Viduthalaikkana Veli Thiranthu Kidakkirathu Poem By Vasanthadheepan. விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை - வசந்ததீபன்

விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை – வசந்ததீபன்

விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது
***************************************************
வண்ணத்துப்பூச்சி
வெளியேற முடியாத அறை
பறந்து பறந்து சுழல்கிறது
கழிவிரக்கம் மேலிடுகிறது
அவன் வயரைக்கடித்து இறந்து போனான்
சுவிட்சு போர்டுக்கும் வயருக்கும் தண்டனை
பறத்தல் பறவைகளுக்கானது மட்டுமல்ல
விடுதலையாகிப் பறக்கின்றன
எருக்கம் விதைகள்
கட்டு மீறிக் களிக்கிறது மனசு
வெறிநாய் எதிர்ப்படுகிறது
காருண்யம் உனக்கு உதவாது
கொல்வதைப் பற்றி யோசி
விழித்துக் கொள்
அறம் செத்த தேசம்
நீதி பிறழ்ந்து திரியும்
ஜன்னலை மட்டும் திறந்து விட்டால் போதாது
கதவுகளையெல்லாம் திறந்து விடுங்கள்
வெளிச்சம் வீட்டில் நிரம்ப வேண்டும்
எனக்கான விடுதலை
நீ தான் எழுத வேண்டும்
நாம் தான் கொண்டாடுவோம்
ரத்தக்கறை படிந்த சட்டை கிடந்தது
விபத்தா? அல்லது பலியா?
புரிபடாமல் இருப்பதே நல்லது
நோய்கள் எல்லோருக்கும் வருகின்றன

வைத்தியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது
ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இப்படித்தான்
குழாயடியில் குடமும் நீரும் சந்தித்தன
இசைக்கச்சேரி ஆரம்பமானது
ரசிக்காமல் எல்லோரும் சண்டையிடுகிறார்கள்.

Kala puvan's Poems கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்




சமர் பறவைகள்
•••••••••••••••••••••••••
சிறகுகளின் மடிப்புகளில்
சமர் குறிப்புகளை வைத்திருக்கும்
பறவைகள் தினம் தினம் பறக்கின்றன
தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும்
தமது வாழ்க்கைப் போராட்டத்தை மறு விழியிலும்
சுமந்து வைராக்கியத்தை இலக்காக
ஒற்றைச் சிறகிலும் தூக்கிப் பறக்கிறது
நேற்றின் மகிழ்ச்சியையும்
இன்றைய அவலங்களையும்
நாளைய எதிர்பார்ப்புக்களையும்
தனது குஞ்சுகளுக்கு உணவுடன் ஊட்டுகிறது
சமர் பற்றிய புரிதலை
தமது குஞ்சுகளுக்குக்
கூடுகளிலேயே அறியப்படுத்துகிறது
அச்சத்தின் எச்சங்களை
தமது கழுத்தில் சுமந்து கொண்டு
தூரங்களைப் பறந்து கடக்கின்றன
இப்படித்தான் பறவைகள்
தங்கள் வானங்களில்
வாழ்க்கையை நடத்துகின்றன….
ஆமென்

நிழல்
•••••••••
என்னிலிருந்து என் முன் நீளும்
என்னிலிருந்து என்னுள் இறங்கும்
என்னிலிருந்து என் பின் தொடரும்
ஆதவனுக்கும் நிழலுக்கும் அப்படி ஒரு சம்பந்தம்
நிழலுக்கு உயிர் தருபவன் ஆதவன்
இரவு நேர நிழல்கள் விளக்குகளாலும்
மெல்லிய விளக்குகொளியாலும் ஏற்படுவன
விளக்கின் கண்ணாடியில் அமரும் சிறு கொசுவின் நிழல்
சுவரில் பூதாகரமாய்த் தெரியும்
நம்மைப் பயமுறுத்தும்
இரவு நிழலைக் கண்டு பயப்படாத குழந்தைகளும்
பெண்களும் அபூர்வம்
எப்படியிருந்தாலும் நாமும் நிழலும்
ஒன்றுடன் ஒன்றாய்ப் பின்னிப்பிணைந்து கிடப்பவர்களே
நானின்றி நிழலில்லை
நிழலின்றி நானில்லை
ஆமென்

காத்திருப்பு
••••••••••••••••••
என் கனவுகளின் மீது நிஜங்களை நீ வரைகிறாய்
முகையவிழும் மலர்க் காடுகளில் வசந்தம் வந்து வீசிப்போயிற்று
பேரன்பின் உதிர்தல் பற்றி நீயறிவாயா ?
இரவுகள் உதயமாகின்றன
பகல்கள் நீளங்களை அளக்கின்றன
அது பெருங்கடல்
ஆழத்தில் உறைகிறது

நிறங்களை
வண்ணத்துப்பூச்சிகள் வர்ணஜால வண்ணங்களாய்
மாற்றுகின்றன
அவை என்
கண்ணுக்குள் நுழைத்து என் கனவுக்குள் புகுகின்றன
நாம் இருவரும் மெளனங்களை மொழியாக்கி பேசிக்கொண்டிருக்கிறோம்
நீலோற்ப மலர்கள் வண்டினங்களின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன
நம்மைப்போல……….
ஆமென்

Penniyam Pesi Parakkum Thamizh Thumbi Poem By Pesum Prabhakaran பெண்ணியம் பேசிப் பறக்கும் தமிழ்த்தும்பி கவிதை - பேசும் பிரபாகரன்

பெண்ணியம் பேசிப் பறக்கும் தமிழ்த்தும்பி கவிதை – பேசும் பிரபாகரன்




கண்டம் விட்டு கண்டம் பாயும்
தட்டான்பூச்சி தம்பி
நீ உயிருள்ள ஹெலிகாப்டர் தும்பி !

நீ தூரத்தில் பறந்தால்
தொலைவில் மழை !
நீ தொடும் தூரத்தில் பறந்தால்
படும் தூரத்தில் மழை !
காலம் காட்டும் கணவானே
கொஞ்சம் கருத்துப் பேசலாம் வா !

நீ நீருக்குள் நெடுங்காலம் வாழ்ந்தாலும்
உன்னிடம் தடுமாற்றம் இல்லை
பாருக்குள் இருக்கும் நீருக்குள்
சென்றுவிடாதே
பறக்கும் பூச்சியான நீ
பாடும் பூச்சி ஆகிவிடுவாய் !
மதுபானம் குடித்து
புது கானம் பாடிவிடுவாய் !
தன் வலிக்கு மருந்தென்று , மது வழிக்கு போவோன்
தனித்தெளிவு பெற
தனித்தமிழ் தும்பியே
தரணியெங்கும் நீ பற !

வசதியான பெண் தேடும்
வக்கில்லா குடும்பத்தார்
அழகான பெண் வேண்டும்
மன அழுக்கான வம்சத்தார்
தகுதி மீறி பெண் பார்க்கும்
தன்னை தான் இகல் பரம்பரையினார்
மனத் திசைகளில் தீ மூட்ட
கொடுந்தமிழ் தும்பியே
குரல் கொடுத்து நீ பற !

பெண்ணடிமை பேதைமை !
பெண்ணுரிமை தோழமை !
பெண் குழந்தை பால் உரிமை !
பெண் விடுதலை பார் கடமை !
என பெண்ணியம் பேசவே
கன்னித்தமிழ் தும்பியே
கானம் பாடி நீ பற!

படித்த பெண் தருவாள் ,
பாருக்கு புத் உலகம் !
பணி செல்லும் பெண் படைப்பாள் ,
தொழில் கூறும் நல்லுலகம் !
எடுத்த செயல் முடிப்பாள் ,
எமனுக்கே வழி சொல்வாள் !
கொடுத்துப்பார் அவளிடத்தில்
கொள்கையும் லட்சியமும்
அவளின்றி ஒரு பொருளும்
அசையாது என்றுணர்வோம்!
அருந்தமிழ் பெருந்தும்பி ,
அழகாக நீ பற!

பேனாவே நீ வா ,
அவள் பெருங்காவியம் படிக்கவுள்ளாள் !
பெரும் படிப்பே நீ வா
அவள் நீ பெருமை பட பணிசெய்வாள் !
முதலாளியே நீ வா
அவள் உனக்கு மூலதனமாய் தானிருப்பாள் !
கலையனைத்தும் கிளம்பி வா ,
அவள் கலை மகளாய் உனக்கருள்வாள் !
அவள் தானே சக்தியென்று
செந்தமிழ் தும்பியே
செம்மையாக நீ பற !

பின் பறக்கத்தெரியும் உன்னைப்போல் ,
பறப்பதிலல்ல சோம்பலில் !
முன் பறக்கவும் தெரியும் உன்னைப்போல்
பறப்பதிலல்ல முன்னேற்றமாய் !
சுற்றி சுற்றி நீ பறப்பாய் 360 பாகையிலும் ,
சுற்றி சுற்றி தான் உழைப்பாள்
அவள் தன் வீடு , தன் நாடு என்று
அவள் வாழ்க்கை நம் வாழ்க்கை
அவள் வாழ்க்கை சமூக வளர்ச்சி
அவள் என்று சொல்லாமல்
அவளை அவர் என்று சொல்லி
அருந்தமிழ் தும்பியே
அவனியெங்கும் நீ பற

Spyder and Fly ShortStory by Dhurai Arivazhagan சிலந்தியும் ஈயும் சிறுகதை - துரை அறிவழகன்

சிலந்தியும் ஈயும் சிறுகதை – துரை அறிவழகன்




ஜான்பாலின் அன்புமகள் ரோஸ்மேரிக்கு மூன்று வயது பூர்த்தியாகிவிட்டது. பெயருக்கு ஏற்றாற்போல் ரோஜா நிறத்தில் அழகாக இருந்தாள் குழந்தை ரோஸ்மேரி. பார்ப்பவர்கள் யாரும் அவளை ஒருமுறையாவது தூக்கிக் கொஞ்சாமல் நகர மாட்டார்கள். மகளின் அழகு குறித்து வெகு பெருமை கொண்டிருந்தார் ஜான்பால். வழியில் தன்னுடைய பழைய நண்பர்கள் யாரையேனும் சந்தித்தால் அவருடைய முதல் பேச்சு இப்படித்தான் இருக்கும்.

வீட்டிற்கு ஒரு நடை வந்துவிட்டுப் போங்களேன், பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது“.

ஜான்பாலின் உபசரிப்பு வார்த்தைகளில் மயங்கிப் போய் வீட்டிற்கு வருபவர்கள் ரோஸ்மேரியின் அழகைப் புகழ்ந்து இரண்டு வார்த்தைளாவது சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஜான்பாலின் மனம் மகிழும். வீட்டிற்கு வரும் பழைய் நண்பர்கள் சொல்வதற்கு வார்த்தைகளை அவரே எடுத்துக் கொடுப்பார்.

மூன்று வயதுதான் ஆகிறது. எப்படி துறுதுறுவென்று இருக்கிறாள் பாருங்கள்ஜான்பாலின் வார்த்தைகளை வருபவர்களால் மறுக்கமுடியுமா என்ன?

ஆமாம் ஆமாம் சிட்டுக்குருவி போலவே இருக்கிறாள்என்பார்கள் ஜான்பாலின் நண்பர்கள்.

சரியாகச் சொன்னீர்கள். திருஷ்டி சுத்திப் போட்டுப் போட்டு இவளுடைய அம்மாவுக்கு கைவலியே வந்துவிட்டது“, அடக்கமாகச் சொல்வது போல் சொல்வார் ஜான்பால்.

அழகு மட்டும் போதுமா? அறிவோடும் மகள் வளர வேண்டுமே என்ற ஆசை ஜான்பாலுக்குள் தீபத்தின் சுடராக எரிந்து கொண்டிருந்தது.

ஜான்பாலின் வீட்டிற்கு அருகில்கம்பன் மணிமண்டபம்அமைந்திருந்தது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜனவரி மாதத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அந்த மணிமண்டபத்தில். பல்வேறு ஊர்களில் இருந்தும் வண்ணமயமான புத்தகங்கள் குவிந்துவிடும் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டால்களில். விளக்கொளியில் மின்னும் புத்தகங்களின் வண்ண வண்ண சித்திரங்களைப் பார்ப்பதென்றால் கொள்ளை ஆசை ஜான்பாலுக்கு. புத்தகக் கண்காட்சி நடைபெறும் பத்து நாட்களும் பறவைகளின் வேடந்தாங்கல் போன்றதுதான் மணிமண்டபம் ஜான்பாலுக்கு. விதவிதமான சுவைமிக்க பழங்களின் வாசனையை நுகரும் பறவைகளின் மனநிலை கொண்டவராக மாறிவிடுவார் ஜான்பால்.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு குழந்தை ரோஸ்மேரியையும் அழைத்துச் சென்றார் ஜான்பால். தந்தையின் தோளில் ஒரு பொம்மையைப் போல் ஒட்டிக் கொண்டிருந்த ரோஸ்மேரியின் முகம் குவிந்துகிடந்த புத்தகங்களைப் பார்த்து சூர்யகாந்திப் பூவாக மலர்ந்துவிட்டது.மகளுக்கான சித்திரப் புத்தகம் ஒன்றுடனும் தனக்கான சில புத்தகங்களுடனும் வீடு திரும்பினார் ஜான்பால்.

சித்திரங்களால் நிறைந்திருந்த வழுவழுப்பான புத்தகம் மிகவும் பிடித்துப் போய்விட்டது குழந்தை ரோஸ்மேரிக்கு. தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ச்சியில் கண்களை விரித்து விரித்து மூடினாள் அவள். ‘முதல்வரை ஒவ்வொரு தமிழ் உயிரெழுத்துக்களும் பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது அந்தப் புத்தகத்தில். ஒரு பக்கத்திற்கு ஒரு எழுத்தும் அந்த எழுத்துக்குக் கீழ் ஒரு சித்திரமுமாக இருந்தது அந்தப் புத்தகத்தில்

முதல் பக்கத்தில் அம்மா ஒருவர் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அந்தப் படத்திற்குக் கீழ்என்ற எழுத்து பெரிதாக ஊதா நிறத்தில் மின்னியது. அடுத்த பக்கத்தில் ஆடு ஒன்றின் படமும்என்ற எழுத்தும் மின்னியது. அதற்கு அடுத்த பக்கத்தில் இலை ஒன்றின் சித்திரமும்என்ற எழுத்தும் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. புத்தகம் முழுவதும் இப்படி 12 உயிரெழுத்துக்களுக்கும் பனிரெண்டு படங்கள் அழகுற சித்திரமாகத் தீட்டப்பட்டிரு ந்தது.

என்ற எழுத்து அச்சிடப்பட்டிருந்த முதல் பக்கத்தில் தன்னுடைய ஆள்காட்டி விரலை வைத்தபடிஅம்மாஎன்றார் ஜான்பால். தந்தையின் வாயசைவையும் புத்தகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடிம்ம்மாஎன்று குழறிக் குழறிச் சொன்னாள் ரோஸ்மேரி. குழந்தையின் கொஞ்சலான உச்சரிப்பை ரசித்தபடி அடுத்தடுத்த எழுத்தை சொல்லிக் கொடுத்தபடி புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக் கொண்டே வந்தார் ஜான்பால்

நான்காவது பக்கத்தில் தோட்டம் ஒன்றில் தன்னுடைய கண்ணாடிப் பந்து கண்களுடன் பறந்து கொண்டிருந்ததுஒன்று. அந்தப் பக்கத்திற்கு மேல் நகரமுடியவில்லை அவரால். ஜான்பாலின் மனதுக்குள் அவருடைய சிறுவயது ஞாபகம் கிளர்ந்து எழுந்தது

சிறுவனாக இருந்த ஜான்பாலுக்கு அப்பொழுது எட்டுவயது இருக்கும். அந்த நாட்களில் காரைக்குடி பேரூந்து நிலையத்தின் அருகில் ஒவ்வொரு வருடமும்சோவியத்புத்தகக் கண்காட்சி நடைபெறும். ஜான்பாலை அவனது எட்டுவயதில் முதன்முறையாக அந்தப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார் அவனது தந்தை கென்னடி.

தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் வாடாமல்லி, ரோஜா, மல்லிகை, கனகாம்பரம் ஆகியவற்றின் வாசத்தை நுகர்ந்தபடி சுற்றிவரும் பரவசத்தை அடைந்துவிடுவான் சிறுவன் ஜான்பால் புத்தகக்கண்காட்சி நடைபெறும் மண்டபத்தில் சுற்றி வரும் போது. பூக்களின் நறுமணத்தைப் போலவே காகிதங்களில் இருந்து வெளிப்படும் மணமும்  அவனை வெகுவாக ஈர்த்திருந்தது.

தன்னுடைய பிறந்தநாளுக்கு புதுச்சட்டை வாங்குவதற்கு துணிக்கடை செல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட இருமடங்க்கு உற்சாகத்தில் மிதப்பான் சிறுவன் ஜான்பால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது. கண்காட்சியில் சிறு சிறு செடிகளைப் போல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்த நிமிடத்தில் பரவசம் தொற்றிக் கொண்டுவிடும் சிறுவனான ஜான்பாலின் மனதுக்குள். புத்தகஅட்டையில் தீட்டப்பட்டிருக்கும் பட்டாம்பூச்சி அல்லது குருவி ஓவியங்கள் உயிர்பெற்று சிறுவனைச் சுற்றி ரீங்காரமும் கீச்சொலியும் எழுப்பியபடி ஜான்பாலுடன் பேச ஆரம்பித்துவிடும்.

முதல் பார்வையிலேயே சிறுவன் ஜான்பாலை கவர்ந்தது ருஷ்ய எழுத்தாளர் எழுதியசிலந்தியும் ஈயும்நூல்தான். சிறுவன் ஜான்பால் வாசித்த முதல் புத்தகமும் அதுதான்.

இந்தப் புத்தகம்தான் உனக்குப் பிடித்திருக்கிறதா?” சிறுவனாக இருந்த தன் மகனைப் பார்த்துக் கேட்டார் அவனது தந்தை கென்னடி. ஏனோ தெரியவில்லை அந்தப் புத்தகத்தின் முகப்பு அட்டையில் தன்னுடைய கண்ணாடி முட்டைக் கண்களோடு பறந்து கொண்டிருந்தயின் படம் சிறுவன் ஜான்பாலின் மனதுக்குள் எதுவோ செய்து அந்தப் புத்தகத்தை கையில் எடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

இந்த ஈயைப் பார்க்கப் பாவமா இருக்கு; அதோட கண்கள் என்னமோ சொல்லத் துடிக்கிற மாதிரி இருக்குஇப்படிச் சொன்ன மகனை உற்றுப்பார்த்துப் புன்னகை புரிந்தார் கென்னடி.

வேடன்  விரித்த வலையில் கால்கள் சிக்கியபடி சிட்டுக் குருவிகளின் கூட்டமொன்று ஆகாயம் நோக்கிப் பறப்பது போன்ற படம் வரையப்பட்டிருந்த புத்தகத்தை இரண்டாவதாகக்  கையில் எடுத்தான் சிறுவன் ஜான்பால்.

சிட்டுக்குருவிகளோட கண்கள் உன்னிடம் எதுவும் சொல்லுதா?” மகனைப் பார்த்துச் சிரித்தபடிக் கேட்டார் கென்னடி.

எவ்ளோ அழகான குருவிக! எப்படி ஒற்றுமையா பறக்குதுக!!” கண்களை வியப்புடன் விரியத் திறந்தபடி சொன்னான் சிறுவன் ஜான்பால்.

சிறுவனான ஜான்பால் பெரியவனாக வளர வளர அவனுடைய புத்தகம் வாசிக்கும் ஆர்வமும் விருட்சமாக வளர்ந்தது. ஜான்பாலின் புத்தக அலமாரியை ஆயிரம் புத்தகங்கள் நிறைத்துவிட்ட போதும் தான் சிறுவனாக இருந்த போது வாங்கிய இரண்டு புத்தகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனியாகத் தெரியும் வகையில் அடுக்கிவைத்திருந்தார் சிறுமி மேரிரோஸின் தந்தையாகிவிட்ட ஜான்பால்.

தமிழில் மகாகவி பாரதி, பிரமிள், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், ஆர்.ஷண்முகசுந்தரம், இராஜேந்திர சோழன், ஹெப்சிபா ஜேசுதாசன், பாவண்ணன், .தமிழ்ச்செல்வன், சா.கந்தசாமி, அம்பை, பாவண்ணன், யூமா வாசுகி, தேவதேவன், சுகுமாரன் ஆகியோர்களின் நூல்கள் ஜான்பாலின் புத்தக அலமாரிக்க்குள் இடம் பிடித்திருந்தன. தமிழ் மொழியின் எல்லையைத் தாண்டி கேரளா, வங்காளம், கன்னடம் ஆகிய மொழி எழுத்தாளர்களும் புத்தக அலமாரிக்குள் வந்திருந்தார்கள்

கேரள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின்பாத்துமாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்‘, வங்க்காள எழுத்தாளர் அதீன் பந்தோபாத்யாயாவின்நீலகண்டப் பறவையைத் தேடி மற்றும் ஃபிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான்த் எக்சுபெரியின்குட்டி இளவரசனின் கதைஆகிய புத்தகங்களை மீண்டும் மீண்டும் எளிதாக எடுத்துப் படிக்கும் வகையில் அடுக்கி வைத்திருந்தார் சிறுமி ரோஸ்மேரியின் தந்தையாகிவிட்ட ஜான்பால்.

புத்தக அலமாரியை திறப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த கைப்பிடிக்கு அருகில் இப்படி எழுதி ஒட்டியிருந்தார் ஜான்பால் : “முக்கியமானவைகள் கண்களுக்குத் தெரியாது; இதயத்தால் பார்க்கத் தெரிந்த ஒருவனுக்கு மட்டுமே முக்கியமானவைகளை பூரணமாகப் பார்க்கமுடியும்“.

மகள் ரோஸ்மேரியைப் பார்த்து, “உனக்காக அப்பா சேர்த்து வைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து இவைகள் தான் கண்ணேஎன்று மனதுக்குள் சொல்வார் ஜான்பால்

தந்தையின் மனதுக்குள் ஓடுவதைப் புரிந்து கொண்டதைப் போல பூவாகச் சிரிப்பாள் சிறுமி ரோஸ்மேரி. வழுவழுப்பான சித்திரப் புத்தகம் கைகளைவிட்டு நழுவிப் போய்விடாமல் இருக்க தன் நெஞ்சோடு அனைத்தபடி, “ம்ம்ம்மா“, ஆடு, இலை என்று சொல்லியபடியே வீட்டுக்குள் வளைய வந்தாள் சிறுமி ரோஸ்மேரி