானது நான்கு மடங்கு அதிகரித்தது. வெண்மைப் புரட்சியின் விளைவால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதனால் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளில் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாந்திருந்ததினால் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடைந்தது. இதனால் அரசியல் ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர். 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 36 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததால் கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக திட்டங்களைக் கொண்டுவர அழுத்தம் கொடுத்தனர். இதனால் நகர-கிராமப்புற போராட்டங்கள் அதிகரித்தது, விவசாய-தொழில் துறை போட்டிகள் உருவானது. ஜனதா கட்சி கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் பிற்பட்ட மக்களின் குரலாக இது பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. எனவே இதனைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை பெற பி.பி.மண்டல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது (Ramachandra Guha 2017).
காங்கிரஸ் கட்சி போன்றே ஜனதா கட்சியின் சித்தாந்தமும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வாக நிலச் சீர்திருத்தம் அவசியமானது என்று கருதப்பட்டது. எனவே ஜனதா அரசு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் நிலச் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்துதல் மற்றும் நிலப் பகிர்வினை செயல்படுத்துதலை முன்னிறுத்தியது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கண்ட தோல்வியை ஜனதா அரசும் எதிர்கொண்டது. நிலச் சீர்திருத்தம், நிலப் பகிர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் விவசாயச் சங்கங்களின் தொடர் போராட்டமும் அரசியல் கட்சிகளின் அழுத்தமும் ஆகும்.
அட்ல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி தலைவர்களாக் கொண்ட பாரதீய ஜன சங்கமானது, இந்து-முஸ்லீம்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஜனதா கட்சியிலிருந்து வெளியேறியது. இதனால் மொரார்ஜி தேசாய் அரசானது கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து சரண் சிங் 28.07.1979ல் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறது என்ற அடிப்படையில் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். ஆனால் பாராளும்மன்றத்தில் காங்கிரஸ் ஆதரவாக இல்லாத நிலையில் சரண் சிங் 20.8.1979ல் பதவியினை ராஜினாமா செய்தார். சரண் சிங் 23 நாட்கள் மட்டுமே பிரதம மந்திரியாக இருந்தார். ஆனால் 14.01.1980வரை காபந்து பிரதம மந்திரியாகப் பதவி வகித்தார். சரண் சிங் இந்திய அரசியலில் விவசாயிகளின் முகமாகவே பார்க்கப்பட்ட முக்கிய தலைவர் ஆவார். சரண் சிங் விவசாயிகளின் நலனையும், வாழ்வினையும் மேம்படுத்துவது மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர். உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக பதவி வகித்தபோது நிலச் சீர்திருத்தத்திற்கான முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். ஜமீன்தார் ஒழிப்பிற்கான சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் இதனால் இவரை இடைத் தரகர்களின் ஒழிப்பிற்கான வடிவமைப்பாளராகக் காண முடிகிறது. விவசாயிகள் முறைசாரக் கடனாக வட்டிக்காரர்களிடம் பணம் பெற்றுப் படும் துயரத்தினை ஒழிக்கச் சட்டம் கொண்டுவந்தார், நிலப் பயன்பட்டு சட்டம், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம், குத்தகைச் சட்டம், போன்ற சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். 1959ல் நேருவினால் கொண்டுவரப்பட்ட கூட்டுறவு விவசாய முறையினை கடுமையாக எதிர்த்தார்
(https://theprint.in/theprint-profile/chaudhary-charan-singh-prime-minister).
அட்டவணை: ஜனதா அரசில் வேளாண்மையின் போக்கு (1980-81 விலையின்படி)
ஆண்டு | வேளாண் உற்பத்தி (ரூ.கோடியில்) | GDPயில் வேளாண் உற்பத்தியின் பங்கு |
1977 | 37323 | 35.1 |
1978 | 41994 | 36.8 |
1979 | 63327 | 28.1 |
1980 | 37108 | 32.5 |
Source: Kalirajan et al 2001.
ஜனதா அரசிலிருந்த சரண் சிங் வேளாண்மையை ஊக்குவித்தாலும் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்குச் சாதகமான போக்கே இவ்வாட்சியில் காணப்பட்டது. வேளாண் இடுபொருட்களான ரசாயன உரம், உயர் விளைச்சல் தரும் விதைகள், வேளாண் இயந்திரங்கள், வங்கிக் கடன் போன்றவை வேளாண் சார்ந்ததாக இருந்தாலும் தொழில் வளர்ச்சிக்குப் பெருமளவிற்கு உதவியது. விவசாயிகளில் குறைந்த அளவிற்கே கடன் பெறும் நம்பிக்கை நிலையிலிருந்தனர். இவர்கள் வாணிப பயிர்களான ரப்பர், பழவகைகள், கரும்பு போன்றவை பயிர் செய்தனர். குறைந்த அளவிற்கு உணவு உற்பத்தியில் ஈடுபட்டனர். எனவே உணவு கையிருப்பானது குறைந்தது. அதேசமயம் உயர் ரக உணவு தானிய உற்பத்தியில் ஈடுபட்டு அதனை உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளில் விற்று லாபம் பெற்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய விவசாயிகள் பாரம்பரிய பயிர் சாகுபடி முறையினை பின்பற்றியதால் பசுமைப் புரட்சிக்கு வெகு தொலைவிலிருந்தனர். ஆனால் பன்னாட்டு வேளாண் வாணிபம் என்ற சரண் சிங்கின் திட்டமானது இந்திய விவசாயிகளை புதிய தளத்திற்கு அழைத்துச் சென்றது (Georges Kristoffel Lieten 1980). ஜனதா அரசினை அன்றைய காங்கிரஸ் ஆட்சியினை ஒப்பிடும்போது வேளாண்மையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை ஆனால் கிராமப்புற மேம்பாட்டில் நேர்மறை மாற்றம் கண்டது என்பது மறுப்பதற்கில்லை.
– பேரா.பு.அன்பழகன்
பச்சைக்கொடிக்குள்ளே ஒரு சிவப்பு வண்ணம்…!!! கவிதை – ச.சக்தி
தோளில்
கிடந்த பச்சைத் துண்டு
மரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தது
மீத்தேன்
பறவையொன்று
தூக்கிக்கொண்டு போன
கோழிக்குஞ்சுகளான விவசாயிகள் ,
பயிரிடப்பட்ட
நிலம் முழுவதும்
செழிப்பாக வளர்ந்திருந்தது
இறந்து போன
விவசாயிகளின் கல்லறைகள் ,
மண்வெட்டியும்
கடப்பாறையும்
ஓய்வில்லாமல் குழிகளைப்
பறித்துக்
கொண்டிருந்தன
ஆறடி விவசாய
மரமொன்றைப் புதைப்பதற்காக ,
நிலத்தில்
தூவிய உரத்தில் நஞ்சு
கலந்திருந்தது
தொண்டை அடைத்து விக்கி
செத்துக்கொண்டிருந்தார்
விவசாயி,
அமோக
விளைச்சலை
ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தார் விவசாயி
கழுத்தளவு வளர்ந்திருந்தது
வட்டியும் கடனும் ,
விவசாயக் கிணறுகளில்
நீர் வழிந்து வெளியேறி
கொண்டிருந்தது
கார்ப்பரேட் காக்கைகள்
போட்டுக் கொண்டிருந்த
கற்களாக விவசாயிகளின் பிணங்கள் ,
மாடுகள்
உழுத வயலில்
கூட்டம் கூட்டமாக
கழுகுகளின் வருகை
விவசாயின் பிணங்களாக மண்புழுக்கள் ,
சுடுகாட்டுக் களத்தில்
அடுக்கி வைக்கப்பட்ட
நெல் மூட்டைகளாக
விவசாயிகளின் பிணங்கள்
தூரத்தில் தெரிகின்றன
வட்டியும் தகனமேடையும் ,
வற்றிப்போன மலட்டாற்றில்
திடீரெனப் பெருக்கெடுத்துப்
வெள்ளமெனப் பாயும்
விவசாயிகளின் கண்ணீர்த் துளிகள் ,
பூட்டிய
மோட்டார் அறையிலிருந்து
வெளியேறும்
நாற்றம் நாடாளுமன்ற
வளாகம்
வரை வீசுகிறது
இறந்துபோன
விவசாயிகளின் மூச்சுக்காற்றின்
முடைநாற்றம்!
– கவிஞர்; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி வட்டம்,
இந்தியாவின் வேளாண் சூழலியல் மாறுபாடுகள் கட்டுரை – பேரா.பு.அன்பழகன்
வேளாண்மை மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் தொழிற் துறைக்கு மூலப்பொருட்களை அளிக்கும் துறையாக உள்ளது. அன்மைக் காலங்களில் உரம், பூச்சிக்கொள்ளி மருந்துகள், செறிவூட்டபட்ட விதைகள், அதிக அளவிலான தண்ணீர் பயன்ப்பாடு போன்றவைகளால் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிபடைந்து மக்களின் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. அன்மையில் உலகளவில் சுற்றுச்சூழல் செயலாக்கக் குறியீட்டெண் 2022 (Environmental Performance Index 2022) வெளியிடப்பட்டது. இதன் கொள்கை நேக்கங்களாக, சுகாதாரச் சூழலியல், காலநிலை, சுற்றுச்சூழல் வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு 11 வகையான அறைகூவல்களை (வேளாண்மை, நீர் ஆதாரம் உட்பட) உள்ளடக்கி 40 தனிப்பட்ட சுற்றுச்சூழல் அளவீடுகளைப் பயன்படுத்தப்படுத்தி இந்த குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. இதன் மதிப்பு 0 லிருந்து 100க்குள் இருக்கும். 0 என்பது மிக மேசமான செயல்பாடாகவும். 100 என்பது மிகச் சிறப்பான செயல்பாடாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. மொத்தம் 180 நாடுகளின் மதிப்பு புள்ளிகளின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டுள்ளன. 77.9 மதிப்பெண் புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது 18.9 மதிப்பெண் புள்ளிகளுடன் இநதியா 180வது கடைசி இடத்தில் உள்ளது. இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மதிப்பெண் புள்ளியில் -0.60ஆக குறைந்துள்ளது. வேளாண்மையைப் பொருத்தமட்டில் இந்தியா 40 மதிப்பெண் புள்ளிகளுடன் 76வது இடத்தில் உள்ளது. நீர் ஆதாரத்தைப் பொருத்தமட்டில் 2.2 மதிப்பெண் புள்ளிகள் பெற்று 112வது இடத்தில் உள்ளது. வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குகின்றனர் ஆனால் மண், தண்ணீரின் தன்மை பாதிப்படைகிறது என்தை கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் மனிதர்களுக்கு நோய் ஏற்படுதல், வறண்ட பூமியாதல், நிலத்தடி நீர குறைதல், சமதள நீர்நிலைகள் வற்றுதல் போன்ற இடர்பாடுகள் எழுகின்றன (EPI 2022). வேளாண் சூழலியல் கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கத்தக்கதாக உருவெடுத்துவருகிறது. வேளாண் சூழலியல் என்பது வேளாண் சாகுபடி முறைகளில் காலநிலைகளுக்கு ஏற்ப இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை நிலையான முறையில் பயன்படுத்தி பாதுகாக்கவும் சமுதாய, விவசாயிகளின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும்.
தண்ணீர் வேளாண்மையின் ஒரு முக்கிய ஆதாரமாகும். தண்ணீர் சமூகபொருளாதார மேம்பாட்டின் ஒரு அடிப்படை அலகு ஆகும். சுகாதாரம், உணவு அளித்தல், ஆற்றலை உருவாக்குதல், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற நிலைகளில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. வளர்ந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவைகள் தண்ணீரின் தேவையினை பல மடங்காக அதிரிக்கச் செய்துள்ளது. உலகில் உள்ள தண்ணீர் இருப்பிற்கும் தேவைக்கும் பெருமளவிற்கு இடைவெளி உள்ளது. உலகில் 2.2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை, 4.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிவுநீர் வடிகால் வசதியினைப் பெற்றிருக்கவில்லை, 3 பில்லியன் மக்களுக்கு கை கழுவுவதற்கு தண்ணீர் இல்லை என்கிறது புள்ளிவிவரம். அதே சமயம் உலக அளவில் சுத்தமான குடிநீர் பருகுபவர்கள் 2002ல் 62 விழுக்காடாக இருந்தவர்கள் 2020இல் 74 விழுக்காடாக அதிகரித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் சபை முன்மொழிந்த “நீடித்த வளர்ச்சிக் குறிக்கோல்கள்” பூஜ்ய பசி, சுத்தமானக் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் வசதியினை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை முன்னிருத்தியுள்ளது. இவ்விலக்கினை 2030க்குள் அடைய வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனை அடைய தண்ணீரைத் திறனாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
தண்ணீர் வேளாண்மைப் பொருள் உற்பத்தியின் ஒரு முக்கிய இடுபொருட்களில் ஒன்றாகும். உலகின் மொத்த வேளாண்மைச் சாகுபடியில் 20விழுக்காடு நீர்பாசனம் மூலம் நடைபெறுகிறது இது மொத்த உணவு உற்பத்திக்கு 40 விழுக்காட்டுப் பங்கினை அளிக்கிறது. 2050ல் உலகில் உள்ள மக்கள்தொகை 10 பில்லியனாக இருக்கும் என்றும் இதனால் வேளாண் உற்பத்தி 70 விழுக்காடுவரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உலகளவில் வேளாண்மைக்கு 70 விழுக்காடு நன்னீர் (Fresh water) பயன்படுத்தப்படுகிறது (www.worldbank.org 2020). உலகிலேயே அதித மக்கள்தொகை பெருக்கம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய இரண்டு அறைகூவல்களையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்தியாவில் வேளாண்மை முதன்மைத் தொழிலாகும். 45.6 விழுக்காடு (PLFS 2019-20) அதவது 233.2 மில்லியன் மக்கள் வேளாண்மையில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் துறை நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கு 14 விழுக்காட்டு பங்கினை அளிக்கிறது. இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிகம் பயிர்செய்யும் நிலப்பரப்பினை (159.7 மில்லியன் ஹெக்டேர்) உடைய நாடாகும் (முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது). இது போல அதிக அளவிலான மொத்த நீர்பாசன பரப்பளவினைப் (88 மில்லியன் ஹெக்டேர்) பெற்றுள்ள நாடாகும். இந்தியா உலக அளவில் நெல், கோதுமை, எண்ணெய்வித்துக்கள், சணல், டீ, கரும்பு, பால், நறுமணப் பொருட்கள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை அதிகமாக உற்பத்தி செய்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதிக அளவிலான வளமான-நீர்பாசன விளைநிலங்கள் பாக்கிஸ்தானின் எல்லை பகுதிக்குச் சென்றது. அதிக அளவிலான மக்கள் புலம் பெயர்ந்து இந்தியாவிற்குள் வந்ததனர். இதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அமெரிக்காவின் உதவியின் அடிப்படையில் பிஎல் 480 வழியாக இந்தியா இறக்குமதி செய்து உணவுத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சம், போர், உலகளாவிய அரசியல் நெருக்கடி போன்றவையினால் இந்தியா வேளாண்மையில் சுயசார்பின்மையினை எட்ட திட்டடம் வகுத்து பசுமைப் புரட்சிக்கு 1960களில் வித்திட்டது. இந்த அடிப்படையில் வேளாண் சீர்திருத்தம் (நிலச் சீர்திருத்தம், வேளாண்மை நவீனமயமாக்கல், வேளாண் கடன் வசதி) முன்னெடுக்கப்பட்டது. தற்போது இந்தியா வேளாண்மையில் சுயசார்பு நிலையினை அடைந்து. உலகில் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. உலக நாடுகளுக்கு வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2020-21இல் இந்தியாவிலிருந்து வேளாண் பொருட்கள் மொத்த பொருட்களின் ஏற்றுமதியில் 14.30 விழுக்காடாகும் இதுவே இறக்குமதியில் 5.30 விழுக்காடாகும் (GoI 2022).
இந்தியாவில் 86 விழுக்காடு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். 55 விழுக்காட்டினர் நிலமற்ற விவசாயிகள், 70 விழுக்காட்டு விவசாயிகள் அமைப்புசாரா நிதி அமைப்புகள் வழியாகப் கடன் பெறுகின்றனர், நவீன விவசாய முறைகளைப் பெருமளவிற்கான விவசாயிகள் அணுக முடிவதில்லை, குறைந்தபட்ச ஆதரவு விலை 94 விழுக்காடு விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை, பருவநிலை மாற்றத்தினால் வறட்ச்சி. வெள்ளம் போன்றவற்றை பெருமளவிற்கான விவசாயிகள் எதிர்கொள்கின்றர். இடுபொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தினால் அதற்கு இணையாக வேளாண் பொருட்களின் விலை உயராததால் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். இக்காரணங்களினால் சுமார் 3.5 லட்சம் விவசாயிகள் கடந்த 23 ஆண்டுகளில் (1997 முதல் 2020) தற்கொலை செய்துகொண்டனர். இது இந்தியாவின் மொத்த தற்கொலையில் விவசாயிகளின் தற்கொலை 14 விழுக்காடாகும் (Mihir Shah et al 2022, Pradyht Gaha et al 2022). வேளாண்மை லாபகரமான தொழிலாகக் கருத இயலாத சூழலால் வேளாண்மையில் இருந்து அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். வேளாண்மைத் துறையின் வளர்ச்சியானது கடந்த 70 ஆணடுகளில் சாரசரியாக 2லிருந்து 3 விழுக்காடு வளர்ச்சி பதிவாகியுள்ளது. இவற்றை அதிகரிக்க தற்போது இந்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்திய வேளாண்மையின் முக்கிய அடிப்படை அறைகூவல்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஒன்று. பெருமளவிற்கு இந்திய வேளாண்மை மழையினை சார்ந்ததுள்ளது. இந்திய வேளாண்மையில் நிகர பயிர் சாகுபடி செய்யும் பரப்பில் (2018-19ல்) 71.6 விழுக்காடு நீர்பாசன வசதியினைப் பெற்றுள்ளது (1950-51ல் 20.8 விழுக்காடு). நீர்பாசன வசதி பெற்றுள்ள மொத்த நிலப்பரப்பில் 54.32 விழுக்காடு உணதானிய உற்பத்தி பயிர்கள் பயனடைகின்றன (மொத்த நெல் சகுபடி பரப்பில் 62 விழுக்காடும் கோதுமை சாகுபடி பரப்பில் 95.3 விழுக்காடும் நீர்பாசனம் மூலம் நடைபெறுகிறது). இந்தியாவில் தண்ணீர் இருப்பிற்கும் தேவைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
வேளாண்மைக்கு அடிப்படையாக தேவையான தண்ணீர் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு பயன்படுத்தப்படுகிறது (நிலத்தடிநீர், சமதளப் பகுதி தண்ணீர்). இந்தியாவில் உள்ள மொத்த சாகுபடி செய்கின்ற நிலத்தில் மழைநீர் பயன்பாடு 4000 கன சதுர கிலோ மீட்டராகும். 122 கன சதுர கிலோ மீட்டர் நீர்வள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்த நன்னீரில் 90 விழுக்காடு வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகும். வேளாண்மையில் நன்னீரின் தலா நுகர்வு ஒர் ஆண்டிற்கு 4913 முதல் 5800 கிலோ லிட்டர் ஆகும். 60 விழுக்காடு வேளாண் சாகுபடி மழையினைச் சாரந்துள்ளது. இந்தியாவில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்கள் (நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல்) போன்றவைகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. நெல்லிற்கு 5லிருந்து 8 செ.மீ தண்ணீரும் பிற தாவர வகைகளுக்கு 60லிருந்து 70 செ.மீ தண்ணீரும் தேக்கவேண்டியுள்ளது இதில் அதிக அளவிற்கு ஆவியாகிறது. நெல், கோதுமை, கரும்பு போன்றவை மொத்த பயிரிடும் பரப்பில் 41 விழுக்காட்டைப் பெற்றுள்ளது ஆனால் இது 80 விழுக்காடு நீர்பாசனத்தைக் கொண்டுள்ளது. இப் பயிரிடும் பரப்பில் அதித மழை, மழைப் பற்றாக்குறை, நிலத்தடி நீர் மட்டம் குறைதல் போன்ற காரணங்களினால் குறைய நேரிட்டால் உணவு பற்றாக்குறையும். உணவு பணவீக்கமும் ஏற்பட்டு பொருளாதாரத்தில் பாதிப்பினை உண்டாக்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உணவு பணவீக்கம் மிகவும் அதிக அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மின் மோட்டர்கள் வழியாக அதிக அளவிற்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்தியாவின் நீர்பாசன முறைகளில் கிணற்று, ஆழ்துளைக் குழாய்ப் பாசனத்தின் பங்கு 2011-16ல் சுமார் 60 விழுக்காடாக உள்ளது இது 1950-56ல் 29 விழுக்காடாக இருந்தது. இந்தியாவில் 21 மில்லியன் மின்சார பம்பு செட்கள் நீர்பாசன பயன்பாட்டில் உள்ளன. பல மாநிலங்களில் வேளாண் நீர்பாசனத்திற்கான இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Upmanu Lall 2021). இந்தியவில் வேளாண்மைகாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது சீனா, பிரேசில் நாடுகளைவிட 2லிருந்து 4 மடங்குவரை அதிகமாகக் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் நீர் இறைப்பு செலவு அதிகமாகி வேளாண் பொருளின் மொத்த உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இந்தியாவின் 60 விழுக்காடு மாவட்டங்களில் அதிஅளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரில் ஃப்லோரைடு, ஆர்சனிக், மெர்குரி, யுரேனியம், மாங்கனீசு போன்ற நிலைகளில் காணப்படுகிறது. இதனால் வேளாண்மையில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்ல மக்களிடையே பல்வேறு நோய்களையும் உருவாக்குகிறது.
பசுமைப் புரட்சியின் ஒரு முக்கிய வெளிப்பாடு மற்ற பயிர்களைவிட நெல், கோதுமை, கரும்பு போன்றவைகளுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகும். பசுமை புரட்சி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தினை, பருப்பு, எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்தவர்கள் நெல், கோதுமை பயிர்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு, விலை, சலுகைகள் போன்ற காரணங்களை முன்னிருத்தி இவைகளைப் பயிரிடத் தொடங்கினார்கள். அரசு பொதுவிநியோகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு, மதிய உணவு திட்டம் போன்றவைகளுக்கு அரிசி, கோதுமைகளை பயன்படுத்தியது இதனால் இவற்றின் தேவை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் தொன்றுதொட்டு உட்கொள்ளும் உணவு முறையில் மாற்றம் அவ்வகை தானிய உணவு (கேழ்வரகு, சாமை, சோளம், கம்பு, போன்றவைகள்) தேவைகள் குறைந்தது. பயிரிடவும் விவசாயிகள் முன்வரவில்லை. நெல், கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசு சலுகைகள் கிடைத்தது. எனவே இந்த வகை வேளாண் பொருட்களின் சாகுபடியினை நோக்கி பெருமளவிற்கான விவசாயிகள் மாறிச் சென்றனர். நெல், கோதுமை பயிர் செய்வதற்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டது தொடர்ந்து இப்பயிர்களை பயிரிட்டதால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இத்துடன் இடுபொருட்களின் (உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையான விலை அதிகரிப்பு, விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காதது போன்றவைகளால் நெல், கோதுமை பயிரிடும் விவசாயிகள் பெரும் அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையினை எதிர்கொள்ள ஒரு சில மாநிலங்களில் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய அரசு ஊக்கப்படுத்துகிறது (ஒடிசாவில் தினைப் பயறு இயக்கம் 2017-18ல் துவக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் தினைப் பயறுகளை கொள்முதல் செய்ய தேஜஸ்வினி கிராமப்புற பெண்கள் அதிகாரமளித்தல் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது).
அதிக அளவிற்கான தண்ணீர் பயன்பாட்டை இனி வரும் காலங்களில் குறைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால் தெளிப்பு நீர்பாசனம், சொட்டுநீர்பாசனம், நீர்தேக்க பாசனம் போன்றவற்றைப் முறையாகப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியாவில் 13 விழுக்காடு மட்டுமே சிறிய வகை நீர் பாசன (minor irrigation) முறை பயன்படுத்தப்படுகிறது (இஸ்ரேலில் 99 விழுக்காடு) இதுவும் குஜராத். மத்தியப் பிரதேசம். ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே இந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது (Agarwal (2019).
பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா
வேளாண்மையில் நீர் பயன்பாட்டை திறனுடன் பயன்படுத்த 2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசினால் பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா துவக்கப்பட்டது. இதற்கான நிதியினை ஒன்றிய மாநில அரசுகள் 60:40 என்ற அளவில் பங்கீடு செய்துகொள்கிறன. இந்த திட்டத்தின் வழியாக 10.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்துள்ளது. இந்த திட்டத்தை ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சிறப்பாக நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதால் 80லிருந்து 90 விழுக்காடுவரை தண்ணீர் திறனாகப் பயன்படுத்தப்படுகிறது. 30.5 விழுக்காடு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. 28.5 விழுக்காடு உரப் பயன்பாடு குறைகிறது. உற்பத்தி திறன் அதிகரிக்கிறது (பழம் 42 விழுக்காடு, காய்கறிகள் 52 விழுக்காடு). இதுபோல் நீர்பாசனத்தில் 31.9 விழுக்காடு செலவு மிச்சப்படுகிறது (Ridham Kumar 2020). ரூ.50000 கோடி மதிப்பீட்டின்படி கால வரையறையினை 2019-20 என நிருணயம் செய்து அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வேறு சில நீர்பாசன திட்டங்களுடன் (AIBP, IWMP. OFWM. NMSA) தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை சாகுபடியில் தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளதற்கு தீர்வாக மாற்று பயிர்களை சாகுபடி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அன்மையில் மிஹிர் ஷ, விஜயசங்கர், ஹாரிஹ் ஆகியோரால் நடத்தப்பட்ட 11 மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கான, தமிழ்நாடு) நடத்தப்பட்ட ஆய்வின்படி 2015-16ல் இம் மாநிங்கள் நாட்டின் மொத்த நீர்பாசன பரப்பில் 66 விழுக்காடு நீர்பாசனத்தினைக் கொண்டுள்ளது. இம் மாநிலங்கள் நெல், கோதுமை, கரும்பு போன்வற்றை முதன்மையாக சாகுபடி செய்பவைகளாகும். இம் மாநிலங்களில் சூழலின் அடிப்படையில் மாற்றுப் பயிராகப் பருப்பு, ஊட்டச்சத்து மிகு-தானியங்களைப் பயிர் செய்ய தொடங்கினால் 18லிருந்து 36 விழுக்காடுவரை தண்ணீர் சேமிக்க முடியும் என்றும் அதே சமயம் நீர்-செறிவு வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3171 என்றால் மாற்றுப் பயிர்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3821 என்று கிடைக்கும் என்கிறது (Mihir Shah et al 2022). உலகளவில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிஅளவில் வாழும் நாடாக இந்தியா உள்ளது. இதனைப் போக்க மாற்று பயிர்களினால் உற்பத்தியாகும் ஊட்சத்து மிகு-தானியங்களை உட்கொள்ளலாம். எனவே மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிப்பதும் அதனை சந்தை செய்வதற்கான வழிவகைகளைக் காண்பது. இவ் வேளாண் பொருட்களுக்கு மக்களிடையே நுகர்ச்சிக்கான நாட்டத்தினை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமையாக உள்ளது.
நீர்மேலாண்மை திறம்பட செயல்படுத்த போதுமான கொள்கைகள் வகுத்து நடைமுறைபடுத்த. வேளாண்மை மற்றும் நீர்பாசனத் துறை அமைச்சர்கள், நீர்பாசன வடிநில காப்பாளர்கள், நீர்பாசன முகவர்கள், நீர்பாசன விவசாயிகள், விவசாய அமைப்புகள் ஓன்றிணைந்து நீர் மேலாண்மையினைத் திறம்பட நடைமுறைபடுத்ப்பட வேண்டும். மண் பரிசோதனை மையங்களை உருவாக்கி அதை ஒரு இயக்கமாக விவசாயிகளிடம் கொண்டுசெல்ல வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப மாற்றுப் பயிர்களை சுழற்சி முறையில் அல்லது ஊடு பயிராக சாகுபடிசெய்தல் அவசியமாகிறது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது. இதனை தடுக்க உணவு பாதுகாப்பு நடைமுறையின் அடிப்படையில் இவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். உணவு, தினைவகை உற்பத்திப் பொருட்களின் சேமிப்புக் கிடங்குகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். தற்போது அதிக அளவிற்கு உரங்கள். மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்கப்படுகின்றன அதனை இயற்கை இடுபொருட்கள், மண்வள மேம்பாடு, சுழலியல் சேவைகளுக்கு அளித்து நீடித்த வேளாண்மை வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் தினைவகைப் பயிர்களை சந்தைபடுத்தும் செயலில் ஈடுபடுத்தப்பட வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களை மறுசீரமைப்பு செய்து அனைத்து சுழலியல் ஆர்வளர்களை ஒன்றினைத்து வேளாண் மேம்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும்.
மீனவர் கூட்டுறவு சங்கங்களை உயர்வடையச் செய்வோம் !
மீனவர் கூட்டுறவு சங்கங்களை உயர்வடையச் செய்வோம்
பு. விக்னேஷ், B.F.Sc. நான்காம் ஆண்டு மாணவர்,
முனைவர் இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர்
கூட்டுறவு என்பது தன்னிச்சையாக தங்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார தேவைகளை பூத்திசெய்வதற்காகவும், ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குவதற்காகவும் தானாக முன்வந்து ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். கூட்டுறவு என்பது பெயரளவில் மட்டுமல்லாமல் செயலளவிலும் ஒன்றிணைந்து செயல்படுவதாகும். இந்தியாவில் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. முக்கியமாக தேங்காய் உற்பத்தியாளர்கள், பருத்தி உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாப்பதற்காகவும், நுகர்வோரின் நலனை பாதுகாப்பதற்கு பல்வேறு நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளள. அதனைப் போன்று மீனவர்களின் நலனுக்காக மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நம் நாட்டில் இருந்தாலும் மற்ற கூட்டுறவு சங்கங்கள் போன்று மீனவர் கூட்டுறவு சங்கங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
மீன்வளம் என்பது நாட்டின் உணவு பாதுகாப்பிற்கும் வருவாய் பெருக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 28 மில்லியன் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர் . இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத்தின் பங்கு 1 சதவீதமாகவும், வேளாண் உற்பத்தியில் 5 சதவீதமாகவும் இருக்கிறது. மீனவ கூட்டுறவு சங்கங்களை மேம்பாடு அடையச் செய்வதன் மூலம் மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்பாடு அடையச் செய்ய முடியும். மீனவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வளங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைவதை மீனவ கூட்டுறவு சங்கங்கள் உறுதிசெய்கிறது.
இந்தியாவில் மீனவ கூட்டுறவு சங்கங்களின் நிலை:
இந்தியாவில் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் அறிமுகத்திற்கு (1951 – 56) பிறகு கூட்டுறவு சங்கங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது . இந்தியாவில் கூட்டுறவு அமைப்பு என்பது 1904 ஆம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகிறது. ஆனால் மீனவர்களுக்கான ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்படவில்லை. அன்றைய காலகட்டத்தில் மீனவர்களின் நிலை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் பின்தங்கியே இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான மீனவர்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கி உள்ளனர். இதனை கடல்சார் மீன்வள ஆய்வறிக்கை 2010-11 உறுதி செய்கிறது. மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த மீனவ கூட்டுறவு சங்கங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இந்தியாவில் முதன் முதலில் மீனவ கூட்டுறவு அமைப்பு என்பது 1913 ஆம் ஆண்டு “கார்லா மாச்சிமார்” மீனவ கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டது. அடுத்ததாக மேற்கு வங்காள மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் 1918 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மீனவர் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைய தொடங்கியது.
தேசிய மீனவர் கூட்டமைப்பு(FISHCOFED):
இந்தியாவில் முறையான தேசிய மீனவர் கூட்டுறவு சங்கம் 1982 ல் தொடங்கப்பட்டது. மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்தியாவில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதை ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதும் இதன் குறிக்கோள் ஆகும். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, அதற்கு பயிற்சி அளிப்பது, சுகாதாரம் மற்றும் உயிர் காப்பீட்டு அளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தியாவில் 21 மாநில அளவிலான கூட்டுறவு அமைப்புகள், 7 பிராந்திய அளவிலான கூட்டுறவு அமைப்புகள், 132 மாவட்ட அளவிலான கூட்டுறவு அமைப்புகள், 21741 முதன்மை நிலை கூட்டுறவு அமைப்புகளும் உள்ளன. இதில் மொத்தம் 3,353,115 உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு மாநில மீனவர் கூட்டமைப்பு (TAFCOFED):
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 2021-22 அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 1,418 முதன்மை நிலை மீனவ கூட்டுறவு அமைப்புகளும், 12 மாவட்ட அளவிலான மீனவ கூட்டுறவு அமைப்புகளும், 1 மாநில அளவிலான மீனவ கூட்டுறவு அமைப்பும் உள்ளது. இதில் மொத்தம் 7,17,204 உறுப்பினர்கள் உள்ளனர்.
மீனவ கூட்டமைப்பின் கட்டமைப்பு:
இந்தியாவில் கூட்டுறவு சங்கங்களின் கட்டமைப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எ.கா கேரளாவில் இரண்டு அமைப்பு கட்டமைப்பும், மகாராஷ்டிராவில் நான்கு அமைப்பு கட்டமைப்பும் உள்ளது. பொதுவாக இந்தியாவில் மூன்று அமைப்பு கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. அதாவது மாநிலம், மாவட்டம், கிராமம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC) மீனவ கூட்டுறவு அமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகளை உறுதிசெய்கிறது. மீனவ கூட்டுறவு சங்கங்களின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மீனவ கூட்டுறவு அமைப்பின் பணிகள்:
மீன்பிடி படகு, வலை, டீசல் மற்றும் பொறி இயந்திரம் வாங்குவதற்கான மானியம் வழங்குதல், குளிர்பதன கிடங்குகள், ஐஸ் ஆலைகள் உள்ளிட்ட செயலாக்க அலகுகளை நிறுவுதல், உள்நாட்டு மீன் வளம் மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி மையங்களை மேம்படுத்துதல், சந்தைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் (வாகனப் போக்குவரத்து, குளிர்பதன கிடங்கு, சில்லரை விற்பனை இயக்கம்), மீனவர்களை ஒன்றிணைத்து தொலைதூர சந்தைகளில் உள்ள நுகர்வோருடன் இணைத்தல், புதிய தொழில்நுடபங்களுக்கு பயிற்சி அளித்தல், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்குதல், வாழ்வாதாரத்தை உயர்த்துதல், மீன் மற்றும் மீன் உபபொருட்களை சந்தைப்படுத்துதல், மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு அடிப்படை தேவைக்கான மானியத்தை அரசிடம் பெற்றுதருதல் மற்றும் பொதுவிநியோக திட்டத்தை இச்சங்கங்கள் மூலம் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை மீனவ கூட்டுறவு சங்கத்தின் மிக முக்கிய பணிகளாகும்.
ஆலோசனைகள்:
1. மீன்பிடி பகுதிகளை வரையறுக்கக்கூடிய மற்றும் மீனவர்களின் உரிமையை நிலைநாட்டக்கூடிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். இதில் மீனவ கூட்டுறவு சங்கங்களின் ஆலோசனைகள் முக்கிய இடம் பெற வேண்டும்.
2. கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீனவ கூட்டுறவு அமைப்பின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இல்லை. எனவே நபார்டு வங்கி போன்று பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் நிதி வழங்கி மீனவ கூட்டமைப்பை மேம்படுத்தலாம்.
3. மீனவர்களின் கல்வியறிவு பின்தங்கியே உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மீனவ கூட்டுறவு சங்கங்கள் தோல்வியை தழுவுகிறது. எனவே அனைவருக்கும் கல்வி அறிவு கிடைப்பதை உறுதி செய்யலாம்.
4. பெண்களின் பங்கை மீனவ கூட்டுறவு அமைப்பில் அதிகரிக்கச் செய்யலாம்.
5. நன்னீர் மற்றும் கடல் சார்ந்த மீன்பிடிப்பில் கிடைக்கும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான கட்டமைப்புகளை மேலும் அதிகப்படுத்தலாம்.
6. அனைத்து வகையான மீன்களும் உள்ளூர் சந்தைகளில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைப்பதை கூட்டுறவு சங்கங்கள் உறுதி செய்யலாம். உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்கிடையேயான உறவை மேம்படுத்தலாம்.
7. மீனவர்களுக்குக்கிடையேயான ஒற்றுமை இன்மை என்பது மீனவ கூட்டுறவு அமைப்பின் தோல்விக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே ஒற்றுமையின் அவசியத்தை உணரச் செய்யலாம்.
8. மீன்பிடித் தடை காலங்கள், இயற்கை பேரிடர் போன்ற காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத திட்டங்களை கூட்டுறவு சங்கங்களின் துணையோடு வகுக்கலாம்.
9. எல்லைதாண்டி மீன்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
முடிவுரை:
உலக அளவில் கூட்டுறவு சங்கம் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை மீனவர் கூட்டுறவு சங்கம் சில மாநிலங்களில் முன்னேற்றமும் சில மாநிலங்களில் பின்னேற்றமும் அடைந்துள்ளது. பொதுவாக மீனவ கூட்டுறவு சங்கங்கள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பின்தங்கி இருப்பதற்கான காரணங்களாக குறைவான முதலீடு, சரியான தலைமை இல்லாமை மற்றும் நிர்வாக குறைபாடு, ஊக்கமின்மை, உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையின்மை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, குறைந்த கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாமை போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. எனவே மீனவர் கூட்டுறவு அமைப்பின் தோல்விக்கான காரணங்களை கலைந்து, நாட்டில் முன்மாதிரியாக விளங்கும் பென்பிஷ் (BENFISH), மத்சியபெட் (MATSYAFED) போன்ற மீனவ கூட்டுறவு சங்கங்களை முன்மாதிரியாக கொண்டு மீனவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யலாம்.
தொடர்புக்கு:
முனைவர் இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர்
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
பொன்னேரி – 601 204.
கைப்பேசி எண்: 95663 62894
மின்னஞ்சல்: [email protected]