சக்தியின் கவிதைகள்
மழையில் நனையாத மனம்….!!!
*************************************
நேற்று இரவு
பொழிந்த மழையில்
நனையாமல்
இருக்கின்றன
குழந்தையின் கனவுகள்
உதிர் கூரையின்
எரவாணத்தின் கீழே
மண் சுவரில்
மழையை வரைந்து
கொண்டிருக்கும்
சிறுவனின் கையில்
முளைக்க ஆரம்பிக்கிறது ஒரு துளிர் நீர்
வீடெங்கும்
நிரம்பி வழியும்
குழந்தையின்
சிரிப்பொலியில் மறைந்து கொள்கிறது நேற்று இரவு பெய்த
அடர்மழையின் சத்தம்,
தெருவெங்கும்
நாய்கள் குரைக்கும்
சத்தம் விண்ணைக் கிழிக்கிறது
கனவின் வாசலில்
வந்து கைகட்டி நிற்கிறார் அப்பா,
முந்தானை
முடிச்சை அவிழ்த்து
இரண்டு ரூபாய் நாணயத்தை
எடுத்து மகனின்
கைகளில் கொடுக்கும்
பொழுதெல்லாம்
அம்மாவின் கைகளில்
பூக்க ஆரம்பிக்கிறது
அன்பின் வேரில் பூக்கும் பூ….!!!!!
நெருப்புத் திருவிழா…..!!!!
********************************
விளக்குகள்
இல்லாத தேசத்தில்
விறகுகளாகின்றன
உழைக்கும் மக்களின் உடல்கள்,
கோவிலின் உள்ளே
கற்பூரத்தைப் பற்ற வைத்தவர்களின் ஆட்சியில் எரிகிறது
நெருப்புத் திருவிழா மயானத்தில்,
கண்களைக் கட்டிக்கொண்டு
மாயாஜாலம் காட்டும்
கண்கட்டு வித்தைக்காரன்
விற்றுத் தீர்த்து விட்டான் தேசத்தை,
மீதி தேசத்தைத்
தீ மூட்டிக் கொளுத்துகிறான்
செங்கோலைக் கையில் கொண்டு,
அரக்கர்களின்
கையில் தீப்பெட்டிகள்,
மூச்சுத் திணறுகிறது ஒரு தேசம்,
கையைத் தட்டுதல், விளக்கை ஏற்றுதல்,
மணி அடித்தல், நடைபெறுகிறது
பிணங்களை அடிக்கிய
அரச மைதானத்தில்,
வெளிச்சம்
இல்லா தேசத்திற்கு
விளக்குகளாக ஒளி வீசியபடி
காற்றில் பரவுகின்றன
மரணங்களின் ஓலை சத்தங்கள்…..!!!!!
ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,