“நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!”கூட்டு வேட்டையில் மீன்களைத் தெறிக்க விடும் ஆக்டோபஸ் - octopus fish hunting groups - Science - https://bookday.in/

“நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!” கூட்டு வேட்டையில் மீன்களைத் தெறிக்க விடும் ஆக்டோபஸ்

“நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!” கூட்டு வேட்டையில் மீன்களைத் தெறிக்க விடும் ஆக்டோபஸ் புரிதலைப் புதுப்புக்கும் புதிய ஆய்வுகள் - 7 தனித்தே வாழும் ஆக்டோபஸ்கள் உண்மையில் பலவகை மீன்களோடு சேர்ந்து வேட்டையாடுகின்றன. மேலும் அவை அடங்காத தனது வேட்டைத் துணைகளை ஒரு…
ஹைக்கூ - ஜனநேசன் haiku - jananesan

ஹைக்கூ – ஜனநேசன்

குளமும் இல்லை  தவளையும்  இல்லை  தாவி  அலைவுறும்  மனது.              +++ நீ வந்ததும் எழுச்சி  மறைவதும்  நெகிழ்ச்சி  சூரியனே ...              +++ மொட்டைமாடியில்  பறக்கும்…
கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




நதியின் மரணம்
*********************

அமைதியாக சலசலத்தோடும் நதியில்
விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும்
விதைகளையும் தூவினால் நாளாகும்போது
இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன.

ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது
கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே
அங்குமிங்குமாய் நகர்ந்து விளையாடி
அழகாகும் அதிசயம் அரங்கேற

ஒரேயொரு நெகிழியை தூரத்திலிருந்து
தூக்கியெறிவதை தொடங்கிவைத்த ஒருவனால்
பின்னொரு நாளில்
நதியே ஸ்தம்பித்துப் போகுமென
அறியாமல் வீசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
வீணாகிப் போனவையெல்லாம்

கட்டடங்களின் உயர வித்தியாசமெதுவுமின்றி
குப்பிகளிலிருந்து உடைத்தொழுகும்
சயனைடு திரவங்களாய்
இரகசியக்குழாய்களின் வழியே
சாக்கடைநீராகி யாருடைய சம்மதத்திற்கும்
நிற்காமல் நதியின் மொத்த ஆழத்திலும்
ஊடுருவி
நச்சாய் பரவிக்கொல்கிறது
நதியை
நதியை நம்பியிருந்த உயிர்களை

மீன்களும் மரங்களும் அவற்றை நட்ட மனிதரும்
மெல்ல மெல்ல மரணிப்பதைக் கண்டு
மண்ணில் இனியும் ஒடிஒளிய வேறெங்கும்
இடமில்லையென்று
வறண்டே மரணிக்கிறது நதியும்

மழை…..

தூறல்களாய் விழும்போதெல்லாம்
கரையோர மரங்களின்
வேருக்கும் தெரியாமல்
கண்ணீர்சிந்தி வறண்டநதியின் கால்தடமும்
அழுகிறது
மழைத்துளியைக் கடன்வாங்கி

நீச்சல் பழகிய நீரோடையில் நீளத்துக்கும்
தோண்டியெடுத்த மணல் குழிகளிலிருந்து
மீளத் தெரியாமல்
அடுத்தத் தலைமுறையும் விழுகிறது தாகத்தில்

அயிரைகள் துள்ளிவிளையாடிய நதியில்
அழுக்குமூட்டைகளும் நெகிழிக்
காகிதங்களுமே

காற்றின் போக்கில்
நகர்ந்து நதியை நாசமாக்க

கரைகளையும் விட்டுவைக்க மனமில்லா
ஆக்கிரமிப்புகள்
வழிமறித்த பாவங்களால் விடாதுகொட்டும்
அடைமழை நாளில் விழும்
துளிகளொவ்வொன்றையும் எதிர்பார்த்து
காத்திருக்கிறது…

ஊரோரம் ஓடிய நதியும்
ஊரைவிட்டு வெளியேற…

–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

மழையின் கண்ணீர்
***********************
பனை ஓலையில் போர்த்திய மாட்டுச்சாளையின்
ஒருமுனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்து ருசிக்கும் கரையான்களும்
கூரைக்குள் ரகசியமாய்க் குடித்தனமிருந்து தொல்லைதரும் எலிகளும்
கூரைவேய்ந்தவனின்
நிம்மதியைக் கெடுக்க

துருப்படிந்த கடப்பாறையும்
உழுதவயலிலிருந்த மண்ணை ஒட்டிவந்த கலப்பையும்
அதன் உச்சியில் மாட்டுவாசத்தை பூசிக்கிடக்கும் நுகத்தடியும்
ஒன்றுக்கொன்று அவரவர் கதையை பேசிக்கொள்ள

உழுதே தேய்ந்த உழவனைப் பற்றியெதுவும் பேசாததால்
உடைசல்களில் விழும் மழைத்துளிகள் கரையானையும் கலப்பையையும்
கண்ணீரால் கழுவி சிற்றாறாய் ஓடுகிறது மூத்திர வாய்க்காலில்….

ப(ரு)சித்த மாடு
******************
வறண்ட பூமியும் சுவாசித்திட
பழமாய்ப் பிளந்து கிடக்கும் மண்ணில்
பச்சையங்களை இழந்து நிற்கும்
மரங்களின் நிழல்களில் இளைப்பாறும்
பசுவொன்று சுற்றும் முற்றும் பார்வைகளால்
கொட்டகையில் பசியோடிருக்கும் பச்சிளங்கன்றின்
பசிபோக்கும் உலர்ந்த இலைகளைத் தேடியதில்

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காற்றின் வேகத்தில் வீசும் மண்புழுதியைத்தவிர எதுவுமேயில்லாமல்
முடிச்சினை அவிழ்த்து பங்காளியின் பயிரினில் மேய்ந்ததால்
மொட்டைப்பனையில் கட்டிய பசுவுக்குத் தண்டனை
சமரச உடன்பாட்டில் அபராதம் செலுத்திடும் முதலாளி வரும்வரை….

–கோவை ஆனந்தன்
குமாரபாளையம்
கிணத்துக்கடவு
919003677002

நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ”வெளிமனிதன்” – பாவண்ணன்

நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ”வெளிமனிதன்” – பாவண்ணன்



பெரிய மீனும் சின்ன மீனும்
பாவண்ணன்

ஒரு நாட்டுப்புறக்கதை. ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய மீன் இருந்தது. அதற்கு உணவு தேவைப்படும்போதெல்லாம், தன்னைச் சுற்றி நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் சின்ன மீன்களை விழுங்கியது. பெரிய மீனைக் கண்டாலே சின்ன மீன்கள் அஞ்சத் தொடங்கிவிட்டன. அதன் வருகையை உணர்ந்ததுமே எல்லா மீன்களும் வேறு திசையை நோக்கி நீந்தித் தப்பிக்க முயற்சி செய்தன. ஆனால் பெரிய மீனின் வேகத்துக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இப்படியாக சின்ன மீன் கூட்டத்தில் ஒரு பகுதி தொடர்ந்து பெரிய மீனுக்கு இரையாகி வந்தது.

தன் இயலாமையை நினைத்தும் பெரிய மீனின் கருணையின்மையை நினைத்தும் வருத்தத்தில் மூழ்கியிருப்பதைத் தவிர, சின்னமீன் கூட்டத்தால் எவ்விதமான தீர்வையும் எட்ட முடியவில்லை. ஒருநாள் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் வீசப்பட்ட தூண்டிலுக்கு பெரிய மீன் இரையாகி விட்டது. நல்ல வேளை, பிழைத்தோம் என சின்ன மீன்கள் நிம்மதியாக நீந்திக் களித்தன. பிழைத்த சின்ன மீன்கள் ஒரு கட்டத்தில் வளர்ந்து பெரிய மீன்களாகின. அவற்றுக்குப் பசி எடுத்தது. நாலா பக்கமும் அலைந்து திரிந்து தம்மைச் சுற்றி நீந்தித் திரியும் சின்ன மீன்களை விழுங்கத் தொடங்கின.

சின்ன மீனை பெரிய மீன் விழுங்குவது இயற்கையான பண்பு என இக்கதை சுட்டுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அதுவல்ல உண்மை. கண்ணுக்கு முன்னால் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் தன்னலத்தையே அந்தப் பண்பு அடையாளப்படுத்துகிறது. மீன் இனத்தில் காணக்கூடிய இப்பண்பை, நாம் மனிதர்களிடத்திலும் பார்க்கமுடியும். அன்பு, பாசம், இரக்கம், நட்பு, பணிவு, கடமை, மதிப்பு என வெவ்வேறு பெயர்களில் தனக்கு நன்மை கிட்டும் வகையில் இன்னொருவரை வளைத்து, இழுத்து, நெருக்கி காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் மனிதர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றனர். சுரண்டுவதை முன்னிட்டு எவ்விதமான குற்ற உணர்வும் இல்லாதவர்களாகவே அவர்கள் வாழ்கிறார்கள். சுரண்டுவதை தன் உரிமையென்றும் இயல்பென்றும் நினைக்கும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

விட்டல்ராவ் எழுதிய வெளிமனிதன் என்னும் தொகுப்பில் உள்ள நான்கு குறுநாவல்களிலும் இத்தகு மனிதர்களின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை எழுதப்பட்டு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்திருந்தபோதும், இக்கதைகளில் காணப்படும் எந்தச் சித்திரமும் இன்றுவரை மாறாமல் அப்படியே நீடிக்கிறது. மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று குத்தலாக ஓரிடத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனின் சல்லித்தனம் பெருகியிருக்கிறதே தவிர, குறையவோ மறையவோ இல்லை என்பது சங்கடமான உண்மை. விட்டல்ராவின் குறுநாவல்கள் அந்த உண்மையின்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.

வெளிமனிதன் குறுநாவலில் மூன்று முக்கியமான பாத்திரங்களை நம் முன்னால் நிறுத்தியிருக்கிறார் விட்டல்ராவ். ஒருவர் மானிஷி டே. கல்வித்துறைசார் ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் போன்றவற்றை தயாரித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். இன்னொருவர் ரங்கராஜ். ஓவியர். இளமையில் ஆதரவின்றி நின்ற ஒரு தருணத்தில் அடைக்கலம் கொடுத்து குடும்பத்தில் ஒருவனாகவே கருதி காப்பாற்றி வரும் செஞ்சோற்றுக்கடனுக்காக மானிஷி டேயின் எல்லாச் செயல்களுக்கும் பின்னால் தூணாக நின்று பணியாற்றுபவர். மூன்றாவது நபர் ரங்கராஜின் அப்பா. சிறுவயதிலேயே அவனையும் அவன் தாயையும் கைவிட்டு பெங்களூரைவிட்டு சென்னைக்கு இடமாற்றல் வாங்கிக்கொண்டு வந்து இன்னொரு பெண்ணை மணந்து வாழ்க்கை நடத்துபவர். மகன் வசிக்கும் இடத்தை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து அடிக்கடி பண உதவிக்காக கை நீட்டுபவர். ஒருவர் செஞ்சோற்றுக்கடனுக்காக இன்னொரு மனிதனை பயன்படுத்திக்கொள்வதை தன் உரிமையாக நினைக்கிறார். இன்னொருவர் பெற்ற உரிமைக்காக, மற்றொருவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுகிறார். அன்பும் கசப்பும் வெறுப்பும் படிந்த இந்த உறவுகளின் சிற்சில பரிமாணங்களை இந்தக் குறுநாவலில் சித்தரிக்கிறார் விட்டல்ராவ்.

ரங்கராஜ் என்னும் சிறுவனுக்கு இரக்கத்தின் காரணமாக அடைக்கலம் தந்தவர் டே. அத்தகு நல்ல குணம் என்றென்றும் வணக்கத்துக்குரியது. அதில் ஐயமே இல்லை. குடும்பத்தில் ஒருவன் என்னும் இனிப்பான அடைமொழி வழியாக உணவும் உறைவிடமும் மட்டும் கொடுத்துவிட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக அவனுக்கு ஊதியமே தராமல் அவன் உழைப்பில் வாழும் டே போன்ற மனிதர்களை வரையறுப்பது மிகவும் கடினம். வாழ்க்கை பற்றிய அவர்களுடைய கணக்கை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. டே மீது ரங்கராஜின் மனத்தில் கசப்பு பெருகிக்கொண்டே போகிறது. ஆனால் அதை வெளிப்படுத்த இயலாதபடி ஏதோ ஒரு நாகரிக உணர்வு அவனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அது வெடித்துவிடும் முன்பாக வெளியேறிவிட வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தருணத்தில் டேயின் குடும்பம் மகள் தொடர்பாக ஒரு சிக்கலில் சிக்கிகொண்டபோது, அச்சிக்கலிலிருந்து மீண்டு வர ரங்கராஜ் உள்ளார்ந்த வேகத்துடன் உதவி செய்கிறான்.

இன்னொரு பக்கத்தில் பெற்ற தந்தையின் சுரண்டல். தன்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே தன் இருப்பிடத்துக்கு மீண்டும் மீண்டும் வந்து அவமானத்தைத் தேடி வைத்துவிட்டுப் போகும் அவரை வெறுத்து ஒதுக்கினாலும் எதிர்பாராத அவருடைய மரணத்துக்குப் பிறகு அந்தக் குடும்பத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் அவன் செய்தாக வேண்டிய நெருக்கடி உருவாகிறது. அவை அனைத்தையும் எவ்விதமான பற்றுணர்வுக்கும் இடம் கொடாமல் நிறைவேற்றுகிறான்.

எல்லாத் திசைகளிலும் அவன் ஒருவித சுரண்டலுக்கு இலக்கானவன். வாழ்நாள் முழுதும் பெரிய மீன்களால் விழுங்கப்படும் சின்ன மீனாகவே வாழ்ந்துவந்தவன். ஆனால் தான் பெற்ற கசப்பை அவன் யாருக்கும் திருப்பியளிப்பதில்லை. மாறாக, அவர்கள் உடைந்து விழும் தருணத்தில் துன்பம் துடைத்தூன்றும் தூணாக நிற்கிறான். ஒருவன் வீட்டு மனிதனாக இருப்பதிலோ, வெளிமனிதனாக இருப்பதிலோ எவ்விதமான பெருமையும் இல்லை. மாறாக மற்றவர்களைச் சுரண்டாத, மற்றவர்களுக்குத் தூணாக விளங்கும் மனிதனாக வாழ்வதுதான் முக்கியம். குறுநாவலுக்குள் விட்டல்ராவ் எந்த இடத்திலும் அந்த எண்ணத்தை முன்வைக்கவில்லை. மாறாக, ஒரு வாசகன் தன் வாசிப்பின் வழியாக அதைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கதையின் கட்டமைப்பு அமைந்திருக்கிறது.

புளி இத்தொகுப்பில் உள்ள இன்னொரு முக்கியமான குறுநாவல். வெவ்வேறு ரகமாக பிரிக்கப்பட்ட புளியை கொட்டையை நீக்கி, நார்ப்பகுதியை அகற்றும் வேலையில் நாள்முழுக்க ஈடுபட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். அந்தத் தொழிற்கூடம்தான் கதையின் களம். அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல். சிலர் அதை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் அதை மனத்துக்குள்ளேயே அடக்கிவைத்துக்கொள்கிறார்கள். மற்ற தொழிற்கூடங்களில் அளிக்கும் கூலியைவிட குறைவான கூலியைத்தான் கொடுக்கிறான் முதலாளி. அந்த முதலாளியை ஏமாற்றி மாலை வேளையில் கூடத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் செல்லும் வழியில் கூடத்திலிருந்து திருட்டுத்தனமாக உருட்டி எடுத்துவரும் புளிப்பந்தை பலசரக்குக்கடையில் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் பெண்கள். ஒவ்வொரு மீனுமே தன்னை பெரிய மீனாகக் கருதி, அடுத்த மீனை விழுங்கப் பார்க்கிறது.

சொந்த மகளின் திருமணத்தை நடத்த தேவைப்படும் பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக மகள் போல வளர்த்த இன்னொரு இளம்பெண்ணை முதலாளி வீட்டுக்கு பணிப்பெண்ணாக நெஞ்சத்தை கல்லாக்கிக்கொண்டு அனுப்பிவைக்கிறாள் ஒரு தாய். ஒவ்வொருவரும் தன் சொந்த நலத்தையே முக்கியமாக நினைக்கிறார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் கீழே இறங்கிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கும் குற்ற உணர்ச்சியில்லை. புளி எந்த வடிவத்தில் இருந்தாலும் அதன் சுவையில் மாற்றம் இருப்பதில்லை. மனிதர்களும் எந்தத் தட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தத்தம் எல்லைக்கு உட்பட்ட வகைகளில் சுரண்டுவதற்கு நாணமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இது மிகப்பெரிய துரதிருஷ்டவசமான உண்மை.

மிக அருகில் ஒரு பாலம் சுரண்டலின் இன்னொரு வடிவத்தை முன்வைக்கும் கதை. பெருமழையின் காரணமாக இடிந்துபோன பாலத்தைப் பழுதுபார்த்து புதுசாகக் கட்டியெழுப்ப தொழிலாளர்களை ஓர் ஊரிலிருந்து நகரத்துக்கு அழைத்துவந்து அருகிலேயே இருக்கும் ஒரு மேட்டுப்பகுதியில் குடிவைக்கிறார் ஓர் ஒப்பந்ததாரர். அங்கிருந்து சிறிது தொலைவில் அதே நகரத்தைச் சேர்ந்த குடிசைவாசிகள் வசிக்கும் மற்றொரு பகுதி உள்ளது. அவர்களும் எங்கோ நகரத்துக்குள் வேலை செய்யும் தொழிலாளர்களே. குடிசைவாசிகளில் ஒருவன் வந்து ஒரு தொழிலாளிக்கு பொருளாசை காட்டி மயக்க நினைக்கிறான். சிமெண்ட் மூட்டையை திருட்டுத்தனமாக எடுத்துக் கொடுக்கும்படி கேட்கிறான். கட்டுமானத் தொழிலாளி அதற்கு இசைவதில்லை. நினைத்த அளவுக்கு பால வேலை வேகமாக நடைபெறவில்லை. யாராரோ எங்கெங்கோ பணத்தைச் சுருட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் வேலை நின்றுவிடுகிறது. சிறிது கால இடைவெளியில் மீண்டும் தொடர்கிறது. நிற்பதும் தொடர்வதுமாக பாலவேலை நடப்பதுபோலவே அவர்கள் வாழ்க்கையும் தேக்கமும் அசைவும் கொண்டதாகவே இருக்கிறது. அவர்கள் ஒப்பந்ததாரரால் கைவிடப்படுகிறார்கள். வாழ்க்கையின் நிமித்தமாக உள்ளூர் குடிசைவாசிகள்போல எங்கெங்கோ பொருளியல் தேவைக்காக வழி தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு நட்பாகக் கிடைக்கும் ஒருவன், அக்குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை தன் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறான். நீரின் பெருக்கால் அடிக்கடி இடிந்து விழும் பாலத்தைப்போல அவர்கள் வாழ்வும் சிதைவதும் எழுந்து நிற்பதுமாக அமைந்துவிடுகிறது.

குடும்ப அமைப்புக்குள்ளேயே திகழும் தன்னலப்போக்கை இன்னொருத்தி குறுநாவல் முன்வைத்திருக்கிறது. சொந்த ஊரில் கணவன் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்ற மகனைக்கூட உதறிவிட்டு வெளியேறிவிடுகிறாள் ஒருத்தி. அவள் இறங்கிய இடத்தில் அவளை ஏற்று அடைக்கலம் கொடுக்கிறான் இன்னொருவன். ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பவன் அவன். அவளை இன்னொரு மனைவியாக ஏற்று அவளோடு குடும்பம் நடத்துவதில் அவனுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. அவளுடைய உழைக்கும் வேகமும் அர்ப்பணிப்பும் அவளை பொருளாதார அளவில் சொந்தக் காலில் நிற்க துணையாக இருக்கின்றன. அவளோடு தொடக்கத்தில் மோதும் முதல் மனைவி அவளிடமிருந்து கிட்டும் லாபங்களைக் கணக்கிட்டு அமைதியாகிவிடுகிறாள். ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எதிர்பாராத கணத்தில் அவள் வசிக்கும் தெரு வழியே செல்லும் கட்சி சார்ந்த வாகன ஊர்வலத்தில் பழைய கணவனைப் பார்க்கிறாள் அவள். தன் இருப்பிடம் தெரிந்துவிட்டதே என்று குழம்புகிறாள். சில நாட்களிலேயே அவன் அனுப்பிவைத்த சமாதானத்தூதுவன் அவளைச் சந்தித்து பல வாக்குறுதிகளை அளிக்கிறான். பழைய குடும்ப அமைப்புக்குள் பொருந்தும் வேகம் உந்தித் தள்ள ஒருவரிடமும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக அவனை நாடிச் சென்றுவிடுகிறாள் அவள்.

ஒவ்வொருவரும் இன்னொருவரை, ஒரு பாத்திரத்தைப்போல பயன்படுத்திக்கொள்வதை பல்வேறு காட்சிகள் வழியாக அடுக்கிக்கொண்டே செல்கிறார் விட்டல்ராவ். ஒளவையாரின் மூதுரை உறவைப்பற்றிய ஒரு வரையறையை அளிக்கிறது. அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்ல என்றும் அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு என்றும் கூறுகிறது அந்த வரையறை. ஆனால் எதார்த்தம் வேறொன்றாக இருக்கிறது. ஒருவன் தன் மனைவியோடு சேர்ந்திருப்பதும் அடித்து வதைப்பதும் விரட்டுவதும் தேவையான போது அழைத்துச் சேர்த்துக்கொள்வதும் தன் விருப்பம் சார்ந்த உரிமைகளாக நினைக்கிறான். இன்னொருவனோ அடைக்கலம் தேடி வந்தவளுக்கு அளிக்கும் ஆதரவை ஆட்கொள்ளும் உரிமையாக நினைத்துக்கொள்கிறான். அவளோ, யார் தனக்குரியவர் என்னும் முடிவை அடையமுடியாமல் தடுமாறுகிறாள். அனைவரும் அந்தந்த நிமிடத்தில் தோன்றுவதைச் செய்கிறவர்களாக இருக்கிறார்களே தவிர, வரையறையை ஒட்டி வாழ்கிறவர்கள் யாருமில்லை.

காற்றின் போக்கில் அலையும் காகிதத்துண்டுபோல மனிதவாழ்வு தன்னலத்தின் வேகத்துக்கு ஆட்பட்டு அலைந்துகொண்டே இருக்கிறது. இன்னொருவரை இரையாக்கிக்கொள்வது பற்றிய நாணமற்றதாக கொஞ்சம் கொஞ்சமாக சமூகம் மாறிக்கொண்டே செல்கிறது. விட்டல்ராவின் குறுநாவல்கள் அந்த மாற்றத்தின் பதிவுகளாக மலர்ந்திருக்கின்றன.

– பாவண்ணன்

நம்பிக்கை சிறுகதை – சக்திராணி

நம்பிக்கை சிறுகதை – சக்திராணி




ஞாயிறு விடுமுறை… எங்க வெளிய போகனு தெரியாம… உட்கார்ந்திருந்தான் வெங்கட் பட்டு….

டேய்… என்னடா… பலத்த யோசனை… எனக்கூறிய படியே வந்தான் ராஜ்… தன் நண்பர்களான பிரியன் விஷ்வா… லித்விக்குடன்…

ஒன்னுமில்ல டா…. நம்ம ஊர்ல ஆலமரத்துக்கு அங்கிட்டு இருக்குற… ஆத்துல வித்தியாசமான மீன்களாம் இருப்பதா எங்க சித்தப்பா சொன்னார்…

அதை எப்படியாவது தூண்டில் போட்டு பிடிக்கனும் டா…

ஆசையெல்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆனா நம்ம சின்ன பசங்க டா… எப்படி முடியும்… நம்மகிட்ட தூண்டில் இல்ல…

ஏன் முன்ன போல மீன் பிடிக்க ஒரு துண்டு கூட இல்லடா…

ஆமா… ராஜ் சொல்றது சரிதான் டா… என்றான் விஷ்வா…

என்னடா… எல்லாரும் நெகடிவா பேசுறீங்க… நம்ம நினைச்சா முடியும் டா… அதுக்கு ஐடியா எங்கிட்ட இருக்கு…

என்ன லித்விக் சொல்ற… அது எப்படி முடியும்…
வெங்கட் சித்தப்பா தூண்டில்கள் நிறையா வைச்சிருப்பார்.. அதை எடுத்துட்டு போனா போதும் சிம்பிள்…

கேட்க நல்லாத்தான் இருக்கு… மாட்டிக்கிட்டோம்னா…

அதெல்லாம் ஒன்னும் ஆகாது… என் கூட வா னு…
ரொம்ப அசால்ட்டா கூட்டிட்டு போயி தூண்டில் எடுத்துட்டு வந்தான் லித்விக்.

நால்வரும் நடைபயணமா போயிட்டு இருந்தாங்க… அவங்க தோற்றம் பார்க்க கெத்தா இருந்தது… சாதிக்கப்போறோம்னு கெத்து பார்வையில் தெரிஞ்சது.

ஆனா… வெங்கட் மட்டும் கொஞ்சம் பயந்து பயந்து வந்தான்…

கொஞ்ச தொலைவில் அந்த ஆலமரமும் ஆறும் அடைந்தார்கள்…
ஆர்வத்தில் வேகமாக தூண்டில் விட்டான் லித்விக்…

இருடா… உன் ஆர்வத்துக்கு அளவில்லாமல் இருக்கே…
சும்மா தூண்டில் மட்டும் வைச்சா மீன் தானா வருமோ என்றான் விஷ்வா…

ஐயோ… கடவுளே… மறந்துட்டேனே டா…

அதுக்கு ஏதாவது புழு இருந்தா கொண்டு வா… ஊசில மாட்டி இறக்கிடுவோம்…

ம்ம்… சரியா சொன்ன… இதோ வாரேன்… என்றே கொஞ்ச நேரத்தில் புழுவோடு வந்தான் ராஜ்… விஷ்வா…

தூண்டிலில் புழுவை மாட்டி நீரில் இறக்கினர்…

யாருக்கு முதல்ல மீன் சிக்குதுனு பார்ப்போம்… என்றே ராஜ் கூற எனக்கு… எனக்கு தான்னு கூச்சலிட்டனர்.

இருங்கடா… அமைதியா இருந்தா தான் மீன் மேல் வரும்.

பொறுமையா இருங்க என்றே தூண்டிலும் பார்வையுமாய் காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் தூண்டில் நரம்பு ஆட ஆரம்பித்தது…

டேய்… நான் நினைச்சது போல மீன் மாட்டிருச்சு டா…

ஆர்வமாய் பார்த்தனர்… சொன்னது போல பிடிச்சுட்டானே லித்விக்… செம்ம டா… என்றான் வெங்கட்…

ஆனா என் சிந்தனை முழுக்க சித்தப்பா மேல் தான்டா இருக்கு… என்ன சொல்வாறோனு…

பயப்படாதடா… நாங்க இருக்கோம்ல… கவனமா தூண்டில் போடு என்றான்…

சிறிது நேரத்தில் விஷ்வா கைகளில் இருந்த தூண்டிலிலும் மீன் மாட்டியது…

இவர்கள் எதிர்பார்த்தது போல் லாப்ஸ்டர் கிடைச்சாச்சு…

சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்…

வெங்கட் மட்டும் இறுதிவரை மீன் பிடிக்கலை… இவங்க பிடிச்ச மீன் எல்லாம் அந்த ஊர் பசங்க வந்து பார்த்துட்டு போனது ரொம்ப பெருமையா இருந்தது…

நண்பர்கள் சிரிச்சாலும் தன்னால முழுமையா சிரிக்க முடியாம வெங்கட் மட்டும் ஒதுங்கி நின்றான்.

என்னடா… வெங்கட் சோகமா இருக்க…நீ இல்லனா இந்த மீன் எங்களுக்கு கிடைச்சிருக்காது… தூண்டில் கொடுத்த உனக்கு தான் எல்லா மீன்களும்னு அவன் கையில் எல்லாத்தையும் கொடுத்தனர்…

சிந்தனைக்கும்… செயலுக்கும் நூலளவு தான் வித்தியாசம்… செயல்பட ஆரம்பிச்ச அப்புறம் இடையூறான சிந்தனையை தூக்கி போடனும் னு சித்தப்பா யார்கிட்டயோ கைபேசில பேசிக்கிட்டு இருந்தப்போ…

மீனும்… தூண்டிலுமாய் அவர் முன்னாடி இவர்கள் நின்று புன்னகைத்தனர்.

– சக்திராணி

ஒரு மீனின் பிரசவம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

ஒரு மீனின் பிரசவம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா




கோடை முடியும் தருவாயில்… ஆடிமழை தேடிவரும் …சற்றே கடினமான காலக்கட்டம் அது. “சின்னான்” தன்.. தூண்டில், வலை சகிதம்.. மீன் பிடிக்க ஏரிக்கு புறப்பட எத்தனிக்க, மனைவி கருப்பி, “மூணு நாளா குடும்பமே பட்டினி… நீ மீன் புட்ச்சி விக்காபோனாலும் போட்டும்.. வீட்டுக்காவது ஒண்ணு ரெண்டு மீன புடிச்சிட்டு வா.. அத துண்ணாவது உசுரு வாழலாம்..கூறு கெட்ட மனுசன் !இவன நம்பி 3 புள்ள பெத்த என்னிய ஜோட்டால அடிக்கணும்” என கடைசி வார்த்தைகளைச் சற்றே அடக்கி உச்சரித்தாலும் அது அவன் காதில் சுத்தமாக ஒலித்து ரீங்காரம் செய்தது!

இதெல்லாம் அவனுக்கு, பழகிப்போன.. அண்ணாட வசவுகள்தான் என்றாலும.. இன்று ஏனோ அவன் மனம்  விரக்தியில்… தன்மேல் உயிரையே வைத்திருந்த, மாமன் மகள் அஞ்சலியின் காதலை நினைத்து  அலைக்கழிந்தது…! அழுக நீரின்றி வற்றிப்போன கண்களுடன் மௌனமாய் “அன்னம்பேடு” ஏரி நோக்கி மெல்ல நடையைக் கட்டினான் சின்னான்!

அந்த சீசனில் மீன்கள் அவ்வளவாகக் கிடைக்காது என்பதால்.. மீன்பிடிக்க யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது ஏரிக்கரை… ஏரியில் தண்ணீரும் பாதியாக குறைந்து, மழைக்கு ஏங்கி கொண்டு இருந்தது! அதுவுமின்றி… அது   மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் தொடக்க காலம் வேறு!

இவன்கூட வந்திருக்க மாட்டான்.. அவன் மனைவி நச்சரிப்பு தாங்காமல் தான் ..வேறுவழி இன்றி வந்தான்! வெகுநேரம் வெயிலில் தலை காய்ந்து சுற்ற தொடங்கியது தான் மிச்சம்.. ஒரு மீனும் கிடைக்க வில்லை…

‘இன்று வீட்டுக்கு  வெறுங்கையுடன் சென்றால் என்ன சண்டை நடக்க போகிறதோ?’என்று எண்ணியபடி வலையை இழுக்க முற்பட்டபோது.. என்ன ஆச்சரியம் ஒரு பெரிய மீன் மாட்டியிருந்ததை உணர்ந்து  துள்ளிக் குதித்து மகிழ்ச்சியோடு, லாவகமாக கரைக்கு வலையை இழுத்தபோது… சுமார் இரண்டு கிலோ எடையுள்ள மீன் சிக்கி உள்ளதை கண்டு மேலும் இன்புற்று  அதை மேலும் கிட்ட இழுத்து பார்த்தபோது ,அவனுக்கு பகீர் என்றது….

ஆம் அது கருவுற்று நிறைமாத கர்ப்பிணி போல், பெருத்த வயிற்றுடன், மூச்சு விடத் திணறியபடி, படபட என துடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து இவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.. அதை முற்றுமாய் வெளியே இழுக்காமல் பாதி நீரில் மூழ்க விட்டு, மெல்ல அதை ஆராய்ந்தான்!

ஆம் அது ஒரு “அரியவகை” மீன்.. மிக அதிக விலைபோகக் கூடிய மருத்துவ குணம் கொண்ட மீன்.. என்று அறிந்ததும் அவன் மனம் மேலும் சங்கடப்பட்டது.
அவன் மெல்லத் தண்ணீரில் வலைக்குள் கைவிட்டு அதன் வயிற்றை சோதித்த போது, அது இன்னும் ஓரிரு மணிநேரங்களில் நூற்றுக் கணக்கான குட்டிகளை
ஈன்றெடுக்கப்  போகிறது என்பதை அறிந்துகொண்ட..அவன் மனம் அதன்மேல் கழிவிரக்கம் கொண்டது. அந்த உச்சி வெயில் சூரிய ஒளியில் அதன் கண்களை
பார்த்து அப்படியே ஆடிப்போய்விட்டான். ஆம் அவன்  மீனின் கண்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் ஆற்றலை தன்  பத்து வருட மீன்பிடி தொழிலின்
வாயிலாக நன்கு அறிந்து வைத்திருந்தான்!

“நண்பா!    நீ என்னைக் கொன்றுவிட்டால், நூற்றுக்கணக்கான அரியவகை மீன்குஞ்சுகளும் என்னுடன் சேர்ந்து இறப்பது திண்ணம்..நீ கருணை கூர்ந்து என்னை விட்டுவிட்டால், இந்த நூற்றுக்கணக்கான குட்டி மீன்கள் நன்கு வளர்ந்து உனக்கும் உன் இனத்தவற்கும் கிடைக்குமே! அது உங்களுக்கு பெருத்த

லாபம் தருமில்லையா? ஆகவே! தயவு செய்து என்னை விட்டு விடு.. பிரசவ வலி வேறு வந்து என்னை கொல்லுகிறது..” என அந்த கண்கள் இவனிடம் கெஞ்சுவது, இவனுக்கு நிதர்சனமாகவே புரிந்தது!

ஆனால் மறுபுறம் அவன் மனைவியின் முகம் அவன் கண்முன் தோன்றி “யோவ்! துப்புகெட்ட மனுஷா..! நாளைக்கு மட்டும் நீ மீனோட வர்லன்னு வெய்யி,
கண்டவனுக்கு முந்திய விரிச்சாவது.. நானும் எம் புள்ளைங்களும், வக்கணையா மீன்குழம்பு சாப்பாடு சாப்டுவோம்.. ! ஆமா சொல்லிபுட்டேன்!” என்று நேற்றிரவு..
இவனைக் காறித் துப்பாத குறையா அசிங்கபடுத்திப் பேசியதை எண்ணியும், நான்கு வயது  கடைக்குட்டி பெண் “அப்பா அப்பா! “மீன்சென” அவ்ளோ
ருசியாமேப்பா ? பக்கத்து வீட்டு மேரி சொன்னாப்பா..!. எனக்கு சாப்புடனம் போல ,ஆச ஆசையா இருக்குப்பா!” என அடிக்கடி தன் காலைப் பிடித்து கெஞ்சி,
கொஞ்சுவது.. அவன் நினைவில் வந்து நிழலாட.. ஒரு நிமிடம் அவன் தந்தை மனம் தன் மகள் பாசத்தால் தடம் மாறியது..!.

ஆனால் அடுத்த நொடியே அந்த மீனின் கண்களை மீண்டும ஒருமுறை உற்று நோக்க. அது துடிதுடித்தபடி.. “நண்பா! நீ ஒரு குழந்தை பற்றி மட்டுமே கவலை
படுகிறாய்!!, ஆனால் நானோ, இந்த உலகை முதல் முறையாய் தரிசிக்க நூற்றுக்கும் மேற்பட்ட என் குட்டிகளை பற்றி கவலை படுகிறேன்,!

தயவு கூர்ந்து என் குட்டிகளை எப்படியேனும் கைவிடாமல் காப்பாற்று!”   என்று (தன் மனக்குரலை ஒட்டுகேட்டு) , தன்னிடம் கெஞ்சுவது போல் அவன் உணர்ந்தான்… பிரசவ வலி அதிகரித்ததாலும், குட்டி போடும் நேரம் நெருங்கியதாலும்.. அதன் துடிப்பும் துள்ளலும் அதிகரிப்பதை கண்டு, என்ன முடிவு எடுப்பது என இருதலைக்
கொள்ளி எறும்பு போல்.. அவன் பெரும் குழப்பத்தில் சிக்குண்டு தவித்தான்!.. கடைசியாக அதன் கண்களை மீண்டும் ..உற்று சிலபல நொடிகள் பார்த்த அவன்…
அதன் மரணபயத்தையும்; குட்டிகளை இழக்க நேரிடும் துயரத்தையும் .. அந்த கண்களில் தீர்க்கமாக கண்டு… சட்டென உடனே ஒரு முடிவுக்கு வந்து !வலையில்
இருந்து அந்த அதிசய மீனை விடுவிக்க…  அது சர்ரென்று, விட்டால் போதுமென தப்பித்து ஓடாமல்…

இவன் அருகிலேயே.. தண்ணீரில் சிலபல வட்டமடித்துத் தன் நன்றியுணர்வை காண்பித்து… பிறகு மெல்ல நிதானமாக… தண்ணீருக்குள் புகுந்து … நீந்தி அதன் ஆழத்துக்கு சென்று மறைந்தது!

இப்போது .. அவனுக்கு சொல்லொணா மகிழ்ச்சி மனதில் தாண்டவமாடியது…! ஏதோ உயிர்களைப் படைக்கும்  “பிரம்மதேவன்” போல் தன்னை தானே உணர்ந்து
மகிழ்ந்தான்! அந்த நூற்றுக்கணக்கான மீன் குஞ்சுகள் தன்னை முத்தமிட்டு கொஞ்சுவது போல் கற்பனை செய்தான்… அந்த முத்தங்கள் தன் குழந்தைகளின்
முத்தத்தை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு இனிப்பாய்! இதமாய் இருந்தது! அவனுக்கு!!

அவன் மனைவி வசவு பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல்.. நேரே தன் பள்ளி நண்பனிடம் ‘ஒழக்கு’அரிசியும்,  போகும் வழியில் கந்தன் கோயில் தோட்டத்தில், பொன்னாங்கண்ணி கீரையையும் பறித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அவளோ? கோபத்தின் உச்சியில்  “ஏன்யா! எங்கள என்ன ஆடு மாடுன்னு நினைச்சுட்டியா? கீர தழன்னு துண்றத்துக்கு…” என கெட்ட கெட்ட வார்த்தைகளில்
திட்டியபடி… கஞ்சியும் கீரைக் குழம்பும் செய்து உண்டாள்! … இவன “சாப்பிடு” என்று ஒரு வார்த்தை கூட கூப்பிடவில்லை. அவனுக்கும் மனம் நிறைந்து இருந்ததால்
பசிக்கவும் இல்லை..!

அடுத்தநாள்.. பொழுது விடிந்ததும், நேரே ஏரிக் கரைக்குச் சென்று அமர்ந்து அந்த அழகிய மீனை தேடி அவன் விழிகள் நீரில் அலைபாய்ந்தது. அவன்  எதிர்பார்ப்பு
வீண்போகவில்லை.. அந்த மீன் இவனை நோக்கி பாய்ந்தோடி வந்து மகிழ்ச்சியில் வட்டமடித்து வட்டமடித்துச் சுழன்றது!. இவன் கண்களோ மீன் குஞ்சுகளை தேடிச்
சற்றே ஏமாற்றம் அடைந்தபோது..

அந்த தாய் மீன் தன் வாயை அகலமாய் திறக்க.. நூறுக்கும் மேற்பட்ட குட்டி குட்டி குஞ்சுகள் வெளிவந்து தாயின் வாயருகே நீந்த அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை… அந்தத்  தாய் மீன் மீண்டும் அகலமாய் வாய் திறக்க ஒன்றில்லாமல் அனைத்துக் குஞ்சுகளும் அதற்குள் அடைக்கலம் அடைந்தன!

அவன் ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல் இன்புற்றான். சற்று நேரத்தில் அது அவனை விட்டு அகன்று சென்றது. இவன் நேரே “மோசஸ்” அரிசி மண்டிக்கு
விரைந்தான்..அங்கு மூட்டை தூக்கும் வேலையில் சந்தோசமாய் சேர்ந்து கொண்டான்!

அந்த வேலை அவனுக்கு புதிது என்பதால், மிகவும் கஷ்டப்பட்டான்!சில பல நாட்களில் அந்த வேலை பழகி போக… அவன் வீட்டில் அடுப்பு , தடையின்றி எரியத்
தொடங்கியது! தினமும் அதிகாலை ஏரிக்குச் சென்று தன் மீன் தோழியை சந்திக்க அவன் மறப்பதே இல்லை..ஒரிரு வாரங்கள் கழித்து, மீன் தோழி மட்டுமே
வந்தது.. அதன் குஞ்சுகளைக் காணவில்லை… !

ஆம்! அவை வளர்ந்து சுதந்திரம் பெற்று விட்டன என தெரிந்து கொண்டான். இப்போதெல்லாம் அவன் மீன் தோழி. அவன் கைகளில் தவழ்ந்து விளையாடியது!
அவனுக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சியது.!. பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ..அந்த மீனை அவன் ஒரு நாள் கூட முத்தம் கொஞ்ச மறந்ததே இல்லை! அன்பு
அனைத்துக்கும் அப்பாற்பட்டது  என்பதே அபரிமிதமான உண்மை!

Meen Kuzhambum Dosiayum Kavithai By Sakthi மீன் குழம்பும் தோசையும் ! கவிதை - சக்தி

மீன் குழம்பும் தோசையும் ! கவிதை – சக்தி

வட்ட வடிவ கல்லில்
வெந்துக்கொண்டிருக்கிறது
வட்ட வடிவ தோசை,

வட்ட வடிவ தோசைக்காக
வட்ட வடிவ தகர தட்டை
கையில் ஏந்தி நிற்கின்றன குழந்தைகள்,

ஏங்கி நிற்கும்
குழந்தைகளின் தகர தட்டில்
வட்ட வடிவ தோசைகளின்
மீது மிதக்கிறது
கெண்டை மீன் குழம்புகள்
தாத்தா ஓடையில் பிடித்ததால்,

கெண்டைமீன்களை போல
வழுக்கிக்கொன்டே போகிறது தோசையும் தகர தட்டும்
குழந்தையின் கைகளின்
விரல்களின் வலியால்,

மீன் துண்டுகளின்
சதைகளை தின்ற குழந்தைகள்
மீன் முள்களை திண்னையில் வீசுகிறது நாய்களின்
கண்களுக்கு தெரியுமாறு,

எப்பொழுதுமே இரண்டு
தோசைகளை சாப்பிடும் குழந்தைகள், மீன் குழம்பு
வாசனையால்
நான்கு தோசைகளை
சாப்பிடுகின்றன செம்மேரி பாட்டியின் கை பக்குவத்தால்,

பச்சை வாழை
இலை மேலே வெள்ளை பூ பூத்திருக்கிறது
வட்ட வடிவ தோசைகள்,

வட்ட வடிவ
தோசைக்காக வானத்தில்
வலம் வருகிறது காக்கைகளும் குருவிகளும் ,

சின்னசாமி சாப்பிட்டு
போட்ட மீன் முள்களை
இழுத்து செல்கின்றன
எரும்புகள், வரிசையாக
செல்லும் மாட்டு வண்டிகளைப்போல …..!!!!

Azhini Novel By S. N. Arivumathi Novelreview By M.S. Sri laksmi நூல் விமர்சனம்: சொ. நே. அறிவுமதியின் ஆழினி நாவல் - முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

நூல் விமர்சனம்: சொ. நே. அறிவுமதியின் ஆழினி நாவல் – முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

மக்களுக்குப்  பல்லாற்றானும் நலம் பயப்பது  நகைச்சுவை உணர்வு. இதனை வெளிப்படுத்தும் செல்நெறிக்கு வளமும் சிறப்பும் கொண்ட தமிழ் இலக்கியமரபு  உண்டு. நாட்டுப்புறக் கலைவடிவங்களாக, மக்களிடையே அன்றாட வாழ்வில் ஊடாடிப் பல்வேறு வழிகளில் வெளிப்பட்டுவந்த நகைச்சுவையுணர்வு ஏட்டில் எழுதா இலக்கியமாக வளர்ந்துவந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இச்செல்நெறி வழக்கில் இருந்திருக்கவேண்டும். எனவே உலகவழக்கு, புலனெறிவழக்கு என இருவகையாலும் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எண்சுவைகளையும் அவை பிறக்கும் களங்களையும் வகைப்படுத்தி உள்ளார். நகைச்சுவை உணர்வின் களங்களாக,

“எள்ளல் இளமை பேதைமை மடனென
உள்ளப்பட்ட நகை நான்கென்ப” 
எனக் குறிப்பிடுகிறார். 

படைப்பில் முழுமையும் நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்துவது, ஊடும் பாவுமாகப் பிணைந்து இடையிடையே வெளிப்படுத்துவது, ஆங்காங்கே நகைச்சுவை உணர்வினைத் தெளித்துச்செல்வது போன்ற வழிகளில் இலக்கியங்களில் நகைச்சுவை இடம்பெற்று வந்துள்ளது. தமிழ்க்கவிதை மரபில் இதற்கு எண்ணற்ற சான்றுகளைக் கூறமுடியும். காலத்திற்கேற்பச் செழித்து வளரும் உரைநடை இலக்கியத்திலும், நாடக இலக்கியத்திலும் செல்வாக்குப் பெற்ற நகைச்சுவை இன்று பல்லூடகம் வாயிலாகவும் பரவியுள்ளது.

சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே மட்டுமே சொந்தமானது நகைச்சுவை. இதனை வெளிப்படுத்தும் ஆற்றல் எல்லோரிடமும் எளிதில் அமைந்துவிடாது. வெகுசிலரே இத்திறன் கைவரப்பெற்றவராய் இருப்பர். நகைச்சுவையை வெளிப்படுத்தும் உத்தி முறைகள் பற்பல. காட்சி ஊடகங்களில் உடல்மொழியால் மட்டுமின்றிப் பேச்சுமொழியாலும் செய்கைகளாலும் நகைச்சுவையை வெளிப்படுத்திவிட முடியும். ஆனால் எழுத்துவழியான படைப்புகளில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த மிகுந்ததிறமையும் கற்பனைஉணர்வும் தேவைப்படுகின்றன. முதலில் அந்த எழுத்தாளன் நகைச்சுவை உணர்வு உள்ளவனாக இருக்கவேண்டும். கழைக்கூத்தாடி போன்று கவனமாகச் செயல்படவும் வேண்டும்.  நகைச்சுவைப் படைப்புகள் மற்றப்படைப்புகள்போல அதிக எண்ணிக்கையில் வெளிவராததற்கு இந்த அருமைப்பாடும்  ஒரு காரணமாக இருக்கக்கூடும். 

ஆனந்தவிகடன் தேவன் (ஆர். மகாதேவன்), பாக்கியம் ராமசாமி (ஜலகண்டாபுரம் ராமசாமி சுந்தரேசன்) போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பிறகு நீண்டநாள் கழித்து நான் வாசிக்கும் முழு நகைச்சுவை நாவல் ‘ஆழினி’ என்பதில் அளவற்ற மகிழ்ச்சி. வீட்டில் தனியே இருந்து படித்தபோது என்னை வாய்விட்டுச் சிரிக்கவைத்த நாவல் என்பதோடு நகைச்சுவையின் ஆற்றலை எனக்குள் பாய்ச்சிய நாவல் இது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. 

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, அதன் விளைவான பரபரப்பான  வாழ்க்கை முறை  ஆகியவை காரணமாக நகைச்சுவையை மறந்துவரும் இன்றைய இளம்தலைமுறையிலிருந்து நகைச்சுவையையே  அடிப்படையாய்க் கொண்ட ‘ஆழினி’ என்னும்  புதினத்தை எழுதியுள்ளார்  செல்வி சொ.நே.அறிவுமதி. முனைவர்பட்ட ஆய்வுக்காகச் “சங்க இலக்கியத்தில் உணர்ச்சி மேலாண்மை” என்பதை  ஆய்வுப்பொருளாகத் தெரிவுசெய்துள்ள இவருடைய கன்னி முயற்சி இந்த நாவல். 

தமிழ்மொழி  பிறந்து செழித்து வளர்ந்த தமிழ்நாட்டில் இன்று தமிழைப் பேசவும் படிக்கவும் எழுதவும் தயங்கும்  இளம்தலைமுறையினரை எள்ளி நகையாடுவது இந்த நாவலின் நோக்கமாகவும் தொனிப்பொருளாகவும் இருக்கவேண்டும் என்று  எனக்குத் தோன்றுகிறது.  கடற்கன்னி (மெர்மெயிட்  என்னும் மீன்பெண்) செந்தமிழில் – சங்கத்தமிழில் பேச புவனன், பரதன், நந்தினி ஆகிய இளைஞர்களும், நந்தினி, பரதன் ஆகியோரின் தந்தை மாதவன் போன்ற மூத்த தலைமுறையினரும்  அதனைப் புரிந்துகொள்ளாததால் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது. காலமாற்றத்தில் தமிழர்களின் அக்கறையின்மையால் எத்தனை சொற்கள் வழக்கிழந்துபோய்விட்டன என்பதை எண்ணும்போது  ஆழ்ந்த வருத்தமே மேலிடுகிறது. இத்தகு வருத்தம் செல்வி அறிவுமதிக்கும் தோன்றியிருக்கவேண்டும்.ஆகவேதான் கடற்கன்னி செந்தமிழ் பேசுவதாக அவரால் கற்பனை செய்யமுடிகிறது. 

கடற்கன்னியின் செந்தமிழ் கேட்கையில், நாஞ்சில்நாடன் அவர்கள்  தமிழ் இலக்கியத்தில் பயின்றுவரும் அரிய சொற்களைக்குறித்து ஆய்வுநோக்குடன்  தொடர்கட்டுரைகளாக வடித்துவருவதும் அவற்றைப் புலனத்தின்வழி  என்னுடன் பகிர்ந்துகொள்வதுமே என் நினைவுக்கு வந்தன. அக்கட்டுரைகள்  வாசகர்களாகிய நாம் பழம்பெருமை பேசுவதில் மகிமை ஒன்றுமில்லை; பழந்தமிழ்ச்சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவரவேண்டும் என்னும் சிந்தனையை நமக்குள்  விதைப்பன. இச்சிந்தனையின் நீட்சியாகவும்  எதிரொலியாகவும்  ஆழினி என்னும் நகைச்சுவைப் புதினத்தை நான் காண்கிறேன். 

கடற்கன்னியின் செந்தமிழைப் புரிந்துகொள்ள இவர்  பேச்சுத்தமிழில் எளிமைப்படுத்தி அடைப்புக்குறிக்குள் கொடுக்கிறார். கதையில் வரும் பாத்திரங்களான புவனனைத் தொடக்கத்தில் மொழிபெயர்க்க வைக்கிறார் நாவலாசிரியர். பின்னர் அவனே செந்தமிழிலும் பேசுகிறான். பரதன் பிற்பகுதியில்  செந்தமிழைப்பேசவும் மொழிபெயர்க்கவும் செய்கிறான். இதன் மூலம் நாவலாசிரியர் “சித்திரமும் கைப்பழக்கம் ;செந்தமிழும் நாப்பழக்கம்”  என்று இளையர்களுக்குக் கூறுவதாகத் தோன்றுகிறது. தமிழில் பேசுவதையே தமிழனுக்கு மொழிபெயர்த்துச் சொன்னால்தான் புரியும் என்றால்  இந்த நிலை எவ்வளவு கொடுமையானது என எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. எங்கே போகிறது நம் சமூகம்? அதேவேளையில் மணிமேகலை கூறும் சாதுவன் என்னும் வணிகனின் மொழிப்புலமை அவனை எவ்வாறு நாகர்களிடமிருந்து காத்தது என்பதையும் எண்ணிப்பார்க்கவைக்கிறது ஆழினி நாவல். 

ஆழினி, ஆழியன் என்னும் தமிழ்ப்பெயர்கள் இனிமைகொண்ட  காரணப்பெயர்களாக அமையுமாறு படைத்திருப்பது பாத்திரப்பண்புக்கு மட்டுமின்றி அறிவுமதியின் தமிழ் உணர்வுக்கும் சான்றாகின்றன.  மனிதப்பிறவி  அல்லாத கடற்கன்னியும் அவள் காதலனும் அழகிய செந்தமிழ்ப்பெயர்களைக் கொண்டிருப்பதும் அவர்கள் செந்தமிழ் பேசுவதுமாகப் படைத்திருப்பது  நாவலாசிரியரின் மொழியுணர்வை- மொழிப்பற்றைமட்டும் காட்டுவதாக எனக்குத் தோன்றவில்லை.   தாய்மொழி அறியாதவனை மனிதனாக எப்படி மதிக்க முடியும்? என்று அவர் கேட்பதாகவே தோன்றுகிறது. நம் தமிழர்கள்  இக்காலத்தில் எவ்வாறு பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுகிறார்கள் என்பதையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல். 

பரதனும் புவனனும் நண்பர்கள். புவனன் பரதனின் உடன்பிறப்பான நந்தினியின் காதலன். பரதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் புவனன்   மீன் வாங்கிவந்து  அதனைக் குழம்புவைக்கத் தொடங்குவதில் கதை தொடங்குகிறது. மீனை வெட்டும்போது ஒரு மீன் கடற்கன்னியாக இருப்பதை அறிகிறான்.அவள் பெயர் ஆழினி.  தன்னைப் புவனன்  வெட்டவிடாமல் தன் வால் மூலம் அவனிடம் வலிமையைக் காட்டுகிறாள் ஆழினி. புவனனின் வலிமை அவளிடம் தோற்றுவிடுகிறது. அவள் செந்தமிழில் பேசுகிறாள். அதனை அவன் யவனத்தமிழ் என்று கூறிப் புரிந்துகொள்ளச் சிரமப்படுகிறான். ஆழினி மாயவித்தைகள்  செய்வதிலும் வல்லவளாக இருக்கிறாள். ஆழினி தன் காதலன் ஆழியனைப் பிரிந்துவந்ததைக் கூறிப் புவனனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவன் மூலம் ஆழியனைத் தேடுகிறாள்.

பரதன், நந்தினி, மாதவன் என ஒவ்வொருவராக ஆழியனைத் தேடும் முயற்சியில் கோர்த்துவிடப்படுகிறார்கள். ஆழினியின் கட்டுப்பாட்டினாலும் அவள் இயக்குவதாலும் புவனனும் பரதனும் பல சாகசங்கள் செய்கிறார்கள். மனிதர்கள் எப்படி இந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்பதைத் தன் தேடலின் மூலம் அறிகிறாள் ஆழினி. பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியில் ஆழினியும் ஆழியனும் இணைவதாகக் கதை  முடிகிறது. நகைச்சுவை தருவது மகிழ்ச்சி தானே. ஆகவே இந்த நாவலின் சுபமான முடிவை நம்மால் சுகமாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறது.  

ஆழினி நாவல் கற்பனையும் நகைச்சுவையும் கலவாமல் எழுதப்பட்டிருருந்தால் மொழியைப் பற்றிய பிரச்சாரமாகவே அமைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. ஆழினி நாவல் கற்பனையும் சாகசமும் மாயாஜாலமும் நகைச்சுவையும் கேலிச்சித்திர பாணியும்  யதார்த்தமும் கலந்த கலவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நகைச்சுவையைப் பல அணுகுமுறைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோலப் பல நிகழ்ச்சிகள் இருப்பினும் சான்றுக்கு ஒன்றிரண்டை  எடுத்துக்காட்ட முடியும். 

பரதன், நந்தினி, புவனன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கேலி செய்தவதையும் பரதனும் புவனனும் மாதவனைக் கேலிசெய்வதையும் எள்ளலின் மூலம் வெளிப்படும் நகைச்சுவைக்கு உதாரணமாகக் கூறலாம். இப்பாத்திரங்கள் ஆழினியையும் ஆழியனையும்  அவ்வப்போது  கேலிசெய்கின்றன. அறியாமை காரணமாகப் பிறக்கும் நகைச்சுவைக்கு ஒருவர் பேசும் மொழி புரியாததால் மற்றவர் வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்வது,காவலர்கள் தவறாக இட்லிச்சட்டியை (மிஷின்)  அறிவியல் கருவி என மயங்குவது போன்றவற்றைக் கூறலாம். அறிந்தும் அறியாததுபோல் தோன்றும் மடமையின் மூலம் நகைச்சுவையை வரவழைப்பது பரதனின் பாத்திரம். மேலும் இப்பாத்திரம் தானே வலியப்போய்ச் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் நமக்குச் சிரிப்பை வரவைக்கிறது. இப்பாத்திரம் கடல்பிசாசு, கடல்பூதம் என முறையே  ஆழினி,ஆழியனுக்குப் பெயர் சூட்டுகிறது. பரதனின் பாத்திரம் விகடம் நிறைந்த பாத்திரமாக இருப்பது சிறப்பு.

தமிழ், ஆங்கிலம், மலையாளம்  எனக் கலந்து பேசும்  கலவை மொழியும் கருவியாகி  நகைச்சுவை பிறக்கச்செய்கிறது.   கூகிள் மொழிபெயர்ப்பும் நகைப்பிற்கு இடமாகிறது. மனிதரை விலங்கு எனக்  கருதிக் குரங்கு, பக்கி எனத் திட்டுவது, பாத்திரங்கள் இடம் பொருள் ஏவல் அறியாமல்  பேசுவது, கேட்கப்படும் கேள்விகளுக்கு இடக்காகப் பதில் சொல்வது, ஒலி ஒப்புமை உடைய சொற்களைப் பயன்படுத்தி நகைப்பை ஏற்படுத்துவது, இட்லிச்சட்டி,வடைச்சட்டி என்பனவற்றை மாயாஜாலக்கருவிகளாக்குவது, உவமைகளின் மூலம் சிரிப்பை ஏற்படுத்துவது, சிறுவர் பாத்திரங்களை அறிமுகம் செய்து அவர்களின் மூலம் நகைப்பை உண்டாக்குவது, ஒருவர் மற்றவரை முட்டாளாக்குவது, வீணான சந்தேகத்தின் மூலம் நகைப்பை ஏற்படுத்துவது, நம்பமுடியாத நிகழ்ச்சிகளைப் படைத்துக்காட்டுவது, கதையில் சிக்கல்கள் தோன்றும்போது அவற்றை விடுவிக்கத் தண்ணீர் தெளிப்பது, கடற்கன்னியும் திறம்பெறுவதற்காகச் சுற்றுவது போன்ற கற்பனை நிகழ்வுகள்     போன்று பற்பல  வழிகளில் நகைச்சுவையைத் திறம்படக் கையாள்கிறார். வஞ்சப்புகழ்ச்சி,  மிகைப்படுத்துதல், இரட்டுறமொழிதல் என்னும் சிலேடைப்பேச்சு, அனுபவ நகைச்சுவை , கோமாளித்தனம், நையாண்டி என இன்னோரன்ன வழிகளிலும்  நகைச்சுவையை இந்த நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.

முன்னர்க்குறிப்பிட்டதுபோன்று எள்ளி நகையாடுவது அறிவுமதியின் நோக்கமாக இருப்பதால் போகிறபோக்கில் சமூக நிகழ்வுகளை அங்கதச்சுவையுடன் வருணித்துச் செல்கிறார். “பஞ்ச் டயலாக்” பாணியில் உள்ளத்தில் தைப்பது போல ‘நச்’ என்று சில அங்கதங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. “புறங்காட்டு வழக்கமெல்லாம் மானிடரிடம்தான் “ என ஆழினி உரைப்பது; காக்கை பிடித்தல் என்னும் பழக்கத்தை புவனன் மூலம் அங்கதமாக்குவது; இளையர்களிடம் மிதமிஞ்சிக் காணப்படும் மொழிக்கலப்பை மாதவன் மூலம் இடித்துரைப்பது, மாறிமாறிப் பேசுவது மனிதப்பண்பன்று என மாதவன் மூலம் கூறுவது , உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா என்னும்  உவமை  மூலம் விளம்பரங்களைக் கேலிப்பொருளாக்குவது எனச் சமூகஅங்கதமாக இந்த நாவல் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

சங்க இலக்கிய மாண்பையும்  பல அரிய சங்கத்தமிழ்ச்  சொற்களின் பயன்பாட்டையும்   இந்த நாவல் மூலம் இளைய உள்ளங்களில் விதைக்க முயன்றுள்ளார் அறிவுமதி. பெருந்தொற்றினால் உலகமே பெரும் அவதிக்குள்ளான 2020 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கிய செல்வி  அறிவுமதி இந்த நாவலின் மூலம் மன உளைச்சலைப்போக்கும் அற்புத மருந்தை அளித்துள்ளார். துன்பம் வரும் வேளையில் மனவுறுதியுடன் அதனை எதிர்கொள்ள நகைச்சுவை கைகொடுக்கும் என்பதை இந்த நாவல் மூலம் நாம் அறிகிறோம்.   மொத்தத்தில் முதல் முயற்சியிலேயே அபாரமான திறமையோடு ஆழினியைப் படைத்துள்ள செல்வி அறிவுமதி இனிவரும் காலங்களிலும் நிறையவும்,  மனம்நிறையவும் எழுதவேண்டும் என்று  எதிர்பார்ப்போம்.தமிழ் வாசகர் உலகம் இளையர் முயற்சிக்கு என்றென்றும் ஆதரவு நல்கவேண்டும்.  வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்க நம்முடன் துணை வருகிறாள் ஆழினி.

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி
மேனாள் விரிவுரையாளர் ( பணி நிறைவு )
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் .

நூலின் பெயர் :ஆழினி
ஆசிரியர்: சொ. நே. அறிவுமதி

பக்கங்கள்: 390
விலை : ரூபாய்
400 /-

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்

உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) – தமிழில்: ஆழிக்ஸ்

கோடைகால இரவில் மின்மினிப் பூச்சிகளின் பிரகாசத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மின்மினிப் பூச்சிகள் அவற்றின் ஒளிரும் அடிவயிற்றில் ஒரு வேதி வினையின் மூலம் ஒளியை உற்பத்தி செய்யும் செயலானது “உயிரி ஒளிர்வு” என அழைக்கப்படுகிறது. ஆனால் பல கடல் வாழ் உயிரினங்களின் ஒளி உற்பத்தி செய்யும் திறன்களால் சில கடற்பரப்புகளே ஒளிரும் மற்றும் மினுமினுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில மீன்கள் தங்களது இரையை ஈர்ப்பதற்காக தங்கள் வாயின் முன் கவர்ச்சியான ஒளியை உண்டாக்குகின்றன. சில ஸ்க்விட்கள் (Squid) (செபலோபாட்ஸ் (Cephalopods) குடும்பத்தைச் சார்ந்தது) தங்கள் வேட்டையாடுபவர்களைக் குழப்புவதற்காக மை க்கு பதிலாக உயிரி ஒளிர் திரவத்தை வெளியேற்றுகின்றன. புழுக்கள் மற்றும் சிறிய ஓட்டுமீன்கள் தங்கள் இணையை ஈர்ப்பதற்காக உயிரி ஒளிர்வை பயன்படுத்துகின்றன.

மனிதர்கள் பெரும்பாலும் கடல் அலைகள் அல்லது நகரும் படகு போன்ற பொருளியல் ரீதியான இடையூறுகளால் உயிரி ஒளிர்வு தூண்டப்படுவதைப் பார்க்கிறார்கள். இது கடல் வாழ் விலங்குகளைத் தங்களது ஒளியை வெளிக்காட்ட வைக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவ்விலங்குகள் அத்தகைய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் அல்லது ஒரு துணையை ஈர்க்கும் வகையில் ஒளிரும். உயிரி ஒளிர் உயிரினங்கள் நீர் நிரல் முழுவதும் அதாவது மேற்பரப்பில் இருந்து கடற்பரப்பு வரை, கடற்கரைக்கு அருகிலிருந்து திறந்த கடல் வரை வாழ்கின்றன. ஆழ்கடலில் உயிரி ஒளிர்வு மிகவும் பொதுவானது. மேலும் ஆழ்கடல் மிகவும் பரந்ததாக இருப்பதால், இந்தக் கடலுலகில் உயிரி ஒளிர்வு மிகவும் பொதுவான தகவல்தொடர்பு வடிவமாகவும் இருக்க முடியும்.

ஆழ்கடல் ஒளி: எப்படி உருவாகிறது?

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 1: செங்கடலில் காணப்படும் இந்த லான்டர்ன் மீன் (Lantern Fish) (Diaphus sp.), அதன் வயிற்றின் மேற்பரப்பில் ஒளியை உருவாக்கும் ஒளிக்கதிர்கள் மற்றும் ஹெட்லைட் போல செயல்படும் நாசி ஒளி உறுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. (E. Widder, ORCA, www.teamorca.org)

ஒரு உயிரினத்தின் உடலுக்குள் ஒளி ஆற்றலை உருவாக்கும் வேதிவினை மூலம் உயிரி ஒளிர்வு ஏற்படுகிறது. இந்த வேதிவினை உருவாக, ஒரு உயிரினத்தில் லூசிஃபெரின் (Luciferin) என்ற வேதி மூலக்கூறு இருக்க வேண்டும். அது ஆக்ஸிஜனுடன் வினைபுரியும் போது ஒளியை உருவாக்குகிறது. லூசிஃபெரினில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை வேதிவினையை உருவாக்கும் விலங்குகளைப் பொறுத்து மாறுபடும். பல உயிரினங்கள் வினையூக்கி லூசிஃபெரேஸை (Luciferase) உற்பத்தி செய்கின்றன. இது உயிரி ஒளிர்வு செயற்பாடுக்கான வேதிவினையை விரைவுபடுத்த உதவுகிறது.

உணவு அல்லது இணைத் தேடலின் உடனடித் தேவைகளைப் பொறுத்து விலங்குகளின் வேதியியல் மற்றும் மூளைச் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவை ஒளிரும் போது அவற்றின் ஒளிரும் தன்மையைக் கட்டுப்படுத்த முடியும். சில உயிரினங்கள், முன் தொகுக்கப்பட்ட “உயிரி ஒளிர்வு குண்டு” போல, அதாவது ஆக்சிஜனுடன் லூசிஃபெரினைத் தொகுக்கின்றன. அவை ஃபோட்டோபுரோட்டீன் (Photoprotein) என அழைக்கப்படுகின்றன. இவை அத்தகைய உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட தனிமத்தைக் (பொதுவாக கால்சியம்) கொண்டிருக்கும் தருணத்தில் ஒளிரத் தயாராக இருக்கும். அவைகளால் ஒளியின் தீவிரம் மற்றும் நிறத்தைக் கூட தேர்வு செய்ய முடியும்.

உயிரி ஒளிர்வை எது உருவாக்குகிறது?

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 2: சூரிய அஸ்தமனம்? ஒளிர்வதற்கான நேரம்! ஒரு உயிரியல் கடிகாரம் டைனோஃப்ளாஜெல்லேட் பைரோசிஸ்டிஸ் ஃபுசிஃபார்மிஸில் (Dinoflagellate Pyrocystis Fusiformis) உயிரி ஒளிர்வைத் தூண்டுகிறது. அந்தி வேளையில், இதன் செல்கள் அதன் ஒளிக்குக் காரணமான இரசாயனங்களை உற்பத்தி செய்கின்றன. (E. Widder, ORCA, www.teamorca.org)

உயிரி ஒளிர்வு பல கடல் உயிரினங்களில் காணப்படுகிறது. பாக்டீரியா, பாசிகள், ஜெல்லிமீன்கள், புழுக்கள், ஓட்டுமீன்கள், கடல் நட்சத்திரங்கள், மீன் மற்றும் சுறாக்கள் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். மீன்களில் மட்டும் சுமார் 1,500 அறியப்பட்ட இனங்கள் ஒளிர்கின்றன. சில சமயங்களில், விலங்குகள் ஒளிரும் திறனைப் பெற பாக்டீரியா அல்லது பிற உயிரி ஒளிர் உயிரினங்களை தன்வசப்படுத்திக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஹவாய் பாப்டெயில் ஸ்க்விட் ஒரு சிறப்பு ஒளி உறுப்பைக் கொண்டுள்ளது. அது பிறந்த சில மணிநேரங்களில் உயிரி ஒளிர் பாக்டீரியாவால் காலனித்துவப்படுத்தப்படுகிறது. ஆனால் பொதுவாக, உயிரி ஒளிர்வை உருவாக்கும் வேதிவினைக்குத் தேவையான இரசாயனங்கள் அந்த உயிரிலையே உள்ளன. உயிரி ஒளிர்வு செய்யும் உயிரினங்களின் எண்ணிக்கையும் ஒளியை உருவாக்கும் வேதிவினைகளின் மாறுபாடுகளும் உயிரி ஒளிர்வு திறனானது பல்வேறு காலங்களில், குறைந்தது, 40 வெவ்வேறு காலங்களில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஆராய்ச்சிகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போது இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் ரே-ஃபின்ட் (Ray-Finned) மீன்கள் 27 வெவ்வேறு காலங்களில் அதன் உயிரி ஒளிர்வு திறனானது பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக கண்டறிந்தனர். இது முன்னர் அறியப்பட்டதை விட மிகவும் அதிகமாகும்.

பெரும்பாலான ஆழ்கடல் விலங்குகள் சில உயிரி ஒளிர் ஒளியை உருவாக்குகின்றன. ஆனால் இந்த நிகழ்வு மிகவும் ஆழ்கடலுக்குள் நடைபெறாமல் பொதுவான காட்சிக்குப் புலப்படும் கடலின் மேற்பரப்பிலே நிகழ்கிறது. பல சிறிய பிளாங்க்டோனிக் (Planktonic) வகையைச் சார்ந்த மேற்பரப்பில் வசிக்கக்கூடிய உயிரினங்கள் உதாரணத்திற்கு, ஒற்றை செல் டைனோஃப்ளாஜெல்லட்டுகள் (Dinoflagellates) போன்றவை உயிரி ஒளிர் செய்யும் திறனுள்ளவை. சூழ்நிலைகள் சரியாக இருக்கும் போது, டைனோஃப்ளாஜெல்லேட்டுகள் தண்ணீரின் மேற்பரப்பில் அடர்த்தியான அடுக்குகளில் பூக்கின்றன. இதனால் கடல் பகலில் சிவப்பு-பழுப்பு நிறத்தைப் பெறுகிறது மற்றும் இரவில் அவை அலைகளின் மூலம் நகரும் போது பிரகாசமாக பளபளக்கிறது. டைனோஃப்ளாஜெல்லட்டுகள் மற்ற விலங்குகளுக்கு விஷமாக மாறும்போது, ​​இவை தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பெரிய மீன்கள் நச்சுத்தன்மையுள்ள டைனோஃப்ளாஜெல்லட்டுகளை உண்ணும் போது, அந்த மீனின் வயிற்றில் அதிக செறிவுகளில் குவிந்து, அவை மீன்களுக்கு உணவாகின்றன. பின்னர் கடல் பாலூட்டிகள் அல்லது மக்கள் இந்த உயிரினங்களை சாப்பிடும் போது, அது நோய் அல்லது மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

உயிரி ஒளிர்வின் நிறம்

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 3: மாவ் ஸ்டிங்கர் (Mauve Stinger), ஒளிரும் ஜெல்லிமீன். (Fco. Javier Gallardo Alvarez, Flickr)

ஒளி பல்வேறு வடிவங்களாக அலைக்கற்றைகளில் பயணிக்கிறது – அவை அலைநீளம் என அறியப்படுகிறது – இதுதான் ஒளியின் நிறத்தைத் தீர்மானிக்கிறது. அலைகள் நம் கண்களை வந்தடையும் போது, ​​​​அவை அவற்றின் அலைநீளத்தைப் பொறுத்து மூளையால் வண்ணங்களாக மாற்றப்படுகின்றன. நம் கண்களால் காணக்கூடிய அலைநீளங்கள் “புலப்படும் ஒளிக்கற்றைகள்” என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த நிறமாலையில் உள்ள அனைத்து வண்ணங்களையும் அவை நிலத்திற்கு மேலே உள்ள காற்றில் பயணிக்கும்போது நாம் அவற்றைக் காணலாம். ஆனால் ஒளி நீருக்கடியில் வித்தியாசமாக பயணிக்கிறது. ஏனெனில் நீண்ட அலைநீளங்கள் கொண்ட ஒளியானது அதிக தூரம் பயணிக்க முடியாது. கடலில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான உயிரி ஒளிர்வு நீல-பச்சை நிறத்திலே உள்ளன. ஏனென்றால், இந்த நிறங்கள் ஒளியின் குறுகிய அலைநீளங்கள் உடையவை. அதனால் அவைகளால் இரண்டு விதமான கடல் பரப்பிலும் – ஆழமற்ற மற்றும் ஆழமான – கடலில் பயணிக்க முடியும் (இதனால் அவை கண்களுக்குப் புலப்படுகின்றன). சிவப்பு ஒளி போன்ற நீண்ட அலைநீளங்களைக் கொண்ட சூரியனிலிருந்து பயணிக்கும் ஒளியானது ஆழ்கடலை அடைவதில்லை. அதனால்தான் பல ஆழ்கடல் விலங்குகள் சிவப்பு நிறத்தில் உள்ளன. எனவே அவை கண்களுக்குப் புலப்படாமல் உள்ளன. மேலும், அவை கண்களுக்குப் புலப்படாததால், பல ஆழமான நீர் விலங்குகள் அவற்றை முழுவதுமாக பார்க்கும் திறனை இழந்துவிடுகின்றன. இருப்பினும், டிராகன் மீன் (மலாகோஸ்டியஸ் (Malacosteus)) உட்பட சில விலங்குகள் சிவப்பு ஒளியை வெளியிடவும் பார்க்கவும் அத்தகைய திறனுடன் பரிணமித்துள்ளன. ஆழ்கடலில் தங்களுடைய சொந்த சிவப்பு ஒளியை உருவாக்குவதன் மூலம், அவைகளால் சிவப்பு நிற இரையைப் பார்க்க முடியும். அதே போல் மற்ற டிராகன் மீன்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் அவற்றிற்கு அவைகளின் இரையைக் காட்டவும் முடியும். அதே நேரத்தில் மற்ற சந்தேகத்திற்கு இடமில்லாத விலங்குகள் தங்கள் தப்பி ஓடுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பான சிவப்பு ஒளியைப் பார்க்க முடியாது.

விலங்குகள் ஏன் ஒளிர்கின்றன?
உணவளித்தல்

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 4: இந்தப் பெண் ஆக்டோபஸில் உள்ள மஞ்சள் உயிரி ஒளிர் வளையம் அதன் துணையை ஈர்க்க உதவும். (Michael Vecchione/NOAA)

விலங்குகள் தங்கள் ஒளியைப் பயன்படுத்தி அவற்றிற்கான இரையைத் தங்கள் வாயை நோக்கி இழுக்க முடியும் அல்லது அருகிலுள்ள பகுதியை ஒளிரச் செய்ய முடியும். இதனால் அவை தங்களின் அடுத்த வேளை உணவை சற்று நன்றாகப் பார்க்கும் திறன் பெறுகின்றன. சில சமயங்களில் கவரப்படும் இரையானது ஸ்டாரோட்யூதிஸ் ஆக்டோபஸின் (Stauroteuthis Octopus) பெரிய மூக்கைச் சுற்றியுள்ள உயிரி ஒளிர்வால் ஈர்க்கப்படுவது போன்ற சிறிய பிளாங்க்டனாக இருக்கலாம். ஆனால் அந்த ஒளி பெரிய விலங்குகளை ஏமாற்றும். திமிங்கலங்கள் மற்றும் ஸ்க்விட் ஆகியவை குக்கீ-கட்டர் (Cookie-Cutter) சுறாவின் ஒளிரும் அடிப்பகுதியால் ஈர்க்கப்படுகின்றன. அவை விலங்குகளை நெருங்கியவுடன் அவற்றால் கடிபடுகின்றன. ஆழ்கடல் ஆங்லர் மீன்கள் (Angler Fish) ஒளிரும் பாக்டீரியாவால் ஒளிரும் உயிரி ஒளிர் பார்பெல் (Barbel) மூலம் அதன் வாய்க்கு நேராக இரையை ஈர்க்கிறது.

இணையைக் கவர்தல்

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 5: சில்லிட் நெருப்புப் புழுக்கள் பெரும்பாலும் கடற்பரப்பில் காணப்படுகின்றன. ஆனால் அவை இனப்பெருக்கம் செய்ய ஒரு பிளாங்க்டோனிக் வடிவத்திற்கு மாறுகின்றன. அங்கு பெண் இணைகள் உயிரி ஒளிர் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி தன் இணையைக் கவர்கின்றன. (© 2010 Moorea Biocode)

கடல் வாழ் விலங்குகளுக்கு உணவைத் தேடுவது மற்றும் அவற்றை அடைவது மட்டுமே வாழ்வாதாரம் இல்லை. தன் இணையை ஈர்ப்பதும் முக்கியமானது. அதற்கும் உயிரி ஒளிர்வு ஒரு சிறப்பான பங்களிப்பைச் செய்ய முடியும். ஆண் கரீபியன் ஆஸ்ட்ராகோட் (Male Caribbean Ostracod) – ஒரு சிறிய ஓட்டுமீன் – தன்னுடைய பெண் இணையை ஈர்க்க அதன் மேல் உதடுகளில் உயிரி ஒளிர் சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. சில்லிட் நெருப்புப் புழுக்கள் கடற்பரப்பில் வாழ்கின்றன. ஆனால் பௌர்ணமி நாட்களில் முழு நிலா தொடங்கியவுடன் அவை திறந்த நீருக்குச் செல்கின்றன. அங்கு ஒடோன்டோசிலிஸ் எனோப்லா (Odontosyllis Enopla) போன்ற சில இனங்களின் பெண்கள், ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நகரும் போது ஆண்களை ஈர்க்க அவை இந்த உயிரி ஒளிர்வைப் பயன்படுத்துகின்றன. இந்த ஒளிரும் புழுக்கள் கிறிஸ்டோபர் கொலம்பஸை (Christopher Columbus) புதிய உலகிற்கு வரவேற்கக் கூட உதவியிருக்கலாம். ஆங்லர் மீன், ஃப்ளாஷ்லைட் மீன் (Flashlight Fish) மற்றும் குதிரைமீன் போன்ற அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறுவதற்காக ஒளிர்வதாக கருதப்படுகிறது. அல்லது மற்றபடி இனச்சேர்க்கைக்காக தொடர்பு கொள்ள பயன்படுகிறது.

பாதுகாப்பு

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 6: இந்த மீன் மறைவதற்கு எதிர் வெளிச்சத்தைப் பயன்படுத்துகிறது. இடதுபுறத்தில் இருப்பது அது மேலே உள்ள ஒளிக்கு எதிராக நிற்கிறது. வலதுபுறத்தில் இருப்பது, உயிரி ஒளிர் கட்டமைப்புகளுடன், மேற்பரப்பிலிருந்து வரும் ஒளியுடன் கலந்து நிற்கிறது. (Smithsonian Institution)

வரவிருக்கும் வேட்டைக்காரர்களைப் பயமுறுத்துவதற்கு பெரும்பாலும் விலங்குகள் உயிரி ஒளிர்வின் வலுவான ஒளியை பயன்படுத்துகின்றன. பிரகாசமான சமிக்ஞை வேட்டையாட வரும் பெரிய விலங்குகளைத் திடுக்கிடச் செய்து திசைதிருப்பும் மற்றும் அதன் இலக்கு இருக்கும் இடத்தைப் பற்றிய குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிறிய கோபேபாட்கள் (Copepods) முதல் பெரிய காட்டேரி ஸ்க்விட் வரை, இந்த தந்திரோபாயம் ஆழ்கடலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். “கிரீன் பாம்பர் (Green Bomber)” புழு (ஸ்விமா பாம்பிவிரிடிஸ் (Swima Bombiviridis)) மற்றும் பாலிசீட் (Polychaete) குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இதேபோன்ற புழு இனங்கள் தங்களுக்குத் தீங்கு நேரும் போது அவற்றின் உடலில் இருந்து ஒரு உயிரி ஒளிர் “குண்டை” வெளியிடுகின்றன. இந்த ஆழ்கடல் புழுக்கள் கடலடியில் மிக அருகிலே வாழ்கின்றன. மேலும் அவை 2009 இல் தான் கண்டறியப்பட்டன. ஆக்டோபோட்யூதிஸ் டெலெட்ரான் (Octopoteuthis Deletron) போன்ற ஆழ்கடல் ஸ்க்விட் போன்ற சில விலங்குகள் அவற்றின் உயிரி ஒளிரும் கைகளைப் பயன்படுத்தி அவற்றை வேட்டையாடுபவைகளின் மேல் பசை போல ஒட்டிக்கொள்ளும். இச்செயல் அத்தகைய வேட்டையர்களை திசைதிருப்பக்கூடும். இந்த சலசலப்புகள் அனைத்தும் அபாய எச்சரிக்கையாகவும் செயல்பட்டு பெரிய வேட்டையர்களையும் ஈர்க்கும். சில சமயங்களில் ஒரு வேட்டைக்காரர் தன் இரையை மட்டுமே கடிக்கக்கூடும். மேலும், அருகில் சாட்சியாக இருக்கும் உயிரினம் அதன் வயிற்றில் இருந்து தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

எதிர் வெளிச்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உருமறைப்புக்கு உதவ உயிரி ஒளிர்வு பயன்படுத்தப்படும். ஒரு விலங்கின் அடிப்பகுதியில் உள்ள ஃபோட்டோஃபோர்ஸ் (Photophores) என்ற சுரப்பி உறுப்பானது ஒளியை வெளியிட்டு மேற்பரப்பில் இருந்து வரும் மங்கலான ஒளியுடன் பொருந்திப்போகும். இதனால் கீழே இருந்து தன் இரையைத் தேடும் வேட்டையாடுபவைகளுக்கு அவை தங்களுக்குத் தேவையானது எது என்பதைப் பார்ப்பது கடினமாகிறது.

மனிதத் தொடர்புகள்
கலை

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 7: இந்தப் படம் ஒளி ஓவியம் எனப்படும் புகைப்பட நுட்பத்தைப் பயன்படுத்தி, பீங்கான் மீனின் வாயிலிருந்து வெளிப்படும் ஒளியைப் படம் பிடிப்பதைக் காட்டுகிறது. (Flickr User nickel.media).

கடல் வாழ் உயிரினங்களைப் பொறுத்தவரை உயிரி ஒளிர்வு செயல்பாடானது அவை தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கும் உணவை அடைவதற்கும் அல்லது காயமடையாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுவதாகும். ஆனால் மனிதர்களுக்கு, உயிரி ஒளிர்வு மூலம் உற்பத்தி செய்யப்படும் அழகான வண்ணங்களும் ஒளியும் கலைப் படைப்புகளாக இருக்கும்.

2012 இல் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு தற்காலிக கண்காட்சியானது கலைக்கும் அறிவியலுக்கும் இடையிலான இந்தத் தொடர்புகளை ஆராய்ந்தது. கலைஞர் ஷிஹ் சீ ஹுவாங் (Shih Chieh Huang) அருங்காட்சியகத்தின் இருண்ட இடத்தில் தொங்கும் நிறுவல்களை உருவாக்கினார். அவை ஆழ்கடலில் மிதப்பது போல் ஒளிரும் தன்மை கொண்டதாக இருந்தது. சில கலைஞர்கள் உயிரோட்டமான வரைபடங்களை உருவாக்க பாக்டீரியாவை பயன்படுத்துகின்றனர் அல்லது ஒளிரும் ஒற்றை செல் உயிரினங்கள் நிறைந்த கண்ணாடி தட்டுகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.

அறிவியல்

Uyiri Olirvu(Bioluminescence) Article in tamil translated By Azhix. உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) - தமிழில்: ஆழிக்ஸ்
படம் 8: ராட்சத ஸ்க்விட்டின் இந்தப் படமானது, அதன் இயற்கையான வாழ்விடத்திலே படமாக்கப்பட்ட முதல் வீடியோவில் உள்ளது. (NHK/NEP/Discovery Channel)

கடல் மற்றும் அதன் மர்மங்களைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்களால் உயிரி ஒளிர்வை ஒரு கருவியாகவும் பயன்படுத்த முடியும். உயிரி ஒளிர்வில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானி எடி வைடர் (Edie Widder), முதல் முறையாக ராட்சத ஸ்க்விட்டைப் படமெடுக்க முயற்சிக்கும் ஒரு குழுவுடன் இருந்தார். ராட்சத ஸ்க்விட் ஒரு போலி ஸ்க்விட்டுடன் இணைக்கப்பட்ட உயிரி ஒளிர்வு ஒளியால் ஈர்க்கப்படும் என்று அவர் சந்தேகித்தார்-அது சிறிய போலி ஸ்க்விட்டை சாப்பிட விரும்பியதால் அல்ல, ஆனால் அதன் ஒளிரும் ஒளியானது “அபாய எச்சரிக்கையாக” செயல்பட்டு அருகில் பெரிய இரை இருப்பதைக் குறிக்கும் என்பதற்காக. அவருடைய கோட்பாடு சரியானது என்று நிரூபிக்கப்பட்டது. 2012 இல் ஒரு உயிருள்ள ராட்சத ஸ்க்விட் அதன் வாழ்விடத்திலே முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டது.

இக்கட்டுரையானது https://ocean.si.edu/ocean-life/fish/bioluminescence என்ற இணைய முகப்பிலிருந்து எடுத்து இங்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம்: The Ocean Portal Team
தமிழில்: ஆழிக்ஸ்