போ(ர்)ட்டி களம் சிறுகதை – சாந்தி சரவணன்
“ப்ரியா கிளம்பிட்டியா” பிள்ளைகள் பள்ளி வாசலில் காத்திருப்பார்கள். பள்ளி விடும் நேரம் நெருங்கிவிட்டது, சீக்கிரமா வா என்ற வெண்பாவின் குரலுக்கு, “இதோ வந்துட்டேன் வெண்பா”, என்று வீட்டு சாவியை தேடிக் கொண்டு இருந்தாள் ப்ரியா.
ப்ரியாவும் வெண்பாவும் நெருங்கிய தோழிகள், பள்ளி கல்லூரி என இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். வெண்பா எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதையே ப்ரியாவும் தேர்ந்தெடுப்பாள். ப்ரியா எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதையே வெண்பாவும் தேர்ந்தெடுப்பாள். திக்கஸ்ட் ஃபிரண்ட்ஸ் என பெயர் பெற்றவர்கள்.
அதனுடைய நீட்சியாக இருவரும் தரமணி ஐ.டி சென்டரில் ஐ.டி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்கள்.
வெண்பாவிற்கு அதே ஐ.டி சென்டரில் பணிபுரிந்து கொண்டிருந்த மனோஜோடு காதல் மலர்ந்தது. இருவரும் அவர்கள் வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு அழகிய செல்ல மகன் பெயர் ராகுல். இப்பொழுது அண்ணாநகரில் உள்ள H.B.O.A பள்ளியில் ஆறாவது படித்துக் கொண்டிருக்கிறான்.
வெண்பாவின் திருமணம் முடிந்து 3 வருடம் கழித்து தான் ப்ரியாவின் திருமணம் நடந்தது. அப்பா அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளை. ரமேஷ். கட்டுமான கம்பெனி வைத்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார். திருமணம் முடிந்து இரண்டு வருடம் கழித்து தான் அவர்களுக்கு ரிஷி பிறந்தான். ரமேஷ் நிறுவனம் வேளச்சேரியில் உள்ளது. அதனால் சென்ற வருடம் வரை வேளச்சேரியில் தான் குடியிருந்தார்கள்.
தோழி வெண்பா அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய மகன் ரிஷியும் வெண்பாவின் மகன் ராகுலும் தங்கள் இருவரை போலவே தோழமையோடு இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காவும் கணவரை நச்சரித்து, வெண்பா இருக்கும் அதே வெல்கம் காலனி அண்ணாநகரில், வெண்பாவின் பக்கத்து விட்டுற்கே ப்ரியா குடும்பமும் குடி வந்து விட்டார்கள்..
ரிஷியை ராகுல் படிக்கும் அதே H.B.O.A பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள்.
இப்பொழுது தோழிகள் இருவருக்கும் மகிழ்ச்சி தான். சினிமா, கோயில், ஷாப்பிங் என இருவரும் சேர்ந்தே செல்ல நல்ல வாய்ப்பு.
பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர தான் இருவரும் இப்போது ஒன்றாக கிளம்பி கொண்டிருக்கிறார்கள்.
ப்ரியா சீக்கிரமா வா …. என்றாள் வெண்பா….
இதோ வந்துட்டேன் வெண்பா என கீழே இறங்கி வந்தாள் ப்ரியா.
வழக்கமாக இருக்கும் ப்ரியாவாக இன்று தோன்றவில்லை.
சரி பள்ளியிலிருந்து வந்த பின் கேட்டுக் கொள்ளலாம் என வெண்பாவும், வா கிளம்பலாம் என இருவரும் H.B.O.A பள்ளி வாசலில் வண்டியை பார்க் செய்துவிட்டு காத்துக் கொண்டிருந்தார்கள்.
ப்ரியா ஏதோ சிந்தித்த வண்ணம் இருந்தாள்
வெண்பா,”ப்ரியா ஏன் டல்லா இருக்கே” என கேட்க
“ஒன்னும் இல்லடி”, என்றாள் ப்ரியா
“எனக்கு தெரியாதா, என்ன விஷயம் சொல்லு, ஏதாவது சண்டையா” என கேட்ட வெண்பாவிடம்
இல்லப்பா, இன்னிக்கு ரிப்போர்ட் கார்ட் தருவாங்க. ரிஷி என்ன மார்க் வாங்க போறான்னு தெரியல அதுவே கலக்கமா இருக்கு.
“பைத்தியமா டி நீ”. இதுக்குப் போய் யாராவது டென்ஷனாக இருப்பாங்களா. ரிலாக்ஸாக இரு என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பள்ளியின் முதல் மணி அடிக்கப்பட்டது
தேன் கூட்டை நோக்கி வரும் தேனீக்கள் கூட்டம் போல் குட்டி மனிதர்கள் வேகமாக தங்கள் தாயை காண ஓடி வந்தார்கள்..
நம் ரிஷியும் அம்மாவைப் பார்க்க வேகமாக ஓடி வந்தான்.
“மம்மி” என ப்ரியாவை கட்டி பிடிக்க ஓடி வந்த ரிஷியை ப்ரியா அப்படியே நிறுத்தி, ரிப்போர்ட் கார்ட் கொடுத்தாங்களா… ரிஷி என வினவ ஆரம்பித்தாள்
குழந்தை அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
“மம்மி மம்மி ஐஸ்கிரீம் வாங்கி தாங்க மம்மி. மம்மி ப்ளீஸ்.. ஐஸ்க்ரீம் வாங்கி தாங்க மம்மி”.
“மொதல்ல ரிப்போர்ட் கார்டை கொடு”,என வேகமாக ரிஷியின் ஸ்கூல் பேகை திறந்து ரிப்போர்ட் கார்டை வெளியே எடுத்தாள்.
அடுத்த நொடி ரிஷியின் முதுகில் அடி விழத்தொடங்கியது
குழந்தை அழ ஆரம்பித்து விட்டான்
“ஏய் ப்ரியா என்ன நினைச்சிகிட்டு இருக்க மனசுல”. குழந்தையைப் போட்டு ஏன் இப்படி அடிக்கிற என்று வெண்பா கேட்பது ப்ரியாவின் காதுகளுக்குள் செல்லவே இல்லை.
வெண்பா ரிஷியை இழுத்து தன்னோடு வைத்துக் கொண்டாள். ரிப்போர்ட் கார்டை வாங்கி பார்த்த வெண்பா அதிர்ந்தாள். குழந்தை “A+” Grade தானே வாங்கி இருக்கிறான். Above 85 என்றால் தானே “A+” Grade அடுத்தது “O” Grade. அதற்கு எதற்கு இவள் குழந்தையை போட்டு அடிக்கிறாள் என கடுப்பானாள்.
ரிஷி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் என அழுதுக் கொண்டே இருந்தான்.
சுற்றியிருந்த பெற்றோர்கள் எல்லாம் இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், சிலர் பார்க்காமல் கடந்து சென்றார்கள்.
அதைக் கூட ப்ரியா உணர்ந்த மாதிரியே தெரியவில்லை. அவளுடைய புலன் விசாரணையில் கவனமாக இருந்தாள்.
மீனுக்குட்டி அம்மாவிடமும், ராஜு அம்மாவிடமும், கீதா அம்மாவிடமும் உங்கள் குழந்தை எந்த கிரேட் வாங்கியிருக்கிறாள் என இன்வெஸ்டிகேஷன் தொடர்ந்து கொண்டிருந்தது
அதே நேரத்தில் பள்ளியில் பெரிய குழந்தைகள் 6th to 12th std ஸ்கூல் பெல் அடித்தது.
தூரத்தில் ராகுல் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும்போதே வெண்பா அவனிடம் வழக்கமாக இருக்கும் புன்னகை இல்லை என்பதை அறிந்து கொண்டாள்.
அருகே வந்த ராகுல். “அம்மா இன்னிக்கு எனக்கு பிரோகரஸ் கார்ட் கொடுத்தாங்க”, என்று மெல்லமாக சொன்னான்
“என்ன செல்லம் டல்லாக இருக்கிறிர்கள். காய்சலா என தொட்டு பார்த்தாள்” வெண்பா.
அதுவெல்லாம் ஓன்னேமில்லை மா. இன்னிக்கு ரிப்போர்ட் கார்ட் கொடுத்தாங்க….
சூப்பர். வீட்டுக்கு போய் பேசுவோம். ரிஷி வேற அழுதுக்கொண்டே இருக்கிறான். வாங்க நம்ம ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு போகலாம் .
“நோ மா எனக்கு வேண்டாம்” என்ற ராகுலிடம் என்னாச்சு என் செல்வத்திற்கு என அவனை கட்டிப்பிடித்து செல்லம் ரிப்போர்ட் கார்டை இப்போ மறந்திடுங்க சரியா, வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என சொல்லிக் கொண்டு இருந்தாள்,
இதை எதுவும் பிரியா கண்டுக் கொள்ளவேயில்லை. புலன் விசாரணையை தொடர்ந்து கொண்டே இருந்தாள். ரிஷி ஒரு புறம் அழுதுக் கொண்டே இருந்தான்.
வெண்பா..”.பிரியா பிரியா என அழைத்தபின் திரும்பி பார்த்தாள்”. நாங்கள் மூன்று பேரும் ஐஸ்கிரீம் ஷாப் போயிட்டு வரோம். நீ உன் இன்வெஸ்டிகேஷன் முடித்து விட்டு நேரே வீட்டுக்கு வா என சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
ஐஸ்கிரீம் ஷாப் பார்த்தவுடனே ரிஷியின் அழுகை நின்றது. அய் ஐஸ்கிரீம். ஆண்டி எனக்கு. மெங்கோ….
“ஓகே செல்லம் “, என உள்ளே சென்றார்கள்.
வழக்கமாக ராகுல் தான் ஆர்டர் கொடுப்பான். இன்று பேசாமல் போய் அமர்ந்து கொண்டான்.
வெண்பா, “ராகுல் உங்களுக்கு என்ன ஆர்டர் செய்ய….”
“மம்மி எனக்கு வேண்டாம்….”,.என்றான் ராகுல்.
சரி நானே ஆர்டர் கொடுக்கிறேன் என்று அவனுக்கு பிடித்த சாக்கோ டீப் ரிஷிக்கு மெங்கோ, அவளுக்கும் ப்ரியாவுக்கும் கஸடா பார்சல் வாங்கி கொண்டாள்.
ரிஷி ரசித்து ருசித்து ஐஸ்க்ரீம் சாப்பிடும் அழகே தனி…..
“கீழே போடாமல் சாப்பிடுங்க”, என ரிஷியின் அருகில் அமர்ந்து இருந்தாள்.
ராகுல் ஐஸ்கிரீமை ஏதோ சிந்தித்த வண்ணம் சாப்பிட்டு முடித்தான்.
பின் மூவரரும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தார்கள்.
வழியிலேயே ரிஷி தூங்கி விட்டான்.
ப்ரியா இன்னும் வீடு வந்து சேரவில்லை.
ரிஷியை அவள் விட்டிலேயே படுக்க வைத்து விட்டு ராகுல் முகம் கை கால் கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு வாருங்கள் .. உனக்கு பிடித்த சாம்பார் ரைஸ் உறலைக்கிழங்கு ஃபைரை செய்து உள்ளேன்.
ராகுல், “மீண்டும் ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து மம்மி…”.
“செல்லம் பஸ்ட் லன்ச் தென் அவர் டிஸ்கஷன்…” என்றாள் வெண்பா
இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு ரிலாக்ஸாக. சோப்பாவில் அமர்ந்தார்கள்.
“செல்லம் இப்போ உங்க ரிப்போர்ட் கார்ட் கொடுங்க” என்றாள் வெண்பா.
“தயங்கியவாறே கார்டை நீட்டினான்.”..ராகுல்
“சுப்பர் டா செல்லம் B Grade வாங்கி இருக்கீங்க…. “ என்ற அம்மாவை கலக்கத்தோடு பார்த்து மம்மி… என்றான் ராகுல்
“ஆமாடா செல்லம்”
“C” grade வாங்கின நீங்கள் இப்போது “B” grade. வாங்கி இருக்கீங்க. There is a improvement. “எவரெஸ்ட்” ஏற வேண்டும் என்றாலும் ஒவ்வொரு அடியாக தானே எடுத்து வைக்க முடியும். I am sure. நீங்க அடுத்த முறை “A”grade வாங்குவிங்க என்று….
ராகுலின் முகத்தில் ஒரு புன்னகை…. “மம்மி ஐ லவ் யூ என ஆக் செய்து கொண்டான்.”
சாரி மம்மி. எனக்கு ரொம்ப பயமா இருந்தது….. Now I am happy. நெக்ஸ்ட் டெம் நான் “O” grade வாங்க முயற்சிக்கிறேன்…
“கிரேட்….. சூப்பர். நீங்கள் வாங்குவிங்க..” உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றாள் வெண்பா.
“வாட் மம்மி…” ராகுல் விரிந்த கண்களோடு.
“ஆரிபாட்டர் புக்”…… என எடுத்துக் கொடுத்தாள்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் ராகுல்…
அம்மாவை கட்டி அனைத்து ஐ லவ் யூ சோ மச் மம்மி….. என்று புத்தகத்தை பிரிக்க ஆரம்பித்தான்.
“சரி செல்லம், நான் ஆண்டியை பார்த்து ஐஸ்க்ரீம் கொடுத்துவிட்டு வருகிறேன்”. நீங்கள் ரிஷியை பார்த்து கொள்ளுங்கள் என கஸடா ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு ப்ரியா வீட்டுக்கு சென்றாள் வெண்பா.
கதவு திறந்து இருந்தது. சோப்பாவில் படுத்து அழுது கொண்டே இருந்தாள் ப்ரியா . அழுது அழுது கண்கள் சிவந்து இருந்தது.
“என்னங்க மேடம் எழுந்திருக்க. ஐஸ்கிரீம் சாப்பிடுங்க..” என்றாள் வெண்பா
ப்ரியா, “எனக்கு வேண்டாம் டி..”.
“எழுந்திருடி… குழந்தை தானே அடுத்த பரிட்சையில் பார்த்து கொள்ளலாம்” என்றாள் வெண்பா
எனக்கு எவ்வளவு அவமானமாக உள்ளது தெரியுமா என கேட்ட ப்ரியாவை… கோபமாக பார்த்தாள் வெண்பா.
ப்ரியா. குழந்தை நல்ல மார்க் வாங்கி இருக்கிறான். நீ அதை பார்க்காமால் மத்தவங்களோடு கம்பேர் செய்ற. அது தான் பிராப்ளம்.
“வாழ்க்கையில் போட்டி அவசியம் தான் ப்ரியா. ஆனால் வாழ்க்கையே போட்டிக் களமாக மாறி விடக்கூடாது. திறமைகளை ஆராய்நது வெளிக் கொணருதல் அவசியம்.”
ரோஜா மலரின் வாசத்தை நிறத்தை மல்லிப்பூவாக மாற்ற முயற்சிக்க கூடாது. முயற்சி செய்தால் மாற்றிவிடலாம். ஆனால் ரோஜாவை இழந்து விடுவோம் ப்ரியா.
அனைத்து மலர்களிலும் நறுமணம் வீசும். ஆனால் வாசம் வேறுபடும். மலர்களின் வாசங்கள் எப்படி மாறுபடுகின்றனவோ அதுபோல தான் நம் பிள்ளைகளின் கற்றல் திறனும், திறமைகளும் மாறுப்படும். அதை நாம் உணர வேண்டும் ப்ரியா.
பிள்ளைகள் அவர்களின் இயல்பிலே வளர்வது தானே சரி, ப்ரியா!
எல்லா பெற்றோர்களுக்கும் நம் குழந்தைகள் “தாமஸ் ஆல்வா எடிசன் போல சிறந்த விஞ்ஞானியாக, அறிவியலாளராக, கண்டுபிடிப்பாளராக, , தொழிலதிபராக பன்முகத்தன்மையோடு வளர வேண்டுமென விரும்புகிறோம் ஆசைப்படுகிறோம்”.
ஆனால் “தாமஸ் ஆல்வா எடிசன்” அன்னை “நேன்சி மேத்தீவ்ஸ் எலியட்” போல நாம் நம் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி வருகிறோமா ? என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ப்ரியா.
பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் அவரை கல்வி கற்றுக் கொள்ள இயலாதவர் என அவரின் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த போது, எடிசன், “ஆசிரியர் என்ன கடிதம் கொடுத்தார்”, என அவரின் தாயிடம் கேட்ட போது. உனக்கு சொல்லி கொடுக்கும் அளவிற்கு திறமைசாலி ஆசிரியர் பள்ளியில் இல்லை என சொல்லி தன் மகனுக்கு தானே பாடம் எடுத்து வாசிப்பின் சுவையை நுகர வைத்து, முற்று புள்ளியை, தொடர செய்ய கூடிய செயலை நாம் செய்கிறோமா ப்ரியா.
அதற்கு நாம் பதில் அளித்து விட்டால் நம் வீட்டில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் திறமைசாலியாக தனித்துவத்தோடு இருப்பார்கள். அவர்களுக்குள் இருக்கும் தனி தன்மையை வெளிக்கொணர்தல் தானே பெற்றோர்களாகிய நமது கடமை. அதை செய்கிறோமா நாம்? ஒரு முற்றுபுள்ளியை, தொடர் புள்ளியாக்குவது, ஆச்சிரியகுறி ஆக்குவதும், கேள்விகுறி ஆக்குவதும் நம் கையில் தான் உள்ளது ப்ரியா.
பேரன்ட டீச்சர் மிடிங்கில மற்ற பேரன்ட்ஸ் முன் நம் மகனின் குறைகள் சொன்னால் நமக்கு அவமானம் என தானே நினைக்கிறோம், ப்ரியா.
நாம 35 மார்க் வாங்க எவ்வளவு பாடுபட்டு உள்ளோம். நம்ம அப்பா அம்மா என்ன பள்ளி வாசலில் வந்து காத்து இருந்து நம்ம ஆசிரியரிடம் இப்படி வசை வாங்கியுள்ளார்களா? யோசிச்சு பாரு!. நாம நல்லா வாழல.
உன் பாஷையில் சொல்றேன், பெற்றோரின் போட்டி மனப்பான்மையால் எப்படி ஒரு குழந்தை தவறான பாதையை தேர்ந்து எடுக்கிறாள் என உன் தலை அஜித் நடித்த “விசுவாசம்” படம் சொன்னது. உனக்கு இப்பவும் புரியலை என்றால் நீ எப்படியாவது போ. ஆனால் ரிஷியின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன் என விருட்டென கதவை திறந்து கொண்டு அவள் வீட்டை நோக்கி சென்றாள்.
அந்த வெளிச்சம் ப்ரியாவின் மேல் பட்டது. எழுந்து ரிஷிக்கு பிடித்த மெங்கோ ஐஸ்கிரீம் செய்ய மாம்பழத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் ப்ரியா.
நன்றி
திருமதி. சாந்தி சரவணன்
கோல்டன் ஜூபிலி பிளாட்
பிளாக் எண்:157/16
பாடி குப்பம் ரோடு
அண்ணா நகர் மேற்கு
சென்னை 40
Mob:9884467730
email: shanthi1798@gmail.com
சுதாவின் கவிதைகள்
1
காற்றடிக்கும் திசையில்
கொடி பறக்கிறது என்பதற்காக
கொடிக்கு நம் மீது அன்பு
என்பது அர்த்தமற்றது…
எங்கே ஈர்ப்பு விசை இருக்கிறதோ
அங்கே ஈர்த்துக் கொள்கிறது…
எங்கே பசை இருக்கிறதோ
அங்கே ஒட்டிக் கொள்கிறது…
எங்கே தேவை இருக்கிறதோ
அங்கே இணைந்து கொள்கிறது…
ஏதுமற்ற ஒன்றில் பிணைப்போ
அன்போ நட்போ ஏதொன்றும்
நிலைப்பதில்லை…
பயன்பாட்டிற்கு உகந்தது
என்பதற்கு பல பெயர்கள்…
2
சிகப்பு மஞ்சள் பச்சையும் கருப்பும்
பூசிக் கொண்டேன்…
பார்த்தவர்கள் அனைவரும்
பரவசம் ஆனார்கள்
என் பேச்சைக் கேட்டவர்களோ குதூகலித்தார்கள்…
கண்களில் வண்ணம் தீட்டி
சிரிப்பில்லா உதட்டில் சிரிப்பதாய் வண்ணம் தீட்டினேன்…
கோலாடும் திசைக்கு ஆடும் குரங்காய்
வேடிக்கை பார்த்தார்கள்…வேஷம் கலைத்த பிறகும்
என் வார்த்தைகள் வேடிக்கையாகத்தான் தெரிகிறது…
இருக்கும் இடத்தை குதூகலமாய் வைத்திருக்க நினைத்தேன்…,
பேசும் வார்த்தைகளைக்
கூர் தீட்டாமல் பார்த்துக் கொண்டேன்…
பார்க்கும் பார்வையில் வஞ்சமின்றி கடந்து வந்தேன்…
நான் கடந்தவர்கள் அத்தனை பேரும்
ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே
என்னோடு பேசுகிறார்கள்
என்று தெரிந்த பிறகு
மௌனம் மட்டுமே என் மனம் முழுவதும் பூசிக் கொண்டேன்…
சிரித்தால் என்ன ஆகிவிடப் போகிறது…
பேசினால் என்ன ஆகிவிடப் போகிறது…
என்பதெல்லாம் போலியான வார்த்தைகள்…
அதிகப்படியான பேச்சும் சிரிப்பும் நம்மை கோமாளி ஆக்கிவிடும்…
– சுதா
நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ‘மின்னற்பொழுதுகள்’ – பாவண்ணன்
அகத்தூண்டுதலும் அற்புதத்தருணங்களும்
பாவண்ணன்
அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்
இது தேவதேவனின் கவிதை. விட்டல்ராவ் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரைத்தொகுதியின் பெயர் மின்னற்பொழுதுகள். அந்தத் தலைப்பை வாசித்ததுமே மனத்தில் தேவதேவனின் கவிதை வரிகள் எழுந்தன. தோணி, புறக்கண்ணால் பார்க்கமுடிகிற ஓர் உருவம். தீவு, அகக்கண்ணுக்கு மட்டுமே தென்படும் உருவம். பார்க்கும் மனவார்ப்பு உள்ளவருக்கே தென்படக்கூடிய அபூர்வமான உருவம் அது. அப்படிப் பார்க்கக்கூடியவர்களுக்கு அக்காட்சி மின்னலடிக்கும் நேரத்தில் தெரிந்து மறைந்துவிடுகிறது. பிறகு அந்தக் காட்சியை நினைவிலிருந்து மீட்டிமீட்டித்தான் பார்க்கவேண்டும்.
விட்டல்ராவ் தன் கட்டுரைத்தொகுதியில் தான் சந்தித்த பதினெட்டு நண்பர்களைப்பற்றிய நினைவலைகளைப் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலானோர் எழுத்தாளர்கள். ஒருவர் ஓவியர். ஒருவர் வாசகர். ஒருவர் பால்யகாலத்து நண்பர். ஒவ்வொரு நினைவலைத்தொகுப்பும் தனித்ததொரு புகைப்படத்தொகுப்பைப்போல உள்ளது. அவர் அளிக்கும் விவரங்களின் ஊடே மின்னல் போல சிற்சில தருணங்கள் கடந்துபோவதை உணரமுடிகிறது. தோணி தீவாகத் தெரிவதுபோல, அத்தருணங்களில் எழுதாத சிறுகதைகளின் வடிவங்களைப் பார்க்கமுடிகிறது. மின்னல் வெளிச்சத்தில் தெரியும் மரத்தைப்போல, மனமொன்றிய வாசிப்பின் வெளிச்சத்தில் அவ்வடிவங்கள் பளிச்சிடுகின்றன. தான் பெற்ற அபூர்வமான நண்பர்களோடு செலவழித்த மின்னற்பொழுதுகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் விட்டல்ராவ் எழுதியிருக்கும் இக்கட்டுரைகளில் புதையல்களைப்போல அத்தருணங்கள் மறைந்திருக்கின்றன.
அசோகமித்திரனைப்பற்றிய நினைவுத்தொகுப்பில் அவரும் தானும் இணைந்து மிதிவண்டியில் பயணம் செய்து பார்த்த அமெரிக்க இயக்குநர்களின் திரைப்படங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார் விட்டல்ராவ். அப்போது பழைய இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை மெல்ல முணுமுணுத்தபடி மிதிவண்டியை ஓட்டும் அசோகமித்திரனைச் சித்தரிக்கிறார். அபூர்வமான ஒரு காட்சிச் சித்திரம் அது. ஒருநாள் அவருடைய வளர்ப்புநாயை நகராட்சியைச் சேர்ந்த குழுவினர் பிடித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். நாய்களை வளர்ப்பதற்கு கட்டாயமாக உரிமம் வைத்திருக்க வேண்டிய காலம் அது. தனியாளாக அவர்களிடம் பேசி அவரால் நாயை மீட்க முடியவில்லை. நண்பரான விட்டல்ராவை தொலைபேசியில் அழைத்து நாயைப் பிடித்துச் சென்றுவிட்ட செய்தியைத் தெரிவிக்கிறார். நாயை எப்படியாவது காப்பாற்றி அழைத்து வரவேண்டுமே என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்.
அக்கணத்தில் விட்டல்ராவுக்கு தன் நண்பரும் எழுத்தாளருமான மா.அரங்கநாதன் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவது நினைவுக்கு வருகிறது. அவருக்கு தகவலைத் தெரியப்படுத்தி உதவி கேட்கிறார்கள். அவர் அசோகமித்திரனை அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்கிறார். வந்தவுடன் அரங்கநாதனே அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு நாய்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குச் செல்கிறார். நூற்றுக்கணக்கான நாய்கள் அடைபட்டிருக்கும் அந்தச் சூழலில் அசோகமித்திரனால் தன் நாயைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எல்லா நாய்களும் ஒரே மாதிரி இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. கண்டுபிடித்துக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தும் நாயைக் காப்பாற்ற வழியில்லாமல் போய்விடுகிறது. அசோகமித்திரனின் கதையுலகம் ஏராளமான கையறு தருணங்களால் நிறைந்த ஒன்று. அவரைப்பற்றிய விட்டல்ராவின் நினைவுப்பதிவிலும் அப்படிப்பட்ட ஒரு தருணம் இடம்பெற்றிருப்பது இயல்பான ஒன்றாகவே தோன்றுகிறது.
பத்திரிகையாளர் சாவியைப்பற்றிய நினைவலைக்குறிப்பில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும் அபூர்வமான தருணமொன்றின் சித்திரத்தை வழங்கியிருக்கிறார் விட்டல்ராவ். ஒரு சமயத்தில் ஆனந்த விகடன் ஒரு நாவல் போட்டியை அறிவிக்கிறது. நடுவர் குழுவுக்கு அனுப்பும் முன்பாக கையெழுத்துப் பிரதிகளைப் படித்துப் பார்த்து தகுதியடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, அங்கே பணிபுரியும் மணியனுக்கு அளிக்கப்படுகிறது. சாவி அதே அலுவலகத்தில் பணிபுரிகிறார். விருதுக்குரிய பிரதிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்படாத பிரதிகளை அனுப்பும் பணி தொடங்குகிறது. திரும்பப் பெற்றுக்கொள்வதற்குப் போதிய அஞ்சல் தலைகளை இணைத்து அனுப்பியவர்களுக்கு மட்டுமே பிரதிகள் அனுப்பப்படுகின்றன. அஞ்சல் தலைகளை இணைக்காதவர்களின் பிரதிகளை குப்பைக்கூடையில் வீசிவிடுகிறார் மணியன்.
ஓர் ஆர்வத்தின் காரணமாக அப்பிரதிகளைச் சேகரித்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கிறார் சாவி. அவற்றில் நடைபாதை என்னும் நாவல் பிரதி அவருடைய மனத்தைக் கவர்கிறது. அது வெற்றி பெற்றிருக்க வேண்டிய படைப்பு. அந்த எழுத்தாளரின் திறமையின் மீது அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அவர் வளர வேண்டிய ஓர் எழுத்தாளர் என்னும் எண்ணம் எழுகிறது. உடனே முதன்மை ஆசிரியரான வாசனை நேரில் சந்தித்து செய்தியைச் சொல்லி அந்தப் பிரதியையும் கொடுக்கிறார். ஒரே இரவில் அதைப் படித்து முடித்த வாசனும் அதன் சிறப்பைப் புரிந்துகொள்கிறார். ஆனால் நடுவர் தீர்ப்பில் குறுக்கிட அவருக்கு விருப்பமில்லை. அதே சமயத்தில் அதை வெளியிடும் வாய்ப்பைத் தவறவிடவும் விருப்பமில்லை. அதனால் அப்பிரதியை தனியொரு தொடர்கதையாக விகடனிலேயே வெளியிட ஏற்பாடு செய்யும்படி சொல்கிறார்.
அந்த நாவலை எழுதிய இதயன் உண்மையிலேயே பம்பாய் நகரத்தில் ஒன்பது ஆண்டு காலமாக நடைபாதையில் ஊதுவத்தி முதலான பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர். அந்த அனுபவங்களின் தொகுப்பைத்தான் அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அவரை உடனே அலுவலகத்துக்கு வரவழைக்கும்படி சொல்கிறார் வாசன். அலுவலகத்துக்கு வரும் இதயனுக்கு விகடனிலேயே வேலையும் கிடைக்கிறது. பம்பாயை விட்டு சொந்த ஊரான வேலூருக்கு வந்து பிழைக்க வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த இதயனின் வாழ்வில் அது ஒரு திருப்புமுனையான தருணமாக அமைகிறது.
ஒரு படைப்புக்கான அகத்தூண்டுதல் ஒரு படைப்பாளிக்கு எங்கிருந்து கிடைக்கிறது, யார் வழியாகக் கிடைக்கிறது என்பது, அது நிகழும் கணம் வரை அந்தப் படைப்பாளியே அறிந்துகொள்ள முடியாத ஒரு செய்தி. அந்த விசித்திரத்தன்மையே அந்தக் கணத்தை நோக்கிய செய்தியை மனம் ஆர்வத்தோடு கவனிக்கிறது. கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி பற்றிய விட்டல்ராவின் கட்டுரையில் அப்படிப்பட்ட ஓர் அபூர்வமான தருணத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவல் ஒரு விழாவில் வெளியிடப்படுகிறது. அதைப்பற்றி பலர் மேடையில் பேசுகிறார்கள். அந்த விழாவுக்கு மாசிலாமணி வந்திருக்கிறார். பல எழுத்தாளர்களும் வாசகர்களும் வந்திருக்கிறார்கள். விமர்சகரான சிட்டி தன்னுடன் பார்வையற்ற நண்பரொருவரோடு வந்திருக்கிறார். அந்த நண்பர் சுதந்திரப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். சற்றே வயதானவர். விழா முடிந்ததும் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடுகிறார் விட்டல்ராவ். அப்போது விட்டல்ராவின் குடும்பப்பின்னணி விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் அவர். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களுடன் தனக்கு இருந்த அறிமுகத்தையும் அவர்களுடைய பங்களிப்பையும் சொல்லியிருக்கிறார் அவர்.
அச்செய்திகளால் மனம் தூண்டப்பட்ட விட்டல்ராவ், அந்தத் தகவல்களின் பின்னணியில் ஒரு நாவலை தன்னால் எழுதமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார். அக்கணமே, அந்த நாவலின் ஒரு முன்வடிவம் அவர் மனத்தில் கருக்கொண்டு விடுகிறது. நண்பர் மாசலாமணியிடம் அக்கதையின் கோட்டுச்சித்திரத்தை விவரிக்கிறார். அக்கதையின் மையத்தால் ஈர்க்கப்பட்ட மாசிலாமணியும் நாவல் எழுதும் வேலையை உடனே தொடங்கும்படி தூண்டுகிறார். மன எழுச்சி கொண்ட விட்டல்ராவ் பார்வையற்ற நண்பர் சொன்ன தகவல்களை தன் தாயிடம் பகிர்ந்துகொள்கிறார். அதன் தொடர்ச்சியாகவும் அவர் தாயாரும் தனக்குத் தெரிந்த பூர்வீகத் தகவல்கள் அனைத்தையும் விவரிக்கிறார். விட்டல்ராவின் மனத்தில் மெல்ல மெல்ல அந்த நாவலின் வடிவம் விரிவடைந்தபடி செல்கிறது. சில மாதங்களின் கனவுக்கும் உழைப்புக்கும் பிறகு அவர் நதிமூலம் நாவலை எழுதி முடிக்கிறார்.
கோவையில் அருவி என்னும் அமைப்பை நடத்தியவர் சீனுவாசன். தொழில்முறையாக வழக்கறிஞர் என்றபோதும் கலை இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருக்கிறார் விட்டல்ராவ். கடலோடி நரசய்யாவும் அந்நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிகிறது. அவசர வேலை காரணமாக நரசய்யா உடனடியாக கிளம்பிவிட, விட்டல்ராவை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் சீனிவாசன். தன் வீட்டையொட்டி சுற்றுச்சுவரிடப்பட்ட ஒரு மைதானத்தைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தை ஒரு பூங்காவாக மாற்றவிருக்கும் திட்டத்தைப்பற்றிச் சொல்கிறார். அங்கே புதிய வகை செடிகளையும் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கவிருப்பதாகவும் சொல்கிறார். பல மரங்கள் நெடுநெடுவென வளர்ந்து நிற்க, ஏராளமான பறவைகள் அங்கே வந்து செல்வதைப் பார்க்கவேண்டுமென்றும் அவை போடும் சத்தக்களைக் கேட்க வேண்டும் என்றும் தான் விரும்புவதாகவும் தன் கனவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
மதிய உணவை முடித்துக்கொண்டு அறையில் அமர்ந்து தன் குடும்பக்கதைகளை விரிவாகச் சொல்கிறார். விட்டல்ராவின் குடும்பக்கதையையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். மாலையில் தேநீர் வேண்டுமா காப்பி வேண்டுமா என்று கேட்கிறார். பிறகு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அலுவலக வேலையொன்றைப் பார்ப்பதற்காகச் செல்கிறார். பத்து நிமிட இடைவெளியில் அவருடைய அறையிலிருந்து யாரோ அலறி அழும் சத்தம் கேட்கிறது. ஓடிச் சென்று பார்க்கும்போது சீனிவாசன் படுக்கையிலிருந்து கீழே சரிந்து விழுகிறார். இதய இயக்கம் நின்று அப்படியே உயிர் பிரிந்துவிடுகிறது. இப்படி மகிழ்ச்சியும் மரணமும் அடுத்தடுத்து நிகழ்ந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்துகிறது.
சித்ரதுர்கா கோட்டையைப் பார்ப்பதற்காகச் சென்ற அனுபவத்தை விட்டல்ராவ் விவரித்திருக்கும் விதமே ஒரு சிறுகதையைப் படிப்பதுபோல இருக்கிறது. அங்கே செல்வதற்கு முன் அக்கோட்டையைப்பற்றி அவருக்கு அதிக அளவில் எதுவும் தெரியாது. அந்த ஊரிலிருக்கும் வெங்கணாச்சார் என்னும் பேராசிரியரைச் சந்தித்தால் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்னும் தகவலோடு அந்த ஊருக்குச் செல்கிறார். ஆனால் அவரைப்பற்றி எங்கே விசாரிப்பது யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமலேயே கோட்டைக்குச் சென்றுவிடுகிறார்.
கோட்டை மதிற்சுவரையொட்டி நுழைவுச்சீட்டு கொடுப்பவருக்கான அறை இருக்கிறது. அதற்கு அருகிலேயே ’இங்கே யாரும் புகைபிடிக்கக்கூடாது, மீறினால் இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று எழுதிவைக்கப்பட்ட அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தப் பலகைக்கு அருகிலேயே நின்றுகொண்டு ஒருவர் அவசரமாக புகைபிடித்துக்கொண்டிருக்கிறார். பிறகு பாதி எரிந்த சிகரெட் துண்டை அங்கேயே வீசி காலால் நசுக்கிறார். அந்தக் காட்சிகளின் முரண்களால் ஈர்க்கப்பட்ட விட்டல்ராவ் தன் கேமிராவில் அவ்விரண்டு காட்சிகளையும் படமாகப் பிடித்துவிடுகிறார்.
அங்கே புகை பிடித்தவர் வெளியாள் அல்ல, அங்கேயே வேலை செய்பவர் என்பது அவர் நுழைவுச்சீட்டு கொடுக்கும் அறைக்குள் நுழையும்போதுதான் புரிகிறது. நுழைவுச்சீட்டு கொடுத்துவிட்டு படம்பிடித்த விட்டல்ராவிடம் ”நீங்கள் பத்திரிகைக்காரரா?” என்று விசாரிக்கிறார். அவர் சற்றே பதற்றத்தில் மூழ்கிவிடுகிறார். சிறிது நேரத்தில் வேறொருவரும் வந்து அவரிடம் அதே கேள்வியைக் கேட்கிறார். சுற்றிப் பார்க்கத் தொடங்கிய பிறகு மற்றொருவரும் அவரை நிறுத்தி அதே கேள்வியைக் கேட்கிறார். பிறகு தன் மேலதிகாரி சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்து, விட்டல்ராவை அதிகாரியுடைய அறைக்கு அழைத்துச் செல்கிறார். அவரும் நீங்கள் பத்திரிகைக்காரரா என்று அதே கேள்வியைக் கேட்கிறார். தான் எழுத்தாளர் என்றும் அக்கோட்டையைப்பற்றி எழுதுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் விட்டல்ராவ்.
அதற்குப் பிறகே அங்கே அவர்களுடைய பதற்றம் குறைந்து சற்றே நிம்மதி நிலவத் தொடங்குகிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு, கோட்டையைப்பற்றிய பிரசுரங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று விசாரிக்கிறார் விட்டல்ராவ். “பிரசுரங்கள் வழியாகத் தெரிந்துகொள்ள இயலாத தகவல்களைச் சொல்லும் அறிஞரொருவர் இங்கே இருக்கிறார். அவர் பெயர் வெங்கணாச்சார். அவரை நீங்கள் சந்தித்து உரையாடலாம்” என்று சொல்கிறார் அதிகாரி. அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்கிறார். எந்த வெங்கணாச்சாரை எப்படிச் சந்திக்கப்போகிறோம் என நினைத்து குழப்பத்துடன் வந்தாரோ, அதே வெங்கணாச்சாரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிகரெட் துண்டு வழியாகக் கிடைத்துவிடுகிறது.
இத்தொகுதியில் முகம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. உயர்நிலைப்பள்ளியில் தன்னோடு படித்த ஒரு நண்பரை சேலத்துக்குச் சென்று சந்தித்த அனுபவத்தை அதில் எழுதியிருக்கிறார் விட்டல்ராவ். வேறொரு நண்பர் வழியாக அவருடைய தொலைபேசி எண் கிடைக்கிறது. இரண்டுமூன்று முறை உரையாடுகிறார்கள். அந்த நண்பர் விட்டல்ராவை சேலத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறார். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்க சேலத்துக்குப் புறப்படுகிறார். தன் பயணத்தைப்பற்றி அவரிடம் தெரிவித்துவிட்டு பள்ளிப்பருவத்தில் சுற்றியலைந்த இடங்களுக்கு இருவரும் சேர்ந்து சுற்றி வேடிக்கை பார்க்கவேண்டும் என்னும் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்கும்போதுதான் அவர் தனக்குக் கண்பார்வை போய்விட்டது என்னும் தகவலைப் பகிர்ந்துகொள்கிறார். அவர் மேற்கொண்ட ஏராளமான மருத்துவ முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சேலம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வண்ண உடைகளை அணிந்துகொண்டு நிற்பதாகவும் அந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு தன்னைக் கண்டுபிடித்துவிடும்படியும் சொல்கிறார். அப்படித்தான் அவர்கள் இருவரும் அன்று சந்தித்துக்கொள்கிறார்கள்.
அந்த நண்பர் வேறொரு அதிசய மனிதரை விட்டல்ராவுக்கு அறிமுகப்படுத்துகிறார். காந்தி சிலைக்கு அருகில் தினந்தோறும் வந்து நிற்கிறார் அந்த மனிதர். ஒவ்வொரு நாளும் காலையில் பத்து மணிக்கு அங்கே வந்து நிற்கிறார் அவர். மது அருந்தாதீர்கள், மது குடும்பத்தையும் நாட்டையும் அழிக்கும் என பல விதமான வாசகங்களை எழுதிய அட்டைகளை அனைவரும் பார்க்கும் வகையில் கையிலேந்தி நிற்கிறார். அவர் பெயர் ஃப்ராங்க்ளின் ஆஸாத் காந்தி. கிறித்தவம், இஸ்லாம், இந்து என மூன்று மத அடையாளங்களையும் இணைக்கும் விதமாக தன் பெயரை அப்படி வைத்திருக்கிறார். அந்த மனிதரை விட்டல்ராவுக்கு அறிமுகப்படுத்துகிறார் நண்பர். அவரோடு கைகுலுக்கி உரையாடுகிறார் விட்டல்ராவ். அவர் முகம் எங்கோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது ஆனால் எங்கு எப்போது பார்த்தோம் என்பது அவருக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. . பழைய நினைவுகளைத் துழாவிக்கொண்டே உரையாடலையும் தொடர்கிறார் விட்டல்ராவ். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு இருவரும் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.
ஏதேதோ உரையாடல்களில் பொழுதுகளைக் கழித்தாலும் அவர் மனம் அந்த மனிதரைப்பற்றிய யோசனைகளிலேயே மூழ்கியிருக்கிறது. விடாமுயற்சியின் விளைவாக, ஒரு கட்டத்தில் அந்த முகத்தின் ஊற்றுக்கண்ணை அவர் கண்டுபிடித்துவிடுகிறார். அவருக்கு பதினாலு வயசிருக்கும்போது அவருடைய அப்பா உடல்நலம் கெட்டு படுத்த படுக்கையாக இருந்தார். வீட்டுக்கு அருகிலேயே இருந்த ஒரு டாக்டர் வீட்டுக்குச் சென்று அப்பாவின் நிலையை எடுத்துச் சொல்லி அவரைப் பார்க்க வருமாறு கெஞ்சிக் கேட்டார். அவரும் மனமிரங்கி அச்சிறுவனோடு வந்து அப்பாவின் உடல்நிலையை ஆய்வு செய்தார். பரிசோதித்துவிட்டு உடனடியாக அவரை அரசாங்க மருத்துவ மனைக்குச் செல்வதுதான் நல்லது என்று சொன்னார். வீட்டிலிருப்பவர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதைப் பார்த்து நிலையைப் புரிந்துகொண்டு தன் பையிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். உடனே அரசு மருத்துவமனைக்கு தன் அப்பாவை அழைத்துச் சென்றார் விட்டல்ராவ். ஆனால் இரு தினங்களுக்குப் பிறகு அங்கிருந்து அழைத்துச் சென்றுவிடும்படி அங்கிருக்கும் மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். நிலைமை கைமீறிப் போய்விட்டது. வேறு வழியில்லாமல் அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார்.
அடுத்தநாள் காலையில் அவர் உடல் அசைவற்றுப் போய்விடுகிறது. சிறுவனான விட்டல்ராவ் அதே டாக்டரின் வீட்டுக்குச் சென்று தகவலைச் சொல்லி கையோடு அழைத்து வருகிறார். அப்பாவின் நாடியைப் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். அவர் இறந்ததற்கான சான்றிதழையும் அவரே கைப்பட எழுதிக் கொடுக்கிறார். புறப்படும்போது இரண்டு ரூபாய்த்தாளை எடுத்து கொடுத்துவிட்டுச் செல்கிறார். அன்று கனிவோடும் இரக்கத்தோடும் பணம் கொடுத்துவிட்டுச் சென்ற டாக்டர்தான் காந்தி சிலைக்கு அருகில் நின்ற மனிதர் என்பதை அவர் அறிந்துகொள்கிறார். அடுத்த நாள் மீண்டும் காந்தி சிலைக்கு அருகில் சென்று அதே மனிதரைச் சந்தித்து உரையாடுகிறார். கிச்சிப்பாளையத்தில் கிளினிக் வைத்திருந்த டாக்டர்தானே நீங்கள் என்று கேட்கும்போது அந்த மனிதரின் முகம் மலர்கிறது. அதே சிரிப்பு அதே கண்கள். பழைய கதைகளைச் சொல்லிவிட்டு விடைபெறுகிறார் விட்டல்ராவ்.
பார்த்துப் பழகிய பதினேழு ஆளுமைகளைப்பற்றிய நினைவுகளை வெவ்வேறு கட்டுரைகள் வழியாக இத்தொகுதியில் பதிவு செய்திருக்கிறார் விட்டல்ராவ். கதைத்தன்மையுடன் கூடிய ஒவ்வொரு கட்டுரையிலும் ஆவணப்படக் காட்சிகள் போல பல்வேறு தருணங்களின் சித்தரிப்புகள் அடங்கியுள்ளன. அகத்தூண்டுதலை அளிக்கும் அற்புதத் தருணங்கள் மின்னற்பொழுதுகள் புத்தக வாசிப்பை மகத்தான அனுபவமாக்குகின்றன.
( மின்னற்பொழுதுகள். விட்டல்ராவ். பேசும் புதிய சக்தி வெளியீடு. 29 காம்ப்ளெக்ஸ் தெற்குத்தெரு, திருவாரூர் – 610001. விலை. ரூ.180 )
பாங்கைத் தமிழனின் கவிதைகள்
நட்பு பெரிது? !
******************
தேடும்
அத்தனைப்
பொருத்தங்ளும்
கொண்ட நண்பர்கள்
குடும்பம்,
எங்கள் இருவருக்குமான
குடும்பம்!
அவர் வீட்டு விசேஷங்களில்
எங்கள் குடும்பமும்,
என் வீட்டு விசேஷங்களில்
நண்பர் வீட்டுக் குடும்பமும்,
முதல் மரியாதை அளவிற்கு
மற்றவர்,
முகம் சுளிக்கவும்
மூக்கின் மேல் விரலை
வைக்கவும்….
எங்களுக்கான நெருக்கம்!
நயத்தகு நனி நாகரிக நட்பு
எங்களுடையது!
கொடுக்கல் வாங்கலில்
குறையாத அன்பு!
துயரத்தில் தோள் கொடுக்கும் முதன்மை!
மாமா, அத்தை
என்கின்ற
பிள்ளைகளின் உறவு!
கல்யாணப் பருவத்தில்
காத்து நிற்கும்
நண்பரின் மகள்!
கால் மிதி தேய
மாப்பிள்ளைத் தேடல்;
உறவாக இல்லையெனினும்
உடன் செல்லாமல்
நானோ, நண்பரோ
எதில் ஒன்றும் பிரிந்ததில்லை!
நாட்கள் கடந்தும்
நல்ல
வரன் அமையவில்லை!
நல்ல
வரன் உள்ள இடம்
எனக்குத் தெரிகிறது….
குறுக்கே
சுவரின் பிம்பம்
சாதி!
நட்பையும் கொல்லும் நஞ்சு;
பிள்ளைகள் வாழ்வா
பெரிது?
நண்பருக்கும், எனக்கும்
நட்பொன்றே பெரிது!
என்
தகுதி வாய்ந்தப் பிள்ளைக்கு,
பெண் பார்க்க…
நானும் நண்பரை அழைத்துச் செல்கிறேன்….
நீண்ட தூரத்தில் உள்ள
ஊர் ஒன்றுக்கு.
மனிதமே..மனிதன்…
************************
மனிதனை மனிதனாய்
மனதிலே நிறுத்தியே
மதிப்பினை அளித்திடும்
மாண்பினைக் காத்திட்டால்;
மாநிலம் நலனுறும்
மகிழ்ச்சியால் பயனுறும்!
சாதியும் சமயமும்
சதியென உணர்ந்திடும்
சத்திய சீலரே
சமுதாயச் சிற்பிகள்!
உயர்வெனத் தாழ்வென
உள்ளத்தில் கள்ளத்தை
உடையவர் மடையரே
உணர்ந்திடு மானுடா!
அழுதிடும் அன்பரை
அணைத்திடும் கரங்களே
அகிலத்தில் உயர்ந்தவை
அறிந்திடும் தோழரே!
பெண்மையைச் சூழ்ந்திடும்
பேரிடர் துடைத்திட
பெருந்தகை வானர்கள்
பெருகிடல் வேண்டுமே;
எண்ணத்தால் உயர்ந்திடு
ஏற்றமோ பெருகிடும்;
எளியரை இதயத்துள்
ஏற்றியேப் போற்றிடு!
வன்மங்கள் பெருகிட
வாழ்பவர் வீழ்வரே;
வளமுடை நெஞ்சினர்
வாழ்வரே வையத்தில்!
பிறப்பிலே உயர்ந்தது
பெருமைகள் நிறைந்தது
மானுடப் பிறவிதான்
மதியினில் தேக்கிடு!
கடலுக்கு மரணமாமே
*************************
கடலுக்கு மரணமாமே
காற்று வந்து சொன்னதுவே
தமிழ்க் கடலே மறைந்தாயோ!
காண்பதுதான் எந்நாளோ?
நெல்லையிலே பிறந்தக் கடல்
நெஞ்சமெலாம் பரந்தக் கடல்
நெடிய ஆழம் கொண்டக்கடல்
நம்மை இன்றுப் பிரிந்தக்கடல்!
அலைகளென இலக்கியமாம்
அத்தனையும் அறிந்தக் கடல்
தமிழ்க்கடலே மீண்டும் வந்து
தரணியிலே பிறப்பாயோ?
கொந்தளிக்கும் சில நேரம்
கோபம் கொள்ளும் சில நேரம்
தாலாட்டுப் பாடி நம்மை
தமிழ் வளர்த்தப் பெருங்கடல்தான்!
இலக்கியங்கள் அறிந்தக் கடல்
இலக்கணத்தில் பெரியக் கடல்
சமுதாயச் சீரழிவை
சாடிநின்றத் தமிழ்க் கடல்தான்!
வங்கக் கடல் நிகராக
தமிழ்க்கடலாய் வாழ்ந்தக் கடல்
நீர்நிறைந்தக் கடல் தந்த
நிகரான செல்வமதை;
தமிழ்மக்கள் மனம் குளிர
தந்த திந்தத் தமிழ்க்கடலே;
பேச்சாலே பெருமை செய்தாய்
எழுத்தாலே எழுச்சி தந்தாய்;
சிந்தனையால் ஒளியேற்றி
சிரிப்பினிலும் பொருள் கொடுத்தாய்;
இறைவனையும் துதித்தக் கடல்
இல்லை என்று சொன்னவரை
இறைநிகராய்ப் பார்த்தக் கடல்!
நேர்மைதனை உப்பெனவும்
நியாயமதை முத்தெனவும்
மகிழ்ச்சிதனை மீனாக
ஒளிவீசும் பவழமென
சமுதாயம் விழிப்படைய
சங்காக ஒலித்தக் கடல்!
மறைந்தாயோ தமிழ்க் கடலே
மறப்போமோ உம் நினைவை?
அலையாக எம் நெஞ்சில்
அனுதினமும் வாழ் வாயே.
எங்கள் நிலம்
****************
பெருநிலங்கள் தெலுங்கர் வசம்
பெருவணிகம் ஹிந்தி வசம்
விலையுயர்ந்த நகைக் கடைகள்
வியர்வை சிந்தா மார்வாடி;
இனிப்பகமோ சேட்டு வசம்
தேநீர்க்கடை மலையாளி!
காசுகையில் இல்லாமல்
கடைவீதி கண்டு வந்தால்
மூட்டைத் தூக்கும் தொழிலாளி
முழம் போடும் பூக்காரி
கூறு கட்டும் காய்காரி
கூவி விற்போர் தெருவோரம்;
குப்பையள்ளும் தொழிலாளி
குடித்து சுற்றும் ஊதாரி
அழுக்குப் படிந்து பழுதுபார்க்கும் அனைவருமே தமிழாளே!
ஏரோட்டும் எட்டியானும்
களையெடுக்கும் காளியம்மா
சாலையோரம் கூழ் விற்கும்
கன்னியம்மா தமிழாளே!
நுங்கு விற்கும் தங்கசாமி
கீரை விற்கும் கிளியம்மா
கிழிஞ்ச ரவிக்கை குப்பம்மா
கோவணான்டி குப்புசாமி
இவரெல்லாம் தமிழ்க்காரர்!
தமிழ்நாடுப் பெயர் மட்டும்
தமிழரெலாம் கூலி யாளே;
பலநூறு மைல் கடந்து
பலனெல்லாம் அனுப விக்கும்
பிற மொழியார் வசமான
தமிழர் நிலம் மீட்டெடுக்க
தமிழரெலாம் ஒன் றிணைந்து
தம் வசமாய்த் தமிழ்நாட்டை
மீட்டெடுத்து தமிழர் தமை
வாழ்விக்க வழி சமைப்போம்
வாழ்விக்க வழி சமைப்போம்!
நாற்றங்கால்
**************
தயாராகிக்கொண்டே
இருக்கின்றன…
நாற்றங்கால்கள்;
மந்திரங்களிலிருந்து
ஆரம்பிப்போம்!
வேத மந்திரங்களாம்;
பிறருக்கு
வேதனையெனத் தெரிந்தும்
பாடசாலை வைத்து
நாற்றங்கால்களாக
பயிற்றுவிக்கிறார்கள்!
தொழுகையாளரும்,
ஸ்தோத்திரக்காரரும்
அவரவர் வாரிசுகளுக்கான
நாற்றங்கால்களை
தயார் செய்து கொண்டே….
இசை, நடனம், நாட்டியம்
நாடகம், நடிப்பு, விளையாட்டு….
கலைகள் எனும் பெயரில்
காசு பணம் உள்ளவர்கள்
கட்டமைத்துக் கொள்கிறார்கள்;
நாற்றங்கால்களை!
தாய்மொழி தவிர்த்து
பிறமொழி வளர
நாற்றங்கால்கள்!
திட்டமிட்டுக்
கொள்கிறார்கள்;
அவரவர்
வாரிசுகளுக்கான
நாற்றங்கால்களை!
உழவன் மட்டும்
உயிரினம் வாழ
நாற்றங்கால்களை
தயார்படுத்துகிறான்!
அவனுடைய விதைகள்
வீதிகளில்!
பாங்கைத் தமிழன்
காந்தித் தோட்டம் சிறுகதை – ஜனநேசன்
“ அடியே வாங்கடி இங்க , அமாவாசை நெருங்குது. அந்தப்பெரிய மனுசரை உசுரோட நேர்ல பார்த்து நாலு நல்ல வார்தைகளைக் காதில வாங்கிக்குவம் “ என்றவாறு குழுக் குழுவாய் பெண்கள் சுத்துப்பட்டிகளில் இருந்து மலையடிப்பட்டிக்கு மேற்கே இருந்த தோட்டவீட்டை நோக்கி நடந்தனர். இவர்களில் பலர் மலையடிபட்டியில் பிறந்து அயலூருகளுக்கு வாக்கப்பட்டுப் போனவர்களும், அயலூர்களில் பிறந்து மலையடிப்பட்டிக்கு வாக்கப்பட்டும் வந்தவர்கள். காந்தி ராமசாமியைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டபடி நடந்தனர்.
*****
ஐம்பது வருசத்துக்கு முந்தி , ராமசாமியின் அப்பா கிராமத்து நாட்டாமை சுப்பையாவுக்கு உடம்பு சரியில்லை. வயசு அறுபதை நெருங்குது. அறுபதாம் கண்டத்தைத் தாண்டுவது உறுதியில்லை. மூணு பொம்பளைப் பிள்ளைகளுக்குப் பிறகு தாமதமா பிறந்த ஆசைமகனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்காம, பேரப்பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சாம, கண்ணை மூடீருவோமுன்னு பயம் வந்துருச்சு. ராமசாமி அப்பத்தான் காலேஜுல பரீச்சை எழுதி இருக்காரு. பி.ஏ பாசானதும் கவர்மன்ட் பரீச்சை எழுதி வேலைக்குப் போன பின்னதான் கல்யாணம்னு வைராக்கியத்தில் இருந்தாரு.
ஊருக்குள்ள எவ்வளவுதான் பெரிய சம்சாரியா இருந்தாலும் , ஒரு அரசாங்க அதிகாரி ஊருக்குள்ள நுழைஞ்சதும் , அவருக்கு கிடைக்கிற மரியாதையும், அவுரு பேச்சுக்கு ஊரே கட்டுப்பட்டு நிற்கிறதும் பார்த்து , தான் ஒரு அரசு அதிகாரியா வரணுங்கிற ஆசை சிறுவயசிலிருந்தே ராமசாமி மனசிலே வேர்போட்டுருச்சு.! ராமசாமி வளர வளர தானும், தாசில்தாராகவோ, கலக்டராகவோ ஆகணும்னு ஆசையும் கிளைபரப்பி வளர்ந்தது. ஊருப் பெரியவங்க ராமசாமியிடம் சமாதானம் பேசினர். கல்யாணத்துக்கு பின்னால படிச்சு பரீச்சை எழுதி வேலைக்குப் போயிக்கலாம். பொண்டாட்டி யோகத்தில கூட சர்க்காரு வேலை கிடைக்கலாமுன்னு பல உதாரணங்களைச் சொல்லினர். இப்போதைக்கு அப்பாவின் ஆயுசை நீட்டிக்கறது முக்கியமு’ன்னாங்க. அப்பாவின் உடல்நோயைவிட அறுபதுவயசு கண்டமுங்கிற மனவியாதிக்கு மருந்தாகட்டுமுனு கல்யாணத்துக்கு ராமசாமி சம்மதிச்சாரு. அந்தக் கார்த்திகை மாசமே புதன்கிழமை சாயந்திர முகூர்த்தத்தில் ராமசாமிக்கும் , பக்கத்தூரு நிலக்கிழார் மகள் வேலுமயில்க்கும் கல்யாணம். அப்பவெல்லாம் விவசாய வேலைக கெடாம ராத்திரி எட்டுமணியிலிருந்து பத்துமணிக்குள்ளோ , விடியக்காலை நாலு மணியிலிருந்து ஆறுமணிக்குள்ளோ தான் கல்யாண முகூர்த்தம் ! வீட்டு முன்னாலேயே பந்தல்போட்டு மணமேடை அமைச்சுக் கல்யாணம் ! பல கிராமங்களில் இருந்தும் விருந்தாளுக வந்திருந்தாக. ஊர் முச்சூடும் விருந்து தின்னுச்சு. மூணாம் நாளே ராமசாமியின் அப்பாவுக்கு டிபியின் தாக்கம் அதிகமாகி இருமல் வதைத்தது. கார்த்திகை மாசத்தின் மழைவாடையும், கூதக் காத்தும் ஒரு முனையிலும் , வாழணுங்கிற ஆசை மறுமுனையில் இருந்தும் உயிர்ச்சரடை உள்ளே , வெளியேன்னு இழுத்து புறாக்கள் கத்துவது போல தொண்டைக்குள் கறமுறத்தன. கார்த்திகை தீபம் கனத்த நாளு; சீக்காளி நாட்டாமை உசுருக்கு உறுதியில்லைன்னு பேச்சு பரவலா சுத்தியுள்ள கிராமங்களில் சுத்தி வந்தது. வாழ்ந்து அனுபவித்த பெரியமனுசர் சாவு, கல்யாணச் சாவுன்னு , மகன் கல்யாணத்துக்கு போட்ட பந்தலும், தோரணங்களும் பிரிக்கப்படவில்லை.
சுத்தியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயவேலைக ஓய்ஞ்ச நேரங்களில் சனங்க சாதி பேதமில்லாம கூட்டங் கூட்டமா நலம் விசாரிக்க வந்தார்கள். வீட்டு வெளி முற்றத்தில் வடக்கு பார்த்து நூல்கட்டிலில் கிடத்தியிருந்த நாட்டாமையைப் பார்த்து அவரது அருமை பெருமைகளைப் பேசினர். சனங்க பேச்சைக் கேட்கக் கேட்க வாழுமாசையில் அந்திம ஜொலிப்பு கூடியது. ஆனால், அறுபது வயசுன்னு காலக்கெடு திணிக்கப்பட்ட உயிர்க்கடிகாரத் துடிப்பு குறைந்து கொண்டே இருந்தது. பார்க்க வந்தவர்களுக்கு குடிக்க சுக்குமல்லிக் காப்பி தீரத் தீரக் கொதித்துக் கொண்டிருந்தது. . மெல்லுவதற்கு இதமான ஜெயமங்கலம் வெத்திலையும், தேனி தெக்கம்பாக்கும் வாசல் திண்ணையில் ஒரு தட்டில் குறையக் குறைய அடுக்கி வைத்தார்கள். நாட்டாமையின் பெருமையை மகன் எப்படி காப்பாத்தப் போறானோன்னு வெற்றிலையோடு மென்றுகொண்டே ஊர் திரும்பினர்.
அன்று இரவு வீட்டுக்குள் அறையில் தனித்திருந்த புதுமணத் தம்பதிக்குள் சிக்கல் கனன்றது. கார்த்திகை மாசக் குளிருக்கு ராமசாமி கதகதப்பு தேடினான். அவளுக்கும் ஆசைதான். .” பெரியவருக்கு எந்த நிமிசம் உயிர்த்தீ அணையுமோன்னு பதைபதைப்பில் ஊரும் உறவும் வாசலில் உறங்காம கிடக்க, நாம மட்டும் புனையலில் கிடப்பது சரியில்லை “ என்றாள்.
“ இது நமக்கும் மட்டுமா ? இதே சூழ்நிலையில் காந்தியின் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தப்ப, காந்தி தன் பொண்டாட்டியோடு சுகம் அனுபவிச்சுக்கிட்டு இருந்தாராம். இதை அவரே எழுதியிருக்கிறார். “ என்று அவளை இழுத்து அணைத்தான்.
“நானும் படிச்சிருக்கேன் ; அவரு அந்த சூழ்நிலையில் அவ்வளவு சுயநலத்தோடு நடந்துகிட்டதுக்கு வருத்தம் தெரிவிச்சுதான் எழுதியிருக்கிறார் “ என்று எழுந்தவளை மீண்டும் இழுத்தணைத்து , “ அப்போ இன்னொன்னு செய்வோம் ; இப்படியே துணிமணி இல்லாம ஒருத்தரை ஒருத்தரைத் தொடாம கெடாம மனக்கட்டுபாடோட விடியிறவரைக் படுத்திருப்போம் “
“ காந்தி அறுபதுவயசில செஞ்ச சோதனையை , இந்த இருபதுவயசிலே நாம நினைக்கிறதே அவத்தம். மச்சான், நீ காந்தி கணக்கா நிசமா மனக்கட்டுப்பாடோட இருக்கனுமுன்னு நினைச்சா , இனி சாராயம் குடிக்கிறதில்லை. உன்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் குடிக்க உதவுறதில்லைன்னு முடிவெடு ! நான் இப்ப வெளியே காத்திருக்கும் சனங்களோட போயிருக்கேன் “ என்று உடுத்தி சரி செய்துகிட்டு வெளியே இருக்கும் சொந்த பந்தங்களோடு உட்கார்ந்தாள். அங்கிருந்தவர்கள் அவளை பிரமித்து பார்த்தார்கள்.! அந்த நிமிடத்திலிருந்து அவள் அந்தக் கிராமத்துக்கு நாட்டாமைக்காரியாக வளரத் தொடங்கினாள்.
நிலவை மோக முந்தானை மூடிக்கொண்டது. தனிமையில் மோக வேக்காடு தாங்காமல் ராமசாமியும் வெளியே வந்து கனல்போட்டு குளிர் காய்ந்தவர்களோடு குந்திக்கொண்டான். இவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவர்கள், சோக நிலைமையை, அப்பாவின் மீது கொண்ட பிரியத்தை புரிந்து பெருமிதப் பட்டாரகள். ஆறுதலாக இருந்தது. எனினும் , உள்ளே அவள் மூட்டிய சவால் கனன்று கொண்டிருந்தது.!
தலைக்கோழி கூவ எழுந்து போனவன் நண்பர்களுக்கு வாங்கி வைத்திருந்த கேன் சாராயத்தை மந்தைக்காட்டில் குழிதோண்டி கொட்டினான் . மந்தைக் காடெங்கும் ஈரக்காற்றோடு மணந்த சாராயவாடை , ராமசாமியின் வைராக்கியத்தையும் மணக்கச் செய்தது. அப்பாவுக்குப் பின் வந்த நாட்டாமை பட்டம் காந்தியோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டது. அவன் காலத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கவென்று , தனியார் கள்ளு, சாராயக்கடை திறக்க அரசு உத்தரவு போட்டபோதும், அரசே சாராயக் கடையை திறந்த போதும் மலையடிப்பட்டிக்குள் சாராய நாற்றம் ஊர்க்கட்டுபாட்டை மீறி, நுழைய முடியவில்லை. விரும்பியவர் கள் வெளியே போய்க் குடித்து வீச்சம் அடங்க ஊர் திரும்புவார்கள். வேலாம்பட்டை, வேப்பம்பட்டை உரிப்பது குறைந்தது. நரம்பு தளர்ந்தவர்களுக்கு தண்ணீர் பகையானது; மலையடிவாரத்திலிருந்து சிவக்கொழுந்து புகை உறவானது. தோப்பு துறவுகளில் புகைமூட்டத்தில் மிதந்தனர்.
அடுத்தடுத்த பஞ்சாயத்து தேர்தல்களில் , நாட்டாமை காந்திராமசாமி தலைமையிலான ஊர்நலக்குழு முன்மொழிந்தவர்களே தலைவராக, வார்டு உறுப்பினர்களாக தேர்வானார்கள். ஊர்க்காரர்களுக்கே வேலை
ஒப்பந்தம் ! அரசுத்திட்டம் முழுமையாக விரையமில்லாமல் நிறைவேற்றப்பட்டன. ஊருக்கு தெக்கே, கிழக்கே பச்சை பசேலுன்னு திரண்டு,விரிந்திருந்த வாசிமலையிலிருந்து மழைக் காலங்களில் பொங்கிவரும் காட்டாத்து வெள்ளம், விவசாயத்தை அழிக்காம , ஊரைச் சேதப்படுத்தாமத் தடுக்கும் நிரந்தரத் தீர்வாக அடிவாரத்தில் தடுப்பனைக் கட்ட அரசாங்கம் மூலம் காந்திராமசாமி ஏற்பாடு செய்தார். வெள்ளச்சேதமும் , நிலத்தடிநீர் குறைவதும் முடிவுக்கு வந்தது. சுத்தியுள்ள வறண்ட கரட்டுக் காடெல்லாம் பழத்தோட்டங்கள் ஆயின ! சுற்றியுள்ள ஊருகளுக்கும் நல்ல பேரு வரக் காரணம் காந்தி ராமசாமின்னு பரவலாப் பேசப்பட்டது.
காந்தி ராமசாமி –வேலுமயில் தம்பதிக்கு ஒரு ஆண், ஒருபெண் பிறந்தனர். மகன் மோகன்தாஸ் எம்.ஏ . படித்துவிட்டு அரசுத் தேர்வெழுதக் காத்திருந்தான். அப்பாமாதிரி படிச்சிட்டு , விவசாயத்தில முடங்கிறாம , அரசு வேலைக்குப் போகணுமுன்னு வெறி மோகன்தாஸ்க்கும் தனன்றது .. அரசுவேலைக்கான நம்பிக்கை , இலவமரம் காய்த்து பழுத்த மாதிரிதான். வயசு கூடிகிட்டே போனது. எப்படியாவது அரசு வேலையில் உக்காந்திறனுங்கிற வெறி ஆட்டியது. டாஸ்மாக் கடைக்கு சூபர்வைசர் வேலைக்கு ஆளெடுக்கிறாகன்னு தகவல் கிடைச்சது. மகன் அப்பாவிடம் அனுமதி கேட்டான். “ நான் மட்டுமல்ல இந்த ஊரே குடிக்கு எதிராக இருக்கும்போது சாராயக் கடைக்கு வேலைக்கு போறேன்னு சொல்லலாமா ? நீ கவர்மன்ட் வேலைக்கு போகவேணாம். வா இயற்கைமுறை விவசாயப்பண்ணை அமைப்போம். இனிமே இயற்கை விவசாயத்துக்குத் தான் எதிர்காலம் ! இதுனால மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது “ன்னு அப்பா காந்திராமசாமி சொன்னதை மகன் மோகன்தாஸ் ஏற்கவில்லை.
‘வயசு இருக்கும்போதே அரசோட டாஸ்மாக் சர்வீசில் சேர்ந்துட்டோமுனா , அப்புறமா படிப்புக்கேத்த பதவிக்கு மாறிக்கலாம்’ என்று புரோக்கர் சொன்னதை நம்பி, குடும்பத்துக்குத் தெரியாம , கடனை வாங்கி கைமாத்திட்டு மதுரையில் டாஸ்மாக்கில் சூபர்வைசரா சேர்ந்திட்டான். இந்தத் தகவலைச் சொன்ன மகனின் நண்பனிடம் , “ அவன் , சாராயக்கடை வேலையை உதறிட்டு ஊருக்குள்ளே வரட்டும் !, இல்லாட்டி அவன் இந்த ஊருக்குள்ள நுழையக்கூடாது.! குடும்பத்துக்கும், ஊருக்கும் எதிரா நடந்துக்குற அவன் எங்க பிள்ளை இல்லை.! இனி அவன் எங்க மூஞ்சியில முழிக்கவும் கூடாது ! “ என்று ராமசாமி கறாரா சொல்லிவிட்டார்.
அப்பா மூலம் அறிந்த நெறிமுறைகளும் , இங்கே வாழ்க்கை நடைமுறைகளும் இருவேறு துருவங்களாக இருந்தன . விடுபட ஆசைதான்; ஆனாலும் மோகன்தாஸ்க்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. வேற கவருமன்ட் வேலைக்கு மாறவும் வாய்க்கலை.. டாஸ்மாக் வேலையை உதறவும் முடியலை. வேற பரீச்சை எழுதிப்போக படிக்க நேரமுமில்லை. தேனை நக்கப்போன தேனீயின் காலும், இறக்கையும் ஒட்டிக்கொண்டன. அப்புறம் அவன் ஊருக்குள்ளே வரலை அவனுக்கு பிடிச்ச பொண்ணைக் கட்டிகிட்டான். அவ்வப்போது பார்க்கும் ஊர்க்கார்கள் மூலம் குடும்பத்தாரை விசாரிப்பதோடு சரி.
ராமசாமி தம்பதிக்கு , ‘ தாம் விதைச்ச விதையிலே முள்ளுச்செடி முளைச்சிருச்சே, உயிர்க்காக்கும் மூலிகை பச்சை நாவியா மாறிருச்சே.. .ஊரையே திருத்திட்டோம் ; பெத்தபிள்ளையை மாத்த முடியலையே என்ற கவலை அரித்துக் கொண்டிருந்தது. மகனை வைத்துக் கண்ட கனவு பலிக்கவில்லை.
ஆசிரியர் பணிக்குப் படித்த மகளை ராமசாமி அக்காமகனுக்கு மணமுடித்து தம் குடும்பத்தோடு வைத்து , அவர்களை இயற்கை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தினார். அவர்களுக்கு பிறந்த பேரக்குழந்தைகள் மூலம் மன ஆறுதலைத் தேட முயன்றார்.
காந்தி ராமசாமி மகன் மோகன்தாஸ் குடும்பத்திலிருந்து அந்நியப் படுத்தப்பட்டு மகள், மருமகன் குடும்பத்தை நாட்டாமையின் பூர்வீக வீட்டில் தங்கவைக்கப் பட்டனர். ராமசாமி தோட்டத்தில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து இயற்கைவிவசாயத்தில் ஈடுபடலானார். பாரம்பரிய நாட்டமை பட்டமும் மருமகன் கைக்குப் போய்விடுமோ என்று நாட்டாமையின் பங்காளிக்கு பயத்தை உண்டாக்கியது. கிராமத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் பங்காளிகள் நாட்டாமை காந்தி ராமசாமியின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை கிராம மக்களிடையே பரப்பினர்.
குடிகாரரர்கள் உறுத்தல் இல்லாமல் ஊருக்குள் உலாவினர். இந்த விவரம் ராமசாமியின் நண்பர்கள் மூலம் தெரியவந்தது. ராமசாமியின் மனநோயை அதிகப்படுத்தியது.
எதாவது பொதுக்காரியம் , பங்குனித் திருவிழா என்றால் மட்டுமே அவர் ஊருக்குள் வருவார். மற்ற நேரங்களில் இயற்கை விவசாயப் பண்ணையிலே இருந்தார். அரசுபணிகள் தொடர்பாகத் தேடிவரும் அதிகாரிகள் அவரை பண்ணையிலே போய் பார்ப்பார்கள். இது பங்காளிகள் வதந்தி பரப்ப ஏதுவாக அமைந்தது. ஆனாலும் வேலுமயில் எதாவது ஒரு வேலை சாக்கிட்டு கிராமத்துக்குள் வந்து அனைத்து தரப்பு பெண்களிடமும் உறவாடிப் போனார். இது மகளையும், மருமகனையும் முன்னிறுத்தும் தந்திரம் என்று எதிர்க்குழுவினர் அஞ்சினர். ‘ இனி பகையாடி கவிழ்க்க முடியாது ; உறவாடி கறக்க பார்ப்போம் ‘ என்று பங்காளிகள் களத்தில் இறங்கினர்.
இந்தப் புகைச்சலை முடிவுகட்ட வக்கீலைக் கொண்டு ஒரு உயில் எழுதி தான் இறந்த பிறகு ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் வாசித்து அதன்படி நடக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளதை ஊர்ப்பெரியவர்கள் ஐந்துபேரிடம் சொல்லிவைத்தார். இந்த உயில்பூதம் ஊருக்குள் பல கதைகளை கிளப்பியது. இந்த சூழ்நிலையில் தான், எழுபதுவயதான ராமசாமி , நோய்மை மிகுந்து படுத்த படுக்கையாகக் கிடந்தார். இவரைப் பார்க்கத்தான் சுற்றிலுள்ள கிராமத்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதில் நோயுற்ற காந்திராமசாமியைப் பார்ப்பதை விடவும், ஊருலகமெல்லாம் இயற்கையான பழம், தானிய தவசுன்னு பேரு வாங்கி நூறுபேருக்கு மேல வேலை பார்க்கிற அவரது விவசாயப் பண்ணை எப்படி இருக்கிறது ? உயிலில் என்ன எழுதி இருக்கிறார்? அடுத்த நாட்டாமை யார் ?, விலகிப்போன மகன் டாஸ்மாக் வேலையை விட்டுட்டு குடும்பத்தோடு சேர்ந்திருவாரா , பங்காளிக என்ன பேசிக்கிறாக . என்று அறியும் ஆவல் , நாள்தோறும் கூட்டத்தை கூட்டிக்கொண்டிருந்தது. இதை அறிந்த பிரபல மின்னூடகம் ஒன்று காந்திராமசாமி தோட்ட வீட்டுக்கு படையெடுத்தது.
வாங்களேன் ஒரெட்டு பார்த்துட்டு வந்திறலாம் .
ஜனநேசன்.
நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் மறக்கமுடியாத மனிதர்கள் – பொன் விஜி
உறவினர்களைவிட நண்பர்கள்தான் அடிக்கடி ஞாபகத்திற்கு வருகிறார்கள். உறவினர்களைவிட நண்பர்களுடன்தான் அதிகமாகப் பழகியிருக்கிறேன் என்கிறார் ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள்.
ராமச்சந்திரன் என்ற பெயரிலிருந்து எப்படி வண்ணநிலவன் என்ற பெயர் மாற்றம் வந்தது, இதற்கு முற்று முழுதாக யார் காரணகர்த்தாவாக இருந்தார் என்ற ஆரம்பத்துடன் தனது இக் கட்டுரைகளை ஆரம்பிக்கிறார் ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள்.
தனது அனுபவங்களையும், தான் சந்தித்த படைப்பாளிகளையும், நண்பர்களையும், அவர் சென்று வந்த, மற்றும் பத்திரிகைத் துறையில் வேலை செய்த அனுபவங்களையும் இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் வண்ணநிலவன்.
இதில் 18 வேறுபட்ட எழுத்தாளர்களை நினைவு கூர்கிறார்.
* வல்லிக்கண்ணன்
* விக்ரமாதித்யன்
* பா. ஜெயப்பிரகாசம்
* கலாப்ரியா
* கி. ராஜநாராயணன்
* திருலோக சீதாராம்
* வெ. கிருஷ்ணமூர்த்தி
* தி. க. சிவசங்கரன்
* ஜி. எம். எல். பிரகாஷ்
* சுந்தர ராமசாமி
* பிரபஞ்சன்
* அம்பை
* அசோகமித்திரன்
* நா. பார்த்தசாரதி
* கா. நா. சுப்பிரமணியம்
* தி. ஜானகிராமன்
* கண்ணதாசன்
* சோ
ஆசிரியர் இங்கே தனது 60/70/80 பதுகளில் தான் கண்ட, பேசிய, உணர்ந்த எழுத்தாளரர்களையும், பத்திரிகையாளர்களையும், மறக்கமுடியாத தனது நண்பர்களையும், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை யும் வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகின்றது. அதன் மூலமாக அடுத்த படைப்பாளிகளையும் நாம் அறிந்து கொள்ள நல்ல வாய்பு என்றே சொல்லலாம்.
இதேபோல், பவா செல்லத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன் போன்றோர், எப்படி எல்லாம் மற்ற படைப்பாளிகளை அறிமுகம் செய்கிறார்களோ அதேபோல், இன்னும் வளர்ந்து வரும் அடுத்த படைப்பாளிகளையும் வாசிப்போராகிய எங்களுக்கு அறிமுகம். செய்து வருவது மிகவும் பாராட்டத்தக்க விடையம். அதில் நாம் அக்கறையுடையவர்களாக இருந்தால், எல்லோரும் நம் பக்கத்தில் இருப்பதாக உணரலாம்.
இன்றைய கால கட்டத்தில் தொடர்பு சாதனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். அதை வேளையில், இதையிட்டுப் பல சிக்கல்களையும் (இடியாப்பச் சிக்கலைக் கூட மிகவும் பொறுமையாக இருந்து எடுத்தால் கூட எடுத்து விடலாம்) எதிர் கொண்டு வருகிறோம். ஜிங் ஜாங் என்பது போல் இதில் (பாசிட்டிவ், நெக்கடிவ்) இரண்டு பக்கங்களுக்கும் நாம் முகம் காட்டத்தான் வேண்டும். தவிர்கமுடியாததொன்று எனலாம். மாற்றங்களை நாம் திணித்தாலும், திணிக்காவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆசிரியர் வண்ணநிலவன் இங்கே, தனது ஆரம்பகால, படிக்கும் காலம், படித்து முடிந்து வேலை தேடித்திரியும் காலம், இவற்றுடன் தொடர்புடைய கடிதப் போக்குவரத்து எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது, அத்துடன் பிரயாணங்களில் ஏற்பட்ட இடர்பாடுகள், வறுமை, எதிர்பார்ப்புக்கள் போன்றவற்றை உணர்பூர்வமாகப் பதிவு செய்கிறார்.
குறிப்பாக, அன்பு, அரவணைப்பு, உண்ண உணவு, உறங்குவதற்கான இடம் இதுபோன்ற மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதனை வெளிப்படையாகப் பல இடங்களில் பதிவு செய்கிறார் வண்ணநிலவன் அவர்கள். தான் பட்ட கஷ்டங்களில் யார்யார் தனக்காக உறுதுணையாக இருந்து, தன்னை இவ்வளவு தூரம் உயர்த்தி விட்டவர்களை அன்போடு நினைப்பதை இந் நூல்மூலம் வாசிக்க முடிகிறது நண்பர்களே.
அத்துடன், ஆசிரியர் அவர்கள், தான் நேரில் சந்திக்க முடியாத, இன்னொருவரால் தனக்கு வந்த உதவிகளையும், அவர்களுடனான தொடர்புபளையும் மறக்கமுடியாத தருணம். என்பதைச் சுட்டிக்காட்டுவது, அவரது மிக உயர்ந்த பண்பை எடுத்துக் காட்டு வதைக் காணலாம்.
அன்றைய சூழ்நிலையில் ஒரு படைப்பாளியையோ அல்லது ஒரு வெளியீட்டு நிறுவனத்தையோ அன்றைய இளம் எழுத்தாளர்கள் நெருங்குவதாய் இருந்தால் எவ்வளவு ஆதங்கங்கள் , சிரமங்கள், தொடர்புகள், இவற்றுக்காக ஏங்கித் தவித்த நீண்ட பயணங்களாக இருந்தது. ஆனால் இன்றைய அதிவேக தொடர்பு சாதனங்களால் மேற்குறிக்கப்பட்ட விடயங்களை ஒரு நொடியில் (வாட்ஸ்அப், முகப்புத்தகம், இன்ரகிராம், கூகிள் இவைபோன்ற) பெறக்கூடியதாக இருப்பதை உணருகின்றோம்.
இந்தப் படைப்பாளி தான் உயர்ந்தவர், மற்றவர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் என்ற வேறபாடற்று, எல்லோரையும் ஒரே கூரைக்குள் கொண்டுவருவது, அவரது மற்றுமொரு உச்சம் என்றே கூறலாம்.. நண்பர்களே, இவரது இப் படைப்பான மறக்கமுடியாத மனிதர்களை ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள் ஒரே கூரைக்குள் என்னதான் அடக்கியுள்ளார் என்பதனை உங்கள் கதவு வழியாகச் சென்று உற்று நோக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.. என்ன ஆயத்தமா வாசிப்பு நண்பர்களே..
நன்றிகள்
–பொன் விஜி -சுவிஸ்.
நூல் : மறக்கமுடியாத மனிதர்கள்
ஆசிரியர் : வண்ணநிலவன்
விலை : ரூ.₹200/-
பக்கம் : 167
வெளியீடு : காலச் சுவடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 4) – தமிழில் – தங்கேஸ்
களம் 1 காட்சி 4
காட்சி பிண்ணனி
பொழுது – பகல் முடிந்து இரவின் ஆரம்பம்
( ரோமியோ மற்றும் அவனது நண்பர்கள் ஜுலியட்டின் வீட்டில் நடைபெறும் விருந்துக்கு மாறு வேடத்தில் செல்கிறார்கள் )
ரோமியோ , மெர்குஷியோ மற்றும் பென்வாலியோ ஆகிய மூவரும் விருந்துக்கு முகமூடி அணிந்தபடி செல்கின்றனர். மேலும் ஐந்து பேர்கள் முகமூடி அணிந்தபடியும் கையில் டார்ச் விளக்கைப் பிடித்தபடியும் அவர்களுடன் உடன் செல்கிறார்கள்.
ரோமியோ : ( நண்பர்களிடம் )
தாமதத்திற்கு எப்படி மன்னிப்பு கோருவது ?
அல்லது மன்னிப்பு கோராமலேயே
உள்ளே நுழைந்து விடலாமா ?
பென்வாலியோ :
ரோமியோ ! மன்னிப்பு கேட்பதெல்லாம்
பழைய பாணி
அது இப்ப பேஷன்.இல்ல
( கிண்டலாக )
பாரு ரோமியோ ! இரண்டு கண்ணையும்
கருப்பு துணில கட்டிக்கிட்டு ,
கையில ஒரு பொம்மை அம்பை வச்சுகிட்டு
பயமுறுத்திக்கிட்டு இருக்குற
சோளக்கொல்லை பொம்மை கூட்டத்துக்குள்ள போah
நாம நுழையப்போறோம் ?
நாங்க வந்துட்டோம் வந்துட்டோம்னு சொல்றதுக்கு /
இல்லை பள்ளிக்கூட பசங்க மாதிரி அட்சரம் பிசகாம
மனப்பாடம் பண்ணி வச்சத
அப்படியே போய் பேச்சுப்போட்டில ஒப்பிக்கப் போறோமா ?
நாம நடனமாடப்போறோம்பா நடனமாட ….
பார்க்குறவங்க எப்படி வேணாலும் நினைச்சுக்கட்டும்
அதப்பத்தி நமக்கு கவலை இல்லை
ரோமியோ :
சரி சரி டார்ச் விளக்கை என்னிடம் கொடு.
நான் அதை ஏந்திக் கொள்கிறேன்.
நடனமாடும் மனநிலையில் நான் இல்லை.
மெர்குஷியா :
இல்லை இல்லை என் இனிய ரோமியோ !
இன்று நீ நடனமாடியே தீரவேண்டும்
ரோமியோ :
நீங்கள் வேகமாக நடனமாடக்கூடிய
நல்ல ஷுக்களை அணிந்திருக்கிறீர்கள்
அதனால் நன்றாக நடனமிடலாம்
ஆனால் என் ஷுக்கள் மிகவும் கனமான ஈயத்தால் ஆனவை,
அவைகள் என்னைத் தரையில் நங்கூரமிட வைக்கின்றன.
அதனால் என்னால் நகரக் கூட முடியாது.
மெர்குஷியா :
( கிண்டலாக )
நீ தான் காதல் இளவரசனாயிற்றே
மன்மதனின் சிறகுகளை கொஞ்சம் கடன் வாங்கு, அதை வைத்துக் கொண்டு பறந்து பறந்து நடனமிடலாம்.
ரோமியோ :
ஓ நான் பறக்க முடியாத அளவு
அந்த மன்மதனது அம்புகளால்
துளைக்கப்பட்டு கிடக்கிறேன்.
என் காயப்பட்ட இதயம்
சோகத்திலிருந்து என்னைத் தப்பவே விடாது.
நான் காதலின் பெரும் சுமையில்
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.
மெர்குஷியா :
நீ காதலில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் என்றால்
கனத்துக் கொண்டேயிருக்கிறாய்
என்று தானே அர்த்தம்.
பார்த்துக் கொள் நண்பா
அந்த மென்மையான வஸ்து உன் எடையை தாங்காது
உன்னை மூழ்கடித்து விடப் போகிறது.
ரோமியோ :
காதல் மென்மையானதென்று யார் சொன்னது.?
காதலித்துப்பார் தெரியும்
காதல் கரடு முரடானது கட்டுக்கடங்காதது.
முள்ளைப்போல குத்துவது என்று உனக்குத் தெரியும்
மெர்குஷியா :
( கிண்டலாக )
காதல் உன்னிடம் கரடு முரடாக நடந்து கொண்டால்
நீயும் அதனிடம் அவ்வாறே நடந்து கொள்.
காதல் உன்னை முள்ளைப்போல குத்தினால்
நீயும் பதிலுக்கு அதை முள்ளைப்போல் குத்து.
காதல் உன்னைத் தாக்கினால்
நீயும் அதைத் தாக்கி வீழ்த்து.
இப்போது என் முகமூடியை கொடு
அதை நான் அணிய வேண்டும்.
அதாவது ஒரு முகமூடி
இன்னொரு முகமூடியை மறைப்பதற்கு.
அந்த இன்னொரு முகமூடியைத்தான்
நாம் முகமென்று அழைக்கிறோம்.
யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலென்ன ?
என்ன குற்றம் கண்டாலென்ன ?
கருமையான புருவங்களைக் கொண்ட இந்த முகமூடி
எனக்கு பொருத்தமாக இருக்கும்.
பென்வாலியோ :
சரி சரி வாங்க கதவை தட்டிவிட்டு
உள்ளே போகலாம்.
உள்ளே போனதும் ஒரே நடனம் தான்
உற்சாகம் உற்சாகம்
ரோமியோ :
என் கைகளில் ஒரு ஒளி விளக்கை கொடு
அதை நான் ஏந்திக்கொள்கிறேன்.
இளகிய இதயம் படைத்தவர்கள்
இங்கே நடனமாடட்டும்
பாவம் இந்த ரோமியோவை விட்டு விடுங்கள்.
நான் விளக்கை ஏந்தியபடி வெளிச்சத்தில்
உங்கள் நடனத்தை ரசிப்பவனாகவே
இருந்து விட்டு போகிறேன்.
இந்த விளையாட்டு மிகவும்
ரசமானதாக இருக்கும் போல் தோன்றுகிறது.
ஆனால் அதை ஆடிப்பார்க்கும் மனநிலையில்
இந்த ரோமியோ இல்லை அவ்வளவு தான்..
மெர்குஷியா :
அடம்பிடிக்கும் அழுக்கு எலி போல
அஞ்சி அஞ்சி ஓடாதே நண்பா.
உன்னைப் பார்த்தால் இராத்திரி பாராவுக்கு போகும் காவலனைப்போல
கதைத்துக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது.
சேற்றில் மூழ்கியிருந்தால்
உன்னை காதைப்பிடித்துக்கூட
தூக்கி விடலாம் .
ஆனால் நீயோ காதல் புதைகுழியில்
கழுத்து வரைக்கும் மூழ்கியிருக்கிறாய்.
சரி சரி வா பகல் போய்க் கொண்டிருக்கிறது.
வெளிச்சத்தை வீணடிக்க வேண்டாம்.
ரோமியோ :
இல்லை இல்லை இது பகலில்லை இரவு
மெர்குஷியா :
ஆனால் நான் சொல்ல வருவதே வேறு .
பகலில் சூரிய வெளிச்சத்தை வீணடிப்பது போல
நாம் நமது விளக்குகளை
வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.
நீ ஐம்புலன்களை நம்புவதை விட
ஐந்து மடங்கு அதிகமாக என்னை நம்ப வேண்டும்
ஆமாம்
ரோமியோ :
முகமூடியோடு செல்வது
என்னமோ நல்லதுதான் .
ஆனால் அந்த இடத்திற்கு செல்வது தான்
அவ்வளவு நல்லதாகப் படவில்லை.
மெர்குஷியா :
ஏனென்று நான் கேட்கலாமா ?
ரோமியோ :
நான் நேற்று ஒரு கனவு கண்டேன்
மெர்குஷியா :
( உற்சாகமாக )
நானும் கூட உன்னைப்போலத்தான் ….
ரோமியோ :
சரி சரி உன்னுடைய கனவு தான் என்ன ?
உடனே சொல்
மெர்குஷியா :
கனவு காண்பவர்கள்
பொய் சொல்கிறார்கள் என்பதாக
நான் ஒரு கனவு கண்டேன்
ரோமியோ :
படுக்கையில் படுத்துக் கொண்டு நிஜங்களை கூட
அவர்கள் கனவுகளாக கண்டு கொண்டிருக்கிறார்கள்.
மெர்குஷியா :
ஓ அப்படியென்றால் சரி
கனவுகளின் ராணி மேப்
உன்னோடு உடனிருப்பதை போல
நான் ஒரு கனவு கண்டேன்.
பென்வாலியோ :
கனவுகளின் ராணி மேப்பா யாரது ?
மெர்குஷியா :
ஓ அவளா !
அவள் தேவதைகளின் அழகி
அவள் உருவமோ
ஒரு சீமானின் மோதிரத்தில் பதித்திருக்கும்
அழகு கல்லை விட சற்றே சிறியது
அவ்வளவு தான்.
மனிதர்கள் தூங்கும் போது
அவர்களின் மூக்கின் மீது
அவள் தனது தேரை ஓட்டிப் போகிறாள்.
அந்தத் தேரை இழுத்து வருவன
அதனினும் மிகச்சிறிய ஜந்துக்கள்.
அந்த ரதத்தின் ஆரங்கள்
சிலந்தியின் கால்களால் ஆனது.
அந்த ரதத்தின் திரை
வெட்டுக்கிளிகளின்
இறக்கைகளால் ஆனது.
மேலும் அதன் சேணம் கூட
சிலந்தி வலைகளால் பின்னப்பட்டது தான்..
அவள் குதிரையின் காதுகள்
நிலவின் ஒளிக்கற்றைகளால் ஆனது .
அவளது சவுக்கு
சிலந்தி வலைகளால் ஆனது.
அதில் எப்போதும்
பூச்சிகள் மாட்டிக்கொண்டேயிருக்கும்
சோம்பேறி இளம்பெண்ணின்
விரலில் இருந்து வரும்
சிறிய உருண்டைப் புழுவில்
பாதி கூட இல்லாத
சாம்பல் நிற கோட் அணிந்திருக்கும்
ஒரு குட்டி கொசு தான்
அவளுடைய ரத ஓட்டுநர்.
அவளுடைய வண்டி
ஒரு அணில் மற்றும்
ஒரு புழுவால் காலி செய்யப் பட்ட
ஒரு வெற்றுப் பழக்கூடு அளவு தான் இருக்கும்
ஆனால் இந்தப் பழ ஓடுகள் தான்
எண்ணற்ற ஆண்டுகளாக
இப்படித் தேவதைகளின்
ரதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
Top of Form
இந்த அற்புதமான ரதத்தில் தான்
அவள் ஒவ்வொரு இரவும்
காதலர்களின் மூளை வழியாக சவாரி போகிறாள்
அவர்கள் காதலைப் பற்றி
எண்ணற்ற கனவு காண்கிறார்கள்
அவள் பிரபுக்களின் முழங்கால்களில் மீது
சவாரி செய்கிறாள்,
அவர்கள் மேலிடத்திற்குள்
குனிந்து வளைந்து கும்பிடு போட்டு
போவதைப் பற்றி கனவு காண்கிறார்கள்
அவள் வழக்கறிஞர்களின் விரல்களுக்கு மேல்
சவாரி செய்கிறாள்,
அவர்கள் தங்கள் அதீதமான கட்டணத்தைப் பற்றி
கனவு காண்கிறார்கள்.
அவள் பெண்களின் உதடுகளுக்கு மேல்
சவாரி செய்கிறாள்,
அவர்கள் முத்தங்களைப் பற்றி
கனவு காண்கிறார்கள்.
ஆனால் ராணி மேப்
அடிக்கடி அவர்களின் உதடுகளில்
கொப்புளங்களை பூக்க வைப்பாள் ,
காரணம் பெண்களின் சுவாசம்
மிட்டாய் வாசனையால் நிரம்பியது.
அதுஅவளை உண்மையிலேயே கோபப்படுத்துகிறது.
சில சமயங்களில்
அவள் ஒரு நீதிமன்ற அதிகாரியின்
மூக்கின் மேல் சவாரி செய்கிறாள்,
உடனே அவர் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்கான
வழியை மோப்பம் பிடிக்கும்
கனவை காண்கிறார்.
சில சமயங்களில்
அவள் தேவாலயத்திற்கு தசமபாகமாக கொடுக்கப்பட்ட
பன்றியின் வாலால்
பாதிரியாரின் மூக்கில் கூச்சமூட்டுகிறாள்
உடனே அவர் அதிக ஊதியம் பெறும்
தேவாலயப் பதவியைப் பெற்று விட
கனவு காண்கிறார்.
சில சமயங்களில் அவள் ஒரு சிப்பாயின்
கழுத்தில் மீது தேரை செலுத்துகிறாள்,
உடனே அவன் வெளிநாட்டினரின்
கழுத்தை வெட்டுவது,
கோட்டைகளை உடைப்பது,
உள்ளே பதுங்கியிருப்பது,
சிறந்த தரமான ஸ்பானிஷ் வாள்களை
பிடித்து சுழற்றுவது
பெரிய மதுபானக் குவளைகளை
தழும்ப தழும்ப நிரப்பி வைத்து சல்லாபமாக இருப்பது
போன்றவற்றைப் பற்றிய கனவுகளில் திளைக்கிறான்.
ஆனால் விழித்தெழுந்ததும்
அவன் காதுகளில் விழும்
போர் முரசின் சத்தத்தால்
அவன் உடல் ஒரு கணம் உதறுகிறது.
உடனே ஒன்றிரண்டு பிரார்த்தனைகளைச்
சொல்லிவிட்டு மீண்டும் தூங்கச் செல்கிறான்
ஆனால் மேப் மாயம் செய்வாள்
குதிரைகளின் மேனிகளின் ஊர்ந்து
அவைகளின் முடியை இரவில் சிக்கலாக்கி,
பின்னர் அவைகளையும்
அழுக்குகளில் சிக்க வைத்து
அதை கடினமான சிக்காக்கிவிடும்
அந்தச் சிக்கலை நீங்கள் தவிர்த்தால்,
அவள் உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை
கொண்டு வருவாள் .
கன்னிப்பெண்களுக்கு
பாலுறவுக் கனவுகளைத் தந்து,
காதலனின் எடையை எப்படித் தாங்குவது,
குழந்தையைத் எப்படித் தூக்குவது
என்று கற்றுக்கொடுப்பதே. அவள் தான்
ரோமியோ :
அமைதி அமைதி
மெர்குஷியா அமைதியாக இரு
ஏனென்றால் நீ பேசுவதில் அர்த்தம் எதுவுமேயில்லை
மெர்குஷியா :
உண்மைதான்.
நான் கனவுகளைப் பற்றி பேசுகிறேன்,
அவைகள் உபயோகமற்ற மூளைகளால் தான் உருவாக்கப்படுகின்றன.
அவைகள் காற்றைப் போல
மெல்லிய பொருளாகவும்
அதை விட சீரற்றதாகவும் இருக்கின்றன.
காற்றுக்கு ஏது நிதானம் ?
பனி உறைந்திருக்கும் வடக்கில் ஊதும்
திடீரென்று கோபமடைந்து தெற்கே வீசும்.
பென்வாலியோ :
ஆனால் அந்தக் காற்று
இப்போது நம் மேல் அல்லவா
வீசிக்கொண்டிருக்கிறது.
இரவு உணவும் முடிந்து விட்டது. ,
நாம் மிகவும் தாமதமாகத்தான்
அங்கே செல்வோம் என்று நினைக்கிறேன்.
ரோமியோ :
ஆனால் நாம் சீக்கிரமே போகப்போகிறோம்
என்று தான் நான் நினைக்கிறேன்.
இன்றைய இந்த இரவு விருந்து
என் அகால மரணத்தை எழுதும்
சமான விதியாக இருக்கப்போகிறதென்று
என் உள்ளுணர்வு சொல்கிறது.
ஆனால் என் விதியை யார் எழுதுகிறார்களோ
அவர்கள் தானே என்னை அங்கே அழைக்கிறார்கள்.
ஆகையால் வாருங்கள்
அங்கேயே செல்வோம்
என் அடங்காத நண்பர்களே !
போகலாம்
பென்வாலியோ :
சரி தான் முரசை முழக்கு
(மேடையின் மீது நகர்ந்து நகர்ந்து காணாமல் போகிறான்.
ஒவ்வொருவரும் அது போலவே நகர்ந்து நகர்ந்து
காணாமல் போகிறார்கள்.)
மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழியாக்கம் : தங்கேஸ்
( தொடரும் )
முடிவுகள் எடுக்க கற்றுக்கொள்வோம்! கட்டுரை – இல.சுருளிவேல்
வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் முடிவுகள் எடுப்பதில் குழப்பங்களை சந்திக்கிறோம். குழந்தை பருவம் முதல் முதுமை வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் வரக்கூடிய சவால்களை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதை பொறுத்து மனிதனுக்கு அமைதியும், துக்கமும் அமைகிறது. இது நாம் எடுக்கும் சரியான முடிவை பொறுத்து அமைகிறது. அந்த முடிவுகள் எடுக்க ஏன் குழப்பங்கள் வருகின்றன. அதற்கு காரணம் என்ன என்பதை அறியத் தொடங்கி விட்டாலே சரியான முடிவுகள் எடுக்க தொடங்கி விட்டோம் எனலாம். உதாரணமாக, குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது, குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது, என்ன படிப்பில் சேர்க்க வேண்டும், எந்த வேலையை தேர்ந்தெடுப்பது, சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி, காதலா, கல்யாணமா, எங்கு வீடு வாங்குவது, எந்தப்பொருள் நல்லது, எங்கு மருத்துவம் பார்ப்பது, வயதான பின்பு எங்கு இருப்பது, யாருடன் இருப்பது போன்ற விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விருப்பத்தேர்வு (Options) எங்கு இருக்கிறதோ அங்கு குழப்பங்கள் வருவதும், அதனை தேர்வு செய்வதில் ஜாதகங்கள், சம்பிரதாயங்கள், இடம் பெறுவதும் இயல்பு. உதாரணமாக பசியுடன் இருக்கும் ஒருவனுக்கு கிடைக்கும் உணவு எதுவாகினும் அதை உட்கொள்ள தயாராக இருப்பான். அவனுக்கு விருப்பத்தேர்வு பல வகையான உணவு இருக்கும் போது அவற்றில் எது சிறந்த உணவு, விருப்ப உணவு என்ற சிறிய குழப்பங்களுக்கு ஆளாகிறான். அங்கு சரியான முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அதேபோன்று வீடு இல்லாத ஒருவனுக்கு ஜாதகங்கள், சம்பிரதாயங்கள், வாஸ்துகள் தேவை இருக்காது. அதிக வருமானம் இருந்தால் முடிவு எடுப்பதற்காக, மனநிறைவுக்காக வாஸ்துகளுக்காக அதிக செலவு செய்ய தயாராக இருக்கிறான். இதில் அறிவியல் உண்மை என்னவென்றால் யாருக்கு விருப்பத்தேர்வு அதிகமாக இருக்கிறதோ அவர்கள் முடிவெடுப்பதில் குழப்பம் கொள்வது இயல்பு. ஒரு விஷயத்தில் அனுபவம் இல்லாதவர்கள் தவறான முடிவு எடுத்து விடக்கூடாது என்பதற்காக சரியான நபரிடம் ஆலோசனைகள் பெறுவது நன்மையைத் தரும்.
சிலர் வாழ்க்கை பயணத்தின் நோக்கம் என்னவென்றே தெரியாமல் பயணம் செய்வதும் உண்டு. எந்த ஊருக்கு செல்கிறோம். நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு நேரம் எடுக்கும், எதில் பயணம் செய்யலாம் போன்ற எந்த ஒரு திட்டமும் இல்லாதவர்கள் எந்த ஒரு முடிவும் வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் வாழ்க்கை தானாக கடல் அலைகளில் ஒதுங்குகிற பொருளை போலதான். அவர்களின் வாழ்க்கை பயணம் இனிதாகவும், மனநிறைவுடனும் அமைய வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்கு பண விரயம், கால விரயம் மட்டும் மிஞ்சும். அங்கு வறுமை நீடிக்கும். எனவே முடிவெடுக்கும் திறமையை வளத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நல்ல நூல்களை படிப்பது, நல்ல மனிதர்களிடம் நடப்பு கொள்வது மிக அவசியம். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சில நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகள் மிகச் சரியாக இருக்கும். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதையும் பார்க்க முடியும்.
பிரச்சனைகள் வரும் போது பொதுவாக நான்கு முடிவுகள் எடுக்கின்றோம். 1. பிரச்சனையைக் கண்டு ஓடி விடுவது; 2. பிரச்சனையைக் கண்டு உருகி விடுவது; 3. பிரச்சனையை தீர்க்க சண்டை போடுவது; 4. சரியான தீர்வு காண்பது. பிரச்சனைக்கு பயந்து ஓடி விடுவதாலும், உருகி விடுவதாலும், வன்முறையில் இரங்குவதாலும் நிரந்தர தீர்வு காண முடியாது. அப்பிரச்சினை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதை பொறுத்து வெற்றி இருக்கிறது.
ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அதனை முழுமையாக ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின் வருந்துவது இழுக்கான செயலாகும். அது அமைதியின்மையை ஏற்படுத்தி விடும். முன்னேற்றத்துக்கும் தடையாகவும் அமையும்.
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு” என்பது வள்ளுவர் வாக்கு. முடிவு எடுப்பதற்கு முன் ஆழ்ந்து யோசிப்பது நல்லது. முடிவு எடுத்த பின்பு வருத்தப்படக்கூடாது. அதை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் முடிவுகள் எடுக்கவே பயப்படுகிறோம். பலரிடம் ஆலோசனை கேட்கிறோம். சரியான முடிவு எடுப்பதற்காக நேரத்தை வீணாக்குகிறோம். ஆலோசனை செய்கிறேன் என்ற பெயரில் காலத்தை தள்ளி போடுகிறோம். அதனால்தான் பல நேரங்களில் வருத்தப்படுகிறோம். இழந்த பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாரித்து விடலாம். ஆனால், நிச்சயம் இழந்த நேரம் எவ்வளவு கொடுத்தாலும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. உரிய நேரத்தில் எடுக்கப்படாத சரியான முடிவினால் பல இழப்புகளை சந்திக்கிறோம்.
நமது முடிவுகளில் பலர் தலையிடுகின்றனர். நீதி மன்றங்களில் பல வழக்குகள் தேங்கிக் கிடப்பதை மனதில் கொள்ள வேண்டும். சரியான நபர்களிடம் ஆலோசனை கேட்காத போது தவறான முடிவுகளை ஏற்படுகிறது. ஆழ்ந்து, ஆராய்ந்து சுயமாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், பிறரால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் வேறுபாடு நிறையவே இருக்கிறது. ஆராய்ந்து, பிறரை எந்த விதத்திலும் பாதிக்காமல், சுயமாக முடிவெடுப்பவர்களே முன்னேற்றம் அடைகின்றனர். பிறருக்கு முன்மாதிரியாக இருக்கின்றனர். சுயமாக எடுக்கப்பட்ட முடிவுகள் சில நேரங்களில் தவறாகவும் இருக்கலாம். அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். அந்தத் தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முடியும். தன்னால் எடுக்கப்பட்ட முடிவு அதற்கு நானே பொறுப்பு என்ற மனநிறையுடன் வாழ முடியும். இதனால் முடிவெடுப்பதில் ஒரு தெளிவு ஏற்படுத்துகிறது. குடும்பமாக இருந்தால் கணவன் மனைவி சேர்ந்து முடிவு எடுக்கலாம். சமூகமாக இருந்தால் ஒற்றுமையாக கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரையும் பாதிக்காத ஒரு முடிவு எடுக்கலாம். முடிவெடுக்கும் போது நன்மையை விட தீமைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த முடிவை விட்டு விடலாம். நன்மை தீமை என்று அலசி ஆராய்ந்து நன்மைகள் அதிகம் இருக்கும் விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் முடிவு எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வாழ்க்கை என்பது வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே. ஒரு முடிவு எடுத்த பின்பு அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தலாம். உடனடி திருப்திக்காக(Instant gratification) ஒருபோதும் முடிவெடுக்காதீர். அது நீண்டகால நிம்மதியை கெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. நன்மை தீமைகளை பகுத்தாய்ந்து தொலைநோக்கு சிந்தனையுடன் முடிவெடுக்க பழகிக்கொள்ள வேண்டும். நமது முடிவுகள் பெரும்பாலும் சுயநலனுக்காக மட்டுமல்லாமல் பொதுநலனுக்காக இருந்தால் உடலும், மனமும் என்றும் இளமையாக இருக்கும். எனவே காலங்களை வீணாக்காமல் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பதில் தெளிவுடன், உறுதியுடன், துணிச்சலுடன் இருப்போம். வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்ந்து காட்டுவோம்.
– இல.சுருளிவேல்
தொடர்புக்கு:
முனைவர் இல.சுருளிவேல்,
உதவிப் பேராசிரியர்,
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி-601204