லால் பகதூர் சாஸ்திரி நேரு தலைமையிலான அமைச்சரவையில் 1951-1956ல் ரயில்வே அமைச்சராகவும், 1957முதல் நாட்டின் முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பின்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். 1961ல் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நேரு மறைந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி 9.6.1964ல் இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியானார். ஜனவரி 11, 1966வரை 19 மாதங்கள் இவர் ஆட்சியிலிருந்தார். இவரை மறைக்கப்பட்ட பிரமதர் என்று அழைப்பதுண்டு. சாஸ்திரி பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அரசியல் ரீதியாக இந்தி எதிர்ப்பு, பஞ்சாப் தனிமாநிலக் கோரிக்கை, கோவாவை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைப்பது போன்றவை அறைகூவல்களாக இருந்தது. பொருளாதார நிலையில், சில ஆண்டுகளாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில் வளர்ச்சியில் சரிவு, செலுத்து நிலை இருப்பில் (Balance of Payment) மோசமான நிலை, கடுமையான உணவு பற்றாக்குறை போன்றவை முதன்மையான பிரச்சனைகளாக இருந்தது. பல மாநிலங்களில் வறட்சி நிலவியதால் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்தது. 1939-1952 காலகட்டங்களில் உணவு பற்றாக்குறை காணப்பட்டது. 1953-54 முதல் 1958-59வரையிலான காலகட்டங்களில் உணவுப் பொருட்களின் விளைச்சல் அதிகமாக இருந்ததால் நிலைமை சீராக இருந்தது. அதற்கடுத்த ஆண்டுகளில் தேக்கமான நிலையே நீடித்தது. 1962-63ல் சாதகமற்ற காலநிலையினாலும், வெள்ளத்தாலும் கோதுமை, அரிசி பற்றாக்குறை நிலவியது. இக்காலத்தில் கோதுமை உற்பத்தி 10.8 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 12.0 மில்லியன் டன்னாக இருந்தது). செப்டம்பர் 1963க்கு பின்பு கோதுமை விளைச்சல் அதிகரித்ததாலும், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிக அளவிற்கு உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. 1962-63ல் நெல் மற்றும் இதர தானியங்களின் விளைச்சல் 31.9 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 34.8 மில்லியன் டன்னாக இருந்தது). இதனால் நியயாவிலைக் கடைகள் மூலமாக 1962ல் 1 மில்லியன் டன், 1963ல் 1.1 மில்லியன் டன், 1964ல் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் 1962-63ல் பொதுச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை 33 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதனிடையே இந்திய அரசு பாக்கிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்தது. சந்தையில் அரிசி விலை அதிகரித்திருந்தது பொருளாதார அளவில் மட்டுமல்ல அரசியல் மட்டத்திலும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது. எனவே அரசு துரிதமாக உணவுப் பதுக்களைக் கடுமையாகக் கையாண்டு தடுத்தது. அதிக உணவு உற்பத்தி செய்ய அடுத்த போத்திற்கு (season) வழிவகை செய்தது. கோதுமையை, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய அன்னிய செலாவணியை ஒதுக்கியது, விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தது அவர்களை ஊக்குவித்து ராபி போகத்திற்கு அதிக பயிர் செய்யும்படி செய்தது. இதற்கிடையே தென்னிந்திய மாநிலங்களில் அரிசி பற்றாக்குறை கடுமையாக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்திருந்தது. எனவே சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெல் உற்பத்தியினைப் பெருக்கவும், அதற்கானச் செலாவணியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் இச்சிக்கலைப் போக்கக் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை போன்ற உணவுப் பொருட்கள் மாற்றாக வழங்கப்பட்டன. 1965ல் இந்த நிலைமையே நீடித்தது. 1966-67ல் பீகாரில் பஞ்சம் உருவெடுத்தது. இதனால் 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைப் போக்க அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்து சமாளித்தது (Rakesh Ankit 2020). 1965-1966ல் இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டன் கோதுமையினைப் பொதுக் கடன் திட்டம் (பி.எல்.480) மூலம் இறக்குமதி செய்தது. இதனால் 40 மில்லியன் மக்களின் பசி போக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால் இந்தியா உணவு இறக்குமதி செய்தது இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக 1966ல் இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு டாலருக்கான பணமாற்று மதிப்பினை ரூ.4.76லிருந்து ரூ.7.50 ஆகக் மாற்றப்பட்டது. இதனால் கடும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது (Ramachandra Guha 2017).
உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருந்ததால் பொதுமக்களுக்கு உணவுத் தேவையினைக் குறைக்க வாரத்தில் ஒருநாள் உண்ணா நிலையில் இருக்க வேண்டும் என்று சாஸ்திரி வேண்டுகோள் வைத்தார். இதற்கான பலன் நாடுமுழுவதும் காணப்பட்டது. இதனை “சாஸ்திரி விரதம்” என்று அழைக்கப்பட்டது. தீவிர உணவு பற்றாக்குறையினைப் போக்கத் தினமும் ஒருவேளை உணவினை தவிர்க்கும்படியும் கோரிக்கை வைத்தார். இதனால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்கவும் இறக்குமதியினைக் குறைக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக “ஜெய் கிசான்-ஜெய் ஜவான்” என்ற முழுக்கதை முன்னெடுத்தார்.
உணவு பற்றாக்குறையினைப் போக்க அரசு உணவு கூட்டுறவுச் சட்டத்தை நிறைவேற்றியும், விவசாயிகளை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யவும் ஊக்குவித்தது. விவசாயக் கடன் வசதியினை உருவாக்கியும், ரசாயன உரம் பயன்படுத்தவும், நீர்ப்பாசன வசதி மற்றும் விவசாய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அரசு வழங்கியது. விளைச்சல் உயர வாய்ப்பு இருந்த அதேசமயம் கட்ச் முதல் காஷ்மீர் வரை கோடைக்கால தாக்கத்தினால் 1965ல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைகள் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகவே சாஸ்திரி பிரதம அமைச்சரான காலத்தில் உணவுப் பஞ்சம் பெருமளவிற்கு இருந்தது. இதற்காக நீண்டகால தீர்வாகப் பசுமைப் புரட்சி வித்திடப்பட்டது. நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் சார்ந்த அணுகுமுறையில் மாற்றப்பட்டு சாஸ்திரி காலத்தில் வேளாண் சார் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. சாஸ்திரி வேளாண்மைக்காக கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தன்னுடைய அமைச்சரவையினைச் சார்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களான ஹரின் முகர்ஜி மற்றும் பூபேஷ் ஆகியோரால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
பஞ்சத்தால் இந்தியாவின் உணவுத் தொகுப்பின் இருப்பு தீர்ந்திருந்தது. உணவு உற்பத்தியில் உபரியாக இருந்த சில மாநிலங்கள் இந்த நிலைமையினை தீர்க்க ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இத்துடன் இந்தியா-பாக்கிஸ்தான் போரைக் காரணம் காட்டி பி.எல் 480 ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இந்தியாவிற்கு உணவுக்காக அளித்த அனைத்து மானியத்தையும் நிறுத்திவிட்டது. சாஸ்திரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இடைத்தரகர்களையும், உணவு பதுக்கலையும் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கடிதம் எழுதினார். எதிர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் இரண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். 1) 1 மில்லின் மக்கள்தொகைக்கு அதிகமாக இருந்த 6 நகரங்களில் விகிதாச்சார உணவு விநியோகமும், முறைசாரா உணவு விநியோகத்தை 1 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள 105 நகரங்களில் நடைமுறைப்படுத்தினார். 2) உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் மீது வழக்குத் தொடுத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது (Ramachandra Guha 2017). அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் உணவு பகிர்மான முறையினை நடைமுறைப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் மட்டுமே சாத்தியப்பட்டது. 1965ல் மாநில உணவு வாணிபக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி மாநில அரசு நேரடியாகவே வேளாண் உணவுப் பொருட்களை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தது. ஆனால் இது போதுமான அளவிற்கு வெற்றியினை பெறவில்லை. எனவே நீண்டகால அடிப்படையில் உணவு உற்பத்தியைப் பெருக்கவும், சுயச்சார்பினை அடையவும் கொள்கைகள் வகுக்கப்பட்டு பசுமைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதனை இந்திரா காந்தி பிரதம அமைச்சராக இருந்த காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் (Bipan Chandra 2008).
சாஸ்திரி பிரதமராக இருந்தபோது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் தோல்வியினை எதிர்கொண்டது. நாட்டின் தேசிய வருமானம் குறைவான அளவிற்கே வளர்ச்சியினை கண்டது. பொருட்களின் விலை அதிக அளவிற்கு உயர்ந்தது. உணவு தானியப் பற்றாக்குறை கடுமையாக நிலவியது. எனவே உணவு உற்பத்தியினை அதிகரிக்கப் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தார். நேருவின் ஜனநாயக சோசியலிசக் கொள்கையினை சாஸ்திரி பின்பற்றினாலும், நேருவினால் அமைக்கப்பட்ட திட்டக்குழுவினை மாற்றி அமைத்தார். இதன்படி திட்டக்குழுவின் உறுப்பினர்களின் காலம் வரையற்ற நிலையில் இருந்ததைக் குறிப்பிட்ட காலம்வரை பணியாற்ற வழிவகை செய்தார். மேலும் திட்டக்குழுவிற்கு இணையாக “தேசிய வளர்ச்சிக் குழு” 1964ல் பொருளாதார, அறிவியல் அறிஞர்களைக் கொண்டு உருவாக்கினார். சாஸ்திரி நேரு வழியில் பயணித்தாலும் கனரக தொழிலுக்கு முன்னுரிமை என்று இருந்ததை வேளாண்மைக்கான முன்னுரிமை என மாற்றி அமைத்தார்.
தன்னுடைய அமைச்சரவை சகாக்களையும், உயர் அதிகாரிகளையும் ‘கிராமங்களுக்குச் செல்லுங்கள், மக்களையும், விவசாயிகளையும் சந்தியுங்கள்” என்றார்.
நேருவினால் முன்னெடுக்கப்பட்ட கனரக தொழிலுக்கான வளர்ச்சியானது சாஸ்திரி காலகட்டத்தில் வேளாண்மையினை மேம்படுத்த முன்னுரிமை தரப்பட்டது. சாஸ்திரி பிரதம மந்திரி ஆனதும் முதல் பணியாக வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்தார். மழை பொய்த்துப்போனதால் உணவு உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை நிலவியது. அரசின் உணவுக் கையிருப்பும் குறைந்துவிட்டது. இதனைப் பயன்படுத்தி கள்ளச் சந்தை நடவடிக்கைகள் பெருகியது என்பதை உணர்ந்து இதற்கு நீண்டகாலத் தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களிடம் இதற்கான பொறுப்பினை ஒப்படைத்தார். சுப்பிரமணியம் உடனடியாக வேளாண் விஞ்ஞானிகளை அங்கீகரித்து, அவர்களின் ஊதியத்தை உயர்த்தி, வேலைக்கான சூழ்நிலையினை மேம்படுத்தி அரசின் அதிகார வர்கம் தலையிடாமல் பார்த்துக்கொண்டார். வேளாண்மையில் தனியார் துறையினை ஊக்குவிப்பது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அன்னிய நேரடி முதலீடு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தை புத்துயிர்பெறச் செய்தார், மாநிலங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள் துவக்கவும், அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் சாகுபடியினை அதிகரிக்கப் பரிசோதனை பண்ணைகள், இந்திய விதைக் கழகம் போன்றவை உருவாக்கப்பட்டது. பி.சிவராமன், எம்.எஸ்.சாமிநாதன் போன்ற வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி மெக்சிகன் கோதுமை விதை வகையினை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1965ல் இந்திய-அமெரிக்க (சுப்பிரமணியம் – ஃபிரிமேன்) ஒப்பந்தத்தின்படி இந்தியா கணிசமான அளவிற்கு வேளாண்மை மீதான முதலீட்டை அதிகரிக்கவும், கிராமப்புறக் கடன் வழங்கச் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், ரசாயன உர உற்பத்தியினைப் பெருக்கி அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது (Ramachandra Guha 2017). வேளாண்மை உற்பத்தியினை அதிகரிக்கச் சந்தை நோக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது.
எல்.கே.ஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் 1964ல் துவக்கப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைய மூன்று முக்கிய பிரகடனங்கள் செய்யப்பட்டது (அதிக மகசூல் தரும் உயர் ரக விதைகள் பயன்படுத்துதல், உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், நீர்ப்பாசன விளைநிலங்களுக்கு மேம்படுத்தப்பட்ட இடுபொருட்களைப் பயன்படுத்துதல்). வலதுசாரி கட்சியினரும், எதிர்க் கட்சிகளும் வேளாண்மையில் முன்னெடுக்கப்பட்ட செயல்களால் முதலாளித்துவ விவசாயம் உருவாகும் என்றும் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே பயன் உடையதாக இருக்கும் என விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் 1966-67ஆம் ஆண்டு வேளாண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட புதிய முறையினால் கோதுமை உற்பத்தியானது 5.5 விழுக்காடு அதிகரித்தது. சாஸ்திரி இந்தியாவில் வேளாண்மையில் முதல் சீர்திருத்தத்தினை கொண்டுவந்தார் இதனால் இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்ல உலகில் வேளாண்மை உற்பத்தியில் முன்னணி நாடாகவும் உள்ளது.
வேளாண்மை செலவு மற்றும் விலைக் குழு 1965ல் துவக்கப்பட்டது, இக்குழுவானது வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையினைத் தீர்மானிப்பதற்கான பரிந்துரையினை வழங்குகிறது. முதன் முதலில் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலையினை இக்குழு பரிந்துரைத்தது. பழமையான நெல் ரகங்களின் பயிர்செய்யும் கால அளவு குறைந்தது 6 மாதங்களாக இருந்தது இதனைக் குறைக்கும் பொருட்டு குறுகிய கால நெல் ரகமான ஐ.ஆர்8 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு மூன்று போகம் பயிரிடும் நிலை உருவாக்கப்பட்டது. இதுபோன்றே கோதுமையில் புதிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது (ICAR 2022).). இவருடைய காலத்தில் உணவு பற்றாக்குறை அதிக அளவிலிருந்ததால் 1966-67ல் 10 மில்லியன் டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அரசின் பல்வேறு நடவடிக்கையின் காரணமாக இது 1970ல் 3 மில்லியன் டன்னாகக் குறைந்தது.
சாஸ்திரி காலத்தில் வெண்மைப் புரட்சிக்கு அடிக்கோலப்பட்டது. பால் உற்பத்தியைப் பெருக்கி, அளிப்பினை அதிகரிக்கத் தேசிய பிரச்சார இயக்கத்தை உருவாக்கினார். குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்தில் 1965ல் குரியனால் தேசிய பால் வளர்ச்சி கழகமும், அமுல் பால் கூட்டுறவும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பால் பற்றாக்குறையாக இருந்த இந்தியா தன்னிறைவினை அடைந்துள்ளது. இன்று உலக அளவில் அதிக பால் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றமடைந்துள்ளது.
சாஸ்திரி காலத்தில் 1964-65ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.8.96 லட்சம் கோடியாக இருந்தது 1965-66ல் ரூ.8.73 லட்சம் கோடியாகக் குறைந்தது அதாவது 2.63 விழுக்காடு குறைந்தது. தலா வருமானம் ரூ.16836 ஆக இருந்தது ரூ.16423ஆக குறைந்தது அதாவது 2.45 விழுக்காடு குறைந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையும் நாட்டின் நிகர தேசிய உற்பத்திக்கு 1965-66ல் ரூ.99.45 மில்லியன் பங்களிப்பினை வழங்கியது (1964-65ல் இது ரூ.102.14 மில்லியனாக இருந்தது) (Jagdish N Bhagwati and T.N.Srinivasan 1975).
அட்டவணை: சாஸ்திரி காலத்தில் இந்தியப் பொருளாதார மாற்றம் (2011-12 விலை அடிப்படையில்)
விவரங்கள் |
1964-65 |
1965-66 |
வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி (விழுக்காடு) |
8.7 |
-9.6 |
உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வழங்கல் துறைகள் (விழுக்காடு) |
7.4 |
3.3 |
வர்த்தகம், உணவகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு (விழுக்காடு) |
6.7 |
1.9 |
நிதி, மனைத் தொழில், தொழில்முறை சேவை (விழுக்காடு) |
2.8 |
3.0 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூ.கோடியில்) |
896221 |
872598 |
தலா வருமானம் (ரூ) (at NNP) |
16836 |
16423 |
Source: GoI (2022): Economic Survey 2021-2022.” Ministry of Finance, Government of India.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் 57 விழுக்காடு பங்களிப்பும், தொழில் துறை 28 விழுக்காடும், சேவைத் துறை 15 விழுக்காடு பங்களிப்பும் 1950-51ல் இருந்தது 49 விழுக்காடு, 31 விழுக்காடு, 21 விழுக்காடு என முறையே 1964-65 மாற்றமடைந்தது. சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டமானது தோல்வியினைத் தழுவியது. அதிக மக்கள் தொகை பெருக்கம், விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவை நிலவியது (Sanjeet Kashyap 2019).
சாஸ்திரி பிரதம அமைச்சராக இருந்தபோது அரசியல் ரீதியாகக் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். பல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார் என்றும், காஷ்மீர் பிரச்சனை, பாக்கிஸ்தானுடனான போர், வியட்நாம் போர் மீதான நிலைப்பாடு போன்றவை இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது. உஸ்பெகிஸ்தான் என்ற நாட்டில் உள்ள தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்தான 10.01.1966ல் திடீரென சாஸ்திரி காலமானர். சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் நவீன வேளாண் வளரச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கினார், தாரளமயக்கொள்கைக்கான முன்னெடுப்பும் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இவரைப் பற்றி இந்திரா காந்தி குறிப்பிடுகையில் “அவர் இயல்பாக மிகவும் கண்ணியமானவர், அமைதியானவர் ஆனால் போரின் போது அவர் நமது மன உறுதியை வலுவாக ஊக்குவித்தார், நாட்டின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு பங்களித்தது தேசத்திற்குத் தலைமையை ஏற்று வழிநடத்தினார்” என்றார்.
சாஸ்திரி 582 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும், இவருடைய காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் காணப்பட்டன அதனைத் திடமாகவும், நீக்குப்போக்குடன் எதிர்கொண்டார். இவர் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார், சிக்கல்களைத் தீர்க்க கூட்டு முயற்சியினை மேற்கொண்டார். தன்னுடைய அமைச்சரவை முடிவுகள் தீவிர ஆலோசனைக்குப் பிறகே மேற்கொண்டார் (Ramandeep Kaur 2019). வேளாண்மை வளரச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சியே இன்று இந்தியா உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
– பேரா.பு.அன்பழகன்