Adhithi Novel by Varatha Rajamanikkam Novelreview By Jananesan நூல் மதிப்புரை: வரத. ராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் - ஜனநேசன்

நூல் மதிப்புரை: வரத. ராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் – ஜனநேசன்



அன்பு வழியும்  அதிதி

ஜிங்கிலி முதலான  மனதில்  நிற்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வழங்கியவர்  எழுத்தாளர் வரத. ராஜமாணிக்கம். அவர்  எழுதிய முதல் நாவல் “அதிதி.” ஓடிப்போன அம்மாவைத்  தேடிப்போன மகன் கோவிந்தின் அனுபவம் நாவலாக  விரிகிறது. பழநி நகரில் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஜட்கா எனும் குதிரை வண்டியையும், அபலைகளின் உணர்வுக்கும்  உடலுக்கும்  தீனிபோடும் மறைமுகமாக நடக்கும் பாலியல் தொழிலையும் சுற்றி இயங்குகிறது இந்நாவல் .

இளம் மனைவி  சசிவர்ணத்திடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் கோவிந்த் இராத்திரியோடு  இராத்திரியாக மனைவியிடம்  சொல்லாமல் இரயிலேறி பழநியில் இறங்குகிறான். அங்கு ஜட்காவண்டியோட்டி  சுப்பையாவிடம்  பரிச்சியம் ஏற்படுகிறது. ஊரைவிட்டு  ஓடிவரும்  அபலைப்பெண்களுக்கு அடைக்கலம் தந்து காக்கும் பசுபதியிடம்  கோவிந்தை சுப்பையா அறிமுகப்படுத்துகிறான். பசுபதி, பசுபதிவீட்டில்  தங்கியிருக்கும் பாலியல் தொழில் செய்யும் நேத்ரா, பானுமதி, விடிவெள்ளி, ராசாத்தி முதலான பெண்கள்  ஒரு நீள் கோடாகவும் ,   கணவனைத் தேடிக் காணாமல்  தந்தை வீட்டில் அடைக்கலமாகும், சசி,மருமகனைத் தேடும் தந்தை சுந்தரம். அவருக்கு துணைவரும் ரகீம் பாய், மகளுக்காக கவலையில் உழலும்  அம்மா கோமதி போன்றோர் ஒரு நீள் கோடாகவும்  இணையாக நெடுகப் பயணித்து சந்திக்கும் புள்ளியில் இந்நாவல் முடிகிறது. நாவல் இரயிலில் பழனிக்குள் நுழைந்து, இரயிலில் பழநியை விட்டு வெளியேறுகிறது.

கோவிந்து தன் அம்மாவைக் கண்டடைகிறானா .விட்டுப்பிரிந்த மனைவியோடு சேருகிறானா  என்பதை சிக்கல் சிடுக்கல் இல்லாத  நடையில் சொல்லப்படும் இந்நாவலில்  வாசித்தறியலாம்.  உள்ளங்கையில் கொஞ்சம்   பஞ்சாமிர்தத்தை ஊற்றினால் பழச்சக்கரைச்  சாறு  கையிலிருந்து  வழிந்தொழுகுவது போல  நாவல் முழுதும்  அன்பு கசிந்து வழிந்து  வாசகரையும்  அன்புமயமாக்குகிறது. பெண் ஓடினால் ஓடுகாலி என்று பழித்து ஒதுக்கும் சமுகம், ஆண் ஓடினால்  அவனை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்வு ரீதியாக பதிவு செய்கிறார் வரத. ராஜமாணிக்கம்.

இந்நாவலின் ஊடே ஜட்காவண்டிக்காரர்களின்  அன்றாட வாழ்கைப் பாடுகளை  சொல்கிறார். சசியைத் தேடிவரும் இளைஞன் நாகு, பாத்திமாவின் வார்த்தைகளுக்கு  கட்டுப்பட்டு திரும்பச் செல்லும்போதும், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின்  உணர்வுகளையும், ஓடிப்போன முத்தன் மனைவி பற்றியும் அளவாகச் சொல்லி சொல்லாமல் விட்டதை  வாசகர்களை ஆசிரியர் உணர வைக்கிறார்.

இந்நாவல் முழுவதும் வெயிலும்  ஒரு பாத்திரமாகத் தோன்றி நாவலின் உணர்வோட்டத்தை கவித்துவமாக நகர்த்துகிறது. ரகீம் பாய், பாத்திமா பாத்திரங்கள் எதார்த்தம் பிசகாமல் படைக்கப்பட்டிருக்கிறது. இந்நாவலில் விவாதிக்கப்படும் மனித வாழ்க்கைப்பாடுகள் வாசகனுக்குள் ஒரு நிறைவை பதிக்கிறது. இன்னும் இதுபோல பல நல்ல  நாவல்களை ஆசிரியரிடமிருந்து எதிர்நோக்க வாசகர்களை எதிர்பார்க்கத்   தூண்டுகிறது.   நல்ல  நாவலைத்  தந்த வரத.ராஜமாணிக்கத்தையும், அச்சும், அமைப்பும், கச்சிதமான இணைந்த  இதமான வாசிப்புக்குரிய புத்தகத்தை வெளியிட்ட பாரதி புத்தகாலய நிர்வாகிகளையும்  வாழ்த்தத் தோன்றுகிறது.

நூல்: அதிதி நாவல்
ஆசிரியர்: வரத.ராஜமாணிக்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 192
விலை: 180
புத்தகம் வாங்க கமெண்டில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பெண்  – ஆங்கிலத்தில்: ஜமைக்கா கின்கேய்ட் (தமிழில்: கார்குழலி) 

மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பெண்  – ஆங்கிலத்தில்: ஜமைக்கா கின்கேய்ட் (தமிழில்: கார்குழலி) 

வெள்ளைத் துணிகளை திங்களன்று துவைத்துக் கல்லின்மீது குவியலாக வை; வண்ணத் துணிகளை செவ்வாயன்று துவைத்துக் கொடியில் காயப்போடு; உச்சி வெயிலில் வெறும் தலையோடு நடக்காதே; மஞ்சள் பூசணி வறுவலை நன்றாகக் கொதிக்கும் இனிப்பு எண்ணெய்யில் சமை; உன்னுடைய சின்னத் துணிகளை கழற்றியவுடன்…
பெண் மைய நோக்கில் முற்போக்கு நாடக அரங்கம் | பேரா அ. மங்கை | A. Mangai

பெண் மைய நோக்கில் முற்போக்கு நாடக அரங்கம் | பேரா அ. மங்கை | A. Mangai

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…