மனிதருக்குத் தோழனடிப் பாப்பா : சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா
வளவ. துரையன் கவிதைகள்
தோல்வி
**********
எதைச் செய்தாலும்
எப்பொழுதும் எனக்குத்
தோல்வியே மிஞ்சுவதேன்?
அப்போதுதான் நான்
ஆனந்தத்தை அனுபவிக்கலாமா?
தொட்டுவிடும் தொலைவிலிருந்தது
கோடு எனக்கு.
எட்டாக்கனியானதேன்?
எட்டியதுதான் இனிக்குமா?
ஓரிரு மதிப்பெண்கள்
கிடைக்காததால் கண்ட
ஒரு தோல்விதான்
எனக்குப் பாடம் சொன்னது.
கோயிலுக்குச் சென்று
முறையிடலாமென்றால்
அங்குக் கொற்றவை முன்
திரையிடுகிறார்கள்.
எப்பொழுதும் பெரும்பான்மை
எங்கும் வெல்வதுபோல்
என் தோல்வியே
என்னிடம் வெற்றி பெறுகிறது.
சோகம்
**********
எங்கு பார்த்தாலும் சோகம்
எதைப் பார்த்தாலும் சோகம்
சோகத்திற்கே சோகம் வருகிறது.
எல்லா இடத்திலும் சோகம்;
சோகத்திலிருந்து ஒளிய முடியவில்லை
தப்பிக்க இயலவில்லை
ஏனிந்த சோகமென்று
சோகமே கேட்கிறது.
எதைச் செய்தாலும்
பின்னிருந்து நாலு பேர்
கால்களை இழுத்துச்
சோகக் குழிக்குள் தள்ளுகிறார்கள்.
நரிவேடம் மறைத்து
நண்பனாயிருப்பவரின்
நாலைந்து செயல்கள்
நன்றாகப் புரிந்தபின்
சோகம்தான் மிச்சம்.
என்ன செய்வது?
அறுந்து அறுந்து விழுந்தபின்னும்
மீண்டும் கட்டுவதுதானே
சிலந்தியின் வாழ்வு.
நாவற்பழக் கண்கள்
***********************
உன்னை இதுநாள்வரை பார்த்ததில்லை.
என் கண்களுக்கு விருந்தாக நீ
இன்று வந்து காட்சி தருகிறாய்.
கறுப்பும் வெண்மையும் கலந்த
கன்றுக்குட்டியாய் நீ
‘ம்மா’ என்றழைக்கையில்
நான் அகிலத்தையே மறக்கிறேன்.
கூட்டத்தைவிட்டுப் பிரிந்து விட்ட
உன் கூக்குரல் அன்னையின் காதில்
விழுந்திருக்கும் கண்ணே!
சீக்கிரம் வந்திடுவாள் அவள்.
பட்டுப் போன்ற உன் மேனியைப்
பார்வை விட்டு அகற்றாதே.
மெலிந்த கால்களுடன்
நீ துள்ளித் துள்ளி
ஆடும் நாட்டியம்
பார்க்கப் பார்க்கப்
பரவசம் தருகிறது.
நாவற்பழக் கண்களில்
நல்லதொரு மிரட்சியும்
சிற்றுடலில் நல்ல திரட்சியும்
உன் அழகின் போதையே
இனிமையான கவிதைதான்.
யட்சி
*******
அந்தச் சுடுகாட்டுப் பாதையின்
வழியெங்கும் பிச்சிப்பூக்கள்
பூத்துச் சிரிக்கின்றன.
அங்கு அவை மட்டுமே
சிரிக்க இயலும்.
அருகிலுள்ள ஆலமரத்தடிதான்
கணக்குகள் தீர்த்துப்
பஞ்சாயத்து செய்யும் இடம்.
அரசு செலவில் அமைந்த
கொட்டகையைச் சுற்றிப்
பயணம் வந்தவரின் பாடைகள்;
ஆடு தின்ற மீதிப் பூக்கள்.
உள்ளே பல சாம்பல்கள்
எலும்புகள் ஏதுமில்லை
பாலுக்குப் போயின போலும்.
உடைந்து கிடந்த
பானையிஞ் சில்லுகள்
உலக உண்மையைச்
சொல்லாமல் சொல்லின,
உண்மையாகவே அழுத
உள்ளங்களின் கண்ணீர்
உறைந்த தடம் தெரிகிறது.
எப்பொழுது காரியம் முடியும்
போகலாம் என்று
காத்திருக்கும் ஒரு சிலர்.
காலம் வரவேண்டுமே!
மரத்தின் மீதுள்ள யட்சி
அனைத்தையும்
பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறது.
வளவ. துரையன்
“சந்துருவின் சைக்கிள்” (சிறுகதை) மரு உடலியங்கியல் பாலா.
” கமான்! சந்துரு! கமான்!
உங்களால முடியும்! இன்னும் ஐந்து சுற்றுகள்தான் பாக்கி” என்று கூட்டத்தின் முன் வரிசையில், பாவாடையை தூக்கி சொருகியபடி, கைதட்டி விசில் அடித்து “சந்துருவை” ஊக்குவிக்கிறாள் அவன் பள்ளி தோழி தாரா!
“சந்துரு” தன் தாயின் உயிரை காக்கும் பொருட்டு முழுசக்தியை செலுத்தி, “24 மணிநேர தொடர் சைக்கிள் மிதிக்கும் சாகச போட்டியில்” ஒருவழியாக வெற்றிபெற்று, பரிசு தொகை ரூ3000த்தை தாராவிடம் கொடுத்து ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் தாயின் உயிரை காக்கும்படி வேண்டுகிறான்! அவன் ஆலையிட்ட கரும்புபோலாகி சோர்ந்துவிழ…
அவன் நினைவுகள் பின் நோக்கி பயணிக்கின்றது.
“எனக்கு மூணு சக்ர சைக்கிள் வாங்கி கொடுங்க. இல்லாட்டி நான் சாப்ட மாட்டேன்”என்று ஏழ்மையில் உழலும்
தன் இளம் விதவைத்தாயிடம், கேட்டு ஒரு நாள் முழுக்க அழுது அடம் பிடிக்கிறான் ஆறு வயது சிறுவன் சந்துரு.!
பாவம் தினமும் கழனியில் கூலி வேலைக்கு சென்று சந்துருவை
காப்பாற்றும் அவளால் எப்படி அவ்வளவு காசு கொடுத்து அதை வாங்கித்தர இயலும்.?
அவள், டீ குடித்து பசியை போக்க, முந்தானையில் முடிந்து, வைத்திருந்த 5 பைசா நாணயத்தை எடுத்து கொடுத்து “போய் உனக்கு புடிச்ச பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்டு நய்னா! அறுவடை முட்ச்ச கையோட, உனுக்கு புது சைக்கிள் வாங்கித்தாறேன்” என சமாதானம் செய்ய முயல..
அவனோ “போம்மா நீ இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் பொய் சொல்ற” என்று அந்த நாணயத்தை வாங்க மறுக்கிறான்!
அவன் 10 வயதிருக்கையில், ஒருமுறை சென்னை பிராட்வே வழியாக அவன் பாட்டி வீட்டுக்கு பஸ்ஸில் செல்லும் போது…
வரிசையாக சைக்கிள் கடைகளில் பற்பல வண்ணங்களில் மிளிரும் குட்டி சைக்கிள்களை, ஆசையுடன் நோக்கி, வாங்கித்தருமாறு அழுது அடம் பிடிக்க…
அவனை சமாதான படுத்த அவள் பட்ட பாடு சொல்லி மாளாது.
தன் குழந்தைக்கு சைக்கிள் நிராசையை தூண்டும் , தன் தாய் வீட்டு சென்னை பயணத்தை, அத்தோடு அவள் நிரந்தரமாக
நிறுத்தியே விட்டாள். அவள்
சுடுமூஞ்சி அண்ணியின் கடுகடுப்பான விருந்தோம்பலும் அதற்கு வேறொரு காரணம் என்றால் அது மிகையாகாது!
ஒருநாள் மாலை அவன் தாயிடம் மூச்சுமுட்ட ஓடிவந்து “அம்மா அம்மா, நம்ப நடேசன் அண்ணா சைக்கிள் கடைல, புத்தம் புதுசா
ரெண்டுசக்கர குட்டி சைக்கிள் வாங்கி வெச்சிருக்கார்மா..
ஒரு ஹவருக்கு 50காசு வாடகையாம்(அன்று 50 காசுக்கு ஒரு வாரத்துக்கான காய்கறிகள் வாங்கிய சல்லீசு காலம்).. ஒரு அம்பது காசு குடும்மா!” என கெஞ்சி கூத்தாட , அவன் தாய் “மோகனாவோ” “என்னது ஹவருக்கு 50பைசாவா.. என்ன அநியாயமா இருக்கே, பெரிய சைக்கிளுக்கே ஹவர்க்கு நால்ணாதானே வாடகை” என அங்கலாய்த்தபடி …
“அதெல்லாம் குடுக்க முடியாது” என நிராகரிக்க அவன் முகம் சுட்ட கத்தரிக்காய் போல் சுருங்கி
” புது சைக்கிளும் வாங்கி தரமாட்ட, ஹவர் சைக்கிளுக்கும் காசு தரமாட்ட.. அப்ப எப்டிதாம்மா நான் சைக்கிள் கத்துக்கறது” என மில்லியன் டாலர் வினா எழுப்பி ஓவெனா அழுதபடி
“பக்கத்து வீட்டு ,காய்கறி விக்கற பொன்னம்மா பையன் கூட அத,
ஓட்டிட்டான்! சே நா ஏந்தான் உங்க வைத்தில வந்து பொறந்தேனோ தெரியல ” என அன்று முழுவதுமாக அழிச்சாட்டியம் செய்தான். ஒரு 50 காசை கூட அந்த குழந்தைக்கு தன்னால் குடுக்க முடியாத தன் குடும்ப பொருளாதர நிலையை நினைத்து, அவளும் கண்ணீர் சிந்தி வருந்தினாள்.
அடுத்த நாள்,…
பொன்னம்மாள் மகனுடன், ஆளுக்கு நால்ணா போட்டு அவனுடன் பாட்னர் ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தன் தாயிடம் நாலணாவை அழுது புரண்டு பெற்று, ஒருவழியாக அந்த புத்தம்புது குட்டி சைக்கிளை, ஏதோ வானத்து தேவதையை தொடுவதுபொல் தொட்டு தடவி , சைக்கிள் பழக ஆரம்பித்தான்!
இவ்வாறு ஆரம்பித்த அவன் சைக்கிள் சிநேகம்,..
விழுந்து எழுந்து, முட்டிமோதி,
முட்டி உராய்ந்து, அதனால் வரும் இரத்தக்கசிவை நிறுத்த எச்சில் தடவிய (அக்கால ஆன்டிபயாடிக் களிம்பு ) பேப்பர் ஒட்டி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது… ஒருவழியாக சைக்கிள் ஓட்டுவதில் அவன் பெரும் வல்லவன் ஆனான். அவன் சைக்கிளில் ஏறினால் அது ஜெட் விமானம் போல் பறக்கும்.,
ஊரில் நடக்கும் சைக்கிள் போட்டிகளில் ஒன்றுவிடாமல் கலந்துகொண்டு அதில் கிடைத்த சொற்ப பரிசு பணத்தை, சிறிது சிறிதாக சேர்த்து வைத்து, ஒரு புது “ஹெர்குலஸ்” சைக்கிள் வாங்கிய அந்நாளை அவன் வாழ்க்கையின் பொன்னாளாக கொண்டாடினான்.
அந்த பளபளக்கும் புது பச்சை நிற சைக்கிளை , பச்சிளம் குழந்தை போல் கொஞ்சி குலாவி,. அதை தினமும் பிரத்யேக துணி கொண்டு துடைத்து, ஆயில் போட்டு சக்கரங்களில் காத்தடித்து, பராமரிப்பது..
அவன் முழுநேர வேலையாய் மாறிப்போனது.
“ஏண்டா இப்டி சைக்கிளையே 24 மணி நேரமும் நோண்டிக்கிட்டு இருக்கே, படிச்சி பாசாகி வேலைக்கு போய் பெத்த் ஆத்தாளுக்கு ஒருவாய் கஞ்சி ஊத்த மாட்டியாடா ராசா” என அவன் தாய் அங்கலாய்க்க அவன் அதை காதில் வாங்கி கொள்வதே இல்லை.
எங்கு சைக்கிள் போட்டி நடந்தாலும் அங்கு ஆஜராகிவிடுவான். பல சமயங்களில் வெற்றியும் பெற்று
பரிசுகளை அள்ளிக்கொண்டும் வருவான். சைக்கிளின் மேல் அவன் கொண்ட அதீத மோகத்தால், பள்ளி படிப்பை பாதியலேயே நிறுத்திவிட, அவன் தாய் ஒரு நாள் முச்சூடும் அழுது அரற்றி ,அவனை திட்டி தீர்த்தாள்.
அவ்ன் பள்ளித்தோழி தாரா, ஏனோ இவன் மீதும் இவன் “சைக்கிள் சாகசம்” மீதும் மதி மயங்கி காதல் வயப்பட்டாள். அவனுக்கும், தன் பச்சை சைக்கிளை காட்டிலும் அவள் மீதும் அதீத உயிர்.
ஒருநாள் அவன் தாய்க்கு காய்ச்சல் வந்திட, வீட்டு வைத்தியம் எதுவும் வேலைக்கு ஆகாததால், நிலமை மோசமாக, அவளை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பணம் தண்ணீராக செலவாகியது. கையில் காசின்றி அவன்தன் தாயை காப்பாற்ற துடி துடிக்க,
தாரா அடுத்த ஊரில் நடக்க இருக்கும் அந்த 24 மணி நேர சைக்கிள் ஒட்டும் சாகச போட்டியை நினைவு படுத்துகிறாள்.,
அவனும் உடனே அதில் கலந்து கொள்ள,
தன் பச்சை சைக்கிள், தெய்வமாய் அவனுக்கு துணை நின்று , இடையில் மக்கர் எதுவும் பண்ணாமல், அவனுக்கு வெற்றி வாகை சூட்டி! போதிய பணமும் பெற்று தந்து! அவன் அம்மாவின் ஆருயிரையும் காப்பாற்ற உதவி புரிந்தது.
அவன் தாய் உயிர் பிழைத்து மறுபிறவி எடுத்து வர, அவன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
இப்பெல்லாம் சந்துரு தினமும் அதிகாலையிலேயே எழுந்து, சைக்கிளில் சென்று, நகரத்தில் பேப்பர் போடுவது, பால் பாக்கெட் போடுவது முதல், ஐஸ் கிரீம், தின்பண்டங்கள், உப்பு, அரப்பு பொடி ,கோலமாவு என சீசனுக்கு தகுந்தாற்போல் சகல பொருட்களையும் தெருத்தெருவாக, வியாபாரம் செய்து , நிறைய காசு சம்பாதிக்கிறான்.
சைக்கிள் பந்தயத்தை தன்
உபதொழிலாக மாற்றி, அதனால் ஆத்ம திருப்தியும் அடைகிறான்.
அவனுக்கும் தாராவுக்கும், திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டபோது,
அவன் தாயிடம் மெல்ல “அம்மா மாப்பிள்ளை அழைப்பில் நானும் தாராவும் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல உங்கள் உத்தரவு வேண்டும்” என கெஞ்சி கூத்தாட. அவள் சிரித்தபடி”என் புள்ள
“சைக்கிள் ராஜா” சைக்கிளில் ஊர்வலம் செல்ல ஏண்டா மறுப்பு சொல்லப் போறேன்!” என்று அவனை கட்டி அணைத்து உச்சிமோர்ந்து ஆனந்த கண்ணீர் உகுத்தாள்.
– மரு உடலியங்கியல் பாலா
பருவ மழை தொடக்கம் கட்டுரை – புஷ்பவேணி
மாலை 4 மணி… வழக்கத்துக்கு மாறாக சற்று முன்கூட்டியே அலுவலகம் விட்டு வீட்டுக்கு கிளம்பினோம் நானும் என் தோழியும். மழைக்கு முன்பு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் வண்டியின் வேகத்தை கூட்டினாள் தோழி. எதிர்பார்த்த(பயந்த)படியே புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் தூறலாக ஆரம்பித்த மழை, கனமழையாக பரிணமித்தது. வேறுவழியின்றி ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, நனையா வண்ணம் நடைபாதையில் நின்று கொண்டோம்.
சாரல் தெறித்து, எழுந்த இதமான குளிரின் காரணமாக சேலைத் தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டு, மழையில் மனம் லயிக்க ஆரம்பித்தேன். சிலப்பதிகாரத்தில் உள்ள “மாமழை போற்றுதும்” “மாமழை போற்றுதும்” என்ற சிந்தியல் வெண்பா நினைவுக்கு வந்தது.
“வெயிலின் சுத்தம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்” என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வந்தன. வெயிலின் சுத்தம் என்றால் மழைக்கு சுத்தம் இல்லை என்றுதானே அர்த்தம்… உலகிலேயே தூய்மையான நீர் மழை நீர்.
உலகத்தையே சுத்தப்படுத்திவிட்டு, தான் அசுத்த பட்டுப்போகும் மழைக்கு இப்படி ஒரு பழியா? இவ்வாறான சிந்தனையோட்டத்தில் என்னை அறியாமல், உதட்டில் ஒரு விரக்தி புன்னகை.
“என்ன சிரிக்கிற” என்ற தோழியின் குரல் கேட்டு “ஒன்னுமில்ல, சும்மாதான்” என்ற பதிலை உதிர்த்துவிட்டு மீண்டும் மனம் மழையின் மீது லயிக்க ஆரம்பித்தது. வானுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளிக்கோல்களை நிறுத்தி வைத்தது போல், ஆர்ப்பாட்டமாக கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை….
மழையின் சிறப்பை உணர்த்(ந்)த, வள்ளுவர் பத்து குறள்களை இயற்றி இருந்தாலும் ஒரு குறள் மட்டும் தடுமாற்றம் இல்லாமல் சொல்ல தடுமாறித்தான் போவோம்.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஊம் மழை” சிறுவயதில் நண்பர்கள் குழுவில் இக்குறளை சத்தமான குரலில் சொல்லி பழகியது நினைவுக்கு வர மீண்டும் ஒரு புன்னகை என்னை அறியாமல்..
“என்ன யோசிச்சிட்டு இருக்க, ஏன் சிரிக்கிற”
என்ற தோழியின் குரல் கேட்டு மீண்டும் “ஒன்னுமில்ல” என்ற பதிலையே உதிர்த்தேன். பெருமழை லேசான தூறலாய் வலுவிழந்து இருந்தது.
“மழை விட்டுடுச்சு வா போலாம்” என்ற தோழியின் குரலுக்கு இணையாக மற்றொரு குரல் அருகில் கேட்டது.
நடைபாதை வியாபாரி ஒருவர் மழையின் காரணமாய் கடையை ஏறக்கட்டி விட்டு, மழை நின்றதும் மீண்டும் கடையை விரிக்க ஆரம்பித்தார்.
“சனியன் புடிச்ச மழ, பொழப்ப கெடுக்கறதுக்கே வருது”
இவ்வளவு நேரம் என் சிந்தனையில் நான் சிலாகித்து, ரசித்துக் கொண்டிருந்த மழைக்கு இப்படி ஒரு வசவா? லேசான சிந்தனை கலக்கத்துடன் வண்டியில் அமர, மீண்டும் வண்டியை வேகமாக விரட்டத் தொடங்கினாள், என் தோழி.
“விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே பசும்புல் தலை காண்பதரிது”.
மழையின்றி ஒரு புல் பூண்டு கூட முளைக்காது என்ற வள்ளுவனின் பாடல் ஒரு பக்கம்.
“பொழப்ப கெடுக்கவே வருது இந்த மழை” என்ற சாடல் மறுபக்கம்…. என யோசித்தபடியே பயணித்தேன்.
“மழை திரும்ப வரதுக்குள்ள நான் வீட்டுக்கு போய் ஆகணும்” என்றபடி என் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினாள் என் தோழி. வண்டியை விட்டு இறங்கியபடி, “பார்த்து போ” என்றேன்.
அவள் கையசைத்து விடை பெற்ற பிறகும் என் சிந்தனையோட்டம் நின்றபாடில்லை. “நீரின்றி அமையாது உலகு” என்ற மழைக்கே, இத்தனை வசவாளர்கள் எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்? சிந்தனை சுழன்று அடித்தது. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல், எனக்கும் இந்த மாலைப்பொழுதில், மழைச்சாரலில் ஞானம் வந்தது போல் உணர்ந்தேன். நம்மை காயப்படுத்தும் விமர்சனங்களையும், அழ வைக்கும் வசைகளையும் தாண்டி செல்ல வேண்டும் என்ற பாடத்தை மழை எனக்கு உணர்த்தியதாய் உணர்ந்தேன்.
“வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று” என்ற குறளும்,
“சனியன் புடிச்ச மழை” என்ற குரலும் சிந்தனையில் சுழன்றன.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் மழை தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருந்தது. எனக்குள் ஒரு தெளிவு வந்த உணர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.
– புஷ்பவேணி
பண்டமாற்று சிறுகதை – சாந்தி சரவணன்
சிறுவன் வணக்கம் தன்னுடைய அம்மா போதும் உடன் பண்ணையார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். நண்பன் கும்பிடறஞ்சாமி எதிரில் வந்து கொண்டு இருந்தான்.
“என்னடா வணக்கம், ஆத்தாவோட போற, பள்ளிக்கு வரலையா?” என்றான் கும்பிடறஞ்சாமி.
வணக்கம், கும்பிடறஞ்சாமி இருவரும் வளையாம்பட்டு அரசு பள்ளியில் சென்ற வருடம் இரண்டாம் வகுப்பு முடித்து இந்த வருடம் மூன்றாம் வகுப்பு போய் உள்ளார்கள்.
“இல்லடா” என்றான் வணக்கம் தனது வேர்க்கும் கண்களை துடைத்தபடி.
“ஏன்டா?” என்றான் ஏக்கத்தோடு நண்பன் கும்பிடறஞ்சாமி.
“மூன்றாம் வகுப்பு புத்தகம் வாங்க காசு இல்லடா. அதான், ஆத்தாவோட பண்ணையார் வீட்டுக்கு வேலைக்கு போறேன்” என்றான், வணக்கம்.
“சரிடா நான் வாத்தியாராண்ட சொல்லிடுகிறேன்…” என பொத்தன் இல்லாமல் கழன்று விழும் கால் சராயைப் பிடித்து கொண்டு பள்ளிக்கு ஓடினான் கும்பிடறஞ்சாமி.
“ஆத்தா நானும் பள்ளிக்குப் போறேன் என வணக்கம் கேட்டது காதில் வாங்காமல் வேகமாக நடந்து கொண்டு இருந்தாள் ஆத்தா போதும்.
போதும், திருமணம் முடித்து வணக்கம் பிறந்தவுடன் குடிகாரக் கணவன் இசக்கி பரலோக பதவி அடைந்து விட்டான். மகன் வணக்கம் பசியும் பட்டினியோடு இருப்பதை சகிக்க முடியாமல் தான் ஒரு வேளை நல்ல சோறு சத்துணவு கூடத்தில் பள்ளியில் கிடைக்கும் என அனுப்பி வைத்தாள். ஆனால் புத்தகம் வாங்க முடியாத நிலை அவனை இன்று வேலைக்காரனாக பதவி ஏற்க அழைத்து சென்று கொண்டு இருக்கிறாள்.
களத்து மேட்டில் பண்ணையார் இராமசாமி தேக்கு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது சகாக்களோடு பேசிக்கொண்டு இருந்தார். போதும் அவரைப் பார்த்து “வணக்கம் சாமி.” என்றாள்.
“உம்.”
“என் பையனுக்கு வேலை ஏதாச்சும் கொடுங்கள் சாமி” என கேட்டாள்.
“என்னது வேலையா? ”
“ஆமாம் சாமி..”
அவளை உற்றுப் பார்த்தார். அவளின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு பின்னால் நின்று கொண்டு இருந்த அவளின் மகனைப் பார்த்தார்.
“ஏய் இங்க வா… ‘
வணக்கம் விழித்தபடி நிற்க, ” இங்க வாடா….. ,உன் பெயர் என்ன? ” என்று கேட்டார் பண்ணையார்.
“வணக்கம்…. ”
“வணக்கம், உன் பெயர் என்ன? ”
“வணக்கம்…. ”
“வணக்கமெல்லாம் சரிடா, உன் பெயர் சொல்லு…. ”
“வணக்கம்… ”
“முதலாளி, அவன் பெயர் வணக்கம்… என்றாள், போதும்.
“‘ஓ அப்படியா… டேய் இனி உன் பெயர் இசக்கி, சரியா.. இங்கேயே கூடவே நில்லு….” என்றார்.
போதும் தனது மகனைப் பார்த்து “ராசா ,முதலாளி பேச்சு கேட்கணும். ஆத்தா சாயங்காலம் போகும் போது கூப்பிட்டு கொண்டு போறேன்.. சரியா யா…. ” என வேலைக்கு சென்றாள்.
அவள் மனம் ஏனோ கனத்தது. தனது மகனைப் படிக்க வைத்துப் பெரிய ஆளாக ஆளாக்க வேண்டும் என்ற அவளது கனவு சுக்கு நூறாக உடைந்து போனது. நாட்கள் கடந்து கொண்டு இருந்தது. இசக்கி என்கின்ற வணக்கத்திற்கு முதலாளிக்கு கை பிடித்து விடுவது தான் வேலை….
ஒரு நாள் முதலாளி சென்னையில் இருந்து வந்துள்ள மகன் செந்திலுக்காக ஆடு, கோழி வாங்கி சமைக்கச் சொல்லி விட்டுப் பஞ்சாயத்துக்குச் சென்றார். அந்த இடைவெளியில் படிக்கட்டில் அமர்ந்தபடி இரண்டாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து படித்து கொண்டு இருந்தான் நமது வணக்கம்.
செந்தில் அவனைப் பார்த்தவுடன் புத்தகத்தைப் பின்புறம் மறைத்துக் கொண்டான்.
“வணக்கம், இங்கே வா… ”
“இல்லண்ணா நான் இனி படிக்க மாட்டேன், அய்யா கிட்ட சொல்லிடாதீங்க” என அச்சத்தோடு நிற்க., அதே நேரம் வேலை முடித்து வந்த போதும் இதைப் பார்த்து விட்டாள்: “தம்பி எசமான் கிட்ட சொல்லிடாதிங்க. எனக்கு தெரியாமல் புத்தகத்தை எடுத்து வந்துட்டான்” என்றாள் பதட்டத்தோடு.
“அக்கா பதறாதீங்க . இங்கே வாங்க என்ன நடந்தது என எல்லாம் கேட்டு அறிந்து கொண்டான்.
“சரிக்கா நீங்க போங்க, நான் பார்த்துகிறேன், என்றான் செந்தில்.
“எசமான் கிட்ட சொல்லிடாதீங்க தம்பி… ”
“இல்லக்கா நீங்க போங்க!” என்று சொல்லி அம்மா, பிள்ளை இருவரையும் அனுப்பி வைத்தான்.
அவன் நினைவுகள் சற்றே பின்னோக்கிச் சென்றது. செந்தில் தமிழ் பட்டதாரி. முற்போக்குவாதி. இவையெல்லாம் தோழன் அமர் நட்பினால் கிடைத்த மாற்றம். ஆனால் எந்த ஒரு மாற்றத்தையும் பிற்போக்குக்குச் சொந்தமான தனது கிராமத்தில் விதைக்க முடியவில்லையே என ஆதங்கம் அவனை சென்னைக்கு அனுப்பியது.
சென்ற வாரம் தோழன் அமரின் அழைப்பின் பெயரில் அவன் தலைமை ஏற்று இருக்கும் முற்போக்குப் படைப்பாளிகள் மாநாட்டிற்கு சென்று இருந்தான். அங்கு “புத்தக அலமாரி” என்ற ஒரு நிகழ்வு அவனுள் பல மாற்றங்களை உண்டு செய்தது. அனைவராலும் அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியாது. நூலகம் செல்ல இயலாதவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தோழர்கள் அவர் அவர் படித்த புத்தகங்களை அந்த புத்தக அலமாரியில் வைத்து விட்டு படிக்காத புத்தகங்களை எடுத்து செல்லலாம். பண்டமாற்று முறை. அனைவராலும் அனைத்து புத்தகங்களை விலை கொடுத்து வாங்க முடியாத நிலை, இந்த புத்தக மாற்றுமுறை அனைவருக்கும் பயன் தரும். அந்தச் செயல் அரங்கத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அன்றே செந்தில் முடிவு செய்து விட்டான். நம்மால் முடியாததை புத்தக வாசிப்பு நிச்சயமாக உண்டு செய்யும். புத்தக பக்கங்கள் மட்டுமே புரட்டபடவில்லை வாசகர்க்ளும் தான். அது மட்டுமல்ல தனது தொடர் செயல் தான் மாற்றத்தை தனது கிராமத்தில் ஏற்படுத்த முடியுமென .
“தம்பி, என்னப்பா ஏதோ யோசனையா இருக்கே?” என்ற அப்பாவின் குரல் அவன் நினைவுகளை மீட்டு எடுத்தது.
“ ஒன்றுமில்லை அப்பா வெளியே போய்விட்டு வந்து விடுகிறேன்” என நேராக தலைமை ஆசிரியரை பார்க்க சென்றான்.
மறுநாள் மூன்றாம் வகுப்பில் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு ஏடு எடுத்துக் கொண்டு இருந்தார்.
“சண்முகம்…. ”
“உள்ளேன் அய்யா”
“கும்பிடறஞ்சாமி,…. ”
“உள்ளேன் அய்யா”
“வணக்கம்…. வணக்கம்”
புத்தக அலமாரியில் இரண்டாம் வகுப்பு புத்தகத்தை வைத்து விட்டு மூன்றாம் வகுப்பு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வேகமாக ஆசிரியர் முன் சென்று “உள்ளேன் அய்யா” என்றான், வணக்கம்.
– சாந்தி சரவணன்
ஒரு மீனின் பிரசவம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா
கோடை முடியும் தருவாயில்… ஆடிமழை தேடிவரும் …சற்றே கடினமான காலக்கட்டம் அது. “சின்னான்” தன்.. தூண்டில், வலை சகிதம்.. மீன் பிடிக்க ஏரிக்கு புறப்பட எத்தனிக்க, மனைவி கருப்பி, “மூணு நாளா குடும்பமே பட்டினி… நீ மீன் புட்ச்சி விக்காபோனாலும் போட்டும்.. வீட்டுக்காவது ஒண்ணு ரெண்டு மீன புடிச்சிட்டு வா.. அத துண்ணாவது உசுரு வாழலாம்..கூறு கெட்ட மனுசன் !இவன நம்பி 3 புள்ள பெத்த என்னிய ஜோட்டால அடிக்கணும்” என கடைசி வார்த்தைகளைச் சற்றே அடக்கி உச்சரித்தாலும் அது அவன் காதில் சுத்தமாக ஒலித்து ரீங்காரம் செய்தது!
இதெல்லாம் அவனுக்கு, பழகிப்போன.. அண்ணாட வசவுகள்தான் என்றாலும.. இன்று ஏனோ அவன் மனம் விரக்தியில்… தன்மேல் உயிரையே வைத்திருந்த, மாமன் மகள் அஞ்சலியின் காதலை நினைத்து அலைக்கழிந்தது…! அழுக நீரின்றி வற்றிப்போன கண்களுடன் மௌனமாய் “அன்னம்பேடு” ஏரி நோக்கி மெல்ல நடையைக் கட்டினான் சின்னான்!
அந்த சீசனில் மீன்கள் அவ்வளவாகக் கிடைக்காது என்பதால்.. மீன்பிடிக்க யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது ஏரிக்கரை… ஏரியில் தண்ணீரும் பாதியாக குறைந்து, மழைக்கு ஏங்கி கொண்டு இருந்தது! அதுவுமின்றி… அது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் தொடக்க காலம் வேறு!
இவன்கூட வந்திருக்க மாட்டான்.. அவன் மனைவி நச்சரிப்பு தாங்காமல் தான் ..வேறுவழி இன்றி வந்தான்! வெகுநேரம் வெயிலில் தலை காய்ந்து சுற்ற தொடங்கியது தான் மிச்சம்.. ஒரு மீனும் கிடைக்க வில்லை…
‘இன்று வீட்டுக்கு வெறுங்கையுடன் சென்றால் என்ன சண்டை நடக்க போகிறதோ?’என்று எண்ணியபடி வலையை இழுக்க முற்பட்டபோது.. என்ன ஆச்சரியம் ஒரு பெரிய மீன் மாட்டியிருந்ததை உணர்ந்து துள்ளிக் குதித்து மகிழ்ச்சியோடு, லாவகமாக கரைக்கு வலையை இழுத்தபோது… சுமார் இரண்டு கிலோ எடையுள்ள மீன் சிக்கி உள்ளதை கண்டு மேலும் இன்புற்று அதை மேலும் கிட்ட இழுத்து பார்த்தபோது ,அவனுக்கு பகீர் என்றது….
ஆம் அது கருவுற்று நிறைமாத கர்ப்பிணி போல், பெருத்த வயிற்றுடன், மூச்சு விடத் திணறியபடி, படபட என துடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து இவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.. அதை முற்றுமாய் வெளியே இழுக்காமல் பாதி நீரில் மூழ்க விட்டு, மெல்ல அதை ஆராய்ந்தான்!
ஆம் அது ஒரு “அரியவகை” மீன்.. மிக அதிக விலைபோகக் கூடிய மருத்துவ குணம் கொண்ட மீன்.. என்று அறிந்ததும் அவன் மனம் மேலும் சங்கடப்பட்டது.
அவன் மெல்லத் தண்ணீரில் வலைக்குள் கைவிட்டு அதன் வயிற்றை சோதித்த போது, அது இன்னும் ஓரிரு மணிநேரங்களில் நூற்றுக் கணக்கான குட்டிகளை
ஈன்றெடுக்கப் போகிறது என்பதை அறிந்துகொண்ட..அவன் மனம் அதன்மேல் கழிவிரக்கம் கொண்டது. அந்த உச்சி வெயில் சூரிய ஒளியில் அதன் கண்களை
பார்த்து அப்படியே ஆடிப்போய்விட்டான். ஆம் அவன் மீனின் கண்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் ஆற்றலை தன் பத்து வருட மீன்பிடி தொழிலின்
வாயிலாக நன்கு அறிந்து வைத்திருந்தான்!
“நண்பா! நீ என்னைக் கொன்றுவிட்டால், நூற்றுக்கணக்கான அரியவகை மீன்குஞ்சுகளும் என்னுடன் சேர்ந்து இறப்பது திண்ணம்..நீ கருணை கூர்ந்து என்னை விட்டுவிட்டால், இந்த நூற்றுக்கணக்கான குட்டி மீன்கள் நன்கு வளர்ந்து உனக்கும் உன் இனத்தவற்கும் கிடைக்குமே! அது உங்களுக்கு பெருத்த
லாபம் தருமில்லையா? ஆகவே! தயவு செய்து என்னை விட்டு விடு.. பிரசவ வலி வேறு வந்து என்னை கொல்லுகிறது..” என அந்த கண்கள் இவனிடம் கெஞ்சுவது, இவனுக்கு நிதர்சனமாகவே புரிந்தது!
ஆனால் மறுபுறம் அவன் மனைவியின் முகம் அவன் கண்முன் தோன்றி “யோவ்! துப்புகெட்ட மனுஷா..! நாளைக்கு மட்டும் நீ மீனோட வர்லன்னு வெய்யி,
கண்டவனுக்கு முந்திய விரிச்சாவது.. நானும் எம் புள்ளைங்களும், வக்கணையா மீன்குழம்பு சாப்பாடு சாப்டுவோம்.. ! ஆமா சொல்லிபுட்டேன்!” என்று நேற்றிரவு..
இவனைக் காறித் துப்பாத குறையா அசிங்கபடுத்திப் பேசியதை எண்ணியும், நான்கு வயது கடைக்குட்டி பெண் “அப்பா அப்பா! “மீன்சென” அவ்ளோ
ருசியாமேப்பா ? பக்கத்து வீட்டு மேரி சொன்னாப்பா..!. எனக்கு சாப்புடனம் போல ,ஆச ஆசையா இருக்குப்பா!” என அடிக்கடி தன் காலைப் பிடித்து கெஞ்சி,
கொஞ்சுவது.. அவன் நினைவில் வந்து நிழலாட.. ஒரு நிமிடம் அவன் தந்தை மனம் தன் மகள் பாசத்தால் தடம் மாறியது..!.
ஆனால் அடுத்த நொடியே அந்த மீனின் கண்களை மீண்டும ஒருமுறை உற்று நோக்க. அது துடிதுடித்தபடி.. “நண்பா! நீ ஒரு குழந்தை பற்றி மட்டுமே கவலை
படுகிறாய்!!, ஆனால் நானோ, இந்த உலகை முதல் முறையாய் தரிசிக்க நூற்றுக்கும் மேற்பட்ட என் குட்டிகளை பற்றி கவலை படுகிறேன்,!
தயவு கூர்ந்து என் குட்டிகளை எப்படியேனும் கைவிடாமல் காப்பாற்று!” என்று (தன் மனக்குரலை ஒட்டுகேட்டு) , தன்னிடம் கெஞ்சுவது போல் அவன் உணர்ந்தான்… பிரசவ வலி அதிகரித்ததாலும், குட்டி போடும் நேரம் நெருங்கியதாலும்.. அதன் துடிப்பும் துள்ளலும் அதிகரிப்பதை கண்டு, என்ன முடிவு எடுப்பது என இருதலைக்
கொள்ளி எறும்பு போல்.. அவன் பெரும் குழப்பத்தில் சிக்குண்டு தவித்தான்!.. கடைசியாக அதன் கண்களை மீண்டும் ..உற்று சிலபல நொடிகள் பார்த்த அவன்…
அதன் மரணபயத்தையும்; குட்டிகளை இழக்க நேரிடும் துயரத்தையும் .. அந்த கண்களில் தீர்க்கமாக கண்டு… சட்டென உடனே ஒரு முடிவுக்கு வந்து !வலையில்
இருந்து அந்த அதிசய மீனை விடுவிக்க… அது சர்ரென்று, விட்டால் போதுமென தப்பித்து ஓடாமல்…
இவன் அருகிலேயே.. தண்ணீரில் சிலபல வட்டமடித்துத் தன் நன்றியுணர்வை காண்பித்து… பிறகு மெல்ல நிதானமாக… தண்ணீருக்குள் புகுந்து … நீந்தி அதன் ஆழத்துக்கு சென்று மறைந்தது!
இப்போது .. அவனுக்கு சொல்லொணா மகிழ்ச்சி மனதில் தாண்டவமாடியது…! ஏதோ உயிர்களைப் படைக்கும் “பிரம்மதேவன்” போல் தன்னை தானே உணர்ந்து
மகிழ்ந்தான்! அந்த நூற்றுக்கணக்கான மீன் குஞ்சுகள் தன்னை முத்தமிட்டு கொஞ்சுவது போல் கற்பனை செய்தான்… அந்த முத்தங்கள் தன் குழந்தைகளின்
முத்தத்தை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு இனிப்பாய்! இதமாய் இருந்தது! அவனுக்கு!!
அவன் மனைவி வசவு பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல்.. நேரே தன் பள்ளி நண்பனிடம் ‘ஒழக்கு’அரிசியும், போகும் வழியில் கந்தன் கோயில் தோட்டத்தில், பொன்னாங்கண்ணி கீரையையும் பறித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அவளோ? கோபத்தின் உச்சியில் “ஏன்யா! எங்கள என்ன ஆடு மாடுன்னு நினைச்சுட்டியா? கீர தழன்னு துண்றத்துக்கு…” என கெட்ட கெட்ட வார்த்தைகளில்
திட்டியபடி… கஞ்சியும் கீரைக் குழம்பும் செய்து உண்டாள்! … இவன “சாப்பிடு” என்று ஒரு வார்த்தை கூட கூப்பிடவில்லை. அவனுக்கும் மனம் நிறைந்து இருந்ததால்
பசிக்கவும் இல்லை..!
அடுத்தநாள்.. பொழுது விடிந்ததும், நேரே ஏரிக் கரைக்குச் சென்று அமர்ந்து அந்த அழகிய மீனை தேடி அவன் விழிகள் நீரில் அலைபாய்ந்தது. அவன் எதிர்பார்ப்பு
வீண்போகவில்லை.. அந்த மீன் இவனை நோக்கி பாய்ந்தோடி வந்து மகிழ்ச்சியில் வட்டமடித்து வட்டமடித்துச் சுழன்றது!. இவன் கண்களோ மீன் குஞ்சுகளை தேடிச்
சற்றே ஏமாற்றம் அடைந்தபோது..
அந்த தாய் மீன் தன் வாயை அகலமாய் திறக்க.. நூறுக்கும் மேற்பட்ட குட்டி குட்டி குஞ்சுகள் வெளிவந்து தாயின் வாயருகே நீந்த அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை… அந்தத் தாய் மீன் மீண்டும் அகலமாய் வாய் திறக்க ஒன்றில்லாமல் அனைத்துக் குஞ்சுகளும் அதற்குள் அடைக்கலம் அடைந்தன!
அவன் ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல் இன்புற்றான். சற்று நேரத்தில் அது அவனை விட்டு அகன்று சென்றது. இவன் நேரே “மோசஸ்” அரிசி மண்டிக்கு
விரைந்தான்..அங்கு மூட்டை தூக்கும் வேலையில் சந்தோசமாய் சேர்ந்து கொண்டான்!
அந்த வேலை அவனுக்கு புதிது என்பதால், மிகவும் கஷ்டப்பட்டான்!சில பல நாட்களில் அந்த வேலை பழகி போக… அவன் வீட்டில் அடுப்பு , தடையின்றி எரியத்
தொடங்கியது! தினமும் அதிகாலை ஏரிக்குச் சென்று தன் மீன் தோழியை சந்திக்க அவன் மறப்பதே இல்லை..ஒரிரு வாரங்கள் கழித்து, மீன் தோழி மட்டுமே
வந்தது.. அதன் குஞ்சுகளைக் காணவில்லை… !
ஆம்! அவை வளர்ந்து சுதந்திரம் பெற்று விட்டன என தெரிந்து கொண்டான். இப்போதெல்லாம் அவன் மீன் தோழி. அவன் கைகளில் தவழ்ந்து விளையாடியது!
அவனுக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சியது.!. பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ..அந்த மீனை அவன் ஒரு நாள் கூட முத்தம் கொஞ்ச மறந்ததே இல்லை! அன்பு
அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்பதே அபரிமிதமான உண்மை!
நீலியின் தோழி கவிதை – கனிராஜ் சௌந்திரபாண்டி
அப்பா வேலை பார்க்கும்
அலுவலகத்தை
சென்னைக்கு மாற்றுகிறார்களாம்
நாம் நாளைக்கு கிளம்ப வேண்டும்
நீலி என்றாள் அம்மா
நீலியின் தோழிகள் நிறையபேர்
இருக்கிறார்கள் பிரிந்து
செல்வதில் அவளுக்கு கவலை
எல்லா தோழியிடமும் எடுத்து
சொல்லும் நீலிக்கு கண்ணீர்
தேம்பியது
தினமும் ஒரு பூ கொடுக்கும்
தோழி ரோஜாவிடம்
விடும் கண்ணீ ரில் மலர்ந்தது
கடைசி அன்பு பரிசு.
சக்தியின் கவிதைகள்
ஆணின் அன்பு
******************
பல ஆண்டுகள் ஆன பின்னும்
என் மன எண்ணங்களுக்கு வார்த்தை கூற முடியாத
ஊமை தான் நான்…
எனக்காக நீ வாழ்ந்த போதும்
உன் மனநிலை அறிய விரும்பாத
மானுடன் தான் நான்…
விட்டுக்கொடுத்தலிலும்…
விரல் பிடித்து நடப்பதிலும்…
உன் விருப்பம் அறியாமல்
விலகிச்சென்றே…என்
எண்ணங்களை மதிப்பவன்
தான் நான் …
பிறந்த நாளுக்கோ…
திருமண நாளுக்கோ…
வாழ்த்து கூறினால்…என்
கர்வம் குறைந்திடுமோ…என்னமோ…
அதனாலேயே…அனைத்தும்
மௌனமாய் கடந்தவன்
தான்…நான்…
புதிதாய்…ஆடையோ…நகையோ
நீ அணிந்து…நல்லாயிருக்கா…
என்று மனதார கேட்ட போதும்…
ம்ம்…என்ற ஒற்றை வார்த்தைக்குள்
உன் அழகையும்…உன் எதிர்பார்ப்பையும்…உடைத்தவன்
தான்…நான்…
சின்னதாய் உடல்நலக்குறை…
எனக்கோ ஏற்பட்டாலும்…உன்
உயிர் நோக துடிக்கும்…காதலுக்கு
ஒரு போதும் கடனாய்…ஒன்றும்
செய்யாமல் தவிக்க விட்டவன்
தான்…நான்…
நான்…நானாக வாழ…வழி
கொடுத்தவள் நீ தான்…
உன் வலி மறைத்தவளாய்…
எனினும்…இந்த மௌனமொழி
ஊமையனுக்கு…சொல் கோர்க்க
முடியவில்லை எனினும்…
எழுத்துகளை கோர்த்து…காகிதமாக
மடித்துள்ளேன்…
வெளிக்காட்டாமல் இருந்த அன்பின்
அடையாளமாய்…
யாதுமாகி நின்றாள்
************************
ஞாலம் முழுதும் உள்ள வேள்வியை…
தன் ஞானம் கொண்டே கடத்திடுவாள்…
அன்பென்ற விதையில்…
பல விருட்ச மரங்கள்…வேரூன்றி
கனி சுவைக்க காரணமாக
இருந்திடுவாள்…
ஆறுதலாய் சாய…தோள்
கொடுக்கும் தோழியாய் இருந்திடுவாள்…
அதர்மம் கொண்ட குணங்களுக்கோ
ஆத்திரமாய் அகன்ற விழி கொண்டே
அதட்டிடுவாள்…
திறம் அறிந்தும் அறம் காக்க
போரிடுவாள்…
அறத்தினுள்ளே பல்துறை அறிவை
வளர்த்திடுவாள்…
நாள் முழுதும் ஓடோடி உழைத்திடுவாள்
உழைப்பில் ஓய்வை கொஞ்சம்
எதிர்பார்த்திடுவாள்…
சுற்றம் சூழ குற்றம்
உரைப்பினும்…தன் மனம்
எண்ணுவதை செய்திடுவாள்…அவள்
செய்கையிலே பல அர்த்தங்கள்
உள்ளதை மௌனமாய் உணர்த்தி கடந்திடுவாள்…
இன்னல் அனைத்தும் இனிமையாய்
மாற்றவே துணிந்திடுவாள்…
மகிழ்ச்சியின் உச்சம் வந்த போதிலும்
தன்னடக்கத்தில் தலை சிறந்திடுவாள்…
பிறர் நலனில் அக்கறை கொண்டே வாழ்ந்திடுவாள்…சுயத்தின்
சூட்சமம் உணர்ந்தே விலகிடுவாள்…
கண்ணின் கருவிழியாலே…காதல் வார்த்தை பேசிடுவாள்…காதலுக்கோர்
கட்டுப்பாட்டை கொள்கையாகவே
விதைத்திடுவாள்…
பிறவியிலே உயர்பிறவியாய்…
தன் பிறப்பை போற்றி சிறந்திடுவாள்…
பிறப்பொக்கும் எல்லா உயிரும்
சமமென எண்ணி உரிமைப்படுத்திடுவாள்…
வாழ்வு முழுதும் எல்லாமுமாகி…
வழிநடத்தி சென்றிடுவாள்…
வழிப்போக்கருக்கும் பாதை அமைத்தே
தன் வழியில் எல்லை சேர்ந்திடுவாள்…
வாழ்வும்…இவளும்
இரண்டறக்கலந்த…ஓர் உணர்வாய்
வாழ்க்கை முழுதும்…யாதுமாகி
நிற்பவள் இவள் தானே…
பெண் எனும் வடிவில் உலகைக் காக்க
வந்த உன்னதமானவள் பெண் தானே…!!








