Tamil Film Maker Gnana Rajasekaran's Aainthu Unarvugal Movie Release - Associate Director S. Sampathkumar. ஞானராஜசேகரனின் ஐந்து உணர்வுகள்

திரைக்கு வரும் ஞானராஜசேகரனின் ஐந்து உணர்வுகள் – எஸ். சம்பத்குமார்



விருதுகள் வென்ற திரைப்படங்களான ‘மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன்’ ஆகியவற்றை உருவாக்கிய இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‛ஐந்து உணர்வுகள்’ என்கிற அந்தாலஜி படம் ஒன்றை தயாரித்து இயக்கி முடித்துள்ளார். மறைந்த பெண் எழுத்தாளரான *ஆர்.சூடாமணி* எழுதியுள்ள சிறுகதைகளிலிருந்து ஐந்து கதைகளை தேர்வு செய்து அவற்றுக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஐந்து உணர்வுகள் வெளியாகிறது.

ஆர்.சூடாமணி அவர்கள் வெகுஜன வாசகர் மத்தியில் பெரிதாக அறிப்படாதவராக இருப்பினும், அறிவார்ந்த இலக்கியத் தளத்தில் இன்றும் நன்கு அறியபடுகிறவர். சாதிக்கப் பிறந்த அனைவரும் தங்கள் குறைபாடுகளை வல்லமையாக்கி காட்டும் மனோதிடம் கொள்ளல் வேண்டும் என்று நிரூபித்து வாழ்ந்து மறைந்த சாதனைப்பெண்மணி சூடாமணி.

மனித மனங்களை ஆய்ந்தறிந்து உணர்வுகளின் உள்ஆழம் வரை சென்று அவற்றின் அழகினை அப்பட்டமாய் மிகையின்றி பூசிமழுப்பாமல் தனது கதைகளில் பாத்திரங்களாய் அவர் உலவ விட்டிருப்பது பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. குறிப்பாக பெண்களையும், பெண்ணியத்தையும், ஆண், பெண் உறவுகளையும் மற்றவர்கள் சொல்லத்தயங்கும் அவர் தம் உணர்வுகளை மிகவும் துணிவுடன் சூடாமணி சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பே கையாண்டிருப்பது அவரின் சிறப்பு. காலம் பல கடந்து இன்றும் அவை உயிர்ப்புடையதாகவும், விவாதப்பொருளாகவும் இருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.

Tamil Film Maker Gnana Rajasekaran's Aainthu Unarvugal Movie Release - Associate Director S. Sampathkumar. ஞானராஜசேகரனின் ஐந்து உணர்வுகள்

இயக்குநர் தேர்ந்தெடுத்த ஐந்து கதைகள்:

1. விடலைப் பருவத்தில் பொதுவாகவே பெண்களின் மீது ஏற்படும் ஈர்ப்பையும் அது உண்டாக்கும் பரபரப்பையும் பெற்றோர்கள் எவ்விதம் இலகுவாக கையாள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்ட கதை ’இரண்டின் இடையில்’

2. புதிதாக திருமணமான மகன், தன் நடுத்தர வயது விதவைத் தாயின் முன்பு தன் மனைவியுடன் இங்கிதம் எதுவுமின்றி சரசமாடுவதால் ஏற்படுகிற தாக்கத்தை சொல்லும் கதை ‘அம்மா பிடிவாதக்காரி’

3. கேட்ட வரதட்சனையை தர இயலாததால், தன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட பெண்ணை 15 வருடங்களுக்குப் பின் தற்செயலாக சந்திக்கிறான் ஒருவன். இன்று மனைவியை இழந்து நிற்கும் அவன், அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை அறிந்து, பிராயச்சித்தமாக இப்பொழுது அவளை மணக்க விரும்புகிறான். அதற்கு அவள் ஆற்றும் எதிர்வினை அவனை நிலைகுலைய செய்கிறது. திருமணங்கள் பற்றியும் பாலியல் உறவுகள் பற்றியும் ஒரு புதிய தீர்க்கமான பரிமாணத்தை விளக்கும் கதையே ‘பதில் பிறகு வரும்’

4. குழந்தை, தங்களுடைய தாம்பத்ய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று தீர்மானித்து மனைவியின் பெற்றோர்களிடமே குழந்ததையை வாழ விட்டு விடுகிற தம்பதி. பெற்றோரின் பாசத்துக்காக ஏங்கும் குழந்தை. தாய்க்கும் மேலாக பாசத்தை கொட்டி வளர்க்கும் பாட்டி. குழந்தை பெரிய பெண்ணாக ஆனவுடன் தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பும் தாய். தாய்க்கும் பாட்டியின் பாசத்திற்கும் இடையில் திணறும் பெரியவளான குழந்தை, உள்ளம் தொட்டு பேசுவதே ‘தனிமைத்தளிர்’

5. பாலியல் பலாத்காரத்திற்கு பலியான பெண்ணை பெற்றோரே வெறுக்கும் சூழ்நிலையில் எப்படி அந்தப்பெண் தனி மனுஷியாக நின்று சமூகத்தை எதிர்கொள்கிறாள், குற்றவாளியை சமூகத்தின் முன்பு அடையாளம் காட்டுகிறாள் என்பதைக் கூறுகிற கதை தான் ‘களங்கம் இல்லை’

இவை அனைத்திலும் சூடாமணி வடித்த கதாபாத்திரங்கள் நம்பிக்கையை விதைப்பவைகளாய் இருக்கின்றன.

Tamil Film Maker Gnana Rajasekaran's Aainthu Unarvugal Movie Release - Associate Director S. Sampathkumar. ஞானராஜசேகரனின் ஐந்து உணர்வுகள்
Gnana Rajasekaran (இயக்குநர் ஞான ராஜசேகரன்)

கொரோனா முதல் அலைக்குப் பிறகு இதன் படபிடிப்பை தொடங்க இயக்குநர் முடிவு செய்த போது படபிடிப்பை நடத்த மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாக படபிடிப்புக் குழுவினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் படபிடிப்புத் தளத்திலே பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொருவரின் வேலைப்பளு பலமடங்கு கூடியது. அனைவரும் அவரவர் பணிகளோடு மற்றவர்களின் வேலைகளையும் பங்கிட்டு செய்யும் நிலை ஏற்பட்டது. Multi skilling என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போனதால், அது ஒரு நல்ல வாய்ப்பாகவே அமைந்தது. கொரோனா கட்டுப்பாடுகளை இம்மியளவு கூட பிசகாமல் கண்டிப்புடன் கடைபிடித்ததால் படக்குழுவினர் யாரையுமே கொரோனா தொற்று தாக்காமல் வெற்றிகரமாக படபிடிப்பை முடித்தோம் என்பதும் ஒரு சிறப்பம்சம்.

இந்த சூழ்நிலையில் நடிகர்களை தேர்வு செய்வதிலும் சிரமம் இருந்தது. ஏனென்றால் இதன் ஒவ்வொரு கதைக்கும் அனுபவமிக்க சிறந்த நடிகர்கள் தேவை பட்டார்கள். சூடாமணி அவர்கள் வடித்த பாத்திரங்கள் மிகவும் கனமானவை. அதை தோளில் சுமப்பதென்பது யாருக்குமே சவாலாகத் தான் இருக்கும்.

ஆடிஷன் செய்து நடிகர்களை தேர்வு செய்தோம். தேசிய விருதுகள் பல வென்ற இயக்குநர் ஞான ராஜசேகரனின் முந்தைய படைப்புகளினால் ஈர்க்கப்பட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் அவரின் இயக்கத்தில் நடிப்பதை பெருமையாட எண்ணி மனம் உவந்து நடிக்க முன் வந்தனர். எல்லோருமே முன் அனுபவமிக்க திறமையானவர்களாக இருந்தும், நாங்கள் நடத்திய ரிகர்சல்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். இது பாத்திரங்களின் முழுத் தன்மையையும் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாக இருந்ததோடல்லாமல், படப்பிடிப்புத் தளத்தில் எங்களின் வேலையை இளகுவாக்கியது.

நடிகர்கள்:

இளம்பிராயத்திலிருந்து வளரிளமைப் பருவம் எய்தும் மகன், இனம் தெரியாமல் இடறிவிழும் போது அரவணைத்து அவனை ஆர்ப்பாட்டமின்றி வாழ்வின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் தாயாக ஷைலஜா செட்லூர்அவர்கள் ‘இரண்டின் இடையில்’ வாழ்ந்திருக்கிறார்.

புதிதாகத் திருமணமான தன் மகனின் இங்கிதமற்ற நடத்தையால் ஏற்படும் மனச்சிக்கல்களை மிக கவனமாகக் கையாளும் கண்ணியம் மிக்க விதவைத்தாயாக ஶ்ரீரஞ்சனி ‘அம்மா பிடிவதக்காரி’யில் மிளிர்கிறார்.

முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனக்கென்று ஓர் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்கிற கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார், ‘பதில் பிறகு வரும்’ கதையில் சுஜிதா.

குழந்தையில் இருந்து பெரிய பெண்ணாக ஆகும் வரை தோளிலும் மடியிலும் பேத்தியைப் பேணி வளர்க்கும் பாசமிகு பாட்டியாக சத்யப்பிரியா ‘தனிமைத்தளிர்’ இல் வாழ்கிறார்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் யாராயினும் அவர்கள் களங்கமற்றவரே என்பதை மிடுக்குடன் சாற்றும் புரட்சிப்பெண்ணாக ஷ்ரேயா அஞ்சன் ‘களங்கம் இல்லை’யில் வலம் வருகிறார்.

Tamil Film Maker Gnana Rajasekaran's Aainthu Unarvugal Movie Release - Associate Director S. Sampathkumar. ஞானராஜசேகரனின் ஐந்து உணர்வுகள்

இவர்களுக்கு துணையாக சாந்தி வில்லியம்ஸ், சிட்டிசன் சிவக்குமார், சஹானா, மணிபாரதி , சோஜின், அந்நூர், பேபி நிஷா, அசோக்குமார், நயனா சாய் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. கதைகளுக்கு உகந்த ஒளியை மட்டும் கூட்டி, யதார்த்ததிற்கு மிக அருகில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

தேசிய விருதுகள் பல வென்ற எடிட்டர் மற்றும் இயக்குநர் பி.லெனின்அவர்களின் எடிட்டிங்கால் படம் நல்ல ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.

விருதுகள் பெற்ற திருமதி சகுந்தலா ராஜசேகரனின் ஆடை வடிவமைப்பும் காஞ்சி இளங்கோவனின் கலை இயக்கமும் நம்மை என்பதுகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

தேனிசைத் தென்றலின் இளவல் ஶ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளர். இது வரை வெகுவாக feel good commercial படங்களுக்கு இசையமைத்த ஶ்ரீகாந்த் தேவா இப்படி ஒரு மெல்லிய உணர்வுகள் நிறைந்த படத்திற்கு சிறப்பாக இசை அமைத்திருப்பது இதுவே முதல் முறை எனலாம். அவரின் பாடல்களும் பின்னனி இசையும் அவருடைய வெகுநாள் உள்ளக்கிடக்கையை பூர்த்தி செய்வது போல் இருக்கிறது. அவருக்குள் இருக்கும் இசையின் மற்றொரு பரிமாணத்தை இதில் காணமுடிகிறது.

ஒவ்வொரு படத்தின் நீளத்தையும் அந்த கதைகளே தீர்மானிக்கும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சூடாமணி கதைகளின்
ஆன்மா சிதைந்து விடாமல் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார், இலக்கியங்களை நல்ல திரைப்படமாக உருவாக்கும் வல்லமை பெற்ற இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்கள்.

பெண்ணிய அமைப்புகள், முற்போக்கு கலை இலக்கிய சங்கங்கள் ஐந்து உணர்வுகள் படத்தை திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

– எஸ்.சம்பத்குமார்,
அசோசியேட் டைரக்டர்.

Full Metal Jacket: போர் எனும் அபத்தம்..! – ராம் முரளி

Full Metal Jacket: போர் எனும் அபத்தம்..! – ராம் முரளி

  பைசாசத்தன்மையிலான தனது தி ஷைனிங் திரைப்படத்தை நிறைவு செய்ததற்கு பிறகு, 1980ம் வருடத்தில் அடுத்ததாக ஒரு போர் மையத் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஸ்டான்லி குப்ரிக். அதற்கு அவரது நண்பர், “ஆனால் நீங்கள் உங்களது திரையுலக…
சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: The first Teacher (1965) (Russian) – கார்த்திகேயன்

சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: The first Teacher (1965) (Russian) – கார்த்திகேயன்

The first Teacher (1965) Russian புகழ் பெற்ற இரஷ்ய இயக்குனரான Andrei Konchalovsky ன் முதல் திரைப்படம். தமிழக கல்வி சூழலில் பலருக்கும் ஆதர்சமாக இருக்கக்கூடிய "முதல் ஆசிரியர்" எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.இதன் ஆசிரியர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்.இந்நாவலைப்…
சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: The Stoning of Soraya M. (English & Persian) (2008) – கார்த்திகேயன்

சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: The Stoning of Soraya M. (English & Persian) (2008) – கார்த்திகேயன்

The Stoning of Soraya M. 2008 (English & Persian) ஈரானிய மலைக் கிராமம் ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். பிரெஞ்ச் - ஈரானிய பத்திரிக்கையாளர் Freidounne Sahebjam 1990ல் எழுதிய La Femme…
சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: To Live (1994) – கார்த்திகேயன்

சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: To Live (1994) – கார்த்திகேயன்

To Live (1994) Director : Zhang Yimou சீன எழுத்தாளர் Yu Hua வின் புகழ் பெற்ற நாவலான To Live யைத் தழுவி 1994ல் எடுக்கப்பட்ட திரைப்படம்.இதற்கு முன்னதாகவே இவரது Raise the red lantern படத்தின் வாயிலாக…
சினிமா ஓர் அனுபவத்தொடர் 1: டெர்சு உசாலா Dersu Uzala (1975) – கார்த்திகேயன்

சினிமா ஓர் அனுபவத்தொடர் 1: டெர்சு உசாலா Dersu Uzala (1975) – கார்த்திகேயன்

டெர்சு உசாலா Dersu Uzala (1975) சினிமா உலகின் மாமேதை எனப் பலராலும் வணங்கிக் கொண்டாடப்படுகின்ற *அகிரா குரோசோவா* இயக்கிய படம். குரோசோவா பற்றி பல வருடங்களுக்கு முன்னரே பலரது மூலமாக கேள்விப்பட்டிருந்தாலும் கூட சில படங்களை பார்க்க முயற்சித்து அப்போதைய …